Skip to content
Home » ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.

ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும், அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களுடைய நான்கு குழந்தைகளையும் பார்க்கச் செல்வதற்காக இந்த ஏற்பாடு.

போட் மெயில் வருவதற்குப் பத்து நிமிடங்கள் இருந்த நிலையில், இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் நன்றாக எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலை முடியைச் சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேஷ்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டிக்குள் இருவர் நுழைவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரையின் அருகில் வந்து நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டு, அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். துப்பாக்கிச் சூடு நடத்தியவனுடன் வந்த மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான். கழிவறையினுள் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது. துரை கொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர், திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும், ஆங்கிலேயர். அவரைச் சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1911. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தின் 5வது ஜார்ஜ் மன்னராக முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் புரட்சிகரமான செயல்கள் பல, நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், அனைத்துப் புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதைச் செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது, ஆங்கிலேய காவல் துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன், ஓர் இளைஞன். அவனுக்குச் சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல் துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில்,

‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டை பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாத்தன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுதந்தரம் பெற்று, சனாத்தன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்தப் பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும்,  5வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா?  ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவனைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்தக் காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிச் செய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்’

என்று குறிப்பிட்டிருந்தது.

காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல் துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்குச் சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுசதி செய்திருப்பது தெரியவந்தது. அக்கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல் துறை, ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை  இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல் துறை அவரை மேலும் விசாரித்ததில், சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரைக் காட்டிக் கொடுத்தார். காவல் துறை சோமசுந்தரத்தைச் சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசுத் தரப்புச் சாட்சிகளாக (approver) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல் துறை, தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பின்வருமாறு,

  1. நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கிய குற்றவாளி) – தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிகையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால், ஆங்கிலேய அரசாங்கம் அவருடைய அனைத்துப் பத்திரிகைகளையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர்.  (அரவிந்த கோஷ், வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு, அரசியலை விட்டு விலகி, ஆன்மிகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)
  2. சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனர்) – விவசாயம் செய்துவந்தார்.
  3. மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை – காய்கறி வியா-பாரம் செய்துவந்தார்.
  4. முத்துகுமாரசாமி பிள்ளை – பானை வியாபாரம் செய்து-வந்தார்.
  5. சுப்பையா பிள்ளை – வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.
  6. ஜகனாதா அய்யங்கார் – சமையல் செய்யும் உத்தியோகம்
  7.  ஹரிஹர  ஐயர் – வியாபாரி
  8. பாபு பிள்ளை – விவசாயி
  9. தேசிகாச்சாரி – வியாபாரி
  10. வேம்பு ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
  11. சாவடி அருணாச்சல பிள்ளை – விவசாயம்
  12. அழகப்பா பிள்ளை – விவசாயம்
  13. வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் – பள்ளிக்கூட வாத்தியார்
  14. பிச்சுமணி ஐயர் –  சமையல் செய்யும் உத்தியோகம்

கைது செய்யப்பட்டவர்களில் பலர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள். அவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள்,

  1. தர்மராஜா  ஐயர் – விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
  2. வெங்கடேச ஐயர் – கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேசத் துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்குப் பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள்,

  1. வி.வி.எஸ். ஐயர் – திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்பிரமணியம் ஐயர், சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர். இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதற்குக் காரணம் வி.வி.எஸ்தான் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தியது. பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின்மீது நிறைய குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால், குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையைக் கைவிட்டது, பிரெஞ்சு அரசு.
  2. சுப்பிரமணிய பாரதி – திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். சிறந்த கவிஞர்,  பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் பத்திரிகையைப் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அற வழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும், புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரை ஆதரித்தார், சுப்பிரமணிய பாரதி. வ.உ.சிதம்பரம் பிள்ளையின்மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் நீதிமன்றத்துக்குச் சென்று சாட்சியம் அளித்தார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக, தன்னுடைய பத்திரிகையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால், புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்து அவருடைய இதழ்களை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.
  3. ஸ்ரீனிவாச ஆச்சாரி
  4. நாகசாமி ஐயர்
  5. மாடசாமி பிள்ளை

மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு பிடிஆணை (வாரண்ட்) உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம், முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவர் மாடசாமி பிள்ளையைக் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்டபோது, வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.

அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி, ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரைக் கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவித்தாக ஆகும். ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சுப் பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது, எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். அந்த நாடும், இன்னொரு நாடு தன்னிடம் கேட்கிறது என்று குற்றவாளியைப் பிடித்து அப்படியே ஒப்படைத்துவிட முடியாது. தொடர்புடைய குற்றவாளியை அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா அல்லது வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. எந்தவிதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக்கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம். பொதுவாகவே, அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது.

அதனால், மேற்சொன்ன நபர்களைக் கைது செய்ய முடியவில்லை. ஆனால், மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலாளிகள் எப்பொழுதும் தயார் நிலையிலேயே இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுதே அவர்களைக் கைது செய்வதற்கு. சம்பந்தப்பட்டர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென்றே நிறைய உளவாளிகளை அமர்த்தி, அவர்களை வேவு பார்த்தது, ஆங்கிலேய அரசு. புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மணி ஆர்டர்கள் (Money Order) ஆகியவற்றைக் கிடைக்க முடியாமல் செய்தது. புதுச்சேரியிலிருந்து அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது, ஆங்கிலேய அரசாங்கம்.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த குற்றவாளிகளைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகளின்மீது காவல் துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பொதுவாக, குற்றம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின்மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடைபெற்று இருக்கவேண்டும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கைத் தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்குக் காரணம், கொலை செய்யப்பட்டவர் ஓர் ஆங்கிலேயர், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள் – நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர்.

பொதுவாக, கொலை வழக்குகளில் ஜூரி நியமிக்கப்படும். ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களில் பன்னிரெண்டு பேர் (வழக்குக்குத் தகுந்தாற்போல் 9 பேர் கொண்ட நடுவர்குழு கூட அமைக்கப்படும்) நடுவர் குழுவாக  நியமிக்கப்பட்டு, அவர்கள் வழக்கு விசாரணையில் பங்கு கொள்வர். நடுவர் குழு வழக்கு விசாரணை முடிந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவைத் தெரிவிக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இப்பொழுது இந்த நடுவர் குழு முறை நடைமுறையில் இல்லை.

ஆனால், ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை. ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம், ஜூரியை நியமிக்காமல் தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக, அப்போதைய பப்ளிக் பிராஸிக்யூட்டராக இருந்த நேப்பியர் மற்றும் அவருக்குத் துணையாக ரிச்மண்ட் மற்றும் சுந்தர சாஸ்திரி ஆகியோர் செயல்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்ததால் அவர்களுக்காக வாதாட ஏராளமான வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், ஜே.சி. ஆடம் என்ற பிரபல பாரிஸ்டர், ஆந்திர கேசரி  என்று அழைக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் தங்குதூரி பிரகாசம் (1946ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்), எம்.டி.தேவதாஸ் (பின்னாளில் நீதிபதியாக ஆனார்), ஜெ. எல். ரொஸாரியோ, பி. நரஸிம்ம ராவ், டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் (பின்னாளில், திருவாங்கூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்), எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர், எஸ்.டி.ஸ்ரீனிவாச கோபாலாச்சாரி மற்றும் வி.ரையுரு நம்பியார்.

அரசுத் தரப்பு தங்களுடைய சாட்சிகளை விசாரித்தது. அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகள், அப்ரூவர்களாக மாறிய ஆறுமுகப்பிள்ளை மற்றும் சோமசுந்தரப்பிள்ளைதான். இவர்கள் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டனர். எதிர் தரப்பு, இவர்களைக் குறுக்கு விசாரணை செய்தது. இரு தரப்பிலிருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது கடிதங்கள், டயரிகள் (நாள்-குறிப்புகள்), பத்திரிகை வெளியீடுகள், அரசு ஆய்வறிக்கைகள் என நிறைய ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டன.

நீதிமன்ற விசாரணையின்போது சாட்சிகள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலும், மேலும், இந்த வழக்கு தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்திகளிலிருந்தும் திரட்டப்பட்ட விவரங்கள் பின்வருமாறு,

வாஞ்சிநாதன், திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஊழியராக வேலைபார்த்து ஒய்வு பெற்றவர். வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் வனத்துறையில், புனலூர் என்ற  இடத்தில் வேலைபார்த்து வந்தார். அவருக்குத் திருமணமாகி பொன்னம்மாள் என்ற மனைவி இருந்தாள். வாஞ்சிநாதனுக்கு ஒரு பெண் குழந்தை, பிறந்து இறந்துவிட்டது. வாஞ்சிநாதன், அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு மூன்று மாத காலம் எங்கோ சென்றுவிட்டுத்  திரும்பியது, அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை. வாஞ்சிநாதன் இறந்த பிறகுகூட, ஈமக் காரியங்கள் செய்ய அவருடைய தந்தை வரவில்லை.

வாஞ்சிநாதனுக்கு வ.உ.சியின்மீது (வ.உ.சிதம்பரம் பிள்ளை) பக்தியும், பற்றுதலும் இருந்ததது. வ.உ.சிக்குக் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற வேறு பெயர்களும் உண்டு. வ.உ.சி, அவர் தந்தையைப்போல சட்டம் பயின்றுவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் (1903 -1905) காங்கிரஸ்காரர்களான பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய் ஆகியோர் சுதேசி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர்.

ஆங்கிலேயர்களின் பொருள்களை வாங்காமல் புறக்கணித்தால், ஆங்கிலேயர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும். அதனால் பலவீனமடையும் ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *