இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1612ஆம் ஆண்டு, பகதூர் ஷாவின் முன்னோர்களில் ஒருவரான முகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை தொடங்க குஜராத்தில் உள்ள சூரத் என்னும் ஊரில் இடம் கொடுத்தார். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இடத்தைக் கொடுத்தவரின் வாரிசு தேச துரோகி என குற்றம் சாட்டப்படுகிறான். உதவி என்று கேட்டு வந்தவர்கள், அதிகாரத்தில் அமர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள். இதைத்தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கிறது என்று சொல்வார்கள் போல!
பகதூர் ஷாவின் மீது வழக்கு தொடர்ந்து, தண்டிக்கும் அளவிற்கு, கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் உள்ளதா என்பது விவாதத்திற்கு உரிய கேள்வி. ஒரு நாட்டின் அரசர் மீது, வர்த்தகம் செய்துவந்த ஒரு நிறுவனம் எப்படி வழக்கு தொடுக்க முடியும்? அதுவும் தேச துரோகத்திற்கான வழக்கு. அரசரின் முன்னோர்களால், கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவில் வாணிபம் செய்வதற்கான அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டது. பக்சரில் நடந்த யுத்தத்தால் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகள் கம்பெனி வசம் வந்தன. பின் அங்கு வசிக்கும் மக்களிடம் வரி வசூல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றது. இருப்பினும், 1832ஆம் ஆண்டு வரை, கிழக்கிந்திய கம்பெனி முகலாய அரசர்களின் ஆளுமைக்கு கீழ்பட்டு ஆட்சி நடத்திவருவதாக தன்னுடைய நாணயங்களிலும், முத்திரைகளிலும் தெரிவித்து வந்துள்ளது. அப்படி இருக்கையில் முகலாய அரசரான பகதூர் ஷாவை எப்படி தேச துரோக குற்றத்திற்கு ஆட்படுத்த முடியும். வேண்டுமென்றால், பகதூர் ஷாவை போரில் தோல்வியுற்ற அரசராக கருதமுடியுமே தவிர, தேச துரோகியாக அல்ல. உண்மையில் பார்த்தால் கிழக்கிந்திய கம்பெனிதான் தேச துரோக குற்றம் புரிந்திருக்கிறது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பதம் பார்த்திருக்கிறது. நாட்டில் வியாபாரம் நடத்திக்கொள் என்று அதிகாரம் கொடுத்தால், நாட்டின் அரசர் மீதே போர் தொடுத்திருக்கிறது கிழக்கிந்திய கம்பெனி.
எது எப்படி இருப்பினும், இப்போது பகதூர் ஷா ஒரு கைதி. அவரை விசாரித்து தண்டனை கொடுக்க ஒரு இராணுவ ஆணையமும் ஏற்பாடாகிவிட்டது. விசாரணை ஜனவரி 27ஆம் தேதி தொடங்கியது. தள்ளாத வயதில் தடுமாறியபடியே விசாரணைக்கு ஆஜரானார் முகலாய அரசர பகதூர் ஷா சாஃபர்.
பகதூர் ஷா மீது நான்கு முக்கியக் குற்றங்களை சுமத்தியது கிழக்கிந்திய கம்பெனி.
1) கம்பெனியின் ஓய்வூதியத்தை பெற்று வரும் பகதூர் ஷா, சிப்பாய்களை கலகத்தில் ஈடுபடும்படி தூண்டியது.
2) பகதூர் ஷா தன் மகனான மிர்சா முகலுடன் சேர்ந்துகொண்டு, நாட்டிற்கு எதிராக தேச துரோகம் செய்தது.
3) தன்னை அரசர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, சட்ட விரோதமாக டில்லியை தன் கைக்குள் வைத்திருந்தது.
4) 1857ஆம் வருடம், மே மாதம் 16ஆம் தேதி, தன் அரண்மனையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 49 ஆங்கிலேயர்களை கொலை செய்தது அல்லது கொலை செய்யத் தூண்டியது.
பகதூர் ஷா தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் மறுத்தார்.
விசாரணையின்போது பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பகதூர் ஷாவின் சொந்தக்காரர்கள், மருத்துவர், முன்னாள் செயலாளர் எனப் பலர் விசாரிக்கப்பட்டனர். கம்பெனி சார்பாக விசாரிக்கப்பட்ட சாட்சியங்களை பகதூர் ஷா குறுக்கு விசாரணை செய்யவில்லை.
நூற்றுக்கணக்கான ஆவணங்கள் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. எந்த சாட்சியங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அடிப்படை சட்ட விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளுக்கு உட்பட்டுதான் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். பின்னர் அது வாதத்தின்போது பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால் பகதூர் ஷா வழக்கில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதில் உள்ள அனைத்து விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன. ஆதாரப்பூர்வமற்ற ஆவணங்கள், சந்தேகத்திற்குண்டான ஆவணங்கள், குற்றவாளிக்கு சம்மந்தமில்லாத ஆவணங்கள் என அனைத்து விதமான ஆவணங்களும் சாட்சியங்களாக தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பகதூர் ஷா, தன் வழக்கை வாதாட குலாம் அப்பாஸ் என்பவரை நியமித்தார். கிழக்கிந்திய கம்பெனி குலாம் அப்பாஸை அரசாங்கத்தின் சாட்சியாக விசாரித்தது.
விசாரணையின் இறுதியில், பிராசிகியூட்டர் மேஜர் ஹாரியட், கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிய வேண்டும் என்ற நோக்கில் பகதூர் ஷா செய்லபட்டிருக்கிறார். அவருக்கும் புரட்சிக்காரர்களுக்கும் நிறைய தொடர்பு இருந்திருக்கிறது என்று வாதிட்டார்.
1858 செப்டெம்பர் 3ஆம் தேதியன்று, பகதூர் ஷா தன்னுடைய மறுப்புரையை உருது மொழியில் எழுதிக்கொடுத்தார். அதில்,
1. நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. புரட்சியாளர்களின் தலைவராக நான் செயல்படவில்லை. நான் ஒரு சூழ்நிலைக் கைதி;
2. நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் புரட்சியாளர்கள்தான் காரணம். சிப்பாய்களின் போராட்டத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னைச் சுற்றி என்ன நடந்தது என்றே தெரியவில்லை;
3. 49 ஆங்கிலேயர்களைக் கொல்ல, நான் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை. என்னுடைய மகன்களான மிர்ஸா முகலும், மிர்ஸா கிஸ்ரும் புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயர்களைக் கொல்ல உத்தரவிட்டிருக்கலாம். ஆனால், நான் சுயமாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. கட்டாயத்தின் பேரில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. உத்தரவுகள் தயார் செய்யப்பட்ட பின்னர், புரட்சியாளர்கள் என்னுடைய கையொப்பத்தைப் பெற்று, முத்திரையை பதித்துக்கொண்டனர்; உத்தரவுகளில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பதுகூட எனக்குத் தெரியாது.
என்று அவர் தன்னுடைய மறுப்புரையில் சமர்ப்பித்தார்.
சுமார் 42 நாட்கள் நடந்த விசாரணை, 1858 செப்டெம்பர் 3ஆம் தேதி, காலை 11 மணிக்கு முடிவடைந்தது. அன்றைய தினமே, மாலை 3 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பகதூர் ஷாவின் மீதான குற்றங்கள் நிரூபனமானதாக இராணுவ ஆணையம் தெரிவித்தது. விசாரணையின் முடிவு, பஞ்சாப் மாகாண ஆளுனரான சர் ஜான் லாரன்சுக்கு அனுப்பப்பட்டது (டில்லி, பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதி). பஞ்சாப் ஆளுனர், பகதூர் ஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படியே, விசாரணை முடிந்து சுமார் 7 மாதங்கள் கழித்து, 1858ஆம் வருடம், அக்டோபர் மாதம், பகதூர் ஷா நாடு கடத்தப்பட்டார். பகதூர் ஷா, அவரது மனைவி ஜீனத் மஹால், மகன் ஜிவான் பக்த் மற்றும் சில பணி ஆட்களுடன் டில்லியிலிருந்து மாட்டு வண்டியின் மூலமாக கல்கத்தா அனுப்பப்பட்டார். அங்கிருந்து ஒரு போர் கப்பல் மூலமாக அனைவரும் பர்மாவில் உள்ள ரங்கூனுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இந்தியாவில் 322 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரசர்; ஒரு கால கட்டத்தில் ஏறக்குறைய இந்தியா முழுவதும் ஆட்சி செலுத்திய ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரசர் நாடுகடத்தப்பட்டார்.
தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் பிரயாணம் செய்த பகதூர் ஷா குடும்பம் சுமார் இரண்டு மாதம் கழித்து ரங்கூன் வந்தடைந்தது. அங்கு காவலில் வைக்கப்பட்ட பகதூர் ஷா, 1862ஆம் ஆண்டு, தன்னுடைய 87வது வயதில் இறந்தார். இறப்பதற்கு முன்னர் மனம் நெகிழ்ந்து ஒரு கசலை எழுதிவிட்டுச் சென்றார்.
‘எவ்வளவு துர்பாக்கியசாலி இந்த சாஃபர், தான் இறந்த பிறகு புதைப்பதற்கு ஆறடி நிலத்தைக்கூட அவன் நேசித்த நாட்டில் அவனால் பெறமுடியவில்லையே. ’
டில்லியைப் போலவே, ஏனைய இடங்களிலும் புரட்சியை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது கிழக்கிந்திய கம்பெனி. ஜான்சியின் ராணியான லட்சுமி பாய் கிழக்கிந்திய கம்பெனியுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். நானா சாகிப் ஆங்கிலேயர்களிடம் அகப்படாமல் நேபாளத்திற்கு தப்பித்து ஓடியதாக சொல்லப்படுகிறது. தாந்தியா தோப் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் சிரச்சேதம் செய்யப்பட்டார். மற்ற போராட்டக் கைதிகளெல்லாம் பீரங்கியின் முனையில் கட்டப்பட்டு, பீரங்கி குண்டுகளால் கண்டம் துண்டமாக சிதறடிக்கப்பட்டனர்.
சிப்பாய் புராட்சியால் ஆங்கிலேயர்கள் தரப்பிலும், இந்தியர்கள் தரப்பிலும் ஏகப்பட்ட உயிர்ச் சேதம் ஏற்பட்டது. கொடூரமான கொலைகள் நடந்தேறின. கான்பூரில் நிகழ்ந்த கலவரங்களும், கொலைகளும் மிகவும் கொடூரமானவை. புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை எப்படிக் கொன்றார்களோ அதற்கு சற்றும் சளைக்காத விதத்தில், ஆங்கிலேயர்கள் புரட்சியாளர்களையும் அப்பாவிகளையும் கொன்று பழி தீர்த்துக்கொண்டனர். நகரங்கள் சூறையாடப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட பிறகு, 300 ஆண்டு கால சரித்திரம் கொண்ட முகலாய ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
நடந்தவைகளை கவனித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பொறுத்தது போதும் என்று ஒரு முடிவிற்கு வந்தது. 1858ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் Governement of India Act என்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய நிலப்பகுதிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் ராணி எடுத்துக்கொண்டார். அதுமுதல், இந்தியா பிரிட்டிஷ் ராஜ் என்று அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிக்கும் இந்தியாவிற்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய சொத்துக்களெல்லாம் பிரிட்டிஷ் அரசுக்கு மாற்றப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி இந்திய அரசர்களோடு போட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எல்லாவற்றிற்கும், கம்பெனிக்கு பதிலாக பிரிட்டிஷ் ராணியே பொறுப்பேற்றார். இந்தியா தொடர்பான விவகாரங்களை பார்த்துக்கொள்ள Secretary of State for India என்ற ஒரு அலுவலகம் பிரிட்டனில் திறக்கப்பட்டது. இந்திய நிர்வாகம் குறித்த அலுவல்களை கவனித்துக்கொள்ள அரசாங்க செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் காபினட் அந்தஸ்து கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்ற மந்திரி. கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகித்து வந்த இயக்குனர்களின் பொறுப்புகளை அரசாங்கச் செயலர் ஏற்றுக்கொண்டார். 15 நபர்கள் அடங்கிய குழு, அரசாங்க செயலருக்கு உதவியாக செயல்பட்டது. இந்தியாவில் ஆட்சி புரிந்துவந்த கவர்னர் ஜெனரலுக்கும், பிரிட்டிஷ் மகாராணிக்கும் இடையே பாலமாக இருப்பதுதான் அரசு செயலரின் முக்கிய கடமை. இந்தியாவிற்கான சிவில் சர்விஸ் அமைப்பை உருவாக்கும் பொறுப்பும் அரசு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ராணி, இந்தியா முழுவதையும் தன் சார்பாக ஆட்சி செய்ய கவர்னர் ஜெனரலை (வைஸ்ராய்) நியமனம் செய்தார். இந்தியாவில் உள்ள மாகாணங்களை நிர்வகிக்க கவர்னரை நியமித்தார். கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த சார்லஸ் ஜான் கேனிங் என்பவர் பிரிடிஷ் ராஜ்ஜியத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
பகதூர் ஷாவை பர்மாவிற்கு நாடுகடத்தி பிரச்சனையை முடித்து பெருமூச்சு விட்ட ஆங்கிலேய அரசாங்கம், சுமார் 88 வருடங்கள் கழித்து, பர்மாவிலிருந்து கிளம்பிய பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறியது. செங்கோட்டையில் ஆரம்பித்து பர்மாவில் முடிந்த பிரச்சனை, பின்னர் வேறு ஒரு ரூபத்தில் பர்மாவில் தொடங்கி செங்கோட்டையை அடைந்தது.
0