அத்தியாயம் – 1
ஆரம்ப வாழ்க்கை – 1681-1652
1. ஔரங்கசீப் ஆட்சியின் முக்கியத்துவம்
ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும் கூட. 1658இல் தொடங்கி 1707 வரை நீடித்த அவருடைய ஆட்சி, 17ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் வரலாறாகவும் நம் தேசத்தின் மிக மிக முக்கியமான சகாப்தமாகவும் திகழ்கிறது. அவருடைய ஆட்சிக் காலத்தில் மொகலாயப் பேரரசு அதன் உச்சத்தை எட்டியது. இந்திய வரலாற்றின் அதி ஆரம்பக் காலம் தொட்டு, பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலைபெற்ற காலம் வரையிலும் மிகப் பெரிய அரசாக இருந்தது ஔரங்கசீபின் அரசுதான். கஜினிப் பகுதி தொடங்கி சட்காவ் வரையிலும், காஷ்மீர் தொடங்கி கர்நாடகம் வரையிலும் இந்தியத் துணைக்கண்டம் அவருடைய உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தது.
ஔரங்கசீபின் காலகட்டத்தில்தான் இஸ்லாம் இந்தியாவில் வேகமாகப் பரவியது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருந்த இந்தச் சாம்ராஜ்ஜியம் ஒற்றை அரசியல் தலைமை கொண்டதாக இருந்தது. குறு நில மன்னர்கள் மூலமாக ஆளப்படாமல் சுல்தானால்,நேரடியாக நியமிக்கப்பட்டவர்களால் ஆளப்பட்டது. அசோகர், சமுத்திர குப்தர், ஹர்ஷ வர்தனர் என அனைவருடைய சாம்ராஜ்யங்களை விடவும் ஔரங்கசீபின் சம்ராஜ்ஜியம் மிகவும் பரந்து விரிந்ததாக இருந்தது.
பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு மிகப் பெரிய இந்திய சாம்ராஜ்ஜியமாக உச்சத்தில் இருந்த இந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியும், அவற்றின் குழப்பங்களின் தடயங்களும் ஔரங்கசீபின் காலத்திலேயே தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. ராஜ பரம்பரையின் செல்வாக்கு இழந்த நிழலாகப் பாரசீக நாதிர்ஷா, ஆஃப்கானிஸ்தானின் அஹ்மது ஷா போன்றோர் மொகலாய அரசர்களை வீழ்த்துவதற்கு முன்பே, டெல்லியின் மாபெரும் ஆதிக்கம் வெறும் கடந்த கால நினைவாக மாறுவதற்கு முன்பே, மராட்டியப் படைகள் தேசத்தில் செல்வாக்கை நிலை நிறுத்தும் முன்பே, ஔரங்கசீப் கண்ணை மூடுவதற்கு முன்பே மொகலாயச் சாம்ராஜ்ஜியம் நிதியிலும் செல்வாக்கிலும் வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் நிர்வாகம் சிதைந்துவிட்டிருந்தது. மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் ஒழுங்கை நிலைநிறுத்தும் வலிமையை இழந்துவிட்டிருந்தது.
ஔரங்கசீபின் ஆட்சியின்போதுதான், வீழ்ச்சியுற்றிருந்த மராட்டியத் தேசிய உணர்வு வீறுகொண்டு எழுந்தது. மொகலாய ஆட்சிக்கு எதிராக சீக்கியப் பிரிவில் ஆயுதம் தாங்கியப் போர் வீரர்கள் முளைத்து வந்தனர். இப்படியாக, 18, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் இந்திய வரலாற்றில் நடந்த விஷயங்களுக்கு ஔரங்கசீபின் ஆட்சியும் கொள்கைகளும் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.
மொகலாயப் பிறை நிலா முழுவடிவை அடைந்த அதே ஆட்சியில்தான் அது விரைவாகத் தேயவும் ஆரம்பித்தது. நமது அரசியல் வானில் புதிய அரசியல் சக்திகளின் விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்ததை நன்கு பார்க்கவும் முடிந்தது. நமது தேசத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவிருந்த வருங்கால ஆதிக்கச் சக்திகள் (பிரிட்டிஷ் சக்திகள்) நம் மண்ணில் அழுத்தமாக, ஆழமாக கால் ஊன்றின. மதராஸ் 1653லும், பம்பாய் 1687லும் கிழக்கிந்தியக் கம்பெனியின் மாகாணங்களாக ஆகின. 1690இல் கல்கத்தா மாகாணம் நிறுவப்பட்டது. பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இப்படியாக ராஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியமாக மாறின.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், மொகலாயப் பேரரசு மையத்தில் வலு இழந்ததாக ஆகிவிட்டிருந்தது. கஜானா காலியாகியிருந்தது. மொகலாயப் படைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன. எதிரிகளின் பகுதிகளில் இருந்து பின் வாங்கி இருந்தன. பிராந்திய அரசுகள் எல்லாம் வெற்றிகரமாகத் தமது ஆதிக்கத்தை மீட்டெடுத்திருந்தன. சாம்ராஜ்ஜியம் சிதைந்துபோகக் காத்திருந்தது.
பொருளாதார, நிர்வாகப் பலவீனங்களுக்கு எல்லாம் மேலாக மொகலாய சாம்ராஜ்ஜியமானது தார்மிகப் பலத்தை இழந்துவிட்டிருந்தது. மக்களிடையே அந்த அரசுக்கு எந்தவொரு மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கவில்லை. அரசின் பணியாளர்கள் நேர்மையற்றும் திறனற்றும் போயிருந்தனர். அமைச்சர்கள், இளவரசர்கள் எல்லாம் ராஜாங்க நுணுக்கமும் திறமையும் அற்றுப் போயிருந்தனர். ஆதிக்கத்தை நிலைநாட்டும் வலிமையை ராணுவம் இழந்துவிட்டது.
ஏன் இப்படி ஆனது?
மன்னரிடம் சோம்பல், மூடத்தனம், தீய ஒழுக்கம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. அவர் அபாரமான அறிவுக் கூர்மை மிகுந்தவராக இருந்தார். ஆதிக்கத்தைத் துய்க்கும் பெரு விருப்பம் கொண்ட ஆண்களைப் போலவே ஆட்சி நிர்வாகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பொது மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் அவர் அளவுக்கு அக்கறை கொண்ட பணியாளர் யாரும் இருக்கமுடியாது. ஒழுக்கம், ஒழுங்கு ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதுபோலவே பொறுமைசாலி. விடாமுயற்சி கொண்டவர். அவருடைய சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் போகங்களை மிதமாகத் துய்த்தார். ஒரு துறவியைப் போன்ற வாழ்க்கை வாழ்ந்தார்.
படையெடுப்புக் கால நெருக்கடிகள், பின்வாங்குதல் போன்றவற்றையெல்லாம் எந்தவொரு புகாரும் இன்றி, தேர்ந்த படைத் தலைவரைப்போல் ஏற்றுக்கொண்டார். எந்தவொரு பயங்கரவாதச் செயலும் அவருடைய மனதை மாற்றமுடியாது. எந்தவொரு கருணை எண்ணமோ, பரிவோ அவரைப் பாதித்ததில்லை. அவருடைய மதம் சார்ந்த பழங்கால மரபான ஞானங்கள், புனித நூலில் இடம்பெற்றவை ஆகியவற்றில் தேர்ந்த நிபுணராக இருந்தார். தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலப் போர் பயிற்சியும், ராஜ தந்திர பாடங்களும் பெற்றிருந்தார்.
இருந்தும் ஔரங்கசீபின் ஐம்பது ஆண்டுக் கால ஆட்சியின் விளைவாகத் தோல்வியும் குழப்பமே மிஞ்சியது. இந்த அரசியல் புதிரானது இந்திய வரலாற்றை ஆராய்பவருக்கு மட்டுமல்ல, பொதுவான அரசியல் வரலாறு பற்றி ஆய்வு செய்பவர்களுக்குமே அவருடைய ஆட்சி காலத்தை மிகவும் ஆர்வத்துக்கு உரியதாக ஆக்கியிருக்கிறது.
2. ஔரங்கசீப் வாழ்க்கையின் துயர நாடகம் அரங்கேறிய விதம்
ஔரங்கசீபின் வாழ்க்கை நீண்ட நெடியத் துயரக் கதை. கண்ணுக்குத் தெரியாத, அதே நேரம் தவிர்க்க முடியாத விதியை எதிர்த்துப் போராடித் தோற்றவரின் கதை; மிகவும் வலிமையான மனித முயற்சிகள் எல்லாம் காலத்தின் போக்கில் எப்படியெல்லாம் குழம்பிப்போயின என்பதன் எடுத்துக்காட்டாக அந்த வாழ்க்கை அமைந்தது. மிகுந்த ஆற்றலுடன் வெளிப்பட்ட ஐம்பது ஆண்டுக் கால ஆட்சியானது மிக மிக மோசமான தோல்வியில் சென்று முடிந்தது. இருந்தும் அறிவுக்கூர்மை, ஒழுக்கம், செயல் ஊக்கம் ஆகியவற்றில் அவர் ஆசியாவின் பேரரசர்களில் ஒருவர். வரலாற்றின் இந்தத் துயர நாடகம் உரிய வரிசைக்கிரமமான காட்சிகளுடன் மெள்ள மெள்ள உச்சத்தை எட்டியது.
ஔரங்கசீபின் முதல் நாற்பது ஆண்டுகள், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதி உயர் பதவிக்கான நிதானமான, கடினமான சுயப் பயிற்சியால் நிரம்பியதாக இருந்தது. இது முதல் காலகட்டம்.
இந்த விதைநிலைப் பருவத்துக்குப் பின்னர் அரியணை ஏறுவது தொடர்பாக நடந்த ஒரு வருடக் கால மோதல் வந்தது. அது அவருடைய வலிமை முழுவதையும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அவருடைய வலிமைக்குப் பரிசு கிடைத்தது. டெல்லியின் அரியணை அவருக்குக் கிடைத்தது. இது இரண்டாம் காலகட்டம்.
வட இந்தியாவின் மாபெரும் நகரங்களில் அமைதியும் வெற்றியும் நிறைந்த ஔரங்கசீபின் 23 ஆண்டுக்கால ஆட்சி அதன் பின் நடந்தது. அவருடைய வழியில் குறுக்கிட்ட எதிரிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். ஒட்டு மொத்த இந்தியாவும் அவருடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்தது. அவருடைய கண்டிப்பும் கண்காணிப்பும் மிகுந்த ஆட்சியினால் அமைதியும், அதனால் நாட்டில் செல்வமும் கலாசாரமும் செழித்தன. மனித முயற்சிகளின் பெரு மகிழ்ச்சியையும் பெருமிதங்களையும் ஔரங்கசீப் எட்டியதுபோன்ற தோற்றம் உருவானது. இது அவருடைய வாழ்வின் மூன்றாம் காலகட்டம்.
அதன் பின்னர் வீழ்ச்சி ஆரம்பித்தது. கிரேக்கக் காவியங்களைப் போன்ற இரக்கமற்ற செயல்களின் பின் விளைவுகள் அவரைச் சூழ்ந்தன. குடும்பத்துக்குள்ளிருந்தே அவருடைய எதிரிகள் முளைத்திருந்தார். ஷாஜஹானின் கலக மைந்தரான ஔரங்கசீபினால், தான் பெற்ற வெற்றியை நீண்ட காலம் அனுபவிக்க முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் அவருடைய மகன் முஹம்மது அக்பர் (1681) தந்தைக்கு எதிராகக் கலகம் செய்தார்.
விரட்டியடிக்கப்பட்ட மகன், மராட்டிய மன்னருடைய நட்பில் தென்னிந்தியாவில் அடைக்கலம் புகுந்ததால் ஔரங்கசீப் படையுடன் தென்னிந்தியாவுக்கு வர நேர்ந்தது. தன் வாழ்நாளின் கடைசி 26 வருடங்களைப் போர் முகாம்களில் கழிக்க நேர்ந்தது. முடிவற்ற, வெற்றி கிடைக்காத போரில் ஈடுபட்டு சாம்ராஜ்ஜியத்தின் படை, செல்வம், நிர்வாகம் அனைத்தையும் நலிவடையவிட்டார். அவருடைய உடல் நிலையும் மிகவும் மோசமானது. விதியானது இந்த வீழ்ச்சியை அவரால் புரிந்துகொள்ளமுடியாதபடி அவருடைய கண்களை மறைத்தது. அவருடைய சம காலத்தவரின் கண்களையும் மறைத்துவிட்டது.
அவருடைய வாழ்வின் இந்த நான்காம் பகுதியில், அவர் விரும்பியதுபோல் எல்லாம் நடந்தாகத் தோற்றமளிக்கின்றன. பீஜப்பூரும் கோல்கொண்டாவும் ஔரங்கசீபின் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டன. பேரார் சாகர் பகுதியின் தலைவரும் தோற்கடிக்கப்பட்டார். பிரச்னைக்குரிய மராட்டிய மன்னர் சிறைப்பிடிக்கப்பட்டார். அவருடைய தலைநகரும் குடும்பத்தினரும் கைப்பற்றப்பட்டனர் (1689). ஔரங்கசீபின் வெற்றி இப்படியாக முழுமை பெற்றதுபோலவே தோன்றுகிறது. எனினும் இங்கும் அங்குமாக வீழ்ச்சியின் சிற்சில தடயங்கள் எழ ஆரம்பித்திருந்தன. கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்களுக்கு மட்டும் அது தெரியும்படியாக இருந்தது. எனினும், பிறர் சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் வெற்றிகளின் மிதப்பில் எதிர்காலத்தில் வரவிருந்த அழிவைக் காணமுடியாதவர்களாகவே இருந்தனர்.
ஔரங்கசீபின் வாழ்க்கையின் மூன்றாம் காலகட்டத்தில் விதைக்கப்பட்ட அதிருப்தியின் விதைகள் யாருக்கும் தெரியாமல் மெல்ல முளைவிட்டு நான்காம் காலகட்டத்துக்குள் கிளை விரிக்க ஆரம்பித்தன. அவருடைய வாழ்வின் ஐந்தாம் கட்டத்திலும் இறுதிக் கட்டத்திலும் அந்த மரங்களின் துயரம் நிறைந்த கனிகளை அவர் சுவைத்தாக வேண்டியிருந்தது.
அப்படியாக ஔரங்கசீபுடைய வாழ்வின் துயரம் என்பது கடைசி 18 வருடங்களில் (1689-1707) மிகுதியாக வெளிப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வீழ்ச்சி மிகவும் தெளிவாகப் புலனாக ஆரம்பித்தது. படைகள் எல்லாம் அவருக்கு எதிராகத் திரும்பியிருந்ததென்பது அவருக்குப் புரியவந்தது. யதர்த்த உண்மை என்ன என்பது தெரியவந்தது. எனினும் அவர் தன் போராட்டத்தைக் கைவிடவில்லை. நிராதரவான நிலையில் இருந்த பின்னரும், விடா முயற்சியைக் கைவிடவில்லை. புதிய தீர்வுகளை முயன்று பார்த்தார். அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், எதிரிகளின் பரவல் ஆகியவற்றுக்கு ஏற்ப தனது வியூகங்களை மாற்றிப் பார்த்தார். முதலில் முழு பொறுப்பையும் வழிகாட்டுதலையும் தன் வசம் வைத்துக்கொண்டு தன் படைத்தளபதிகளைப் போருக்கு அனுப்பினார். தளபதிகளால் வெற்றி பெற முடியாமல் போனதும் 82 வயதான ஔரங்கசீபே கடைசி ஆறு ஆண்டுக்காலப் போரைப் (1669-1705) போர்க்களத்துக்குச் சென்று தலைமை தாங்கி நடத்த வேண்டியிருந்தது.
முதல் மரண அழைப்பு வந்த பின்னரே அஹமது நகருக்குத் திரும்பினார். அப்போதுதான், அந்த அந்திமத் தருணத்தில்தான், அஹமது நகரில்தான் அவருடைய பயணம் முடிவுக்கு வரப்போகிறது (கதம்-உஸ்-சஃபர்) என்பதை மிகுந்த வேதனையுடன் புரிந்துகொண்டார்.
3. ஒளரங்கசீபின் வாழ்க்கை வரலாறுக்கான ஆதாரங்கள்
முகலாய இந்தியாவின் இலக்கிய மொழியாக இருந்த பாரசீக மொழியில் ஒளரங்கசீபின் வாழ்க்கை பற்றி மிக அதிக தகவல்கள் இருக்கின்றன. முதலில் அதிகாரபூர்வ ஆவணங்களான ‘பதிஷாநாமா’ (மூன்று ஆசிரியர்கள் எழுதிய மூன்று தொகுப்புகள்), ‘ஆலம்கீர்நாமா’ ஆகியவை ஷாஜஹான் பதவி ஏற்றதிலிருந்து ஒளரங்கசீபின் ஆட்சியின் 11ஆம் ஆண்டு வரையிலான அதாவது 41 ஆண்டுக்காலத் தரவுகளைக் கொண்டிருக்கின்றன.
இவையெல்லாம் அரசாங்க ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட அரசாங்கக் கடிதங்கள், செய்தி அறிக்கைகள், நிலவியல் விவரணைகள், ஒப்பந்தங்கள், வருமானப் பதிவேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஒளரங்கசீபின் பிந்தைய நாற்பது ஆண்டுக்கால ஆட்சி பற்றி ‘மஸீர்-இ-ஆலம்கீரி’ என்ற தொகுப்பும் கிடைத்திருக்கிறது. இதுவும் அரசு ஆவணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அவருடைய இறப்புக்குப் பின் தொகுக்கப்பட்டது.
அடுத்ததாக, தனிப்பட்ட நூலசிரியர்கள் எழுதியவை: மாசூம், அஹில்கான், வங்காள ரப்பானி படைவீரர், காஃபி கான் போன்றவர்கள் எழுதியவை. இவையெல்லாம் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் எழுதியவையே. ஆனால் ஆலம்கீரின் பார்வைக்காக எழுதப்பட்டவை அல்ல. அரசாங்க ஆவணங்களில் மறைக்கப்பட்ட உண்மைகள் பலவும் இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் தேதிகள், நபர்களின் பெயர்கள் எல்லாம் சில நேரங்களில் தவறாகவும் முழு விவரங்கள் இல்லாமலும் இருக்கின்றன.
பாரசீக மொழியில் ஒளரங்கசீபின் வாழ்க்கை வரலாறாக இந்துக்கள் எழுதிய இரண்டு நூல்களும் இருக்கின்றன. ஒளரங்கசீபின் தளபதியான தல்பத் ராவ் பந்தேலாவின் வணிகரான பீம்சென் பர்ஹான்புரி எழுதிய ‘நுஸ்கா-இ-தில்கஷா’ அவற்றில் ஒன்று. இவர் பெருமளவில் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நிலவியல் தரவுகளில் நல்ல அக்கறை கொண்டவர். மதுராவில் இருந்து மலபார் வரையிலான பகுதிகளில், தான் பார்த்த அனைத்தையும் மிக நுட்பமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். தக்காணம் தொடர்பான விவகாரங்களில் இவருடைய நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கிறது. ஏனென்றால் இவர் பிறந்து வளர்ந்ததோடு தன் வாழ்நாளின் பெரும்பகுதியையும் இங்குதான் கழிக்கவும் செய்திருந்தார்.
ஈஸ்வரதாஸ் நாகர் எழுதிய ‘ஃபதுஹத்-இ-ஆலம்கீரி’ இன்னொரு நூல். இவர், ஷேக் உல் இஸ்லாமிடம் நீண்டகாலம் பணிபுரிந்தார். குஜராத்தில் பாடண் பகுதியில் வாழ்ந்தார். ராஜபுத்திரர்கள் பற்றிய விவரங்களுக்கு இவருடைய நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஒளரங்கசீபின் ஆட்சி தொடர்பான பொதுவான வரலாற்று நூல்கள் நீங்கலாக, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி மட்டும் எழுதப்பட்ட நூல்களும் இருக்கின்றன. உதாரணமாக, கோல்கொண்டா முற்றுகை பற்றி நியமத் கான் அலி எழுதிய நூல், குச் பிஹார், அஸாம், சட்காவ் ஆகியவற்றின் கைப்பற்றல் பற்றி ஷிஹாப் உத்தீன் எழுதிய நாட்குறிப்பு, இராதத் கான், முதலாம் பஹதூர் ஷாவின் பணியாட்கள் சிலர் எழுதிய நினைவுக் குறிப்புகள் இவையெல்லாம் இந்த வகையின் கீழ் வரும். இதில் இறுதிப் படைப்பு ஒளரங்கசீபின் அந்திமக்கால நிகழ்வுகள் பற்றி விவரிக்கின்றது.
கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய இரண்டு தக்கான ராஜ்ஜியங்கள் தொடர்பாகத் தனியான வரலாற்று நூல்கள் நம்மிடையே இருக்கின்றன. மொகலாய அரசுக்கும் இவற்றுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பற்றி இவை விவரிக்கின்றன. ‘புராஞ்சிஸ்’ எனப்படும் ஆவணங்கள் அஸ்ஸாம் பற்றி விவரிக்கும் மதிப்பு மிகுந்த உள்நாட்டு ஆவணமாக இருக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக, ஒளரங்கசீபின் ஆட்சி தொடர்பாகச் சிலவற்றுக்கு மிகவும் மூலாதாரமான தரவுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அவை மேலே சொல்லப்பட்டிருக்கும் அரசு ஆவணங்கள், நூல்களையெல்லாம் விட மிகவும் மதிப்பு வாய்ந்தவை. அது ‘அக்பராத்-இ-தர்பார்-இ-முவாலா’ – அரசவை செய்தி மடல்களின் கையெழுத்துப் பிரதிகள். இவை ஜெய்ப்பூரிலும் லண்டன் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி நூலகத்திலும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 17ஆம் நூற்றாண்டில் அரசியல் களத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எழுதிய கடிதங்கள். இவை சுமார் 6000க்கும் மேல் இருக்கும். இவற்றில் ஆயிரத்துக்கும் மேல் ஒளாரங்கசீப் எழுதியவை. இவையெல்லாம் என் கைவசம் இருக்கின்றன. இவற்றில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் பின்னாளில் ஓர் ஆசிரியர், தன் நோக்கத்துக்கு ஏற்ப ஜோடித்து எழுதப்பட்டவையாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் நடந்தவையெல்லாம் நடந்தவிதமாகவே இந்தக் கடிதங்களில் பதிவாகியிருக்கின்றன. இந்திய வரலாற்றை வடிவமைத்த உண்மையான பயங்கள், எதிர்பார்ப்புகள், திட்டங்கள், கருத்துகள் ஆகியவை அவற்றில் அப்படியே பதிவாகியிருக்கின்றன.
ஒளரங்கசீபின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியப் பயணியர்களான டாவெர்னியர், பெர்னியர், கரேரி, மனூச்சி ஆகியோர் அன்றைய நம் தேசம் பற்றி மிக விரிவான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அன்றைய மக்களின் நிலை, கிறிஸ்தவச் சர்ச்களின் வரலாறு ஆகியவை குறித்துச் சந்தேகத்துக்கு இடமின்றி வெளிச்சம் பாய்ச்சிய மிக முக்கியமான ஆவணங்களாக அவை இருக்கின்றன. இந்தியப் பழக்க வழக்கங்கள், அமைப்புகள் பற்றிய அயல் நாட்டுப் பயணிகளின் விமர்சனங்கள் எல்லாம் அவற்றுக்கே உரிய புதுமையும் மதிப்பும் கொண்டவையாகத் திகழ்கின்றன. ஆனால், இந்தியாவின் அரசியல் வரலாறு தொடர்பாகப் பார்த்தால் அவர்கள் பங்குபெற்ற அல்லது நேரில் பார்த்தவை நீங்கலாக, அவர்கள் எழுதியிருப்பவையெல்லாம் சந்தைகளில் பரப்பப்படும் வதந்திகள், மக்கள் மத்தியில் உலவும் கதைகள் இவற்றை அப்படியே எழுதி வைத்ததாகவே இருக்கின்றன. இவற்றைப் பாரசீக மொழியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளுடனும் பிற சமகால வரலாற்றுக் குறிப்புகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.
4. ஒளரங்கசீபின் குழந்தைப் பருவமும் கல்வியும்
முதலாம் ஆலம்கீராக டெல்லியின் அரியணையில் ஏறிய முஹி-உத்-தீன் முஹம்மது ஒளரங்கசீப், தோஹாதில் கி.பி.1618, அக்டோபர் 24 இரவில் ஷாஜஹான், மும்தாஜ் தம்பதியின் ஆறாவது மகனாகப் பிறந்தார். இஸ்லாமிய ஹிஜ்ரி வருடம் 1027, சிகுதா மாதம், 15ஆம் நாள். இன்றைய பம்பாய் மாகாணத்தில் பஞ்ச மஹால் மாவட்டத்தில் இருக்கிறது தோஹாத். பம்பாய், பரோடா, மத்திய இந்திய ரயில்வேயின் (பி.பி.சி.ஐ. ரயில்வே) தொஹாத் ரயில்வே நிலையத்துக்குத் தெற்கில் இந்த ஊர் இருக்கிறது.
1622லிருந்து ஜஹாங்கீரின் ஆட்சிக் காலம் முடியும் வரையிலும் அவருடைய மகனான ஷாஜஹான், பேரரசரின் அதிருப்திக்கு ஆளாகியதோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எதிர்த்துப் போராடவும் வேண்டியிருந்தது. இறுதியில் தன் எதிர்ப்பைக் கைவிட்டுத் தந்தையிடம் சரணடைந்தார் ஷாஜகான். தனது சிறு வயது மகன்கள் தாராவையும் ஒளரங்கசீபையும் பிணைக்கைதியாகவும் அவர் ஒப்படைக்க வேண்டியிருந்தது. 1626இல் சிறுவர்கள் இருவரும் லாஹூரில் இருந்த ஜஹாங்கீரின் அரசபைக்கு வந்து சேர்ந்தனர்.
சிறிது காலத்தில் அவர் இறந்துவிடவே, ஷாஜகான் அரியணை ஏறினார். அஸஃப் கான் (பிப்ரவரி 26, 1628 அன்று) சிறுவர்கள் இருவரையும் ஆக்ராவுக்குக் கொண்டுவந்தார். அப்படியாக ஒளரங்கசீப் தன் பத்தாவது வயதில் நெருக்கடிகள் நீங்கிய வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு முறையான கல்வி கொடுக்கப்பட்டது. அவருடைய ஆசிரியராக இருந்தவர் கிலனைச் சேர்ந்த மீர் முஹம்மது ஹஷிம். முதியவரான முல்லா சாலிக் என்பவர்தான் ஒளரங்கசீபின் ஆசிரியராக இருந்தார் என்று பெர்னியர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பாரசீக நூல்கள் எதிலும் இந்தக் குறிப்பு இல்லை.
ஒளரங்கசீப் இயல்பாகவே துடிப்பான மனநிலை கொண்டவராகவும் தான் படிப்பவற்றை உடனே புரிந்துகொண்டுவிடுபவராகவும் இருந்திருக்கிறார். அவருடைய கடிதங்களைப் பார்த்தால் குர்ரானிலும் ஹதீஸ்களிலும் (முஹம்மதுவின் போதனைகள்) மிகுந்த புலமை பெற்றவராக அவர் இருந்திருப்பது நன்கு புலனாகிறது. நினைத்த மாத்திரத்தில் அவற்றில் இருந்து அவரால் மேற்கோள் காட்டவும் முடிந்திருக்கிறது. அரபு, பாரசீக மொழிகளில் தேர்ந்த நிபுணரைப் போலவே பேசவும் எழுதவும் செய்திருக்கிறார்.
ஒளரங்சீபின் தாய்மொழி ஹிந்துஸ்தானி. மொகலாய அரண்மனையில் அரசியல் சாராப் பரிமாற்றங்களில் இந்த மொழியையே பயன்படுத்தினார். ஹிந்தியும் அவருக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தது. ஹிந்தியில் பேசவும், புகழ் பெற்ற மேற்கோள்கள், பழமொழிகளைச் சொல்லவும் தெரிந்திருந்தது.
ஔரங்கசீப் ‘நஸ்க்’ எழுத்துவடிவில் அரபியை விரைவாகவும் திறம்படவும் எழுதுவார். இந்த எழுத்துவடிவில் அவர் குர்ரான் முழுவதையும் எழுதியிருக்கிறார். இப்படி அவர் எழுதிய இரண்டு குரான்களை நன்கு அட்டைபோட்டு, அழகுபடுத்தி, மெக்காவுக்கும் மதினாவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். அவருடைய ‘நஸ்தாலீக்’ மற்றும் ‘ஷிகஸ்தா’ எழுத்துவடிவங்களும் சிறப்பானதாக இருந்தன என்று சஹி மஸ்தத் மாலிக் குறிப்பிட்டிருக்கிறார். இதை நாம் முழுமையாக நம்பலாம். ஏனென்றால், ஒளாரங்கசீப் எழுதிய ஏராளமான கடிதங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அனைத்து உத்தரவுகளையும் அவர் தன் கைப்பட எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.
பயனற்ற கவிதைகளைக் கேட்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதிலும் துதிபாடி எழுதப்படுபவற்றைக் கேட்கவே அவருக்குப் பிடிக்காது. அதேநேரம் நீதி போதனைகளை முன்வைக்கும் கவிதைகளைப் பெரிதும் விரும்பினார். குர்ரானின் விளக்க உரைகள், முஹம்மது பற்றிய கதைகள், புனித வசனங்கள், இமாம் முஹம்மது கஸாலியின் படைப்புகள், முனீரைச் சேர்ந்த ஷேக் சரஃப் யாஹியா, ஷேக் சைன்-உத்-தீன் குதுப் முஹி ஷிராஸி ஆகியோரின் கடிதங்கள் ஆகியவற்றை மிகவும் ஆர்வத்துடன் படித்தார்.
ஓவியத்தில் ஒளரங்கசீபுக்கு ஆர்வம் இருந்திருக்கவில்லை. அவருடைய ஆட்சியின் பத்தாவது ஆண்டு நிறைவுற்றபோது மார்க்கப் பற்று மிகுந்து, அரசபையில் இசைக்குத் தடைவிதித்தார். அழகிய சீன பாண்டங்கள் அவருக்குப் பிடிக்கும். ஆனால் தந்தைக்கு இருந்த கட்டடக்கலை ஆர்வத்தில் துளிகூட இவருக்கு இருந்திருக்கவில்லை.
அவருடைய ஆட்சிக் காலத்தை நினைவுகூரும்விதமான ஓர் அற்புதக் கட்டுமானமோ, அருமையான மசூதியோ, அரங்கமோ, கல்லறையோ எதுவுமே இல்லை. (டெல்லி அரண்மனையில் இருக்கும் முத்து மசூதி ஒரு விதிவிலக்கு. 10 டிசம்பர் 1659இல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவு ஆனது (ஏ.என்.468). லாகூரில் இவர் கட்டிய மசூதி அவ்வளவு சிறந்தது அல்ல. ஒளரங்காபாத்தில் இருக்கும் அவருடைய மனைவி தில்ராஸ் பானுவின் கல்லறைதான் அவர் கட்டியதிலேயே மிகவும் பிரமாண்டமான கட்டுமானம்.)
ஒளரங்கசீப் தன் ஆட்சிக் காலத்தில் அவருடைய போர் வெற்றிகளை நினைவுகூரும் மசூதிகள், மேற்குத் திசையிலும் தெற்குத் திசையிலும் நீண்டுசெல்லும் ராஜபாட்டை நெடுகிலும் எண்ணற்ற சராய்கள் (பயணியர் விடுதிகள்) போன்ற அவசியமானவற்றை மட்டுமே அதிகம் கட்டினார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.
நல்ல ஆற்றொழுக்கான மொழி பெயர்ப்பு. இளையதலைமுறைக்குப் பயன்படும் இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும். வாழ்த்துகள்
நல்ல மொழி நடை தோழர்…. .
வாழ்த்துகள்.
Amazing and love the details
Superb
அரிய பெரிய முயற்சி ஶ்ரீ யதுநாத் சர்க்கார் அவர்களின் வரலாற்று நூலை மொழிபெயர்ப்பது! தமிழ்கூறு நல்லுலகம் இந்த நூலை வரவேற்கும் என்பதிலே ஐயமில்லை! மொழிபெயர்ப்பு சிறப்பாக தெளிவாக அமைந்துள்ளது! பாராட்டுகள்! வாழ்த்துகள்! தொடர்ந்து அனைவரும் வாசிக்கவேண்டும்!