Skip to content
Home » அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

அறம் உரைத்தல்

நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட
தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும் (26)

(நகை = முகமலர்ச்சி; சில பாடங்களில் நசை = விருப்பம் என்றும் இருக்கும்; நந்தும் = வளரும்; பாடு = பெருமை; விசைமாண்ட = விரைந்தோடும்) முகம் மலர்ந்து பார்ப்பதால் உண்டாகும் நன்மை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே நேசத்தை வளர்க்கும். கற்றறிந்த சான்றோர்கள் நிறைந்த மேலான அவைக் கூட்டம், வருவோர் மீது செலுத்தும் அன்பாலும், அரிய கருத்துக்களை எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவதாலும் சிறப்படையும். துள்ளிப் பாய்ந்து விரைந்தோடும் தேரின் சிறப்பு, அத்தேரைச் செலுத்தும் பாகனின் திறமையால் பெருமை அடையும். ஊரின் வளமும் நலமும், அந்த ஊரை ஆளும் மன்னனால் மதிக்கப்படும். முகமலர்ச்சி நட்பை வளர்க்கும். மேலான அவை அன்பால் சிறக்கும். தேரின் பெருமை பாகனால் மேம்படும். ஊரின் வளம் மன்னனால் மதிக்கப்படும்.

அஞ்சாமை அஞ்சுக; ஒன்றின் தனக்கு ஒத்த
எஞ்சாமை எஞ்சும் அளவெல்லாம்; நெஞ்சு அறியக்
கோடாமை கோடி பொருள் பெறினும்; நாடாதி
நட்டார்கண் விட்ட வினை (27)

(நாடாதி = ஆராயாதே; நட்டார் = நண்பர்; எஞ்சாமை = குறைபடாமை) பொய், களவு, கொலை உள்ளிட்ட பழிபாவங்கள் அஞ்சத்தக்கவை. பழி என்பது இவ்வுலகத்தார் பழிக்கும்படியான செய்கை. பாவம் என்பது மறுமையில் துன்பம் சேர்க்கும் செயல். எனவே இவ்விரு வகை பழிபாவங்களுக்கு அஞ்சி வாழவேண்டும் என்பது ஆன்றோர் கொள்கை. இயன்ற அளவில் பிறர்க்கு எந்தக் குறையோ, குறைபாடோ இல்லாமல் உதவ வேண்டும். பொருளுக்காகவும் இலாபத்துக்காகவும், உள்ளம் உணர, நெஞ்சம் அறிய, ஒரு பக்கம் சாயாது, நடுவு நிலை பிறழாது, வாழ வேண்டும். மிகப் பெரிய செல்வம் கிடைத்தாலும் நண்பர்களிடம் ஒரு செயலைச் செய்ய ஒப்படைத்த பிறகு, சந்தேகக் கண்ணோடு ஆராயக் கூடாது. பழிபாவங்களுக்கு அச்சப்படு. பிறர்க்கு குறைவின்றி உதவு. நடுநிலை தவறாது ஒழுகு. நண்பர்களைச் சந்தேகிக்காதே.

அலைப்பான் பிற உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு ஊன்மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம். (28)

(அலைப்பான் = கொல்வதற்காக) உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பதற்காகவே ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட ஏனைய உயிர்களுக்குத் தீனி போட்டு வளர்ப்பது தவறு. இவ்வாறு வீட்டில் வளர்க்கும் பிராணிகளைக் கொல்லாமல், கடைகளில் விலங்குகளின் இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்து உண்பதும் பிழையாகும். பிறர் மனம் புண்படும்படி, சொல்லக் கூடாத வார்த்தைகளையும் தீய சொற்களையும் கூறுவதும் குற்றமாகும். உணவுக்காக இல்லாமல், வேறெந்த வகையிலும் மற்ற உயிர்களைக் கொல்வதும் தீதாகும். கொன்று உண்பதற்காக பிராணிகளை வளர்ப்பது தவறு. விலை கொடுத்து இறைச்சி வாங்குவதும் பிழை. தீய சொற்களைச் சொல்வதும் குற்றம். எவ்வகைக் கொலைகளைச் செய்தாலும் தீது.

கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம்; தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள்; வானத்
துளிநோக்கி வாழும் உலகம்; உலகின்
விளிநோக்கி இன்புறூஉம் கூற்று (29)

(விளி = மரணம்; கூற்று = யமன்). குடிமக்கள் அரசனின் செங்கோல் முறைமைக்கு ஏற்ப நல்லாட்சியை எதிர்பார்த்து வாழ்வர். பச்சிளம் குழந்தைகள் பெற்றவளின் தாய்ப்பாலை எதிர்நோக்கி உயிர் வாழும். உலகத்து மக்கள் அனைவரும் வானத்திலிருந்து மண்ணில் விழும் மழைத் துளிகளை நம்பி வாழ்வார்கள். யமதர்மனோ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்களின் சாவுக்காகக் காத்திருப்பதில் இன்புறுவான். அரசன் நல்லாட்சிக்கு ஏற்ப வாழ்வர் மக்கள். தாய்ப்பாலை நம்பி இருக்கும் குழந்தை. வான்மழை நோக்கி வாழும் உலகம். உயிர்களின் இறப்பில் இன்புறுவான் யமன்.

கற்பக் கழிமடம் அஃகும்; மடம்அஃகப்
புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்
தத்துவம் ஆன நெறி படரும்; அந்நெறியே
இப்பால் உலகின் இசைநிறீஇ; உப்பால்
உயர்ந்த உலகம் புகும். (30)

(கழிமடம் = மிக்க அறிவின்மை; அஃகும் = அகலும்; புற்கம் = புல்லறிவு; கோள் = மெய்ப்பொருள்; இப்பால் = இந்த உலகில்; உப்பால் = மறு உலகில்) பெரும்பான்மை வெண்பாக்கள் நாலடியில் வரும். இது ஐந்தடி பஃறொடை வெண்பா வகைப்படும். ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதால், அவனிடம் மிகுந்துள்ள அறியாமை குறையும். அறியாமை விலகுவதால் புல்லறிவும், தீய எண்ணங்களும் நீங்கி இவ்வுலகத்து இயல்பை அல்லது இயற்கையை அறியும் தெளிவு பெரும். இயற்கையை, உலக இயல்பை, அறிந்து கொள்வதால் தத்துவமான மெய்ப்பொருள் புலப்பட்டு, உண்மையான அருள் நெறியில் மனம் செல்லும். இம்மையில், நன்னெறி பிறழாமல் வாழ்ந்து, புகழை நிலைபெறச் செய்தால், மறுமையில் மேலான முக்தி கிடைக்கும். கற்பதால் அறியாமை அகலும். அறியாமை அகன்றால் புல்லறிவு நீங்கும். புல்லறிவு நீங்கினால் மெய்ப்பொருளை உணர்வான். மெய்ப்பொருளை உணர்ந்தால் வீடு பேற்றை அடைவான்.

குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; அழித்துச்
செறுவுழி நிற்பது காமம்; தனக்குஒன்று
உறுவுழி நிற்பது அறிவு (31)

(செறு = தீமை; உறுவழி = சிறந்த துணை) குழிந்த அல்லது பள்ளமான இடத்தில் தேங்குவது தண்ணீரின் இயற்கையாகும். சான்றோர் பலரின் பழிப்புக்கு உள்ளாகும் தீயவரிடம் தங்குவது தீவினை அல்லது பாவத்தின் குணமாகும். தவ ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தீய வழிகளில் செல்ல முற்படுபவனிடம் நிற்பது காமத்தின் இயல்பாகும். துன்பம் அல்லது இடர் வந்த நிலையில் ஒருவனைப் பாதுகாக்கச் சிறந்த துணையாக இருப்பது அறிவின் தன்மையாகும். பள்ளமான இடத்தில் தண்ணீர் நிற்கும். சான்றோர் பழித்த தீயோரிடம் பாவம் நிற்கும். ஒழுக்கம் இல்லாதவனிடம் காமம் நிற்கும். துயர் களைய அறிவு துணை நிற்கும்.

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்;
கற்றலின் வாய்த்த பிறஇல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; இலம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் (32)

(திரு = செல்வம்; திறல் = வலிமை) ஒருவனுக்குச் செல்வத்தைப்போல் வலிமை சேர்ப்பது எதுவும் இல்லை. பல நூல்களைக் கற்றுப் பெற்ற அறிவைப்போல் உற்ற சமயத்தில் உதவுவது ஒன்றும் இல்லை. எல்லாவற்றிலும் வறுமையைப்போல் துன்பம் தருவதும் வேறு இல்லை. யாசகம் கேட்டு இல்லை வரும் வறிவோர்க்கு இல்லை எனக் கூறாது கொடுத்து உதவும் மன உறுதிபோல் பிறிது இல்லை. செல்வமே வலிமை. அறிவே துணை. வறுமையே துன்பம். ஈதலே மனத்திடம்.

புகைவித்தாப் பொங்குஅழல் தோன்றும்; சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை; பகை ஒருவன்
முன்னம் வித்தாக முளைக்கும்; முளைத்தபின்
இன்னா வித்தாகி விடும். (33)

(வித்து = காரணம்; அழல் = நெருப்பு) புகை காரணமாகப் பொங்கி எழும் பெரு நெருப்பு இருப்பது தெரியவரும். கள்ளம் கபடமற்ற மனம் நிறைந்த சிரிப்பால், புன்முறுவலால், முக மலர்ச்சியால், மனத்தில் மகிழ்ச்சியும் உவகையும் ஏற்படும். உள்ளத்திலே இருக்கும் பகை உணர்ச்சி, முகக் குறிப்புகளால் தென்படும். அவ்வாறு வெளிப்படும் முகக் குறிப்புகளால் உண்டாகும் பகை உணர்வு பல துன்பங்களுக்குக் காரணமாகும். புகையால் நெருப்பை அறியலாம். சிரிப்பால் மனமகிழ்வை உணரலாம். முகக்குறிப்பால் விரோதம் தோன்றலாம். பகையே துன்பங்களுக்குப் காரணமாகலாம்.

பிணிஅன்னர் பின்நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணிஅன்னர் அன்புடைய மக்கள்; பிணிபயிலும்
புல்அன்னர் புல்அறிவின் ஆடவர்; கல்அன்னர்
வல்என்ற நெஞ்சத் தவர். (34)

(அன்னர் = போன்றவர்) பின் விளைவுகள் அல்லது பின் வரும் கேட்டை ஆராயாது, எண்ணிப் பார்த்து, இல்லறம் நடத்தாத பெண்கள் கணவனுக்குத் துன்பம் தரும் நோய் போன்றவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மக்கள், வாழும் உலகுக்கே அணிகலன் போலாவர். கீழான சிற்றறிவுடைய ஈன புத்தியுள்ள மனிதர், நல்ல பயிர்களுக்கு நடுவே முளைக்கும் தேவையற்ற களை அல்லது நோயை வருவிக்கும் விஷப் புல்லுக்கு ஒப்பாவர். இரக்க உணர்வோ, இளகிய மனமோ, இல்லாத வன்மையான நெஞ்சம் கொண்டோர், பாறாங்கல்லுக்கு இணையாவர். பின்வரும் கேடறியாப் பெண் நோய். அன்புடையோர் உலகுக்கு அணிகலன். அறிவிலார் பயிரிடைக் களை. இரக்கம் இல்லாதோர் பாறாங்கல்.

அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என்செயினும்
தாயில் சிறந்த தமர் இல்லை; யாதும்
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்
இளமையோடு ஒப்பதூஉம் இல். (35)

(அந்தணர் = அந்தண்மை உடையோர், அறவோர், மறையோர், அருட்குணம் கொண்டு ஒழுகுவோர்; தமர் = உறவு) அந்தணரை விடவும் உயர்ந்த, சிறப்பான பிறப்பு எதுவும் இல்லை. கண்டித்தாலும் சுடுசொல் சொன்னாலும். நன்மைக்காக மனம் வருந்தும் செயலைச் செய்தாலும் தாயைப் போல மேலான உறவினர் யாரும் இல்லை. செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு ஈடான அழகு வேறொன்றும் இல்லை. எண்ணி ஆராய்ந்தால், கல்வி கற்கவும், பொருள் ஈட்டவும், இல்லற வாழ்வு இனிது வாழவும், எல்லா இன்பங்களை அனுபவிக்கவும், இளமைப் பருவம் போன்ற ஓர் இனிய பருவம் மற்றெதுவும் இல்லை. அந்தணராய்ப் பிறப்பதே உயர்வு, தாயே சிறந்த உறவு, செல்வமே மேலான அழகு, இளமையே இனிய பருவம்.

இரும்பின் இரும்புஇடை போழ்ப; பெருஞ்சிறப்பின்
நீர் உண்டார் நீரால் வாய் பூசுப; தேரின்
அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய
பெயரான் எய்தப் படும் (36)

(போழ்தல் = பிளத்தல்; பூசுப = கழுவுதல்; தேரின் = ஆராய்ந்து பார்ப்பின்) இரும்பு கொண்டு செய்யப்பட்ட கருவிகளாலேயே இரும்பைக் குறுக்கே வெட்டிப் பிளப்பர். மிக உயர்வான நீர்த் தன்மையான பாயசம், இனிப்புக் கஞ்சி, சுண்டக் காய்ச்சிய பால் ஆகியவற்றைப் பருகியவர்கள், நீராலேயே ருசித்த வாயைக் கழுவிச் சுத்தம் செய்வர். ஆராய்ந்து அறிவோமாயின், அரிதான செயல்களை, அரிதாக, அருமையாக முயன்றே செய்து முடிப்பர். பெறுதற்கரிய பெரிய பேறுகளைக், கல்வி கேள்விகளில் சிறந்த பேரறிவுடையோர் துணையால் அடையப் பெறுவர். இரும்பு இரும்பால் அறுபடும். நீருண்ட வாய் நீரால் கழுவப்படும். அரியவை அரிய முயற்சியால் அடையப்படும். பேறுகள் பெரியோர் உதவியால் பெறப்படும்.

மறக்களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக்களி இல்லாதார்க்கு ஈயுமுன் தோன்றும்;
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக்களி
ஊரில் பிளிற்றி விடும் (37)

(மறம் = வீரம்; களி = சிரிப்பு, மகிழ்ச்சி; கயம் = கீழ்மை) இந்தப் பாடலில் நான்கு வகையான களி அதாவது சிரிப்பு அல்லது மகிழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் வெற்றியால், அரசர் முன் படை வீரர்களுக்கு வருவது வீரக்களிப்பு. இல்லை என இரப்போர்க்கு, இல்லை எனாது கொடுத்து உதவும், ஈகைக் குணம் மிக்க உயர்வான அருள் உள்ளம் கொண்டோர்க்கு, தர்மம் செய்த மன நிறைவால் தோன்றுவது அறக்களிப்பு. வறுமையால் வாடுவோர், ஒன்றைப் பெறும் நிலை காரணமாக அடையும் வியப்பால் வருவது வியக்களிப்பு. தனது ஈனத்தனமான செயலைப் பெருமையாகக் கருதி, மகிழ்ந்து, ஊரே கேட்கும்படி ஆர்ப்பரிக்கும் கயமைத் தனமான கீழ்மக்களுக்கு தோன்றுவது கயக்களிப்பு. வீரர்களுக்கு வீரக்களிப்பு. வள்ளல்களுக்கு அறக்களிப்பு. வறியோர்க்கு வியப்புக் களிப்பு. கீழ்மக்களுக்கு கீழ்மைக் களிப்பு.

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள்: மால்இருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர்; பெய்யல்
முழங்கத் தளிர்க்கும் குருகிலை; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல் (38)

(பெய்யல் = மேகம்; குருகு = குருக்கத்தி மரம்) குவளை மலரைப் போன்ற பெண்களின் அழகிய கண்கள் மை / அஞ்சனம் இட்டுக் கொள்வதால் மேலும் அழகு பெறும். அடர்ந்த இருட்டில் நிமிர்ந்து எரியும் நெருப்புச் சுடர், ஊற்றும் நெய் / எண்ணெய்யால் மேலும் ஒளிர்ந்து பிரகாசமுடன் ஜொலிக்கும். கருமேகம் சூழ்ந்து பெருமழை பொழிய இடி முழக்கம் கேட்டுக், குருக்கத்தி மரத்தின் இலைகள் துளிர் விட்டுத் தழைக்கும். விரும்பிய நண்பர்களுக்கு கொடுத்து உதவுவதால் பொருள் வளம்குறையாது, மென் மேலும் பெருகி வளரும். மையால் கண் சிறக்கும். நெய்யால் விளக்கு எரியும். இடி முழங்கக் குருக்கத்தி மரம் துளிர்க்கும். கொடையால் செல்வம் பெருகும்.

நகை இனிது நட்டார் நடுவண்; பொருளின்
தொகை இனிது தொட்டு வழங்கின்; தகை உடைய
பெண் இனிது பேணி வழிபடின்; பண் இனிது
பாடல் உணர்வார் அகத்து (39)

நண்பர்கள் மனம் விரும்பியவர்களுடன் முகமலர்ச்சியோடு சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்பது இனிமை தரும். நிறைந்திருக்கும் செல்வம் இல்லை என இரந்து வருவோர்க்கு கொடுத்து உதவும் போது இனிமை தரும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நான்கு வகை நற்குணங்களும் அமையப் பெற்ற பெண், கணவனை மதித்து இல்லறம் நடத்துவது இனிமை தரும். பாடலைப் பொருள் உணர்ந்து பாடும் / கேட்கும் வல்லமை உள்ளார்க்கு இசை அல்லது பண்ணோடு இசைந்து பாடும் பாடல் இனிது. நண்பரிடத்தில் முகமலர்ச்சி இனிது. ஈதல் செல்வத்துக்கு இனிது. பெண்ணுக்கு இல்லறம் இனிது. பண்ணோடு இசைந்த பாடல் இனிது.

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ்ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவார்; பரப்பு அமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன்உண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு (40)

(கரப்பவர் = கருமிகள்; தானை = படை; தறுகண்மை = வீரம்; செல்சார் = சார்பு = பற்றுக்கோடு; செல் என்பது கருத்து நோக்கிப் பொருள் மாறுபடும்) உதவி எனக் கேட்டு வந்தவர்களுக்கு எதையும் கொடுக்காமல், பொருளை மறைத்து வாழ்வர் கருமிகள். இரப்பவர்க்கு உதவாது, தங்களிடமும் எதுவும் இல்லை என்பதுபோல், அவர்கள் முன் தலை கவிழ்ந்து நிற்பது கருமிகளுக்குப் பற்றுக்கோடு (மேற்கொள்ளும் செயல்). இரப்போர்க்கு, எப்போது கேட்டாலும் இல்லை என, ஈந்து உதவும், கொடை உள்ளம் மிக்க, அருள் நிறைந்த, செல்வந்தர்கள் பற்றுக்கோடு (செல்லும் இடம்). பெரிய படை வரிசைக்கு வீரமே பற்றுக்கோடு (சான்று). உயிர்களைக் கொன்று புலால் உண்ணாதிருத்தல் மனிதர்களுக்குப் பற்றுக்கோடு (ஒழுக்கம்). முகம் கவிழ்தல் கருமிகளுக்குப் பற்றுக்கோடு. இரப்போர்க்குச் செல்வந்தர்கள் பற்றுக்கோடு. வீரம் படைக்குப் பற்றுக்கோடு. கொல்லாமை மனிதர்க்குப் பற்றுக்கோடு.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *