நீரால் வீறு எய்தும் விளைநிலம்; நீர்வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன்
ஆடலால் பாடு பெறும் (86)
(வீறு = பாடு = சிறப்பு = பெருமை = புகழ் = செழிப்பு). பாய்ச்சப்படும் தண்ணீரால் பயிர்கள் விளையும். விளைநிலங்கள் செழிப்படையும். பரந்து விரிந்திருக்கும் கடல் தரும் பொருள்களான முத்து, பவளம், சங்கு போன்றவற்றால், கடலைச் சார்ந்துள்ள பட்டினம் பெருமை பெறும். இப்பொருள்களை விற்றுச் செல்வத்தைப் பெருக்குவதாலும், பல நாடுகளை வென்று அடிமை கொள்வதாலும், நல்லாட்சியாலும், அரசர்கள் சிறப்புப் பெறுவர். சிற்றரசர் பலரை வென்று பேரரசன் ஆவதால் பெருமை அடைவான். பாத்திரங்களை ஏற்று நடிகன் நடிப்பையும், கூத்தன் ஆட்டத்தையும், சிறப்பாக வெளிப்படுத்துவதால், நாடகமும், தெருக்கூத்தும் புகழ் பெறும்.
நீரால் வளம் பெறும் நிலம். கடலால் பெருமை பெறும் நகரம். ஆட்சியால் சிறப்படைவர் மன்னர். நடிப்பால் / ஆட்டத்தால் புகழ் அடையும் நாடகம் / கூத்து.
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில்நலம்; என்றும்
அறன் ஊக்கல் அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்
நாடு ஊக்கல் மன்னர் தொழில்நலம்; கேடு ஊக்கல்
கேளிர் ஒரீஇ விடல் (87)
(தொழில் நலம் = திறம் = வீரம் = செயல்; பிறன் = பகை அரசன்; ஒரீஇ விடல் = விலக்கி விடல்) பெண்களின் செயல் திறன் என்பது எந்நாளும் கணவனோடு ஒருமைப்பட்டுக் குடும்ப ஒழுக்கத்தைப் போற்றி மேம்படச் செய்வதாகும். மேலான அற ஒழுக்கத்தை உடைய அந்தணரின், சான்றோரின் மனம், வறுமையில் வாடிய போதும், எப்போதும் நல்லதைச் செய்வதாகும். மன்னர்களின் தொழில் நலம், அண்டை நாட்டு அரசர்கள் ஆளும் நாட்டை வென்று பெருமையைப் பெருக்கச் செய்வதாகும். உற்றார் உறவினர் சுற்றத்தாரை விலக்கி வைத்தல், தீமையை வளர்ப்பதாகும்.
குடும்ப ஒழுக்கம் பேணுதல் பெண்களின் செயல். அற ஒழுக்கத்தைப் பேணுதல் அந்தணர் செயல். பகைவரை வென்று புகழடைதல் மன்னர் செயல். சுற்றத்தாரை விட்டு விலகல் கேடான செயல்.
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்;
தள்ளாமை வேண்டும் தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும் சிறியரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை (88)
(கள்ளாமை = திருடாமை; கடிய = துன்பம்; தள்ளாமை = தவிர்க்காமல்; நள்ளாமை = நட்பு கொள்ளாமை) திருடினால் பின்னர் பிடிபட்டு, தண்டனை அனுபவித்து, துன்பங்கள், துயரங்கள் படவேண்டிவரும் என்பதால், கள்ளாமை வேண்டும் அதாவது அடுத்தவர் பொருளைக் களவாடாமல் இருக்க வேண்டும். கல்வி, நல்லொழுக்கம் உள்ளிட்ட தகுதி உடைய நற்செயல்களைத் தள்ளாமை வேண்டும் அதாவது அவற்றைத் தவிர்க்காமல், தள்ளிவிடாமல் கைக்கொள்ள வேண்டும். தீய ஒழுக்கம் உள்ள கீழ்மக்களுடன் நள்ளாமை வேண்டும் அதாவது நட்பு கொள்ளாது அவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இவை அனைத்தை விடவும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, யாரோடும் பகை கொள்ளாமை வேண்டும் அதாவது யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பிறர்பொருளைத் திருட வேண்டாம். நல்லொழுக்கத்தைத் தவிர்க்க வேண்டாம். தீயோருடன் நட்பு வேண்டாம். யாரோடும் பகை வேண்டாம்.
பெருக்குக நட்டாரை நன்றின்பால் உய்த்துத்;
தருக்குக ஒட்டாரைக் காலம் அறிந்தே;
அருக்குக யார்மாட்டும் உண்டி; சுருக்குக
செல்லா இடத்துச் சினம் (89)
(நட்டார் = நண்பர்; உய்த்தல் = செலுத்துதல்; தருக்குதல் = மேற்கொள்ளுதல்; ஒட்டார் = பகைவர்; அருக்குக = சுருக்குக; உண்டி = உணவு) உதவி புரிந்து, நன்மை செய்து, நண்பர்கள் கூட்டத்தைப் பெருக்க வேண்டும். தருணம் பார்த்து, காலம் அறிந்து வீழ்த்தி, பகைவரை வெல்ல வேண்டும். இல்லை என யாரிடமும் கையேந்தி இரந்து உணவு பெற்று உண்ணுதலைத் தவிர்க்க வேண்டும். நமக்கு இணையான தகுதி இல்லாதவர்களிடம் கோபிப்பதை விட்டுவிட வேண்டும்.
உதவி செய்து நண்பரைப் பெருக்குக. காலம் அறிந்து பகைவரை ஒடுக்குக. பிச்சை எடுத்து உண்பதைத் தவிர்த்திடுக. தகுதியற்றோர் இடத்துச் சினத்தைக் கைவிடுக.
மடிமை கெடுவார் கண்நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின் கண் நிற்கும் களிறு (90)
(மடிமை = சோம்பல்; பேணாமை = போற்றாமை; வரை = எல்லை; களிறு = யானை) சோம்பலும், முயற்சியின்மையும், கல்விச் செல்வம் கெட்டழிந்து போவாரிடமே இருக்கும். தீமையும், வெறுப்பும், நல்லொழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகளைப் போற்றிக் கொள்ளாதவரிடமே தோன்றும். நாணம் என்னும் எல்லையை மீறாமல் கற்பொழுக்கம் காத்து நிற்கும் குணம் நற்குடிப் பெண்களிடமே காணப்படும். கட்டிப் போட நட்டு வைத்த வலிமையான கட்டுத்தறி அல்லது தூணில் யானை அடங்கி நிற்கும்.
சோம்பல் கெடுவாரிடம் இருக்கும். தீமை ஒழுக்கமற்றவரிடம் தோன்றும். கற்பொழுக்கம் நற்குடிப் பெண்களிடம் காணப்படும். கட்டிய இடத்தில் யானை நிற்கும்.
மறைஅறிப அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி
அணங்கல் வணங்கின்று பெண் (91)
(மறை = வேதம் = நீதிநூல்; அந்தண்மை = நல்லியல்பு உள்ளோர்; அணங்கல் = வணங்குதல்) அழகிய நல்லியல்புகள் உடைய புலவர்கள் மறைகள், நீதி நூல்கள் அனைத்தையும் அறிவர். நாடாளும் மன்னர்கள் முறைமை தவறாது நடுவு நிலைமையில் நின்று அரசாள்வதில் வெற்றியாளர்களாக இருப்பர். பெருந்தன்மை கொண்ட பெரியோர் பண்பு உடைமையையும், வணக்கம் உடைமையையும் அணிகலனாகக் கொண்டிருப்பர். குலமகளிர்க்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதால் கணவரை மட்டுமே கடவுளாக வணங்குவர்.
நீதி நூல்களை அறிவர் பெரியோர். ஆட்சி முறையை அறிவர் அரசர். பண்புடைமையை அணிகலனாகக் கொள்வர் சான்றோர். கணவனை மட்டுமே வணங்குவர் குலமகளிர்.
பட்டாங்கே பட்டு ஒழுகும் பண்பு உடையாள்; காப்பினும்
பெட்டாங்கு ஒழுகும் பிணைஇலி; முட்டினும்
சென்றாங்கே சென்று ஒழுகும் காமம்; கரப்பினும்
கொன்றான் மேல் நிற்கும் கொலை (92)
(பட்டாங்கு = உண்மை; பட்டு = ஒத்து; ஒழுகும் = நடக்கும்; பிணைஇலி = ஒத்து வராத; முட்டினும் = தடுத்தாலும்; காமம் = பெண் இச்சை; காப்பினும் = மறைத்தாலும்) நற்பண்புகளைக் கொண்ட பெண், உண்மைக் கற்பு ஒழுக்கத்துடன், கணவனோடு ஒத்து இல்லறம் நடத்துவாள். கணவனோடு இணக்கமாகப் போகாதவள், என்னதான் கணவன் கட்டுக் காவலை அமைத்துப் பாதுகாத்தாலும், அதையும் மீறித் தன் விருப்பப்படியே நடப்பாள். பெண் மீதான ஒருவனின் ஆசையை எவ்வளவுதான் தடுத்துத் தடை போட்டு நிறுத்தினாலும், காம இயல்பு என்றும் அடங்காத தன்மையோடு விளங்கும். கொலைக் குற்றத்தை எவ்வளவுதான் மூடி மறைத்தாலும், என்றேனும் ஒருநாள் வெளிப்படும்.
பண்புடைய மனைவி ஒத்து வாழ்வாள். பண்பிலா மனைவி விருப்பம்போல் வாழ்வாள். தடை போட்டாலும் காம வேட்கை அடங்காது. மூடி மறைத்தாலும் கொலைப்பழி விலகாது.
வண்கண் பெருகின் வலிபெருகும்; பால்மொழியார்
இன்கண் பெருகின் இனம் பெருகும்; சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும்; வன்கண்
கயம்பெருகின் பாவம் பெரிது (93)
(வன்கண் = அஞ்சாமை; வலி = வலிமை; பால்மொழி = பால்போலும் இனிய மொழி; இன்கண் = இனிய மொழி; மென்கண் = அன்பு; வன்கண் = கொடுமை; கயம் = கீழ்மை) எதற்கும் பயப்படாமல், அஞ்சாமை என்னும் குணம் பெருகினால், அவனுடைய வலிமை மிகும். பால்போல் இனிய மொழி பேசும் மனைவியிடம் கண்ணோட்டம் அதாவது இரக்கம் கூடுமானால், உற்றார் உறவினர் சுற்றத்தார் கூட்டம் அதிகரிக்கும். சிறப்பு மிக்க அருள்தன்மையும், அன்புடைமையும் மிகுந்தால், நல்லறச் செயல்கள் பெருகும். கொடுமையும், கீழ்மைக் குணமும் அதிகரித்தால், தீமை கூடும்.
அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும். மனைவியின் இன்சொல்லால் சுற்றம் பெருகும். அன்பு கூடினால் நல்லறம் கூடும். கீழ்க்குணம் அதிகரித்தால் தீமை அதிகரிக்கும்.
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;
வளம்இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்;
கிளைஞர்இல் போழ்தில் சினம் குற்றம்; குற்றம்
தமர் அல்லார் கையத்து ஊண் (94)
(கிளைஞர் = சுற்றத்தார்; தமர் = உறவினர்; கையத்து = இடத்தில்; ஊண் = உண்ணுதல்) இளமையில் கல் என்றாள் ஔவைப் பிராட்டி. கல்வி கற்கும் பருவம் இளமைப் பருவம். எனவே இளமைக் காலத்தில் கல்வி கற்காதது குற்றம். இரப்போர்க்கு ஈதல் நற்குணமே. ஆனால் கையில் செல்வ வளம், பொருள் வருவாய் இல்லாத போது, ஏழ்மை நிலையில், கொடைக் குணம் கொண்டு பலருக்கும் வாரி வழங்கி உதவுவது குற்றம். பக்கத் துணையாக, ஆறுதல் கூற உற்றார் உறவினர் இல்லாத போது, பிறர் மீது கோபம் கொள்ளுதல் குற்றம். தமக்கு உறவினர் அல்லாத அந்நியரிடம் சென்று உணவைப் பெற்று உண்ணுதல் குற்றம்.
இளமையில் கல்லாமை குற்றம். வறுமையில் ஈகை பிழை. உறவினரின்றிக் கோபித்தல் தவறு. அந்நியரிடத்தில் உண்ணுதல் தீது.
எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்
கல்லா வளர விடல் தீது; நல்லார்
நலம் தீது நாண் அற்று நிற்பின்; குலம் தீது
கொள்கை அழிந்தக் கடை (95)
(நல்லார் = பெண்கள்; கொள்கை = குல ஒழுக்கம்) வீட்டிலும், வெளியிலும், யாகம் செய்யும் இடத்திலும், இறைச்சி விற்கும் கடையிலும், எல்லா இடங்களிலும்,உயிரைக் கொல்வது மிகப் பெரிய தீமையாகும். கல்வி அறிவே குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுத்தரும். அத்தகைய கல்வி அறிவைப் புகட்டாமல் பிள்ளைகளை வளர்ப்பது தீமையாகும். நாணம் என்பது பெண்களுக்கு உரிய நற்குணமாகும். அத்தகைய நற்குணமான நாணம் இழந்து நடக்கும் பெண்ணின் அழகு தீமையாகும். ஒழுக்கம் உயிரை விடவும் சிறந்ததாகும். அத்தகைய நல்லொழுக்கம் அழிவது குலத்துக்கே கெடுதலாகும்.
உயிர்களைக் கொல்வது தீது. பிள்ளைகளைக் கல்லாமல் வளர்த்தல் தீது. நாணமற்ற பெண்ணின் அழகு தீது. ஒழுக்கம் கெடுவது குலத்துக்குத் தீது.
ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருளாட்சி; யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்
உள்நாட்டம் இன்மையும் இல் (96)
(ஆசாரம் = ஒழுக்கம்; போகம் = இன்பம்; கண்ணோட்டம் = அருட்பார்வை; முறைமை = ஆட்சி முறை; உள்நாட்டம் = மனத்தால் ஆராய்தல்) நல்லொழுக்கம் என்பது, கல்வி என்னும் படிப்பறிவாலும், அனுபவம் என்னும் பட்டறிவாலும் அமையும். நல்லறத்துடன் கூடிய இன்ப நுகர்வு அதாவது போகம், பொருள் வளம் மற்றும் செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும். கண்ணோட்டம் இன்மை அதாவது அருள் தன்மை இல்லாமை அதாவது தயவு தாட்சண்யம் கருணை இல்லாமை, நடுவு நிலைமை தவறாது ஆளும் முறைமையால் வரும். மன்னனின் சிறந்த ஆளுமை, தன்னுள்ளும் ஆராய்ந்து, மற்றவருடனும் கலந்து ஆலோசித்து, இரண்டையும் சீர்தூக்கிப் பார்ப்பதால் விளையும்.
நல்லொழுக்கம் கல்வியால் அமையும். அறமும் போகமும் செல்வத்தின் பயனாகும். நடுநிலை தவறாமை ஆட்சி முறைமையாகும். சிறந்த ஆளுமை மனத்தாலும் பிறரோடு ஆராய்தலால் விளையும்.
கள்ளின் இடும்பைக் களிஅறியும்; நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை
பல்பெண்டி ராளன் அறியும்; கரப்பு இடும்பை
கள்வன் அறிந்து விடும். (97)
(இடும்பை = துன்பம்; களி = குடிகாரன்; புள் = பறவை; ஓங்கல் = வானம்பாடி; நிரப்பு = வறுமை; பல பெண்டிராளன் = பல பெண்களை மணந்தவன்; கரப்பு = ஒளித்து வைத்தல்) அருந்தக் கள் கிடைக்காமல் ஏற்படும் வருத்தத்தை, கள் குடித்துப் பழக்கப்பட்டவனே அறிவான். வானில் பறந்து கொண்டே பாடும் வானம்பாடி மழைத் துளியையே உண்டு வாழும் என்பர். ஆகவே, தாகத்தைத் தணிக்கத் தண்ணீர் கிடைக்காமல் ஏற்படும் துன்பத்தை, பறவைகளுள் வானம்பாடியே அறியும். கையில் பொருள் இல்லாமல் குடும்பத்தை நடத்தப்படும் துயரத்தை, பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டவனே அறிவான். பொருளைத் திருடி அதைப் பாதுகாக்க ஓரிடத்தில் ஒளித்து வைப்பதால் வரும் இன்னலைத், திருடனே அறிவான்.
கள் கிடைக்காத வருத்தத்தைக் குடிகாரனே அறிவான். தண்ணீர் கிடைக்காத துன்பத்தை வானம்பாடியே அறியும். குடும்பம் நடத்தும் துயரத்தைப் பல பெண்களை மணந்தவனே அறிவான். ஒளித்து வைப்பதால் வரும் இன்னலை திருடனே அறிவான்.
வடுச்சொல் நயம் இல்லார் வாய்த்தோன்றும்; கற்றார்வாய்ச்
சாயினும் தோன்றா கரப்புச்சொல்; தீய
பரப்புச் சொல் சான்றோர் வாய்த்தோன்றா; கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும் (98)
(வடுச்சொல் = பழிச்சொல்; சாயினும் = இறப்பினும்; நயம் = அன்பு; கரப்புச் சொல் = ஒன்றினை மறைத்து மறுக்கும் சொல்). பிறருடைய குற்றத்தை வெளிப்படுத்தும் பழிச்சொற்கள் அன்பு இல்லாதவரின் வாயில் தோன்றும். கெடுவதாக இருப்பினும் கூட, அடுத்தவரை வஞ்சிக்கும் சொற்கள் அறிவு நூல்களைக் கற்றவர்களின் வாயில் தோன்றாது. தீயவற்றைப் பரப்பும் சொற்கள் நற்குடிப் பிறந்த மேன்மக்கள் வாயில் தோன்றாது. ஒன்றினை மறைத்து மறுக்கும் சொற்கள் கீழ்மக்கள் வாயில் தோன்றும்.
அன்புடையோர் வாயில் பழிச்சொற்கள் தோன்றாது. கற்றவர் வாயில் வஞ்சிக்கும் சொற்கள் தோன்றாது. மேன்மக்கள் வாயில் தீச்சொற்கள் தோன்றாது. கீழ்மக்கள் வாயில் உண்மைச் சொற்கள் தோன்றாது.
வாலிழையார் முன்னர் வனப்பு இல்லான் பாடுஇலன்;
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடுஇலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே; கல்லாதார்,
பேதையார், முன்னர்ப் படின் (99)
(வால் = ஜொலிக்கும்; இழை = ஆபரணம் / நகை; வனப்பு = அழகு; பாடு = பெருமை; இலன் = இல்லாதவன்; சாலும் = மிகுந்த) ஒளிரும் நகைகளை அணிந்த அழகிய பெண்ணின் முன் அழகில்லாத ஆண், பெருமை அடைவதில்லை. கல்வி கேள்விகளில் சிறந்த கற்றறிந்த மேன்மக்கள் நிறைந்த அவைக்குள் நுழையும் மூடன், பெருமை அடைவதில்லை. கல்வியறிவு இல்லாத முட்டாளின் முன் கல்வி கற்றவன் பெருமை அடைவதில்லை. பேதை முன்பு ஏட்டறிவும், பட்டறிவும் மிக்க அறிஞர் பெருமை அடைவதில்லை.
அழகிய பெண்ணின் முன் அழகற்ற ஆணுக்குப் பெருமை இல்லை. கற்றவர் அவையில் மூடனுக்குப் பெருமை இல்லை. முட்டாளின் முன் கற்றவனுக்குப் பெருமை இல்லை. பேதை முன் அறிஞனுக்குப் பெருமை இல்லை.
மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்;
பூசிக் கொளினும் இரும்பின் கண் மாசு ஓடும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும் (100)
(மாசு = அழுக்கு; மணி = இரத்தினம்; பூசி = கழுவி; பாசத்துள் இடினும் = தண்டித்தாலும்) அழுக்கு சேர்ந்தாலும் இரத்தினத்தின் பெருமையும், ஒளியும் குறையாது. எத்தனை முறை கழுவினாலும் இரும்பில் சேரும் அழுக்கும், துருவும் போகாது. தீயோர் உள்ளம் தண்டித்தாலும் வைதாலும் திருந்தாது. கீழோர்க்கு நல்ல புத்தி சொல்லி அன்பினாலும், அறிவுரையாலும், மாற்ற முயன்றாலும் கீழ்மைக் குணம் விலகாது.
அழுக்கு படிந்தாலும் இரத்தினம் ஒளி குறையாது. கழுவினாலும் இரும்பின் துரு போகாது. தீயோர் உள்ளம் வைதாலும் திருந்தாது. கீழோர் தீக்குணம் அறிவுரையாலும் விலகாது.
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும் போற்றார் உடன் உறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும் நட்டார் கழறுஞ்சொல்; பாழ்ஒக்கும்
பண்பு உடையாள் இல்லா மனை (101)
(எண் ஒக்கும் = அறிவுடைமை ஆகும்; மரீஇய = நெடுநாள் பழகிய; தீராமை = நீங்காமை; புண் = துன்பம்; பண்ணிய = செய்தமைந்த; நட்டார் = நண்பர்; கழறும் சொல் = இடித்துரைக்கும் இன்சொல்; மனை = வீடு) நீண்ட நெடுங்காலமாக நெருங்கிப் பழகியவர்களான பெரியோர்களை விட்டுப் பிரியாமல் இருப்பது அறிவுடைமை ஆகும். தன்னோடு இணக்கம் இல்லாதவருடன் கூடி இருத்தல் புண்ணைப்போல் வருத்தம் தருவது ஆகும். நட்பானவர் நன்மை கருதி ஒருவர்க்கு இடித்துரைத்துச் சொல்லும் அறிவுரைகள். ஸ்ருதி சேர்த்து மீட்டி இனிமையான இசை எழுப்புவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட யாழின் இசைக்கு ஒப்பு ஆகும். நல்லொழுக்கம் ஆகிய உயர் பண்பு உடையவள் இல்லாத இல்லம், பாழடைந்த வீடு ஆகும்.
பெரியோர் பிரியாமை அறிவுடைமை. இணக்கம் இல்லாதோருடன் வாழ்தல் கொடுமை. இடித்துரைக்கும் அறிவுரைகள் இனிமை. நல்ல மனைவி அமையாத வீடு இன்மை.
ஏரி சிறிதாயின் நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதாயின் பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதாயின் வினை ஊரும்; ஊரும்
உரன் சிறிதாயின் பகை (102)
(நீர் ஊரும் = தண்ணீர் வழியும்; வாரி = வருமானம்; பெண் ஊரும் = மனைவி எல்லை மீறிப் பேசுவாள்; மேலை = முற்பிறப்பு; வினை ஊரும் = தீவினை பெருகும்; உரன் = வலிமை) ஏரி அல்லது குளத்தின் அளவு சிறியதாக இருந்தால், அதில் அதிக அளவு தண்ணீர் தேங்காமல் வழிந்து ஓடிவிடும். வீட்டில் வருமானத்தின் அளவு குறைவாக இருந்தால், இல்லத்தரசி அல்லது மனைவி வரம்பு மீறிப் பேசுவாள். முந்தைய பிறப்பில் செய்த நல்வினைகள் அல்லது அறச்செயல்களின் அளவு குறைவாக இருந்தால், இந்தப் பிறப்பில் தீவினைகள் அதிகமாக இருக்கும். ஒருவனுக்கு வலிமையின் அளவு குறைந்தால், அவனுக்குப் பகையின் எண்ணிக்கை பெருகும்.
ஏரி சிறிதானால் தண்ணீர் வழிந்து ஓடும். வருமானம் குறைந்தால் மனைவியின் வாய்ச்சொல் எல்லை மீறும். முற்பிறப்பில் நல்வினை குறைந்தால் தீவினை அதிகரிக்கும். வலிமை குன்றினால் பகை பெருகும்.
வைததனால் ஆகும் வசையே; வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை; செய்த
பொருளினால் ஆகுமாம் போகம்; நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம் (103)
(வைதல் – ஏசுதல்; வசை = இகழ்ச்சி, பழி; செழுங்கிளை = வளமையான சுற்றம்) ஒருவரை ஏசிப் பேசுவதாலும், திட்டித் தீர்ப்பதாலும், தகாத சொற்களைக் கூறுவதாலும், இகழ்ச்சியும், பழியும் வந்து சேரும். வணங்கிப் பணிந்தால் பகை நீங்கி, பழி விலகி, நல்லுறவு செழிக்கும். நேர்மையான வழியில் உழைத்துச் சம்பாதித்த பொருளால், வாழ்வில் இன்பம் உண்டாகும். உள்ளம் நெகிழ்ந்து உருக, அன்பு மனத்துள் சுரக்கும் அருளால், நல்வினைகளால், அறச் செயல்கள் பெருகும்.
திட்டுவதால் பழி வரும். வணங்குவதால் உறவு வளரும். பொருளால் இன்பம் உண்டாகும். அருளால் அறம் பெருகும்.
ஒருவன் அறிவானும் எல்லாம்; யசதொன்றும்
ஒருவன் அறியா தவனும்; ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உள்ளானும்; ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல். (104)
(குணன் = நல்லியல்பு; கணன் = அறியாமை / சிறுமை) இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவனும் எவனும் இல்லை. அதேபோல் இவ்வுலகில் எதுவுமே தெரியாதவனும் யாரும் கிடையாது. நல்ல குணங்கள் ஏதுமின்றிக் குற்றங்கள் மட்டுமே நிரம்பப் பெற்றவனும் ஒருவனும் இல்லை. அதுபோல் குற்றங்கள் ஏதுமின்றி நற்குணங்கள் மட்டுமே நிறைந்தவனும் கிடையாது. அறியாமை ஒரு துளியும் இல்லாது, முற்றாகக் கற்றறிந்தவனும் இந்த மண்ணில் யாரும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் நிறையும் இருக்கிறது. குறையும் உள்ளது. நல்ல குணமும் இருக்கிறது. தீய குணமும் உள்ளது. அறிவும் இருக்கிறது. அறியாமையும் உள்ளது.
எல்லாம் அறிந்தவனும் இல்லை. எதுவுமே அறியாதவனும் இல்லை. நற்குணம் மட்டுமே உள்ளவனும் இல்லை. தீக்குணம் மட்டுமே கொண்டவனும் இல்லை. குற்றமே இல்லாதவனும் இல்லை. முற்றக் கற்றவனும் இல்லை.
மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதில் புகழ்சால் உணர்வு (105)
(மனை = வீடு; விளக்கம் = ஒளி வீசும் விளக்கு; மடவாள் = மனைவி; தகைமை = நல் இயல்பு; சால் = சிறந்த; ஓதில் = சொல்லுமிடத்து) வீட்டுக்கு ஒளி வீசும் விளக்கைப் போன்றவர்கள் பெண்கள். அந்தப் பெண்களுக்கு ஒளி வீசும் விளக்கைப் போன்றவர்கள் சிறந்த புதல்வர்கள். அந்த அன்புப் புதல்வர்களுக்கு ஒளி வீசும் விளைக்கைப் போன்றது கற்றுப் பெற்ற கல்வி. அந்தக் கல்வி அறிவுக்கு ஒளி வீசும் விளக்கைப் போன்றது புகழ் பொருந்திய மெய் உணர்வு, மெய் அறிவு.
வீட்டுக்கு விளக்கு பெண்கள். பெண்களுக்கு விளக்கு பிள்ளைகள். பிள்ளைகளுக்கு விளக்கு கல்வி. கல்விக்கு விளக்கு மெய் உணர்வு.
இன்சொலால் ஆகும் கிழமை; இனிப்பிலா
வன்சொலால் ஆகும் வசைமனம்; மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம்; அம்மனத்தான்
வீவுஇலா வீடுஆய் விடும் (106)
(கிழமை = நட்பு உரிமை; வீவு இலா = அழிதல் இல்லாத வீடு – வீடு பேறு) இனிமையான சுவையான சொற்களைப் பேசுவதால் நட்புரிமை உண்டாகும். இனிமையற்ற கசப்பான சொற்களைப் பேசுவதால் பழி உணர்வே அதிகரிக்கும். மென்மையான அன்பு மொழியில், இனிய சொற்களையே பேசும் நாக்கு, மனத்தில் அருள் இரக்கத்தைச் சுரக்கச் செய்யும். அருள் இரக்கம் கொண்ட அம்மனம், அழிவில்லா வீடு பேறு கிடைக்கச் செய்யும்.
இனிமையான பேச்சால் நட்பு உண்டாகும். கொடுஞ்சொல் உரைப்பதால் பழி அதிகரிக்கும். அன்புமொழி மனத்தில் அருளைப் பொழியும். அருள் மனம் வீடு பேற்றைத் தரும்.
நான்மணிக்கடிகை முற்றும்