35. கீழ்மை
‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம் குணத்தைக் கைவிட மாட்டார்கள். இத்தகைய தீமைக் குணம் ஒருவனை நல்வழிகளில் ஈடுபடவிடாமல், கீழான செயல்களிலேயே தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கும். அறநெறிச் செயல்களில் ஈடுபட்டு ஆன்மாவிற்கான உறுதிப் பயன்களைத் தேடுவதற்காகப் பெற்ற மனிதப் பிறப்பு, இத்தகைய கீழ்மைக் குணத்தால் பாழாகிக் கழியும். மேலும், கீழ்மைக் குணத்தால், ஒருவன் செய்யும் கீழ்த்தரமான செயல்களால் வரும் பழிபாவங்கள், அடுத்தடுத்து வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். இது உட்பகைகளுள் ஒன்றான கீழ்மை அதிகாரத்தை விளக்கும் பகுதியாகும்.
கோழி வளர்ப்பவன், தேவையான அளவுக்கு வாய் நிறைய நொய் அரிசி / தானியத்தைத் தினசரி அதிகாலை உணவாகப் போட்டாலும், அது இரைக்காகக் குப்பையைக் கிளறும் தன் இயற்கைக் குணத்தை விடாது. அதுபோல் உலகிலேயே சிறந்த உறுதிமொழிகள் கொண்ட நூலிலுள்ள நல்லறங்களை, நன்நெறிகளை, சாஸ்திரங்களை, அறிஞர்கள் விளக்கிக் கூறினாலும், கீழ்மைக் குணம் கொண்டவர்கள் அதைச் செவிமடுத்துக் கேட்க மாட்டார்கள். அதன்படி நடக்கவும் மாட்டார்கள். தம் மனம் போன போக்கில் விரும்பியபடியே நடப்பார்கள். கீழ்மைக் குணம் படைத்தோர்க்குக் கோழி உவமானம்.
உறுதியான நூற்பொருளைக் கற்க, குற்றமற்றவராக விளங்கும் பெரியோர்களிடம், காலம் தாழ்த்தாமல் தாமதமின்றிச் சென்று நன்மை பெறுவோமென நல்லோர் உரைப்பர். ஆனால், இதைக் கேட்கும் கீழ்மைக் குணம் கொண்டவன், ‘எனக்குத் தூக்கம் வருகிறது. நான் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு எழுந்து போவான். இல்லாவிட்டால், பெரியோரிடம் செல்வதையும், கற்பதையும், தவிர்க்க வேறொரு வெற்றுக் காரணத்தைக் கூறுவான். கீழ்மைக் குணம் கொண்டோர் நல்லோருடன் சேர மாட்டார்கள். கற்றவரிடம் போவதையும், கற்பதையும், வெறுத்தும், மறுத்தும் ஒதுங்கிப் போவார்கள்.
தண்ணீர் நிறைந்து விளங்குகின்ற அருவிகளைக் கொண்ட குறிஞ்சி நிலத் தலைவனே! கல்வி அறிவு பெற்ற சான்றோர்கள் பெரும் செல்வத்தையும், சிறப்பினையும் பெற்றாலும், தம்முடைய ஒழுக்கத்திலிருந்தும், தன்மையிலிருந்தும், ஒருபோதும், சிறிதளவும் மாற மாட்டார்கள். எப்போதும் ஒரே குணத்துடன் நடந்து கொள்வர். ஆனால், கீழ்மகனோ, ஊழ்வினை வசத்தால், செல்வந்தனாக மாறும் காலத்தில், முந்தைய நடத்தைக்கு மாறாக நடந்து கொள்வான். எவ்வளவு மேன்மை வந்தாலும் சான்றோர் தம் சிறந்த பண்புகளிலிருந்து மாறாதிருப்பர். ஆனால், கீழ்மக்களோ, செல்வம் இல்லாத போது ஒரு விதமாகவும், செல்வம் வந்து சேரும் போது, குணம் மாறுபட்டு வேறு விதமாக நடந்து கொள்வர்.
வற்றாத மலை அருவிகளைக் கொண்ட பாண்டிய நாட்டு வேந்தனே! நற்குணம் நிறைந்த, நன்றியின் சிறப்பை உணர்ந்த சான்றோர், தமக்குச் செய்த நன்மை தினை அளவு சிறிதே என்றாலும், அதைப் பனை அளவு பெரிதாக நினைப்பார்கள். ஆனால், தீய குணமுள்ள, நன்றியின் சிறப்பை அறியா கீழ்மக்கள், தமக்குச் செய்த நன்மை பனை அளவு பெரிதாக இருந்தாலும், அதை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள். நன்றியில்லாத கீழ்மக்களுக்கு நாள்தோறும் எவ்வளவு நன்மை செய்தாலும், உதவிகளை நினைத்துப் பார்க்காமல் மறந்துவிடுவார்கள். கீழ்மக்கள் நன்றி கெட்டவர்கள் என்பது கருத்தாம்.
தங்கத் தட்டில் ருசியான உயர்தர உணவைப் போட்டு, அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் நாய் முன்னே வைத்தாலும், நாயானது, அடுத்தவரின் எச்சில் இலையிலுள்ள உணவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும். தங்கத் தட்டின் மதிப்பையோ, சுவையான உணவின் தரத்தையோ நாய் அறியாது. இது அதன் இயல்பான குணமாகும். அதுபோல், கீழ்மக்களை எவ்வளவுதான் பெருமை உள்ளவர்களாக எண்ணி, உயர்வாக மதித்தாலும், அவர்கள் செய்யும் செயல்கள் ஒழுக்கம் இன்றியும், தரம் கெட்டும் இருக்கும். கீழோர் கீழ்மைக் குணத்தை விட மாட்டார்கள். கீழோர்க்கு நாய் உவமானம்.
இந்த உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் வகையில், ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும்படியான பெரும் அரசு செல்வத்தைப் பெற்றாலும், கற்றறிந்த சான்றோராக விளங்கும் மேன்மக்கள், எக்காலத்திலும் வரம்பு மீறிய சொற்களைக் கூறவே மாட்டார்கள். ஆனால், ‘முந்திரி’ அளவான தனது சிறு செல்வத்துக்கும் மேலாக, ‘காணி’ அளவான மற்றொரு சிறுதொகை சேர்ந்துவிட்டாலும், கீழ்மகன் தன்னை எல்லாச் செல்வங்களும் படைத்த தேவேந்திரனாகவே எண்ணிக் கொள்வான். எல்லை மீறி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசத் தொடங்குவான். மேலோர் பெரும் செல்வம் சேர்ந்தாலும் செருக்கின்றி அடக்கமுடன் நடப்பர். கீழோர் சிறிது பொருள் சேர்ந்தாலும் ஆணவத்துடன் வரம்பு மீறி நடப்பர் (‘காணி’ என்பது 64 பாகங்களில் 1 பாகம் ஆகும். ‘முந்திரி’ என்பது அந்த 1 பாகத்தை 256 பாகங்களாகப் பிரித்தால் அதில் 1 பாகம் ஆகும். – விளக்கம் தமிழறிஞர் சாமி சிதம்பரனார்).
குற்றமில்லாத பசும்பொன் மீது, மாட்சிமை பொருந்திய சிறந்த நவரத்தினங்களைப் பதித்து, மிகுந்த வேலைப்பாட்டுடன் இழைத்து இழைத்துச் செய்த செருப்பே என்றாலும், அது காலில் அணிவதற்கே பயன்படும். அதை நடுவீட்டில் வைக்க முடியாது. அதுபோல், கீழ்மக்கள் எவ்வளவுதான் செல்வம் பெற்றிருந்தாலும், அவர்கள் செய்யும் இழிதொழில்களாலும், கீழ்மைக் குணத்தாலும், இழிவுடையவராகவே கருதப்படுவர்.
உயர்ந்த மலைகளைக் கொண்ட சிறந்த பாண்டிய நாட்டின் வெற்றி வேந்தனே! கீழ்மைக் குணம் கொண்டவர்கள் கசப்பான கடுமையான சொற்களைக் கூறுவதில் வல்லமை பெற்றவர்கள். சிறிதும் அன்பும் அருளும் இரக்கமும் இல்லாத அரக்கர்கள். மற்றவர்களுக்கு இன்னல் இழைத்து அவர்கள் படும் துன்பங்களைக் கண்டு மகிழ்பவர்கள். காரணமின்றி அடிக்கடி கோபப்படுபவர்கள். தன் மனம் போன போக்கில் செல்பவர்கள். பிறரை இகழ்பவர்கள். கடுஞ்சொல், கடுமனம், தீமை, சினம், அடங்காமை, இகழ்ச்சி ஆகியவை கீழ்மக்கள் குணங்களாம்.
தேனைச் சிந்துகின்ற நெய்தல் பூக்கள் நிறைந்த, ஆர்ப்பரித்து ஒலிக்கும் கடலின் குளிர்ந்த கரைகளை உடைய பாண்டியனே! ஒருவர் தமக்குப் பின் நின்று ஆதரித்து நடப்பாராயின், அவர் தொன்று தொட்டுப் பல நாள்களுக்கு முன்பிருந்தே நம்மோடு உறவு கொண்ட பழைய நண்பராகவே சான்றோர் கருதுவர். மேலும், அவரிடத்து விருப்பமுடன் அன்பு கொண்டு பிரியமுடன் பழகுவர். ஆனால், கீழ்மக்களோ, நெடுநாள் பழகிய, தம்மை ஆதரிப்பவர்களை, விரும்ப மாட்டார்கள். அவர்களை எள்ளி நகையாடுவர். மேன்மக்கள், சில நாள் பழகியவரைக் கூடப் பல நாள் பழகிய பழைய நண்பராகக் கருதி அன்பு செலுத்துவர். ஆனால், கீழ்மக்களோ, பலநாள் பழகியவரைக் கூட விரும்பாது இகழ்வர்.
தலைவனே கேட்பாயாக! இள வயது முதற்கொண்டே, தினசரி பச்சைப் புற்களை அறுத்தும், நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்தும், ஊட்டி வளர்த்தாலும், சிறிய வகை எருதுகள் வண்டி இழுக்க எந்நாளும் பயன்பட மாட்டா. அதுபோல், கீழ்மக்கள், பிறந்த போதிலிருந்தே செல்வச் செழிப்பில் வளர்ந்தாலும், அவர் செய்யும் கீழான தொழில்களால் எளிதில் அறியப்படுவர். அவர்களால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. எளிதில் எந்த உதவியையும் பெறவும் முடியாது. (பாட்டில் வரும் ‘சிறு குண்டு’ என்பது வளர்ச்சி இல்லாத, குள்ளமான, வயது முதிர்ந்த, வயிறு பெருத்த எருதாகும்). எவ்வளவுதான் தீனி போட்டு வளர்த்தாலும், இவ்வகை எருதுகள் வண்டி / தேர் இழுத்தல் உள்ளிட்ட எந்த வேலைக்கும் பயன்படா. அதுபோல், வசதியாக வாழ்ந்தாலும் கீழ்மக்கள் தம் செய்கையை விடார். அறமும் செய்யார். அவர்களால் எந்தப் பயனுமில்லை.
36. கயமை
‘கயமை’ என்பதும் ‘கீழ்மை’ என்பதும் ஒரே மனப்பண்பினைக் குறிப்பனவாகும். நற்குணங்கள் என நீண்ட காலம் அறிஞர்களால் சொல்லப்பட்டவை அமையாது போயின், அந்தச் சிறுமைக் குணமே ‘கயமை’ எனச் சான்றோரால் கூறப்படும். இக்கயமை உடையோரின் தன்மை, செல்வம் உள்ளிட்ட பிற தகுதிகளுடன் உயரிய நிலையில் இருந்தாலும், கீழ்த்தரமாகவே இருக்கும் என்பது தெளிவு. முந்தைய ‘கீழ்மை’ அதிகாரத்தில் ஓரளவு விளக்கியும் முழுமை பெறாததால், பிந்திய ‘கயமை’ அதிகாரத்தில் மேலும் வலியுறுத்தித் தெளிவுபடுத்தப்படுகிறது. கயமை என்பது மூடத்தனம் என்றும் பொருள்படும். கயமைக் குணமின்றி இருத்தல் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது என்பது கருத்து.
கல்வி கேள்விகளால் நிறைந்த அறிவுடைய சான்றோர், வயதில் இளையவராக இருந்தாலும், தமது இந்திரியங்கட்கு வசப்பட்டுத் தீய வழியில் செல்லார். தமது ஐம்பொறிகளையும் தடுத்துப் பாதுகாத்து அடங்கி ஒழுகச் செய்து நற்செயல்களையே செய்வர். ஆனால், அற்பர்களோ, வயதில் மூத்தவர்களாக இருந்தாலும், அறிவு முதிர்ச்சியின்றி, கயமையுடன், ஆயுள் முழுவதும் தீய வழிகளிலேயே உழன்று பயனின்றித் திரிவர். புழுத்த பிணங்களைத் தின்பது கழுகின் தன்மை என்பதுபோல், கயவர்களுக்கு எப்போதும் தீய வழிகளில் செல்வதே குணமாம். கயவர்க்குக் கழுகு உவமை.
தவளைகள் எந்நாளும் செழிப்பான ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளிலேயே வாழ்கின்றன. இருப்பினும் தனது உடம்பின் மேலுள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்க முனைவதில்லை. அதுபோல், நுணுக்கமான கூரிய அறிவு சிறிதும் இல்லாத கயவர்கள், குற்றமில்லாத நூல்களையும், சாஸ்திரங்களையும், கற்றுப் பழகினாலும், அவற்றின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறியும் ஆற்றலும் திறனும் அவர்களிடம் இல்லை. அறிவில்லாத மூடன் என்ன படித்தாலும் தெளிவடையான். நுண்ணறிவற்ற கயவர்களுக்குத் தவளை உவமானம்.
நெருக்கமான மலைகள் நிறைந்த குறிஞ்சி நாட்டின் தலைவனே! ஒருவர் எதிரிலே நின்று அவருடைய நற்குணங்களைக் கூட முகஸ்துதியாகக் கூற, சான்றோர்களின் நாக்கு எழாது. ஆனால், ஒருவரது நற்குணங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு. அவர் செய்த சிறு சிறு குற்றங்களை மட்டும், அவர் எதிரில் நின்று சொல்லச் சிறுமதி கொண்டோர் துணிவர். அத்தகைய கயவர்களின் நாக்கு, தசையினால் அன்றி வேறெந்தப் பொருளால் செய்யப்பட்டதோ? நற்செயல்கள் புரினும் அவற்றைக் கூறாது விடுத்து, அவர் செய்த சின்னஞ்சிறு தவறுகளை மட்டும் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லித் திரிவது கீழோர் குணமாகும்.
பக்கங்கள் உயர்ந்து அகன்ற இடுப்பின் கீழ்ப்பகுதியாகிய பெண்குறித் தடத்தை உடைய குலமகளிர், தம்முடைய பெண் தன்மையை, பொது மகளிர்போல் சிறப்பாக ஒப்பனை செய்யவோ, அலங்கரிக்கவோ மாட்டார். ஆனால், விலைமகளிரோ, தமது பெண் தன்மையை மேம்படப் புனைந்து காட்டி, புது வெள்ளம்போல் ஆடவருடன் கூடிக் கலப்பர். மயக்கிப் பொருளைக் கவர்ந்து செல்வர். குலமகளிர், செயற்கை அலங்காரங்களால் வசீகரிக்க நினையாது, உள்ளத்தில் எழும் உண்மையான இயற்கைக் காதலால் கணவரை ஆட்கொள்வர். மாறாக, பொது மகளிரோ, செயற்கை ஒப்பனை மூலம் ஆடவரை மயக்குவர். விலை மகளிர் போன்றே கயவர்களும் பகட்டாகத் திரிந்தும், ஊரை ஏய்த்து ஏமாற்றியும், வஞ்சித்துப் பொருள் கவர்வர் என்பது கருத்து.
ஒரு பொருளில் துளை போட வேண்டுமெனில், உளியை / சுத்தியலைப் பலமாக அடித்தால்தான் உள்ளே இறங்கும். உளி தானாக நுழையாது. ஓங்கி அடித்தால்தான் உள்ளே ஊடுருவிச் செல்லும். மென்மையான தளிர் மேலே நின்றாலும், தட்டினால் மட்டுமே உள்ளே போகும் உளியைப் போன்றவர்கள் கயவர்கள். தன் மீது அன்புடன் கருணை செலுத்துவோர்க்கு எந்த நன்மையும் செய்யார். ஆனால், தன்னைத் தாக்கித் துன்புறுத்துவோர்க்கு வேண்டிய உபகாரங்களைச் செய்வார்கள். பிறர் துன்பத்தைத் தன் துன்பம்போல் எண்ணி, மனமிரங்கும் இரக்க குணம் கொண்டோர்க்கு, கயவர் எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். மாறாக, தனக்குத் துன்பம் இழைப்போரைக் கண்டு அஞ்சி எல்லா உதவியையும் செய்ய முற்படுவார். உளியை நன்கு அடித்தால்தான் ஊடுருவிச் செல்லும். அதுபோல், கயவரை அடித்து உதைத்தால்தான் உதவுவர். தானாக முன்வந்து உதவ மாட்டார்.
குறவன் தான் வாழும் மலையின் வளத்தை நினைத்துக் கொண்டிருப்பான். உழுது பயிர் செய்யும் விவசாயி பயன் கொடுக்கும் தன்மையுள்ள விளை நிலத்தை நினைத்துக் கொண்டிருப்பான். கல்வி கேள்விகளால் கற்றறிந்த சான்றோர் பிறர் தமக்குச் செய்த உபகாரத்தை நன்றியோடு சிறப்பாக நினைத்துக் கொண்டிருப்பர். ஆனால், கயமைக் குணம் கொண்ட கீழ்மக்களோ, பிறர் தன்னைத் திட்டியதை மட்டுமே மறக்காமல் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்பர். பிறர் தமக்குச் செய்த நல்லனவற்றை எந்நாளும் எண்ண மாட்டார். நிந்தித்ததை மட்டுமே ஞாபகம் வைத்திருப்பர்.
முன்னர் நமக்கு ஒரேயொரு நன்மை செய்தவர், பின்னர் நூறு பிழைகள் இழைத்தாலும், அவை அனைத்தையும் பொறுத்துக் கொள்வது சான்றோர் குணமாகும். ஆனால், எழுநூறு நன்மைகள் செய்து, ஒன்று மட்டும் பிழையாகி விடுமேயானால், முன் செய்த எழுநூறும் பிழையாகக் கொள்வதே கயவர் குணமாகும். நன்றி பாராட்டிப் பிழையை மறப்பது சான்றோர் இயல்பு. நன்றி மறந்து பிழையை நினைப்பது கயவர் இயல்பு.
வாள் போன்ற கூரான விழிகளைக் கொண்டவளே! நற்குடியிலே பிறந்த அறிவுடைய மேன்மக்கள் வறுமை நிலையிலும் தம்மால் முடிந்த அளவுக்கு அறச் செயல்களைச் செய்வர். ஆனால், கயமைக் குணமுள்ள கீழ்மக்கள் செல்வம் படைத்த காலத்திலும் எந்தத் தான தருமமும் செய்யார். பன்றியின் கொம்புகளில் வைரம் இழைத்த நகைகளைப் பூட்டினாலும், அது சினம் கொண்டு வீரத்துடன் போர் செய்ய வல்ல யானைபோல் ஆகி விடாது. கயவர்களிடம் செல்வம் இருந்தாலும் எக்காலத்திலும் அறப் பணிகளில் ஈடுபட மாட்டார். மேன்மக்களுக்கு யானையும், கீழ்மக்களுக்குப் பன்றியும் உவமைகள்.
இன்றைக்குச் செல்வந்தர் ஆவோம். இன்னும் சிறிது நேரம் கழித்துப் பணக்காரர் ஆவோம். இப்போதே கோடீஸ்வரர் ஆவோம். அதன் பிறகு அறம் செய்வோம் எனக் கயவர் கனவுகளிலும், கற்பனைகளிலும் மிதந்து கொண்டிருப்பர். இதை மனத்துக்குள் தனக்குத்தானே நினைப்பதுடன் ஏனையோரிடமும் சொல்லி மகிழ்வர். ஆனால், செல்வந்தர் ஆகும் அவரது கனவும் ஆசையும் நிறைவேறாமல் போகும் போது, உள்ளம் நொறுங்கிச் சுக்கு நூறாக உடையும். செல்வம் வருவதற்கான வாய்ப்பே இல்லாத போதும், வருவதாகப் பெருமை பேசித் திரிவதும், அது வராமல் ஆசை கானல் நீராகும் போது மனம் வெதும்பிச் சாவதும், கயவர் இயல்பாகும். இல்வாழ்வில் ஈடுபடாமல் துறவு கொள்வோம் என்றும், இல்வாழ்வில் இருந்து கொண்டே துறவு கொள்வோம் என்றும், இல்வாழ்வை விட்டு விலகித் துறவு கொள்வோம் என்றும் மனத்துக்குள்ளேயே துறவு பூண்டவராகக் கயவர் மகிழ்ச்சி கொள்வர் என்றும் பொருள் கூறலாம். நீரை விட்டு நீங்காமல் நீரிலேயே (இருத்த இடத்திலேயே) உலர்ந்து அழியும் தாமரை இலைபோன்று பலர் பயனின்றி அழிந்தனர்.
தண்ணீரிலேயே பிறந்து பச்சைப் பசேலென்ற பசுமை நிறத்தைப் பெற்றாலும், நெட்டிச் செடியின் உள்ளே ஈரம் இருக்காது. அதுபோல், நிறைந்த செல்வதுடன் வாழ்ந்த காலத்திலும், கருங்கல் பாறையைப் போல் உள்ளம் கொண்டவர்கள் கயவர்கள். தண்ணீரிலேயே பிறந்தாலும் நெட்டிச் செடியின் உள்ளே ஈரம் இருக்காது என்பதுபோல், செல்வந்தராகவே வாழ்ந்தாலும், அறம் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள். தான தருமம் செய்ய வேண்டும் என்னும் ஈர நெஞ்சம் அற்றவர்கள். கயவர்க்கு நெட்டிச் செடி உவமானம்.
பகையியல் முற்றும்
(தொடரும்)