ஐ.என்.ஏ வழக்கு நடந்தது 1945ஆம் வருடம். பகதூர் ஷா சாஃபர் வழக்கு முடிந்து, சுமார் 88 ஆண்டுகள் கழித்து ஐ.என்.ஏ வழக்கு நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் நடந்த அரசியல் நிகழ்வுகளை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
1858ஆம் வருடத்துக்குப் பிறகு, இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகள் பிரிட்டிஷ் அரசின் கைவசம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக ஆட்சியில் 17 மாகாணங்கள் இருந்தன. இவை தவிர, பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் 554 ராஜ்ஜியங்கள் (Princely States) இந்திய துணைக் கண்டத்தில் இருந்தன. இந்த ராஜ்ஜியங்களை அதனதன் அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தாலும், இந்த ராஜ்ஜியங்களின் இராணுவம், வெளியுறவுத் துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறை ஆகியவை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்.
சிப்பாய் புரட்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி முறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இரயில் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பை உருவாக்கியது. நீதி பரிபாலனத்துக்கு நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்தியர்கள் கல்வியறிவு பெற கல்லூரிகள் நிறுவப்பட்டன. ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த பிரத்யேக இந்தியன் சிவில் சர்வீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய இராணுவம் சீரமைக்கப்பட்டது.
மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்கள் மீதான அதிருப்தி நீங்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியை இந்தியர்கள் காலனி ஆதிக்கமாகத்தான் பார்த்தனர். பல்வேறு வரிச் சட்டங்கள், அதனால் ஏற்பட்ட வரிச் சுமை, நாட்டில் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சம், தவிர்க்கமுடியாத கொள்ளை நோய்கள், அதனால் ஏற்பட்ட கோடிக்கணக்கான உயிரிழப்புகள், ஆட்சியிலும் இராணுவத்திலும் ஆங்கிலேயர்களுக்கே முன்னுரிமை, இந்திய அரசர்களுக்கு அவமரியாதை, பிரஜைகளின் விருப்பங்களை மதிக்காதது என பல அதிருப்திகளை ஆங்கிலேயர்கள் மீது இந்தியர்கள் கொண்டிருந்தார்கள்.
அதிருப்தியின் விளைவாக மற்றுமொரு புரட்சி உருவானது. இம்முறை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்தது அரசர்களோ, சிப்பாய்களோ அல்ல. சாதாரண இளைஞர்கள்தான். இந்தப் படை உருவாவதற்கும் ஒருவிதத்தில் ஆங்கிலேய அரசுதான் காரணம். ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பாடசாலைகள், கல்விக்கூடங்கள், கல்லூரிகள் இந்திய இளைஞர்களுக்கு உலக நடப்பைத் தெரிவித்தது. கல்வி இளைஞர்களுடைய அறிவை விசாலப்படுத்தியது. எதையும் கண்மூடித்தனமாக நம்பும் மனப்பான்மை மறைந்தது. தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்கும் அணுகுமுறையை ஏற்படுத்தியது. பிரெஞ்சு புரட்சியும், அமெரிக்கப் புரட்சியும் இந்திய இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஐரோப்பிய சரித்திரமும், உலக அரசியல் முறைகளும் இந்தியர்களின் சிந்தனைக்கு தீனி போட்டது. முற்போக்கு சிந்தனைகள் தோன்றின. ஏன் இந்தியா அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும் என்று கேள்வி எழுந்தது.
இந்து மதத்திலும் சீர்திருத்தவாதிகள் தோன்றினர். ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். பிரம்ம சமாஜமும், ஆரிய சமாஜமும் தோற்றுவிக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பெருமையை உலகறிய பறைசாற்றினார், அதே கையோடு இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டிய தீமைகளையும் சாடினார். இந்து மதத்தில் புரையோடிப்போன மூட நம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டன. இந்தியர்களிடம் ஒற்றுமையின்மை, ஜாதிகளால் பாகுபாடு, தீண்டாமை கடைபிடித்தல், சுயநலத் தன்மை, ஏனையவைகளும் இந்தியா அடிமையாக இருப்பதற்கு காரணங்கள் என்று மேடைதோறும் முழக்கங்கள் எழுந்தன.
இந்திய அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய இளைஞர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தகைய போராளிகளின் பெயர் பட்டியல் நீண்ட ஒன்று. அரவிந்த கோஷ், பரின் கோஷ், பூபேந்திரனாத் தத்தா, ராஷ் பிகாரி போஸ், குதிராம் போஸ், பாகா ஜத்தின், எம்.என்.ராய், பிரஃபுல்லா சாக்கி, சூரியா சென், பீனா தாஸ், பீரித்தி லதா வாதேதார், பினய் பாசு, தினேஷ் குப்தா, பாதல் பாசு, கனய் லால் தத்தா, ராம் பிரஸாத் பிஸ்மில், சந்திர சேகர ஆசாத், சச்சிந்திரநாத் சன்யால், அஸஃபுல்லா கான், ரோஷன் சிங், ராஜேந்திர லகரி, ராஜ் குரு, பகத் சிங், சுக்தேவ், பைகுந்த ஷுக்லா, ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, மதன்லால் திங்ரா, உதாம் சிங், ஆனந்த் கன்ஹாரே, நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், செண்பகராமன் பிள்ளை, பிக்காஜி காமா, தாமோதர் சவர்கர். (விடுபட்ட பெயர்கள் ஏராளம்).
மேற்குறிப்பிட்ட இளைஞர்களில் பெரும்பான்மையானோர், போராட்டத்தின்போது கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்பின் தூக்கிலிடப்பட்டனர். ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் சித்திரவதைக்கு ஆட்பட்ட போராளிகளும் ஏராளம். மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளில் சில – அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு, கக்கோரி இரயில் கொள்ளை வழக்கு, சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் வழக்கு, டில்லி- லாகூர் சதி வழக்கு, மத்திய நாடாளுமன்ற குண்டு வெடிப்பு வழக்கு, இந்து-ஜெர்மனி சதி வழக்கு (காதர் கலகம்).
ஒருபுறம் இளைஞர்கள் புரட்சியில் இறங்கிப் போராட, மறுபுறம் அனுபவசாலிகள், வழக்கறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர். அந்த காலகட்டத்தில் இருந்த பெரிய அரசியல் கட்சி காங்கிரஸ். 1885ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருந்தது. அப்போது சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்கள், செல்வந்தர்கள் மட்டுமே காங்கிரஸில் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களைப் பொருத்தவரை காங்கிரஸ் ஒரு விவாத மேடை, அவ்வளவுதான். அதைத் தவிர, காங்கிரஸ்காரர்களுக்கு ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டுமென்றால் அரசாங்கத்திடம் மனு போடுவார்கள். காங்கிரஸின் செயல்பாடு அவ்வளவே. வெகுஜன மக்களுக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்தது.
கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர் திலக், அன்னிபெஸன்ட் உள்ளிட்டோர்கள் காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸ் வீரியம் கொண்டது. கூடவே பிளவும் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிதமான போராட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றார்கள் கருத்து தெரிவித்தனர். ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களுக்கு பங்கு கிடைத்தாலே போதுமானது என்பது அவர்களது விருப்பம். ஆனால் திலகர், லாலா லஜ்பதி ராய், பிபின் சந்திர பால் போன்றோர்கள் இந்தியாவுக்கு பூரணமான சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். ஆங்கிலேயர்களிடமிருந்து பூரணமான சுதந்திரம் பெறவேண்டும்; அதற்காக தீவிரமாகப் போராடினால் தவறில்லை என்பது திலகர் கூட்டணியின் கருத்து. சுப்பிரமணிய பாரதியார் திலகருடைய கருத்தை ஆதரித்தார். காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு மிதவாத காங்கிரஸ் மற்றும் தீவிரவாத காங்கிரஸ் என்று இரு பிரிவுகள் தோன்றின.
முதல் உலக யுத்தம் நடைபெற்ற சமயத்தில் (1914-1918) காங்கிரஸில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரவாத முழக்கங்கள் குறைந்தன. அந்த சமயத்தில்தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தி காங்கிரஸில் சேர்ந்து கோகலேவின் வழியை பின்பற்றினார். காந்தி காங்கிரஸில் இணைந்த பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தார். போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியில் இருக்கவேண்டும் என்று காந்தி விருப்பப்பட்டார். காந்தியின் தலைமையில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் வெகுஜன மக்களும், பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களும், அதற்கு பெருவாரியான மக்களிடருந்து கிடைத்த ஆதரவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்தது. காந்தியுடன் சர்தார் வல்லபாய் பட்டேலும், ஜவாஹர்லால் நேருவும் சேர்ந்து கொண்டனர். காங்கிரஸில் காந்தி வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. காந்தியின் பிடிவாதக் கொள்கையின் காரணமாக அவருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் குறிப்பாக முகமது அலி ஜின்னா, சுபாஷ் சந்திர போஸ், பீமாராவ் அம்பேத்கர் மற்றும் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
1939ஆம் ஆண்டு, இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. அப்போதைய இந்திய வைசிராய் லின்லித்கவ், பிரிட்டிஷ் இத்திய இராணுவப் படை பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து போர் புரியும் என்ற அறிவிப்பை விடுத்தார். இந்த அறிவிப்பை, அவர் இந்திய ஆட்சியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவித்தார். இதனால் கோபம் கொண்ட காங்கிரஸ் மாகாண சட்டசபை மந்திரிகளும், உறுப்பினர்களும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
பிரிட்டிஷ் இந்திய இராணுவம் பெரிய படைபலத்தை கொண்டிருந்தது. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சுமார் 25,00,000 போர் வீரர்கள் இருந்தனர். இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவாக இரண்டாவது உலக யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும் கருத்து வேறுபாடு நிலவியது. சுபாஷ் சந்திர போஸ் வைசிராயின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து கல்கத்தாவில் போராட்டத்தைத் துவங்கினார். துரிதமாக செயல்பட்ட சி.ஐ.டி போலீஸ், சுபாஷ் சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்தது. சுபாஷ் சந்திர போஸ் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலேய அரசு சுபாஷை சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றியது. வீட்டுக் காவலில் இருந்து தப்பிய சுபாஷ் சந்திர போஸ், 1941ஆம் ஆண்டு, பத்தான் வேடமணிந்து ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனிக்கு சென்றார்.
தெற்காசியா நாடுகளான மலையா, சிங்கப்பூர், பர்மா, இந்தோ சீனா (இன்றைய வியட்னாம், கம்போடியா மற்றும் லாவோஸ்) ஆகிய நாடுகளில் இந்தியர்கள் பெருமளவில் இருந்தனர். மலையா, சிங்கப்பூர், பர்மா ஆங்கிலேயர்களின் காலனிகளாக இருந்தது. இந்தோ சீனா பிரெஞ்சு காலனியாக இருந்தது. இந்தியாவின் விடுதலைக்காக பல போராளி அமைப்புகள் கிழக்கிந்திய நாடுகளில் செயல்பட்டுவந்தன. அங்கிருக்கும் இந்தியர்களிடம் தேசப்பற்றை வளர்த்துவந்தனர். மலேசியாவில் 8 லட்சம் இந்தியர்கள் இருந்தார்கள். இவர்களது உரிமைகளைக் காப்பதற்காக சென்ட்ரல் இந்தியன் அஸோசியேஷன் மற்றும் இந்தியன் சவுத் லீக் என்ற அமைப்புகள் செயல்பட்டு வந்தன.
சீனாவில் உள்ள ஷாங்காயிலும் ஹாங்காங்கிலும் பாபா ஹரி சிங்கின் தலைமையில் காதர் புரட்சிகர இயக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டது. ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் ராஷ் பிகாரி போஸ், Indian Independence League என்ற அமைப்பை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார் (ராஷ் பிகாரி போஸ், 1912ஆம் ஆண்டு, டில்லியில், இந்தியாவின் வைசிராயான ஹார்டிங்கை கொலை செய்ய முயற்சித்தார். வைசிராய் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். ராஷ் பிகாரி போஸ் ஜப்பானுக்கு தப்பிச் சென்றுவிட்டார்). இவருக்கு ஜப்பான் அரசாங்கம் உதவியது. Indian Independence League-இன் கிளைகள் தெற்காசிய நாடுகள் பலவற்றில் தோற்றுவிக்கப்பட்டன. தாய்லாந்தில் கியானி ப்ரீத்தம் சிங் தலைமையில் ஒரு புரட்சிகர இயக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டது. மேற்சொன்ன இயக்கங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டன. போராளி இயக்கங்கள், ஜப்பான் நகரமான நாகசாகியில் மாநாடு ஒன்றை நடத்தின. இந்த மாநாட்டின் நோக்கம் பர்மா, மலையா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களிடம் சுதந்திர உணர்வை ஏற்படுத்துவதாகும். அதற்கான சரியான சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தது இரண்டாம் உலக யுத்தம்.
1941ஆம் ஆண்டில், இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு எதிராக ஜப்பான் களமிறங்கியது. ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த தெற்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக ஜப்பான் கைப்பற்றியது. ஜப்பான் அரசாங்கம், மேஜர் பூஜிவாரா என்பவரை தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைச் சந்தித்து, பரஸ்பர ஒத்துழைப்பிற்கான ஏற்பாட்டை செய்தது.
மலையாவில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த கேப்டன் மோகன் சிங், தன் படைப்பிரிவுடன் கியானி ப்ரீத்தம் சிங்கின் மூலமாக ஜப்பானியரிடம் சரணடைந்தார். ஜப்பானுக்கு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று எந்த ஆசையும் இல்லை, மாறாக இந்தியர்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றே ஜப்பான் ஆசைப்படுவதாக மேஜர் பூஜிவாரா கூறினார். ஜப்பானியர்களிடம் சரணடையும் இந்திய போர்க் கைதிகளை மோகன் சிங்கிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.
1942ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஜப்பான், சிங்கப்பூரை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றியது. போரில் தோற்ற ஆங்கிலேயத் தளபதி கர்னல் ஹண்ட், தன்வசம் இருந்த 73000 போர் வீரர்களை ஜப்பானியர்களிடம் ஒப்படைத்தார். அதில் 45000 பேர் இந்தியப் போர் வீரர்கள். ஜப்பான் இந்த 45000 இந்திய போர் வீரர்களையும் கேப்டன் மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது.
ஜப்பானின் ஒப்புதலுடன், மோகன் சிங் 17000 வீரர்களைக் கொண்டு முதல் படைப் பிரிவை உருவாக்கினார். இந்த படைப் பிரிவுக்கு இந்திய தேசிய இராணுவம் (சுருக்கமாக ஐ.என்.ஏ) (Indian National Army) என்று பெயர் வைக்கப்பட்டது. ஐ.என்.ஏ தொடங்கப்பட்ட நாள் 01.09.1942. கேப்டன் மோகன் சிங் படைத் தளபதி ஆனார்.
ஜப்பான் தன்னுடைய வாக்குறுதியில் பின்வாங்கியது. ஐ.என்.ஏவின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த மோகன் சிங் 1942ஆம் வருடம், ஐ.என்.ஏவை கலைப்பதாக அறிவித்தார். அடுத்த ஆறு மாதங்கள் ஐ.என்.ஏ முடங்கிப்போனது. ஆனால் ராஷ் பிகாரி போஸ் நிலைமையை சமாளித்து, ஐ.என்.ஏவை மறுபடியும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். ஐ.என்.ஏ, Indian Independence League -இன் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஐ.என்.ஏவின் தலைமையகம் பாங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டது. ஐ.என்.ஏவுக்கு புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டனர்.
மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஐ.என்.ஏவில் எந்த முன்னேற்றமும் இல்லை. சரியான தலைமை இல்லாமல் தவித்தது. ஐ.என்.ஏவை தோளில் சுமந்து, வழி நடத்த சரியான நபரை தேடிக்கொண்டிருந்தார் ராஷ் பிகாரி கோஷ். சரியான நபரும் கிடைத்தார். அவர்தான் சுபாஷ் சந்திர போஸ்.
இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற சுபாஷ் சந்திர போஸ், அங்கு இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் பிடிபட்ட 4500 இந்திய இராணுவ வீரர்களைக் கொண்டு இந்தியன் லீஜியன் என்ற போர் படையை உருவாக்கினார். அந்தப் போர் வீரர்கள் சுபாஷ் சந்திர போஸை ‘நேதாஜி’ என்று அழைத்தனர். நேதாஜி ஹிட்லரை சந்தித்தார். பிரிட்டிஷ் இந்தியாவின்மீது போர் தொடுக்க வலியுறுத்தினார். ஆனால் ஹிட்லரின் எண்ணம் வேறாக இருந்தது. ரஷ்யாவில் ஜெர்மன் படை தோல்வியைத் தழுவ ஆரம்பித்த நிலை. அதனால் ஹிட்லர் தன் முழு கவனத்தையும் ரஷ்யா மீது செலுத்தினார். ஹிட்லரிடம் தனக்கான உதவி கிடைக்காது என்று தீர்மானித்த நேதாஜி, ஜப்பானிடம் உதவி கேட்க முடிவுசெய்தார். அப்போது தெற்காசியாவில் உள்ள ஐரோப்பிய காலனிகளை ஜப்பான் தன்வசமாக்கியிருந்தது. நேதாஜி ஹிட்லரிடம் தான் ஜப்பான் செல்வதற்கு உதவுமாறு கேட்டார். ஹிட்லர் அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுத்தார். நேதாஜி 16.05.1943ஆம் தேதி, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜெர்மனியிலிருந்து ஜப்பான் வந்தடைந்தார். நேதாஜியை வரவேற்ற ஜப்பான் அரசாங்கம், அவருக்கு இந்திய விடுதலைக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தது.
18.06.1943ஆம் தேதி, டோக்கியோ வானொலி, நேதாஜி ஐ.என்.ஏவின் தலைவராக பொறுப்பேற்ற செய்தியை அறிவித்தது. இந்த செய்தியை கேட்டவுடன் தெற்காசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் புத்துணர்வு பெற்றார்கள். இந்த செய்தி அவர்களுக்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது. நேதாஜி முதல் கட்டமாக வானொலி மற்றும் செய்தித் தாள்களின் மூலமாக மக்களைத் தொடர்பு கொண்டார். அஹிம்சை முறையில் இந்தியா சுதந்திரம் அடைவது இயலாத காரியம் என்று தெரிவித்தார். ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே சுதந்திரம் பெற முடியும் என்று மக்களுக்கு அறிவுறித்தினார்.
05.07.1943இல் சிங்கப்பூர் சென்ற சுபாஷ் சந்திர போஸ், அங்கு ஐ.என்.ஏவின் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஐ.என்.ஏவை சீரமைத்தார். ஐ.என்.ஏவுக்கு ‘ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். ‘டில்லி சலோ’ – டில்லிக்குச் செல்வோம் என்ற முழக்கத்தை ஏற்படுத்தினார். டில்லியில் உள்ள வைசிராயின் இல்லத்தில் மூவர்ணக் கொடி ஏற்றுவோம் என்று சபதமிட்டார். வெற்றிப் பேரணியை செங்கோட்டையில் நடத்துவோம் என்று சூளுரைத்தார்.
‘எனக்கு உங்களது உதிரத்தைத் தாருங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறேன்’ என்ற நேதாஜியின் முழக்கத்தைக் கேட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தாமாகவே முன்வந்து ஐ.என்.ஏவில் சேர்ந்தனர். இதில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. போர்க் கலை கற்றுகொடுக்கப்பட்டது. ஜான்சி ராணியின் பெயரில் பெண்களுக்கென்று தனிப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஐ.என்.ஏவுக்கு தெற்காசியாவில் வசித்த இந்திய மக்கள், பெரும் பொருளுதவி புரிந்தனர். அதில் தமிழர்களுடைய பங்கு அளப்பரியது.
ஜப்பானின் பிரதமர் டோஜோ, அந்தமான் நிக்கோபார் தீவை நேதாஜியின் தலைமையிலான ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் ஆட்சி அதிகாரத்துக்கு ஒப்படைத்தார். இதன் மூலம், ஆசாத் ஹிந்த் ஃபௌஜுக்கு இந்திய தேசத்தின் ஒரு பகுதி நிலம் கைவசமானது. அந்தமான் தீவில், நேதாஜி மூவர்ணக் கொடியை ஏற்றினார். நேதாஜி தன்னுடைய தலைமையிடத்தை பர்மாவின் தலைநகரான ரங்கூனுக்கு மாற்றினார். பர்மா அப்போது ஆங்கிலேயரிடமிருந்து ஜப்பானியர் வசமாகியிருந்தது. நேதாஜி ஐ.என்.ஏ படை வீரர்களுக்கு இந்திய நகரான இம்பாலை கைப்பற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார். ஐ.என்.ஏவுடன் ஜப்பானிய ராணுவமும் சேர்ந்து கொண்டது.
இதே சந்தர்ப்பத்தில், இந்தியாவில் காந்தியின் தலைமையில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடந்து வந்தது. முஸ்லீம் லீக் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, பிரிட்டீஷ் அரசுக்கு இரண்டாம் யுத்தத்தில் சேவை செய்ய முஸ்லீம்களை இந்திய இராணுவத்தில் சேர வலியுறுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காரணம், ஜெர்மனியை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த ரஷ்யாவுக்கு பிரிட்டனுடைய உதவி தேவைப்பட்டது. அதனால் இந்திய இராணுவம் ஆங்கிலேய அரசுக்கு உதவுவதில் விருப்பம் காட்டினர். இந்து மகா சபாவும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் விடுத்த அறைகூவலுக்கு பெரும் திரளான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நேதாஜியின் ஐ.என்.ஏ படை ஜப்பானுடன் சேர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஆங்கில அரசு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது. காந்தி உட்பட ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்களின் கைதினால் நாடு அமளி துமளி ஆனது. அஹிம்சையாக நடக்க வேண்டிய போராட்டம் வன்முறையாக மாறியது. நாடெங்கிலும் கலவரம் நடந்தது. இலட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு பொது இடங்களிலேயே சாட்டையடி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீஸ் மற்றும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். சில போராட்டத் தலைவர்கள் தலைமறைவாகி, போராட்டத்தைத் தூண்டிக்கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களின் தீவிர அடக்குமுறையால், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம், 1944ஆம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு வந்தது. இதனால் தேசியவாதிகளுக்கு பெருத்த ஏமாற்றம். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று பெருமூச்சுவிட்ட ஆங்கிலேய அரசுக்கு இந்தியாவின் எல்லையில் புது பிரச்சனை காத்திருந்தது.
0
நேதாஜியின் ஐ.என்.ஏ படை இம்பாலையும், கோகிமாவையும் நோக்கி முன்னேறியது. கேப்டன் ஷாநவாஸ் கான் தலைமையில் சுபாஷ் பிரிகேட் என்று ஒரு ரெஜிமெண்ட்; மேஜர் குருபக்ஷ் சிங் தில்லோன் தலைமையில் நேரு பிரிகேட் என்று ஒரு ரெஜிமெண்ட்; லெப்டினன்ட் கர்னல் பிரேம் குமார் ஷாகல் தலைமையில் மூன்றாவது ரெஜிமெண்ட் என ஐ.என்.ஏ மூன்று ரெஜிமெண்டுகளை ஈடுபடுத்தியது.
ஐ.என்.ஏ படை பர்மாவில் உள்ள அரக்கு மாகாணத்தில் நுழைந்து, பிரிட்டிஷ் ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல்கள் புரிந்து, பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் நுழைந்து முக்கியப் பகுதிகளை கைப்பற்றியது. இந்தியாவுக்குள் நுழைந்த ஐ.என்.ஏ வீரர்கள் தாய் மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து முத்தமிட்டார்கள். பின்னர் மூவர்ணக் கொடியேற்றி, தேசிய கீதத்தையும் பாடினர்.
ஐ.என்.ஏ வீரர்களால் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்துக்கொள்ளமுடியவில்லை. விதி விளையாடியது. பருவ மழை தொடங்கியது. பர்மா அடர்ந்த காடுகளைக் கொண்டது. பருவ மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது. போக்குவரத்து இல்லை. எல்லையில் உள்ள வீரர்களுக்கு உணவு, மருந்து, ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. கூடவே மலேரியா தொற்று வேறு. அமெரிக்க விமானப் படை, வானத்திலிருந்து குண்டு மழையைப் பொழிந்தது. எண்ணற்ற ஐ.என்.ஏ வீரர்கள் உணவில்லாமலும், நோய்வாய்ப்பட்டும் இறந்தனர். நிலைமையை சுதாரித்துக்கொண்ட நேதாஜி தன் படை வீரர்களை பின்வாங்குமாறு ஆணையிட்டார். இந்த சூழலுக்காக காத்திருந்த பிரிட்டிஷ் இராணுவம், பின்வாங்கிச் சென்ற ஐ.என்.ஏ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அதிக அளவிலான ஐ.என்.ஏ வீரர்களை சிறைபிடித்தது. சிறைப்பிடிக்கப்பட்ட ஐ,என்.ஏ வீரர்கள் டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசியது. லட்சக்கணக்கான ஜப்பானியர்கள் உயிரிழந்தனர். ஜப்பான் பிரிட்டீஷ் இராணுவத்திடம் சரண்டரானது. இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.
18.08.1945ஆம் தேதி, நேதாஜி சைகோனிலிருந்து டோக்கியோ செல்லும் வழியில் பர்மோசா (இன்றைய தாய்வான்) என்னும் இடத்தில் விமான விபத்தில் இறந்தாக டோக்கியோ வானொலி அறிவித்தது.
(தொடரும்)