Skip to content
Home » ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

தேசப் பிதா, அஹிம்சா மூர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். ஜனவரி மாதம், 30ஆம் தேதி, 1948ஆம் வருடம், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்று சுமார் 6 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி நடக்கும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை. கத்தியின்றி, இரத்தமின்றி ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவருக்கா இந்த நிலை என்று அனைவரும் அதிர்ந்தனர்.

இந்திய சுதந்திர வரலாறு மிகவும் நீண்ட ஒன்று. 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பலருக்கும் பங்கு உண்டு. அதில் மகாத்மா காந்தியினுடைய பங்கு மகத்தானது.

ஆங்கிலப் பேரரசில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்பதை பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தது பிரிட்டன். காரணம், பிரிட்டனுக்கு உலகம் முழுக்க காலனிகள். கனடா தொடங்கி ஆஸ்திரேலியா வரை. இப்படி கிட்டத்தட்ட உலகத்தையே ஆட்சி செய்து கொண்டிருந்த, பலம் பொருந்திய ஆங்கிலேயர்களிடம் அஹிம்சை மற்றும் சத்தியாகிரகத்தைக் கொண்டு போராடியவர் மகாத்மா காந்தி. ஆயுதம் ஏந்தி போராடியவர்களை ஆயுதத்தைக் கொண்டே அடக்கிய ஆங்கிலேயர்களால், அஹிம்சா வழியில் போராடிய காந்தியை ஒன்றும் செய்யமுடியவில்லை.

காந்தியின் அஹிம்சை போராட்டம் உலக அளவில் பிரசித்தம். காந்தியை முன்மாதிரியாக வைத்து அரசியல் போராட்டம் நடத்திய முக்கியமான உலக தலைவர்கள் இருவர். ஒருவர் அமெரிக்காவில் கருப்பர் இனத்திற்காக குரல் கொடுத்த மார்டின் லூதர் கிங், மற்றொருவர் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து கருப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா. நெல்சன் மண்டேலாவிற்கு முன்னதாகவே தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன் போராட்ட வாழ்க்கையை தொடங்கியவர் காந்தி. தன்னுடைய வாழ்வில் இருபது ஆண்டு காலத்தை தென் ஆப்பிரிக்காவில் கழித்தவர் காந்தி. அங்கு வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தார். கூடவே, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களது உரிமைகளை மீட்க ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார். போராட்டத்தின் போது, காந்தியுடன் சேர்ந்து போராடிய வீரமங்கை 16 வயதே ஆன தமிழ்ப் பெண் தில்லையாடி வள்ளியம்மை. போராட்டத்தில் காந்தி வெற்றி பெற்றார். வள்ளியம்மை உயிர் தியாகம் செய்தாள்.

1915ஆம் ஆண்டு, தென் ஆப்ரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார் காந்தி. அதற்கு முன்னர் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் வெகு ஜன மக்களிடம் பெரிதாகச் சென்றடையவில்லை. புரட்சியாளர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆங்கில அதிகாரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களது உயிர்களைப் பறிப்பர். காங்கிரஸ் அமைப்போ, இந்தியர்களின் பிரச்சனைகளை ஆங்கிலேயர்களிடம் முறையிடும் பணியை மட்டும் செய்து வந்தது. இந்தியா திரும்பிய காந்தி தன்னுடைய சத்தியாகிரக ஆயுதத்தை எடுத்தார். இதனால் இந்தியர்களது சுதந்திரப் போராட்டம் புது உத்வேகம் பெற்றது. விரைவிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தை வெகு ஜன போராட்டமாக மாற்றினார் காந்தி. சம்பாரன் போராட்டம், கேதா போராட்டம், கிலாஃபட் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகியவை காந்தி நடத்திய முக்கிய போராட்டங்கள்.

ஒரு பக்கம் காந்தி மற்றும் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி, மறு பக்கம், காதர், அனுசீலன் சமித்தி, ஜுகந்தர், ஹிந்து பொது உடைமை குடியரசு சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய புரட்சிகள் மற்றும் இந்த அமைப்புகளைச் சேர்ந்த குதிராம் போஸ், அரவிந்த் கோஷ், மதன் லால் திங்ரா, வாஞ்சிநாதன், பகத் சிங், சந்திர்சேகர ஆசாத், இராம் பிரசாத் பிஸ்மில், ராஷ் பிகாரி போஸ் மற்றும் எண்ணற்ற போராளிகள் நடத்திய தாக்குதல்களால், ஆங்கில அதிகாரிகள் பயத்திலும் பதட்டத்திலும் இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தாலும், நான்கு வருடங்கள் நடந்த யுத்தத்தினால் நிறைய பொருளாதார சேதாரம் ஏற்பட்டிருந்தது, கூடவே போரினால் உண்டான கடனும் பிரிட்டனின் கழுத்தை நெறித்தது. இந்த நிலையில், 1946ஆம் ஆண்டு நடந்த ‘பம்பாய் கடற்படை கலகம்’ ஆங்கிலேயர்களை முற்றிலுமாக நிலைகுலையச் செய்தது. ஏற்கனவே, 1943ஆம் ஆண்டு, சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் நடத்திய தாக்குதல்களிலிருந்து மீண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு இது சம்மட்டி அடி. இந்திய இராணுவத்தையும், கப்பல் படையையும் சேர்ந்த இந்திய வீரர்கள் எப்போது ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார்களோ அப்போதே இந்தியாவை அடிமையாக வைத்திருக்க முடியாது என்ற பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இந்தியாவிற்கு விடுதலை தருவதற்காக, மவுண்ட் பேட்டன் பிரபு வைசிராயாக நியமிக்கப்பட்டு இந்தியா வந்தார். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

இப்படிப் போராடி பெற்ற சுதந்திரத்தை மக்கள் கொண்டாடி வந்த வேளையில், ஒரு சோக சம்பவமும் நிகழ்ந்தது. அதுதான் பாரதப் பிரிவினை. பாரதம் இரண்டு நாடுகளாக துண்டாடப்பட்டது. முஸ்லீம்கள் அதிகமாக வசித்த பகுதி பாக்கிஸ்தானாகவும், ஹிந்துக்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகள் இந்தியாவாகவும் பிரிக்கப்பட்டது.

இந்தப் பிரிவினை பலருக்கு அதிருப்தியைத் தந்தது. காந்தியும் பாரதப் பிரிவினை என்று ஒன்று நிகழாது, அப்படி நடந்தால் அது என் பிணத்தின் மீதுதான் நிகழும் என்றார். ஆனாலும் நாடு துண்டாடப்பட்டது.

காந்தி தன் முயற்சியில் உறுதியாக இருப்பார். அவருடைய பல முடிவுகள் ஒருதலைபட்சமாக இருக்கும். குறிப்பாக ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்தான முடிவுகள். காந்தியினுடைய உறுதி, மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கு பிடிவாதமாகத் தோன்றும். காந்தியின் பிடிவாத குணத்தாலும், கருத்து வேறுபாடுகளாலும் பிரிந்து சென்ற தேசத் தலைவர்களில் ஜின்னா, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் முக்கியமானவர்கள்.

காந்தியின் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைக் கொல்ல திட்டம் தீட்டினர். அவர்கள் ஹிந்து மகா சபை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

‘இந்திய முஸ்லீம் லீக்’ முஸ்லீம்களின் உரிமையைப் பாதுகாக்க 1906ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதேபோல் ஹிந்துக்களின் உரிமையைப் பாதுகாக்க ‘ஹிந்து மகா சபை’ 1907ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. லாலா லஜ்பதி ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா, சுவாமி ஷ்ரத்தானந்தர், பாய் பரமாநந்த் போன்றவர்கள் ஹிந்து மகா சபையை ஆரம்ப காலத்தில் வழி நடத்தினர்.

ஹிந்து மகா சபையின் கொள்கைகள், “இந்திய நாடு என்பது ஹிந்து ராஷ்டிரம். ஹிந்து ராஷ்டிரத்தில் ஹிந்துக்களின் மதம், கலாச்சாரம், பாரம்பரியம் முதன்மையானது. பௌத்த, ஜெயின, சீக்கிய மதங்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மேற்சொன்ன மதங்கள் ஹிந்து மதத்தின் அங்கங்கள். ஆனால் ஆபிரகாமிய மதங்களான இஸ்லாமும், கிருத்தவமும் அன்னிய மதங்கள். அவை இந்தியாவில் தோன்றவில்லை. அவர்களுடைய புனித நகரங்கள் அரேபியாவிலும், ரோமிலும் இருக்கிறது. இந்திய முஸ்லீம்கள் மற்றும் கிருத்தவர்களின் மூதாதையர்கள் ஹிந்துக்களே. அவர்கள் கட்டாயத்தின் பேரிலும், நயவஞ்சகமாகவும் மத மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை ஹிந்து கலாச்சாரத்திற்கு எதிரானது. சமஸ்கிருத மொழியை மீட்டு புழக்கத்திற்கு கொண்டுவர வேண்டும். கம்யூனிசமும் பொதுவுடைமையும் சீர்கெட்ட, தரம் நலிந்த அன்னியக் கொள்கைகள். இந்தக் கொள்கைகள் நம் நாட்டின் தேவைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் எதிரானது. இந்தியாவில் ஜாதி வேறுபாடு கலையப்பட வேண்டிய ஒன்று. தீண்டாமை ஒழித்துக்கட்டப்பட வேண்டியது”.

ஹிந்து மகா சபையின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற வீர சாவர்க்கர். மராட்டியத்தில், 1883ஆம் ஆண்டு, பிராமண குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் தைரியமான நபர். அதனால்தான், வீர என்ற அடைமொழி அவர் பெயருக்கு முன்னால் சேர்ந்துகொண்டது. இளம் வயது புரட்சியாளர். சட்டப் படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்கு ‘India House’ என்ற மாணவர் தங்கும் விடுதியில் தங்கினார். ‘India House’-ஐ தொடங்கியவர் சியாம்ஜி கிருஷ்ண வர்மா என்ற புரட்சியாளர். இவருடன் தொடர்புடைய ஏனைய புரட்சியாளர்கள் பிக்காஜி காமா, லாலா ஹர்தயால், வி.என். சாட்டர்ஜி, வி.வி.எஸ். ஐயர், மண்டயம் பார்த்தசாரதி திருமால் ஆச்சார்யா, பி. எம். பப்பட் ஆகியோர் ஆவர்.

சாவர்க்கர், தான் தங்கியிருந்த India House-இல் ‘Free India Society’  என்ற புரட்சிகர இயக்கத்தைத் தொடங்கினார். Free India Society-இன் நோக்கம் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரட்டுவது. அதற்கு உகந்தது கெரில்லா முறை போர் என்ற எண்ணம் கொண்டவர் சாவர்க்கர். இந்தியர்களை புரட்சியின்பக்கம் ஈர்க்க ‘Indian War of Independence’ என்ற மகத்தான புத்தகத்தை எழுதினார். இந்தியர்களது 1857 ஆன் ஆண்டின் புரட்சியை ‘சிப்பாய் கலகம்’ என்று தப்பாக சித்தரித்தது ஆங்கில அரசு. நடந்த சம்பவம் கலகம் அல்ல, அது ஒரு சுதந்திரப் போர் என்று அறிவித்தார் சாவர்க்கர். அவர் எழுதிய ‘Indian War of Independence’ இந்தியப் புரட்சியாளர்களை ஊக்கப்படுத்தியது என்று சொன்னால் அது மிகையில்லை. பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் என பலரும் அப்புத்தக்கத்தால் ஈர்க்கப்பட்டனர். இப்புத்தகம் வெளிநாடுகளிலும் பிரசித்தம். ஆங்கில அரசாங்கம் சாவர்க்கரின் புத்தகத்தை தடை செய்தது. சாவர்க்கர், வெடிகுண்டு தயார் செய்வது எப்படி? கொரில்லா போர் தாக்குதல் செய்வது எப்படி? என்று கையேடுகளை தயார் செய்து தன் நண்பர்களுக்கு வினியோகம் செய்தார்.

மதன் லால் திங்ரா, இந்தியாவிலிருந்து லண்டனுக்கு பொறியியல் படிக்கச் சென்ற இளைஞன். திங்ரா India House-இல் தங்கினான். அவன் இந்தியாவில் இருக்கும் போதே புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டிருந்தான். India House-இல் சாவர்க்கரின் நட்பு கிடைத்தது, திங்ராவிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது. சாவர்க்கரால் உந்தப்பட்ட திங்ரா, இந்தியாவில் வங்காளத்தை இரண்டாக பிளவுபடுத்திய கர்சன் பிரபுவைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டினான். ஆனால் அதனை செயல்படுத்த முடியாமல் போயிற்று. கர்சனுக்கு பதில், கர்சன் வைலியைக் கொன்றான். கர்சன் வைலி இந்தியாவில் வேலை பார்த்த ஆங்கில அதிகாரி. அவன் இங்கிலாந்து திரும்பியிருந்தான். India House-இல் நடக்கும் சம்பவங்களை உளவு பார்த்தான். எனவே, கர்சன் வைலியை கொல்ல முடிவு செய்தான் திங்ரா. பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்குகொள்ள வந்த கர்சன் வைலி திங்ராவின் துப்பாக்கிக்கு இரையானான்.

இந்தியாவில் வீர சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர், 1909ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தை (Minto Morely Reforms) எதிர்த்து கிளர்ச்சி செய்தார். இந்த கிளர்ச்சியை தூண்டிவிட்டது வீர சாவர்க்கர் என்று பிரிட்டிஷ் காவல்துறை அவரை கைது செய்தது. வீர சாவர்கர் கப்பல் மூலமாக இந்தியா அழைத்துவரப்பட்டார். வரும் வழியில், பிரான்ஸ் நாட்டில் கப்பல் நின்றபோது வீர சாவர்க்கர் தப்பித்து பிரெஞ்சு காவலரிடம் சரணடைந்தார். சாவர்க்கரை துரத்தி வந்த பிரிட்டிஷ் காவல்துறை பிரெஞ்சு காவலருக்கு லஞ்சம் கொடுத்து சாவர்க்கரை மீட்டது. பிரிட்டிஷ் காவல்துறை செய்தது தவறு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இந்தியா கொண்டுவரப்பட்ட சாவர்க்கர்மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டன. ஒன்று, நாசிக் ஆட்சியர் ஜாக்சன் கொலை வழக்கு, மற்றொன்று பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டது. விசாரணையின் முடிவில் சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அவர் அந்தமான் சிறையில் 1911ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார்.

சாவர்க்கர் தன்னை ஜெயிலிலிருந்து விடுவிக்குமாறு கருணை மனுக்களை ஆங்கில அரசிடம் கொடுத்தார். 1921ஆம் ஆண்டு, ஆங்கில அரசாங்கம் சாவர்க்கரை அந்தமானிலிருந்து கொண்டு வந்து ரத்தினகிரி சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தபடியே, சாவர்க்கர் ஹிந்துத்வா பற்றிய கோட்பாடுகளை எழுதி அதை பிரசுரிக்கச் செய்தார். சாவர்க்கர் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அளித்த உத்தரவாதத்தின் பேரில், 1924ஆம் ஆண்டு வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார். 1937ஆம் ஆண்டு, எந்த நிபந்தனையும் இல்லாமல் வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் சாவர்க்கர். இருப்பினும், காவல்துறை எப்பொழுதும் சாவர்க்கரை கண்காணித்து வந்தது. விடுதலையான பிறகு, சாவர்க்கர் அகில இந்திய ஹிந்து மகா சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941ஆம் ஆண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாவர்க்கரை சந்தித்தார். இந்த சந்திப்புதான், பின்னாளில் நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை வழிநடத்த காரணமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *