கன்றாமை வேண்டும் கடிய; பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்; என்றும்
விடல்வேண்டும் தங்கண் வெகுளி; அடல்வேண்டும்
ஆக்கம் சிதைக்கும் வினை (13)
மனம் நோகும்படி பிறர் தமக்குச் செய்த தீமையை எண்ணி வருந்தாமலும், மனம் புழுங்காமலும், கறுவு கொள்ளாமலும் இருக்க வேண்டும். அதை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காமல் அப்போதே மறந்துவிட வேண்டும். ஆனால், பிறர் செய்த உதவிகளை, நன்மைகளை மறக்காமல் எப்போதும் மனத்துக்குள் பெரிதாக நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டுத் தம்மிடம் தோன்றும் கோபத்தை, பெரும் சினத்தை எக்காலத்திலும் நீக்கல் வேண்டும். செல்வம், கல்வி, நல்லொழுக்கம், புகழ், உள்ளிட்ட முன்னேற்றங்களுக்குத் தடையாகக் குறுக்கிடும் செயல்களை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்.
தீமையை மறக்க வேண்டும், நன்மையை நினைக்க வேண்டும், கோபத்தை நீக்க வேண்டும், முன்னேற்றத்துக்கான தடைகளை அழிக்க வேண்டும்.
பல்லினால் நோய்செய்யும் பாம்பெல்லாம்; கொல்ஏறு
கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை; ஊடி
முகத்தால் நோய்செய்வர் மகளிர்; முனிவர்
தவத்தால் தருகுவர் நோய் (14)
பாம்புகள் விஷமுடைய பற்களினால் கடித்துத் துன்பம் தரும். கொல்லும் தன்மை உடைய கொம்புகளைக் கொண்ட காளை மாடு தன்னைத் தாக்க வருவோரைக் கொம்புகளால் குத்தித் துன்பம் உண்டாக்கும். (கொல் ஏறு என்றும் கொல் களிறு என்றும் சில ஏடுகளில் காணலாம். கொல் ஏறு = கொல்லும் காளை என்றும், கொல் களிறு = கொல்லும் யானை என்றும் பொருள் கொள்ளலாம்). பெண்கள் பொய்யாகக் கோபித்தும், ஊடல் கொண்டும், பிணங்கியும், முகத்தைத் திருப்பிக் கொண்டும், முகக்குறிப்பால துன்பம் விளைவிப்பர். முனிவர்கள் தவம் செய்து பெற்ற வலிமையால் தம்மை இகழ்ந்தவர்களை, மதியாதவர்களை, சாபமிட்டுத் துன்பம் இழைப்பர்.
பாம்புக்குப் பல், காளை (யானை)க்குக் கொம்பு, பெண்ணுக்குப் பிணக்கு, முனிவருக்குத் தவம் ஆகிய நான்காலும் பிறர் துன்பம் அடைவர்.
பறைநன்று பண்அமையா யாழின்; நிறைநின்ற
பெண்நன்று பீடுஇல்லா மாந்தரின்; பண்அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று. (15)
நல்ல நரம்பினால் கட்டுதல் இல்லாத அல்லது சிறந்த பண்ணிசை அமையாத யாழ் இசை விடவும், பறை இசை மேலானது. யாழ் ஓர் இன்னிசைக் கருவி ஆகும். பறை செவிகளுக்கு வெறுப்பான வல்லோசை எழுப்பும் கருவியாகும். நரம்புகளை நன்கு முறுக்கி இசைக்கேற்றபடி ஸ்ருதி கூட்டி மீட்டப்படாத யாழ் ஓசை இனிமை தராது. ஸ்ருதி கெட்டு ஒலிக்கும் யாழ் இசையை விட, செவிகளைக் கிழிக்கும் பறை அல்லது தம்பட்டம் ஓசை நல்லது. பெருந்தன்மை இல்லாத ஆணை விடவும், மனத்தைக் கற்பு வழியில் நிறுத்தும் தன்மை கொண்ட பெண் நன்று. பதம் கெட்டு அதாவது பக்குவப்படாத, வேகாத, தூய்மைக் கேடான உணவை உண்பதைக் காட்டிலும் பசியோடு இருப்பது நலம். தம்மை உள்ளத்து அன்போடு நேசித்தவர்களை விட்டு விலகிப் பிரிந்து போய் உயிர் வாழ்வதை விடவும் நெருப்பில் விழுந்து சாவது மேல்.
ஸ்ருதி கெட்ட யாழோசைக்குப் பறையோசை நல்லது, கேடு கெட்ட ஆணுக்குக் கற்புடைய பெண் நன்றாம், கெட்டுப் போன உணவைச் சாப்பிடுவதற்குப் பட்டினி இருப்பது நலம், விரும்பியவரை ஒதுக்கி வாழ்வதை விடவும் சாவது மேல்.
வளப்பாத்தி உள்வளரும் வண்மை; கிளைக்குழாம்
இன்சொல் குழிஉள் இனிதுஎழூஉம்; வன்சொல்
கரவுஎழூஉம் கண்இல் குழிஉள்; இரவுஎழூஉம்
இன்மைக் குழிஉள் விரைந்து (16)
ஈகைக் குணம் என்னும் பயிர் நல்லோருடைய செல்வமாகிய பாத்தியில் விளையும். உறவினர் மற்றும் சுற்றத்தின் கூட்டமாகிய பயிர் இனிமையான சொல்லாகிய பாத்தியில் இடையூறின்றிச் செழுமையாக நன்கு விளையும். கடினச் சொற்களோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர் கருணையற்ற அருள் நோக்கமற்ற இடத்தில் வளரும். இரத்தல் என்னும் பயிர் வறுமை என்னும் பாத்தியில் விரைவாக வளரும்.
ஈகைக் குணம் செல்வத்தாலும், உறவினர்க்கு மகிழ்ச்சி இன்சொல்லாலும், வஞ்சனை கருணையற்ற இடத்திலும், யாசகம் வறுமையாலும் உண்டாகும்.
இன்னாமை வேண்டின் இரவுஎழுக; இந்நிலத்தில்
மன்னுதல் வேண்டின் இசைநடுக; தன்னொடு
செல்வது வேண்டின் அறம்செய்க; வெல்வது
வேண்டின் வெகுளி விடல் (17)
ஒருவன் தனக்கு இழிவை விரும்புவானாயின் மானம் கெடும் இரத்தலை அதாவது யாசிப்பை மேற்கொள்ளட்டும். இந்த உலகில் தனது பெயர் என்றும் நிலைத்திருக்க விரும்புவானாயின் புகழைச் சேர்க்கட்டும். செல்வம் முதலான எதுவும் மறுமைக்கு உதவாது. இறந்து போன பிறகு மறு உலகுக்குத் தன்னுடன் வரத்தக்கத் துணையை விரும்புவானாயின் தான தருமங்களைச் செய்யட்டும். மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களை வெல்ல விரும்புவானாயின் கோபத்தை விட்டொழிக்கட்டும்.
இழிவை விரும்பின் யாசிக்க, அழியாமை வேண்டின் புகழ் புரிக, மறுமைக்குத் துணை வேண்டின் அறம் செய்க, வெல்ல விரும்பின் சினம் விடுக.
கடற்குட்டம் போழ்வர் கலவர்; படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம்இல்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும் (18)
கலவர் = மரக்கலம் வைத்திருப்பவர்; குட்டம் = ஆழம்; மா = குதிரை. மரக்கலம் வைத்திருப்பவன் ஆழமான கடலையும் பிளந்து சென்று கரையை அடைவான். பாய்ந்து செல்லும் குதிரைப் படையை வைத்திருப்பவன் பகைவர் சேனை என்னும் கடலைச் சிதறடித்து வெல்வான். மனம் போன போக்கில் வாழாமல், மனத்தை வசப்படுத்தும் ஐம்புலன்களை வெல்லும் ஆளுமை உடையவன் குற்றமற்ற தவம் என்னும் கடலைக் கடந்து சித்திகள் அனைத்தையும் பெறுவான். சந்தேகமின்றிக் கற்றுத் தெளிந்தவன் கற்றறிந்த சான்றோர்கள் நிறைந்த அவையாகிய கடலைத் தன் அறிவாலும், பேச்சாலும், பொருள் விளக்கத்தாலும் கவர்ந்து பாராட்டுகளைக் குவிப்பான்.
மரக்கலத்தால் கடலைக் கடக்கலாம், குதிரைப்படையால் எதிரிகளை வெல்லலாம், ஐம்புலன்களை அடக்கிச் சித்திகள் பெறலாம், கல்வியால் அவையைக் கவரலாம்.
பொய்த்தல் இறுவாய நட்புகள்; மெய்த்தாக
மூத்தல் இருவாய்த்து இளைநலம்; தூக்குஇல்
மிகுதி இறுவாய செல்வங்கள்; தத்தம்
தகுதி இருவாய்த்து உயிர் (19)
நட்புகள் நேசங்கள் உண்மையாக இருத்தல் வேண்டும்.நண்பர்கள் தமக்குள் வஞ்சத்துடன் பொய்யாகப் பழக நேர்ந்தால் அவர்களது நட்பு முறிந்து பகை என்னும் இறுதி நிலைக்குப் போகும். காண்போர் கண்களுக்கு அழகாகத் தெரியும் இளமைப் பருவம் முதுமை அல்லது மூப்பு என்னும் இறுதி நிலையை எட்டும். வரம்பு மீறிய செயல்களாலும், தீய நடத்தைகளினாலும், செருக்காலும், சேர்த்து வைத்த செல்வம் பறிபோய் இறுதி நிலைக்கு அழைத்துச் செல்லும். உயிருடன் உலவும் வாழ்நாள் என்பது நல்வினை தீவினை இருவினைக்கேற்ப வாழும் காலத்தின் எல்லை வந்ததும் இறுதியாக உயிர் உடலை விட்டுப் பிரியும்.
நட்பில் வஞ்சனை பகையில் முடியும். இளமைப் பருவம் முதுமையை எட்டும். செருக்கு செல்வத்தை அழிக்கும். இருவினைக்கேற்ப உடலை விட்டு மறுமைக்கு உயிர் பிரியும்.
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச்செவ்வேல்
நாட்டு ஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் இரீஇ விடல் (20)
மாண்ட = நற்குணங்களால் சிறந்த, மாட்சிமை பொருந்திய என்றும் பொருள். ஒருவனுடைய மனை வாழ்வுக்கும், வீட்டுக்கும் பெருமை தருவது அங்கு வாழும் பெண்கள் நற்குணச் சிறப்பு உடையவர்களாக இருத்தலே ஆகும். வீரன் ஒருவனது சினந்து கொல்லும் குருதிக்கறை படிந்த சிவந்த வேலாயுதமே பயிற்சியில் சிறந்து தேர்ந்து விளங்கும். அத்தகைய படைப் பயிற்சி உடையவனே போரில் வெற்றியைக் குவித்து உயர்வை அடைவான். போர்த் தொழிலுக்குப் பெருமை சேர்ப்பான். செங்கோல் நீதி நெறி வழுவாமல், நாட்டை ஆளுகின்ற அரசன் நல்லவன் எனக் குடிமக்கள் சொல்வதே அந்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும். தனது உறவுகளை, சுற்றத்தாரை, ஒருவன் துன்பம் வரும் காலத்தில் கைவிடுதல் அல்லது விட்டு விலகி நீக்குதல் கேட்டிற்கே வழிவகுக்கும்.
வீட்டுக்குப் பெருமை பெண். வீரர்க்குப் பெருமை வேல் பயிற்சி. நாட்டுக்குப் பெருமை நல்ல அரசன். உறவுக்குப் பெருமை சுற்றத்தாரை அரவணைத்தல்.
பெற்றான் அதிர்ப்பின் பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின் பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும். (21)
கணவன் இல்லறத்துக்குரிய ஒழுக்கம் கெட்டுக் குணநலம் தவறினால், இணையான துணை மான் போன்ற மருண்ட பார்வை கொண்ட அவனது வாழ்க்கைத் துணைவியும் கதி கலங்குவாள். கற்றறிந்த புலவன் மன மாறுபாடு கொண்டு அறிவு கலங்கினால், அவன் கற்ற நூல்களின் பொருளும் முரண்படும். மண்ணின் குடிமக்கள் மன்னனால் கொடுமை செய்யப்பட்டுத் துன்பத்தில் நிலை குலைந்தால், அந்நிலத்தை ஆளும் மன்னனின் ஆட்சியும் செங்கோலும் நிலை குலையும். யாழ் நரம்பின் கட்டுகள் சீர்கெட்டால், அந்த யாழிலிருந்து எழும் இசையும் சீர்குலையும். (பாட்டு எனப் பொருள் கொண்டால் பாடும் பாட்டும் நிலை குலையும் என அர்த்தம் கொள்ளலாம்).
கணவன் ஒழுக்கம் தவறினால் மனைவியும் கெடுவாள். புலவன் அறிவு கலங்கினால் அவன் கருத்தும் மாறுபடும். குடிமக்களைத் துன்புறுத்தினால் மன்னன் ஆட்சியும் அழியும். யாழ் நரம்பு கெட்டால் இசையும் பாட்டும் கெடும்.
மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை; தான் செல்லும்
திசைக்குப் பாழ் நட்டோரை இன்மை ; இருந்த
அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு (22)
வாள்நுதல் = ஒளி பொருந்திய நெற்றி. வீட்டுக்கு நற்குணமும், நல்ல செய்கையுமுள்ள மனைவி அமையவில்லை எனில் அந்த வீடு நிம்மதியை இழக்கும். நண்பர்கள் இல்லாத திசை நோக்கிச் செல்வது பயனில்லை என்பதால் அந்த இடம் பொலிவை இழக்கும். பலர் குழுமியிருக்கும் சபையில் கல்வியறிவு கேள்விகளால் சிறந்த சான்றோர் இல்லையெனில் அந்தச் சபை மாண்பை இழக்கும். படிப்பறிவில்லாத ஜடமாக இருப்பது உடலெடுத்த பிறவியின் பயனை இழக்கும்.
மனைவி இல்லாமை வீட்டுக்குக் கேடு. நண்பர்கள் இல்லா ஊருக்குப் பயணிப்பது இடத்துக்குக் கேடு. சான்றோர் இல்லாமை சபைக்குக் கேடு. அறிவற்ற ஜடமாக இருப்பது உடலெடுத்த பிறவிக்குக் கேடு.
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப்; பெய்த
கலம் சிதைக்கும் பாலின் சுவையைக்; குலம் சிதைக்கும்
கூடார்கண் கூடி விடின் (23)
நல்லவரோடு இணங்கி ஒற்றுமையாக இல்லாமல் மாறுபட்டும், வேறுபட்டும் நிற்பது ஒருவனுடைய வலிமையையும், பெருமையையும், அழித்துவிடும். பொய்யான தீய ஒழுக்கம் ஒருவன் பொன் போன்ற ஜொலிக்கும் தங்க நிற உடம்பைக் கூட நலம் கெட்டு இளைத்துப் பொலிவிழக்கச் செய்யும். ஊற்றி வைக்கப்பட்ட பாத்திரத்தின் அசுத்தம் பாலின் சுவையைக் கெடுத்து விடும். சேரக் கூடாத தீயோர்களுடன் நட்பு பாராட்டுவதும், பழகுவதும், குலத்தின் புகழையும், குடியையும் கெடுத்துவிடும்.
ஒற்றுமை இன்மை வலிமையை அழிக்கும். தீய பழக்கம் மேனியை அழிக்கும். தூய்மையற்ற கலம் அதிலுள்ள பாலைக் கெடுக்கும். கூடா நட்பு குலப் பெருமையை அழிக்கும்.
புகழ்செய்யும் பொய்யா விளக்கம்; இகழ்ந்தொருவன்
பேணாது செய்வது பேதமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள்தீர்ந்த
கண்ணராச் செய்வது கற்பு (24)
பொய் சொல்லாமை என்னும் ஒளி ஒருவனுக்குப் புகழைத் தரும். பெரியோரைத் துணையாகக் கொள்ளாமல், அறத்தின் எல்லை கடந்து, பிறரை இகழ்வதும், முறை தவறுவதும், மதியாமையும், அறியாமையும், தீமையை விளைவிக்கும். கல்லாமை அல்லது செல்வம் ஆகியவற்றால் வரும் மயக்கமானது, நன்மை தீமை உணராது, ஒருவனை அறிவு மற்றும் கருத்துக் குருடாக்கும். கல்வி அறிவே கருத்துக் குருட்டை நீக்கி, மயக்கத்தைத் தெளிவித்து, உண்மைக் கண்ணொளியான ஞானத்தை ஊட்டும்.
பொய் சொல்லாமை புகழைத் தரும், அறியாமை தீமையைச் செய்யும், கல்லாமை கருத்துக் குடுடாக்கும், கல்வியே அறிவைத் தரும்.
மலைப்பினும் வாரணம் தாங்கும்; குழவி
அலைப்பினும் அன்னே என்று ஓடும்; சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினைசெய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல். (25)
பாகன் யானையை வருத்தினாலும், துன்புறுத்தினாலும், அது அவனைத் தன் முதுகில் மேல் ஏற்றித் தாங்கும். தாய் குழந்தையை அடித்தாலும், அது அம்மா என்று அழுது கொண்டே அன்னையிடம்தான் செல்லும். தவறு கண்டு நண்பர் மீது சினம் கொண்டு வைதாலும், உள்ளத்தை நடுங்க வைக்கும் தீமையை அவர் ஒருபோதும் செய்ய மாட்டார். ஆனால், பகைவர்கள் மனத்தால் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல், ஒன்று கூடி நீங்காத நட்பு கொண்டு வாழும் காலம் என்றைக்கும் இல்லை.
பாகன் துன்புறுத்தினாலும் யானை முதுகில் சுமக்கும். தாய் அடித்தாலும் குழந்தை அவளிடமே செல்லும். கோபித்தாலும் நண்பர்கள் தீமை செய்யார். பகைவர் ஒற்றுமையுடன் வாழார்.
(தொடரும்)