சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில், சுதேசிப் பொருள்கள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களாகத்தான் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் வ.உ.சி, ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தில், தூத்துக்குடி – கொழும்பு வழித்தடத்துக்கு, ஆங்கிலேயக் கப்பலான British Steam Navigation Company ஏகபோக உரிமை கொண்டாடியது. கப்பல் வர்த்தகம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. அதை முறியடிக்கும் பொருட்டு, வ.உ.சி ஏகப்பட்ட பொருள்செலவில் S.S.Geneli மற்றும் S.S.Lawoe என்ற இரண்டு கப்பல்களை வாங்கினார். Swadeshi Steam Navigation Company என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தூத்துக்குடி – கொழும்பு மார்க்கத்தில் கப்பல்களை இயக்கினார்.
வ.உ.சியின் போட்டியைத் தாங்கமுடியாத ஆங்கிலேய கம்பெனி நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்வதற்கான பயணக் கட்டணத்தைத் தடாலடியாக 16 அனா (ஒரு ரூபாய்) என்று குறைந்தது. போட்டியைச் சமாளிக்க, வ.உ.சியும் தன்னுடைய கப்பல் கட்டணத்தை 8 அனாவாகக் (50 காசு) குறைத்தார். ஆங்கிலேய கம்பெனி இன்னும் ஒருபடி கீழிறங்கி, கப்பல் பயணத்துக்கான கட்டணத்தை மொத்தமாக ரத்து செய்தது. கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இலவச குடை எல்லாம் கொடுத்தது. கேட்கவா வேண்டும் நம் மக்களை. பயணிகள் அனைவரும் ஆங்கிலேய கப்பலிலேயே பயணம் செய்தனர்.
மேலும், அப்பொழுது தூத்துக்குடி சப்கலெக்டராக இருந்த ஆஷ், அவ்வப்போது தன் பங்குக்கு வ.உ.சியின் கப்பல் கம்பெனியின் அலுவலகத்துக்குச் சென்று சோதனை செய்தார். கணக்குவழக்குச் சரியில்லை என்று சொல்லி நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில், வ.உ.சியின் கப்பல்கள் காலியாகத்தான் இலங்கைக்குச் சென்றுவந்தன. விளைவு, வ.உ.சியின் கப்பல் கம்பெனி விரைவிலேயே திவாலானது. இதனால் வ.உ.சிக்குப் பெருத்த நஷ்டம். இதில் கொடுமையான விஷயம், ஆங்கிலேய கம்பெனியே, வ.உ.சியின் இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் எடுத்தது.
வ.உ.சி தன்னுடைய முயற்சியில் தளரவில்லை. தன்னுடைய போராட்டத்தின் ஒரு கட்டமாக, தூத்துக்குடியில் கோரல் மில்ஸ் கம்பெனியில் (ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த ஏ அண்ட் எஃப் கம்பெனிதான் இந்த நூற்பாலையையும் நிர்வகித்து வந்தது) வேலை பார்த்த ஊழியர்களை ஒன்று திரட்டி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தீமைகளை விளக்கினார். வ.உ.சியுடன், சுப்பிரமணிய சிவாவும் போராட்டத்தில் தோள் கொடுத்தார். (சுப்பிரமணிய சிவா, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் பிறந்தார். சுப்பிரமணிய சிவா ஒரு தேச பக்தர், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும்கூட. இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தியதற்காக, பல முறை சிறை சென்றிருக்கிறார். தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சிறைக்குச் சென்ற முதல் தமிழர், இவர்தான். சிறையில் இவருக்குத் தொழுநோய் தொற்றிக்கொண்டது. தொழுநோயால் பாதிக்கப்பட்டதால் இவர் ரயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டார். மனம் தளராத சிவா, பல ஆயிரம் மைல்கள் கால்நடையாகவே சென்று ஆங்கிலேயருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். இதனால் இவர் உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி மிகவும் வேதனைப்பட்டார்).
மில் ஊழியர்களும், ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராகப் பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்கினர். ஆஷ் துரை தொழிலாளிகளையும், முதலாளிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையின்போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு முதலாளிகள் தள்ளப்பட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் அடைந்த வெற்றி, ஆஷ் துரையை உறுத்திக்கொண்டே இருந்தது. இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த வ.உ.சிமீது கடும் கோபத்தில் இருந்தார், ஆஷ் துரை. தகுந்த சமயத்துக்காகக் காத்திருந்தார்.
பிபின் சந்திர பால், சுதந்தரப் போராட்ட வீரர், சுதேசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட முடிவெடுத்தது, தூத்துக்குடி சுதேசி இயக்கம். ஆஷ் துரை வ.உ.சியையும், சுப்பிரமணிய சிவாவையும் கைது செய்தார். இதனால் திருநெல்வேலி ஜில்லா முழுவதும் கலவரம். கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் ஆஷ் துரை. மற்ற மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
வ.உ.சி மீதும், சுப்பிரமணிய சிவா மீதும் தேசத் துரோகம் செய்ததாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவை அனைத்துக்கும் பின்புலத்திலிருந்து ஆஷ் துரை செயல்பட்டார். வழக்கு விசாரிக்கப்பட்டு, வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் வாஞ்சிநாதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அந்தச் சமயத்தில்தான் வாஞ்சிநாதனுக்கு, தன்னுடைய மைத்துனன் சங்கரகிருஷ்ணன் மூலமாக நீலகண்ட பிரம்மச்சாரியின் அறிமுகம் கிடைத்தது. 1910ம் வருட வாக்கில், நீலகண்ட பிரம்மச்சாரி தென்தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இளைஞர்களைச் சந்தித்தார். வெள்ளைக்காரர்களை இந்தியாவைவிட்டு விரட்டவேண்டும் என்று பிரசாரம் செய்தார். போராளிக் குழுக்களைத் தயார்படுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரியால் ஈர்க்கப்பட்டு, தன்னையும் போராட்டக் குழுவில் இணைத்துக்கொண்டார் வாஞ்சிநாதன். குழுவில் இடம்பெற்றவர்கள் ரகசியமாக சந்தித்துக்கொண்டனர்.
நீலகண்ட பிரம்மச்சாரியின் போராட்டக் குழுவில் இடம் பெற்றிருந்த ஆறுமுகப்பிள்ளை நீதிமன்றத்தில் பின்வருமாறு சாட்சி சொன்னார்:
‘போராட்டக்காரர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் காளியின் படம் மாட்டப்பட்டிருக்கும். விபூதி, குங்குமம், பூ ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். குழுவில் இடம்பெற்றிருக்கும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வரிசையாக உட்கார்ந்திருப்போம். நீலகண்ட பிரம்மச்சாரி சற்றுத் தொலைவில் உட்கார்ந்து காகிதங்களில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். காகிதத்தின் தலைப்பில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் குங்குமத்தைத் தண்ணீரில் கரைப்போம். பின்னர், நீலகண்ட பிரம்மச்சாரி எழுதி வைத்திருந்த காகிதத்தில் நாங்கள் ஒவ்வொருவராக குங்குமத் தண்ணீரைத் தெளிப்போம். காகிதத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர்தான் ஆங்கிலேயர்களின் ரத்தம். குங்குமம் கலந்த தண்ணீரைப் பருகுவோம். வெள்ளைக்காரர்களின் ரத்தத்தைக் குடித்ததாக அர்த்தம். அனைத்து வெள்ளைக்காரர்களையும் கொல்வோம் என்று உறுதி பூணுவோம். இந்தக் காரியத்துக்காக எங்களுடைய உயிர், உடைமை அனைத்தையும் தியாகம் செய்வோம் என்று சத்தியப் பிரமாணம் செய்வோம். குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர்கள் உண்டு. புனைப்பெயர்களை வைத்துதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வது வழக்கம். வந்தே மாதரம் என்று எழுதப்பட்ட காகிதத்தில் நாங்கள் எங்களுடைய கைவிரல்களைக் கீரி, அதிலிருந்து வெளிப்படும் ரத்தத்தைக் கொண்டு எங்களுடைய புனைப்பெயருக்கு எதிராக கையொப்பம் இடுவோம்.’
வாஞ்சிநாதன், மூன்று மாதம் அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு புதுச்சேரியில் வி.வி.எஸ்.ஐயரைச் சந்தித்தார். புதுச்சேரியில் பாரத மாதா என்ற அமைப்பைத் திறந்திருந்தார் வி.வி.எஸ் ஐயர். இந்த அமைப்பு சாவர்கர் ஆரம்பித்த அபினவ் பாரத் என்ற அமைப்பின் கிளையாகச் செயல்பட்டது. வாஞ்சிநாதன், பாரத மாதா அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புதுச்சேரியிலும், பரோடாவிலும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார். பின்னர், ஊருக்குத் திரும்பினார்.
திருநெல்வேலிக்கு வந்த வாஞ்சிநாதன், தன்னுடைய நண்பரான சோமசுந்தரப் பிள்ளையிடம் ஆஷ் துரையைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அதை நிரூபிக்கும் பொருட்டு, சோமசுந்தர பிள்ளையின் சாட்சியம் நீதிமன்றத்தில் இவ்வாறு பதிவாகியது.
‘ஆங்கிலேய ஆட்சி இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியை நீக்கவேண்டுமென்றால், இந்தியாவிலிருக்கும் அனைத்து ஆங்கிலேயர்களும் கொல்லப்படவேண்டும். அதற்கு முன்மாதிரியாக ஆஷ் கொல்லப்படவேண்டும். ஏனென்றால் அவன்தான் ஜில்லா கலெக்டராக இருந்து, சுதந்தரப் போராட்ட வீரரான வ.உ.சி தோற்றுவித்த சுதேசி கப்பல் கம்பெனியை மூடச்செய்தவன் என்று வாஞ்சிநாதன் என்னிடம் தெரிவித்தான்.’
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நீலகண்ட பிரம்மச்சாரி சார்பாக அலிபி (alibi) – வேறிட வாதத்தை முன்வைத்தனர். அதாவது, வாஞ்சிநாதனை நீலகண்ட பிரம்மச்சாரி செங்கோட்டையில் சந்தித்தாகச் சொல்வது தவறு, நீலகண்ட பிரம்மச்சாரி அந்தச் சமயத்தில் அங்கு இல்லை, வேறொரு ஊரில் இருந்தார் என்று வாதிட்டார்கள். மேலும், ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் காவல் துறையின் கட்டாயத்தின் பேரில்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்கிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்தனர். குற்றத்துக்கு உடந்தையாக (Accomplice) இருந்தவர்களின் சாட்சியங்களை வைத்து மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பது தவறு. குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களைத் தவிர, அந்தச் சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்தும் (Corroborate) விதமாக தனிப்பட்ட சாட்சியங்கள் இருந்தால் ஒழிய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படமாட்டார்கள் என்று, இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 114bயைக் காட்டி குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அதாவது, ஆறுமுகப் பிள்ளையும், சோமசுந்தரப் பிள்ளையும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று காவல் துறை குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் (Approver), அவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையின் தூண்டுதலாலும், கட்டாயத்தினாலுமே ஆறுமுகப் பிள்ளையும், சோமசுந்தரப் பிள்ளையும் அப்ரூவராக மாறியிருக்கிறார்கள். அவர்களது சாட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. எனவே, அவர்களது சாட்சியங்களை நிராகரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அரசுத் தரப்பில், இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 133, மேற்கோள் காட்டப்பட்டது. இந்தப் பிரிவின்படி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியின் பேரில் மட்டுமே (அந்தச் சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்த வேறு சாட்சியங்கள் இல்லாத சமயத்தில்கூட) ஏனைய குற்றவாளிகளைத் தண்டித்தால், அந்தத் தண்டனை செல்லாது என்று சொல்லமுடியாது என்று வாதாடினார்கள். மேலும், அப்ரூவர் சாட்சியங்கள் இல்லாமலே, மற்ற சாட்சியங்கள் மூலமாகவே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று வாதாடப்பட்டது.
வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பிறகு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. நீதிபதி சர் அர்னால்ட் வைட்டும், நீதிபதி அய்லிங்கும் சேர்ந்து ஒரு தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி சங்கரன் நாயர் தனியே தன் தீர்ப்பை வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயரின் தீர்ப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் தன்னுடைய தீர்ப்பில், இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றைப் பற்றி அலசி ஆராய்ந்திருந்தார். இவருடைய இந்தத் தீர்ப்பு, பின்னர் ‘Role of Students in Freedom Movement with a Special Referencet to Madras Presidency’ என்ற தலைப்பில் புத்தகமாகக்கூட வெளிவந்தது. மேலும் நீதிபதி, தன்னுடைய தீர்ப்பில், பாரதியாரின் ‘என்று தனியும் இந்தச் சுதந்தரத் தாகம்’ என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயர் தன்னுடைய தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் கொலைக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஆனால், அரசாங்கத்துக்கு எதிராக நீலகண்ட பிரம்மச்சாரி மட்டும் செயல்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
நீதிபதிகளின் பெரும்பான்மையான (Majority) தீர்ப்பின்படி, நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கர கிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய குற்றவாளிகளுக்குக் குறைந்த தண்டனை வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் தரப்பில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் விசாரணை, மூன்று நீதிபதிகள் முன்னர் நடைபெற்றதால், மறு ஆய்வு மனு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் பின்வருமாறு, 1) சர் ரால்ப் பென்சன் 2) ஜான் வாலஸ் 3) மில்லர் 4) அப்துல் ரஹிம் மற்றும் 5) பி.ஆர்.சுந்தர ஐயர்.
மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதிகளில் சர் ரால்ப் பென்சன், ஜான் வாலஸ் மற்றும் மில்லர் ஆகிய மூவரும், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், சரியான தீர்ப்பைத்தான் வெளியிட்டிருக்கிறது, அதனால் அதில் மறுஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர். நீதிபதி அப்துல் ரஹிம் தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை, எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார். நீதிபதி சுந்தர ஐயரோ தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்ற சந்தேகத்தைத் தெரிவித்தார். பெரும்பான்மையான தீர்ப்பின்படி, குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை, உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த முதல் மற்றும் கடைசி அரசியல் கொலை இதுவே. கொலை நடந்து, சுமார் 100 வருடங்கள் ஓடிவிட்டன. கால ஓட்டத்தில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் கரைந்து போய்விட்டனர்.
வ.உ.சி – கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சியை, செக்கு இழுக்க வைத்தனர், ஆங்கிலேயர்கள். கீழ் நீதிமன்றத்தில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம், வ.உ.சிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் குறைத்தது. வ.உ.சி, 1912ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். கப்பல் கம்பெனியால் ஏற்பட்ட நஷ்டம் போக, அவர்மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கை நடத்துவதற்காக தன்னுடைய அனைத்துச் சொத்துகளையும் இழந்து மிகுந்த கடனுக்கு ஆட்பட்டார். தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டதால், அவருடைய வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, திருநெல்வேலியில் வ.உ.சியின் வழக்கை விசாரித்த நீதிபதி வாலஸ், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன பிறகு, வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமத்தை, அவர் திரும்பப் பெறும்படி செய்தார். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வ.உ.சி தன்னுடைய மகன்களில் ஒருவருக்கு வல்லேஸ்வரன் என்று பெயரிட்டார்.
இறுதிக் காலத்தை கோவில்பட்டியில் மிகவும் கஷ்டத்தில் கழித்தார். வ.உ.சி ஆசைப்பட்டபடி, அவருடைய உயிர், தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் 1936ம் ஆண்டு பிரிந்தது. வ.உ.சி, திருக்குறளுக்கு உரை எழுதினார், தொல்காப்பியர் இயற்றிய தமிழ் இலக்கணத்தைத் தொகுத்துப் பதிப்பித்தார். தன்னுடைய சுயசரிதையை எழுதினார். ஜேம்ஸ் அலனின் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். மெய்யறிவு, மெய்யாரம் என்று இவர் எழுதிய புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பல நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
சுப்பிரமணிய சிவா – தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சிவாவுக்கு, யாரும் உதவி செய்ய மறுத்தனர். காரணம். அவர் ஆங்கிலேய அரசை பகைத்துக் கொண்டதுதான். தொழுநோயால் பாதிக்கப்பட்ட அவர், 1925ம் ஆண்டு தன்னுடைய 40வது வயதில் உயிரிழந்தார்.
சுப்பிரமணிய பாரதி – புதுச்சேரியில் 10 ஆண்டுகள் இருந்த பிறகு, 1918ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட கடலூரில் நுழையும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஆங்கிலேய அரசு அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவர் சென்னைக்கு வந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானைக்கு, பாரதி உணவு வழங்கும்போது, அந்த யானை அவரைத் தாக்கியது. இதனால் காயம் அடைந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, 1921ம் ஆண்டு தன்னுடைய 38வது வயதில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் வெறும் பதினான்கு பேர்தான் கலந்து கொண்டனர். பாரதியார், காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதி, மக்கள் மனதில் இன்றளவும் மகாகவியாக வாழ்ந்து வருகிறார்.
வி.வி.எஸ் ஐயர் – உலக யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, 1921ம் ஆண்டில், சென்னைக்குத் திரும்பினார் வி.வி.எஸ் ஐயர். தேசபக்தன் என்ற பத்திரிகையில் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1925ம் ஆண்டு பாபநாச அருவியில் குளிக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இறக்கும்பொழுது அவருக்கு வயது, 44. கம்பராமாயணத்தைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார். மேலும், அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நீலகண்ட பிரம்மச்சாரி – ஆஷ் கொலை வழக்கில், நீதிமன்றம் தண்டனை விதித்தபோது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919ம் ஆண்டு விடுதலையானார். விடுதலையான பிறகும்கூட, அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922ம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 8 ஆண்டுகள் கழிந்து 1930ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர், உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936ம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்துத் தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரி, சத்குரு ஒம்கார் என்று அழைக்கப்பட்டார். அவர் தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.
ஆஷ் துரையின் மனைவி மேரி லில்லியன் பேட்டர்சன் – கணவர் இறந்த பிறகு, தன்னுடைய தாய்நாடான அயர்லாந்துக்குச் சென்றுவிட்டார். மறுமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அரசாங்கம் கொடுத்த ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். 1954ம் ஆண்டு உயிரிழந்தார். ஆஷின் மூத்த மகன், இந்தியாவில் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி, 1947ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இரண்டாம் மகன், இரண்டாம் உலக யுத்தத்தில் பங்குகொண்டு அதில் உயிரிழந்தார். மகள்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஆஷ் துரைக்கு நினைவுச் சின்னங்கள் – இந்தியாவில் ஆஷ் துரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட மிதவாதிகள் மற்றும் அரசாங்கத்துக்குப் பயந்தவர்கள், நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறோம் என்று தங்கள் விசுவாசத்தைக் காட்ட, ஆஷ் துரையுடன் பணிபுரிந்த மற்ற ஆங்கிலேய அலுவலர்களுடன் சேர்ந்து, இரண்டு ஞாபகச் சின்னங்களை எழுப்பினர். பாளையங்கோட்டையில் ஆஷ் துரை எங்கு அடக்கம் செய்யப்பட்டாரோ, அங்கு ஒரு கல்லறைச் சிலையையும், தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தில், எண்கோண வடிவம் கொண்ட ஒரு மணிமண்டபத்தையும் நிறுவினர். மணிமண்டபம் எழுப்ப அந்தக் காலத்திலேயே ரூபாய் 3,002 செலவாகியது. அந்தச் செலவை 38 இந்தியர்கள் ஏற்றுக்கொண்டனர். அதில் சிலர் வ.உ.சிக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் சாட்சியம்வேறு அளித்தவர்கள்.
எனில், வாஞ்சிநாதனுக்குச் சிலை? மணியாச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ‘வாஞ்சி மணியாச்சி சந்திப்பு’ என்று அமைக்கப்பட்ட பெயர் பலகை. வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள், 1967ம் ஆண்டு உயிரிழந்ததாக ஒரு தகவல் உண்டு.
இன்று, வாஞ்சிநாதனின் பெயர் பலருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்தவர்களுக்கு மறந்து போயிருக்கும். 100 வருடங்களுக்கு முன்னர் வாஞ்சிநாதன் செய்த செயலின் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியாது. வாஞ்சிநாதன் நிகழ்த்திக் காட்டிய அந்தச் செயலை, ‘Indian Home Rule Society’ இயக்கத்தைத் தோற்றுவித்த மேடம் காமா தன்னுடைய பத்திரிகையான வந்தேமாதிரத்தில் பின்வருமாறு நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ‘அலங்கரிக்கப்பட்ட இந்திய அடிமைகள், லண்டன் நகரத்தின் தெருக்களில் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில், சர்க்கஸ் நடனம் நடத்தி, தங்களுடைய அடிமைத்தனத்தை வெளிப்படுத்திய வேளையில், நம் தேசத்தின் இரண்டு இளைஞர்கள் மட்டும் தங்களுடைய தீர செயலால், இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உணர்த்தியிருக்கின்றனர். வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்தத் தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது.’
0