Skip to content
Home » ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2

ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2

ஔரங்கசீப்

5. யானையுடனான சண்டை

சிறு பிராயத்தில் ஒளரங்கசீப் செய்த ஒரு விஷயம் இந்தியா முழுவதும் அவருடைய புகழைப் பரப்பியது. மே, 28 1633இல் சுதாகர், சூரத்-சுந்தர் என்ற இரண்டு பெரிய யானைகளை ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் ஒன்றுக்கொன்று மோதவிட்டு வேடிக்கை பார்க்க ஷாஜஹான் முடிவுசெய்தார். இரண்டு யானைகளும் சிறிது தூரம் ஓடி, கோட்டை முகப்பின் முன்னால் வந்து மோத ஆரம்பித்தன. இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்னர், அவற்றை நன்கு பார்க்கும் நோக்கில் அவற்றுக்கு அருகே நெருங்கிச் சென்றார். மூன்று மூத்த மகன்களும் அவருக்குச் சில எட்டுகள் முன்பாகக் குதிரையை ஓட்டிக்கொண்டு அங்குச் சென்றனர். ஒளரங்கசீப் சண்டையைப் பார்க்கும் ஆவலில் யானைகளுக்கு மிக அருகில் சென்றுவிட்டார்.

ஒன்றுக்கு ஒன்று தும்பிக்கையால் இறுக்கிப் பிடித்து மோதிக் கொண்டிருந்த யானைகள், பிடியைச் சற்றுத் தளர்த்திவிட்டு, சிறிது பின்னோக்கி நகர்ந்தன. சுதாகர் யானையின் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது. சண்டையில் இருந்த எதிரி யானையை விட்டுவிட்டு அருகில் நின்றிருந்த ஒளரங்கசீபை நோக்கிப் பாய்ந்தது. 14 வயதே ஆகியிருந்த இளவரசன், சிறிதும் அஞ்சாமல் அங்கேயே நின்றான். குதிரையைத் திருப்பி ஓட்டாமல், தன் கையில் இருந்த ஈட்டியை யானையின் தலைக்குக் குறிவைத்து வீசினான். அனைவரிடமும் குழப்பமும் பீதியும் தொற்றிக்கொண்டது. பிரபுக்களும் பணியாளர்களும் கூச்சலிட்டபடி பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர். எதுவும் பலன் தரவில்லை.

சுதாகர் யானை, தன் தும்பிக்கையால் அடித்து ஒளரங்கசீபின் குதிரையைக் கீழே விழவைத்தது. இளவரசன் லாகவமாகக் கீழே குதித்துத் தப்பியதோடு தாக்கவரும் யானையைத் தன் வாளை உருவிக்கொண்டு எதிர்க்கத் தயாரானான். அந்த நேரம் பார்த்து, மூத்த சகோதரன் ஷுஜா கூட்டத்தையும், புகை மூட்டத்தையும் கிழித்தபடி முன்னால் வந்து, யானை மீது ஈட்டியைப் பாய்ச்சி அதைக் காயப்படுத்தினான். ராஜா ஜெய் சிங்கும் பாய்ந்து வந்து யானையைத் தாக்கினார். இப்போது இன்னொரு எதிர்பாராத உதவியும் இளவரசனுக்குக் கிடைத்தது. சூரத்-சுந்தர் யானையும் விட்ட இடத்திலிருந்து சண்டையைத் தொடர்வதற்காக, சுதாகர் யானையைத் தாக்க விரைந்தது. ஆனால் ஈட்டி எறிகள், பட்டாசுகள் ஆகியவற்றால் கலவரப்பட்டிருந்த சுதாகர், களத்தை விட்டு ஓடியது. சூரத்-சுந்தரும் அதைத் துரத்தியபடியே சென்றுவிட்டது. இளவரசர்கள் காப்பாற்றப்பட்டனர்.

ஒளரங்கசீபைக் கட்டி அணைத்து ஷாஜஹான் அவருடைய வீரத்தைப் பாராட்டினார். பஹாதூர் (மாவீரன்) என்ற பட்டப் பெயரையும் சூட்டினார். தந்தையைப் போலவே மகனும் கண்மூடித்தனமான துணிச்சலைப் பெற்றிருப்பதாக அரசவையினர் சொன்னார்கள். ஜஹாங்கீரின் கண் முன்னே ஒரு காட்டுப் புலியை இளவயது ஷாஜஹான் வாள் கொண்டு வீழ்த்தியதை நினைவுகூர்ந்தனர்.

