Skip to content
Home » அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

அறம் உரைத்தல்

பன்னெறியியல்

பன்னெறி = பல + நெறி + இயல். அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும், நீதிகளையும் எடுத்துச் சொல்லும் இயல் என்பது பொருளாகும். நாலடிச் செய்யுட்களை அதிகாரங்களாக வகுத்து, ஒவ்வோர் அதிகாரத்துக்கும் பத்துப் பத்துப் பாடல்களாக அமைத்த பதுமனார், மீதிச் செய்யுட்களைத் தனியே ஓர் அதிகாரமாக வகுத்தார் என்பார் அறிஞர். முன் கூறப்பட்ட இரு அதிகாரங்கள் வீடு பேற்றுக்கு உரிய ஆண்பாலரையும், பின் கூறப்பட்ட இரு அதிகாரங்கள் வீடு பேற்றுக்கு உரிய பெண்பாலரையும் பற்றி நின்றன. இந்த அதிகாரம் இரு பாலரையும் பற்றி நிற்பதாகும். இந்த இயலின் தலைப்பே இந்த அதிகாரத்தின் தலைப்பும் ஆகும். பல்வேறு நெறிகளைக் கூறும் அதிகாரமும் ஆகும். இயலுக்கும், அதிகாரத்துக்கும் ‘பன்னெறி’ என்னும் ஒரே பெயர்தான். இந்த அதிகாரத்தில் இருப்பதும் ஒரேயொரு இயல்தான்.

37. பன்னெறி

மழை மேகங்கள் உரசுகின்ற கோபுரங்களைக் கொண்ட உயர்ந்த மாட மாளிகை, பிரம்மாண்டச் சுற்றுச்சுவர்கள், பாதுகாப்புக்குத் திறமைமிக்க காவல்காரர்கள், ஒளி வீசும் விளக்குகளாக ஜொலிக்கும் நகைகள், இவை அனைத்தும் இருந்தும் என்ன பயன்? விரும்பத்தக்க மாண்புகளையும், பண்புகளையும், நற்குணங்களையும், கொண்ட சிறந்த மனைவியைப் பெறாதவனுடைய இல்லம், பிரம்மாண்ட மதில்கள், காவலாளிகள், ஒளி விளக்குகள் கொண்ட மாளிகையாக இருந்தும் எந்தப் பயனும் இல்லை. நல்ல மனைவியைப் பெறாதவன் இல்லம் மாளிகையே என்றாலும் பிணம் எரியும் பாழும் சுடுகாட்டுக்கும், கொடிய விலங்குகள் வாழும் காட்டுக்கும் சமம்.

இயற்கையிலேயே கற்பொழுக்கம் இல்லாத பெண்களை, கடுமையாகக் காவல் காக்கின்ற வாளேந்திய வீரர்கள் நடுவே சிறந்த பாதுகாப்பிலே வைத்தாலும், எவ்வாறாயினும் ஒழுக்கத்திலிருந்தும் தவறிக் கீழான நடத்தையில் ஈடுபடுவர். சிறு குற்றத்தையேனும் செய்யாத காலம் குறைவு, நல்லொழுக்கத்தைக் கைக்கொள்ளாத காலம் அதிகம். தம் கற்பைத் தாமே காத்துக் கொள்ளாத பெண்களின் கற்பை, காவலில் வைத்தும் பாதுகாக்க முடியாது. கட்டுக் காவலையும், பாதுகாப்பையும் மீறி, ஒழுக்கமற்ற பெண்கள் தவறு செய்யவே துணிவர்.

தான் செய்த தவறுக்காகக் கணவன் சினம் கொண்டால் அஞ்சாது, ‘என்னை அடி பார்க்கலாம்’ என அவனை எதிர்த்து முன்னே நிற்பவள் ‘யமனுக்கு’ சமமாவாள். விடியற்காலை எழுந்து சமையல் அறைக்குள் சென்று சமையல் வேலையில் ஈடுபடாதவள் தீராத ‘நோய்க்கு’ சமமாவாள். தான் சமைத்த உணவைக் கணவனுக்குப் பரிமாறாமல் தானே உண்பவள் வீட்டிலேயே உடன் வசிக்கும் ‘பேய்க்கு’ சமமாவாள். இப்படிப்பட்ட மூவரும் கணவனைக் கொல்லும் ஆயுதம் போன்றவர்கள் ஆவர். இச்செய்யுள், கீழ்ப்படியாத மனைவியை யமனாகவும், நோயாகவும், பேயாகவும் உருவகம் செய்கிறது. அத்தகைய மனைவி, கணவனை உயிரை வறுத்தெடுக்கும், கொல்லும் ஆயுதம் போன்றவள் ஆவாள்.

‘இல்வாழ்க்கை துயரமான வாழ்க்கை, அதைத் துறந்துவிடு’ என அறிஞர் சொல்லக் கேட்டும் கைவிட மாட்டான். வெடி ஓசைபோல் சாவு வீட்டில் பிணப்பறை ஆரவாரிப்பதைக் கேட்டும், வாழ்க்கை நிலையாமையின் உண்மையை உணர மாட்டான். மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டு இன்பமுடன் வாழவே முற்படுவான். ஒரு மனையாள் உயிருடன் இருக்க இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளத் துடிக்கும், இருதார மணத்தைக் கண்டிப்பதாகவும் அர்த்தம்கொள்ளலாம். இந்த அறியாமை அல்லது மயக்கத் தன்மை, தன் கையால் தன் மீதே கல்லை எறிந்துகொள்கின்ற தவறைப் போன்றதாகும்.

தவம் புரிந்து ஒழுக்கமாக வாழ்வதே தலை ‘சிறந்த’ வாழ்வாகும். கற்பிற் சிறந்த இனிய மனைவியுடன் கூடி இல்லறம் நடத்துவது ‘நடுத்தர’ வாழ்வாகும். (இப்பாடலில் ‘இனியார்கண்’ என வருவதைத் தவ ஞானங்களில் சிறந்த நற்குணமுள்ள பெரியோரோடு கூடி வாழ்தல் நடுத்தர வாழ்வாகும் என்பது சிலர் கருத்து). நமக்குக் கிடைக்காது என்றெண்ணி, செல்வத்தின் மீதுள்ள ஆசை காரணமாக, தம்முடைய பெருமையை அறியாத கயவர்கள் பின்னே சென்று, அவரை அண்டியிருப்பது ‘கடைப்பட்ட’ வாழ்வாகும். தவம் உத்தமம். இல்லறம் மத்திமம். தம்மை அறியாதார் பின்னே திரிதல் அதமம். இல்லறத்தை விடவும் துறவறமே சிறந்தது என்னும் சமணர் கருத்தை வலியுறுத்தும் செய்யுளாகும் இது.

சிறந்த ‘உத்தமர்’ எப்போதும் நல்ல ஞான நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுள்ளதாகக் காலம் கழிப்பர். இடைப்பட்ட ‘மத்திமர்’ நல்ல தான தரும வழியிலே சேர்த்த செல்வத்தையும், பொருளையும், அனுபவித்துக் காலம் கழிப்பர். கடைப்பட்ட ‘அதமர்’ எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியின்றி, சுவையான உணவுகள் சாப்பிடக் கிடைக்கவில்லையே, செல்வம் நிரம்பப் பெறாமல் இருக்கிறோமே, என்னும் வெறுப்பினால், உறக்கமின்றிக் காலம் முழுவதும் ஏங்கி வருந்திக் கொண்டிருப்பர்.

செந்நெல் வித்துக்களால் உண்டாகிய செழுமையான முளைகள் அல்லது நல்ல விதைகள், மீண்டும் அந்தச் செந்நெல் பயிராகவே விளையும். அத்தகைய செந்நெல் பயிர்கள் நிறைய விளைகின்ற செழுமையான வளமான வயல்கள் சூழ்ந்த ஊர்களைக் கொண்ட பாண்டிய நாட்டு அரசனே! மகன் பெற்றிருக்கும் அறிவுத் திறன் என்பது அவனுடைய தந்தைக்குள்ள அறிவுத்திறன் போன்றே இருக்கும். ‘சாலி’ என்னும் சிறந்ததொரு சாதி நெல் விதையாலே நல்ல நெல் விளைவதுபோல், தந்தையின் நல்லறிவினால் மகனுக்கு நல்லறிவு உண்டாகும் என்பது கருத்தாம்.

தொன்று தொட்டுப் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த குடியினரும், கல்வியறிவு நிறைந்த சான்றோரும், விதிவசத்தால், முன்வினைப் பயனால், தங்கள் நிலைமைகளிலிருந்து மாறி வறியவராக நேரிடும். ஆனால், இழி குணத்தாரான பொது மகளிர் பிள்ளைகளும், கீழ்மக்களும் செல்வந்தராவது அதிகரிக்கும். தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டிய மேலோர் கடைசி இடத்திலும், கடைசி இடத்தில் இருக்க வேண்டிய கீழோர் தலைமை இடத்தில் இருப்பார்கள். இந்த மாறுதல்கள், காலம் செய்த கோலம், உலக இயற்கையாகும். குடையின் காம்பு கீழ் நோக்கித்தான் இருக்கும். ஆனால் குடையை விரித்துப் பிடிக்கும் போது கீழே இருக்க வேண்டிய காம்பு மேலே இருக்கும். தலைப்பகுதியில் இருப்பது கீழ்ப்பகுதிக்கும், கீழ்ப்பகுதியில் இருப்பது தலைப்பகுதிக்கும் மாறும்.

மலையிலுள்ள ரத்தினங்களை வாரிக் கொண்டு வந்து விழும் அருவிகளை உடைய சிறந்த மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்தின் பாண்டிய நாட்டு அரசனே! அகத்தும் புறத்தும் இனிய நண்பர், மனத்திலுள்ள வருத்தத்தையும், பொருட்குறையையும், துன்பத்தையும், உதவியை எதிர்நோக்கி நம்மிடம் எடுத்துரைக்கிறார். அவற்றை நீக்கும்படி வேண்டினால், அவற்றைப் போக்க நினைப்பதுடன், அதற்கான முயற்சிகளையும் விரைந்து எடுக்க வேண்டும். மாறாக, சிநேகிதர்களின் துன்பத்தை நீக்க எண்ணாத கல்மனம் படைத்தோர், இவ்வுலகில் வாழ்வதை விடவும் இறப்பது நன்றாம். நண்பரின் துயரைப் போக்காதவன் மலை உச்சியில் ஏறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வது நலம்.

மழைக்காலத்தில் பெருகி வருகின்ற புதுநீர்ப் பெருக்கமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் தொடர்பும் ஒன்றேயாகும். பதற்றமின்றி அமைதியாக விருப்பு வெறுப்பின்றி நன்கு ஆராய்ந்து பார்த்தால், இவ்விரண்டும் வேறு வேறல்ல. ஒரே தன்மையைக் கொண்டவை என்பது புரியும். புது வெள்ளம், மழை பொழிவது நின்றுவிட்டால் நீங்கிவிடும். பொது மகளிர் பிறர் மீது வைக்கும் அன்பும் அரவணைப்பும், அவர்களிடமிருந்து பொருள் வருவது நின்றுவிட்டால் விலகிவிடும். பொருள் பறிப்பதை நோக்கமாகக் கொண்டு, பொது மகளிர் மிகுந்த அன்புள்ளவர்கள் போல் நடிக்கும் நடிப்புக்கு, வெள்ளப் பெருக்கு உவமானம்.

பொருட்பால் முற்றும்

(தொடரும்)

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *