அத்தியாயம் 2
தக்காணத்தில் ஒளரங்கசீபின் இரண்டாம் ஆட்சிப் பொறுப்பு – 1652-1658
1. மொகலாயத் தக்காணப் பகுதியின் வீழ்ச்சியும் துயரங்களும்: பொருளாதார நெருக்கடிகள்
ஒளரங்கசீப் காந்தஹாரில் இருந்து காபூலுக்குத் திரும்பியதும் தக்காணத்தின் சுபேதாராக இரண்டாம் முறை நியமிக்கப்பட்டார் (1652). இதைத் தொடர்ந்து தக்காணத்தின் தலைநகரான ஒளரங்காபாத் நோக்கிப் புறப்பட்டவர், 9 மாதங்கள் பர்ஹான்பூரில் தங்கி இருந்து, நவம்பர் 1653இல் அங்குச் சென்று சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் அங்கே நிர்வாகம் செய்தவர், கோல்கொண்டா, பீஜாப்பூர் பகுதிகளை ஆக்கிரமிக்க மட்டுமே வெளியே வந்தார். பின் இறுதியாக அரியணைப் போட்டியில் பங்கேற்கப் பிப்ரவரி 5, 1658இல் டெல்லி நோக்கிப் புறப்பட்டார்.
மே, 1644இல் ஒளரங்காபாத்தின் நிர்வாகப் பொறுப்பை அவர் ராஜினாமா செய்ததில் இருந்து மொகலாய ஆட்சி அங்குச் செழிப்புற நடைபெறவில்லை. முன்பு எப்போதும் இருந்திராத வகையில் அந்தப் பகுதி ஒருவித உறக்க நிலைக்குச் சென்றிருந்தது. விவசாய நிலங்கள் பலவும் புதர் மண்டிக் காடாகியிருந்தன. விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது. உற்பத்தியும் குறைந்தது. இதனால் அரசின் வரி வருவாய் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது. ஆட்சிப் பொறுப்பு அடிக்கடி மாற்றப்பட்டதாலும், நிர்வாகத்தில் இருந்தவர்களுடைய திறமையின்மையினாலும் இப்படியான வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகி இருந்தது.
மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தின் கஜானாவைக் காலி செய்வதில் தக்காணம் பெரும் பங்காற்றியிருக்கிறது. இந்தப் பிராந்தியம் மிகவும் பெரியது. இடையிடையே நிறையக் காடுகள் இருந்தன. அங்கே முறையான குடியேற்றங்கள், விவசாயம் எதுவும் நடைபெறவில்லை. அதோடு இதன் எல்லைக்கு அப்பால் வலிமை மிகுந்த இரண்டு ராஜ்ஜியங்கள் இருந்தன. இதனால் மிகப் பெரிய படையை அங்கு நிறுத்தவேண்டிய கட்டாயம் இருந்தது. மண்ணில் போதிய வளம் இல்லாததால், விளைச்சலும் குறைவு. பஞ்சங்கள் அடிக்கடி ஏற்படும். முறையாக வரி வசூல் செய்ய முடியாத நிலை.
மொகலாயத் தக்காண ராஜ்ஜியத்தின் நான்கு பிராந்தியங்களில் இருந்தும் ஆண்டுக்கு மூன்று கோடியே 62 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால் 1652இல் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ஒரு கோடி மட்டுமே கிடைத்தது. தக்காணத்தில் இருந்து கிடைத்த வருவாய் அதன் செலவை ஈடுகட்டவில்லை. இதனால் தெற்கில் இருந்த இந்த ராஜ்ஜியங்களின் நிர்வாகத்துக்கு உதவுவதற்கு, பழைய, செல்வ வளம் மிகுந்த பிராந்தியங்களில் கிடைத்த வருமானத்தைப் பிரித்து அனுப்ப வேண்டியிருந்தது.
தக்காணத்துக்கு வந்ததுமே ஒளரங்கசீபுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவருடைய ஜாஹிர் பகுதியில் இருந்து கிடைத்த வருமானம் மிகவும் குறைவு. தக்காணத்தில் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். முந்தைய ஆட்சியாளர்களின் திறனின்மையினால் எங்குப் பார்த்தாலும் நிர்வாகச் சீர்கேடு மலிந்திருப்பதை ஒளரங்கசீபால் பார்க்க முடிந்தது. மொத்த மதிப்பீட்டில் பத்தில் ஒரு பங்கு வரிதான் சில நேரங்களில் கிடைத்தது.
புதிய நிர்வாகிக்கு நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. தக்காணத்தின் குடிமை மற்றும் ராணுவச் செலவுகள், அதிகாரிகளுக்கு அவர்களது ஜாஹிர் பகுதிகளில் இருந்து கிடைத்த சம்பளத்தைச் சேர்க்காமல், ஆண்டுக்கு ரூ.20,36,000 பற்றாக்குறையாக இருந்தது. தக்காணக் கஜானாவில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தொகையைக் கொண்டு இந்தச் செலவுகள் செய்யப்பட்டன.
ஒளரங்கசீப் தக்காணத்தில் இருந்த பிற ஜாஹிர்தார்களின் சிரமங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அப்போதுதான் அவருடைய படையை அவரால் தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பொருளாதார மோதல் நீண்ட காலத்துக்கு நீடித்தது. தக்காணத்துக்காகத் தொடர்ந்து பணத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதை ஷாஜஹான் நிறுத்த விரும்பினார். மாறாக ஒளரங்கசீபோ, தக்காணத்தின் நிர்வாகத்துக்காகப் பிற பிராந்தியங்களில் இருந்து நிதியைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் ஒளரங்கசீபை நியமித்தபோது விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும்படியும், விளை நிலங்களை அதிகரிக்கும்படியும் ஷாஜஹான் கேட்டுக்கொண்டார். ஒளரங்கசீபும் இந்த விஷயங்களில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார். ஆனால் போர்களினாலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்து ஆண்டுக்கால ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளினாலும் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்திருந்தது. சொத்துக்களும் சூறையாடப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் ஓரிரு வருடங்களில் சரி செய்ய முடியாத நிலை இருந்தது. இவற்றைச் சரி செய்வதற்காகத்தான் ஷாஜஹானிடம் ஆட்களையும் நிதியையும் ஒளரங்கசீப் கோரி வந்தார். மேலும் தனது ஆட்சிப் பொறுப்பைச் சீக்கிரமே பறித்துவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே நிலகுடியேற்ற விஷயங்களில் நினைத்துப் போற்றத்தகுந்த சாதனைகள் அவர் ஆட்சியில் நடந்தேறியது.
2. முர்ஷித் குலி கான்: அவருடைய பண்பும் வருவாய் அமைப்பும்
முர்ஷித் கான், குராசான் பகுதியில் பிறந்தவர். காந்தஹாரின் பாரசீக நிர்வாகியான அலி மர்தன் கானுடன் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர். அவரிடம் படைவீரரின் வீரமும், அரசுப் பணியாளரின் நிர்வாகத் திறமையும் இருந்தன. தக்காணத்தில் ஒளரங்கசீபின் திவானாக இருந்த முர்ஷித் கான், வருவாய் சீர்திருத்தங்களை அமல்படுத்தி வெற்றிகண்டார்.
அதுவரையிலும் தக்காணப் பகுதியில் வரி வருவாய் வசூல் அமைப்பு என்ற ஒன்று இருந்திருக்கவில்லை. நிலங்களை அடையாளப்படுத்துதல், அளவிடுதல், ஒரு பிகா நிலத்துக்கு எவ்வளவு விளைச்சல் என்று கணக்கிடுதல், விளைவிப்பவருக்கும் அரசுக்குமான பங்கீடு என்ன என்பதெல்லாம் கிடையாது. ஒரு விவசாயி கலப்பையையும், இரண்டு மாடுகளையும் வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த நிலம் முழுவதையும் உழுது பயிர் செய்வார். தனக்குப் பிடித்த பயிரை விளைவிப்பார். ஏருக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை அரசுக்குக் கொடுப்பார்.
இவ்வாறு பல்வேறு இடங்களில் பல்வேறுவிதமாக இருந்த வருவாயானது குத்துமதிப்பாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் எல்லோரும் வரி வசூல் அதிகாரிகளின் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகவேண்டியிருந்தது. நீண்ட காலம் நடந்த மொகலாயப் படையெடுப்புகள், மழை பொய்த்த வருடங்கள் எல்லாம் சேர்ந்து அழிவைத் துரிதப்படுத்தியிருந்தன.
ஒடுக்கப்பட்ட ரயத்கள் (விவசாயக் கூலிகள்) தமது வீடுகளை விட்டு, காட்டுக்குள் ஓடி மறைந்திருந்தனர். முன்பு செழிப்புடன் இருந்த கிராமங்கள் எல்லாம் கைவிடப்பட்டு ஆளரவமற்றுப் போயிருந்தன.
புதிய திவானின் சீர்திருத்தமானது தோடர் மாலின் வழிமுறையைத் தக்காணத்துக்கு அறிமுகப்படுத்தியது. முர்ஷித் கான், தன் முதல் வேலையாகச் சிதறி ஓடிய ரயத்களைத் திரும்ப வரவைத்து கிராமங்களில் இயல்பு வாழ்க்கைக்கு வழிவகுத்தார். பின்பு அங்குப் போதிய அதிகாரிகளை நியமித்த அவர், விஷயம் தெரிந்த அமின்கள், நேர்மையான நில அளவையாளர்களைக் கொண்டு யார் யாருக்கு எவ்வளவு நிலம் (ரக்பா) தரப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் ஆவணப்படுத்தினார். அப்பகுதியில் உள்ள வறண்ட பாறை நிலங்கள் எவை, பயிர் செய்ய ஏற்ற நிலங்கள் எவை என்பதைக் கணக்கெடுத்தார். நீரோட்டங்களை அலசி ஆராய்ந்தார்.
எந்தெந்தக் கிராமங்களுக்கு எல்லாம் தலைவர் (மக்காதம்) இல்லையோ அங்கே எல்லாம் விவசாயத்தைப் பெருக்கவும், விவசாயிகளை அக்கறையுடன் கவனிக்கவும் தயாராக இருக்கும் நபர்களைப் புதிய தலைவராக நியமித்தார். ஏழை ரயத்களுக்கு மாடு, விதை மற்றும் விவசாயத்துக்குத் தேவையான பிற பொருட்களுக்கான கடனுதவியை (தக்வாவி) அரசு சார்பில் வழங்கினார். இந்தக் கடனுக்கான மதிப்பு விளைச்சலில் இருந்து தவணை முறையில் வசூலிக்கப்பட்டது.
முர்ஷத் கானுக்கு ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வருவாய் அமைப்பை மாற்றி அமைக்கும் அறிவு இருந்தது. மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள விவசாயிகள், மக்கள் தொகை குறைவாக இருக்கும் இடங்கள், கடினமான மூலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமங்கள் ஆகியவற்றில் முன்பு இருந்ததுபோல் கலப்பைக்கு இவ்வளவு என நிச்சயிக்கப்பட்ட ஒரு தொகையே வசூலிக்கப்பட்டது. மற்ற சில இடங்களில் விளைப்பொருளில் இவ்வளவு பங்கு என்ற வழிமுறையைப் பின்பற்றினார்.
மூன்றாவதாக, அவர் முன்னெடுத்த வழிமுறை வட இந்தியாவில் நடைமுறையில் இருந்த வசூல் அமைப்பின் விரிவான வழிமுறை. இதன்படி, தானியம், கனி, பருப்பு என எதுவாக இருந்தாலும் விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு அரசுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு பிகா நிலத்துக்கு இத்தனை வரி என்று மதிப்பீடு செய்யப்பட்டு, விளைச்சல் அளவு, தரம், நாற்று நடும் காலத்தில் இருந்து அறுவடைக்கு ஆகும் காலம், சந்தை விலை, பயிரேற்றம் நடந்த பகுதியின் அளவு ஆகிய காரணிகளைக் கருத்தில் கொண்டு வரி வசூலிக்கப்பட்டது.
மொகலாயத் தக்காணப் பகுதியில் இந்த வழிமுறை நிரந்தரமாகியது. இது, பல நூற்றாண்டுகளாக ‘முர்ஷித் குலி கானின் வரி’ என்று அழைக்கப்பட்டது. இந்த வருவாய் திட்டம், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள், அவரே நேரில் மேற்பார்வையிடுதல் ஆகியவை பின்வந்த ஆண்டுகளில் விவசாய மேம்பாட்டுக்கும், வருவாய் பெருக்கத்துக்கும் வழிகோலியது.
3. தக்காணப் பகுதி நிர்வாகத்தில் ஒளரங்கசீப் முன்னெடுத்த முன்னேற்றங்கள்
இரண்டாம் முறையாகத் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட உடனேயே, அதனை மேம்படுத்துவதற்குத் தன்னால் முடிந்த அத்தனையையும் ஒளரங்கசீப் செய்தார். வயதான, திறமையற்ற நபர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் அல்லது சிறிய பதவிகளுக்கு அனுப்பப்பட்டனர். திறமையை நிரூபித்த அதிகாரிகளைத் தாமே நேரடியாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து உரிய முக்கியத்துவம் கொடுத்தார். ராணுவத்தின் திறமையை அதிகரிக்க விரும்பிய ஒளரங்கசீப், முதல் வேலையாகப் படை வீரர்களுக்குப் பொருளாதார உத்தரவாதங்கள் கொடுத்தார். அது இல்லாவிட்டால் எந்தவொரு படையையும் சிறப்பாகச் செயல்படவைக்க முடியாது என்பதை அவர் புரிந்திருந்தார்.
படைத் தளவாடங்கள் குறித்த நிர்வாகத்தில் துடிப்பான தளபதியாக அறியப்பட்ட ஒளரங்கசீப், தன் மீது சுமத்தப்பட்டிருந்த பழைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் துடைத்தெறிந்தார். சிறியதோ, பெரியதோ ஒவ்வொரு கோட்டைக்கும் நேரில் சென்று மேற்பார்வையிட்டார். அனைத்துக் கோட்டைகளுக்கும் போதுமான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் அத்தனையும் உடனே கிடைக்கச் செய்தார்.
படையில் இருந்த முதியவர்கள், திறமையற்றவர்கள் எல்லோரையும் புதிதாக ஒரு தேர்வுக்கு உட்படுத்தினார். குறிபார்த்துச் சுட முடியாதவர்களை எல்லாம், ஒருமுறை இலக்கு தவறினாலும்கூடப் பதவியில் இருந்து நீக்கினார். கடந்த காலச் சேவைகளைக் கருத்தில் கொண்டு, முதிய வீரர்களுக்கும், உடல் ஊனமுற்ற வீரர்களுக்கும் ஓய்வு ஊதியம் தர முன்வந்தார். இப்படியெல்லாம் செய்ததன் விளைவாக ஆண்டுக்கு ரூ 50,000 ரூபாய் சேமிக்கப்பட்டதோடு அவரது படையின் திறமையும் அதிகரித்தது.
4. பேரரசருடன் ஒளரங்கசீபுக்கு இருந்த இடைவெளிக்கான காரணங்கள்
ஒளரங்கசீபின் இரண்டாம் தக்காண ஆட்சியின்போது அவருடைய தந்தையுடன் பல மோதல்கள் ஏற்பட்டன. ஒன்று, ஒளரங்கசீபின் எதிரிகள் சொல்வதை மட்டுமே பேரரசர் கேட்கும் நிலையில் இருந்தார். அடுத்ததாக அவர் தென் பகுதியில் இளவசருக்கு இருந்த நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளத் தவறினார்.
இதனால் ஒளரங்கசீப் அவருடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சந்தேகத்துடன், நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டார். இவை எல்லாம் சேர்ந்து உருவாக்கிய கசப்பு உணர்வுகள்தான், துளியும் இரக்கமும், மனசாட்சியுமற்ற முறையில் வாரிசுரிமைப் போர் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்தன.
தக்காண ஆட்சிப் பொறுப்பு ஒளரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், அங்கிருக்கும் ஜாஹிர்களில் இருந்து 17 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். அது இப்போது, தான் இருக்கும் வளமான சிந்து பகுதியில் இருந்து கிடைக்கும் தொகையைவிட மிக மிகக் குறைவு என்று சுட்டிக்காட்டினார். தக்காணத்துக்குப் பதில் வேறு வளமான ஜாஹிர்களின் நிர்வாகப் பொறுப்பைத் தரும்படிக் கேட்டுக்கொண்டார். அதுவே பேரரசருடன் அவருடைய நீடித்த, கடுமையான உறவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சில நேரங்களில் ஒளரங்கசீப் யாரையேனும் பதவியில் நியமிக்கவோ, தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கவோ பரிந்துரை செய்தால் பேரரசர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனை, ஒருமுறை தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் 18 வயதில் இருந்து சுபேதாராக இருந்து வருகிறேன். நான் இதுவரை பரிந்துரை செய்தவர்களில் ஒருவர்கூடத் தகுதியற்றவராக இருந்ததில்லை’ என்று மனம் கசந்து குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தவிர பல அற்ப விஷயங்களில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டவண்ணம் இருந்தன.
பீஜாப்பூருக்கும் கோல்கொண்டாவுக்கும் இடையிலான ராஜாங்க விஷயங்கள் தொடர்பாகவும் இருவருக்கும் இடையில் விலகல் இருந்திருக்கிறது. அந்த இரண்டு ராஜ்ஜியங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் மொகலாயப் பிரதிநிதிகள் தக்காண ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரின் உத்தரவுக்கு ஏற்பவே நடந்துகொள்ளவேண்டும். பேரரசருக்கு என்ன தகவல் அனுப்புவதாக இருந்தாலும் அது தன் கைக்கு வந்த பின்னரே செல்லவேண்டும் என்ற நியாயமான கோரிகையை ஒளரங்கசீப் முன்வைத்தார். ஆனால் இந்த அதிகாரமானது அவருடைய நிர்வாகப் பொறுப்பு முடிவுக்கு வரவிருந்த காலத்தில் மட்டுமே தரப்பட்டது. அதுவும் முழுமையாகத் தரப்படவில்லை.
பேரரசர் தன்னைத் தொடர்ந்து தவறாகப் புரிந்துகொண்டு, கட்டுப்படுத்தி, முடக்கி வந்ததால் ஒளரங்கசீப் மிகவும் வெறுப்படைந்தார். இதனால் ஒரு முக்கியமான நேரத்தில் தானாகச் செய்யவேண்டிய ஓர் அவசியமான விஷயத்தைச் செய்ய மறுத்துவிட்டார். கசந்த மனதுடன் அதுபற்றி, ‘அதைச் செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. நான் செய்யாத விஷயங்களுக்காக எல்லாம் கடிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன். எனவே நான் இப்போது மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
1637இல் கான்-இ-துரன், தேவ்கட் பகுதியை ஆக்கிரமித்தவுடன் அதன் ராஜாவை, ஆண்டுக்கு ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய் பேரரசருக்குக் கப்பம் கட்டவேண்டும் என்று சொன்னார். ஆனால், இந்தத் தொகை தரப்படவில்லை. பல முறை கேட்டுப் பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. எனவே 1655இல் ஷாஜஹான் அவருடைய ராஜ்ஜியத்தைக் கைப்பற்றச் சொல்லி உத்தரவிட்டார். கோண்ட் ராஜா கேசரி சிங் ஓடோடி வந்து அந்தப் பணத்தைக் கட்டிவிடுவதாகச் சொன்னார்.
ஜவ்ஹார் என்ற குறுநிலப்பகுதி கொங்கணி பகுதிக்கு வடக்கிலும் பக்லனாவுக்கு தென் மேற்கிலும் அமைந்திருக்கிறது. அதை ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். அவர் டெல்லிப் பேரரசரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒளரங்கசீபின் ஆலோனையின் பேரில் ஷாஜஹான் ஒரு படையெடுப்புக்குச் சம்மதம் தெரிவித்தார். அதைக் கேள்விப்பட்டு பயந்த அந்த ராஜா, உடனே அடிபணிந்து, கப்பம் கட்டுவதற்குச் சம்மதித்தார் (1656).
5. சிறிய படையெடுப்புகள்
16, 17ஆம் நூற்றாண்டுகளில் நவீன மத்தியப் பிராந்தியங்கள் எல்லாம் கோண்டு குறு நில மன்னர்களின் வசம் இருந்தன. இதனால் அந்தப் பகுதிகள் கோண்ட்வானா என்று அழைக்கப்பட்டன. இதில், கர்மண்டலா என்ற மிகப் பெரிய கோண்டு ராஜ்ஜியம் அக்பர் கால மொகலாயப் படையெடுப்பில் சிக்கியது. அதில் அதன் தலைநகரம் சூறையாடப்பட்டது. அதன் பின்னர் வடக்கில் இருந்து புந்தேலா அரசும் அந்த ராஜ்ஜியத்தை ஊடுருவியது. 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தேவ்கட் பகுதியைத் தலைநகராகக் கொண்ட இன்னொரு கோண்டு ராஜ்ஜியம் புகழின் உச்சியை எட்டியது. அதன் ஆதிக்கம் பேதுல், சிந்த்வாரா, நாக்பூர் மற்றும் சியோனி, பாந்த்ரா, பாலகாட்டின் சில பகுதிகளுக்கும் பரவியது. கோண்ட்வானாவின் தென் பகுதியில் மூன்றாம் கோண்டு வம்சத்தின் ஆட்சிபீடமான சந்தா இருந்தது. அது தேவ்கட் ராஜாவின் பரம எதிரியாக இருந்தது.
6. கோல்கொண்டாவின் செல்வ வளமும் மொகலாயர்களுடனான மோதலுக்கான காரணங்களும்
கோல்கொண்டா ராஜ்ஜியம் மிகவும் வளமானது. நல்ல நீர்ப்பாசன வசதியைக் கொண்டது. அங்கிருந்த மக்கள் கடின உழைப்பாளிகள். அதன் தலைநகரான ஹைதராபாத் ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிக முக்கியமான வைர வியாபார மையமாகத் திகழ்ந்தது. ஏராளமான அயல் நாட்டு வணிகர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்தனர். அந்தப் பகுதி பல்வேறு தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கியது. வங்காள விரிகுடாவில் மசூலிப்பட்டினம் என்ற துறைமுகமுமிருந்தது. இந்த ராஜ்ஜியத்தில் இருந்த காடுகளில் விலைமதிப்பே சொல்லமுடியாத மிகப் பெரிய யானைக் கூட்டங்கள் வசித்து வந்தன. அவை மன்னருடைய வளத்தை மேலும் அதிகரித்தன. புகையிலை, பனை மரங்கள் ஆகியவையும் செழித்து வளர்ந்தன. புகையிலை, கள் ஆகியவற்றின் மீதான வரி மிகப் பெரிய வருவாயை ஈட்டிக் கொடுத்தது.
ஒளரங்கசீபுக்குக் கோல்கொண்டா மன்னருடன் தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. வருடாந்தரக் கப்பமான இரண்டு லட்சம் பணம் எப்போதும் நிலுவையிலேயே இருந்து வந்தது. மொகலாய நிர்வாகிகள் கேட்டபோதெல்லாம் அந்த அரசர் ஏதேனும் காரணங்கள், சாக்குபோக்குகள் சொன்னவண்ணம் இருந்தார்.
காலப்போக்கில் ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியது. 1636இல் பணத்தின் மதிப்பு 4 ரூபாயில் இருந்து நான்கரை ரூபாயாக உயர்ந்தது. 1654இல் அது மேலும் உயர்ந்து ஐந்து ரூபாயானது. குதுப் ஷா பழைய ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்து வந்தார். மொகலாயர்கள் வளர்ந்து வரும் ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப தொகையை அதிகப்படுத்திக் கேட்டனர். பழைய நிலுவைத் தொகை எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாகத் தரவேண்டும் என்றும் முறையிட்டனர். இதனால் அவர் மேலும் 20 லட்சம் கூடுதலாகத் தரவேண்டியிருந்தது.
அதன் பின் கர்நாடகா மீதான படையெடுப்புக்குச் சம்மதம் பெறவில்லை என்று ஒளரங்கசீப் கண்டிக்கப்பட்டார். கடைசியாக மீர் ஜும்லா தொடர்பான சிக்கலும் போரில் சென்று முடிந்தது.
7. மீர் ஜும்லா: வரலாறும் பதவியும்
1636-ஒப்பந்தங்கள் மொகலாயப் பேரரசுக்கும், இரண்டு தக்காண சாம்ராஜ்ஜியங்களுக்கும் இடையேயான எல்லைகளை மிகத் தெளிவாக வரையறுத்து இருந்தன. மொகலாயப் பேரரசின் படைப்பலத்தால் வடக்கில் பரந்து செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருந்த இந்த இரண்டு சாம்ராஜ்ஜியங்களும் பிற திசைகளில் தமது படைகளுக்கு முழு சுதந்தரம் கொடுத்திருந்தன. கிருஷ்ணா நதி தொடங்கி, காவேரி தாண்டி, தஞ்சாவூர் வரையிலான கர்நாடகப் பகுதியில் விஜய நகரச் சாம்ராஜ்ஜியத்தின் எஞ்சிய துண்டுகளாக ஏராளமான ஹிந்து சமஸ்தானங்கள் இருந்தன. இவை இப்போது இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு ஆளாகத் தொடங்கின. வங்காள விரிகுடா வரையிலும் முன்னேறிச் சென்ற கோல்கொண்டா படைகள் சில்கா ஏரி தொடங்கி பெண்ணாறு வரையிலான பகுதிகளைக் கைப்பற்றின.
பீஜாப்பூர் படைகள் தென்பக்கமாகப் படையெடுத்துச் சென்று, பின் கிழக்குப் பக்கமாகத் திரும்பி, செஞ்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை வென்றன. வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சுல்தான்களின் பிடியில் சிக்கி, ஒரு ராட்சஸ விலங்கின் இரண்டு தாடைகளுக்கு இடையில் சிக்கியதுபோல் விஜய நகரச் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ராஜ்ஜியமான சந்திரகிரி ராஜ்ஜியம் இருந்தது. கிழக்கே நெல்லூரில் இருந்து பாண்டிச்சேரி வரையிலும், மேற்கே மைசூரை எல்லையாகக் கொண்டும் அந்த ராஜ்ஜியம் அமைந்திருந்தது. இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவதில் பீஜாப்பூர், கோல்கொண்டா படைகளுக்கு இடையே போட்டி நிலவியது. சபிக்கப்பட்ட கர்நாடகத்தின் மீது வடக்கு, தெற்கில் இருந்த இரண்டு தாடைகளும் இறுகத் தொடங்கின. கோல்கொண்டாவின் வஸீர் என்று அறியப்பட்ட மீர் ஜும்லா இந்தப் படையெடுப்பில் முக்கிய பங்கு வகித்தார்.
இவரது இயற் பெயர் முஹம்மது சைய்யது. வரலாற்றில் மீர் ஜும்லா என்று அறியப்படும் இவர், பாரசீகத்தின் இஸ்ஃபா(ஹ)ன் என்ற எண்ணெய் வியாபாரியின் மகன் ஆவார். சொந்த ஊரை விட்டு இள வயதிலேயே பிரிந்த இவர், பிற ஷியா சாகசப் பயணிகளைப் போலவே அதே இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த தக்காணச் சுல்தான்களின் அவையில் தன் வணிக வெற்றிக்கு வழிகளைத் தேடினார் (1630).
வைர வியாபாரியாக மாறிய இவர், வணிகச் சாமர்த்தியத்தின் காரணமாகவும், சமயோஜிதப் புத்தியினாலும் விரைவிலேயே பெரும் செல்வத்தை ஈட்டினார். இவருடைய அற்புதமான திறமைகள் அப்துலா குதுப் ஷாவின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன. குதுப் ஷா இவரை முக்கிய அமைச்சராக நியமித்தார். மீர் ஜும்லாவின் கடின உழைப்பு, வணிக சாமர்த்தியம், நிர்வாகத் திறமை, ராணுவ மேதமை, பிறவியிலேயே கிடைத்த தலைமைக் குணம் இவையெல்லாம் அவர் தொட்டதையெல்லாம் துலங்கச் செய்தன. குடிமை அரசு நிர்வாகத்திலும் போர்க்கலையிலும் சிறந்து விளங்கிய இவர், கோல்கொண்டாவின் மறைமுக ஆட்சியாளராக ஆனார். இவருடைய சம்மதம் இன்றிச் சுல்தானுக்கு எந்தச் செய்தியும் சென்று சேர முடியாது.
கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர் அங்கு தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்தார். பல ஐரோப்பியத் துப்பாக்கி வீரர்கள், பீரங்கி வீரர்களைத் தன் படையில் இணைத்துக் கொண்டு ராணுவத்தைச் செயல் திறனிலும் ஒழுங்கிலும் உயர்ந்ததாக ஆக்கினார். விரைவில் கடப்பா மாவட்டத்தைக் கைப்பற்றினார். இதுவரையில் வெல்ல முடியாததாகக் கருதப்பட்ட கந்திகோட்டா மலைக் கோட்டையைக் கைப்பற்றியது இவருடைய வெற்றிகளின் மணி மகுடம்.
கடப்பாவுக்குக் கிழக்கில் இருக்கும் சித்தாவட்டையில் இருந்து சந்திரகிரி, வட ஆற்காடு மாவட்டத்தில் திருப்பதி வரை பலவற்றையும் கைப்பற்றினார். தென் பகுதியில் இருக்கும் செல்வ வளம் மிகுந்த பழங்காலக் கோவில்களைக் கொள்ளையடித்த இவர், புதையல்களையும் தேடி வேட்டையாடினார். தென் பகுதியிலேயே மிகப் பெரிய செல்வந்தர் என்று சொல்லப்படும் அளவுக்குச் செல்வ வளங்களைக் குவித்தார். இருபது மௌண்ட் வைரங்கள் இவரிடம் இருந்தன. இந்த வெற்றிகளின் மூலம் கர்நாடகாவில் இருந்த தனது ஜாஹிர் பகுதியை 500 மைல் நீலமும் 50 மைல் அகலமும் கொண்ட ராஜ்ஜியமாக மாற்றினார். அந்தப் பகுதிகளின் ஆண்டு வருமானம் 40 லட்சமாக இருந்தது. பல வைரச் சுரங்கங்களும் இவருக்குச் சொந்தமாகின. அப்படியாகக் கர்நாடகத்தின் சுதந்தரமான ராஜாவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
கோல்கொண்டா சுல்தானிடம் அரசச் சபையினர், ‘வாஸிரின் படை பலம் சுல்தானுக்கு ஆபத்தானது; சுல்தானின் சேவையில் இருக்கும் தளபதியின் செல்வ வளம் சுல்தானுடையதையே மிஞ்சிவிட்டது’ என்பதையெல்லாம் சொல்ல விரும்பியிருக்கவில்லை. குதுப் ஷாவுமேகூட வாஸிரின் கர்நாடகச் செல்வ வளத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளவே விரும்பினார். ஆனால் சுல்தான் எவ்வளவு பலவீனமானவர், பயனற்றவர் என்பது தெரிந்த மீர் ஜும்லா, இந்த வெற்றி முழுவதையும் தன்னுடையதாகவே கருதினார். சுல்தானின் கீழ் கை கட்டிப் பணிபுரிய அவர் விரும்பியிருக்கவில்லை. இதனால் கீழ்ப்படிதலற்ற அந்தத் தளபதியை ஒடுக்கி அழிக்கக் குதுப் ஷா தீர்மானித்தார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.