ஒளரங்கசீப் இந்த இடத்தில், தன்னுடைய தணியாத உத்வேகத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறார். அவருடைய கண்மூடித்தனமான துணிச்சலைக் குறித்து தந்தை செல்லமாகக் கடிந்துகொள்ளும்போதெல்லாம், ‘மோதலில் நான் கொல்லப்பட்டிருந்தாலும் எனக்கு அவமானம் எதுவும் இல்லை; மாமன்னர்களின் மீதும் மரணம் தன் திரையைப் போர்த்தத்தான் செய்யும். அதில் அவமானப்பட எதுவும் இல்லை’ என்று சொன்னார்.

டிசம்பர் 13, 1634இல் மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தில் முதல் பதவியை ஒளரங்கசீப் பெற்றார். பத்தாயிரம் குதிரைப்படை வீரர்கள்கொண்ட பிரிவுக்குத் தளபதியானார். அடுத்த செப்டம்பர் மாதத்தில், போர்ப்பயிற்சி பெறவும், படை வீரர்களை நிர்வகிக்கும் அனுபவம் பெறவும், புந்தேலா மீதான படையெடுப்பை முன்னெடுத்தார்.

6. புந்தேலா போர், 1635

ஜஹாங்கீரின் ஆதரவினால் ஓர்ச்சா ராஜ்ஜியத்தின் ராஜாவான வீர் சிங் தேவ், செல்வ வளத்திலும் படை வலிமையிலும் நல்ல நிலைக்கு வந்திருந்தார். பேரரசரின் ஆதரவு இருந்ததால், அப்துல் ஃபசலையும் வீர் சிங் தேவ் கொன்றிருந்தார். அவருடைய மகன் ஜுஜர் சிங், 1627இல் அரியணை ஏறினார். ஷாஜஹானுடைய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றார். பழைய கோண்ட் தலைநகரமான செளராகர் பகுதியைக் கைப்பற்றி, அதன் அரசரான பிரேம் நாராயணனைக் கொன்றார். பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கவர்ந்தார். பிரேம் நாராயணனின் மகன் ஷாஜஹானிடம் உதவி கேட்டார் (1635).

ஷாஜஹான் புந்தேல்கண்ட் ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற மூன்று படைகளை அனுப்பினார். புந்தேலா ராஜ வம்சத்தின் இன்னொரு கிளையைச் சேர்ந்த தேவி சிங்கும் ஷாஜஹானுடன் கை கோத்தார். கைப்பற்றப்பட்ட ராஜ்ஜியம் இவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அங்கு அனுப்பப்பட்ட மூன்று படைகளில் சம அதிகாரமட்டத்தில் இருந்த மூன்று மொகலாயத் தளபதிகளிடையே ஒற்றுமையைக் கொண்டுவரவும், ஒழுங்கை நிலைநாட்டவும் வலிமையான ஒரு தலைவர் தேவைப்பட்டார். இந்தப் பொறுப்பு ஒளரங்கசீப் வசம் தரப்பட்டது. அப்படியாக, ஒளரங்கசீப் இந்தப் படையெடுப்பின் சம்பிரதாயத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் படைகளின் பின்னால் இருந்தால் போதும்; ஆனால், மூன்று மொகலாயத் தளபதிகளும் இவருடைய ஆலோசனை பெறாமல் எதையும் செய்யக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.

அக்டோபர் 2, 1635இல் ஓர்ச்சாவுக்கு அருகில் இருந்த மலைப்பகுதியை தேவி சிங்கின் படையினர் முற்றுகையிட்டனர். அக்டோபர் 4 அன்று ஓர்ச்சாவை மொகலாயர்கள் கைப்பற்றிவிட்டனர். தோற்றுப் போன ஜுஜார் உயிர் பிழைக்கத் தமுனி பகுதிக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து நர்மதை நதியைக் கடந்து செளராகருக்குச் சென்றார். தமுனிப் பகுதியை மொகலாயர்கள் அக்டோபர் 18 அன்று கைப்பற்றி ஜுஜாரைத் துரத்திச் சென்றனர்.

அவர் கோண்ட் பகுதிகளான தேவ்கட், சந்தா ஆகியவற்றினூடாகத் தன் படையினரை விட்டுவிட்டு, சொத்து, அதிகாரங்களை விட்டுவிட்டு, பட்டினியும் மயக்கமும் துரத்த ஓடினார். இறுதியில் அடர்ந்த காட்டுக்குள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சுற்றி வளைத்த கோண்டுகள், அவரைக் கொன்றும்விட்டனர் (டிசம்பர்). உடன்கட்டை (ஜெளஹர்) ஏறாத மனைவியரும் மகள்களும் மொகலாய அந்தப்புரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜுஜாரின் இரண்டு மகன்களும் ஒரு பேரனும் இளவயதினராக இருந்ததால், முஸல்மான்களாக்கப்பட்டனர். கொல்லப்பட்ட மன்னரின் இன்னொரு மகனும் அமைச்சரும் இஸ்ஸாமுக்கு மதம் மாற மறுத்ததால் துடி துடிக்கக் கொல்லப்பட்டனர். ஓர்ச்சாவில் வீர் சிங் கட்டிய அற்புதமான ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அக்டோபர் இறுதிவாக்கில் ஜான்சி கோட்டையும் கைப்பற்றப்பட்டது. வீர் சிங் வசமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் (அன்றைய மதிப்பில்).

7. ஒளரங்கசீபின் முதல் தக்காண அரசாட்சி, 1636-1644

அக்பருடைய ஆட்சிக் காலத்தின் இறுதிவாக்கில், மொகலாயப் பேரரசு நர்மதை நதியைத் தாண்டி தென் திசையில் பரந்து விரிய ஆரம்பித்தது. 1599இல் காந்தேஷ் பகுதி கைப்பற்றப்பட்டது. பின்னர் பேராரும், 1600இல் அஹமத் நகரும் கைப்பற்றப்பட்டன. அதன் சுல்தானாக இருந்த நிஸாம் ஷா சிறு வயதினனாக இருந்ததால் அவனை அப்புறப்படுத்திவிட்டு மொகலாயப் பேரரசுடன் அந்த நகரம் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த இணைப்பு பெயரளவிலானதாக மட்டுமே இருந்தது. மொகலாயர்களால் அந்தப் புதிய பகுதியைத் திறம்பட ஆக்கிரமிக்க முடியவில்லை.

நிஸாம்-ஷாஹி வம்சமும் அதன் ஆட்சி அதிகாரமும் ஜஹாங்கீரின் வலுவிழ்ந்த ஆட்சிக் காலத்தில், அறிவுக்கூர்மை கொண்ட மாலிக் அம்பரின் தீவிர மேற்பார்வையினால் மறுமலர்ச்சி பெற்றன. அபிசீனிய அடிமையான அவர் அசாதாரண மேதமையும் திறமையும் கொண்டவர். அவருடைய புத்திசாதுரியமான வருவாய்-வரி வசூல் அமைப்பானது விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. அரசின் கஜானாவையும் நிரப்பியது. பிறப்பிலேயே தலைமைப் பண்பு பெற்றிருந்த அவர் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் சென்றார். சட்ட ஒழுங்கை நிலைநாட்டினார். நீதி, வீரம், மக்கள் நலன் ஆகியவை சார்ந்து அவர் செய்தவையெல்லாம் இன்றுவரையிலும் மறக்கமுடியாதபடியாக விளங்குகின்றன. அவர், தக்காண அரசுகளுடனான மிகப் பெரிய கூட்டணியை அமைத்ததோடு மித ஆயுதங்கள் கொண்ட மராட்டியக் குதிரைப்படையை முழுமையாகப் பயன்படுத்தி, மொகலாயர்களைப் பின்வாங்கச் செய்தார்.

மாலிக் அம்பர் 1626இல் மரணமடைந்திருந்ததைத் தொடர்ந்து, 1627இல் அரியணை ஏறிய ஷாஜஹான் தக்காணத்தில் கால் பதிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். நிஸாம்-ஷாஹி வம்சத்தின் புதிய தலைநகரமான தெளலதபாத்தையும் அந்த வம்சத்தின் கடைசி மன்னரான ஹுசைன் ஷாவையும் சேர்த்துக் கைப்பற்றப்பட்டது (1633). ஆனால், புதிதாக இன்னொரு பிரச்னை முளைத்தது. பீஜப்பூர் சுல்தான் (அடில் ஷா), கோல்கொண்டா சுல்தான் (குதுப் ஷா) இருவரும் வீழ்ச்சியுற்றிருந்த அஹமத் நகர் அரசின் அருகில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். புகழ் பெற்ற மன்னர் சிவாஜியின் தந்தையான சாஹாஜி, பீஜப்பூர் அரசின் உதவியுடன் ஒரு பொம்மை அரசராக நிஸாம் ஷாவை நியமித்து அந்தப் பகுதியை ஆண்டுவந்தார்.

ஷாஜஹான் தனது அதிகாரத்தையும் உரிமையையும் நிலைநாட்ட பல படையெடுப்புகளில் ஈடுபட்டார். நேர்த்தியான நிர்வாகத்துக்கு உதவும் வகையில் தெளலதாபாத்தும் அஹமத் நகரும் கந்தேஷ் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு வேறொரு ஆட்சியாளரின் கீழ் (நவ-1634) கொண்டுவரப்பட்டன. பிப்ரவரி 1636இல் ஷாஜஹான் தானே நேரடியாகத் தக்காணத்துக்கு வந்து போருக்குத் தலைமை தாங்கினார். 50,000 வீரர்களைக் கொண்ட மூன்று மொகலாயப் படைகள், பீஜப்பூர், கோல்கொண்டா படைகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக நிறுத்தப்பட்டன. நான்காவது படை ஒன்று (8000 வீரர்கள்) மஹாராஷ்டிராவைத் தாக்கப் புறப்பட்டது. குதுப் ஷா பயந்து தோல்வியை ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் எட்டு லட்சம் பணம் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டார். மொகலாயப் பேரரசரைத் தன் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டார்.

பீஜப்பூர் சுல்தான் எதிர்த்து நிற்க முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் மூன்று மொகலாயத் தளபதிகளும் அவருடைய ராஜ்ஜியத்துக்குள் நுழைந்து, வயல்கள், கிராமங்கள் அனைத்தையும் அழித்து மக்களை அடிமைப்படுத்தினர். இறுதியாக மே 1636இல் சமரசம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிஸாம் ஷாஹி ராஜ்ஜியமானது இரண்டு அதிகாரமையங்களுக்கும் பங்கிடப்பட்டது. ஷோலாப்பூர், வாங்கி (பீமா மற்றும் சினா நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகள்), பால்கி, சித்கூபா (வட கிழக்கில் இருக்கிறது) வட கொங்கணி பகுதியில் இருக்கும் பூனா மாவட்டம் ஆகியவை எல்லாம் பீஜப்பூர் சுல்தான் வசம் தரப்பட்டன. இவற்றில் இருந்து மொத்தம் 80 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது.

அஹமத் நகரின் பிற பகுதிகள் மொகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டன. மொகலாயப் பேரரசரின் ஆளுகையை ஏற்றுக்கொண்ட அடில் ஷா, சக கோல்கொண்டா சுல்தானுடன் நட்புறவுடன் இருக்கவும் ஒப்புக்கொண்டார். கோல்கொண்டா ராஜ்ஜியத்தின் எல்லை மஞ்சேரா நதியாகத் தீர்மானிக்கப்பட்டது. அதோடு 20 லட்ச ரூபாய் கப்பமாகக் கட்டவும் அடில் ஷா ஒப்புக்கொண்டார். வருடாந்தரக் கப்பம் கட்டத் தேவையில்லை என்றும் தீர்மானமானது.

அப்படியாக, தக்காணப் பகுதியில் மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நன்கு தெளிவாக வரையறுக்கப்பட்டன. உள்ளூர் அரசர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர். இதன்பின்னர் தக்காணத்தை ஔரங்கசீபின் பொறுப்பில் விட்டுவிட்டு (ஜூலை 14, 1636) ஷாஜஹான் வட இந்தியாவுக்குத் திரும்பினார். ஒளரங்கசீப் ஒளரங்காபாத் நகரில் இருந்துகொண்டு நிர்வாகம் செய்தார். கிட்கி கிராமப்பகுதியில் மாலிக் அம்பர் தோற்றுவித்த நகரத்தை தன் மூன்றாவது மகன் பெயரால் ஔரங்காபாத் என்று அழைக்க ஷாஜஹான் அனுமதி அளித்தார்.

உத்கிர் கோட்டை (செப், 28), ஒளசா கோட்டை (அக், 19)  ஆகியவை கைப்பற்றப்பட்டதுடனும், சாஹாஜி போஸ்லேயின் படுதோல்வியைத் தொடர்ந்தும் தக்காணத்தில் மொகலாயப் படையெடுப்புகள் முடிவுக்கு வந்தன. மொகலாயத் தளபதி கான்-இ-ஸமானும் அவருடைய பீஜப்பூர் துணைத்தளபதியான ரந்துலா கானும் போஸ்லேயைத் துரத்திச் சென்றனர். அவர், வட கொங்கணி பகுதியில் இருந்த மஹுலி பகுதியில் அக்டோபர் இறுதியில் முழுமையாகச் சரணடைந்தார். தன் கட்டுப்பாட்டில் இருந்த நிஸாம் ஷா, அவருடைய அரசின் சொத்துகள், ஏழு கோட்டைகள், மஹாரஷ்டிராவில் தன் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகள் அனைத்தையும் மொகலாய அரசிடம் ஒப்படைத்தார். இதில் புனே மாவட்டத்தில் இருந்த சிறிய ஜாகிர்களை மட்டும் பீஜப்பூர் ஆளுகையின் கீழ் கொடுத்தார்.

இன்னொரு மொகலாயத் தளபதி, கான்-இ-தெளரன், தேவ்கட் பகுதியின் கோண்டு அரசரிடமும், பல குறுநில மன்னர்களிடமிருந்தும் மிக அதிக வரியை வசூலித்தார். 1638இல் ஒளரங்கசீப், பாக்லானா பகுதியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். சந்தூர் மலைத் தொடரின் வடக்கே தக்காணத்துக்கும் குஜராத்துக்குமிடையிலான பிரதான பாதையில் இது அமைந்துள்ளது. இங்குதான் புகழ் பெற்ற சால்ஹிர், முல்ஹிர் மலைக்கோட்டைகள் அமைந்துள்ளன. முல்ஹிரும் பிப்லாவும் கைப்பற்றப்பட்டு முழு ராஜ்ஜியமும் ஜூன் கடைசி வாக்கில் இணைக்கப்பட்டன. அடுத்த ஆண்டில் (1639) ஒளரங்கசீப், மராட்டியக் கடல் கொள்ளையரும் சாஹாஜியின் மாமாவின் மகனுமான கேலோஜி போஸ்லேயைச் சிறைப்பிடித்துக் கொன்றார்.

8. ஒளரங்கசீபின் குடும்பம்

ஒளரங்கசீபுக்கு நான்கு மனைவிகள்.

1. தில்ரஸ் பானு பேகம் – ஷா நவாஸ் கானின் மகள் (நவாஸ் கானின் கொள்ளுத் தாத்தா, பாரசீக மன்னர் முதலாம் ஷா இஸ்மாயில் சாஃபவியின் இளைய மகன்). மே 8, 1637இல் ஆக்ராவில் மிக மிக விமர்சையாக ஒளரங்கசீபுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு முஹம்மது அக்பர் மகனாகப் பிறந்தார். இதையடுத்து ஏற்பட்ட நோயினால் தில்ரஸ் பானு பேகம் அக் 8, 1657இல் ஒளரங்காபாதில் உயிர் துறந்தார். நகருக்கு வெளியே இவருடைய உடல் புதைக்கப்பட்டது. நவீன ‘சூஃபி ரபியா’ அல்லது ‘ரபியா-உத்-தெளரனி என்ற பட்டம் இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய கல்லறை ‘தக்காண தாஜ் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. ஒளரங்கசீபின் உத்தரவின் பெயரில் இந்தக் கல்லறை அவருடைய மகன் ஆஸமினால் புனரமைக்கப்பட்டது. ‘பாரசீக ராஜ வம்சத்தில் பிறந்தவர்’ என்ற பெருமிதம் கொண்டவராக, ராஜ பரம்பரை மனோபாவம் மிகுதியானவராக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. இவருடைய கணவர் இவரை வியந்து பார்த்திருக்கக்கூடும் (‘அனெக்டோட்ஸ் ஆஃப் ஒளரங்கசீப்’, எண் 27).

2. ரஹ்மத்-உந்-நிசா அல்லது நவாப் பாய் – இவர் காஷ்மீரில் இருக்கும் ரஜெளரி பகுதியின் ராஜா ராஜுவின் மகள். மலையக ராஜபுத்திர வம்சத்தில் வந்தவர். இவருடைய மகன் பஹதுர் ஷா டெல்லியின் அரியணையில் ஏறியபோது, பேரரசர் தன்னை ஒரு சைய்யது என்று அழைத்துக்கொள்ள ஏதுவாக ரஹ்மத்-உந்-நிசாவுக்கு ஒரு பொய்யான வம்சாவளிக் கதை உருவாக்கப்பட்டது. ஃபர்தாபூரில் கணவாய் ஒன்றின் அடிவாரத்தில் இவர் ஒரு பயணியர் மாளிகையை (சராய் ) கட்டினார். ஒளரங்காபாதின் புறநகரான பைஜிபுராவை நிர்மாணித்தார். கெடுமதியாளர்களின் ஆலோசனையின் பேரில் இவருடைய மகன்கள் முஹம்மது சுல்தானும் மெளசமும் பேரரசருக்குக் கீழ்படியாமல் நடந்துகொண்டனர். இவை ரஹ்மதின் பின்னாளைய வாழ்க்கையைக் கசப்பு மிகுந்ததாக்கியது. மெளசமுக்கு இவர் பல ஆலோசனைகள் சொல்லியும் வேண்டுகோள் விடுத்தும் கேட்கவே இல்லை. இறுதியில் அவன் கைதுசெய்யப்பட்டான். நவாப் பாய், தன் கணவர் மீதான வசியத்தை இழந்ததுபோன்ற நிலை உருவானது. இதைத் தொடர்ந்து வாழ்வின் முற்பகுதியிலேயே கணவரின் ஆதரவும் வற்றியது. கணவரிடமிருந்தும் மகன்களிடமிருந்தும் நீண்டகாலம் பிரிந்து வாழ்ந்தவர் டெல்லியில் 1691 வாக்கில் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

3. ஒளரங்காபாதி மஹல் – ஒளரங்காபாதில் ஒளரங்கசீப் இளவரசராக இருந்தபோது இவர் அந்தப்புரத்தில் இடம்பெற்றார் என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பிளேக் நோயில் சிக்கி அக்டோபர் அல்லது நவம்பர் 1688-ல் பீஜப்பூரில் உயிர் துறந்தார்.

4. உதய்புரி மஹல் – முஹம்மது கம் பக்ஸின் அம்மா. இந்தக் காலகட்டத்தில் இந்தியா வந்த வெனிஸ் நகரப் பயணி மனூச்சி, இவரைத் தாரா ஷுகோவின் அந்தப்புரத்தில் இருந்த ஜார்ஜிய அடிமைப் பெண் என்று குறிப்பிட்டிருக்கிறார். முதல் எஜமானர் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிபெற்ற எதிரியின் ஆசை நாயகியானார். அப்போது இவர் சிறு பெண்ணாகத்தான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. 1667இல் முதல் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். இறப்பதுவரை பேரரசரின் மீது தன் வசியத்தையும் செல்வாக்கையும் தொடர்ந்து தக்கவைத்திருந்திருக்கிறார். முதுமையில் இவரே அவருடைய நேசத்துக்குரியவராக இருந்திருக்கிறார். உதய்புரி மஹல் மீது ஔரங்கசீபுக்கு இருந்த மையலினால் முஹம்மது கம் பக்ஸ் செய்த பல தவறுகளையும் இவரின் குடியாட்ட வெறித்தனங்களையும் கண்டும் காணாமல் இருந்துவிட்டார். மார்க்கப்பற்று மிகுந்த முஸ்லிமான ஔரங்கசீபுக்கு இது பெரிய அதிர்ச்சியையே தந்திருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு மனைவிகள் அல்லாமல், ஹீரா பாய் என்று இன்னொருவரும் இருந்திருக்கிறார். அவருடைய நளினம், இசைத்திறமை, நைச்சியமாகப் பேசும் திறமை இவையெல்லாம் தூய்மைவாதப் பேரரசரின் வாழ்வில் இருந்த ஒரே காதல் நாயகியாக இவரை ஆக்கியிருந்தது. ஹீரா பாய் ஸைனாபதி ஓர் இளம் அடிமைப் பெண். ஒளரங்கசீபின் அம்மாவின் சகோதரியை மணந்துகொண்டிருந்த மீர் கலீலின் அரவணைப்பில் இருந்த பெண். ஒளரங்கசீப் தக்காணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பர்ஹான்பூரில் இருந்த தன் சித்தியின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருக்கிறார். தப்தி நதியின் மறுகரையில் இருந்த ஸைந்தாபாத் பூங்காவில் உலவிக் கொண்டிருந்திருக்கிறார். சித்தியின் வீட்டில் பர்தா அணியாத ஹீரா பாயைப் பார்த்திருக்கிறார். ‘கனிகள் காய்த்துக் குலுங்கும் மாமரத்தைப் பார்த்த அந்த இளம் பெண், இளவரசர் அங்கு இருப்பது நினைவில் இல்லாததுபோல், மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்துக் கனிகளைப் பறித்தாள்’. அந்தக் கணமே அவளுடைய இணையற்ற வசீகரம் இளவரசனின் மனதில் புயலாக மையம் கொண்டது. ‘துளியும் வெட்கமின்றி கெஞ்சிக் கூத்தாடி அந்த நிமிடமே அவளைச் சித்தியின் வீட்டில் இருந்து தூக்கிச் சென்றார்.’

அவள் மீது அதி தீவிரமாக மோகம் கொண்டார். அவள் மீதான மோகம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், ஒரு நாள் அவள் இளவரசருக்கு ஒரு கிண்ணத்தில் மது ஊற்றிக் கொடுத்துக் குடிக்கும்படிச் சொன்னாள். அவர் எவ்வளவோ கெஞ்சியும் மன்றாடியும் அவள் விட்டுக்கொடுக்கவே இல்லை. குடித்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தினாள். நிராதரவான பெருங்காதலன் வேறு வழியின்றி இறுதியில் மதுக் கிண்ணத்தை உதட்டின் அருகில் கொண்டு சென்றான். உதட்டில் கிண்ணம்படுவதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தவள், அவன் உதட்டில் மது படும் நொடிக்கு முன்பாகக் கிண்ணத்தைத் தட்டிப் பறித்தாள். ‘அன்பே… உங்களுக்கு என் மீது எவ்வளவு காதல் இருக்கிறது என்பதைப் பரிசோதிக்கத்தான் விரும்பினேன். உங்களை இந்தப் பாவத்தில் விழவைப்பது என் நோக்கம் அல்ல’ என்றாள். இந்தக் காதல் கதையைச் சீக்கிரமே , அவள் இளமைத் துள்ளலுடன் இருந்த காலத்திலேயே மரணம் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. ஒளரங்கசீப் அவளுடைய இழப்பினால் மனம் கசந்து வருந்தினார். அவளது உடலை ஒளரங்காபாதில் இருந்த குளம் ஒன்றின் அருகில் புதைத்தார்.

0

ஒளரங்கசீபுக்கு எண்ணற்ற குழந்தைகள். பிரதான மனைவியான தில்ரஸ் பானு பேகம் மூலம் இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

1. ஸெப்-உந்-நிசா – தெளலதாபத்தில் பிப்ரவரி 15, 1638இல் பிறந்த மகள். மே 22, 1702இல் இறந்த இவரைக் காபூல் கேட்டுக்கு வெளியில் இருக்கும்  ‘முப்பதாயிரம் மரங்கள்’ என்ற தோட்டத்தில் புதைத்தனர். பிரிட்டிஷ் இந்திய ரயில்வே வழித்தடத்துக்காக இவருடைய கல்லறை இடிக்கப்பட்டது. தந்தையைப் போலவே அறிவுக்கூர்மையும் இலக்கிய ஆர்வமும் கொண்டவர். அந்நாளில் இருந்ததிலேயே மிக அதிக நூல்கள் கொண்ட நூலகம் இவரிடம் இருந்தது. தனக்கு விருப்பமான விஷயங்கள் சார்ந்து படைப்புகள் எழுதித் தரவும், இலக்கியப் பிரதிகளை நகலெடுத்துக் கொடுக்கவும் தாராளச் சம்பளம் கொடுத்துப் பல அறிஞர்களைப் பணிக்கு வைத்திருந்தார். ஒளரங்கசீப் கவிதைகளை விரும்பாததனால் அவற்றுக்கு அரச ஆதரவு இல்லாத குறையை இவருடைய தாராளச் சிந்தனை ஈடுகட்டியது. அந்நாளைய கவிஞர்கள் பலரும் இவரிடம் அடைக்கலம் தேடினர். மக்ஃபி அதாவது மறைக்கப்பட்ட ஒன்று என்ற புனைபெயரில் பாரசீக மொழியில் இவர் பாடல்கள் எழுதினார். ஆனால் நமக்குக் கிடைத்திருக்கும் திவான்-இ-மக்ஃபி நிச்சயம் இவருடைய படைப்பு அல்ல.

