Skip to content
Home » ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது. சுதந்திரப் போராட்டம் உச்சத்தைத் தொட்டிருந்தது. 1946 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. முஸ்லீம்களின் செல்வாக்கு பெற்ற முஸ்லீம் லீக் கட்சி, ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்னர் முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகளை தனியாக பிரித்து முஸ்லீம்களுக்கு என்று தனி நாடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. காங்கிரஸ் அதை எதிர்த்தது. ஹிந்து மகா சபாவும் எதிர்த்தது.

ஹிந்து மகா சபா மெல்ல வளர்ந்திருந்தது. ஹிந்து மதத்தின் மீது பற்று கொண்டவர்களும், ஹிந்து மக்களை அன்னிய மத பாதிப்பிலிருந்து குறிப்பாக இஸ்லாமியர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றவேண்டும் என்ற முனைப்பில் இருந்த பலரும் ஹிந்து மகா சபையில் சேர்ந்தனர், செயலாற்றினர். அப்படி ஹிந்து மகா சபாவில் தீவிரமாக செயலாற்றிய சிலர் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி காந்தியைக் கொல்ல முயற்சித்தனர். முதல் முயற்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் காந்தி கொல்லப்பட்டார்.

யார் அந்தக் கொலையாளிகள்? அவர்களுடைய பூர்வீகம்தான் என்ன?

நாத்துராம் விநாயக்ராவ் கோட்சே

இயற்பெயர் இராமச்சந்திரன். மராட்டியத்தில் பிறந்தவன். பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். இராமச்சந்திரனுக்கு முன்னர் மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பிறந்த ஆண் குழந்தைகள் எதுவும் தங்கவில்லை, ஒன்றன் பின் ஒன்றாக இறந்தனர். இது ஏதோ சாபம் என்று நினைத்த இராமச்சந்திரனின் பெற்றோர்கள், அவன் பிறந்தவுடன் அவனை பெண் குழந்தையாக பாவித்து, பெண் பிள்ளையைப் போல் ஆடை அணிவித்து. மூக்குத்தி அணிவித்து வளர்த்தனர். ’நாத்’ என்றால் மராட்டியில் மூக்கு என்று அர்த்தம். மூக்கு குத்தி வளர்க்கப்பட்டதால் இராமச்சந்திரனை அனைவரும்  ‘நாத்துராம்’ என்று அழைத்தனர். சில ஆண்டுகள் கழித்து இராமச்சந்திரனுக்கு சகோதரன் பிறந்தான். அதன் பின்னர் இராமச்சந்திரன் ஆண் பிள்ளையாக வளர்க்கப்பட்டான். இருப்பினும் ‘நாத்துராம்’ என்ற பெயர் அவனுக்கு தங்கிவிட்டது.

நாத்துராம் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கவில்லை. டெய்லர் வேலை செய்து வந்தான். 22 வயது இருக்கும் போது  ‘ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ என்ற ஹிந்துக்களுக்காக பாடுபடும் ஒரு இயக்கத்தில் சேர்ந்தான். ஹிந்து மகா சபையிலும் உறுப்பினரானான். கோட்சே பகவத் கீதையை மனப்பாடமாக தெரிந்து வைத்திருந்தான். அதர்மத்தை எதிர்க்க வன்முறையில் இறங்கினால் தவறில்லை என்று பகவத் கீதையை மேற்கோள் காட்டி வாதிடுவான் கோட்சே. சற்றே உணர்ச்சிவசப்படக்கூடிய சுபாவம் கோட்சேவினுடையது. ஆனால் அதை வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்வான்.

பூனா நகரின் ஹிந்து மகா சபையின் உள்ளூர் கிளையில் செயலாளர் பொறுப்பு வகித்தான். அப்போது, ஹைதராபாத் பிராந்தியம் தனி நாடாக இருந்தது. நிஜாம் மன்னர் ஹைதராபாத்தை ஆட்சி செய்து வந்தார். மன்னரும் அவருடைய பரிவாரங்களும் முஸ்லீம்கள். ஆனால் மக்களில் பெரும்பான்மையோர் ஹிந்துக்கள். நிஜாமும், Majilis-e-Ittehad-ul Mussalmeen என்ற இஸ்லாமிய கட்சியின் தலைவருமான காசிம் ரஸ்வியும் ஹிந்துக்களின் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர். ஹிந்துக்களின் உரிமைகளைப் பறித்தனர். அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக, கோட்சே ஹைதராபாத்தில் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டான். ஹைதராபாத்திலிருந்து பூனாவிற்குத் திரும்பிய கோட்சேவிற்கு நாராயண் ஆப்தேவின் நட்பு கிடைத்தது.

நாராயண் ஆப்தே

நாராயண் ஆப்தேவும் ஹிந்து மகா சபையின் உறுப்பினர். பட்டப்படிப்பு முடித்திருந்தவன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தான். சிறிது காலம் இந்திய விமானப் படையில் பணியாற்றி இருந்தான். தன் நண்பர்களுக்காக,  ‘துப்பாக்கி சுடுதல்’ பயிற்றுவிக்கும் ரைஃபிள் கிளப் ஒன்றை தோற்றுவித்தான். அமைதி போராட்டத்தினால் அரசியலில் எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாது என்ற தன் நண்பன் கோட்சேவின் கருத்துடன் உடன்பட்டான். எடுத்த முடிவில் உறுதியையும் தைரியத்தையும் வெளிப்படுத்துவான் ஆப்தே. கோட்சேவும் ஆப்தேவும் இணைந்து  ‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற நாளிதழை தோற்றுவித்தனர். காந்தியின் முஸ்லீம்களை தாஜா செய்யும் அரசியலையும், ஜின்னா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நிலையையும் கண்டித்து கோட்சே தன் நாளிதழில் எழுதினான். பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக ஹிந்து ராஷ்டிரா நாளிதழ் மேல் ஆங்கிலேயே அரசு நடவடிக்கை எடுத்தது.

கோபால் வினாயக் கோட்சே

கோபால் கோட்சே, நாத்துராம் கோட்சேவின் தம்பி. மெட்ரிக்குலேஷன் படிப்பை முடித்திருந்தான். அண்ணன் வேலை செய்யும் தையலகத்தில் தானும் வேலைக்குச் சேர்ந்தான். நாத்துராம் கோட்சே திருமணம் செய்துகொள்ளவில்லை. கோபால் கோட்சேவிற்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் இருந்தன. கோபால் கோட்சே ஹிந்து மகா சபாவில் சில நாட்கள் சேவை புரிந்தான். பின்னர், இராணுவத்தில் ஸ்டோர் கீப்பர் வேலை கிடைத்ததும் அங்கு சென்றுவிட்டான். இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது, கோபால் கோட்சேவிற்கு ஈரான் மற்றும் ஈராக்கில் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியா திரும்பிய கோபால் கோட்சேவை, சாவர்க்கரின் ஆற்றல் மிகுந்த பேச்சு கவர்ந்தது. பாரத நாடு துண்டாடப்படுவது குறித்து மனம் வெதும்பினான். நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்க வன்முறையில் இறங்கினால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தான். அண்ணனான நாத்துராம் கோட்சேயோ, ’தம்பி நீ குடும்பஸ்தன். ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடு’ என்றான். கோபால் கோட்சே யோசித்தான், முடிவெடுத்தான், போராட்டத்தில் இறங்குவதென்று. நாதுராமுடன் கைகோர்த்துக் கொண்டான்.

விஷ்ணு இராமகிருஷ்ண கர்கரே

சிறுவயதிலேயே தன் பெற்றோர்களால் ஒரு அனாதைப் பள்ளியில் விடப்பட்டவன். அங்கிருந்து ஓடிய கர்கரே வயிற்றுப் பிழைப்புக்காக உணவகங்களில் பணிபுரிந்தான். பின்னர் ஊர் ஊராக நாடகம் நடத்தும் ஒரு கூட்டத்துடன் பயணமானான். இறுதியில் அஹமத் நகரில் சொந்தமாக ஒரு உணவகத்தைத் தொடங்கினான். ஹிந்து மகா சபையில் உறுப்பினராக சேர்ந்து தீவிரமாக செயல்பட்டான். அங்கு அவனுக்கு ஆப்தேவின் நட்பு கிடைத்தது. வங்கத்தில், நவகாளியில் ஹிந்துக்களின் மீது முஸ்லீம்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். நவகாளி ஊரே சூறையாடப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஹிந்துக்களின் துயரைத் துடைக்க, ஹிந்து மகா சபை கர்கரேயின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. அங்கு மூன்று மாதங்கள் தங்கிய கர்கரே, ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுவதையும் கற்பழிக்கப்படுவதையும் நேரில் பார்த்தான். ஆனால் காந்தி நவகாளியில் ஒரு கற்பழிப்பு சம்பவம் கூட நடக்கவில்லை என்று கூறிய போது மனம் வெதும்பினான், ஆத்திரம் கொண்டான்.

மதன் லால் பாவா

தேசப் பிரிவினைக்கு முன்னர் ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாக்பட்டான் என்னும் ஊரைச் சேர்ந்தவன். சிறுவயது முதலே போராட்ட குணம் கொண்டவன். வீட்டை விட்டு ஓடிச்சென்று கப்பற்படையில் சேர முயன்றான். ஆனால் அதற்கான தேர்வில் தோல்வியடைந்தான். பின்னர் பூனா சென்று இராணுவத்தில் சேர்ந்தான். பின்னர் இராணுவத்தை விட்டு சில ஆண்டுகளில் வெளியேறினான்.

பாவா 1947 ஆம் ஆண்டு, பிரிவினை சமயத்தில், சொந்த ஊரான பாக்பட்டானுக்குத் (இப்பொழுது பாக்கிஸ்தானில் உள்ள ஒரு ஊர்) திரும்பினான். அப்போது பாக்பட்டான் ரண பூமியாக இருந்தது. ஹிந்துக்கள் அவர்களது வீட்டை விட்டு விரட்டப்பட்டனர். போக மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் முன்பே தாய்மார்கள் கொல்லப்பட்டனர். ஹிந்துக்களின் கடைகள், தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டன. ஹிந்துக்கள் தங்களது உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்தனர். உயிர் பிழைத்தால் போதும் என்று அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். தப்பிப் பிழைத்து வந்தவர்கள் பலர் தங்கள் உறவுகளை இழந்திருந்தனர்.

பாரதப் பிரிவினையின் போது சுமார் 10 இலட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 1.4 கோடி பேர் இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த கலவரத்தில் மதன் லால் பாவாவின் தந்தையும், அவனது அத்தையும், அவன் கண் முன்னே இஸ்லாமிய கும்பலால் கொல்லப்பட்டனர். மதன் லால் பாவா பாக்கிஸ்தானில் இருந்த அவனுடைய சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டான். இந்தியாவில் தஞ்சமடைந்தான். இந்தியா வந்த அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் அவனுக்கு கோட்சே மற்றும் ஆப்தேவின் நட்பு கிடைத்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஹிந்து மக்களுக்கு எந்த கருணையையும் காட்டாத அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினான்.

திகம்பர் இராமச்சந்திர பாட்கே

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவன். சிறிய வேலைகளை செய்து வந்தான். சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டான். சிறிது நாட்கள் பொது சேவை செய்து வந்தான். வீடு வீடாகச் சென்று நன்கொடை வசூலிப்பான். வசூலாகும் தொகையில் கால்பங்கை தன் சொந்த செலவிற்கு எடுத்துக்கொள்வான். கத்தி, வாள், பாதுகாப்பு உலோக உறைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து அவற்றை தெருவோரங்களில் விற்றான். இதில் நல்ல வருமானம் கிடைக்கவே, சொந்தமாக ஆயுதங்கள் விற்கும் கடையொன்றைத் தொடங்கினான். அந்த காலத்தில் இதுபோன்ற கடைகள் நடத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உரிமமும் வாங்க வேண்டியதில்லை. நாளடைவில் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கி, வெடி மருந்துகள் போன்றவற்றையும் விற்பனை செய்தான். ஹைதராபாத் ராஜ்ஜியத்தில் கலவரம் நடந்தபோது, பாட்கேவிற்கு நல்ல வியாபாரம் நடந்தது. ஹிந்து மகா சபையின் தொடர்பும் கிடைத்தது. ஹிந்து மகா சபையின் முக்கியமான நிகழ்வுகளுக்கு தவறாமல் சென்று விடுவான். சாவர்க்கரின் வீட்டில் பாட்கேவிற்கு கோட்சே மற்றும் ஆப்தேவின் நட்பு கிடைத்தது.

சங்கர் கிஸ்தையா

படிப்பறிவு இல்லாதவன். சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தான். பூனாவில் பாட்கேவின் தொடர்பு கிடைத்தது. பாட்கேவின் உதவியாளன் ஆனான். அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமானான். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாட்கேவின் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது சங்கரின் வேலை.

டாக்டர் தத்தாத்ரேயா பாராச்சூர்

குவாலியரைச் சேர்ந்த மருத்துவர். பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். 1934 ஆம் ஆண்டு, அரசு உத்தியோகத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு சொந்தமாக மருத்துவம் பார்த்துவந்தார். கூடவே, ஹிந்து மகா சபாவில் தீவிரமாக வேலை செய்துவந்தார். அப்போது கோட்சே மற்றும் ஆப்தே இருவரது நட்பும் பாராச்சூருக்கு கிடைத்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *