யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்
கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்; கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை
அல்லார் உவப்பது கேடு (56)
(கதன் = சினம் / வலிமை; உவப்பர் = விரும்புவர்; கடும் = விரைந்தோடும்; பரிமா = குதிரை; ஊர்வர் = ஏறிச் செல்வர்; கொடுங்குழை = வளைந்த காதணி; நாண் = வெட்கம்). யானையைக் கொண்ட படைத்தலைவர் போரில் அது காட்டும் சினத்தை / வலிமையைக் கண்டு மகிழ்வர். அரசர்கள் புயலென விரைந்து ஓடும் திறன் கொண்ட குதிரையை விரும்பி அதன் மீது ஏறிச் செல்வர். வளைந்த காதணியை அணியும் அழகு நிறைந்த பெண்ணின் வெட்கம் என்னும் மேன்மையான பண்பை, நற்குணமுள்ள நல்லோர் விரும்புவர். வெட்கம் இல்லாத பெண்ணின் நாணம் கெட்ட தீய ஒழுக்கம் மீது, நற்குணமற்ற அறிவிலிகளே ஆசை கொள்வர்.
யானை உடையோர் அதன் வலிமையை விரும்புவர். மன்னர்கள் பாயும் குதிரையில் செல்ல விரும்புவர். நாணமுள்ள பெண்ணை நல்லோர் விரும்புவர். வெட்கம் கெட்ட பெண்ணைத் தீயோர் விரும்புவர்.
கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய்ச்சான்ற பொருள் இல்லை; ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல். (57)
(கொண்டான் = கணவன்; துன்னிய = நெருங்கிய; கேளிர் = உறவு; ஒண்மையவாய் = சிறந்து விளங்குகின்ற) உடலில் உள்ள உறுப்புக்களில் கண்ணைப்போல் உயர்ந்த உறுப்பு வேறு எதுவும் இல்லை. திருமணம் செய்து கொண்ட கணவனை விடவும் பெண்ணுக்கு நெருங்கிய உறவு வேறு யாரும் இல்லை. பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகளைக் காட்டிலும் விலை மதிக்க முடியாத செல்வங்கள் வேறு ஒன்றும் இல்லை. பத்து மாதம் சுமந்து பெற்ற தாயோடு ஒப்பிட்டுச் சொல்லக் கூடிய கடவுளும் இல்லை.
கண்ணில் சிறந்த உறுப்பில்லை. கணவனின் மேலான உறவில்லை. பிள்ளைகளின் பெரிய செல்வமில்லை. தாய்க்கு ஈடான தெய்வமில்லை.
கற்றன்னர் கற்றாரைக் காதலர்; கண்ஓடார்
செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர் தெற்றென
உற்றது உரையாதார்; உள்கரந்து பாம்பு உறையும்
புற்று அன்னர் புல்அறிவி னார் (58)
(அன்னர் = போன்றவர்; கண்ஓடார் = கண்ணோட்டம் = அருள்நோக்கு; செற்று = துன்பம்; செற்றார் = பகைவர்; தெற்றென = தெளிவாக; கரந்து = மறைந்து; உறைதல் = வாழ்தல்). கற்றறிந்த மேன்மக்கள் மீது விருப்பம் கொண்டு மதித்துப் போற்றுகிறவர்கள், அக்கல்வியில் சிறந்த பெரியோர்களுக்குச் சமமாவர். பிறரிடம் அன்பும் பாசமும் செலுத்தாதவர்கள், அவர்களுக்குத் துன்பம் இழைத்தற்கு ஒப்பாவர். தெள்ளத் தெளிவாக உள்ளது உள்ளபடி உண்மையைச் சொல்லாதவர்கள், பகைவர் கூட்டத்தைச் சேர்ந்தவராவர். தீய சிந்தனை உடைய சிற்றறிவுடைய கீழ்மக்கள், உள்ளே சென்று பாம்பு மறைந்து வாழும் புற்றுக்கு ஈடாவர்.
கற்றாரைப் போற்றுவோர் கற்றவர்க்குச் சமம். அன்பிலார் துன்பம் இழைத்தார்க்கு ஒப்பு. உண்மை கூறாதார் பகைவர்க்கு இணை. அறிவிலார் பாம்புப் புற்றுக்கு ஈடு.
மாண்டவர் மாண்ட வினைபெறுப; வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறன் இன்புறுவர்;
துறப்பார் துறக்கத் தவர் (59)
(மாண்டவர் என்றால் இறந்தவர் என்ற பொருளும் உண்டு. ஆனால் இங்கு மாண்டவர் = மாட்சிமை பொருந்திய அறிவுடையோர்; மாண்ட = மேன்மை; வினை = செய்யும் செயல்; யாண்டும் = எப்போதும்; இருமை = இப்பிறப்பு, மறுபிறப்பு; துறப்பார் = பற்று இல்லாதவர்; துறக்கம் = வீட்டுப்பேறு). அறிவில் சிறந்த மாட்சிமை உடைய பெரியோர், மாட்சிமை உடைய மேலான செயல்களையே செய்வர். இத்தகைய மாட்சிமையை, மேன்மையை விரும்பாதவர்கள், வேண்டாத தீமையான செயல்களையே செய்வர். இதன் காரணமாக வரும் வினைப் பயன்களான துன்பங்களை இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும், பெறுவர். எப்போதும், மேல்வரும் பிறப்பில் பிறப்பவர்கள், அப்பிறப்பில் அடையக் கூடிய அறப்பயன்களான இன்பத்தை அடையப் பெறுவர். நான், எனது, என்னும் ஆணவத்தை, புலன்களை, பற்றைத் துறந்தவர்கள், வீட்டு உலகப் பேற்றை அடைவதற்கு உரியவராவர்.
நற்செயல் புரிவர் அறிவுடையோர். தீவினை செய்வர் அறிவற்றோர். இருமை இன்பம் அடைவர் அறவோர். வீடு பேற்றைப் பெறுவர் பற்றற்றவர்.
என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்;
என்றும் பிணியும் தொழில் ஒக்கும்; என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர் (60)
(நாள் = விண்மீன்; இருசுடர் = சூரியன், சந்திரன்; பிணி = நோய்; ஒக்கும் = உளவாகும்; அன்னர் = உளராவர்) நட்சத்திரக் கூட்டங்களும், சூரிய சந்திரனும், எப்போதும் அழிவற்று இருக்கும். உழவு உள்ளிட்ட தொழில்களும், அவற்றுக்கு இடையூறாக உடலை வருத்தும் நோய்களும், அதன் காரணமாகத் துன்பங்களும், எக்காலத்திலும் இருக்கவே செய்யும். இல்லை என இரப்போர்க்கு, இல்லை எனக் கூறாது கொடுப்பவர்களும், அவ்வாறு கொடுப்பதை ஏற்றுக் கொள்ளும் வறியோரும், இருக்கத்தான் செய்வர். அன்றாடம் பிறப்புகளும், இறப்புகளும், இடைவிடாமல் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் எப்போதும் காணப்படும். நோய்களும், செய்தொழில்களும் எந்நாளும் இருக்கும். இரப்போரும் ஈவாரும் எக்காலத்திலும் உண்டு. பிறப்பும் இறப்பும் தடையின்றி நடைபெறும். இதுதான் உலகம்.
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;
இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும்;
முனியா ஒழுக்கத் தவன் (61)
(இது ஐந்தடியில் வந்த பஃறொடை வெண்பா) (முனிதல் = வெறுத்தல்; தனியன் = ஆதரவின்றித் தனியாக வாழ்பவன்; முனியா = வெறுக்கப்படாத). இனிதான நல்ல உணவை இன்று உண்டேன் எனச் சொல்பவன் எவன் எனில், ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியை உண்ணாது, மரக்கறி உணவுகளான தாவரங்கள், காய்கறிகளை உண்டு வாழ்பவனே ஆவான். அனைவராலும் கோபித்து வெறுக்கத் தக்கவன் எவன் எனில், முகத்தில் மகிழ்ச்சி இல்லாமல், கடுகடுத்த முகத்துடன் வாழ்பவனே ஆவான். உற்றார் உறவினர் நண்பர் யாருடைய ஆதரவும் இல்லாமல், தன்னந்தனியாகத் துணையின்றி இருப்பவன் எவன் எனில், யாருக்கும் எந்த நன்மையும், உதவியும் செய்யாமல் வாழ்ந்தவனே ஆவான். இனிமையான நற்குணங்களைக் கொண்டவன் எவன் எனில், யாராக இருப்பினும், வெறுக்காத நல்லொழுக்கம், நற்செயல்களைச் செய்யும் நல்லவன் ஆவான்.
இறைச்சியை உண்ணாதவன் நல்ல உணவு உண்பவன். முகமலர்ச்சி இல்லாதவன் சிடுமூஞ்சி. எந்த நன்மையும் செய்யாதவன் தனியானவன். நல்லொழுக்கம் உள்ளவன் மேலானவன்.
ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான்; மற்றவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற
நகையாகும் நண்ணார் முன்சேறல்; பகைஆகும்
பாடு அறியாதானை இரவு (62)
(ஈத்து = கொடுத்து; இசை = புகழ்; கைத்து = கைப்பொருள்; காங்கி = பேராசைக்காரன்; தெற்ற = தெளிவாக; நண்ணார் = விரும்பார்; பாடு = தகுதி; இரவு = இரத்தல்) வறியோர்க்கு இல்லை என்று சொல்லாது, பிறர்க்குக் கொடுத்துத் தானும் உண்டு மகிழ்பவன், இவ்வுலகில் தன் புகழை நிலை பெறச் செய்வான். மற்றவன் கைவசமுள்ள பொன் பொருளைக் கவர்ந்து உண்டு வாழ்பவன், பேராசைக்காரன் ஆவான். தன்னை விரும்பாத ஒருவரிடம் சென்று ஒன்றை விரும்பிப் பெறுவது, கேலிக்குரிய இழிவுடைய செயலாகும். தன்னுடைய தகுதி அறியாத ஒருவனிடம் சென்று ஒன்றை வேண்டிப் பெறுவது பகைமை வளரக் காரணமாகும்.
கொடுத்து உண்பவன் புகழ் பெறுவான். அடுத்தவர் பொருளை உண்பவன் பேராசைக்காரன் ஆவன். விரும்பாதவனிடம் கேட்பது இழிவாகும். தகுதி அறியாதவரிடம் வேண்டுவது பகையை வளர்க்கும்.
நெய்விதிர்ப்ப நந்து நெருப்பு அழல்; சேர்ந்து
வழுத்த வரம்கொடுப்பர் நாகர் ; தொழுத்திறந்து
கன்றூட்டநந்தும் கறவை; கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து (63)
(விதிர்ப்ப = ஊற்ற; நந்தும் = வளரும்; வழுத்த = வணங்க; நாகர் = தேவர்; தொழு = மாட்டுத் தொழுவம் / கொட்டில்; கறவை = பால் தரும் பசு) யாகம் செய்யும் முனிவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் நெருப்புச் சுடர், நெய் ஊற்ற ஊற்ற, வளர்ந்து கொழுந்து விட்டு எரியும். தேவர்களைச் சரணடைந்து போற்றித் தொழத் தொழ அவர்கள் வேண்டும் வரங்களை வாரி வழங்குவர். மாட்டுத் தொழுவத்தைத் திறந்து கன்றுக்குப் பால் ஊட்ட ஊட்ட, பசு கொடுக்கும் பால் பெருகும். தலைவாழை இலை போட்டு இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துப் பரிமாறப் பரிமாற, விருந்தினர் மனம் களிப்பு எய்தும்.
நெய் விட நெருப்புச் சுடர் ஓங்கும். போற்றித் தொழத் தேவர் வரம் தருவர். கன்றுக்கு ஊட்டப் பசு பால் சுரக்கும். வரவேற்று உபசரிக்க விருந்தினர் மனம் மகிழும்.
பழிஇன்மை மக்களால் காண்க; ஒருவன்
கெழிஇன்மை கேட்டால் அறிக; பொருளின்
நிகழ்ச்சியால் ஆக்கம் அறிக; புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப் படும் (64)
ஒருவன் பிறரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிப் பிறர் பழிக்க இடம் தராமல் வாழ்வதை, அவன் பெற்ற பிள்ளைகளால் கண்டு கொள்ளலாம். ஒருவன் நண்பர்கள் வேண்டியவர்கள் உற்றார் உறவினர் என யாரும் இல்லாதிருப்பதை, தனது கெட்ட காலத்தில் உணரலாம். ஒருவனிடம் செல்வம் சேர்வதைக் கொண்டு அவனது வளமான வாழ்க்கை, வளர்ச்சியால் தெரிய வரும். ஒருவனது புகழ்ச்சியையும், பெருமையையும், இரப்போர்க்கு ஈயும் கொடைத் திறனையும், பகைவரும் போற்றிப் பாராட்டுவதன் மூலம் அறியலாம்.
பழி இன்மையைப் பிள்ளைகளால் காணலாம். நட்பின்மையை வறுமையால் உணரலாம். செல்வம் சேர்வதை வளர்ச்சியால் பார்க்கலாம். புகழ்ச்சியைப் பகைவரும் போற்றுவதால் அறியலாம்.
