Skip to content
Home » ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

ஔரங்கசீப்

9. ஒளரங்கசீபின் அவமானம்

1694இல் தக்காணத்தில் ஒளரங்கசீப் ஏற்றிருந்த முதல் நிர்வாகப் பொறுப்பு, விசித்திரமான முறையில் அவமானத்திலும் பதவிப் பறிப்பிலும் முடிந்தது.

மார்ச் 26, 1644இல் இளவரசி ஜஹானாரா தன் தந்தையின் அரண்மனையிலிருந்து கிளம்பி ஆக்ரா கோட்டையில் இருந்த தன் இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய உடை, தாழ்வாரத்தில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் மீது பட்டு எரிந்து கடும் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. நான்கு மாதங்கள் போராடித்தான் உயிர் பிழைத்தார்.

டெல்லி ராஜ வைத்தியர் காயங்களைக் குணப்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லை. ஆனால், ஆரிஃப் என்ற ஓர் அடிமை கொடுத்த களிம்பு, காயங்களை உடனே ஆற்றிவிட்டது. நவம்பர் 25, அவர் உடல் நலம் குணமடைந்ததைப் பெரும் உற்சாகத்துடன் அரண்மனையில் கொண்டாடினர். இந்தக் காலகட்டத்தில் பறிக்கப்பட்டிருந்த ஒளரங்கசீபின் பதவியையும் அதிகாரத்தையும் திரும்பக் கொடுக்கும்படி ஜஹானாரா கேட்டுக்கொண்டதன் பேரில், அவர் தந்தையின் அன்புக்கு மீண்டும் பாத்திரமானார்.

மே 2, ஒளரங்கசீப் ஆக்ரா கோட்டைக்குத் தன் சகோதரியைக் காண வந்திருந்தார். மூன்று வாரங்கள் கழித்து அவர் திடீரென்று பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருடைய மதிப்பு, மரியாதை, சம்பளம் எல்லாம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து ஒளரங்கசீப் எழுதிய ஒரு கடிதத்திலிருந்து என்ன தெரிய வருகிறதென்றால், அண்ணன் தாரா ஷுகோவுடனான பகைமை, ஷாஜஹான் மூத்த மகன் மீது காட்டிய பாரபட்சம் ஆகியவற்றின் காரணமாக அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனால் பேரரசருடைய நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்திருக்கிறார். பொது மக்கள் முன்னிலையில் தனக்கு அவமானம் நிகழ்த்தப்பட்டுவிட்டதாகவும் தக்காணப் பகுதியைச் சுய கெளரவத்துடனோ திறமையுடனோ தன்னால் நிர்வகிக்க முடியாது என்றும் அவர் நினைத்திருக்கிறார்.

(‘மனஸாவி’ என்று ஒளரங்கசீபைப் பற்றி பாரசீகப் படைப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு, அவர் இந்தக் காலகட்டத்தில் சூஃபி துறவியாக ஆகியிருந்தார் என்று ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில், பணியில் இருந்து விலகிய இந்தக் காலகட்டத்தில் அவருக்கு மதச் சிந்தனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை. அவருடைய நோக்கம் அரசியல் செல்வாக்கு சார்ந்ததுதான். ஆன்மிகம் சார்ந்தது அல்ல. அவர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். ஆனால் சூஃபி துறவியாகிவிடவில்லை. ‘அனெக்டோட்ஸ் ஆஃப் ஒளரங்கசீப்’, எண் 2இல், தன் மூத்த சகோதரர் தாரா ஷுகோ மீது ஒளரங்கசீப் எப்படியான வெறுப்பை வெளிப்படுத்தினார், அதற்கு ஷாஜஹான் கொடுத்த தண்டனைகள் என்னென்ன என்பதெல்லாம் விரிவாக இடம்பெற்றுள்ளன.)

ஜஹன்னராவின் வேண்டுகோளின் பேரில் ஷாஜஹான், பிப்ரவரி 16, 1645இல் ஒளரங்கசீபிடம் கருணை காட்டி, குஜராத்தின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். ஜனவரி 1647 வரை அங்கு நிர்வாகம் செய்தவர், பல்க் பகுதிக்கு அதன் பின் அனுப்பப்பட்டார். குஜராத்தில் இருந்த இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலகட்டத்தில், அபாரமான நிர்வாகத் திறமையையும், உறுதியான அணுகுமுறையையும் அவர் வெளிப்படுத்தினார்.

குஜராத்தில் இருந்த கொள்ளையர்களையும் கலகக்காரர்களையும் ஒளரங்கசீப் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். மன்சப்தாராக (தளபதியாக) இருந்த அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த படைவீரர்களுக்கும் அதிகமான ஆட்களைப் படையில் சேர்த்துக்கொண்டு அவர்களை ஒடுக்கினார். அப்படியாகத் தந்தையின் பார்வையில் தன் திறமையையும் வீரத்தையும் நிரூபித்தார். இதைத் தொடர்ந்து இந்தக் குணங்களுக்கு மிகவும் அவசியம் இருந்த பல்க் மற்றும் பதக்ஸான் பகுதிகளுக்குத் தளபதியாகவும் ஆட்சிப் பொறுப்பாளராகவும் விரைவிலேயே நியமிக்கப்பட்டார் (ஜனவரி 21, 1647).

10. ஒளரங்கசீபின் பல்க் படையெடுப்பு – 1647

பல்க் மற்றும் பதக்ஸான் பிராந்தியமானது காபூலுக்கு வடக்கே ஹிந்து குஷ் மலைத் தொடர்களுக்கு அப்பால், புக்காரா ராஜ்ஜியத்தின் பகுதிகளாக இருந்தன. அதன் அரசர் நாஸர் முஹம்மது கான் பலவீனமான, திறமையற்ற அரசராக இருந்தார். அனைவருடைய அதிருப்தியையும் பெற்றிருந்தார். பதவிக்கு வந்த மூன்று வருடங்களில், மிகப் பெரிய அவருடைய சாம்ராஜ்ஜியத்தில் பல இடங்களில் கலகங்கள் வெடித்தன (1645). இதையடுத்து பல்க் மற்றும் பதக்ஸான் பகுதிகளைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என்பதைத் தெரிந்துகொண்ட ஷாஜஹான், தன் படையை அனுப்பத் தீர்மானித்தார். ஏனென்றால் அந்த இரண்டு பகுதிகளும் மொகலாய வம்சத்தை நிறுவிய பாபரின் பாரம்பரிய உரிமைப் பகுதிகளாக இருந்தவை. தைமூரின் தலைநகரான சமர்கண்ட்டில் அவை அமைந்திருந்தன.

1646இல் இளவரசர் முராத் பக்ஸ் ஒரு பெரும்படையுடன் வந்து பதக்ஸான் மற்றும் பல்க் பகுதிகளை ஜூன் மாதத்தில் கைப்பற்றினார். மத்திய ஆசியாவின் வறண்ட, வாழத் தகுதியற்ற நிலப்பரப்பாக அறியப்பட்ட பகுதியைக் கைப்பற்றிய இளவரசரும், அரசு அதிகாரிகளும் அங்கிருந்த ஏழைகளின் நலனில் அக்கறை காட்டவே இல்லை. அதுமட்டுமில்லாமல் அந்தப் பகுதி மீது ஆக்ச்ஸ் (ஆமு தாரியா) நதிக்கு அப்பால் இருந்த உஸ்பெக்குகளிடமிருந்து மூர்க்கத்தனமான தாக்குதல் வரும் என்ற அச்சத்திலும் இருந்தனர்.

இதனால் இளவரசர் முராத், ஆகஸ்ட் மாதத்தில் மன்னரின் எதிர்ப்பையும் மீறி பல்க் பகுதியில் இருந்து திரும்பிச் சென்றுவிட்டார். அங்கிருந்த படை, தலைவர் இல்லாமல் தவித்தது. இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒளரங்கசீப் அனுப்பி வைக்கப்பட்டார். தன் உற்ற துணையாக இருந்த அலி மர்தன் கானுடன் காபூலில் இருந்து கிளம்பிய அவர், வழியில் குறுக்கிட்ட உஸ்பெக் படைகளைப் படிப்படியாக வென்று மே 25 அன்று பல்க் நகரைச் சென்றடைந்தார்.

நாஸர் முஹம்மதுவின் மூத்த மகனான அப்துல் அஜீஸ் கான்தான் அப்போது புக்காரா ராஜ்ஜியத்தின் பாதுகாப்புப் பணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருடைய உத்தரவுகளின் பேரில் உஸ்பெக் வீரர்கள் மொகலாயப் படைகளைத் தனித்துப் பிரியவைக்கவும், சுற்றி வளைத்துத் தாக்கவும் பல்க் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒன்று திரண்டனர்.

ஆக்சஸ் பகுதியில் (வட மேற்குக்கு 40 மைல் தொலைவில்) எதிரிப் படைகள் ஒன்று திரளுவதை அறிந்த ஒளரங்கசீப், அவர்களின் திட்டத்தை முறியடிக்க தன் படையைப் பல்க் நகரில் இருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றார். அப்போது தினமும் உஸ்பெக்குகள் அவரை எதிர்த்துப் போரிட்டனர். அதேநேரம் புக்காராவில் இருந்து வந்த இன்னொரு படையினர் பல்க் பகுதியைத் தாக்கினர்.

இந்தச் செய்தி கிடைத்ததும் ஒளரங்கசீப், பல்க் தலைநகரைக் கைப்பற்றுவதற்காகத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார். வழியெங்கும் கடும் எதிர்ப்பை அவர் சந்திக்க நேர்ந்தது. பத்து நாட்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பின்வாங்கலில் மொகலாயப் படைக்குச் சிறிது நேரம் கூட ஓய்வு கிட்டவில்லை. சோர்வே அடையாத, ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து கொண்டே இருந்த எதிரிப்படையை எதிர்த்து அவர்கள் தினமும் தீவிரமாகப் போரிட வேண்டியிருந்தது.

படையின் உயர் மட்டத்தினரைப் பசியும் பட்டினியும் வாட்டின. வீரர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. விரைந்து நடந்து சென்ற யானைகளின் முதுகின்மேல் அமர்ந்தபடிதான் சமைக்கவே முடிந்தது. ரொட்டிகள் ஒன்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கொள்ளை விலையில் விற்கப்பட்டன. குடிநீருக்கும் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதுவும் எல்லாருக்கும் கிடைக்கவும் இல்லை.

இந்த நெருக்கடிகள், அபாயங்களுக்கு மத்தியிலும் ஒளரங்கசீபின் கறாரான தன்மையும் கட்டுப்பாடும் படை வீரர்களிடையே அலட்சியமும் ஒழுங்கீனமும் வராமல் பார்த்துக் கொண்டன. அவருடைய விழிப்பான கண்காணிப்பும், துடிப்பான செயல்பாடுகளும் பலவீனமடையும் படைப் பிரிவுகளுக்கு விரைந்து உதவிகள் கிடைக்க வைத்தன. அவருடைய ராணுவ அறிவும் துணிச்சலும் படையை மீண்டும் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வந்தன.

ஒளரங்கசீபின் தீவிர உறுதி எதிர்பார்த்த விளைவைக் கொடுத்தது. ஒளரங்கசீபைத் தோற்கடிக்கும் அப்துல் அஜீஸின் முயற்சி தோற்றுப்போனது. இதைத் தொடர்ந்து, அவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். துளியும் பயமற்ற இளவரசரின் துணிச்சலை அவர் நேரில் பார்த்துவிட்டிருந்தார். ஒரு நாள் மாலை, போர் உச்சத்தில் இருந்தபோது தொழுகைக்கான நேரம் வந்தது. ஒளரங்கசீப் போர்க்களத்தின் நடுவில் பாயை விரித்து மண்டியிட்டு நிதானமாகத் தன் தொழுகையில் ஈடுபட ஆரம்பித்தார். எதிரிகள் சூழ்ந்திருந்தபோதிலும் அவர் துளியும் பயப்படவில்லை. தொழுகையின்போது மட்டுமல்ல, படையெடுப்பு முழுவதுமே அவர் பாதுகாப்புக் கவசமும் கேடயமும் இல்லாமலேதான் இருந்தார்.

புக்காரா படையினர் இந்தக் காட்சியை வியந்து பார்த்தனர். அப்துல் அஜீஸ் போரை நிறுத்திவிட்டு, ‘இப்படியான ஒருவரைத் தாக்குவது அழிவையே கொண்டுவரும்’ என்று பாராட்டும் தொனியில் உரத்த குரலில் நா தழுக்கச் சொன்னார்.

ஷாஜஹான், தான் வென்ற பகுதியை அப்துல் அஜீஸின் தந்தையின் வசம் ஒப்படைக்க முன் வந்திருந்தார். எனவே, அப்துல் அஜீஸ் அந்தப் பகுதியைத் தன் இளைய சகோதரன் சுபன் க்யுலியிடம் ஒப்படைக்கும்படிக் கேட்டுக்கொண்டார். ஏற்கெனவே, ஒளரங்கசீப் இது தொடர்பாக ஷாஜஹானிடம் ஆலோசனை கேட்டிருந்தார். பேரரசரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு மன்னிக்கும்படிக் கெஞ்சினால் நாஸர் முஹம்மதுவுக்கு ராஜ்ஜியத்தைத் திருப்பித் தர சம்மதம் என்று அவர் சொல்லியிருந்தார்.

அப்படியே நடந்தது. அக்டோபர் 1இல் பல்க் கோட்டையானது நாஸர் முஹம்மதுவின் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மொகலாயப் படை காபூலுக்குத் திரும்பியது. அந்தப் படை ஹிந்து குஷ் பகுதியைக் கடக்கும்போது உஸ்பெக்குகள் மற்றும் ஹஸாராக்களின் முன்னும் பின்னுமான தாக்குதல்களினால் உயிரிழப்பு, பட்டினி, சொத்து இழப்பு எனப் பல கஷ்டங்களை அனுபவித்தபின்தான் டெல்லிக்குத் திரும்பியது. மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தினர் இந்தப் பகுதியில் சுமார் 5000 பேரை இழக்க நேர்ந்தது. அதோடு இதே அளவுக்கு, போக்குவரத்துக்குக் கொண்டு சென்ற விலங்குகளையும் இழக்க வேண்டியிருந்தது.

மொகலாயப் படைகள் விட்டுச் செல்ல வேண்டியிருந்த உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பிற ராணுவப் பொருட்கள் எல்லாம் சில லட்சம் ரூபாய்களுக்கு மேல் இருக்கும். மொகலாய இந்திய கஜானாவில் இருந்து சுமார் நான்கு கோடி ரூபாய் செலவானது. இந்தப் படையெடுப்பினால் ஒற்றை அங்குல நிலம் கூட கிடைத்திருக்கவில்லை.

பல்க் படையெடுப்புக்குப் பின்னர், ஒளரங்கசீப் முல்தான் மற்றும் சிந்து பகுதிகளின் ஆட்சியாளராக மார்ச் 1648 தொடங்கி ஜூலை 1652 வரை இருந்தார். காந்தஹார் முற்றுகைக்கும் (1649 ஜனவரி முதல் டிசம்பர்), பாரசீகர்களிடமிருந்து அந்தக் கோட்டையைக் கைப்பற்றவும் (1652 ஜூலை மார்ச் முதல் ஜூலை வரை) என இரண்டு முறை அவருடைய பிராந்தியத்தில் இருந்து வெளியே வரச் சொல்லி அழைக்கப்பட்டிருந்தார்.

ஒளரங்கசீபின் புதிய ஆட்சிப் பகுதியானது முரட்டுத்தனமும், எளிதில் சமாளிக்க முடியாதவர்களுமான ஆஃப்கனிய, பலூச் குலங்களைக் கொண்டதாக இருந்தது. தனக்குக் கிடைத்த குறுகிய காலகட்டத்தில் ஒளரங்கசீப், கெடு புகழ் கொண்ட கொள்ளைக் கூட்டத்தலைவர்களை வீழ்த்தினார். எல்லையோரத்தில் வசித்து வந்த குலத்தினரைப் பேரரசருடனான, பெயரளவிலான கூட்டுறவுக்கும் சம்மதிக்க வைத்தார்.

கடல் வழிப் பயணங்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து அந்தப் பிராந்தியத்தின் வர்த்தகத்தை மறுமலர்ச்சியடையச் செய்தார். துறைமுகமாக முன்பு இருந்த டட்டா பகுதி, கழிமுகத் துவாரத்தில் மண் மூடியதால் செயல் இழந்து கிடந்தது. சிந்து நதியின் கீழ்ப்பகுதியில் புதிய துறைமுகத்தை உருவாக்கி, அங்கு ஒரு கோட்டையையும் பொருட்களை ஏற்றி இறக்கும் துறைமுகத் தளத்தையும் கட்டினார்.

11. ஒளரங்கசீபின் காந்தஹார் முற்றுகை 1649-52

இந்தியாவுக்கு மேற்குப் பக்கத்து வழியையும், காபூலுக்குத் தெற்குப் பக்கத்து வழியையும் காந்தஹார் கோட்டை பாதுகாக்கிறது. இந்த இடத்தின் ராணுவ முக்கியத்துவம் என்னவென்றால், ஹேராத்தில் இருந்து 360 மைல் சம தள நிலப்பரப்பு மட்டுமே இதைப் பிரிக்கிறது. அதற்கு அருகில் இருக்கும் ஹிந்து குஷ் மலைத் தொடர் அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தாக்காக அமைந்திருக்கிறது. மத்திய ஆசியாவில் இருந்தும், பாரசீகத்திலிருந்தும் ஆக்கிரமிக்க வரும் படைகள் இதன் வழியாக எளிதில் நுழைந்துவிட முடியும். இப்படியான படை காந்தஹார் வழியாகச் சென்றாக வேண்டியிருக்கும். அத்தகைய படைகளை இந்தியா பக்கம் வரவிடாமல் தடுக்க, அங்கேயே வைத்துத் திருப்பி அனுப்பவும் வேண்டியிருக்கும். காபூலும் டெல்லியும் மொகலாயப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்த அன்றைய காலத்தில், காந்தஹார் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத முன்னணிப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.

17ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்களின் கடற்படை ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவில் இருந்து பாரசீகத்துக்குச் செல்லும் பாரசீக வளைகுடா வழியிலான கடல் பாதை கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில், காந்தஹார் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இருந்தது. இந்தியாவின் மேற்குலகத்துடனான வணிகம் அனைத்தும், ஸ்பைஸ் ஐலண்ட் (மொலுக்கஸ் தீவுகள்) வணிகம் உட்பட முல்தான், பிஷின், காந்தஹார் வழியாகத்தான் பாரசீகம் சென்று அங்கிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றாகவேண்டும். 1615 வாக்கில் இந்த வழித்தடம் மூலமாக மட்டும் சுமார் 14 ஆயிரம் ஒட்டகங்கள் பாரசீகத்துக்குச் சுமை ஏற்றிச் சென்றன. வர்த்தகப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் சந்தையாக காந்தஹார் செல்வ வளத்தில் செழிக்க ஆரம்பித்தது.

இந்திய அரசர்களும் பாரசீக அரசர்களும் காந்தஹார் மீதான ஆதிக்கத்துக்காகத் தொடர்ந்து மோதிவந்தனர். 1522இல் ஆர்கன் ஆட்சியாளரிடமிருந்து பாபர் இதைக் கைப்பற்றினார். ஆனால் 1558இல் பாரசீக அரசர் மொகலாய அரசிடமிருந்து அதனைக் கைப்பற்றிவிட்டார். 1594இல் பாரசீக இளவரசர்-ஆட்சியாளரிடமிருந்து அக்பர் மீட்டார். ஜஹாங்கீரின் முதுமைக் காலத்தில் மாவீரர் ஷா அப்பாஸ், 45 நாட்கள் முற்றுகையிட்டு இதைக் கைப்பற்றினார் (1623).

ஷாஜஹான் மீதான அச்சத்தின் காரணமாக 1638இல் பாரசீக ஆட்சியாளர் அலி மர்தன் கான், காந்தஹார் கோட்டையைப் பேரரசரிடம் ஒப்படைத்துவிட்டார். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகப் பாரசீகர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 1649இல் அந்தக் கோட்டையை மொகலாயர்களிடமிருந்து பாரசீகர்கள் மீண்டும் கைப்பற்றினர். ஷாஜகான் போதிய மாற்றுப் படைகளை அனுப்பத் தாமதம் செய்ததால் 57 நாட்கள் முற்றுகைக்குப் பின்னர் கோட்டை அவர்கள் வசம் சென்றது.

பாரசீகர்களிடமிருந்து காந்தஹாரை மீண்டும் வென்றாக வேண்டும் என்பது மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தின் கெளரவப் பிரச்னையாக ஆகியிருந்தது. ஷாஜஹானின் மகன்களின் மூலம் மூன்று முறை முற்றுகையிட்டபோதும், அதிகம் செலவானதே தவிர எந்தப் பலனும் கிடைக்கவில்லை. முதல் படையெடுப்பு ஒளரங்கசீப், சதுல்லா கான் ஆகியோரின் தலைமையில் நடந்தது. 50,000 வலிமையான வீரர்கள் மே 14, 1649இல் காந்தஹார் கோட்டையை முழுமையாகச் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர்களால் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. இதற்குக் காரணம், மொகலாயர்களிடம் பெரிய பீரங்கிகள் இருக்கவில்லை. அதோடு மட்டுமில்லாமல் அந்தக் கோட்டையின் பாதுகாப்புப் படையினரின் திறமையும், எறிகணை வீச்செல்லையும் மொகலாயப் படையினரிடம் இருந்ததை மிக அதிகமாக இருந்த்து.

டெல்லி அரசவை வரலாற்று ஆசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதுபோல், ‘துருக்கியர்களுடனான மிக நீண்ட போர்களின் மூலம் கோட்டைகளைக் கைப்பற்றுவதிலும் பாதுகாப்பதிலும் பாரசீகர்கள் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுவிட்டிருக்கிறார்கள். துப்பாக்கிகள், பீரங்கிகள் ஆகியவற்றைக் கையாள்வதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். காந்தஹார் கோட்டை மிகவும் வலிமையானது. அனைத்துத் தேவைகளையும் தன்னுள்ளே கொண்டிருந்தது. அவர்களிடம் மிகப் பெரிய துப்பாக்கிகள், திறமையான துப்பாக்கி வீரர்கள் இருந்தார்கள். எனவே மொகலாயப் பேரரசினர் எவ்வளவு முயன்றும் வெற்றி கிடைக்கவில்லை’.

அந்தக் கோட்டையை மூன்று மாதங்கள், 20 நாட்கள் வீணாக முற்றுகையிட்டிருந்த ஒளரங்கசீப், வேறு வழியின்றி செப்டம்பர் 5 வாக்கில் காந்தஹாரில் இருந்து திரும்ப ஆரம்பித்தார். எனினும் காந்தஹாரின் 24 மைல் தென் மேற்கில், அர்காண்டாப் கரையோரம் நடைபெற்ற தீவிரமான போரில், க்வாலிச் கானும், நுஸ்தம் கான் தெக்கானியும் மிகப் பெரிய பாரசீகப் படையை முழுவதுமாகத் தோற்கடித்து, அவர்களை குஷ்க்-இ-நக்கத் பகுதி வரை விரட்டியடித்திருந்தனர்.

காந்தஹாரைக் கைப்பற்றும் இரண்டாவது படையெடுப்பில் மிகப் பெரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் ஒளரங்கசீபும் சதுல்லா கானும் மே 2, 1652இல் காந்தஹார் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டைச் சுவர்களை உடைக்க ஆயுதங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. அகழியின் நீர் முழுவதையும் வற்றவைக்க கோட்டையை நோக்கிக் கால்வாய்கள் வெட்டத் தொடங்கினர். இரவு நேரத்தில், கோட்டையின் உச்சிப் பகுதி மீது நாற்பது படி கோபுரத்தின் (சிஹில் ஸினாவின்) பின்னால் இருந்து தாக்குதல் நடத்தினர். ஆனாலும் மொகலாயர்களின் இந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின.

அவர்களால் கோட்டைச் சுவர்களில் இருந்து பொழியும் துப்பாக்கிக் குண்டு மழையை மீறி அகழிவரை கால்வாய் தோண்ட முடிந்திருக்கவில்லை. மூன்று பக்கமாகப் பிரிந்த எதிரிப் படையினர், மாலை முதல் அதிகாலை வரை, கோட்டைச் சுவர்களில் இருந்த துவாரங்களில் துப்பாக்கிகளைப் பொருத்திக்கொண்டு இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தனர். எனவே ஒளரங்கசீபின் படையினரால் முன்னேறிச் செல்லவே முடியவில்லை. பாரசீகப் படையின் பீரங்கிகள் எந்த அளவுக்கு நேர்த்தியானவையோ அந்த அளவுக்கு மொகலாயர்களின் பீரங்கிகள் பலவீனமானவை. இந்தியத் துப்பாக்கி வீரர்கள் பொதுவாகவே, குறிபார்த்துச் சுடும் திறமை குறைந்தவர்கள். அவர்களுடைய குண்டுகள் கோட்டைச் சுவரை ஒன்றுமே செய்யவில்லை.

முற்றுகை ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே கால்வாய் தோண்டும் வேலையும், சுரங்கம் தோண்டும் பணியும் போதிய உபகரணங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டன. பாரசீகப் படையினர் கோட்டைக்குள் இருந்து அவ்வப்போது வெளியே வந்து கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த மொகலாயப் படையினரைக் கொன்றும் காயப்படுத்தியும் திரும்பிச் சென்றனர். அவர்களுடைய பீரங்கி, துப்பாக்கிகளை உடைக்கவும் செய்தனர். இரண்டு மாதங்கள் தொடர்ந்து குண்டுகளால் வெடித்தும் கோட்டைச் சுவர்கள் துளியும் உடைபடாமல் நின்றன. இப்படியான கோட்டையை மேலும் முற்றுகையிடுவதென்பது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும். இறுதியாக ஷாஜஹானின் உத்தரவின் பேரில் மொகலாயப்படைகள் முற்றுகையை விலக்கிக் கொண்டு, காந்தஹாரில் இருந்து ஜூலை 9இல் திரும்பினர்.

ஒளரங்கசீபின் இந்த மோசமான தோல்வியைக் கண்டு ஷாஜஹான் மிகவும் கோபத்தில் இருந்தார். எனவே இளவரசருக்குத் திறமை இல்லை என்று அதைத் தவறாகக் கருதிவிட்டார். ஆனால், காந்தஹார் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் போனதற்கு ஒளரங்கசீபைக் குறைசொன்னதுதான் உண்மையில் தவறு. முற்றுகைக் காலம் முழுவதும் ஒளரங்கசீப் படையின் இரண்டாம் தளபதியாகத்தான் இருந்தார். பேரரசர் காபூலில் இருந்து கொண்டு சதுல்லா கான் மூலம்தான் அனைத்தையும் முன்னெடுத்தார். அவர் சொன்னதைத்தான் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் செய்ய வேண்டியதாக இருந்தது.

ஒளரங்கசீபின் திறமையை நன்கு புரிந்துகொள்ளும் மறைமுக வாய்ப்பு அடுத்த வருடம் கிடைத்தது. இரண்டாம் படையெடுப்பைவிட மிகப் பெரியதும், அதிக செலவு கோரியதுமான மூன்றாம் படையெடுப்பு தாரா ஷுகோவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அது இரண்டாவதைவிட படு தோல்வியில் முடிந்தது. இந்த மூன்று படையெடுப்புகளும் மொகலாய இந்தியக் கஜானாவின் பத்துக் கோடி ரூபாய்களை வீணடிக்கவைத்ததோடு, ஆசியா முழுவதிலும் மொகலாயப் பேரரசின் கெளரவத்தையும் பாழ்படுத்தியது.

டெல்லி மொகலாய ஆட்சியாளர்களுக்கு தங்கத்தைக் காட்டி ஒரு கோட்டையைத் திருட்டுத்தனமாகத்தான் கைப்பற்றத் தெரியும், ஆயுதங்கள் கொண்டு போரிட்டு வெற்றிபெறத் தெரியாது என்று பாரசீக மன்னர் பெருமையடித்துக் கொண்டனர். இதனால் பாரசீகர்களின் ராணுவ வலிமையின் புகழ் உச்சத்தை எட்டியது. அந்த நூற்றாண்டு முழுவதிலும் பாரசீகர் படையெடுத்துவரப் போகிறார்கள் என்ற வதந்தியானது டெல்லி அரசுச் சபையைப் பெரும் அச்சத்திலேயே உறைய வைத்திருந்தது. இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் பாரசீக அச்சுறுத்தலானது கருமேகமாக மிதந்துகொண்டே இருந்தது. பேரரசர் ஒளரங்கசீபும் அவருடைய அமைச்சரும் எப்போதாவது பாரசீகத்தின் வீரம் நிறைந்த ஷா யாராது இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டால் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடவே செய்தனர்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *