12 வயது சிறுவன். அவனால் தன்னைச் சுற்றிக் கிடந்த சடலங்களைக் கண்டு சகிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் குத்துயிரும், கொலையுயிருமாகக் கிடந்தார்கள்.
ஊரே விழாக்கோலம் பூண்ட அந்த நன்னாளில், இப்படி ஒரு சோதனையா? பைசாகி என்ற அறுவடைத் திருநாள் அன்று. திருநாளைக் கொண்டாடும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடியிருந்தனர். அப்படி ஒரு பொது இடமான ஜாலியன் வாலாபாக் பூங்காவில்தான், சரித்திரத்தில் இரத்தக் கறை படிந்த அந்த சம்பவம் நடைபெற்றிருந்தது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருந்த சட்டத்தை எதிர்த்து போராடியதால் சத்யா பால் மற்றும் சைபுதின் கிச்சுலு ஆகியோர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதை எதிர்க்கும் விதமாக ஜாலியன் வாலாபாக் பூங்காவில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தை நடத்த பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்தத் தடை பெரிய அளவில் மக்களுக்கு தெரியவில்லை. பெருவாரியான பொதுமக்கள் பொற்கோவிலுக்குச் சென்றுவிட்டு ஜாலியன் வாலாபாக் வழியாகச் சென்றனர். அங்கு கூடியிருந்த மக்களில் பெருவாரியானவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வரவில்லை. நிராயுதபாணியான அப்பாவி மக்கள் அதிகமான எண்ணிக்கையில் (20000 இருந்து 25000 வரை) கூடியிருந்தனர்.
இவையனைத்தையும் அறிந்திருந்த ஆங்கிலேய அதிகாரி கர்னல் டயர், ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளுடன் வந்து ஜாலியன் வாலாபாக்கை முற்றுகையிட்டான். பூங்காவின் நுழைவுவாயில்கள் அனைத்தையும் அடைத்துவிட்டான். பொது மக்களை கலைந்து போகச் சொல்லி எந்த உத்தரவும் கொடுக்காமல், முன்னறிவிப்பு ஏதுமின்றி பொதுமக்களை கண்டபடி சுடும்படி தன்னுடைய வீரர்களுக்கு உத்தரவிட்டான்.
துப்பாக்கிகளிலிருந்தும், தானியிங்கி துப்பாக்கிகளிலிருந்தும் குண்டுகள் சரமாரியாகப் பாய்ந்தன. என்ன நடக்கிறது என்று சற்றும் உணர்ந்திடாத அப்பாவி மக்களின் உடல்களை துளைத்துச் சென்றன தோட்டாக்கள். மக்கள் பயத்திலும், பீதியிலும் அங்கும் இங்கும் ஓடினர். அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு வழி ஏதும் இல்லாமல் அனைத்து வழிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. 10 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவரை ஏறி குதிக்க முற்பட்டவர்களையும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தன. பூங்காவின் நடுவே ஒரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றில் குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து குதித்தவர்கள் ஒருவரின் மேல் ஒருவராக விழுந்ததில் பலர் உயிர் இழந்தனர். தோட்டாக்களிடமிருந்து தப்பித்தவர்கள் தள்ளு முள்ளுக்குள் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டு இறந்தனர். சுமார் 1500 பேர் இறந்து கிடந்தனர். அந்த இடமே இரத்தக் களரியாகக் கிடந்தது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட 12 வயது சிறுவன் ஜாலியன் வாலாபாக்கிற்கு விரைந்தோடிச் சென்று பார்த்தான். அங்கு அவன் கண்டக் காட்சிகள் அவன் மனதைப் பதற வைத்தன. அச்சம்பவம் அவனை ஆட்கொள்ளாத் துயரத்தில் ஆழ்த்தியது. கண்கள் கலங்கினான். மனம் வெதும்பினான். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக, அங்கு கிடந்த ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்தான், அதில் இரத்தம் தோய்ந்த மண்ணை நிரப்பிக்கொண்டான். நேராக வீடு சென்றான். அங்கு அவன் யாரிடமும் பேசவில்லை. வைராக்கியம் பூண்டவனாக அந்த இரத்த மண் அடங்கிய கண்ணாடிக் குடுவையையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘என் நாட்டு மக்களுக்கு இவ்வளவு அநீதி இழைத்த இந்த ஆங்கிலேயர்களை சும்மா விடமாட்டேன். இந்த சம்பவத்திற்காக அவர்களை பழி தீர்த்தே தீருவேன். அதுவரை நான் ஒயமாட்டேன்’ என்று வீர சபதம் ஏற்றான் அந்த 12 வயது பாலகன் பகத் சிங்.
பள்ளிப்படிப்பை முடித்த பகத் சிங், கல்லூரியில் சேர்ந்தவுடன் தன்னுடன் ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரை சேர்த்துக்கொண்டான். அவர்களை வைத்து நவ்ஜவான் பாரத சபை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டான். ஹிந்துஸ்தான் குடியுரிமைச் சங்கம் என்ற தீவிரவாத அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். இந்த அமைப்பில் செயல்பட்ட முக்கிய சுதந்திரப் போராளிகள் – இராம் பிரசாத் பிஸ்மில், சந்திர சேகர ஆசாத் மற்றும் அஸஃபுல்லா கான்.
இதற்கிடையில் பாரதத்தின் அரசியல் நிலை குறித்து அறிய சைமன் கமிஷன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓர் இந்தியர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தினால், லாலா லஜபதி ராய் அவர்களின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை அடக்குவதற்காக போலீஸ் தடியடி நடத்தியது. இந்த தடியடியில், லஜபதி ராய் தீவிரமாக தாக்கப்பட்டு பின்னர் மாரடைப்பில் இறந்துபோனார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காரணமான போலிஸ் சூப்பரிண்டன்ட் ஸ்காட்டை பழி வாங்கும் விதமாக பகத் சிங் மற்றும் அவனது நண்பர்களான இராஜ் குரு மற்றும் சுக்தேவ் திட்டம் தீட்டினர். ஆனால் துரதிஷ்டவசமாக ஸ்காட்டிற்கு பதிலாக துணை சூப்பரிண்டன்ட் சாண்டர்ஸை கொல்ல வேண்டியதாயிற்று. சாண்டர்ஸை காப்பாற்ற வந்த தலைமைக் காவலாளி சானன் சிங்கும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாண்டர்ஸ் கொலை வழக்கின் குற்றவாளிகளைப் பிடிக்க போலிஸ் லாகூரில் சல்லடை போட்டுத் தேடியது. எனவே பகத் சிங்கும், இராஜ் குருவும் லாகூரை விட்டு கல்கத்தாவிற்கு தப்பித்துச் செல்லத் தீர்மானித்தனர். இதில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் ஹிந்துஸ்தான் குடியுரிமை இயக்கைத்தைச் சேர்ந்த ஒரு பெண் போராளியான துர்காவதி தேவி (பகவதி சரண் வோரா என்ற போராளியின் மனைவி). இவர்கள் மூவரும் சந்தேகம் வராத வகையில் மாறுவேடம் பூண்டு, இரயிலில் லாகூரை விட்டு ஹவுரா வந்து சேர்ந்தனர். பின்னர் சிறிது நாட்களில் பகத் சிங் லாகூருக்கே திரும்பி வந்துவிட்டான்.
பஞ்சாப் மாகாண சட்ட சபையில் இந்தியர்களுக்கு எதிராக மேலும் சில சட்டங்களை ஆங்கிலேய அரசாங்கம் கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகத் சிங் மற்றும் அவனது கூட்டாளி பத்கேஷ்வர் தத் இருவரும், சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது பார்வையாளர் கூண்டிலிருந்து கையெறி குண்டுகளை வீசி எரிந்தனர். பின்னர் இன்குலாப் சிந்தாபாத் என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை சட்ட சபையில் வீசினர்.
பகத் சிங் மற்றும் பத்கேஷ்வர் தத் கையெறி குண்டுகளை சட்டசபையில் வீசி எரிந்ததன் நோக்கம், யாருக்கும் உயிரிழப்பையோ, சேதத்தையோ ஏற்படுத்துவது அன்று. குண்டு எரியப்பட்டவுடன் ஏற்பட்ட சலசலப்பிலும், கூச்சலிலும் அவர்கள் இருவரும் தப்பித்து சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை, மாறாக தாமாக முன்வந்து போலிசாரிடம் சரணடைந்தனர். பகத் சிங் மற்றும் தத்தின் மீது கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆசாஃப் அலி குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆனார். அரசு தரப்பு வழக்கறிஞராக ராய் பகதூர் சூரியநாராயணன் ஆஜரானார். வழக்கை விசாரித்தவர் ஆங்கில நீதிபதி லியோனார்ட் மிடில்டன். அரசு தரப்பின் முக்கிய சாட்சி சார்ஜெண்ட் டெர்ரி. பகத் சிங் கைது செய்யப்படும்போது அவனிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று சாட்சியமளித்தார். ஆனால் அது உண்மையல்ல. பகத் சிங் சரணடையும் போது, தானாக முன்வந்து தன் கைவசம் இருந்த துப்பாக்கியை சார்ஜெண்டிடம் ஒப்படைத்தார். ஏனைய 11 சாட்சிகளும் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் குண்டு எரிவதை தங்கள் கண்களால் பார்த்தோம் என்று சாட்சி கூறினர். ஆனால் உண்மையில் குண்டு எரிந்த சம்பவம் திடீர் என்று யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தது. குற்றவாளிகள் தரப்பில் குறைந்த சக்தி கொண்ட குண்டு மட்டுமே வீசப்பட்டது என்றும், கவன ஈர்ப்புக்காகவே குண்டு வீசப்பட்டது எனவும், யாரையும் கொலை செய்யும் நோக்கத்தில் அல்ல என்றும் வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்தார். பகத் சிங் மற்றும் தத்தை நாடு கடத்த உத்தரவிட்டார்.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் குடியுரிமைச் சங்கத்தின் குண்டு தயார் செய்யும் தொழிற்சாலையை மோப்பம் பிடித்து கண்டறிந்த காவல்துறை, அந்த இயக்கத்தைச் சேர்ந்த முக்கியப் போராளிகள் (சுக்தேவ் உட்பட) அனைவரையும் கைது செய்தது. விசாரணையின்போது சாண்டர்ஸ், தலைமைக் காவலாளி கொலையில் ஈடுபட்டது பகத் சிங், இராஜ் குரு மற்றும் சுக்தேவ் என்று தெரியவந்தது. இதன் காரணமாக பகத் சிங் மீண்டும் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையிலிருந்து மியான்வாளி (இன்று பாக்கிஸ்தானில் உள்ளது) சிறைக்கு மாற்றப்பட்டான். பகத் சிங்கின் மீது விதிக்கப்பட்ட நாடுகடத்தப்படல் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சாண்டர்ஸ் மற்றும் தலைமைக் காவலாளியின் கொலை ‘லாகூர் சதி வழக்கு’ என்ற பெயரில் மேலும் விசாரிக்கப்பட்டது. காவல்துறை சுமார் 600 சாட்சிகளை சேகரித்தனர். போராளிகளில் இருவரான ஜெய் கோபால் மற்றும் ஹன்ஸ் ராஜ் இருவரும் அரசு தரப்பு அப்ரூவராக மாறினார்கள்.
(தொடரும்)