கண்உள்ளும் காண்புழிக் காதற்றுஆம்; பெண்ணின்
உருவின்றி மாண்ட உளஆம்; ஒருவழி
நாட்டு உள்ளும் நல்ல பதிஉள; பாட்டு உள்ளும்
பாடு எய்தும் பாடல் உள (65)
(காண்புழி = ஆராய்ந்து பார்த்தால்; காதற்று ஆம் = விரும்பப்படுவதற்கான; மாண்ட = மேன்மையான; பதி = ஊர்; பாடு = பெருமை). மனிதர்கள் காண்பதற்குப் பெற்றுள்ள கண்களுக்கு உள்ளேயும், ஆராய்ந்து பார்த்தால், விரும்பப்படும் கண்களும் உண்டு. விரும்பப்படும் கண்கள் என்பது அருள் நோக்காகிய கண்ணோட்டம் உடைய கண்களே ஆகும். பெண் மக்களிடையேயும், தோற்றப் பொலிவு, அழகு, இல்லை என்றாலும், போற்றத்தக்க, மாட்சிமை பொருந்திய நல்ல பண்புகள் இருக்கும். வறண்ட நாட்டுக்கு உள்ளேயும் ஏதோவொரு இடத்தில் வளமான ஊர்கள் இருக்கும். பாடல்களுக்கு உள்ளேயும் பெருமை மிக்கக் கருத்தாழம் மிக்கச் சிறந்த பாடல்கள் இருக்கும்.
கண்களுக்குள்ளும் அருள் நிறைந்த கண்கள் உண்டு. அழகற்ற பெண்களுக்குள்ளும் நற்குணங்கள் உண்டு. வறண்ட நாட்டுக்குள்ளும் செழிப்பான ஊர்கள் உண்டு. பாட்டுக்குள்ளும் சிறந்த பாடல்கள் உண்டு.
திரிஅழல் காணின் தொழுப; விறகின்
எரிஅழல் காணின் இகழ்ப; ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு. (66)
(அழல் = நெருப்பு) சுடர்விட்டு எரியும் விளக்குத் திரியின் ஒளியைக் கண்டால், சிறிதாக இருந்தாலும், கைகூப்பி வணங்குவர். விறகுக் கட்டையில் பற்ற வைத்த எரியும் நெருப்பு, அளவில் பெரிதாக இருந்தாலும்,அதை யாரும் தொழவோ, வணங்கவோ, மாட்டார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்த கல்வி கற்காத வயதால் மூத்தவனாக இருந்தாலும், அவனை மதிக்க மாட்டார்கள். மாறாக, அக்குடும்பத்தில் இளையவனாக, சிறியவனாக இருந்தாலும், கல்வி அறிவு பெற்ற படித்தவனாக இருந்தால், அவனையே இந்த உலகம் பாராட்டும்.
விளக்கில் எரியும் சுடர் வணங்கப்படும். விறகில் பற்றிய நெருப்பு இகழப்படும். மூத்தவன் எனினும், கல்லாதவனை உலகம் மதிக்காது. இளையவன் எனினும், கற்றவனை உலகம் பாராட்டும்.
கைத்துடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்
முளைக்குழாம் நீர்உண்டேல் உண்டாம்; திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும்; மற்றவள்
துன்புறுவாள் ஆகின் கெடும். (67)
(கைத்து = கைப்பொருள்; காமம் = விருப்பம்; வித்து = விதை; குழாம் = கூட்டம்) கையிலே செல்வம் / பொருள் உடையவனுக்கு விரும்பியது அனைத்தும் கிடைக்கும். தண்ணீர் பாய்ச்சினால் முளைப்பதற்காக விதைக்கப்படும் விதைகள் எல்லாம் முளைத்துத் தழைக்கும். செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியின் கடைக்கண் பார்வை இருந்தால், இல்லத்தில் பொன்னும் பொருளும் அருளும் பொங்கி வழியும். திருமகளின் அருள் நோக்கம் இல்லாது போனால், செல்வம் பெருகாது, இருக்கும் செல்வமும் முற்றிலும் அழிந்து போகும். செல்வம் இருந்தால் எல்லாம் பெறலாம்.
தண்ணீர் ஊற்றினால் விதை முளைக்கும். லட்சுமி கடாக்ஷம் இருந்தால் செல்வம் சேரும். திருமகள் அருள் இல்லை எனில், செல்வமும் சேராது, இருக்கும் செல்வமும் அழிந்து போகும்.
ஊன்உண்டு உழுவை நிறம் பெறூஉம் ; நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூஉம் காலேயம்; நெல்லின்
அரிசியான் இன்புறூஉம் கீழ்எல்லாம்; தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல் (68)
(ஊன் = இறைச்சி; உழுவை = புலி; காலேயம் = பசுக்கூட்டம்) புலியானது ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியைத் தின்று கொழுத்து, மேல் தோலின் அழகிய நிறத்தைப் பெறும். ஈரப்பாங்கான நீர்நிலத்தில் வளரும் பசும்புல்லை மேய்ந்து பசுக் கூட்டம் மகிழும். நெற்பயிர் தரும் அரிசியால் சமைத்த சோற்றை உண்டு பசி தீர்ந்து கீழ்மக்கள் இன்புறுவர். தங்களது பெருமைகளையும், தகுதிகளையும், செயல்களையும் எண்ணி மேன்மக்கள் மனநிறைவால் உள்ளம் மகிழ்ச்சி அடைவர்.
இறைச்சியை உண்டு புலி ஒளிரும். பசும்புல் மேய்ந்து பசுக்கூட்டம் மகிழும். அரிசிச் சோற்றை உண்டு கீழ்மக்கள் பசியாறுவர். பெருமைகளால், தகுதிகளால் மேன்மக்கள் மன நிறைவடைவர்.
பின்னவாம் பின்அதிர்க்கும் செய்வினை; என்பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம்; தவாஆம்
அவா இல்லார் செய்யும் வினை (69)
(அவா = ஆசை; தவா = கேடு; என்பெறினும் = எந்தப் பயனைப் பெறுவதானாலும்) ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, அதனால் விளையும் நன்மை தீமைகளை அலசி ஆராயாமல் தொடங்கினால், நடுக்கமுறும் இடையூறுகள், தடைகள், வரும். அதாவது பின் வரும் இடர்களையும், இடர்ப்பாடுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். எத்தகைய பலனை அடைவதாக இருந்தாலும், தொடங்குவதற்கு முன்பே, அதனால் விளையும் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து அறியும் திறன் வேண்டும். அத்தகைய திறன் உடையவர்களுக்கு, பின் வரும் தடைகள், இடையூறுகள், முன்பே தோன்றி எச்சரிக்கும். ஒரு பொருளை விரும்பி அடைந்து விட்டவர்களின் மனம், எப்போதும் மேன்மேலும் தொடர்ந்து பொருளை அடைவதற்கே ஆசைப்படும். எப்பொருளின் மீதும் பற்று வைக்காத, ஆசைகளை விட்டொழித்த சான்றோர்களின் தன்னலம் இல்லாத மனம், எவர்க்கும் எந்தக் கேட்டையும் விளைவிப்பது இல்லை.
ஆராயாமல் செயலைச் செய்யத் தொடங்குவோர்க்கு இடர்கள் தெரியாது. ஆராய்ந்து தொடங்குவோர்க்கு இடர்கள் முன்பே தெரிய வரும். பொருளை விரும்பிப் பெற்றவர்க்கு ஆசை உண்டாகிக் கேட்டைத் தரும். பொருள் பற்று இல்லாத சான்றோரால் கேடு விளையாது.
கைத்து இல்லார் நல்லவர் கைத்து உண்டாகிக் காப்பாரின்;
வைத்தாரின் நல்லர் வறியவர்; பைத்து எழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர்; செய்தாரின்
நல்லர் சிதையா தவர் (70)
(கைத்து = கைப்பொருள்; வைத்தார் = பொருளை வைத்து இழப்பவர்; பைத்து = சினந்து) கையிலே பொருள் இருந்தால் இரப்போர்க்கு ஈதல் வேண்டும். மாறாக, பொருளை வைத்துக் கொண்டு பிறர்க்கு உதவாது அதைக் காப்பாற்றத் துன்பப்படுவோரைக் காட்டிலும், கையில் பொருளே இல்லாதவர் மேலானவர். சூதாட்டம் உள்ளிட்ட தீய வழிகளில் பொருளை வைத்து இழப்பவர்களை விடவும், பொருளே இல்லாத வறியவர்கள் நல்லவர். சினம் கொண்டு கோபிப்பவர்களைக் காட்டிலும், வசவுகளைப் பொறுத்துக் கொண்டவர்கள் சான்றோர். உதவி செய்தவரை விடவும், தமக்கு ஒருவர் என்றோ செய்த நன்மையை மறவாது நினைவில் கொண்டிருக்கும் நன்றி உடையோர் உயர்ந்தவர்.
உதவாத செல்வந்தரை விடவும், செல்வம் இல்லாதோர் மேலானவர். பொருளைச் சூதாடி இழப்போரை விடவும், வறியோர் நல்லவர். கோபிப்பவரை விடவும், வசவைப் பொறுப்பவர் சான்றோர். உதவி செய்தவரை விடவும், செய்நன்றி மறவாதோர் உயர்ந்தோர்.
(தொடரும்)