2. ஸீனத்-உந்-நிசா. பின்னாளில் பதிஷா பேகம்  – அநேகமாக அக்டோபர் 5, 1643இல் ஒளரங்காபாதில் பிறந்திருக்கக்கூடும். முதுமையில் ஒளரங்கசீப் தக்காணத்தில் இருந்தபோது, அவர் இறப்பது வரையிலும் அதாவது சுமார் 25 ஆண்டுகள், குடும்ப நிர்வாகத்தை இவரே கவனித்துக் கொண்டார். அதன் பின்னரும் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். ஒளரங்கசீபின் காலத்துக்குப் பின்வந்தவர்கள், மாபெரும் சகாப்தத்தின் நடமாடும் சாட்சியாக இவரை மதித்து மரியாதை செலுத்தினர். இவருடைய கருணையையும், தாராளக் கொடை குணத்தையும் வரலாற்றாசிரியர்கள் விரிவாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். மே 7, 1721இல் இவர் இறந்தார். ஸீனத்-அல்-மஸ்ஜித் என்ற பெயரில், இவரது செலவில் டெல்லியில் 1700 வாக்கில் கட்டப்பட்ட அற்புதமான மசூதியில் இவருடைய கபர்ஸ்தான் உள்ளது.

3. ஸுபத்-உந்-நிசா – முல்தானில் செப்டம்பர் 2, 1651இல் பிறந்தார். பெரியப்பாவின் மகன் ஸிஃபிர் ஷுகோவை (துரதிஷ்டசாலியான தாரா ஷுகோவின் இரண்டாம் மகன்) ஜனவரு 30, 1673இல் திருமணம் செய்துகொண்டார். பிப்ரவரி 1707இல் இறந்தார்.

4. முஹம்மது ஆஸம் – ஜூன் 28, 1653இல் பர்ஹான்பூரில் பிறந்தார். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த அரியணை உரிமைப் போரில் ஜூன் 8, 1707இல் ஜஜாவில் கொல்லப்பட்டார்.

5. முஹம்மது அக்பர் – ஒளரங்காபாதில் செப்டம்பர் 11, 1657இல் பிறந்தார். பாரசீகத்துக்கு நாடு கடத்தப்பட்டவர் நவம்பர் 1704இல் இறந்தார். மாஷாத்தில் புதைக்கப்பட்டார்.

நவாப் பாய் மூலம் பேரரசருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

6. முஹம்மது சுல்தான் – மதுராவுக்கு அருகில் டிசம்பர் 19, 1639இல் பிறந்தார். சிறையில் அடைக்கப்பட்டவர் டிசம்பர் 3, 1676இல் இறந்தார். க்வாஜா குத்-உத்-தீனின் கல்லறை வளாகத்தில் புதைக்கப்பட்டார்.

7. முஹம்மது மெளசம் அல்லது ஷா ஆலம் – முதலாம் பஹதுர் ஷா என்ற பெயருடன் தந்தைக்கு அடுத்ததாக அரியணை ஏறினார். பர்ஹான்பூரில் அக்டோபர் 4, 1643இல் பிறந்தவர், லாஹூரில் பிப்ரவரி 18, 1712இல் இறந்தார்.

8. பத்ர்-உந்-நிசா – நவம்பர் 17, 1647இல் பிறந்தார். ஏப்ரல் 9, 1670இல் இறந்தார்.

ஒளரங்காபாதி மஹல் மூலம் ஒளரங்கசீபுக்கு ஒரே ஒரு குழந்தைதான் பிறந்தது.

9. முய்ர்-உந்-நிசா – செப்டம்பர் 18, 1661இல் பிறந்தார். உறவினர் மகன் இஸித் பக்ஸை (கொல்லப்பட்ட முரத் பக்ஸ்) நவம்பர் 27, 1672இல் திருமணம் செய்துகொண்டார். ஜூன், 1706இல் உயிர் துறந்தார்.

உதய்புரி மஹல் மூலம் ஒளரங்கசீபுக்கு ஒரு குழந்தை.

10. முஹம்மது கம் பக்ஸ் – டெல்லியில் பிப்ரவரி 24, 1667இல் பிறந்தவர். அரியணை உரிமைப் போரில் ஹைதராபாத்துக்கு அருகில் ஜனவரி 3, 1709இல் கொல்லப்பட்டார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *