Skip to content
Home » ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

நேதாஜியுடன் ஐ.என்.ஏ சகாப்தம் முடிந்தது. ஆனால் ஐ.என்.ஏ வீரர்களின் போராட்டாங்கள் முடியவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், சுமார் 19500 ஐ.என்.ஏ வீரர்களை (முன்னாள் இந்திய ராணுவ வீரர்களை) போர் கைதிகளாக டில்லிக்கு கொண்டுவந்து சிறையில் அடைத்தது. ஐ,என்.ஏவில் பணியாற்றிய பொதுமக்களைப்பற்றி பிரிட்டிஷ் இராணுவம் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அவர்களும், யுத்தம் முடிந்ததும் தத்தம் ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.

ஐ.என்.ஏ வீரர்கள் மீது வழக்கு நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தரவேண்டும், அது வருங்காலத்தில் ஏனைய இராணுவ வீரர்களுக்குப் பாடமாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக, ஐ.என்.ஏவின் முக்கியமான மூன்று தளபதிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்கள், ஷாநவாஸ் கான், குருபக்ஷ் சிங் தில்லோன் மற்றும் பிரேம் குமார் ஷாகல். அதாவது ஒரு ஹிந்து, ஒரு முஸ்லீம் மற்றும் ஒரு சர்தார்ஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த மூவர் மீதும் தேச துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் தங்களுக்கு அடிபணியாத பிரிட்டிஷ் இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்று விட்டதாக கொலைக் குற்றமும் சுமத்தப்பட்டது. குருபக்ஷ் சிங் தில்லோன்மீது நான்கு கொலை குற்றம், பிரேம் குமார் ஷாகல் மற்றும் ஷாநவாஸ் கான்மீது கொலைகள் செய்யத் தூண்டுதலாக இருந்ததற்கான குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இந்திய இராணுவச் சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரிக்க, இராணுவ நீதிமன்றம் (Court Martial) தயாரானது. இராணுவக் கட்டுபாட்டை மீறும் இராணுவ வீரர்கள்மீது Court Martial நடவடிக்கை எடுக்கப்படும். இராணுவ நீதிமன்றங்கள் சிவில் நீதிமன்றங்கள் போல் இருக்காது. இங்கு நீதிபதிகளுக்கு பதிலாக வழக்கை விசாரிக்க இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருப்பார்கள். இராணுவத் தரப்பில் வழக்கை நடத்த ஜட்ஜ் அட்வகேட் இருப்பார். விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

ஐ.என்.ஏ வீரர்கள் மீது நடந்தப்படும் வழக்கை பொது மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு டில்லி செங்கோட்டையைத் தேர்ந்தெடுத்தது. அரசாங்கத்தின் சார்பாக வாதாட, அப்போதைய இந்தியாவின் அட்வகேட் ஜெனரல் பி. இன்ஜினியர் நியமிக்கப்பட்டார்.

தேசத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்களைக் காக்க இந்திய தேசிய காங்கிரஸ்  ‘INA Defence Committee’ என்ற ஒரு குழுவை உருவாக்கியது. இந்தக் குழுவில் பிரபல வழக்கறிஞர்களாக இருந்த பூலாபாய் தேசாய், சர் தேஜ் பகதூர் சப்ரு, ஜவாஹர்லால் நேரு, கைலாஷ் நாத் கஜ்ஜு, ஆசஃப் அலி இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு, பூலாபாய் தேசாய் தலைமையில் செயல்பட்டது. இந்தக் குழுவின் பணி, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் வாதாடி விடுதலை வாங்கித் தருவது.

1945ஆம் வருடம் நடந்த ஐ.என்.ஏ வழக்கு விசாரணை, மக்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் இந்த வழக்கு விசாரணையை வானொலியிலும், செய்தித் தாள்களிலும் ஆர்வமாக கேட்டும் படித்தும் வந்தனர். பொது வெளியில் ஒருவருக்கொருவர் இந்த வழக்கைப்பற்றி பேசியும் விவாதித்தும் வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்படுமா அல்லது விடுதலை ஆவார்களா என்று பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர்.

குற்றவாளிகளுக்காக பூலாபாய் தேசாய் பிரமாதமாக வாதாடினார். அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வாதாடினார். பத்து மணி நேரத்துக்கும் குறையாமல் வாதாடினார். இத்தனைக்கும் அவர் வாதாடும்போது எந்தக் குறிப்பையும் பார்க்கவில்லை. பூலாபாய் தேசாய் முன்வைத்த வாதங்கள் பின்வருமாறு…

1) இரண்டாம் உலக யுத்தம் நடந்த சமயத்தில், தெற்காசிய நாடுகளில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் வசித்த நாடுகளை தங்கள் சொந்த நாடாகவே கருதவில்லை. இவர்கள் தங்களைத் தனியாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

2) ஜப்பான் இரண்டாம் உலக யுத்தத்தில் பங்குகொண்டு தெற்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக கைப்பற்றியபோது, அங்கு வாழ்ந்த இந்தியர்களின் உயிர், உடைமை, மரியாதை அனைத்துக்கும் பாதுகாப்பற்ற தன்மை உருவானது. இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது. பல வித சங்கடங்களுக்கு ஆளானார்கள். ஆங்கில அரசை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், ஜப்பான் கைப்பற்றிய பகுதிகளில் ஆங்கிலேய அரசு காணாமல் போனது. இந்த சூழ்நிலையில், இந்தியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அமைப்புகளை நாடினர்.

3) 1942ஆம் வருடம், பிப்ரவரி மாதம், சிங்கப்பூர் ஜப்பான் வசமானது. ஆங்கிலேய கர்னல் ஹண்ட், தன் கட்டுப்பாட்டில் இருந்த 45000 இந்திய இராணுவ வீரர்களை ஜப்பானியர்களிடம் ஒப்படைத்தான். இந்திய வீரர்கள் அனைவரும் ஜப்பானியரின் கட்டளைப்படி நடக்கவேண்டும், இல்லையென்றால் ஜப்பானியரின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்தான்.

4) எப்போது இந்திய வீரர்கள் ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஜப்பானியர் வசம் ஒப்படைக்கப்பட்டார்களோ, அன்றே அவர்கள் மீதான ஆங்கிலேய அரசின் ஆதிக்கம் முடிந்துபோனது. அதுமுதல் அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லர். அப்படியிருக்கையில் அவர்களை எப்படி தேச துரோகிகளாக கருத முடியும். ஒரு நாட்டின் அல்லது அரசனின் தலையாய கடமை தன் பிரஜைகளை காப்பாற்றுவது. எந்த அரசன் தன் பாதுகாப்பு கடமையிலிருந்து வழுவுகிறானோ, அன்றே அவன் பிரஜையின் விசுவாசத்தை இழக்கிறான். அதன் பிறகு, அந்த பிரஜைக்கும் அரசனுக்கமான உறவு துண்டிக்கப்படுகிறது. தன் பிரஜையைக் காக்கத் தவறிய நாடு, எப்படி அந்த பிரஜை மீது தேச துரோக குற்றச்சாட்டை சுமத்த முடியும்? ஆள்பவர்களும், ஆளப்படுபவர்களும் ஒரே தேசத்தவர்களாக இருந்தாலாவது, ஒருவேளை, இந்த தேச துரோகக் குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்லமுடியும், ஆனால் இங்கோ ஆள்பவர்கள் ஆங்கிலேயர்கள், ஆளப்படுபவர்கள் இந்தியர்கள். இருவரும் வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலேயர்கள் இந்த தேசத்தின் வந்தேறிகள், அப்படியிருக்கையில் சொந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் தேச துரோகத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்வது வேடிக்கையானது, வினோதமானது, மேலும் அர்த்தமற்றது.

5) ஜப்பானியர்கள், பிடிபட்ட இந்திய இராணுவ வீரர்களை தனி நாடாக செயல்பட வாய்ப்பு கொடுத்தனர். கிழக்காசியாவில் உள்ள இந்தியர்களது உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் அவசியம் ஏற்பட்டது. ஜப்பானியர்கள் வழங்கிய வாய்ப்பை இந்தியப் போர் வீரர்களும், கிழக்காசியாவில் வாழ்ந்த இந்தியப் பொது மக்களும் பயன்படுத்திக் கொண்டனர். இந்த விவகாரத்தில் ஜப்பானியரின் உள்நோக்கம் குறித்தும் ஆராயப்பட்டது. ஜப்பானியர்களின் கைப்பாவையாக செயல்பட இந்தியர்கள் என்றும் விரும்பவில்லை. இந்திய இராணுவ வீரர்கள் ஐ.என்.ஏவில் சேர இரண்டு காரணங்கள் மட்டுமே இருந்தன. அவை, 1) கிழக்காசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, 2) இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவது. இரண்டாம் உலக யுத்தம் முடியும் தருவாயில் பிரிட்டிஷ் இந்திய அரசு வீழ்ந்துவிடும் என்று நம்பப்பட்டது. அதன் பின்னர், சுதந்திர இந்திய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சியில்தான் ஐ.என்.ஏ செயல்பட்டது.

6) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐ.என்.ஏவின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 2,23,000 இந்தியர்கள் தங்களை ஐ.என்.ஏவுக்கு கட்டுபட்டவர்கள் என்று சத்தியப் பிரமானம் எடுத்துக்கொண்டனர். கிழாக்காசியாவில் வாழ்ந்த 23,000 இந்தியர்கள் தாமாக முன் வந்து ஐ.என்.ஏவில் சேர்ந்து போர்க்களத்துக்கு செல்ல ஆயத்தமானர். அவர்களுடன் 45,000 இந்திய போர் வீரர்களும் களத்தில் இறங்கினர். நேதாஜி ஒரு அரசவையையே நிறுவினார். இதில் பல மந்திரிகள் செயல்பட்டனர். நேதாஜியின் சுதந்திர அரசை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்ட பல உலக நாடுகள் அங்கீகரித்தன. நேதாஜியின் சுதந்திர அரசு ஒரு கற்பனை அரசு அல்ல. அதற்கு அந்தமான் நிக்கோபார் தீவு முழுவதும் சொந்தம். மேலும், பர்மாவில் 15 சதுர கி.மீட்டர் பரப்பளவு சொந்தம். அசாம் எல்லையோரப் பகுதிகளில் ஏராளனமான பகுதிகள் ஐ.என்.ஏவுக்கு சொந்தம். நேதாஜியின் சுதந்திர அரசுக்கென்று தனியான சட்ட திட்டங்கள் இருந்தன. நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் செயல்பட்டன. பிரத்யேக கொடியும், சின்னமும் உருவாக்கப்பட்டது. அரசு நடத்துவதற்கு தேவையான வருமானமும், நிதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேதாஜியின் சுதந்திர அரசு, 1944ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டது. ஜப்பானிய அரசு நேதாஜியின் அரசை நேச நாடாக கருதியது. ஐ.என்.ஏவும், ஜப்பான் இராணுவமும் தங்கள் எதிரிகளை எதிர்த்து கூட்டுப் போர் புரிந்தன. இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன் இந்த இரண்டு அரசுகளும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியாவை விடுவிப்போம் என்று சூளுரைத்தன. இந்தியாவை கைப்பற்றிய பிறகு, இந்திய நிலங்கள் அனைத்தும் நேதாஜி தலைமையிலான ஆசாத் ஹிந்த் ஃபாஜுக்கே வழங்கப்படும் என்று ஜப்பான் உறுதிமொழி கொடுத்தது. சுதந்திர இந்தியாவை நிர்வகிப்பதற்கான ஊழியர்களை தயார்படுத்தி அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை நேதாஜி வழங்கினார்.

7) சர்வதேச சட்டப்படி, ஒரு சுதந்திர நாடு செயல்படுவதற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது நேதாஜியின் சுதந்திர அரசு.

8) ஐ.என்.ஏ முழுக்க முழுக்க இந்தியர்களைக் கொண்டது. சிப்பாய்கள் தொடங்கி பெரிய அதிகாரிகள் என அனைவரும் இந்தியர்கள். ஐ.என்.ஏ செயல்பாட்டுக்கான நிதி அனைத்தும் இந்தியர்களிடமிருந்தே பெறப்பட்டது. ஐ.என்.ஏ போருக்கான ஆயுதங்களை மட்டும் சூழ்நிலை காரணமாக ஜப்பானியர்களிடமிருந்து இரவலாகப் பெற்றது.

9) ஐ.என்.ஏவில் சேர இந்திய போர்க் கைதிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறுவது அபத்தம். மாறாக, இந்தியப் போர்க் கைதிகள் தாமாக முன் வந்து ஐ.என்.ஏவில் சேர்ந்தனர். இதற்காக ஏராளமான ஆதாரங்கள் இந்த மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேதாஜி பொதுமக்களிடம், தாமாக முன் வந்து ஐ.என்.ஏ-வில் சேர்ந்துகொண்டால் ஏற்றுக்கொள்வோம், யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஐ.என்.ஏ, இந்தியாவை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டது. ஐ.என்.ஏவில் செயலாற்றுபவர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கமுடியாது, அவர்களுக்கு கடின உழைப்பு, வியர்வை, இரத்தம், கண்ணீரை மட்டுமே சன்மானமாகத் தரமுடியும் என்று நேதாஜி கூறியிருக்கிறார். ஐ.என்.ஏவில் வேலை செய்யும் சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும்.; பற்றாக்குறையான பொருட்கள்தான் கிடைக்கும்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருக்கு பணியாற்ற விருப்பமில்லையோ அவர்கள் தாமாக விலகிச் செல்லலாம் என்று நேதாஜி கூறியிருக்கிறார். ஆனால், ஐ.என்.ஏவுக்கு தேவைக்கு அதிகமாகவே தன்னார்வத் தொண்டர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவரையும் ஐ.என்.ஏவில் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்படியிருக்கையில், ஐ.என்.ஏ இந்தியப் போர்க் கைதிகளை வலுக்கட்டாயமாக சேர்த்தார்கள் என்று சொல்வது பொய்யான குற்றச்சாட்டு.

11) சர்வதேச சட்டம், உள்நாட்டுப் போரின் போது கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துடன் போராடி, நாட்டின் ஒரு பகுதியை தங்கள் வசமாக்கி அங்கே தனி இராணுவம் கொண்டு ஆட்சி அதிகாரம் செலுத்தினால், அதை தனி நாடாக அங்கீகரிக்கவேண்டும் என்று சொல்கிறது. பாரசீக (இன்றைய ஈரான்) நாட்டில் அசர்பைஜான் என்ற தனி அரசு செயல்பட்டது. அதேபோல் அமெரிக்க நாட்டின் சுதந்திரப் பிரகடனத்துக்கு முன்பு, அங்கு பல காலனிகள் தன்னிச்சையாக அரசாங்கம் நடத்தின. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க காலனிகள் தங்களை ஐரோப்பிய அடிமையிலிருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக செயல்படலாம் என்று அறிவித்தார். சர்வதேச சட்டமும் இதை அங்கீகரித்தது. அப்படியிருக்கையில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஒரு இராணுவப் படை, இந்தியாவை அன்னியர்கள் வசமிருந்து விடுவிக்க நினைத்தது எப்படி தப்பாகும்? இந்தியாவுக்கு வெளியிலிருந்த இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். அவர்களுக்கான பிரத்யேக நிலப்பரப்பை, அவர்களுடைய நேச நாடான ஜப்பான் வழங்கியது. அங்கிருந்து அவர்கள் செயல்பட்டார்கள். இரண்டாவது உலக யுத்தத்தின் போது போலந்து, பெல்ஜியம், ஹாலந்து, செக்கோஸ்லோவேக்கியா, யூகோஸ்லோவியா இன்னும் பல நாடுகள் தங்களுடைய நிலத்தை ஜெர்மனியிடம் இழந்தது. இந்த நாடுகள் தங்கள் வசம் நிலம் இல்லை என்றாலும், தங்கள் அரசாங்கங்களை லண்டனிலிருந்து நடத்தி வந்தனர். அவர்களிடம் ஒரு சதுர அடி நிலம் கூட கிடையாது. இந்த நாடுகளுக்கு உடைமை என்று சொல்லிக்கொள்ள எதுவும் கிடையாது. ஆனால் இந்த நாடுகள் லண்டனில் இருந்து கொண்டு ஜெர்மனியை விரட்ட முனைந்தன. தங்கள் தாய்நாட்டைத் திரும்பப் பெற போராடின. அதை அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகள் அங்கீகரித்தன. சர்வதேச சட்டத்திலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படியிருக்கையில் ஐ.என்.ஏவை மட்டும் தனி நாடு, தனி அரசாக ஏன் ஏற்றுக்கொள்ளமுடியாது? அவர்களும் தங்கள் நாட்டின் விடுதலைக்காக வெளியிலிருந்து போராடினார்கள். இதில் என்ன தவறு? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு ஒரு நியாயம், தெற்காசிய நாடுகளுக்கு ஒரு நியாயமா?

13) நேதாஜியின் ஆசாத் ஹிந்த் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு. அதற்கு கட்டமைப்பு கொண்ட இராணுவம் உண்டு. ஆசாத் ஹிந்து இந்தியாவுடன் போர் புரிந்தது. ஆசாத் ஹிந்துக்காக போர் புரிந்தவர்கள் மீது இந்திய சட்டம் செல்லாது. சர்வதேச சட்டம் மட்டுமே செல்லும். ஐ.என்.ஏ வீரர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றங்கள் உள்நாட்டு சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களைக் கடந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களை இந்திய சட்டங்களுக்கு உட்படுத்த முடியாது. இதற்கு உதாரணமாக பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலின் பிரகடனமே இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் போராளிகள் தங்கள் உரிமையை நிலைநாட்ட அரசுக்கு எதிராகப் போராடினார்கள். அதை ஏனைய நாடுகள் அங்கீகரித்தன. அமெரிக்காவின் ஜானாதிபதியான எய்சன்ஹோவர் கூட, பிரான்சிலிருந்து ஜெர்மானியர்களை விரட்டுவதற்காக போராடிய மாக்கி (Mச்ணுதடிண்) புரட்சியாளர்களை அங்கீகரித்தார்.

14) இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 79இன் படி ,எவன் ஒருவன் தான் செய்யும் செயல் சட்டப்படி சரி என்ற நம்பிக்கையில் செய்கிறானோ அவன் குற்றமற்றவனாக கருதப்படுவான். குற்றம் சாட்டப்பட்ட மூவரும், தாங்கள் ஒரு அரசு அதிகாரத்தின் கீழ் கடமை ஆற்றுகிறோம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டார்கள். சர்வதேச சட்டப்படி, தாங்கள் செய்யும் காரியம் குற்றமில்லை என்ற நம்பிக்கையில் செயல்பட்டார்கள். எனவே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 79-இன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூவரையும் குற்றமிழைத்தவர்களாக கருதமுடியாது.

15) குற்றம் சாட்டப்பட்ட மூவரும், தங்களுக்கு கீழ்படியாத ஐ.என்.ஏ வீரர்கள் சிலரைக் கொன்று இருக்கிறார்கள் என்று கூறுவது ஏற்க முடியாத ஒன்று. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒரு வேளை, மூவரும் அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் கூட, இந்த மாமன்றத்தால் அவர்களை தண்டிக்க முடியாது. காரணம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகாக அக்கொலைகள் நடைபெற்றதாக கருதமுடியாது. மூவரும் ஒரு அரசு அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசு அதிகாரத்தின் உத்தரவின் பெயரில் செயல்படுபவர்கள். கீழ்படியாத இராணுவ வீரர்கள் மீது நடவடிக்கையெடுக்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இவர்கள் செய்த காரியத்தின் முழு பொறுப்பும் அவர்கள் சார்ந்திருந்த அரசாங்கத்தையேச் சாரும். இதை இந்த மூவரின் தனிப்பட்ட விவகாரமாக கருதி அவர்களை தண்டிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் போர்க் கைதிகள். இவர்களை உள்நாட்டு சட்டங்களின் படி தண்டிக்க முடியாது. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திடம் சரணடையும் போது கூட, தாங்கள் போர்க் கைதிகள் என்ற அடிப்படையில் தான் இவர்கள் சரணடைந்தார்கள்.

பூலாபாய் தேசாயின் வாதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த வாதங்கள் ஒரு இணிதணூt Mச்ணூtடிச்டூ முன் இல்லாமல் ஒரு நீதிமன்றத்தில் நடந்திருந்தால் நீதிபதிகளின் பாராட்டுகளை சந்தேகமே இல்லாமல் பெற்றிருப்பார். பெரிய அளவில் புகழ் அடைந்திருப்பார். பூலாபாய் தேசாய் ஒரு வழக்கறிஞராக வாதாடாமல் சராசரி இந்தியனாக வாதாடினார். தியாக உணர்வோடு, உயிரை துச்சமாக நினைத்து ஆயுதம் ஏந்தி இந்திய விடுதலைக்காக இன்னல்களுக்கு நடுவே போராடிய சக இந்தியர்களுக்காக வாதாடினார்.

விசாரணை முடிந்தது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஷாநவாஸ் கான், குரு பக்ஷ்சிங் தில்லோன் மற்றும் பிரேம் குமார் ஷாகல் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து மற்ற ஐ.என்.ஏ வீரர்கள் மீதும் விசாரணை நடந்தது. இரண்டாவது விசாரணை அப்துல் ரஷித், சிங்கார சிங் மற்றும் ஃபத்தே கான் என்ற மூவர் மீதும் நடந்தது. மொத்தம் 10 விசாரணைகள் நடந்தது. முதல் விசாரணையைத் தவிர்த்து, ஏனைய விசாரணைகள் செங்கோட்டையில் நடைபெறவில்லை.

குற்றம் நிரூபனமான ஐ.என்.ஏ வீரர்கள் மீது ஆங்கிலேயே அரசாங்கம் எந்த தண்டனையையும் வழங்கவில்லை. பொதுவில் விசாரணையை நடத்தினால், ஐ.என்.ஏ செய்த காரியங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டமுடியும். இதனால் தங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து ஆங்கில அரசு ஐ.என்.ஏ வழக்கை செங்கோட்டையில் நடத்தியது. ஆனால், விசாரணையின் மூலம் ஆங்கில அரசாங்கத்துக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பரிதாபமும், அனுதாபமும் தான் பொது மக்களிடம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட ஆங்கில அரசு எங்கே குற்றவாளிகள் மூவரையும் கொன்றுவிட்டால், அரசின் பெயர் கெட்டுவிடுமோ என்று பயந்து, ஐ.என்.ஏ வீரர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட ஐ.என்.ஏ வீரர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. அவர்கள் அப்படியே வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஷாநவாஸ் கான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நாடு விடுதலையான பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மந்திரி பதவிகளை வகித்தார். ஹிந்தி திரைப்பட நட்சத்திரமான ஷாருக்கானின் தாயார் லத்தீப் ஃபாத்திமாவை ஷாநவாஸ் கான் ஒரு விபத்தில் காப்பாற்றித் தத்தெடுத்து தன் மகள் போல் பாவித்ததாக ஒரு செய்தியும் உண்டு.

குருபக்ஷ் சிங் தில்லோன், பசந் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கைக்குச் சென்றுவிட்டார்.

பிரேம் குமார் ஷாகல் தன்னுடன் ஐ.என்.ஏவில் பணிபுரிந்த கேப்டன் லக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். லக்ஷ்மி ஷாகல், சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் டாக்டர் சுவாமிநாதனின் மகள். இவர் ஒரு மருத்துவர். ஐ.என்.ஏவில் ஜான்சி ராணி படைப்பிரிவில் கேப்டனாக செயல்பட்டார். லக்ஷ்மி ஷாகல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜானாதிபதி தேர்தலில், விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளால் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிரேம் குமார் ஷாகலின் தந்தை அச்சுரு ராம் லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர்.

பூலாபாய் தேசாய் ஐ.என்.ஏ வழக்கு முடிந்து அடுத்த ஆண்டுக்குள் படுத்தபடுக்கையாகி இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததற்கு காரணம், தீராத மனவருத்தம் என்று சொல்லப்படுகிறது. (இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லீம்களுக்கு சம பங்கு வழங்க காங்கிரஸ் கட்சி மறுத்தது. அதேபோல் முஸ்லீம் லீக் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தது. இதனால் இந்தியா பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பூலாபாய் தேசாய் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். காந்திக்கு நெருக்கமானவர். இந்தியா பிளவுபடுவதைத் தடுக்க, தேசாய் காந்தியின் ஆசியுடன் முஸ்லீம் லீக்கின் முக்கியத் தலைவரான லியாக்கத் அலி கானை சந்தித்து, ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்த உடன்படிக்கைக்கு தேசாய்-லியாகத் ஒப்பந்தம் என்று பெயர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், முஸ்லீம் லீக் தனி நாடு கோரிக்கையை விட்டுக்கொடுக்கும்; அமையவிருக்கும் இடைக்கால மந்திரி சபையில், ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம் உறுப்பினர்கள் இடம்பெற காங்கிரஸ் ஒப்புக்கொள்ளும். இந்த ரகசிய பேச்சுவார்தை எப்படியோ பத்திரிக்கையில் கசிந்துவிட்டது. ஜெயிலில் இருந்த நேரு உட்பட முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். பூலாபாய் தேசாய், ‘காந்தியின் ஆசிபடிதான் இந்த பேச்சு வார்த்தை நடந்தது’ என்று தெரிவித்தார். ஆனால், காந்தி தனக்கும் இந்த பேச்சுவார்த்தைக்கும் சம்மந்தம் இல்லாதது போல் நடந்துகொண்டார். முஸ்லீம் லீக்கும் ரகசியப் பேச்சுவார்த்தையை மறுத்தது. ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர், அரசியல் சாசன சபைக்கானத் தேர்தலில் தேசாயை ஓரம் கட்டிவிட்டனர். ஆங்கில அரசு, சட்டசபையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘ஙிச்ணூ ஆதஞீஞ்ஞுt’ ஐ தாக்கல் செய்தது. அதை சட்டசபையில் முறியடிக்க தேசாய் முயற்சியெடுத்த போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தரவில்லை. தேசாயின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மனக் கவலை அடைந்த பூலாபாய் தேசாய் பின்னர் மீளவில்லை). தேசாய் இறக்கும் தருவாயில் காந்தி அவரை சந்தித்தார். சந்திப்பின் போது காந்தி எதுவும் பேசவில்லை. காரணம், காந்தி மௌன விரதத்தில் இருந்ததாக சொல்லப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சாகவில்லை என்று பலரால் நம்பப்படுகிறது. அவர் பர்மோசாவிலிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்ததாகவும், அங்கு அவர் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான ஸ்டாலினால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர், இந்தியா திரும்பிய நேதாஜி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் என்னும் இடத்தில் ‘கும்னாமி பாபா’ என்ற பெயரில் சன்னியாசியாக வாழ்ந்து, 1985ஆம் ஆண்டு, இறந்ததாக சொல்லப்படுகிறது. நேதாஜியின் இறப்பில் உள்ள மர்மத்தை போக்க இந்திய அரசாங்கம் மூன்று விசாரணைகளை நடத்தியது. 1967ஆம் ஆண்டு, ஐ.என்.ஏ வீரரான ஷாநவாஸ் கான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 1970ஆம் ஆண்டு, நீதிபதி கோஷ்லா (காந்தி கொலையில் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர்) தலைமையில் ஒரு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக 2005ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான மனோஜ் குமார் முகர்ஜி தலைமையில் ஒரு விசாரணை நடைபெற்றது. மூன்றாவது விசாரணையின் முடிவு முதல் இரண்டு விசாரணைகளின் முடிவுகளிலிருந்து முரண்பட்டதாக இருக்கிறது. முதல் இரண்டு விசாரணைகள், நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக சொல்கிறது; மூன்றாவது விசாரணை விமான விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதனால் இன்றளவும் நேதாஜியின் இறப்பில் மர்மம் நீடிக்கிறது.

0

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *