அறிமுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும். ஒவ்வொரு வெண்பாவிலும் இடம்பெற்றுள்ள 4 மணி மணியான கருத்துகள், அறிவுரைகள், அறவுரைகள், தித்திக்கும் கரும்பாக, தேனாக, பலாச்சுளையாக, தெவிட்டாத தெள்ளமுதாக இனிக்கும்.
நான்கு வகை மணியான கருத்துகளைச் சொல்லும் நூல் என்பதால் ‘நான்மணிக்கடிகை’ என்றழைக்கப்படுகிறது. ‘கடிகை’ என்றால் துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்னும் தொடர் நான்கு ரத்தினத் துண்டங்கள் எனப் பொருள்படும். இந்நூல் பொ.ஆ. 2 – 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். ஒவ்வொரு பாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத் தேர்ந்தெடுத்துப் பின்னிப் பிணைத்து, அழகிய சொற் கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளார். அதனோடு சொல்லும் முறைமையிலும் ஓர் ஒருமைப்பாடு அமைந்திருத்தலை நூல் முழுவதும் காணலாம்.
இதனை இயற்றியவர் ‘விளம்பி நாகனார்’ என்பவராவர். ‘நாகனார்’ என்பது இவரது இயற்பெயரையும், ‘விளம்பி’ என்பது இவரது ஊர்ப் பெயரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இள நாகனார், இனிசந்த நாகனார், வெள்ளைக்குடிநாகனார், என ‘நாகனார்’ என்ற பெயரைத் தாங்கிய பல புலவர்களைத் தொகை நூல்களில் காணலாம். எனவே, நாகனார் என்பது நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் ஒரு பெயரே ஆகும். விளம்பி என்பது ஊர்ப்பெயராக இல்லாமல் அடைமொழியாக இருத்தலும் கூடும். விளம்பி நாகனார் பெயர் சங்கத்துச் ‘சான்றோர்’ பெயர் வரிசையில் காணப்படாததாலும், கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப் ‘பிற்சான்றோர்’ எனப் பேராசிரியர் குறித்துள்ளதாலும், இவர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டிய வகையை விளக்கும் அருமையான நூலிது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகள் பல இதில் விளக்கப்பட்டுள்ளன. கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், கொல்லாமை, பிறன் மனை நோக்காமை உள்ளிட்ட வள்ளுவரின் அறநெறிக் கருத்துகளையே இவரும் வழிமொழிகிறார். ஒருவனுடைய மதிப்புக்கும், மதிப்பின்மைக்கும் அவன் பெற்ற கல்வி அறிவும், ஒழுக்கமுமே காரணமாக அமையும். அவனுடைய குடிப்பிறப்பைக் கருத்தில் கொண்டு உயர்வாகவோ, தாழ்வாகவோ எண்ணக் கூடாது என்பதை 1500 ஆண்டுகட்கு முன்பே விளக்கிய நூலாசிரியரின் பண்பு போற்றத்தக்ககாதகும்.
கடைச் சங்கத்துக்குப் பிந்திய காலத்துக்கு நூல் என்பதால், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் கருத்துகளையும் இவரது நூலில் காணலாம். ‘நாக்கு’ (75) என்ற பிற்காலச் சொல்வடிவம் இடம் பெறுவதாலும், அசனம் (79), ஆசாரம் (93), சேனாபதி (52) முதலிய வடசொற்களின் பயன்பாட்டாலும், இவர் பிற்சான்றோர் என்பது உறுதிப்படுகிறது. தனிமனித ஒழுக்கம், அரசாள்வோர்க்குரிய அறவுரைகள், தமிழர் தம் கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் இந்நூலில் காணலாம். இந்நூலின் தொடக்கத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் இரண்டும் மாயவனைப் பற்றியவை. எனவே, இந்நூலாசிரியரை வைணவ சமயத்தினர் எனக் கொள்வாரும் உண்டு.
பாயிரம் – கடவுள் வாழ்த்து
மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்;
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றுஅவன் கண்ஒக்கும்; பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம். (1)
வானத்து வெண்ணிலவு, அழியாத வியக்கத்தக்க ஆற்றலுடைய என்றென்றும் நிலைத்திருக்கும் திருமாலின் ஒளிவீசும் திருமுகம் போலிருக்கும். ஒளிரும் கதிர்களை / கிரணங்களைக் கொண்ட சூரியன், அவனது திருக்கரத்தில் சுழலும் சுதர்சனச் சக்கரத்தை ஒத்திருக்கும். தொன்று தொட்டு என்றும் வற்றாதிருக்கும் பழைய நீர்ப் பொய்கையில் / கழனிகளில் உள்ள தாமரைத் தண்டில் தோன்றிய செந்தாமரை மலர்கள், அவனது கண்களுக்கு இணையாகும். புத்தம் புதுக் கருநீலக் காயாம்பூ, அவனது திருமேனிக்குச் சமமாகும்.
சந்திரன் போன்ற முகம், சூரியன் போன்ற சக்ராயுதம், செந்தாமரை போன்ற கண்கள், காயாம்பூ போன்ற நிறம் எனக் கூற வேண்டிய உவமைகள் மாற்றிக் கூறப்பட்டுள்ளன.
படியை மடி அகத்திட்டான்; அடியினால்
முக்கால் கடந்தான் முழுநிலம்; – அக்காலத்து
ஆப்பனித் தாங்கிய குன்றெடுத்தான்; சோவின்
அருமை அழித்த மகன். (2)
ஊழிக் காலத்தில் எல்லா உலகங்களும் கடலில் மூழ்கிய போது அவற்றை மீண்டும் நிலைநிறுத்தத் திருமால் அவை அனைத்தையும் விழுங்கித் தனது வயிற்றில் அடக்கிக் காத்தருளினான். வெண்ணெய் திருடிய கண்ணனை மிரட்டிய போது, தான் உண்ணவில்லை என்பதை மெய்ப்பிக்க வாயைத் திறந்து காட்டிய போது யசோதை மூன்று உலகங்களையும் கண்டாள். மகாபலியின் செருக்கை அடக்க வாமன அவதாரம் எடுத்து அவனிடம் மூன்றடி மண் கேட்டான். மண்ணுலகையும், விண்ணுலகையும், தன் இரண்டு திருவடிகளால் அளந்து மூன்றாம் அடிக்கு மண் பற்றாமையால் அவன் தலை மீது வைத்தான். ஆயர்பாடியில் பூஜையை ஏற்றதால் இந்திரன் கோபம் கொண்டு பெருமழையைப் பெய்வித்தான். மக்களையும், பசுக்களையும் காப்பாற்றக் கோவர்த்தன மலையைக் குடைபோல் கையிலே தாங்கிக் காப்பாற்றினான். கிருஷ்ணனுக்கு பேரன் உறவுமுறையான அநிருத்தனை ஒரு சமயம் பாணாசுரன் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டான். அவனை மீட்கப் பாணாசுரனுடன் போரிட்டு அக்னி தேவன் அரணாகப் பாதுகாத்த அவனது நெருப்பு மலையை அழித்தான்.
நூல்
எள்ளற்க என்றும் எளியரென்று; என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கை மேற்பட; உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை; கூறற்க
கூறு அல்லவற்றை விரைந்து. (3)
செல்வச் செழிப்பில்லாத ஏழை வறியவர் என்பதற்காக ஒருபோதும் ஒருவரை இகழ்ந்து பேசாதீர். எதன் பொருட்டும் எதைப் பெறுவதற்காகவும் தகாதவர்கள் கை மேலாகவும் தம் கை கீழாகவும் இருக்கும்படி எதையும் பெற்றுக் கொள்ளாதீர். வறுமையில் வாடி வதங்கும் ஏழை மக்கள் தகாத செயல்களைச் செய்து நோகடித்தாலும், மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மீது சினமோ கோபமோ கொண்டு எந்தவொரு வார்த்தையும் சொல்லாதீர். பிறர் மனம் பதைபதைக்கும் வகையில், கேட்பவர் உள்ளம் வருந்தும் வகையில், சொல்லக் கூடாத சொற்களை உணர்ச்சி வசப்பட்டு ஒருபோதும் கூறாதீர்.
ஏழைகளைப் பரிகசிக்காதீர், பிறரிடம் கையேந்தாதீர், வறியவரை வையாதீர், பிறர் மனம் பதைபதைக்கப் பேசாதீர்.
பறைபட வாழா அசுணமா; உள்ளம்
குறைபட வாழார் உரவோர்; நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல்பட வாழாதாம் சால்பு. (4)
இன்னிசை கேட்டு உயிர் வாழும் ஒருவகைப் பறவை அசுணம் என்னும் கேகயம். அப்பறவை மிகுந்த ஒலி எழுப்பும் தம்பட்டம் / பறைச் சத்தம் கேட்டால் அதைத் தாங்காமல் உயிரை விட்டுவிடும். கற்றறிந்த அறிவுடைய பெரியோர் தமது பெயருக்கும் பெருமைக்கும் குறைவோ தாழ்வோ ஏற்பட்டால் உயிர் வாழ விரும்ப மாட்டார்கள். மரங்கள் நிறைந்த காட்டில் வளரும் மூங்கில்கள் தாம் பூத்த நெல்லை ஈன்ற போதே முதிர்ந்து பட்டுப்போகும். நற்குணம் கொண்ட பெருமை மிக்க பெரியோர் தம் மேன்மைக்கு எதிரான பழிச்சொல்லோ மானக் கேடோ வந்தால் இறக்கத் துணிவர்.
பறையொலி கேட்டால் அசுணப் பறவை வாழாது. பெருமை குறைந்தால் பெரியோர் வாழார். முற்றி அரிசி உண்டானால் மூங்கில் பட்டுப்போகும். பழிவந்தால் சான்றோர் வாழார்.
மண்ணி அறிப மணிநலம்; பண்அமைத்து
ஏறியபின் அறிப மாநலம் – மாசறச்
சுட்டறிப பொன்னின் நலம்காண்பார்; கெட்டறிப
கேளிரால் ஆய பயன். (5)
மாணிக்கம் முதலிய மணிக்கற்கள் நீண்ட காலம் மண்ணில் கிடப்பவை. எனவே அவை உண்மையிலேயே மாணிக்கக் கற்களா அல்லது கூழாங்கற்களா என்பதை அறியவும், தரத்தையும் நல்லியல்பையும் தன்மையையும் தெரிந்து கொள்ளவும், தண்ணீரில் நன்றாகக் கழுவித் தூய்மை செய்து பரிசோதித்து அறியலாம். உயர்சாதிக் குதிரையா அல்லது வேறு வகை மட்டமான குதிரையா என்பதைத் தெரிந்து கொள்ள, வீரர்கள் அதன் மீது சேணம் அமைத்து ஏறி அமர்ந்த பிறகு அறியலாம். தங்கத்தின் தரத்தையும் கலந்துள்ள குறைகளையும் அதை நெருப்பில் இட்டுச் சுட்டு உருக்கிப் புடமிட்ட பின்பே அறியலாம். உறவினர்களால் பெறும் நன்மைகளைத் தம் செல்வ வளம் குன்றிக் குறைந்து கெட்டு அழிந்து தாழ்வுறும் போது அறியலாம்.
மாணிக்கத்தின் நலத்தைக் கழுவிய பின்னும், குதிரையின் ரகத்தை ஏறி அமர்ந்த பின்னும், தங்கத்தின் தரத்தைப் புடமிட்ட பின்னும், சொந்தங்களின் உறவைச் செல்வம் குறைந்த பின்னும் அறியலாம்.
கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்; மான்வயிற்றில்
ஒள்அரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்
நல்லாள் பிறக்கும் குடி. (6)
கள்ளிச் செடி ஒரு முள் செடியாகும். இதன் அடித்தண்டில் மணம் வீசும் அகில் கட்டை உண்டாகும். மானின் வயிற்றில் மருந்துப் பொருளான உயர்ந்த அரிதாரம் கிடைக்கும். உப்பு நிறைந்த பெருங்கடலில் விலை மதிப்புள்ள முத்து கிடைக்கும். இவைபோல், நல்ல மனிதர்கள், எங்கு, எந்தக் குலத்தில் பிறப்பார்கள் என்பதை யாரால் சொல்ல முடியும்? சான்றோர்கள் உயர்ந்த குடியில்தான் பிறக்க வேண்டும் என்பதில்லை. தாழ்ந்த குலத்திலும் தோன்றலாம்.
மிக உயர்ந்த சிறந்த பொருள்கள் பல இடங்களில் உண்டாகின்றன. அதுபோல், நல்லவர்களும், உயர்ந்தவர்களும், பல குடிகளின் தோன்றுவர். எனவே பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது.
கல்லில் பிறக்கும் கதிர்மணி; காதலி
சொல்லில் பிறக்கும் உயர்மதம்; மெல்லென்ற
அருளில் பிறக்கும் அறநெறி; எல்லாம்
பொருளில் பிறந்து விடும். (7)
மலையின் பாறைகளில் ஒளியுள்ள மணிக்கற்கள் தோன்றும். காதலியின் அன்பான சொற்களில் காம மயக்கம் தரும் மிகுதியான களிப்பு உண்டாகும். மென்மையான இரக்கத் தன்மையால் அருளால் கருணையால் அறவழியில் நன்நெறிகளும், நல்லொழுக்கம் அமையும். முன் சொன்ன செல்வமும், போகமும், பின் கூறிய தரும வழிகள் யாவும், பொருளினால் கிடைத்துவிடும் என்பதால் பொருளைத் தேட வேண்டும்.
மலைப் பாறைகளில் மணிக்கற்களும், காதலியின் சொற்களில் களிப்பும், அருளில் அறநெறிகளும், பொருளால் இவை அனைத்தும் உண்டாகும்.
திருஒக்கும் தீதில் ஒழுக்கம்; பெரிய
அறன்ஒக்கும் ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலைஒக்கும் கொண்டு கண்மாறல் புலைஒக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு. (8)
தீமை இல்லாத, குற்றமற்ற, பிறருக்குக் கேடு விளைவிக்காத நல்லொழுக்கம், வாழ்க்கையில் மதிப்பையும் உயர்வையும் புகழையும் தருவதால், பெரும் செல்வத்துக்கு ஒப்பாகும். நல்லொழுக்க நெறியைப் பின்பற்றி இல்லறத்துக்கு உரிய வழியில் நடத்தல், மேன்மையான துறவறமாகக் கருதப்படுவதால் பெரிய அறச்செயல் போலாகும். ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொண்ட பின்னர் கருத்து மாற்றம் காரணமாக நட்பை முறித்துக் கொண்டு, அவன் மீது பகைமை கொள்வதோ, புறம் பேசுதலோ, கொலைக் குற்றம் போன்ற கொடிய செயலுக்கு இணையாகும். தன்னை மதிக்காதவரிடம் சென்று கைநீட்டிப் பொருளோ உதவியோ பெறுவது இழிவான செயலில் ஈடுபடுவதற்குச் சமமாகும்.
நல்லொழுக்கம் செல்வத்துக்கும், நல்வழியில் நடத்தல் அறத்துக்கும், நண்பனைப் பழித்தல் கொலைக்கும், மதியாதாரிடம் யாசிப்பது இழிச்செயலுக்கும் ஒப்பாகும்.
கள்வம் என்பார்க்குத் துயிலில்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்குத் துயில்இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில்இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில். (9)
ஊர் எப்போது உறங்கும் எப்போது திருடலாம் எனக் கண் விழித்துக் காத்திருப்போர்க்கு, திருடுவதற்குத் தக்க நேரம் வரும்வரை தூக்கம் வராது. மனம் கவர்ந்த காதலி மீது உள்ளத்தைப் பறி கொடுத்து அவளை எப்போதும் நினைத்துக் கொண்டே அன்புக்கும் ஆசை வார்த்தைக்கும் ஏங்கித் தவிர்ப்போர்க்கு, அவளைக் கூடும் வரை உறக்கம் வராது. செல்வத்தைச் சேர்க்க வேண்டுமென அதைத் தேடும் குறிக்கோளுடன் இரவு பகல் பாராது உழைப்போர்க்கு, பொருளைச் சேமிக்கும் வரை நித்திரை வராது. பாடுபட்டுச் சேர்த்த பொருளைத் தீயவர்கள் கள்வர்கள் கவர்ந்து செல்லாமல் காவல் காப்போர்க்குத் துயில் என்பது வரவே வராது.
திருடர்கள், காதலர்கள், பொருள் தேடி உழைப்பவர்கள், சேர்த்த செல்வத்தைப் பாதுகாப்பவர்கள் ஆகியோருக்கு இரவுத் தூக்கம் வராது.
கற்றார்முன் தோன்றாக் கழிவிரக்கம்; காதலித்துஒன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல்; தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும். (10)
கற்றவர்கள் நடப்பவை அனைத்தும் இறைவன் சித்தம் என மன உறுதி கொண்டவர்கள். எனவே இழப்பை எண்ணி வருந்தும் துன்ப இயல்பு அறிவிற் சிறந்த பெரியோர்களிடம் காணப்படாது. ஒரு நல்ல செயலைச் செய்ய மனம் விரும்பி அதைச் செய்யத் தொடங்கிய பிறகு அது விரைந்து முடியாமல் போனாலோ, முயற்சி வெற்றி பெறாவிட்டாலோ, சலிப்போ சோர்வோ அவர்களிடம் உண்டாகாது. தீமை எனத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தும், அத்தீமையைச் செய்வோர்க்கு நல்லற எண்ணமோ தர்ம சிந்தனையோ வராது. சினம் கொண்டு கோபம் கொள்வார்க்கு எல்லா நன்மைகளும் உண்டாகாமல் மறைந்து போகும். எது நன்மை எது தீமை எனத் தோன்றாமல் கெட்டு அழியும்.
கற்றோர் இழப்பை எண்ணி வருந்தார். ஊக்கம் உடையோர் முயற்சியில் தளரார். தீமை செய்வோர் நல்லறம் அறியார். கோபம் கொள்வோர்க்கு எல்லாம் தீமையே. எனவே ஒருவன் கற்றுணர்தலுடன், வீணாக ஆசை கொள்ளவோ, தீமை செய்யவோ, கோபிக்கவோ கூடாது.
நிலத்துக்கு அணிஎன்ப நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணிஎன்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணிஎன்ப நாணம்; தனக்குஅணியாம்
தான்செல் உலகத்து அறம். (11)
அணி என்ற சொல்லுக்கு அழகு என்று பொருளாகும். நல்ல விளை நிலத்துக்கு அல்லது வயலுக்கு அழகு தருவன நெற்பயிரும் கரும்பும் ஆகும். நீர் நிறைந்த குளத்துக்கு அழகு தருவன அதில் பூத்திருக்கும் தாமரைப் பூக்கள். பெண்மை நலத்துக்கு அழகு தருவன பழி அஞ்சுதல் வெட்கம் அல்லது நாணம் ஆகும். அதுபோல் ஒவ்வொருவருக்கும் அழகு தருவது மறுமை உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அறச் செயல்கள் ஆகும்.
வயலுக்கு நெல்லும் கரும்பும், குளத்துக்குத் தாமரையும், பெண்மைக்கு வெட்கமும், மறுமைக்கு அறமும் அழகு தருவன ஆகும்.
கந்தில் பிணிப்பர் களிற்றை; கதம்தவிர
மந்திரத்தால் பிணிப்பர் மாநாகம்; கொந்தி
இரும்பில் பிணிப்பர் கயத்தை; சான்றோரை
நயத்தில் பிணித்து விடல். (12)
கந்து என்பதற்குக் கட்டுத்தறி என்பது பொருளாகும். யானையைக் கட்டுத் தறியில் கட்டிப் பாகர்கள் அடக்குவர். கொடிய விஷமுள்ள நல்ல பாம்பின் சீற்றம் தணிக்கப் பாம்பாட்டிகள் மறை மொழிகளாலும் மந்திரத்தாலும் கட்டுப்படுத்துவர். பாதகச் செயல்களைச் செய்வோரை, வஞ்சகரை, திருடர்களை, ஆயுதங்களால் காயப்படுத்தியும், அச்சுறுத்தியும், இரும்புச் சங்கிலிகளால் பிணைத்தும் ஒடுக்குவர். கல்வி அறிவு ஒழுக்கம் நிறைந்த சான்றோர்களை இனிய சொற்களாலும் அன்பாலும் நயமாகப் பேசியும் அரவணைத்து வசப்படுத்துவர்.
யானையை கட்டுத்தறியாலும், பாம்பை மந்திரத்தாலும், வஞ்சகனைக் கைவிலங்காலும், சான்றோரை இன்சொல்லாலும் வசப்படுத்தலாம்.
(தொடரும்)