8. மொகலாயர்களுடன் குதுப் ஷாவின் மோதல், 1655.
மீர் ஜும்லாவுக்கு தனக்கு அடைக்கலம் தரும் தலைவர் ஒருவரின் தேவை ஏற்பட்டது. பீஜாப்பூர் சுல்தானிடம் உதவி கேட்டவர் மொகலாயர்களுடனும் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். கோல்கொண்டாவின் செல்வ வளம் மிகுந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற ரகசிய ஆசையை மனதில் வளர்த்திருந்த ஒளரங்கசீப், அதற்கு உதவக்கூடிய சரியான நபரும் ஆலோசகருமான மீர் ஜும்லாவை ராஜ்ஜியத்தின் முக்கிய அமைச்சராக நியமிக்க விரும்பினார். கோல்கொண்டாவில் இருந்த மொகலாயப் பிரதிநிதி மூலமாக மீர் ஜும்லாவுடன் ரகசியக் கடிதப் பரிமாற்றம் செய்தார். மொகலாயர்களுக்கு உதவி செய்தால் பேரரசரிடமிருந்து ஏராளமான சலுகைகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால், மீர் ஜும்லா இந்த வாய்ப்பை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. முடிவெடுக்க ஒரு வருட அவகாசம் கேட்டார். இதனால் ஒளரங்கசீப் வருத்தமடைந்தார்.
குதுப் ஷா தைரியமாகக் தனது படைகளின் மூலம் மீர் ஜும்லாவை வழிக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, மீர் ஜும்லாவின் மகனான முஹம்மது அமீன் செய்த ஒரு காரியம், வேறொரு நெருக்கடியை உருவாக்கியது.
முஹம்மது அமீன், கோல்கொண்டா அரசபையில் மீர் ஜும்லாவின் துணை நிலை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். பொறுப்பற்றவரும் ஆணவம் மிகுந்தவருமான அவர், எல்லோர் முன்னிலையிலும் சுல்தானை மரியாதைக் குறைவாக நடத்துவது வழக்கம். ஒருநாள் அவர், மிகுதியாக மது அருந்திவிட்டு அரசவைக்கு வந்தார். அப்போது மன்னரின் மெத்தையில் படுத்துத் தூங்கியதோடு மட்டுமில்லாமல் அதை அசிங்கப்படுத்தவும் செய்தார். ஏற்கெனவே அவர் மீது நீண்ட நாட்களாகக் கோபத்தில் இருந்த சுல்தான், முஹம்மது அமீனையும் அவருடைய குடும்பத்தினரையும் சிறையில் அடைத்ததோடு, சொத்துகளையும் பறிமுதல் செய்துவிட்டார் (நவம்பர் 21, 1655).
ஒளரங்கசீப் இந்தத் தருணத்துக்குத்தான் நீண்ட காலமாகக் காத்திருந்தார்.
பேரரசர் ஷாஜஹான், மீர் ஜும்லாவையும் அவருடைய மகனையும் மொகலாயச் சாம்ராஜ்ஜியப் பணியில் நியமித்திருப்பதாக டிசம்பர் 18 அன்று ஒளரங்கசீபுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர்கள் இருவரும் டெல்லிக்கு வருவதைக் குதுப் ஷா தடுக்கக்கூடாது என்றும், அவர்களுடைய சொத்துகளைப் பறிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தக் கடிதத்தைக் குதுப் ஷாவுக்கு அனுப்பிய ஒளரங்கசீப், இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டாலோ, தாமதம் செய்தாலோ படையெடுத்து வந்து தாக்குவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். அதோடு கோல்கொண்டா ராஜ்ஜியத்தின் எல்லையில் தன் படைகளைக் குவிக்கவும் செய்தார். குதுப் ஷா வரவிருந்த புயலைக் கணிக்கத் தவறிவிட்டார். மொகலாயப் பேரரசர் அனுப்பிய கடிதத்தைப் புறக்கணித்தார்.
முஹம்மது அமீன் சிறைப்பிடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் (டிசம்பர் 24), மீர் ஜும்லா குடும்பத்தினரை விடுவிக்கும்படி ஷாஜஹான் உடனே குதுப் ஷாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதமே எதிர்பார்க்கும் விளைவைத் தந்துவிடும் என்று உறுதியாக நம்பினார்.
இருந்தும் ‘ஒளரங்கசீபைத் திருப்திப்படுத்தும் நோக்கில்’ ஒருவேளை குதுப் ஷா முஹம்மது அமீனை விடுவிக்காவிட்டால், கோல்கொண்டாவைக் கைப்பற்றிவிடு என்ற அனுமதியும் கொடுத்தார் (டிசம்பர் 29). ஜனவரி 7, 1656 அன்று இந்த இரண்டு கடிதங்களும் ஒளரங்கசீபுக்குக் கிடைத்தன.
கோல்கொண்டாவை அழிக்க ஒளரங்கசீப் ஒரு தந்திரம் செய்தார். டிசம்பர் 24இல் ஷாஜஹான் அனுப்பிய கடிதத்தை குதுப் ஷா பெற்று, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அவருக்கு எதிராக ஒளரங்கசீப் போருக்குத் தயாராகிவிட்டார். சிறை பிடித்தவர்களை விடுவிக்குமாறு பேரரசர் கேட்டுக்கொண்டதன்படி கோல்கொண்டா சுல்தான் நடந்துகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், இது மிகவும் தெளிவான கீழ்ப்படிதல் இன்மை, கோல்கொண்டாவைத் தாக்குவதுதான் ஒரே வழி என்று படையுடன் சென்றுவிட்டார்.
9. கோல்கொண்டா ராஜ்ஜியம் மீதான ஒளரங்கசீபின் படையெடுப்பு, 1656
ஒளரங்கசீபின் உத்தரவின் பேரில் அவருடைய மூத்த மகன் முஹம்மது சுல்தான் நந்தர் பகுதி எல்லையைக் கடந்து (ஜனவரி 10, 1656) ஹைதராபாத்துக்குள் குதிரைப் படையுடன் புகுந்தார். அதே மாதம் 20ஆம் தேதியன்று ஒளரங்காபாதில் இருந்து ஒளரங்கசீபும் புறப்பட்டு, மகனுடன் சேர விரைந்தார்.
முஹம்மது சுல்தான் கோல்கொண்டா பகுதிக்குள் நுழைந்த அதே நேரத்தில் டிசம்பர் 24 அன்று ஷாஜஹான் அனுப்பிய கடிதம் குதுப் ஷாவுக்குக் கிடைத்திருந்தது. அவர் உடனேயே முஹம்மது அமீனையும், அவரது குடும்பத்தையும் விடுதலை செய்து அவர்களைப் பணியாளர்களுடன் இளவரசரைச் சந்திக்க அனுப்பிவைத்தார். கூடவே பேரரசருக்கு அடிபணிவதாகத் தாழ்மையுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியும் வைத்தார். ஆனால், ஒளரங்கசீப் ஒரு தந்திரம் செய்தார். அடிபணிவதாகக் குதுப் ஷா அனுப்பிய கடிதம் தாமதமாகவே கைக்குக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்ளத் தீர்மானித்தார்.
முஹம்மது அமீன் ஹைதராபாத்தில் இருந்து 24 மைல் தொலைவில் வைத்தே ஒளரங்கசீபைச் சந்தித்திருந்தார் (அநேகமாக ஜனவரி 21இல்). ஆனாலும் பறிமுதல் செய்த சொத்துகளை முஹம்மது அமீனுக்குக் குதுப் ஷா திருப்பித் தரவில்லை என்று சொல்லியபடி, ஒளரங்கசீப் தன் படையெடுப்பை நிறுத்தாமல் முன்னேறிச் சென்றார்.
குதுப் ஷா மனம் சோர்ந்துபோனார். மொகலாயப் படை இவ்வளவு சீக்கிரம் வந்து முற்றுகையிடும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய அவர், ஜனவரி 22 அன்று தலைநகர் ஹைதராபாத்தைக் கைவிட்டுவிட்டு கோல்கொண்டா கோட்டைக்குத் தப்பி ஓடினார்.
இப்படிச் செய்ததால் அவருடைய உயிர் தப்பியது. ஏனென்றால் முஹம்மது சுல்தானுக்கு ஒளரங்கசீப் கொடுத்திருந்த ரகசிய உத்தரவு ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது: குதுப் அல் முல்க் ஒரு கோழை. எந்த எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டான். எனவே, நீ அவனைப் பார்த்து செய்தியைத் தெரிவித்ததும் சட்டென்று தாக்கிவிடு. அவனுடைய கழுத்தின்மீது அழுத்திக் கொண்டிருக்கும் தலையைத் துண்டித்து பாரத்தைக் குறைத்துவிடு. தந்திரம், தாமதமின்றிச் செயல்படுதல், உன் கைகளின் வேகம் இவையே இதைச் சாதிக்க மிகவும் அவசியம்.
ஜனவரி 23 அன்று, மொகலாயப் படை ஹைதராபாத்துக்கு இரண்டு மைல் தொலைவில் இருந்த ஹுசைன் சாகர் குளத்துக்கு அருகில் வந்து சேர்ந்தது. இதனால் கோல்கொண்டா அமைச்சர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. மறுநாள் இளவரசர் ஹைதராபாதுக்குள் நுழைந்தார். அங்கு அழிவைத் தவிர்க்கும் நோக்கில் முஹம்மது பெய்க் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஹைதராபாத் இந்தியாவின் செல்வச் செழிப்புமிகுந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. அன்று, மொகலாயப் படை ஹைதராபாத்தில் அடித்த கொள்ளை தேசம் முழுவதும் பேசு பொருளானது.
ஒளரங்கசீபின் பணியாளராக இருந்த அஹில் கான் ராஸி இதுபற்றி இப்படி எழுதி இருக்கிறார்: ‘குதுப் அல் முல்கின் விலைமதிப்பு மிகுந்த நூல்கள், பிற விலைமதிக்க முடியாத பொருட்கள் எல்லாம் முஹம்மது சுல்தான் மூலம் கொள்ளையடிக்கப்பட்டன. குதுப் அல் முல்கின் சொத்துகள், அரிய பழங்காலப் பொக்கிஷங்கள் எல்லாம் ஒளரங்கசீபினால் பறிமுதல் செய்யப்பட்டன’.
பிப்ரவரி 6 அன்று ஒளரங்கசீபும் பெரும் படையுடன் வந்து சேர்ந்தார். துளியும் தாமதிக்காமல் துணிச்சலுடன் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக முதலில் கோல்கொண்டா கோட்டையையும், அதன் அக்கம் பக்கங்களையும் சுற்றி வந்து ஆய்வு செய்தார்.
மறுநாள் கோல்கொண்டா கோட்டை மீதான முற்றுகை ஆரம்பமானது. கோட்டையின் மேற்குப் பக்கம் காலியாக இருந்தது. எஞ்சிய மூன்று பக்கங்களை மொகலாயப் படையினர் ஆக்கிரமித்தனர். பிப்ரவரி 7 தொடங்கி மார்ச் 30 வரை முற்றுகை நீடித்தது. மொகலாயப் படையினர் மிகவும் நிதானமாகவே செயல்பட்டனர். சுல்தானுக்குத் தன்னிடம் இருந்த படை பலத்தைக் கொண்டு கோல்கொண்டா கோட்டையைக் காப்பாற்றுவது சிரமமாக இருந்தது.
அவ்வப்போது வெளியில் வந்த கோல்கொண்டா படையினர் போர் புரிந்தனர். இந்தச் சிறிய மோதல்களும் ஒரு கட்டத்தில் நின்றுபோனது. கோட்டைக்குள் இருந்து, முற்றுகையிட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளரின் முகாமுக்குத் தினமும் ஏராளமான பரிசுகள், அமைதித் தூதுகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், ஒளரங்கசீப் அனைத்தையும் உறுதியாக மறுத்துவிட்டார். முழு ராஜ்ஜியத்தையும் கைப்பற்ற முடிவு செய்திருந்தார். அதற்குக் குறைவாக எதையும் ஏற்க அவர் தயாராக இல்லை.
மொகலாயப் பேரரசுடன் கோல்கொண்டாவை இணைத்துக்கொள்ள அனுமதிக்கும்படி ஒளரங்கசீப் அனைத்து வாதங்களையும் பேரரசர் ஷாஜஹானிடம் எடுத்து வைத்தார். ஆனால், விசுவாசமற்ற வாஸிரை வழிக்குக் கொண்டுவருவதற்காகச் சகோதரச் சுல்தானை அழிக்க ஷாஜஹான் விரும்பவில்லை. இதனிடையில் டெல்லியில் கோல்கொண்டா சுல்தானுடைய பிரதிநிதியாக இருந்த நபர் ஒருவர், தாரா ஷுகோவுக்குப் பணம் கொடுத்து அவருடைய ஆதரவைப் பெற்றிருந்தார். எனவே பிணைத்தொகை ஒன்றின் பேரில் குதுப் அல் முல்குடன் சமாதானமாகப் போகவேண்டும் என்று பேரரசரிடம் தாரா பேசினார். இதனால் ஒளரங்கசீபுக்குப் பெரும் கோபமும் வெறுப்பும் வந்தது.
தாராவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பேரரசர் சமாதானத்துக்குத் தயாரான விவரம், ஒரு கடிதம் மூலமாக ஒளரங்கசீபுக்குப் பிப்ரவரி 24 அன்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், குதுப் ஷாவை மன்னித்துவிட வேண்டும் என்ற பேரரசரின் தீர்மானத்தை ஒளரங்கசீப் மறைத்துவிட்டார் (பிப்ரவரி 8). ஏனென்றால், இது தெரியவந்தால் குதுப் ஷாவுக்குத் தைரியம் வந்துவிடும். தனது கோரிக்கைகள் வலுவிழந்துவிடும் என ஒளரங்கசீப் கருதினார்.
இதனிடையில், குதுப் ஷாவின் டெல்லிப் பிரதிநிதி, தங்களுக்கு ஆதரவாகப் பேசும்படி தாரா ஷுகோவிடமும் இளவரசி ஜஹானாராவிடம் (குல்தஸ்தாவிடம்) கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மூலமாக ஒளரங்கசீபின் தந்திரம் பேரரசருக்குத் தெரிய வந்தது.
குதுப் ஷா எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டார், பேரரசரின் உத்தரவுக்குக் கீழ்படியத் தயாராக இருந்தும் எப்படி அவர் தரப்புக்கு எந்த நியாயமும் தரப்படவில்லை. பேரரசரின் அறிவிப்புகள் எதுவும் அவருக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் மறைக்கப்பட்டன, நல்லவரான சுல்தான் மீது ஷாஜஹானுக்கு இருக்கும் நல்லெண்ணமானது எப்படியெல்லாம் முறியடிக்கப்படுகிறது என்பதெல்லாம் பேரரசருக்கு விளக்கப்பட்டது. ஷாஜஹானுக்கு இதையெல்லாம் கேட்டதும் கோபம் தலைக்கேறியது. கோல்கொண்டா முற்றுகையை விலக்கிக்கொண்டு உடனே வெளியேறவேண்டும் என்று ஒளரங்கசீபுக்குக் கடுமையான ஒரு கடிதத்தை அனுப்பினார்.
ஒளரங்கசீப், மார்ச் 30 அன்று பேரரசரின் உத்தரவின் பேரில் முற்றுகையை விலக்கிக்கொண்டு கோல்கொண்டாவில் இருந்து வெளியேறினார். நான்கு நாட்கள் கழித்து அப்துல்லா குதுப் ஷாவின் இரண்டாவது மகளுக்கும், முஹம்மது சுல்தானுக்கும் நிக்காஹ் (மணமக்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்த நிலையில்) நடைபெற்றது. கோல்கொண்டா மன்னர், போர் தவிர்ப்புக்கான பிணைத்தொகை, கப்பத்தில் இருந்த நிலுவைத்தொகை என ஒரு கோடி ரூபாயைக் கொடுத்ததோடு, ராம்கிர் (நவீனக் கால மணிக் துர்க் மற்றும் சின்னூர்) மாவட்டத்தையும் விட்டுக் கொடுத்தார். மொகலாயப் படை ஏப்ரல் 21இல் அங்கிருந்து பின்வாங்கியது.
கோல்கொண்டாவில் முகாமிட்டிருந்த ஒளரங்கசீபை, மீர் ஜும்லா, ஒரு ராஜப் பிரதானியைப்போல அல்லாமல் ஒரு இளவரசரைப்போலவே சந்திக்க வந்திருந்தார். ஆறாயிரம் குதிரைகள், 15,000 காலாட் படையினர், 150 யானைகள், ஏராளமான வலிமையான ஆயுதங்களுடன் அவர் வந்திருந்தார். டெல்லிக்கு வரும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு ஏற்ப ஜூலை 7ஆம் தேதி வந்து சேர்ந்தார். பேரரசருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட பொருட்களைப் பரிசாகக் கொடுத்தார். 216 ரத்தி எடை கொண்ட மிகப் பெரிய வைரமும் அவற்றுள் ஒன்று. உடனே அவர் ஆறாயிரம் வீரர்களைக் கொண்ட படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இறந்திருந்த சதுல்லா கானின் இடத்தில் முக்கிய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
10. கோல்கொண்டா சூறையாடல் தொடர்பாகப் பேரரசருடனான ஒளரங்கசீபின் மோதல்கள்
கோல்கொண்டா மீதான ஒளரங்கசீபின் படையெடுப்பு பேரரசருடனான மோதலை மீண்டும் தொடங்கி வைத்தது. ஹைதராபாத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தொகை பற்றிய மிகைப்படுத்தப்பட்ட செய்தி டெல்லிக்கு வந்து சேர்ந்தது. குதுப் ஷாவிடமிருந்து ஒளரங்கசீபும் அவருடைய மகனும் விலை உயர்ந்த பரிசுகளைப் பெற்றிருந்தனர். அதைப் பற்றியெல்லாம் ஒளரங்கசீப் பேரரசருக்கு அனுப்பிய கடிதங்கள் எதிலும் குறிப்பிட்டிருக்கவில்லை. கப்பத் தொகையிலும் அதைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை என்று கோல்கொண்டாத் தூதுவர் சொல்லியிருந்தார்.
ஒளரங்கசீபும் தன் தரப்பில், கோல்கொண்டா மன்னர் போர் தவிர்ப்புக்குக் கொடுத்த பிணைத்தொகையில் தனக்கு உரிய பங்கை ஷாஜஹான் தரவில்லை என்று புகார் தெரிவித்தார்: ‘ஒட்டு மொத்த கோல்கொண்டாப் பிணைத் தொகையும் அப்படியே தௌலதாபாத் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது. போருக்காக நான் பெற்ற கடனையும் என் படைவீரர்களுக்கான ஊக்கத் தொகையையும் நான் எப்படிக் கொடுக்க முடியும்? அவையே 20 லட்சத்துக்கு மேலாக வரும்’ என்றார். அதேபோல் கோல்கொண்டாவில் இருந்து கிடைத்த பரிசுகளும் அவற்றின் விலை மதிப்பும் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டு, ‘கழுத்து முங்கும் அளவுக்கு நகைகள் தரப்பட்டதாக’ டெல்லியில் இருக்கும் தீய எண்ணம் கொண்ட பிரதிநிதிகளால் சொல்லப்பட்டுவிட்டது என்று அவர் சொன்னார்.
இறுதியாக, கோல்கொண்டாவுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், ஒரு விஷயம் பற்றி முடிவெடுக்கப்படாமல் இருந்தது. குதுப் ஷா கர்நாடகாவைத் தன் ராஜ்ஜியத்திலேயே வைத்துக்கொள்ள விரும்பினார். அது நியாயமான விருப்பமும் கூட. ஏனென்றால், அதைப் போரிட்டு வென்றது அவருடைய தளபதிதான். எனவே அதன் மீது அவருக்குத்தான் உரிமை உண்டு. ஆனால், ஒளரங்கசீப் இதை ஏற்கவில்லை. மீர் ஜும்லாவின் தனிப்பட்ட வெற்றியில் கிடைத்த ஜாஹிர் பகுதி அது என்று சொன்னார்.
பிரச்னை பேரரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. அவரோ, மீர் ஜும்லாவின் ஜாஹிர் பகுதியாக அது தன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். எனவே கர்நாடகப் பகுதியில் இருந்து ஆட்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளும்படி குதுப் ஷாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோல்கொண்டா அதிகாரிகள் தமக்குக் கிடைத்த கொழுத்த வேட்டைக்களமான கர்நாடகப் பகுதியை விட்டுக்கொடுக்கத் தயங்கினர். எனவே அவர்கள் அங்கேயே இருந்து, மொகலாயர்கள் அந்தப் பகுதியை ஆக்கிரமிக்க இடம் கொடுக்காமல் தொடர்ந்து நெருக்கடிகள் தந்து வந்தனர்.
11. பீஜாப்பூர் மீதான ஒளரங்கசீபின் படையெடுப்பு 1657
முஹம்மது அடில் ஷாவின் ஆட்சிக் காலத்தில் (1626-56) பீஜாப்பூர் சாம்ராஜ்ஜியம் அதன் உச்சபட்ச விரிவையும் வலிமையையும் கம்பீரத்தையும் அடைந்தது. அந்தச் சாம்ராஜ்யம் இந்தியத் தீபகற்பத்தில் அரபிக் கடல் தொடங்கி வங்காள விரிகுடா வரை பரந்து விரிந்திருந்தது. 1636லிருந்து முகம்மது அடில் ஷா, டெல்லிப் பேரரசருடன் நட்புறவுடனே இருந்து வந்தார். இரு அரசபைகளுக்கும் இடையிலான நட்பார்ந்த பரிமாற்றங்கள் நிறைய இருந்து வந்ததை நாம் பார்க்க முடிகிறது.
பீஜாப்பூர் சுல்தானின் கருணை, நீதி மேலான மோகம், மக்கள் மீதான அக்கறை, உலகம் பற்றிய எளிய புரிதல், உலக நடப்புகள் பற்றிய வெள்ளந்தியான மனோபாவம் இவையெல்லாம் ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தன.
டெல்லி அரசவைக்கு மீர் ஜும்லா வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து (ஜூலை 7, 1656) பேரரசரின் அவையில் ஒளரங்கசீபின் தீவிர நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்க ஆரம்பித்தது. பேரரசரின் அவையின் பிரதான அமைச்சராக மீர் ஜும்லா ஆதிக்கம் செலுத்தியதால், உயிர் பிரியும் தருவாயில் இருந்த பீஜாப்பூர் சுல்தான் இறந்ததும் அதன் மீது படையெடுப்பதற்கு ஒளரங்கசீப் திட்டமிடத் தொடங்கினார்.
நவம்பர் 4, 1656இல் பீஜாப்பூர் ராஜ வம்சத்தின் ஏழாவது அரசரான அடில் ஷா இறந்தார். அவருடைய முதன்மை அமைச்சரான கான் முஹம்மதுவும், ராணி பாரி சாஹிபாவும் இணைந்து இரண்டாம் அலி அடில் ஷாவுக்கு முடி சூட்டினர். மறைந்த அரசரின் ஒரே மகனான அவருக்கு அப்போது வயது 18. இது தெரிய வந்ததும் ஒளரங்கசீப் பேரரசருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், அலி அடில்ஷா இறந்த மன்னரின் மகன் அல்ல. பெற்றோர் யார் என்றே தெரியாத அவனை மன்னர் எடுத்துவந்து வளர்த்திருக்கிறார். எனவே பீஜாப்பூர் மீது படையெடுத்து அதை மொகலாயச் சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
முஹம்மது அடில் ஷாவின் மரணத்தைத் தொடர்ந்து கர்நாடகப் பகுதியில் ஏற்கெனவே குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தன. ஜமீன்தார்கள் தம்முடைய நிலங்களையெல்லாம் மீட்டுவிட்டனர். தலைநகரில் நிலைமை மேலும் மோசமானது. அதிகாரப் பங்கீடு தொடர்பாகப் பீஜாப்பூர் நிலப்பிரபுக்கள் தமக்குள் சண்டையிட்டுக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். அதோடு பிரதான அமைச்சரான கான் முஹம்மதுவுடனும் மோதினர். நிலைமையை மேலும் மோசமாக்க ஒளரங்கசீப் உள்ளே நுழைந்தார். தமது படைகளுடன் மொகலாயச் சாம்ராஜ்ஜியம் பக்கம் வரத் தயாராக இருந்த முக்கியஸ்தர்களை ஆசைகாட்டித் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். மீர் ஜும்லாவின் துணையுடன் பிறரையும் தன் பக்கம் இழுக்கத் தீர்மானித்தார்.
நவம்பர் 26இல், ‘உனக்குச் சரி என்று படும்வகையில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்’ என்று ஒளரங்கசீபுக்கு முழு சுதந்தரம் கொடுத்து, பீஜாப்பூர் படையெடுப்புக்குப் பேரரசர் அனுமதி கொடுத்தார். மீர் ஜும்லா, தம் தலைமையில் தலைநகரில் இருந்தும் ஜாஹிர் பகுதிகளில் இருந்தும் 20 ஆயிரம் படை வீரர்கள், ஏராளமான அதிகாரிகள் எனப் பெரிய படையை அனுப்பி ஒளரங்கசீபின் படைக்கு வலுவூட்டினார்.
இந்தப் போர் முற்றிலும் நியாயமற்றதாக இருந்தது. பீஜாப்பூர் ஒருபோதும் மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட நிலமாக இருந்திருக்கவில்லை. சுதந்தரமான, மொகலாயப் பேரரசருக்கு இணையான ராஜ்ஜியமாகவே இருந்தது. பீஜாப்பூரின் அரசராக யார் வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மொகலாயப் பேரரசுக்கு இருந்திருக்கவே இல்லை.
மீர் ஜும்லா ஒளரங்காபாதுக்கு ஜனவரி 18இல் வந்துசேர்ந்தார். அன்றே ஜோதிடர்கள் ஒரு நல்ல நேரம் குறித்துக் கொடுக்கவே, இளவரசர் பீஜாப்பூர் மீது தாக்குதலைத் தொடுக்க உடனே புறப்பட்டுவிட்டார். பிப்ரவரி 28 அன்று பீதர் பகுதியை அடைந்த அவர், மார்ச் 2இல் அங்கிருந்த கோட்டையை முற்றுகையிட்டார். இதற்குக் கோட்டையில் இருந்த சித்தி மர்ஜான் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பலமுறை கோட்டையை விட்டு வெளியேவந்து தாக்கினார். ஆனால், மொகலாயப் படையின் மிக அதிகமான எண்ணிக்கையே வெற்றியைத் தீர்மானித்தது. மீர் ஜும்லாவின் பீரங்கிப் படை கோட்டைச் சுவர்களை நன்கு பதம் பார்த்துவிட்டது. இரண்டு கொத்தளங்கள் வீழ்த்தப்பட்டன. கீழ்த்தளச் சுவர்களில் இருந்த தாக்குதல் அமைப்புகள், வெளிப்புறச் சுவர்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன.
தடையாக இருந்த குழிகள் நிரப்பப்பட்டு மார்ச் 29இல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. மொகலாயப் படை எறிந்த எரி அம்பு, பீஜாப்பூர் படையினரின் வெடி மருந்து, கை எறிகுண்டுகள் இருந்த இடத்தில் சென்று விழுந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் மிக மோசமாக அனைத்தும் வெடித்துச் சிதறின. சித்தி மர்ஜான் அதில் படுகாயமடைந்தார். அவருடைய இரண்டு மகன்களும் வேறு பல வீரர்களும் உயிரிழந்தனர்.
பதுங்குக் குழிகளில் இருந்து போரிட்ட மொகலாயப் படையினர் ஊருக்குள் வெறியுடன் பாய்ந்தனர். தடுக்க வந்தவர்களையெல்லாம் மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மரணப் படுக்கையில் இருந்த சித்தி மர்ஜான், தன் ஏழு மகன்களை ஒளரங்கசீபிடம் கோட்டைச் சாவிகளுடன் அனுப்பி வைத்தார். இப்படியாகப் பீதர் கோட்டை 27 நாட்களில் கைப்பற்றப்பட்டுவிட்டது. இந்த வெற்றியின் மூலமாக 12 லட்சம் ரூபாய்களும், எட்டு லட்சம் மதிப்பிலான வெடி மருந்துகளும், பிற பொருட்களும் கிடைத்தன. அதோடு 230 பீரங்கிக் குழாய்களும் கிடைத்தன.
மேற்கு எல்லையான கல்யாணி நகரம் தொடங்கி, தெற்கே குல்பர்கா வரை பீஜாப்பூர் படை அணி திரண்டு நின்றது. கூடியிருந்த இந்த எதிரிப் படையை அழிக்க நல்ல அனுபவம் மிகுந்த 15,000 வீரர்களை வலிமையான ஆயுதங்களுடன் மஹாபத் கான் தலைமையில் அனுப்பி வைத்தார் ஒளரங்கசீப். ஏப்ரல் 12இல் இந்த மொகலாயப் படை பீஜாப்பூர் படையுடன் மோதியது. கான் முஹமது, அஃப்சல்கான், ரந்துலா மற்றும் ரைஹனின் மகன்கள் ஆகியோர் தலைமையில் 20,000 பீஜாப்பூர் படையினர் தாக்கத் தொடங்கினர்.
தேர்ந்த தளபதியான மஹாபத் கான், மொகலாயப் படைகளை மிக லாகவமாக வழி நடத்தினார். கவனத்தைத் திருப்பும் வழியிலான எதிரிகளின் வியூகங்கள் அனைத்தையும் முறியடித்தார். இறுதியாகப் பீஜாப்பூர் படை பின்வாங்கி ஓடியது.
பீதருக்கு 40 மைல் தொலைவில், துல்ஜாபூர் பவானி கோவிலில் இருந்து கோல்கொண்டாவுக்குச் செல்லும் பாதையில், சாளுக்கிய வம்ச அரசர்களின் பழங்காலத் தலைநகரும் கன்னட தேசத்தின் தலைநகராகவும் இருந்த கல்யாணி நகரம் அமைந்திருக்கிறது. ஏப்ரல் 27 அன்று போதிய எரிபொருள் உதவியுடன் புறப்பட்ட ஒளரங்கசீப், கல்யாணி நகருக்கு ஒரு வாரத்துக்குள் சென்று சேர்ந்தார். உடனே அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்குச் சண்டையையும் தொடங்கினார். பகலிலும் இரவிலும் கோட்டை, கொத்தளங்களில் இருந்து எரி அம்புகள் மூலமும், துப்பாக்கிகள் மூலமும், மீர் ஜும்லாவின் படையினர் மீது தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் எந்த வெற்றியும் பீஜாப்பூர் படையினருக்குக் கிடைக்கவில்லை.
கல்யாணி நகருக்கு வடகிழக்கே பத்து மைல் தொலைவில் இருந்தபோது மஹாபத் கான் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டார். கடுமையான போர் நடந்தது. ராஜப் புத்திரர்களுக்கு இந்தப் போரினால் பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. கான் முஹம்மதுவின் குதிரை வீரர்கள், ராவ் சாத்ர சால் மன்னரின் கருங்கல் கோட்டை மீதும், ஹாதா குலத்தினர் மீதும் மேற்கொண்ட தாக்குதலினால் பெரிய பலன் இருந்திருக்கவில்லை. பீஜாப்பூரின் பஹோல் கானின் மகன்களால் தாக்கப்பட்ட ராஜ ராய் சிங் சிசோடியா போரில் காயம் பட்டார். அவருடைய குதிரையும் வீழ்த்தப்பட்டது. அந்த நேரம் பார்த்து அவருக்கு உதவி கிடைத்தது. மஹாபத் கான் எதிரியின் படையை ஊடுருவிவந்து அவர்களை விரட்டியடித்தார்.
முற்றுகையை மேலும் தீவிரப்படுத்த ஒளரங்கசீப் தீர்மானித்தார். அவர் முகாமிட்டிருந்த இடத்துக்கு நான்கே கிலோமீட்டர் தொலைவில் 30,000 பேர் கொண்ட வலிமையான பீஜாப்பூர் படை வந்து சேர்ந்தது. கோட்டையைச் சுற்றி வெறும் கூடாரங்களை மட்டும் விட்டுவிட்டு, மே 28 அன்று இளவரசர் தன் படையை அழைத்துக்கொண்டு எதிரிகள் இருந்த இடத்துக்கே சண்டைக்குச் சென்றார். இரு படைகளின் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது எதிரிப் பிரிவுகளுடன் மோதினர். ஆறு மணி நேரம் போர் நீடித்தது. தக்காண வீரர்கள், விரட்டி விரட்டியடிக்கப்பட்டாலும் திரும்பத் திரும்ப வந்து தாக்கினர். நான்கு முறை அவர்களுடைய படை அணி வரிசை குலைக்கப்பட்டு, மீண்டும் ஒன்றுகூடித் தாக்க வந்தனர். இறுதியாக வலிமையான ஆயுதங்கள் கொண்ட வடப் புலத்துக் குதிரை வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தக்காண வீரர்கள் பின்வாங்கினர்.
மொகலாயப் படை இடமிருந்தும் வலமிருந்தும் சூழ்ந்து தாக்கவே சுல்தானின் படைகள் இறுதியில் சிதறி ஓடின. பேரரசின் படைகள் எதிரிகளை அவர்களுடைய முகாம் நோக்கி விரட்டியடித்தன. கைக்குக் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டியும் சிறைப்படுத்தியும் முன்னேறினர். பீஜாப்பூர் முகாமில் இருந்த ஆயுதங்கள், அடிமைப் பெண்கள், குதிரைகள், போக்குவரத்துக்கான விலங்குகள், பிற அனைத்துவிதமான பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. முற்றுகை மிகத் துணிச்சலுடன் தீவிரமாக இருந்தது. அபிசீனியத் திலாவரின் தற்காப்பும் சம அளவு வலிமையுடன் இருந்தது.
மொகலாயர்களை மீண்டும் எதிர்க்க, பீஜாப்பூர் படை ஒன்று கூடியது. எனவே 22 ஜூலையன்று ஒளரங்கசீப் தன் மூத்த மகன் மற்றும் மீர் ஜும்லாவின் தலைமையில் மேலும் பெரிய படையை அனுப்பினார். அவர்கள் 48 மைல்கள் முன்னேறிச் சென்று பீஜாப்பூர் படையின் அணி வரிசையைத் தகர்த்தனர். நான்கு மைல் தொலைவுக்கு அவர்களை விரட்டியடித்தனர். பீஜாப்பூர் கிராமங்களைச் சின்னாபின்னமாக்கிவிட்டு குல்பர்கா நோக்கி ஒளரங்கசீபின் படை முன்னேறியது.
ஜூலை 29 அன்று ஏகாதிபத்தியப் படை கல்யாணி நகரக் கோட்டையின் அகழிக்கு மறுபக்கத்தில் இருந்த கொத்தளத்தின் மீது ஏறியது. அங்குக் கடுமையான போர் நடைபெற்றது. எனினும் கொத்தளம் மீது ஏறிய மொகலாயப் படையினர் கோட்டைக்குள் புகுந்து இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று கோட்டையின் சாவிகள் திலாவரால் மொகலாயரிடம் ஒப்படைக்கப்பட்டன. பீஜாப்பூருக்கு அவர் உயிருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கல்யாணி நகரம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, பீஜாப்பூர் சுல்தான் அமைதிப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்தார். பேரரசிடம் தமக்கு ஆதரவாகப் பேசும்படி தாரா ஷுகோவிடம் கேட்டுக்கொண்டார். பீதர், கல்யாணி, பரேந்தா ஆகிய நகரங்களையும் கோட்டையையும் அவற்றின் ஆதரவில் இருக்கும் பகுதிகளையும் மொகலாயப் பேரரசரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் எனப் பேரரசர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதோடு பிணைத் தொகையாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஹாஜஹான், ஒளரங்கசீப்பைச் சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டார். படையைப் பீதருக்குத் திருப்பி வரும்படி உத்தரவிட்டார். மால்வா மற்றும் வட இந்தியாவில் இருந்து தக்காணத்துக்கு அனுப்பப்பட்ட படைகள் திருப்பி அழைக்கப்பட்டன.
இப்படியாக, ஒளரங்கசீபுக்கு முழு வெற்றி கிடைக்கவிருந்த நேரத்தில் அதற்குத் தடை வந்துவிட்டது. பரந்து விரிந்த பீஜாப்பூர் சாம்ராஜ்ஜியத்தின் வடகோடி முனை மட்டுமே அவருக்குக் கிடைத்திருந்த நிலையில் பேரரசர் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். இந்த ஒப்பந்தத்தினால் பீஜாப்பூர் சுல்தானுக்கு நன்மை விளைந்தது. ஒளரங்கசீபின் அதிகாரம் குறைக்கப்பட்டுவிட்டதால் பரேந்தாவை ஒப்படைக்கச் சுல்தான் மறுத்துவிட்டார்.
தக்காணத்தில் மொகலாயர்களின் துரதிஷ்ட நிலையை மேலும் அதிகரிக்கும் வகையில் செப்டம்பர் 6இல் ஷாஜஹான் நோய் வாய்ப்பட்டார். அவருடைய இறப்பு தொடர்பான வதந்திகள் நாடு முழுவதும் பரவின. ஒளரங்கசீப் பதறிப்போனார். அதோடு அவருடைய திட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டன. எனவே அக்டோபர் 1657இல் கல்யாணி பகுதியில் இருந்து அவர் பின்வாங்கினார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.