கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டுஎனக்
கேட்டதே செய்ப புலன்ஆள்வார்; வேட்ட
இனியவே செய்ப அமைந்தார்; முனியாதார்
முன்னிய செய்யும் திரு (41)
(கம்மியர் = கன்னார் = கம்மாளர் = பாத்திர வேலை செய்வோர், தச்சர், தட்டார், சிற்பி, பொற்கொல்லர்; முனியாதார் = சினம் கொள்ளாதார்). கன்னார் தொழிலைச் செய்வோர் எந்தப் பொருளைப் பார்க்கின்றனரோ, அதைப் போன்றே செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். ஒன்றைச் செய்வதால் பயனுண்டு என நூல்களைக் கற்றும், காதால் கேட்டும் அறிந்தவற்றையே செய்வர் ஐம்புலன்களையும் (மெய் வாய் கண் மூக்கு செவி) அடக்கி ஆளும் கற்றறிந்தோர். பிறர் விரும்பும் நல்லவற்றையே செய்வர் நற்குணங்கள் நிரம்பப் பெற்ற பெரியோர். யாரிடமும் சினம் கொள்ளாத சான்றோர் அடைய எண்ணியதைச் செய்து முடிப்பாள் திருமகள்.
கண்ணால் கண்டதைச் செய்வர் கன்னார். பயனுள்ளவற்றைச் செய்வர் கற்றறிந்தோர். பிறர் விரும்பும் நல்லவற்றைச் செய்வர் பெரியோர். சான்றோர் எண்ணியதை முடிப்பாள் திருமகள்.
திருவும் திணைவகையான் நில்லா; பெருவலிக்
கூற்றமும் கூறுப செய்து உண்ணாது; ஆற்ற
மறைக்க மறையாதாம் காமம்; முறையும்
இறைவகையான் நின்று விடும். (42)
(திரு = செல்வம்; திணை = குடி = குலம்; கூற்றம் = யமன். பெருவலி = உயிரைக் கொண்டு போகும் வலி பெரிய வலி என்பதால் பெருவலி). குடி அல்லது குலப் பெருமையின் உயர்வால் செல்வம் நிலைக்காது. உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் எனப் பேதம் பார்க்காது. யாரிடமும் தங்கும், விலகிப் போகும். மிகுந்த வலிமை மிக்க யமன், உயிரைப் பறிக்கும் முன் யாரிடமும் அனுமதி கேட்பதில்லை. அரசன் தொடங்கி ஆண்டி வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. அவனுக்கு எல்லோரும் சமம்தான். தன்னால் பறிக்கப்படும் உயிருக்குச் சொந்தக்காரன், கதறினாலும், அழுதாலும், புலம்பினாலும், எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. காமத்தை அடக்க முடியாது. எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் அது எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். அரசாட்சி முறை நாடாளும் மன்னனின் இயல்புக்கும், அதிகாரத்துக்கும், ஏற்ற வகையில் அமையும்.
செல்வம் குலப் பெருமை பார்க்காது. யமனிடம் கெஞ்சல் நடக்காது. காமம் அடங்காது. மன்னன் கட்டளை மீறி ஆட்சி அமையாது.
பிறக்குங்கால் பேர்எனவும் பேரா; இறக்குங்கால்
நில்எனவும் நில்லா உயிர்எனைத்தும் ; நல்லாள்
உடன்படின் தானே பெருகும்; கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும். (43)
(பேர் = நீங்கு; பேரா = நீங்கா) எல்லா உயிர்களும் பிறக்கும் போது துன்பப்பட வேண்டாம், உடலை விட்டு நீங்கி இறந்துவிடு என்றாலும் சாக மாட்டா. அவை சாகும் போது, இந்த உடலிலேயே தங்கி வாழ்ந்து விடு என்றாலும் நிலை பெற்று இருக்க மாட்டா. ஆகவே, உலகில் உயிர் நிலையானது இல்லை. செல்வ மகளாம் திருமகளின் அருள் கூடினால் செல்வம் தானே பெருகும். மாறாக, திருமகள் அருள் விலகினால் செல்வம் தானே விலகி விடும். எனவே, இந்த உலகில் செல்வமும் நிரந்தரமானது அல்ல.
பிறக்கும் உயிரைச் சாகச் சொல்ல முடியாது. இறக்கும் உயிரை வாழச் சொல்ல இயலாது. திருமகள் அருள் நிறையச் செல்வம் பெருகும். திருமகள் அருள் விலகச் செல்வம் போகும். உயிரும், செல்வமும் நிலையானவை இல்லை.
போர் அறின் வாடும் பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த
வேர் அறின் வாடும் மரம் எல்லாம்; நீர்பாய்
மடை அறின் நீள் நெய்தல் வாடும்; படை அறின்
மன்னர்சீர் வாடி விடும் (44)
(அறின் = இல்லாவிட்டால்; பொருநர் = போர் வீரர்; மடை = வாய்க்கால்) போரிடக் களம் இல்லாவிட்டால் வீரர்களின் ஆற்றல் வீணாகும். மண்ணுக்குக் கீழேயுள்ள வேர்கள் அறுந்தால் மரம் பட்டுப்போகும். தண்ணீர் பாயாவிட்டால் நீண்டு வளரும் நெய்தல் மலர்கள் காய்ந்துவிடும். படை வலிமை இல்லாவிட்டால் அரசர் பெருமை பாழாகும்.
போரின்றி வீரம் குன்றும். வேரின்றி மரம் வாடும். நீரின்றி மலர் காயும். படையின்றி மன்னர் பெருமை அழியும்.
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார்யார்க்கும்
காதலர் என்பார் தகவுஉடையார்; மேதக்க
தந்தை எனப்படுவான் தன்உவாத்தி; தாய்என்பாள்
முந்துதான் செய்த வினை. (45)
(ஏதிலார் = அயலார் = பகைவர்; தகவு = நல்லியல்பு; உவாத்தி = வாத்தியார் = ஆசிரியர்; காதலர் = அன்பர்; மேதக்க = மேன்மை). அயலார் அல்லது பகைவர் நற்செயல் போன்ற குணநலன்கள் அமையப் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். எல்லோர்க்கும் அன்பர் என்போர் நற்குணமும், நல்லியல்பும் கொண்டவராக இருப்பார்கள். மேன்மை பொருந்திய தந்தை எனப்படுபவர் நல்ல நூல்களைக் கற்பித்து வழிநடத்தும் ஆசிரியர் போன்றவராவார். பத்து மாதம் ஈன்றெடுத்த தாய் எனப்படுபவள் ஒருவன் முற்பிறப்பில் அவனவன் செய்த நல்வினைப் பயனுக்கேற்ப அமைவாள்.
பகைவர் நற்குணம் இல்லாதவர். அன்பர் நற்குணம் கொண்டவர். மேலான தந்தை ஆசிரியர். தாய் நல்வினையால் அமைவாள்.
பொறிகெடும் நாணற்ற போழ்தே; நெறிப்பட்ட
ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா
நலம் கெடும் நீரற்ற பைங்கூழ்; நலம் மாறின்
நண்பினார் நண்பு கெடும். (46)
(பொறி = செல்வம்; நாணுதல் = தீய செயல்கள் செய்ய மனம் துணியாமை; ஐவர் = ஐம்புலன்கள்; பைங்கூழ் = பசுமையான பயிர்கள்). தீமைகளைச் செய்யவும், தீய வழிகளில் செல்லவும், ஒருவன் வெட்கப்பட வேண்டும். அவ்வாறு வெட்கப்படாமல் அதை விட்டொழித்த அக்கணமே அவனுடைய செல்வச் செழிப்பு அழிந்துவிடும். நல்வழிகளால் அமைந்த மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை நெறிப்படுத்தினால், மனம் ஒருமைப்பட்டு, தீவினைகள் விலகிவிடும். தண்ணீர் முறையாகப் பாய்ச்சப்படாத பசும் பயிர்கள் வறண்டு விளைச்சல் இன்றி வாடிப் போகும். நண்பரிடம் கொண்ட நல்லிணக்கமும், அன்பும் மாறினால் நட்பு கெட்டு அழியும்.
நாணம் கெட்டால் செல்வம் அழியும். ஐம்புலன்களை அடக்கினால் தீமை அழியும். நீர் வற்றினால் பயிர்கள் வாடும். நற்குணம் மாறினால் நட்பு முறியும்.
நன்றிசாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற
விருந்தும் விரும்பிலார் முன்சாம்; அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்அறியாதார் முன்னர்; ஊடல்சாம்
ஊடல் உணரார் அகத்து (47)
(சாம் = சாகும் என விரிக்கவும்) தனக்குப் பிறர் செய்த நன்மைகளை, உதவிகளை எண்ணிப் பார்க்காதவர்களிடம் செய்ந்நன்றி அறிதல் என்னும் நல்லியல்பு மரணிக்கும். மனம் விரும்பி அன்புடன் விருந்தோம்பல் என்னும் நற்குணம் இன்றி உபசரிக்காதவர் முன் சென்று நிற்கும் விருந்தினர் மனம் வருந்தும். இசை ஒழுங்கும் நுணுக்கமும் அறியாதவர் முன் அருமையாகப் புனையப்பட்ட பாடல் இசை பாழாகும். கூடி மகிழும் போது உண்டாகும் ஊடலின் சுகத்தை அறியாத கணவனிடம் மனைவியின் ஊடல் வீணாகும்.
உதவியை மறந்தவரிடம் செய்நன்றி கெடும். விருந்தோம்பல் இல்லாதவர் விருந்து வருத்தும். இசையறிவு இல்லாதார் பாடல் பாழாகும். ஊடல் சுகம் அறியாதாரிடம் ஊடல் வீணாகும்.
நாற்றம் உரைக்கும் மலர் உண்மை; கூறிய
மாற்றம் உரைக்கும் வினைநலம்; தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்
முகம்போல் முன்உரைப்பது இல். (48)
(நாற்றம் = வாசனை; தூக்கின் = சீர் தூக்கி ஆராய்ந்து பார்க்கின்; அகம் = மனம்; பொதிந்த = நிறைந்த) நல்ல மலர்களின் இருப்பையும், அதன் தன்மையையும், அதிலிருந்து வீசும் நறுமணம் தெரியப்படுத்தும். ஒருவனுடைய செயல் ஆற்றலை, திறனை அவன் சொல்லிய சொல்லே அறியப்படுத்தும். சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்தால், மனத்துக்குள் மறைந்து மண்டிக் கிடக்கும் தீமைகளை அவன் நெஞ்சே அவனுக்கு உணர்த்தும். ஒருவனுடைய உள்ளக் குறிப்பைக் கருத்தை அவனுடைய முகமே காட்சிப்படுத்தும். முகம் உணர்த்துவதுபோல் வேறெதும் முதலில் வெளிப்படுத்தாது.
மலரின் இருப்பை வாசம் காட்டும். செயல் திறனைச் சொல் காட்டும். மனத்தின் தீமையை நெஞ்சம் உணர்த்தும். உள்ளக் கருத்தை முகமே வெளிப்படுத்தும்.
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவமிலார் இல்வழி இல்லை; தவமும்
அரசிலார் இல்வழி இல்லை; அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல் (49)
மழை பொழியாவிட்டால் இந்தப் பெரிய உலகில் வாழும் மக்களுக்கு வளமான வாழ்வில்லை. அந்த மழையும் தவம் செய்யும் அருளாளர்கள், நல்வினை செய்யாதோர் இல்லாத இடங்களில் பெய்தலில்லை. அத்தகைய தவம் செய்தலும் செங்கோல் நெறி தவறாது ஆட்சி செய்யும் அரசன் இல்லையேல் நிகழ்தல் இல்லை. துலாக்கோல் போன்று அரசாளும் மன்னனும், முறையாக இல்லறம் நடத்தும் நற்குடி மக்கள் இல்லாவிடத்தில் இல்லை. எனவே, மன்னன் நற்குடிகள் செழிக்க ஆட்சி செய்து, முறையே செங்கோல் செலுத்தி, தானம் தவம் முதலிய தருமங்களைப் பாதுகாத்தால், மழை பெய்து யாவரும் நலம் பெறுவர்.
வளத்துக்கு மழை வேண்டும். மழைக்குத் தவசிகள் வேண்டும். தவசிகளுக்கு நல்லரசன் வேண்டும். நல்லரசனுக்கு நற்குடி வேண்டும்.
போதினான் நந்தும் புனைதண்தார்; மற்றுஅதன்
தாதினான் நந்தும் சுரும்பெல்லாம்; தீதுஇல்
வினையினான் நந்துவர் மக்களும்; தத்தம்
நனையினான் நந்தும் நறா (50)
(போதி = மலர்; நந்தும் = நன்கு விளங்கும்; புனை = தொடுத்தல்; தண் = குளிர்ந்த; தார் = மாலை; தாது = மலர்களின் தாதுக்களின் உள்ள தேன் / மணம்; சுரும்பு = வண்டு; நனை = அரும்பு / மொட்டு; நறா = தேன் வகை). தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலைகளால் ஆன மாலை, அம்மாலையில் கட்டித் தொடுக்கப்பட்டிருக்கும் அழகிய வாசனையான பூக்களால் சிறப்படையும். வண்டுகள் பூக்களிலுள்ள தேனை உண்டு நலமடையும். உலகில் வாழும் மக்கள் குற்றமற்ற நற்செயல்களினால் உயர்வடைவர்.
தேன் வகைகள் அவை இருக்கும் மலர்களின் மகரந்தங்களின் தன்மைக்கேற்ப இனிக்கும். பூக்களால் மாலை சிறக்கும். தேனால் வண்டு செழிக்கும். நல்லறத்தால் வாழ்வு வளமாகும். மகரந்தத்தால் தேன் சுவைக்கும்.
சிறந்தார்க்கு அரிய செறுதல்; எஞ்ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய துணைதுறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு அரிய வகுத்துஊண்; இரந்தார்க்குஒன்று
இல்என்றால் யார்க்கும் அரிது (51)
(செறு = சினம்; வரை = திட்டம்; வகுத்தூண் = பகிர்ந்து வாழ்தல்) அறிவில் உயர்ந்து நிற்கும் ஆன்றோர்க்கும், பெரியோர்க்கும், எவரிடம் சினந்து கோபிக்கும் குணம் இல்லை. உயர்ந்த குலத்தில் பிறந்த நல்லோர்க்கு, துணையாக இருக்கத்தக்க நண்பர்களையும், சுற்றத்தார்களையும், விட்டு விலகி தாம் மட்டும் மகிழ்ந்திருத்தல் இல்லை. தம் வாழ்வுக்கு ஏற்பச் செலவுகளை (குறிப்பாக உணவை) திட்டமிட்டு வரையறுத்து வாழ்பவர்க்கு, பிறருடன் பகிர்ந்து கொண்டு வாழ்தல் என்னும் பழக்கம் இல்லை. தம்மிடம் வந்து யாசிப்போர்க்கு, கொடுக்க ஒன்றும் இல்லை ‘போ… போ…’ எனக் கூறுதல், இரக்க குணம் உடைய யாவருக்கும் இயலாத செயலாகும்.
பெரியோர் சினம் கொள்ளார். உயர்ந்தோர் நண்பரை விலக்கார். திட்டமிட்டு வாழ்வோர் உதவார். இரக்கமுள்ளோர் எவர்க்கும் ஈவார்.
இரைசுடும் இன்புறா யாக்கை உள்பட்டால்;
உரைசுடும் ஒண்மை இலாரை; வரைகொள்ளா
முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையும்
தன்னடைந்த சேனை சுடும் (52)
(இரை = உணவு; யாக்கை = உடல்; ஒண்மை = அறிவு விளக்கம்) ருசிக்க வேண்டிய சுவையான உணவுகள், உடலை நோய் வருத்துவதால், வயிற்றில் ஜீரணமாகாமல் இன்னல் தரும். அறிவிலிகள் யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசினால், உளறலே அவருக்குத் துன்பம் தரும். நீதி நெறிகளுக்கு உட்படாது முற்பிறவியில் செய்த தீவினையின் பயன்கள், இப்பிறவியில் அவனை வருத்தும். நாடாளும் அரசன் முறையற்று, அறவழி தவறி நடந்தால், அவனுடைய படைகளே அவனை அழிக்கும்.
நோயுற்ற உடலுக்கு உணவே இன்னல். அறிவிலிகளுக்கு அவரவர் பேச்சே துன்பம். முன்வினைப் பாவம் இம்மையில் வருத்தும். கொடுங்கோல் அரசனைப் படையே கொல்லும்.
எள்ளல் பொருளது இகழ்தல்; ஒருவனை
உள்ளல் பொருளது உறுதிச்சொல்; உள்ளறிந்து
சேர்தல் பொருளது அறநெறி; பன்னூலும்
தேர்தல் பொருளே பொருள் (53)
(உள்ளல் = கருதுதல்; பொருள் = மெய்ப்பொருள்) மற்றவரை அவமதித்தல், எள்ளி நகைத்தல், கிண்டல் செய்தல் இகழ்ச்சிக்கு உரியவை. உறுதிச் சொல்லும், வாக்குத் தவறாமையும், நண்பனாக ஏற்றுக் கொள்ளுதற்கு உரியவை. நல்வழியில் செல்கின்ற ஒழுக்கமும், அறநெறியும், உள்ளத்தால் உணர்ந்து அவற்றைச் சார்ந்து நடப்பதற்கு உரியவை. மெய்ப்பொருள்கள் பல நூல்களைக் கற்று ஆராய்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிதற்கு உரியவை.
அடுத்தவரைப் பழித்தல் இகழ்ச்சி. வாய்மை நட்புக்கு நற்பண்பு. ஒழுக்கம் அறநெறி நடத்தல். மெய்ப்பொருள் கற்றுத் தெளிதல்.
யாருள் அடங்கும் குளம்உள; வீறுசால்
மன்னர் விழையும் குடிஉள; தொன்மரபின்
வேதம் உறுவன பாட்டுஉள; வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள (54)
(யாறு = ஆற்று வெள்ளம்; சால் = பொருந்திய; வேளாண்மை என்பதற்கு விவசாயம் என்ற பொருள் உள்ளது. ஆனால் இங்குள்ள வேளாண்மை = வேள் (விருப்பம்) + ஆண்மை = இரப்போரின் விருப்பத்தை ஆளுதல் அதாவது ஈகை எனப் பொருள்படும்) ஆற்று வெள்ளப் பெருக்கைத் தேக்கிக் கொள்ளும் ஆழமும், அகலமும், உயர்ந்த கரையையும் கொண்ட குளங்கள் உள்ளன. புகழுடைய அரசர்கள் விரும்பும் செல்வாக்கும், செல்வமும், பெருமையும் பெற்ற குடிமக்கள் உள்ளனர். (பூம்புகார் வணிகர்கள் கோவலனின் தந்தை மாசாத்துவான், கண்ணகி தந்தை மாநாய்க்கன் ஆகியோர் சோழ மன்னனின் அன்பையும், ஆதரவையும் பெற்ற குடிமக்கள் என்கிறது சிலப்பதிகாரம்). பழமை உடைய வேதங்களில் உள்ள கருத்துகளுக்கு ஈடான பழைமையான தமிழ்ப் பாடல்கள் உள்ளன. தீ வளர்த்துப் பலியிட்டுச் செய்யப்படும் யாகத்துக்கு நிகரான, பயன் கருதாது கொடுத்து உதவும், ஈகையும் கொடையும் உள்ளன.
ஆறு அடங்கும் குளம் உண்டு. வேந்தர் விரும்பும் நற்குடிகள் உண்டு. வேதக் கருத்துகளுக்கு இணையான பழந்தமிழ்ப் பாடல்கள் உண்டு. வேள்விக்கு நிகரான ஈகை உண்டு.
எருது உடையான் வேளாணன்; ஏலாதான் பார்ப்பான்;
ஒருதொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனா பதி (55)
(ஏலாதவன் = ஏற்காதவன்; தொடை = கால்; கோழி = சேவல்; செறிவு = நெருக்கம்) உழவுத் தொழிலுக்கு உதவும் காளை மாடுகளை வைத்திருப்பவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வசப்படுத்தும் சேவல். எவரோடும் பகையோ, வேறுபாடோ, மாறுபாடோ ஏற்றுக் கொள்ளாது, அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடன் வாழ்க்கையில் இணங்கிப் போகின்றவன் பார்ப்பான். அழகிய தோற்றப் பொலிவோடும், அறிவும் ஆற்றலும் உடையவளாக இருப்பவள், இல்லற வாழ்க்கைக்கு உரிய பெண். படை வீரர்களுடன் நெருங்கி இருப்பவனே சேனைத் தலைவன்.
எருது உடையவன் வேளாளன். காலால் பெடையை வசப்படுத்தும் சேவல். பகை ஏற்காதவன் பார்ப்பான். அழகும் அறிவும் கொண்டவளே மனைவி. வீரர்களுடன் நெருங்கி இருப்பவனே படைத் தலைவன்.
(தொடரும்)