மலர்வதி தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவள் எப்போதுமே அப்படித்தான். தொடர்ந்து பலமுறை அடித்தால் எடுத்து சர்வ சாதாரணமாக ஸாரி என்று சொல்லிவிட்டுப் பேச ஆரம்பிப்பாள். அலட்சியம் காரணமல்ல. அப்படி இருந்தால் அவளுடைய நண்பர்கள் பலரும் மீண்டும் அவளை அழைக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வாள். அவற்றில் சில பொய்யாகக்கூட இருக்கும். ஆனால் ஏதோ ஒரு நியாயமான காரணம் இருந்திருக்கும் என்று நினைக்குமளவுக்குக் குரலில் நேர்மை இருக்கும். எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் பலருக்கும் இதே எண்ணம்தான் அவளைப் பற்றி இருந்தது. ஆனால் அவசரமாகக் கூப்பிடும்போது மலர்வதி பதிலளிக்காமல் இருந்தால் எக்கச்சக்கமாகக் கோவம் வரும். அடுத்த முறை அவள் கூப்பிடும்போது எடுக்கக் கூடாது என்று தோன்றும்.
ஒருநாள் நேருக்கு நேராகச் சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக இதுபற்றிச் சண்டைபோட்டேன். என்னென்ன காரணங்களால் அழைப்பை ஏற்க முடியாமல்போகிறது என்று விளக்கினாள். மனசு சரியில்லை, உடம்பு சரியில்லை, அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம், பேச முடியாத சூழல் என்று பெரும்பாலும் பொதுவான காரணங்கள்தான் என்றாலும் அவள் பதில் சொன்ன விதம் இதற்காகக் கோபப்பட வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.
இப்போதும் அபபடித்தான். அழைப்பை எடுக்கவில்லை. நான் அழைத்த காரணம் அவசரமானது என்பதால் அந்த அவசரத்தைத் தெரிவித்து ஒரு செய்தி அனுப்பினேன். ஐந்து நிமிடங்களில் அவளே கூப்பிட்டாள். சொல்லு, என்ன அவ்வளோ அவசரம் என்று அவள் கேட்கும்போது கூடவே யாரோ தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது. உடன் வேறு சில ஓசைகளும் கேட்டன. கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டுச் சில வினாடிகள் கழித்துப் பேச ஆரம்பித்தாள். பின்னணியில் எந்த ஓசையும் இல்லாமல் தெளிவாகக் கேட்டது. தனியிடத்திற்கு வந்து பேசுகிறாள் என்பது புரிந்தது. விஷயத்தைச் சொல்லி முடித்தேன். நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு வீட்டுக்கு வா. ரெண்டு பேரும் போய் பாத்துப் பேசிடுவோம் என்றாள். ஏழு மணிக்குள்ள எழுந்து ரெடியாயிடுவியா என்று கேட்டேன். எல்லாம் ஆயிடுவேன், நீ கரெக்டா வந்து சேரு என்றாள்.
விஷயத்தைச் சொல்லிவிட்ட நிம்மதியை மீறி ஒரு கேள்வி எழுந்தது. அந்தச் செருமல் சத்தம் யாருடையது? ரொம்பவும் தெரிந்த ஆளுடைய சத்தமாக இருந்தது. யாராக இருந்தால் என்ன என்ற எண்ணம் வந்தாலும் தெரிந்த குரலாக இருக்கிறதே என்ற எண்ணம் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. எனக்குத் தெரிந்த ஆளாக இருந்தால் அவருடன்தான் இருக்கிறேன் என்று மலர் சொல்லியிருக்கலாமே. கொஞ்சம் இரு என்று ஏன் தள்ளி வந்து பேசினாள்?
ஒரு பெண் ஒரு ஆணுடன் ஏதோ ஒரு இடத்தில் இருந்தால் அந்த ஆண் யார் என்று கேள்வி எழுப்புவது தவறுதான். ஆனாலும் பழக்க தோஷத்தால் அந்தக் கேள்வி எழுந்துவிடுகிறது. வலிந்து எழுப்பும் கேள்விகளைத் தவிர்க்கும் அளவிற்குத் தானாக எழும் அல்லது தானாக எழுவதாக நாம் நினைத்துக்கொள்ளும் கேள்விகளை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. குறைந்தபட்சம் என்னால். ஆனால் ஒருபோதும் அந்தக் கேள்வியை அந்தப் பெண்ணிடம் கேட்க மாட்டேன். ஆனால் அந்தச் செருமல் சத்தம் எனக்கு மிகவும் அறிமுகமானதாக இருந்ததால் யார் அவர் என்ற கேள்வி என்னை விட்டு அகலவில்லை.
அடுத்த சில நாட்களின் வேலைகளின் வெள்ளத்தில் அந்தக் கேள்வி மறந்துபோனாலும் திடீரென்று அது என் முன் எழுந்தது. அதற்கான விடையையும் சுமந்து வந்தது. சார்லஸுடன் நெடுநேரம் தொலைபேசியில் உரையாட வேண்டியிருந்தது. அவன் அடுத்த வாரம் மும்பை போவதற்குள் நாங்கள் இருவரும் சேர்ந்த முடிக்க வேண்டிய வேலைகள், மேற்கொள்ள வேண்டிய சந்திப்புகள் ஆகியவை நிறைய இருந்தன. பரிசீலிக்க வேண்டிய கோப்புகள் நிறையத் தேங்கியிருந்தன. பணியாளர்களின் சந்தேகங்களுக்கு என்னால் முடிந்தவரை பதில்களைக் குறித்துவைத்துவிட்டேன். சில சந்தேகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அவை பழைய விவகாரங்களின் தொடர்ச்சி என்பதால் சார்லஸுக்குத்தான் தெரியும். அவன் சென்னையில் கணக்குத் தணிக்கை அலுவலகம் நடத்துவதுடன் பெங்களூரில் ஒரு கூட்டாளியுடன் பயண ஏற்பாடு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறான். கணக்குத் தணிக்கை நிறுவனத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட ஒரு கூட்டாளிபோலத்தான் சார்லஸ் என்னை வைத்திருக்கிறான். சம்பளம் வாங்கும் ஊழியனாக இருந்தாலும் நான் சார்லஸின் நெருங்கிய நண்பன் என்பதால் என்னிடம் நிறையப் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறான். அவன் இல்லாதபோது முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க எனக்கு அதிகாரம் உண்டு. அவன் ஊரில் இல்லாதபோது நான்தான் முதலாளிபோல இருப்பேன். என்னைக் காட்டிலும் முதுநிலையில் உள்ளவர்கள்கூட என்னை முதலாளியாகவே நடத்துவார்கள்.
பேசிக்கொண்டிருக்கும்போது சார்லஸ் தொண்டையைச் செருமினான். அந்த ஓசை மலர்வதியின் தொலைபேசி அழைப்பின்போது எழுந்த கேள்வியை நினைவுபடுத்திப் பதிலையும் சொன்னது. சந்தேகமே இல்லை. அந்தச் செருமல் சார்லஸுடையதுதான். பொதுவாக ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட அவனுக்கு இந்தத் தொண்டைச் செருமல் பிரச்சினை மட்டும் ஏனோ சரியாகவே இல்லை. இன்னொருவரின் தொலைபேசி வழியே வந்ததால் குழப்பமாக இருந்தது. இப்போது தெளிவாகிவிட்டது. அன்று மலர்வதி இவனுடன்தான் இருந்திருக்கிறாள். அப்படியானால் அவள் ஏன் என்னிடம் அதைச் சொல்லவில்லை? அதில் என்ன பிரச்சினை? இத்தனைக்கும் சார்லஸை அறிமுகப்படுத்திவைத்ததே நான்தான். அவளுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கான கணக்கு வழக்குகளில் இருந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அவள் என் உதவியை நாடியபோது நான்தான் சார்லஸிடம் அவளை அறிமுகப்படுத்திவைத்தேன். அப்படி இருக்கையில் சார்லஸ் தன்னுடன் இருந்ததை அவள் ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று குழப்பமாக இருந்தது. சொல்வதற்கான அவசியம் இலலாதபோது ஏன் சொல்ல வேண்டும் என்றும் தோன்றியது. நான் அவசரமாகப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்ததால் அந்த விஷயம் என்ன என்பதில்தான் கவனம் இருக்குமே தவிர எங்கே இருக்கிறோம், யாரோடு இருக்கிறோம் என்பதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று தோன்றாது என்பதையும் யோசித்துப் பார்த்தேன். எது எப்படி இருந்தாலும் இது தேவையில்லாத ஆராய்ச்சி என்ற எண்ணத்துடன் அந்தச் செருமலை மறக்க விரும்பினேன்.
0
ஆனால், அது என்னை மறக்க விடவில்லை. ஒரு வாரம் கழித்து கேத்ரின் மாலை நேரத்தில் அலுவலகம் வந்திருந்தாள். அவள் அணியும் ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் எப்போதுமே சிறப்பாக இருக்கும். மாநிறம் கொண்டவர்கள் பொதுவாக அணியத் தயங்கும் அடர் வண்ணங்களையும் கேத்ரின் அணிவாள். அவளுடைய உடல் மொழியில் தெரியும் கம்பீரம் அந்த உடைக்கே தனி அழகைக் கொடுக்கும். சற்றே பருமனாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படாத தன்னம்பிக்கையும் அவள் முகத்திலும் உடல் மொழியிலும் தெரியும். அதுவே அவளை அழகாக்குகிறது என்று தோன்றும். அன்று நீலநிற டி-ஷர்ட்டும் கறுப்பு ஜீன்ஸும் அணிந்திருந்தாள். மற்ற பெண்களைப் போலக் கைப்பை வைத்திருக்க மாட்டாள். இரு தோள்களிலும் மாட்டியபடி முதுகில் ஒட்டியிருக்கும் பையைத்தான் எப்போதும் வைத்திருப்பாள். வந்ததும் என்னுடைய அறைக்குள் நுழைந்து, “சால்ஸ் எப்போ வருவான்னு தெரியுமா?” என்றாள். கார் இல்லாததைப் பார்த்து அவன் இல்லை என்னும் முடிவுக்கு வந்திருப்பாள் என்பதைப் புரிந்துகொண்டேன். “உக்காரு” என்றேன். “நைஸ் டி-ஷர்ட்” என்றேன். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டாள். “டீ சாப்படறயா?” என்றேன். “வேண்டாம். சால்ஸ் எப்ப வருவான்? ஷோக்கு டயமாச்சு” என்றாள். “வந்துருக்க வேண்டிய நேரம்தான். போன் பண்ணிப் பாத்தியா?”
கேத்ரின் உதட்டைச் சுழித்தாள். “பண்ணாம இருந்துருப்பேனா? அவன் எடுத்தாதானே” என்றாள். கூலிங் கிளாஸைக் கழற்றி டி-ஷர்ட்டில் மாட்டிக்கொண்டு, “நீ ட்ரை பண்ணிப் பாரு” என்றாள். நான் என் போனை எடுத்து அவன் எண்ணை அழைப்பதற்குள் கார் வரும் சத்தம் கேட்டது. சார்லஸ் நேராக என்னுடைய அறைக்கு வந்தான். கேத்ரினைப் பார்த்து, “நீ எப்ப வந்த?” என்றான். “ஒன்னோட மொதல் பொண்டாட்டி இருக்கும்போது என்னைக்கூட உனக்குக் கண் தெரியுதா?” என்றாள் கேத்ரின். சார்லஸும் நானும் சிரித்தோம். “அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு சார்லஸ் வெளியேறினான்.
“வேலையெல்லாம் எப்டி போயிட்ருக்கு?” என்று கேட்டாள் கேத்ரின்.
“அதுக்கென்ன, நல்லாத்தான் போகுது. காலைல ஒன்பது மணிக்கு வந்தா ராத்திரி எட்டு மணிக்கு முன்னால சீட்ட விட்டு எழுந்திருக்க முடியல. அவ்வளவு வேலைன்னா பாத்துக்க.”
மெல்லிய புன்னகையுடன் கேத்ரின் தலையாட்டினாள். மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். “உன் பிசினஸ் எப்டி போகுது?” என்றேன். “அதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல. நான்தான் க்ளையன்ஸை ரெஸ்ட்ரிக்ட் பண்ணிக்கறேன்.”
“ஒரு ஆஃபீஸ் போட்டு இன்னும் பெருசா பண்றதுதானே? கன்சல்டேஷனோட நிறுத்திக்காம நீயே எடுத்து செஞ்சிதரலாம் இல்லயா?”
“வேணாம்பா. இதுவே போதும். டென்ஷன் இல்லாம இருக்கணும். அதுதான் முக்கியம். ரெண்டு பேரும் டெய்லி 12 மணிநேரம் பிஸியா இருந்தா மத்த விஷயங்கள் எப்படி கவனிக்கறது?”
“அது சரி.”
சார்லஸ் திரும்பி வந்தான். இருவரும் கிளம்பினார்கள்.
“பேங்ளூர் ஃபைல் எந்த லெவல்ல இருக்கு?” என்றான் சார்லஸ்.
“ஃபைனல் ஸ்டேஜ்” என்றேன்.
“நைட் கூப்புட்றேன். ஏதாவது இஷ்யூஸ் இருந்தா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.”
“அவனே ஒம்போது மணிக்குதான் வீட்டுக்குப் போறான். அதுக்கப்புறம் நீ கூப்டியானா மது கட்டையை எடுத்து இவம் மண்டைய பொளந்துடுவா. காலைல பேசிக்கோ” என்ற கேத்ரின், “பை ராம்” என்று சொல்லிவிட்டுக் கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினாள். சார்லஸ் புன்னகையுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.
அவர்கள் போனதும் மீண்டும் வேலையில் மூழ்கினேன். ஏழு மணி அளவில் ஒருவழியாக வேலையை முடித்துவிட்டு எழுந்து கை கால்களை நீட்டிச் சோம்பல் முறித்தேன். டேபிளில் வைத்திருந்த பிரட் பஜ்ஜி ஆறியிருந்தது. இன்டர்காமில் செக்யூரிட்டியை அழைத்தேன். “சூடா ஏதாவது இருந்தா வாங்கிட்டு வாங்க. அப்படியே ஃப்ளாஸ்க்ல காஃபி வாங்கிடுங்க” என்று சொல்லிப் பணம் கொடுத்தேன். “இத எடுத்து வெளில போடுங்க” என்றேன் பிரட் பஜ்ஜியைச் சுட்டிக்காட்டி.
சூடாக இரண்டு வடைகளைச் சாப்பிட்டுக் காபி குடித்தபோது கேத்ரினைப் பற்றிய நினைவுகள் மனதில் ஓடின. என்னையும் சார்லஸையும் வைத்துக் கிண்டலடித்தாலும் அவளுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். சார்லஸிடம் பேச முடியாத விஷயங்களையெல்லாம் என்னிடம் சொல்லுவாள். சார்லஸைப் பற்றி வேறு யாரிடமும் எதிர்மறையாகப் பேச மாட்டாள். அவ்வப்போது மதுமிதாவுக்கு போன் செய்து பேசுவாள். போன மாதம்கூட வீட்டுக்கு வந்திருந்தாள். மதுவின் பிறந்தநாளுக்கு அழகான புடைவை ஒன்றைப் பரிசளித்துவிட்டுப் போனாள்.
கேத்ரினைப் பற்றி யோசிக்கும்போது போன வாரம் அவள் தொலைபேசியில் அழைத்தது தற்செயலாக நினைவுக்கு வந்தது. பெரும்பாலான நேரங்களில் சார்லஸைப் பற்றி விசாரிப்பதற்காகத்தான் அழைப்பாள். அப்போதும் அப்படித்தான். “சால்ஸ் எங்கப்பா போனான்? ஃபோனே எடுக்க மாட்டேங்கறான்” என்றாள். “தெரியல. கூப்ட்டு பாக்கறேன்” என்று சொன்னேன். ஆனால் கூப்பிடவில்லை. அன்றுதான் வேறொரு அவசர விஷயமாக மலரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். பலமுறை அடித்தும் அவள் எடுக்காததால் செய்தி அனுப்பிய பின் அவள் பேசினாள். அப்போதுதான் அந்தச் செருமல் சத்தம் கேட்டது என்பது இப்போது நினைவுக்கு வந்தது.
இது உனக்குத் தேவையில்லாத வேலை. யாரோ யாருடனோ நெருக்கமாகப் பழகினால் உனக்கு என்ன என்ற கேள்வி முதலில் எழுந்தது. இது சுயநலம் பிடித்த கேள்வி என்று அதைப் புறந்தள்ளினேன். ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆண், பெண்கள் ஒன்றாகப் பயணிப்பதை, திரைப்படம் பார்ப்பதை, உணவகத்தில் அருந்துவதை, காஃபி ஷாப்களில் அரட்டை அடிப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் யார், ஏன் அங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பிக்கொள்கிறேனா? மலர்வதி எனக்குத் தூரத்துச் சொந்தம். சார்லஸ் என் நண்பன். மலர்வதியின் கணவன் சுவாமிநாதனும் என் நண்பன். சார்லஸின் மனைவி கேத்ரின் எனக்கு அன்பான தோழி. இவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை யாரோ, யாருடனோ என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அப்படி எடுத்துக்கொள்வது சுயநலம். இதில் எனக்குச் சம்பந்தம் இருக்கிறது. பங்கு இருக்கிறது. மலரால் தங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் கேத்ரின் என்னைத்தான் முதலில் கேட்பாள்.
ஆனால் ஒரே ஒருநாள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தார்கள், எத்தனை முறை அழைத்தாலும் எடுக்கவில்லை என்பதை வைத்து எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? அப்படியே வந்தாலும் மலரிடமோ சார்லஸிடமோ இதைப் பற்றி எப்படிப் பேச முடியும்? நீ யார் என்னைக் கேட்க என்று இருவருமே சொல்ல மாட்டார்கள் என்பது நிச்சயம். இதில் கவலைப்படவோ கேள்வி கேட்கவோ என்ன இருக்கிறது? ரெண்டு பேரும் காஃபி ஷாப்பில் சந்திப்பது தவறா, முக்கியமாக ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போது அழைப்புக்குப் பதிலளிக்காதது தவறா என்று அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது? தவிர, மலரும் சார்லஸும் எனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இப்படியெல்லாம் அவர்களிடம் கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஒன்று இன்னொருவரின் அந்தரங்கத்தில் நுழைவதில் தயக்கம். அதை ஒருவழியாகத் தாண்டினாலும் எப்படி என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய் என்று அவர்கள் திரும்பக் கேட்டுவிட்டால் பிறகு அவர்கள் முகத்திலேயே என்னால் விழிக்க முடியாது. அவர்களை அசிங்கப்படுத்திவிட்ட குற்றவுணர்வு என்னைப் பற்றிக்கொள்ளும். மலரிடமாவது பயங்கரமான பீடிகை போட்டுக் கேட்டுவிடலாம். ஆனால் சார்லஸிடம் கேட்கவே முடியாது. அவனைப் போன்ற பெருந்தன்மையான, நேர்மையான மனிதர்களை நான் மிக அரிதாகவே சந்தித்திருக்கிறேன். அவனிடம் இப்படியெல்லாம் பேசவே முடியாது.
அவனுடைய ஆளுமை மலரை அவன்பால் ஈர்த்திருக்கலாம். அது சாதாரண ஈர்ப்பாகவும் இருக்கலாம்; அசாதாரணமானதாகவும் இருக்கலாம். ஆனால் சந்தேகம் தொனிக்கும் கேள்வியை அவனிடம் கேட்க முடியாது. மலரிடம் கேட்டு அவள் அவனிடம் சொல்லிவிட்டால் வேறு வினையே வேண்டாம். எங்கிட்ட ஏதாவது பிரச்சினைன்னா எங்கிட்டயே பேச வேண்டியதுதானே என்று கேட்பான். அதை என்னால் எதிர்கொள்ள முடியாது. அதன் பிறகு இங்கே என்னால் நீடிக்க முடியாது. இதைப் போன்ற வேறு இடம் எளிதில் கிடைக்காது. சுயநலமாகவே இருக்கட்டும். என்னால் இதைப் பற்றிப் பேசிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க முடியாது.
இப்போது என்ன ஆகிவிட்டது? தொடர்ந்து அழைப்புகள் வந்தும் அவற்றை எடுக்காமல் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவுதானே. இதை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்? நல்லவேளையாகக் கேத்ரினுக்கு இது தெரியாது. அப்படியே இருக்கட்டும். இதை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான்.
0
விட முடியாது என்பதை உணர எனக்கு அதிக காலம் ஆகவில்லை. அடுத்த சில வாரங்களில் கேத்ரின் நான்கைந்து முறை எனக்கு போன் செய்து “சால்ஸ் எங்கப்பா போனான்? ஃபோனே எடுக்க மாட்டேங்கறான்?” என்று அவஸ்தையோடு கேட்டாள். “கூப்ட்டு பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு நானும் அழைத்தேன். அவன் எடுக்கவில்லை. “Cathrine is trying to reach you in vain” என்று செய்தி அனுப்பிவிட்டு அதை மறக்க முயற்சி செய்தேன். போன வாரம் கேத்ரின் போன் செய்து, “ஸாரி ராம். உன்ன ரொம்ப தொல்லப்படுத்தறேன். இந்த சால்ஸ் ஏன் இப்படிப் பண்றான்னு தெரியல” என்றாள். அவன் குரலில் சிறிய விம்மல் எட்டிப் பார்த்ததும் என் மனம் கலங்கியது. “நான் கூப்ட்டு பாக்கறேன். எப்டியும் ஈவ்னிங் வருவான். அப்போ அவங்கிட்ட இதப் பத்தி பேசறேன். நீ ஒண்ணும் சண்டபோடாத” என்றேன்.
“தேங்ஸ் ராம்” என்றாள் கேத்ரின். அவள் குரலில் சிறு ஆசுவாசம் தெரிந்தது.
என் குறுக்குப் புத்தி அப்போது வேலை செய்தது. சார்லஸுக்கு அடிப்பதற்குப் பதில் மலருக்கு அடித்தேன். எதிர்பார்த்தபடியே எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அடித்தேன். எடுக்கவில்லை. என் இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. அவள் வேறு இடத்தில்கூட இருக்கலாம். ஆனால் மனம் அவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்துக் கற்பனை செய்துகொண்டது. எவ்வளவு முயன்றாலும் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை அவள் அவனுடன் இருந்தால் நான் கூப்பிட்டுக்கொண்டிருப்பதைச் சொல்லியிருப்பாள். கேத்ரின் தன்னை அழைத்துக்கொண்டிருப்பதை அவன் நினைத்துப் பார்ப்பான். அவனுடைய கூர்மையான மூளை இரண்டையும் இணைத்துப் பார்க்கும். நான் உளவு பார்க்கிறேன் என்று நினைப்பான். தற்செயலாக நான் அழைத்ததாகவும் நினைக்கலாம். ஆனால் நான் உளவு பார்ப்பதாக அவன் நினைக்கவே சாத்தியக்கூறு அதிகம். என் படபடப்பு அதிகரித்து. அவளைக் கூப்பிட்டிருக்கவே கூடாது. மாலையில் அவனிடம் கேத்ரின் சார்பில் பேசவும் முடியாது. பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன்.
மாலையில் சார்லஸைப் பார்த்தபோது படபடப்பை மறைத்துக்கொண்டு வழக்கம் போல் பேசினேன். அவள் முகத்திலோ குரலிலோ எந்த மாற்றமாவது தெரிகிறதா என்று கவனித்தேன். துளிக்கூடத் தெரியவில்லை. மலர் வழக்கம்போல அழைப்பை எடுக்காமல் இருந்திருக்கிறாள். அவள் வேறு இடத்திலும் இருந்திருக்கலாம். இவனுடன் இருந்திருந்தாலும் என் அழைப்புகளைப் பத்தி இவனிடம் சொல்லவில்லை. அப்படியானால் இவனும் கேத்ரினின் அழைப்புகளைப் பற்றிப் பேசியிருக்க மாட்டான். நல்லவேளை. தப்பித்தேன். மீண்டும் கேத்ரின் இவனைப் பற்றிப் புகார் செய்தால் நேரடியாக இவனிடம் பேசிவிடலாம். கேத்ரினின் மன வருத்தத்தை அவள் சார்பில் சொல்வதை இவன் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டான்.
அடுத்த நாள் கேத்ரினா அலுவலகத்திற்கு வந்தாள். வழக்கம் போலவே ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்திருந்தாள். ஆனால் இரண்டும் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப்போகவில்லை. அதுபற்றி எதுவும் சொல்லாமல் “டீ சாப்பிடறயா?” என்று கேட்டேன். “சாப்பிடலாம். ஆனா வெளிய போய் சாப்பிடலாம்” என்றாள். “எனக்கு நெறய வேலை இருக்கும்மா” என்றேன். “பரவாயில்லை வா” என்றாள். “சால்ஸ் எங்கே?” என்று அவள் கேட்கவில்லை என்பது அப்போதுதான் உறைத்தது. சார்லஸ் இருக்க மாட்டான் என்று தெரிந்தே வந்திருக்கிறாள் என்று பட்டது. “வா போகலாம்” என்றாள். வழக்கமான புன்னகை அவள் முகத்தில் இல்லை.
கிளம்பினேன். என்னுடைய இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றோம். வண்டி கிளம்பியதும் கண்ணாடியைச் சற்றே திருப்பி அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கூலிங் கிளாஸ் அணிந்திருந்ததால் கண்களைப் பார்க்க முடியவில்லை. முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. புன்னகைக்காதபோது அவள் உதடுகள் அவ்வளவு அழகாக இல்லை என்று பட்டது. கண்ணாடியைப் பழைய நிலைக்குத் திருப்பிவிட்டு அண்ணாசாலை புகாரி உணவகத்திற்கு வண்டியை ஓட்டினேன்.
புகாரியில் முதல் தளத்தில் இரு நாற்காலிகள் மட்டுமே கொண்ட மேசையில் அமர்ந்துகொண்டோம். சமோசா கொண்டுவரச் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். அவளும் என் முகத்தை நேராகப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.
“இந்த மலர்வதி எப்படிப்பட்ட பொண்ணு?”
எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. கேதரின் எப்படி இந்தக் கோணத்தைப் பிடித்தாள் என்று புரியவில்லை. எதைப் பற்றி அவளிடம் பேசக் கூடாது என்று நினைத்தேனோ அதைப் பற்றியே எடுத்த எடுப்பில் கேட்கிறாள்.
“ஏன் கேக்கற?” என்றேன்.
“இந்த டுபாகூர் வேலைதானே வேணான்றது” என்பதுபோல ஒரு பார்வை பார்த்துவிட்டு உதட்டைக் கிண்டலாகச் சுழித்தபடி, “ராம், நெஜமா சொல்லு, நான் ஏன் கேக்கறேன்னு உனக்குத் தெரியாது?”
இந்த நேரடித் தாக்குதலை நான் எதிர்பாக்கவில்லை. உண்மையில் இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மலர்வதி – சார்லஸ் விஷயத்தில் எனக்குச் சந்தேகம் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் சந்தேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன சொல்ல முடியும்? இப்போது இவள் நேரடியாக அவளைப் பற்றிக் கேட்கிறாள் என்றால் இவளுக்கு ஏதோ தெரிந்திருக்க வேண்டும். அது என்னவென்று தெரியாமல் எப்படிப் பேசுவது.
“கேத்ரின்… சத்தியமா சொல்றேன். நீ என்ன கேக்றன்னு எனக்குப் புரியல. மலர் எப்படிப்பட்ட பொண்ணுன்னா பொதுவா நல்ல பொண்ணு. ஹெல்ப்பிங் டென்டென்சி உள்ள பொண்ணு. நெறய ஃப்ரெண்ட்ஸ் அவளுக்கு உண்டு. ஹஸ்பெண்ட் பேங்க்ல வேல பாக்கறான். இவ எஜுகேஷன் ஃபீல்டுல வேலை செய்யற என்ஜிஓல பிஆர் டிபார்ட்மென்ட்ல இருக்கா. அவளோட ஊர் சுத்தற சுபாவத்துக்கு இது பொருத்தமான வேலை. மூணு நாலு லேங்குவேஜ் அவளுக்குத் தெரியும். இதுதான் அவளைப் பத்தின ஷார்ட் ப்ரொஃபைல். இதெல்லாம் உனக்கும் தெரிஞ்சதுதானே…”
“அதான் நானும் சொல்றேன். எனக்குத் தெரிஞ்சதையே சொல்றதுக்கா நான் ஒன்ன கேக்கறேன்?”
“ஸ்பெஸிஃபிக்கா கேளு கேத்ரின், கொழப்பாத.”
சமோசா வந்தது. ஒரு சமோசாவை எடுத்து நிதானமாகச் சாப்பிட ஆரம்பித்த கேத்ரின், “சால்ஸ் மலரோட க்ளோஸா இருக்கானோன்னு தோணுது ராம். அவங்க ரெண்ட பேரையும் அங்க இங்க பாத்ததா எங்கிட்ட சில பேர் சொன்னாங்க. சாலஸ் ஃபோன் பல சமயம் நாட் ரீச்சபிள் ஏரியால இருக்கறத வெச்சிப் பாக்கும்போது எனக்கு அந்த சந்தேகம் வருது.”
“யார் சொன்னது?”
“அதுவா முக்கியம்? நீயா இருந்தா சொல்லியிருக்க மாட்ட. உனக்கு சால்ஸ்தான் முக்கியம். மலர் வேற உன் சொந்தக்காரப் பொண்ணு.”
எனக்குக் கோபம் வந்தது.
“சில்லியா பேசாத கேத்ரின். சார்லஸ் என் க்ளோஸ் ஃப்ரெண்டுதான். எனக்கு ரொம்ப முக்கியம்தான். அதுக்காக உன்னைப் பத்தி கவலப்படாம இருப்பேன்னு நெனச்சியா? எவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்தாலும் என்னோட சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் இந்த விஷயத்துல நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். அப்புறம் என்ன சொன்ன, மலர் என் ரிலேட்டிவா? ஆமா, என் சித்தியோட தம்பி பொண்ணு. அதுக்காக? தப்பு யார் செஞ்சாலும் தப்புதான். நீ இந்த மாதிரி பேசுவன்னு எதிர்பார்க்கல.”
“ஹே… கூல். ஏதோ ஃப்ரஸ்ட்ரேஷன்ல சொல்லிட்டேம்பா. சீரியஸா எடுத்துக்காத. ஒன்ன பத்தி எனக்கு தெரியாதா?”
என் படபடப்பு அடங்கவில்லை.
“ஸாரி ராம். நா அப்டி கேட்டது தப்புதான். தயவுசெஞ்சு அதை மறந்துரு. இப்ப பிரச்ன என்னமோ அதப் பத்தி பேசு.”
நான் பெருமூச்சுவிட்டேன். சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். சமோசா தட்டை என் பக்கம் தள்ளினாள். நான் எடுத்துக்கொள்ளவில்லை. சார்லஸ், மலர் இருவரின் முகங்களும் என் கண்முன் வந்தன. இவர்களிடம் நேரடியாக இது பற்றிக் கேட்கும் தைரியம் எனக்கு வரும் என்று தோன்றவில்லை. இது எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை.
“வேற ஏதாவது வேணுமா?” என்றார் சர்வர்.
“ரெண்டு டீ. பத்து நிமிஷம் கழிச்சி கொண்டுவாங்க” என்றாள் கேத்ரின். அவர் நகர்ந்ததும், “சொல்லு ராம். இப்ப என்ன பண்ணலாம்?”
நான் சிறிது நேரம் சமோசாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். புகாரி சமோசா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது சாப்பிடத் தோன்றவில்லை. நிமிர்ந்து கேத்ரினைப் பார்த்தேன்.
“இது உண்மையா இருக்கும்னு நெனைக்கறயா?” என்றேன்.
“அப்படித்தான் தோணுது.”
“நீயே ஏன் சார்லஸ்கிட்ட பேசக் கூடாது?”
“பயமா இருக்கு ராம். கன்ஃபர்ம் ஆகாம எப்டி பேசறது? அதுவும் நானே பேசிட்டா அது நேரா பீக்குக்குப் போறா மாதிரில்ல இருக்கும்?”
“என்ன பண்ண சொல்ற?”
“அததான் உங்கிட்ட கேக்கறேன்.”
நான் பதில் சொல்லவில்லை. என் கைவிரல் நகங்களில் பார்வையை ஓட்டியபடி யோசித்தேன். பிறகு சொன்னேன்.
“அவசரப்பட வேணாம். முதல்ல எப்படியாவது கன்ஃபர்ம் பண்ணிக்கணும். நாம சந்தேகப்படறோம்னு தெரியாம அதைச் செய்யணும். அவங்கமேல தப்பு இல்லன்னா ரொம்ப ஹர்ட் ஆயிடுவாங்க. அதுல ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். கன்ஃபர்ம் ஆச்சுன்னா அப்புறம் யாரை விட்டுப் பேசலாம்னு யோசிக்கலாம்.”
“கன்ஃபாம்னா என்ன ராம்? எவ்ளோ தூரம் போனா கன்ஃபர்ம்னு எடுத்துக்க முடியும்? அவங்க ரெண்டு பேரும் இப்ப இங்க வந்தாகூட நாம அவங்களை அக்யூஸ் பண்ண முடியாது. இப்ப நம்ம ரெண்டு பேரும் வரலயா? அது மாதிரிதான் அதுவும் இருக்கும். அவங்க ரெண்டு பேருக்கும் ரிலேஷன்ஷிப் இருக்குன்னு கன்ஃபர்ம் பண்றது முடியவே முடியாத காரியம். பிரைவேட் டிடக்டிவ வெச்சு இன்வெஸ்டிகேட் பண்ணினாகூட இதை கன்ஃபர்ம் பண்ண முடியாது. நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டு போக முடியும். இப்பல்லாம் இந்த மாதிரி நட்பு சகஜம்.”
“அப்படீன்னா நீ ஏன் கவலைப்படறே? அப்டியே விட்டுடு.”
“இல்ல ராம். எனக்குத் தெரியும், ஏதோ தப்பு நடக்குதுன்னு.”
“எப்டி சொல்ற?”
“உனக்கு புரியாது ராம். தப்பா எடுத்துக்காத. நீ வேற ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தா மது அதை மோப்பம் பிடிச்சிடுவா. இதையெல்லாம் ப்ரூவ் பண்ண முடியாது. ஆனா தெரிஞ்சிடும். ஒரு பேச்சுக்காக சந்தேகம்னு சொன்னேன். ஆனா எனக்கு சந்தேகமே கிடையாது ராம். சார்லஸ் ஈஸ் டெஃபனட்லி இன் அஃபேர் வித் ஹர்.”
டீ வந்தது. இருவரும் பேசாமல் குடித்தோம். எவ்வளவு கலக்கமான மனநிலையில் இருந்தபோதும் புகாரி டீயை ரசிக்க முடிந்தது.
“இப்ப எனன பண்றது?”
“யோசி ராம். எனக்கு ஐடியா இருந்தா சொல்லியிருக்க மாட்டேனா?”
நான் தலையாட்டினேன்.
“சால்ஸ்கிட்ட நீ பேச மாட்டல்ல?”
நான் சங்கடத்தில் ஆழ்ந்தேன்.
“கேத்ரின், ஒனக்கே தெரியும். சார்லஸ் என் ஃப்ரெண்டா இருந்தாலும் நான் அவன் மேல எவ்ளோ மதிப்பு வெச்சிருக்கேன்னு. என்னால சத்தியமா அவங்கிட்ட இதைப் பத்தி பேசவே முடியாது கேத்ரின். ப்லீஸ் அண்டர்ஸ்டாண்ட்…”
“அப்ப மலர் கிட்ட?”
“ரெண்டும் ஒண்ணுதான். அவ இவங்கிட்ட சொல்லிட மாட்டாளா?”
“அப்ப என்ன பண்றது?”
“திரும்பத் திரும்ப இந்தக் கேள்விக்கே வந்து நிக்கறோம். கொஞ்சம் டயம் குடு, யோசிச்சு சொல்றேன்.”
“நான் என்ன டயம் குடுக்கறது? நீ நல்லா யோசி” என்று பெருமூச்சுவிட்டபடி பில்லுக்குப் பணம் வைத்துவிட்டுக் கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டாள் கேத்ரின். “டயமாச்சு ராம். ஜான் ஸ்கூல்லேந்து வந்துடுவான். நான் போகணும். என்ன வீட்ல விட்டுட்டு நீ ஆஃபீஸ் போ” என்றாள்.
0
அடுத்து வந்த சில நாட்களில் இதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஒருநாள் திடீரென்று மலர்வதியும் சுவாமிநாதனும் ஆறு மணி வாக்கில் அலுவலகம் வந்தார்கள். மலர்வதி அதிசயமாக டி-ஷர்ட் அணிந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. “வாங்க… என்ன திடீர்னு ரெண்டு பேரும் வந்துருக்கீங்க?” என்றேன்.
“அஜித் படத்துக்குப் போறோம். ஃபஸ்ட் டே, ஃபஸ்ட் ஷோ. சத்யம்ல. பக்கத்துலதான உங்க ஆஃபீஸ். பாத்துட்டு போலாம்னு வந்தோம்” என்றாள் மலர் மிக உற்சாகமாக.
“டி-ஷர்ட்லாம் புதுசா இருக்கு?”
“நல்லால்லியா?”
“சே சே… கியூட்டா இருக்கு. நீ இந்த மாதிரியெல்லாம் போட மாட்டியேன்னு கேட்டேன்.”
“நல்லா கேளுங்க ராம். எப்பப் பாத்தாலும் சாயம்போன சுடிதார எடுத்து போட்டுகிட்டு போறா” என்றான் சுவாமிநாதன்.
“நா சாயம்போன சுடிதார போட்டுக்கறது உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா புதுசா ஒரு டஜன் சுடிதார் வாங்கி குடு” என்றாள் மலர்.
“எனக்கென்ன கஷ்டம். நீ எத வேண்ணா போட்டுக்கோ.”
“அப்ப வாய மூடு” என்று கைக்குட்டையால் அவன் முதுகில் செல்லமாக அடித்தாள்.
அப்போது சார்லஸ் உள்ளே நுழைந்தான். சுவாமிநாதன் எழுந்து கை குலுக்கினான். இருவரும் பரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டார்கள்.
“மூடியிருந்த கதவைத் தாண்டி உங்க குரல் கேட்குது. நீங்க மட்டும் ஜாலியா பேசிட்டு இருக்கீங்களேன்னு உள்ள வந்தேன்” என்றான் சார்லஸ். நான் எழுந்து போய் அவனுக்கு ஒரு நாற்காலி எடுக்க முனைந்தேன். என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவனே போய் எடுத்து வந்து உட்கார்ந்தான்.
“எங்க கௌம்பிட்டீங்க?” என்றான்.
“அஜித் படத்துக்கு. ஒரு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்கு. யாராவது வரீங்களா?” என்றான் சுவாமிநாதன்.
சார்லஸ், “சான்சே இல்ல. நாளைக்கு கிளையன்ட் ஆஃபீஸ்ல மீட்டிங். அதுக்கு ப்ரிபேர் பண்ணனும்” என்றான்.
“நீ வரியா?” என்றாள் மலர்.
“அஜித் படத்துக்கு நான் மட்டும் போயிட்டு வந்தா மது என்னை வெட்டி போட்ருவா. குடும்பத்துல குழப்பம் பண்ணாம போயிட்டு வாங்க” என்றேன். மூவரும் சிரித்தார்கள்.
“டீ சாப்பட்றீங்களா?” என்றான் சார்லஸ்.
“இல்ல. சத்யம்ல மசாலா பொடி தூவி பாப்கார்ன் சாப்பிடணும். இங்க டீ சாப்டா அந்த மூடே போயிடும்” என்றாள் மலர்.
இருவரும் கிளம்பிப் போனார்கள். சார்லஸ் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தன் அறைக்குப் போனான். நாளைய கூட்டத்திற்கான விஷயங்களைத் திரட்ட அவனுக்கு இரவு பத்து மணி ஆனாலும் ஆகிவிடும்.
கொஞ்ச நேரம் பட்டாசு மாதிரி ஓசை எழுந்து ஓய்ந்த அந்த அறையின் அமைதி வழக்கத்தை விடவும் கனமாகத் தெரிந்தது. நான் மின்னஞ்சல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். தினமும் கிளம்புவதற்குள் அன்றைக்கு வந்த எல்லா மின்னஞ்சல்களுக்கும் பதில் போட்டுவிடுவேன் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்துக்கொள்வேன். கையும் கண்களும் மின்னஞ்சல்களில் உலவிக்கொண்டிருந்தாலும் மனம் அந்த மூன்று பேரையும் சுற்றி வந்துகொண்டிருந்தது. சார்லஸிடமோ மலரிடமோ சந்தேகத்துக்குரிய எந்தச் சுவடும் தெரியவில்லை. கூடவே இருப்பவர்களுக்குத் தெரியும் என்றாளே கேத்ரின். அவளுக்கு தெரிந்தது சுவாமிநாதனுக்குத் தெரியவில்லை என்றால் ஒன்று அவள் அதீதக் கற்பனையில் இருக்க வேண்டும் அல்லது சுவாமிநாதன் தத்தியாக இருக்க வேண்டும். அல்லது எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாதவனாக இருக்க வேண்டும். இவற்றில் எது சரி என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டம். ரொம்பவும் கவலைப்படாதே என்று கேத்ரினைக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டும்போல் இருந்தது.
அடுத்த வாரமே இந்தச் சிக்கல் மீண்டும் என் மனதில் புது வடிவம் எடுத்தது. வீட்டுக்கு வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கி வரும்படி மதுமிதா சொல்லியிருந்தாள். சார்லஸ் இரண்டு நாள் பயணமாகப் பாண்டிச்சேரி போயிருக்கிறான். எனவே எனக்குக் கிளம்பத் தாமதமாகிவிட்டது. ஜி.என். செட்டி சாலையில் உள்ள உணவகத்தில் சப்பாத்தி வாங்க நின்றிருந்தபோது சுவாமிநாதன் உள்ளே வருவதைப் பார்த்தேன்.
“தனியாவா ஹோட்டலுக்கு வந்தீங்க? மலர் வரலயா?” என்றேன்.
“அவ என்ஜிஓல ஸ்டூடன்ட்ஸுக்கு ஏதோ ட்ரெய்னிங் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம். ரெண்டு நாள் பாண்டிச்சேரில கேம்ப்” அதான் என்றான். எனக்குச் சுரீரென்றது. எதையும் காட்டிக்கொள்ளாமல் பேசினேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சுவாமிநாதன் சாப்பிடப் போனான். நான் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். மனம் கலங்கியிருந்தது. எனக்குத் தேவையில்லாத விஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் கேத்ரின் வந்து பேசிய பிறகு அப்படி இருக்க முடியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
0
கேத்ரினிடம் பேசவே பயமாக இருந்தது. அடிக்கடி தொலைபேசியில் பேசும் வழக்கம் அவளுக்கு இல்லை. அலுவலகத்திற்கும் வருவதில்லை. வேலையில் மும்முரமாக இருப்பாள் என்று நினைத்து சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றேன். முடியவில்லை. நானாகக் கூப்பிட்டுப் பேசலாம். எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்கலாம். ஆனால் சார்லஸ், மலர் பற்றிய பேச்சு வந்தால் என்ன சொல்வது? ஒருவேளை தன்னுடைய சந்தேகம் தவறு என்ற முடிவுக்கு அவளே வந்திருப்பாளோ. அல்லது சந்தேகம் அதிகமாகி மன அழுத்தத்தில் இருக்கிறாளா. எப்படித் தெரிந்துகொள்வது?
நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஒருநாள் அழைத்தேன். அவள் குரலில் பழைய உற்சாகம் இல்லை. ஆனாலும் சகஜமாகப் பேசினாள். பொதுவாகச் சில விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு முக்கியமான விஷயத்தை எடுத்தேன். “இப்போ எப்டி இருககு?” சற்றே தணிந்த குரலில் ‘எது எப்படி இருக்கு’ என்று குத்தலாகக் கேட்டுவிடுவாளோ என்று பயந்தேன். நல்லவேளை. அப்படி எதுவும் நடக்கவில்லை. “தெரியல ராம்.. சால்ஸ் எப்பவும் போலதான் இருக்கான். நல்லாதான் பேசறான்…” என்றதும் நான் பரபரப்பாகி, “அப்புறம் என்ன? அப்டியே விட்டுடு” என்றேன். “இல்ல ராம். நீ ஏதோ ஒரு சொல்யூஷன் கிடைக்ணும்னு துடிக்கற. நான் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கத் தவிக்கறேன். ஏதோ ஒண்ணு சரியில்லன்னு எம் மனசு அழுத்தமா சொல்றது. அப்பப்ப நான் கேள்விப்படற விஷயங்களும் அதை ஸ்ட்ரெங்தன் பண்ணுது. ஆனால் ப்ரூஃப் இல்லாம இதைக் கிளற முடியாது. கிளறினாலும் அடுத்தது என்னன்னு யோசிக்கணும். இதுல நெறய சிக்கல் இருக்கு ராம். எப்படிப் போகுதுன்னு பாக்கலாம். இதுல உன்னையும் இழுத்து விட்டுட்டேன்னு கஷ்டமா இருக்கு…”
“உளறாத கேத்ரின். நான் வேத்து மனுஷன் இல்ல…”
“தெரியும் ராம். இல்லன்னா ஒங்கிட்ட சொல்லியிருப்பேனா? ஆனா ஒன்னாலயும் ஒண்ணும் பண்ண முடியாது இல்லயா? போகட்டும் விடு. பாத்துக்கலாம். அப்றமா கூப்பட்றேன்.”
என் குற்றஉணர்வு வலை மேலும் வலுப்பெறுவதை உணர்ந்தேன்.
0
அடுத்த ஒரு மாதம் வேலை அதிகம் இருந்தது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் சார்லஸும் கேத்ரினும் ஜானும் மேற்கத்திய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் போயிருந்தார்கள். பயண ஏற்பாடுகளுக்காக சார்லஸ் நடத்திவரும் நிறுவனத்தில் வெளிநாட்டுப் பயணத் திட்டம் அவன் நிறுவனத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற திட்டம். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அவனும் குடும்பத்தோடு கிளம்பிவிடுவான். பெருந்தொற்றால் பெரிய இடைவெளி விழுந்ததில் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது போகிறான். பயண ஏற்பாடுகளில் நானும் மதுமிதாவும் உதவி செய்தோம். மதுமிதா ஆறு மாத கர்ப்பமாக இருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தாள். சார்லஸ் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கித் துணி மணிகள், இதர பொருட்ளையெல்லாம் எடுத்துவைக்க உதவினாள். குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்த பிறகு நாமும் இப்படிப் போக வேண்டும் என்று என்னிடம் சொன்னாள். கண்டிப்பாக என்று பதில் சொன்னேன். எவ்வளவு செலவாகும் என்று மனம் கணக்குப் போட ஆரம்பித்தது.
கிளம்புவதற்கு முந்தைய பத்து நாட்களில் கேத்ரின் மிகவும் உற்சாகமாக இருந்தாள். சற்றே வளர்ந்த பிறகு செல்லும் பயணம் என்பதால் ஜானும் பரவசத்துடன் இருநதான். சார்லஸுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவர்கள் மூவரையும் பார்க்க எனக்குப் பெரிய ஆசுவாசமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. மலர் விவகாரம் சந்தேகமாகவே முடிந்துவிடட்டும் என்று மனதார வேண்டிக்கொண்டேன்.
நடுவில் ஒருநாள் மலர் அலுவலகத்திற்கு வந்தாள். சார்லஸ் அலுவலகத்தில் இல்லை. டி-ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்து பார்க்க அட்டகாசமாக இருந்தாள். சுவாமிநாதனும் அவளும் சில நண்பர்களுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு ரிசார்ட்டுக்குப் போவதாகவும் மொபைல் பவர் பேங்கை என்னிடமிருந்து இரவல் வாங்கிச் செல்ல வந்ததாகவும் சொன்னான். “என்னோடது தொலைஞ்சிடிச்சு ராம்” என்றாள் சிணுங்கலாக. என்னுடைய பவர் பேங்க்கை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொடுத்தேன். மனம் லேசாக ஆகியிருந்தது.
0
சார்லஸ் ஊரில் இல்லாதபோது அலுவலகம் தொடர்பான அவசர வேலையாக எனக்கு மும்பை போக வேண்டியிருந்தது. வெள்ளி, சனி என்பதால் ஞாயிறும் அங்கே தங்கி என்னுடைய பெரியப்பா பையன் குருபிரசாதைப் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்தேன். சனிக்கிழமை மாலையே விடுதி அறையைக் காலிசெய்துவிட்டு அவன் வீட்டுக்குப் போய்விட்டேன். அவன் மனைவி சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரமே படுத்துவிட்டாள். பையன் புதுதில்லியில் படிக்கிறான். கடைசி செமஸ்டருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான் என்று சொன்னான் குரு. இரவு உணவு முடித்து பால்கனியில் உட்கார்ந்தோம். மது பாட்டிலையும் கோப்பைகளையும் அங்கே வைத்திருந்தான். நான் அளவோடு எடுத்துக்கொண்டேன். பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்ததில் எங்களுக்குப் பேசிக்கொள்ள நிறைய இருந்தன.
குரு என்னைவிடப் பத்து வயது பெரியவன். விளையாட்டு, படிப்பு என்று எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். நண்பர்கள், உறவினர்கள் என்று எங்கள் வட்டம் பெரியது. யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் குரு முன்னால் வந்து நிற்பான். அடிதடி, போலீஸ் என்று எதற்கும் தயங்க மாட்டான். நண்பர்களின் காதல் திருமணத்திற்கு உதவுவது, நண்பர்களுடன் உல்லாசப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பெங்களூர், கன்னியாகுமரி என்று பறப்பது என அவன் வாழ்க்கையே பரபரப்பாக இருக்கும். இப்போது கறுப்பும் வெளுப்பும் கலந்த தலைமுடியும் தாடியுமாய் அமைதியாகத் தெரிந்தான். முன்பைவிட அழகாக இருந்தான். சென்னையில் உள்ள நண்பர்கள், உறவினர்களைப் பற்றியெல்லாம் விசாரித்தான். சார்லஸ், கேத்ரின் பற்றியும் பேச்சு வந்தது. மலர்வதி எப்படி இருக்கிறாள் என்று அவன் கேட்டபோது எனக்குச் சற்று திடுக்கென்று இருந்தது. மலர்வதி அவனுக்கும் தூரத்துச் சொந்தம் என்பதால் அது இயல்பான கேள்விதான் என்பதும் சட்டென்று உறைத்தது. நன்றாக இருக்கிறாள். என்ஜிஓ மூலம் புரட்சி செய்கிறாள் என்று சொல்லிவிட்டு நான் விட்டிருக்க வேண்டும். மங்கிய நிலவொளியில் பால்கனியில் அமர்ந்திருந்த அந்தச் சூழலும் உள்ளே போன சங்கதியால் உண்டான மெல்லிய போதையும் சேர்ந்து என் வாயைத் திறந்துவிட்டன. சார்லஸ் – மலர் விவகாரம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டேன்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குரு, “எனக்கு இதெல்லாம் முன்னயே தெரியுண்டா” என்றான். நான் அதிர்ந்தேன்.
“மும்பைல இருக்கற உங்க கிளையன்ட் ஆஃபீஸ்க்கு சால்ஸ் போன மாசம் வந்திருந்தான் இல்லயா, அப்போ மலரும் வந்திருந்தா. அந்த ஆஃபீஸ்ல எனக்கு சில ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தன் இவங்க ரெண்டு பேரையும் லாட்ஜ்ல பாத்ததா சொன்னான். மலர் உன் ரிலேட்டிவ்ன்றதுனால சொல்றேன், வம்பு பேசறேன்னு நெனைக்காதன்னு ஃபுட்நோட் வேற குடுத்தான்.”
நான் ஆடிப்போனேன். போதை சட்டென்று இறங்கியதுபோல் இருந்தது. மும்பையில் ஒரே லாட்ஜில் இருவரும் இருந்திருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன நிரூபணம் வேண்டும்? கேத்ரினிடம் இதை எப்படிச் சொல்வது?
“என்ன யோசிக்கற?” என்றான் குரு. சொன்னேன்.
“கேத்ரின் கிட்ட எதுவும் சொல்லாத. இப்ப பேசறா மாதிரியே தொடர்ந்து பேசு. அப்டியே மெய்ன்டன் பண்ணிக்கோ” என்றான்.
“இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?” என்றேன்.
“இது ஒரு பிரச்னயே இல்லை” என்றான்.
“என்னடா சொல்ற?” எனறேன் குழப்பத்துடன்.
குரு ஓரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்தான். “சித்ரான்னு ஒரு சின்னப் பொண்ணு. முன்னல்லாம் மலர் வீட்டுக்கு வருவாளே ஞாபகம் இருக்கா?” என்றான். நான் பதில் சொல்வதற்குள், “நீ அப்ப சின்னப் பையன். ஞாபகம் இருக்க வாய்ப்பில்ல. மலர் ஒன்னவிட சின்னப் பொண்ணு. அவளுக்கும் சித்ரா யாருன்னு தெரியாது. மலரோட அண்ணன் முத்து அவளவிட ஒம்போது வயசு பெரியவன். அவன்தான் சித்ராவ படிக்கவெச்சான். அந்த சித்ரா யாரு தெரியுமா?”
“நான்தான் சின்னப் பையனாச்சே, எனக்கு எப்படித் தெரியும். நீயே சொல்லுப்பா பெரிய மனுஷா” என்றபடி இன்னொரு மிடறு குடித்தேன்.
“அவ மலரோட அப்பாவோட பொண்ணு. அதாவது அவங்கப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டியோட பொண்ணு. அன்னஃபிஷியல். அந்தப் பொண்டாட்டிய பூந்தமல்லில ஒரு வீட்டுல வெச்சிருந்தாரு. அப்பா அடிக்கடி வீட்டுக்கு வராம வெளில தங்கறத பாத்துட்டு முத்துவுக்கும் அவங்க அம்மாவுக்கும் பெரிய சந்தேகம். அவங்க அம்மா கலங்கிப் போயிட்டாங்க. முத்துக்கு அரசல் புரசலா விஷயம் தெரிஞ்சுது. ஆவேசமாயிட்டான். எங்கிட்ட விஷயத்த சொல்லி அந்தத் தேவடியா முண்டய கண்டுபிடிச்சு வெட்டணும்டான்னான். அவ தேவடியான்னா உங்கப்பா யாருடான்னு நான் கேட்டேன். அவள வெட்டுவ, உங்கப்பாவை வீட்ல வெச்சு கொஞ்சுவியான்னு கேட்டேன். வேற யாராவது கேட்ருந்தா முத்து கை நீட்டியிருப்பான். கேட்டது நான்றதுனால அடங்கினான். போவோம், கண்டுபிடிப்போம். ஆனா கலாட்டா பண்ணினா உங்க குடும்ப மானம்தான் சந்தி சிரிக்கும். உங்க அப்பா கிட்ட சண்டபோட்டு அவரைத் தக்கவெச்சிக்கப் பாருன்னு சொன்னேன். சரின்னான். போனோம். பல விதமா அலசி ஆராய்ஞ்சி கண்டுபிடிச்சோம். அந்த வீட்டைப் பாத்ததும் ரெண்டு பேருக்கும் பயங்கர ஷாக்.”
குரு நிறுத்தினான். இன்னொரு மிடறு ஊற்றிக்கொண்டு மேற்கொண்டு பேசினான். முத்துவின் அப்பா ரகசியமாகக் கல்யாணம் செய்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு அப்போது 20 வயது இருந்திருக்கும். அவளுக்கும் முத்து அப்பாவுக்கும் பெண் குழந்தை ஒன்று இருந்தது. வீட்டில் இருந்த படம் அதை உறுதிப்படுத்தியது. முகவரி கேட்கும் சாக்கில் அந்த வீட்டுக்குச் சென்ற அவர்கள் தண்ணீர் வாங்கிக் குடித்தபடி நோட்டமிட்டார்கள். அந்தப் பெண் நல்ல வெண்ணிறத்துடன் லட்சணமாக இருந்தாள். வீட்டில் வறுமையின் சின்னங்கள் அழுத்தமாகப் படிந்திருந்தன. அவள் கட்டியிருந்த புடைவையைப் பார்க்கச் சகிக்கவில்லை. முத்துவுக்குப் பேச்சே வரவில்லை. அமைதியாகத் திரும்பினார்கள்.
வீடு திரும்பியதும் அப்பாவைத் தனியே அழைத்துக்கொண்டு போய் சண்டைபோட்டிருக்கிறான். ‘நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா, கட்டின பொண்டாட்டிக்குத் துரோகம் செஞ்சிட்டு சின்னப் பொண்ணோட வாழ்க்கையையும் கெடுத்துட்டு நிக்கறயே. இதுல ஒரு கொழந்த வேற. இதையெல்லாம் சமாளிக்க பணம் இருந்தாலும் பரவாயில்ல. ஒரு வீட்ட காப்பாத்தவே வக்கில்ல. இதுல சின்ன வீடு வேற. த்தூ…’ என்று திட்டியிருக்கிறான். அவன் அப்பா கல்லைப் போல அசையாமல் அமைதியாக இருந்தாராம்.
அடுத்த ஒரு வருடத்திற்குள் விபத்தில் அவர் இறந்துபோனதும் முத்து திகைத்துப்போனான். படித்துக்கொண்டே வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்றினான். குருவின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கும் வருமானத்திற்கு ஏற்பாடு செய்தான். குழந்தை வளர்ந்ததும் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டான். இப்போது சித்ரா கல்லூரியில் படிக்கிறாள். அவள் அம்மா வேலைக்குப் போகிறாள்.
நான் சிறுவனாக இருக்கும்போது சித்ராவை ஓரிரு முறை முத்து வீட்டில் பார்த்திருக்கிறேன். யார், என்ன என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. இப்போது மொத்தக் கதையையும் கேட்டபோது வியப்பாக இருநத்து. முத்துவை நினைத்து மனம் நெகிழ்ந்தது. சிறிது நேரம் எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தேன். பிறகு, “இதையெல்லாம் ஏன் இப்ப சொல்ற?” என்று கேட்டேன்.
குரு சிரித்தான். “மலரோட அப்பா கல்யாணத்துக்கு அப்புறம் வேற ஒருத்திய காதலிச்சு சின்ன வீடு செட் பண்ணினாரு. மலர் அதே விஷயத்த வேற மாதிரி பண்றா. அவ அப்பாவுக்கு எல்லை தாண்டி ஆசை வந்தபோது அது அவருக்கு ஒரு கமிட்மெண்டா மாறுது. இப்ப கமிட்மெண்ட்டுன்னு ஒரு விஷயம் இல்ல. ரெண்டு பேரும் அவங்கவங்க எடத்துல வசதியா இருப்பாங்க. வேற ஒரு தேவைக்கா இப்படி ஒண்ணு வெச்சிப்பாங்க. க்ரேஸ் வடிஞ்சதும் விலகிடுவாங்க. நோ கமிட்மெண்ட். ஜஸ்ட் என்ஜாய்மெண்ட்” என்று சொல்லிக் கடகடவென்று சிரித்தான்.
“அப்ப கேத்ரின், சுவாமிநாதன் இவங்களோட நிலை?”
“ஒண்ணும் ஆகாது. இவங்களா புகுந்து பிரச்ன பண்ணாம இருந்தா அது தானா போயிடும். அப்டியே விட்டுட்டா தானா தெளிஞ்சிடும். இப்ப சால்ஸ் ஃபேமலி டூர் போவயா, மலர் தன் ஹப்பியோட ரிசார்ட்டுக்குப் போகலயா? எல்லாம் நடக்கும். உனக்குத்தான் இது அதிர்ச்சியா இருக்கு” என்றான்.
எனக்குப் பேச்சே வரவில்லை.
“வெல்கம் டு மில்லனியம்” என்றவன், “இருபது வருஷம் லேட்டா சொல்றேன். என்ன பண்றது? இப்பதானே நீயும் கேக்கற” என்றான்.
0
எல்லோரும் நல்லவரே… சந்தர்ப்பம் கிடைக்காதவரை!