Skip to content
Home » ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

சிறையில் பகத் சிங் மற்றும் ஏனைய இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும், ஆங்கிலேயக் கைதிகளுக்கு பிரத்யேக உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை, சுகாதாரம் என அனைத்திலும் இந்தியக் கைதிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. இந்தியக் கைதிகள் சிறையில் மிகவும் மோசமாகவும், கொடுமையாகவும் நடத்தப்பட்டனர். பகத் சிங் போன்ற அரசியல் குற்றம் புரிந்தவர்களுக்கு, சிறை விதிகளுக்கு மாறாக கடுமையான வேலைகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தையும் எதிர்க்கும் விதமாக பகத் சிங் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டான்.

பகத் சிங் சிறையில் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதம், பாரதம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜவாஹர்லால் நேரு, பகத் சிங்கை சிறையில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். முகமது அலி ஜின்னா, பகத் சிங்கின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தந்து பேசினார். பகத் சிங்குடன் சேர்ந்து அவன் கூட்டாளிகள் பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். போராளிகளின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்காக காவலர்கள் பல யுக்திகளை கையாண்டனர். விதவிதமான உணவுப் பொருட்களை சிறையினுள் வைத்தனர். தண்ணீருக்கு பதிலாக குடங்களில் பாலை வைத்தனர். இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுறவே போராளிகளுக்கு வலுக்கட்டாயமாக வாயில் உணவைப் புகுத்தினர். ஆனால் போராளிகளின் மன உறுதியை அவர்களால் அசைத்துப் பார்க்க முடியவில்லை.

போராட்ட இளைஞர்களின் மன உறுதியையும், தியாகத்தையும் கண்டு தேசம் முழுவதும் மக்கள் சிலாகித்தனர். ஆங்கிலேயர்களின் கெடுபிடியான அரசாங்கத்தின்மீது மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்தது என்பதை உணர்ந்த வைசிராய் இர்வின், பகத் சிங் மற்றும் அவனது கூட்டாளிகளின் மீது தொடுக்கப்பட்ட சாண்டர்ஸன் கொலை வழக்கு விசாரணையை முடுக்கி விட்டார். உண்ணாவிரதம் இருந்ததால், பகத் சிங்கின் உடல் நிலை மோசமாக இருந்தது. அதனால், விசாரணைக்காக பகத் சிங்கை ஸ்ட்ரெட்சரில்தான் நீதிமன்றத்திற்கு தூக்கி வந்தனர்.

வழக்கு விசாரணை தொடர்ந்தது. உண்ணாவிரதமும்தான். உண்ணாவிரதத்தில் ஜதின் தாஸ் என்ற சுதந்திரப் போராளி 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தார். இது நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் அரசாங்கம் போராளிகளின் பல கோரிக்கைகளை ஏற்றது. ஆனால் சுதந்திரப் போராளிகளை அரசியல் கைதிகளாக கருத மறுத்துவிட்டது. பகத் சிங் தன் உண்ணாவிரதத்தை மேலும் தொடர்ந்தான். காங்கிரஸ் கட்சியும், பகத் சிங்கின் தந்தையும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டி கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்கி பகத் சிங் தன்னுடைய உண்ணாவிரதத்தை 116 வது நாளில் கைவிட்டான்.

பின்னர் வழக்கு விசாரணையில் கவனம் செலுத்தினான் பகத் சிங்.  அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்டன் நோட் ஆஜரானார். குற்றவாளிகள் சார்பில் 8 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். வழக்கு விசாரணை, நீதிபதி ராய்சாஹிப் பண்டிட் ஸ்ரீ கிருஷ்ணன் முன் நடந்தது. விசாரணையின்போது, அப்ரூவரான ஜெய் கோபால் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியமளித்தான். இதைப் பொறுக்கமாட்டாது, 27 குற்றவாளிகளில் இளையவனான பிரேம் தத் வர்மா ஜெய்கோபால்மீது செருப்பைக் கழட்டி வீசினான். இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக, நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவரது கைகளுக்கும் விலங்கிட உத்தரவிட்டது. பகத் சிங்கும் கூட்டாளிகளும் தங்கள் கைகளுக்கு விலங்கிட ஒத்துழைக்கவில்லை. இதனால் காவல் துறை அவர்கள்மீது தடியடி நடத்தி கொடூரத் தாக்குதல் புரிந்தது. இதன் காரணமாக போராளிகள் அனைவரும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர மறுத்துவிட்டனர்.

வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வைசிராய் இர்வின், சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவினார்.  இதற்காக Lahore Conspiracy Case Ordinance என்ற பிரத்யேக சட்டம், அரசால் கொண்டுவரப்பட்டது.  குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த வழக்கு சிறப்பு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தில் மூன்று நீதிபதிகளின் முன்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி கோல்ட் ஸ்ட்ரீம் தலைமை நீதிபதியாக செயல்பட்டார். உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஹில்டன் மற்றும் ஆகா ஹைதர் தீர்ப்பாயத்தின் இதர உறுப்பினர்கள். விசாரணை பூஞ்ச் இல்லத்தில் 09.05.1930 அன்று தொடங்கியது. விசாரணை தொடங்கிய ஒரு மாதத்திலேயே தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மாற்றப்பட்டனர். நீதிபதி ஹில்டன் தலைமை பொறுப்பு வகித்தார், அவருக்குத் துணையாக நீதிபதிகள் டாப் மற்றும் அப்துல் காதர் செயல்பட்டனர்.

சிறப்பு தீர்ப்பாயத்தின் சிறப்பு என்னவென்றால் குற்றவாளிகள் இல்லாமலேயே வழக்கின் விசாரணையை நடத்தலாம். தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்மீது மேல் முறையீடு செய்யமுடியாது. இந்த சட்ட விரோதமான தீர்ப்பாயத்தை ரத்து செய்யவேண்டும் என்று லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு தீர்ப்பாயம் அடிப்படை சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும், குற்றவியல் நடைமுறை விதிகளை சுருக்கும் விதமாக தீர்ப்பாயங்களைக் கொண்டுவர முடியாது எனவும் வாதிடப்பட்டது. 1915ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட Government of India Act, சட்டவிதிப்படி சட்டம் ஓழுங்கு சீர்கெட்ட நிலையில் மட்டுமே, வைசிராய் அவர்களால் சிறப்பு தீர்ப்பாயத்தை கொண்டுவர முடியும், இப்போது அது போன்ற அசாதாரண சூழ்நிலை இல்லை எனவும், எனவே சிறப்பு தீர்ப்பாயம் செல்லாது எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்தப்படியே லாகூர் நீதிமன்றம் மேற்சொன்ன வாதங்களை புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பாயத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

தீர்ப்பாயத்தில் குற்றவாளிகள் இல்லாமலே ‘லாகூர் சதி வழக்கு’ விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு, குற்றவாளிகள் கூட்டுக் கொள்ளை; வங்கிகளில் கொள்ளை அடித்தது; ஆயுதங்களை பதுக்கி வைத்தது; கொலை செய்தது என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. கூண்டில் ஏறி சாட்சி சொன்ன காவல்துறை கண்காணிப்பாளர், தனக்கு இந்த வழக்கு குறித்து எந்த விவரங்களும் தெரியாது எனவும், அரசின் முதன்மைச் செயலாளரின் உத்தரவின் பேரில்தான் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்தார். குற்றவாளிகளில் ஜெய கோபால் மற்றும் ஹன்ஸ் ராஜ் வோராவைத் தவிர மேலும் மூவர் அப்ரூவர்களாக மாறி அரசுக்கு சார்பாக சாட்சியம் அளித்தனர். அப்ரூவர்கள் அளித்த சாட்சியங்களின் பலத்தை வைத்தே அரசு வழக்கைத் தொடர்ந்தது. 05.05.1930 அன்று தொடங்கப்பட்ட விசாரணை 30.09.1930 அன்று முடிவுற்றது. தீர்ப்பாயத்தின் காலம் முடிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னராக 07.10.1930 அன்று 300 பக்கம் அடங்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சாண்டர்ஸைக் கொன்றது பகத் சிங்தான் என ஐயம் திரிபுர நிரூபிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

27 போராளிகளில் பகத் சிங், ராஜ் குரு, சுக்தேவ் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஏனையோர்களுக்கு சிறை தண்டனை. மூன்று பேருக்கு விடுதலை. தீர்ப்பை எதிர்த்து ப்ரிவி கவுன்சிலில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரயோஜனம் இல்லை. பண்டிட் மதன் மோகன் மாளவியா, தூக்கு தண்டனை கைதிகளுக்காக வைசிராயிடம் கருணை மனு தாக்கல் செய்தார். வங்காளத்தில் சிட்டகாங் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு பிடிப்பட்ட குற்றவாளிகள், காந்தியடிகளுக்கு, அவர் தம் செல்வாக்கை பிரிட்டிஷாரிடம் பயன்படுத்தி, பகத் சிங் மற்றும் அவனது கூட்டாளிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கடிதம் அனுப்பினர். காந்தியும் வைசிராய் இர்வினை சந்தித்து பகத் சிங் மற்றும் அவனது கூட்டாளிகள் விடுதலை பற்றி பேசினார். ஆனால் பலனில்லை.

சாண்டர்ஸை கொலை செய்த பிறகு பகத் சிங் மற்றும் ராஜ் குரு தப்பிக்க உதவிய துர்கா தேவி வோராவின் கணவரான பகவதி சரன் வோரா, லாகூர் சதி வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் சிறையிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியாக ஒரு வெடிகுண்டைத் தயார் செய்து கொண்டிருக்கும்போது, துரதிஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடித்து அவர் மாண்டுபோனார்.

இறுதியாக தூக்கு தண்டனைக் கைதிகள் மூவருக்கும், ரகசியமாக தூக்கு நிறைவேற்றப்பட்டது.  தூக்கு தண்டனை நிறைவேற்ற குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே மூவரும் தூக்கில் இடப்பட்டனர். சிறையின் சுவர் உடைக்கப்பட்டு மூவரின் சடலங்களும் இரவு நேரத்தில் ரகசியமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. சட்லஜ் நதிக் கரையோரம், ஆள் அரவமற்ற நேரத்தில், போராளிகளின் சடலங்கள் கோடரியால் சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு, பின்னர் நதியில் வீசப்பட்டது.

மாவீரன் பகத் சிங் இறக்கும்போது அவனுக்கு வயது 23. பகத் சிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவன். தேசத்தின்மீது அதிகப் பற்று கொண்டவன். தேச மக்களுக்காக அயராது போராடியவன். தீவிர படிப்பாளி. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்புகூட, ‘எனக்கு சிறிது அவகாசம் தாருங்கள், கையிலிருக்கும் புத்தகத்தை வாசித்துவிட்டு வருகிறேன்’ என்று கூறி தூக்கு மேடை ஏறிய மாவீரன்.

தூக்கிலிடப்படுவதற்கு முன் உன்னுடைய வேண்டுகோள் என்ன என்று கேட்டதற்கு ‘என்னைத் தூக்கிலிடாதீர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். காரணம், நான் இறக்கும் போதுகூட என் கால்கள் தாய் மண்ணை விட்டு பிரியக்கூடாது‘ என்று பதிலளித்தான்.

0

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *