Skip to content
Home » ஔரங்கசீப் #6 – வாரிசு உரிமைப் போர் – 1

ஔரங்கசீப் #6 – வாரிசு உரிமைப் போர் – 1

ஷாஜஹான்

அத்தியாயம் 3
ஷாஜஹானின் உடல் நலக் குறைவும், மகன்களின் கலகங்களும்

1. ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷுகோ

மார்ச் 7, 1657 அன்று ஷாஜஹான் ஆட்சியின் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்து 31ஆம் ஆண்டில் காலடி வைத்திருந்தார். அவருடைய ஆட்சிக் காலம் மிக நீண்டதாகவும் வெற்றிகரமானதாகவும் இருந்தது. மொகலாயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவின் செல்வ வளம் பல அயல்நாட்டுப் பயணிகளின் கண்களை உறுத்தியது.

புகாரா, பாரசீகம், துருக்கி, அரேபியா போன்ற பகுதிகளிலிருந்து மட்டுமில்லாமல், ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற மேற்குலக நாடுகளில் இருந்து இந்தியா வந்து சென்றவர்களுக்கும் இங்குள்ள மயிலாசனமும், கோஹினூர் வைரமும் பிற நகைகளும் வியப்பை ஏற்படுத்தி இருந்தன.

ஷாஜஹானுக்குப் பெரிதும் பிடித்திருந்த வெண் பளிங்குக் கட்டுமானங்கள் புதுமையாகவும் தூய கலை வடிவத்தின் அடையாளமாகவும் இருந்தன. இவருடைய அரசவையில் இருந்த மேட்டுக்குடியினர் பிற பகுதிகளைச் சேர்ந்த மன்னர்களைவிடச் செல்வ வளத்திலும் படோடோபத்திலும் உயர்ந்து விளங்கினர். முழுப் பாதுகாப்பு பெற்றிருந்த இவரது சாம்ராஜ்ஜியம், முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு மிகவும் பரந்து விரிந்ததாக இருந்தது.

சாம்ராஜ்யத்துக்கு உள்ளேயும் நல்ல அமைதி நிலவியது. விவசாயிகள் மிகுந்த அக்கறையுடன் போஷிக்கப்பட்டனர். மக்களின் புகார்களின் பேரில் கடுமையான, ஒடுக்குமுறைகளில் ஈடுபடும் அதிகாரிகள் பலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். எல்லாருடைய செல்வமும் வளமும் செழித்தது.

அன்பும் சாமர்த்தியமும் மிகுந்த ஷாஜஹான், நிர்வாகப் பணிகளுக்காகத் திறமையான அதிகாரிகளை நியமித்திருந்தார். தேசத்தின் பல்வேறு கலைகளில் திறமை பெற்றவர்களுக்கும் அவருடைய அரசவையில் இடம் இருந்தது. ஆனால், சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய அமைச்சர்களையும் தளபதிகளையும் மரணம் தன் கருணையற்ற கரங்களினால் ஒவ்வொருவராக அப்புறப்படுத்தியது.

அனுபவம் மிக்க அந்தத் திறமைசாலிகள் போன பின்னர், அந்த இடங்களை நிரப்பும் புதியவர்களைப் பேரரசரால் கண்டடைய முடியவில்லை. அவருக்கு ஏற்கெனவே 67 சந்திர வருடம் நிறைவாகி இருந்தது (ஜனவரி 24, 1657). ஷாஜஹானுக்குப் பின் என்ன ஆகும்?

ஷாஜஹானுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். இளமைப் பருவத்தைக் கடந்த அந்த நால்வருக்குமே பல்வேறு பகுதிகளை நிர்வகித்த அனுபவமும், படைகளுக்குத் தளபதியாக இருந்த அனுபவமும் இருந்தது. ஆனால், சகோதரர்களிடையே எந்தப் பாசமும் இருக்கவில்லை. மகன்களில் மூத்தவரான தாரா ஹுகோவுக்கும், மூன்றாவது மகனான ஒளரங்கசீபுக்கும் இடையே ஆரம்பித்த கசப்பு, காலப்போக்கில் பெருகியது. அனைவருக்கும் இது வெளிப்படையாகத் தெரியும்படியாகவும் மாறியது. எனவே, அமைதியை நிலைநாட்டும்பொருட்டு, அரச சபையில் இருந்தும், தாரா ஷுகோவிடமிருந்தும் வெகுத் தொலைவில் இருக்கும்படியாக ஒளரங்கசீப் தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தனக்குப் பின்னான ஆட்சிப் பொறுப்பை, தன்னுடைய மனைவிகளில் ஒருவர் மூலம் பிறந்த நான்கு மகன்களில் மூத்தவனான தாரா ஷுகோவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஷாஜஹான் விருப்பம் கொண்டிருந்தார். இதனைப் பலரும் அறியும்படி வெளிப்படுத்தியும் வந்தார். அரியணையைச் சுமுகமான முறையில் மாற்றித் தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தாராவுக்கு அரச நிர்வாகப் பயிற்சியும் பொறுப்புகளும் கொடுத்துத் தன் அருகிலேயே நீண்ட காலம் வைத்திருந்தார்.

தாராவுக்குக் கீழ்படியக்கூடியவர்களைக் கொண்டே ராஜ்ஜியத்தின் பல பகுதிகளை ஷாஜஹான் நிர்வகிக்கவும் செய்திருந்தார். தாராவுக்கு உயர் பதவிகளும் சலுகைகளும் கொடுத்து மிக உயரத்தில் வைத்திருந்தார். யாரும் பேரரசரைச் சந்தித்து எதுவும் சொல்ல வேண்டுமென்றால்கூட தாராவின் உதவியை வாங்கியோ கெஞ்சியோ பெற்றுத்தான் செய்ய முடியும்.

தாராவுக்கு 42 வயது முடிந்திருந்தது. அவர் தன் கொள்ளுத் தாத்தா அக்பரைப் போன்று பல இறைத் தத்துவங்களில் தேடல்களைக் கொண்டிருந்தார். தால்முத், புதிய ஏற்பாடு, இஸ்லாமியச் சூஃபிகள் எழுதியவை, ஹிந்து வேதாந்தம் என அனைத்தையும் ஆர்வத்துடன் படித்திருந்தார். உலகின் அனைத்து மதங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் உலகளாவிய உண்மைகளில், இஸ்லாம் மற்றும் ஹிந்துத் தர்மத்துக்கான இணைப்பைக் கண்டடைவதே அவருடைய நோக்கமாக இருந்தது. பொதுவாக மத வெறியர்கள் தங்களுடைய மதங்களின் மேலோட்டமான விஷயங்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதினால் இந்த இணைப்புப் புள்ளிகளைப் புறமொதுக்கிவிடுவது வழக்கம்.

ஹிந்து யோகி லால் தாஸ், இஸ்லாமிய ஃபகிர் சர்மத் ஆகியோரின் ஆர்வமிகு சீடராக இருந்த தாரா ஷுகோ, அவர்களிடம் கற்றிந்த விஷயங்களில் இருந்து தன் ஆன்மிகத் தத்துவத்தை உருவாக்கிக்கொண்டார். எனினும் அவர் இஸ்லாமில் இருந்து விலகிச் சென்றுவிடவில்லை. பல்வேறு இஸ்லாமியச் சூஃபிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்திருக்கிறார். மியான் மீர் என்ற இஸ்லாமியச் சூஃபியின் சீடராக இருந்திருக்கிறார். இஸ்லாமில் நம்பிக்கை இல்லாதவராக இருந்திருந்தால் தாரா ஷுகோவை மியான் மீர் சீடராக ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். ஆன்மிக நாட்டம் கொண்ட ஷாஜஹானின் மகளான ஜஹான் ஆராவும் தனது சகோதரர் தாராவைத் ஆன்மிக வழிகாட்டியாகவே புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தாரா புறமொதுக்கவில்லை என்பதையே அவருடைய ஆன்மிகப் படைப்புகளின் அறிமுக உரையில் எழுதப்பட்டிருப்பவை எடுத்துக்காட்டுகின்றன. இஸ்லாமிய மார்க்க விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமின் ஒரு பிரிவான சூஃபிகள் முன்வைத்தவற்றையே தாராவும் முன்வைத்தார். இருந்தும், ஹிந்து தத்துவங்களுடனான அவருடைய நல்லுறவு அவருக்குப் பெரும் தடையாகவே இருந்தது.

ஒருவேளை அவர் தன்னை பழமைவாத, தூய்மைவாத இஸ்லாமின் பாதுகாவலராக முன்னிறுத்த விரும்பி இருந்தாலும், இஸ்லாமுக்கு வெளியில் இருக்கும் நபர்கள் மீது புனிதப் போருக்குச் செல்ல விரும்பி இருந்தாலும் அவரால் அனைத்து இஸ்லாமியர்களையும் தன் பின்னால் அணிதிரள வைக்க முடிந்திருக்காது.

தாராவின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரை எப்போதும் அரசபையிலேயே இருக்கும்படி ஷாஜஹான் செய்தது பின்னாளில் கெடுதலையே கொண்டு வந்தது. காந்தஹாரின் மூன்றாவது முற்றுகையின்போது மட்டுமே படையை வழிநடத்திச் செல்லவும், பிராந்தியங்களை நிர்வகிக்கவும் தாராவுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இதனாலேயே அவருக்குப் போர்க்கள அனுபவமோ, நிர்வாகத் திறமையோ கைகூடியிருக்கவில்லை. ஆட்களைப் பார்த்த உடனேயே எடைபோடும் திறமையும் அவருக்கு இருந்திருக்கவில்லை. போரில் ஈடுபட்ட படைகளுடனும் அவருக்கு நேரடித் தொடர்பு இல்லை.

இதனால், வலிமையானவருக்கே அரசுரிமை என்ற மொகலாய அணுமுறையின்கீழ், தாரா ஷுகோ ஆட்சிக் கட்டில் ஏறத் தகுதியற்றவராகவே பார்க்கப்பட்டார். அவரிடம் இருந்த அளவு கடந்த செல்வமும் செல்வாக்கும், நிதானம், தன்னிலைப் புரிதல், சுயக் கட்டுப்பாடு, முன்னோக்குப் பார்வை ஆகியவற்றை அவருக்குத் இல்லாமல் செய்துவிட்டது.

தாரா ஷுகோவைச் சுற்றியிருந்த எல்லோரும் அவரை எப்போதும் போலியாகப் புகழ்ந்த வண்ணமே இருந்தனர். இது, டெல்லி அரியணையின் முறையான வாரிசாக இருந்த அவரிடம் இயல்பான பெருமிதத்தையும் திமிரையும் உருவாக்கியிருந்தது. அவருக்குப் பண்புடன் நடந்துகொள்ளவும் தெரிந்திருக்கவில்லை. இத்தகைய பயனற்ற, அறிவுக்கூர்மையற்ற எஜமானரிடம் இருந்து திறமைசாலிகளும், சுய மரியாதை கொண்டவர்களும் விலகிச் செல்லவே நேர்ந்தது.

தாரா அன்பான கணவராக இருந்தார். பாசமான தந்தையாகவும், கீழ்ப்படிதல் மிகுந்த மகனாகவும் செயல்பட்டார். ஆனால், நெருக்கடிகள் நிறைந்த சூழலில் ஓர் ஆட்சியாளராக அவர் மிகவும் தோல்வியுற்றவராகவே இருந்திருப்பார். நீண்ட காலம் நீடித்த ஷாஜஹானின் வளமும், வெற்றியும் கொண்ட ஆட்சி தாராவின் திறமைகளை மந்தமாக்கியிருந்தது.

ஷாஜஹானின் ஆட்சி, தாராவைப் புத்திச் சாதுரியமாகத் திட்டமிட முடியாதவராகவும் துணிந்து செயல்பட இயலாதவராகவும் ஆக்கிவிட்டது. தோல்வியின் பிடியில் இருந்து வெற்றியைப் பறித்தெடுக்கும் வகையில் திட சித்தத்துடனும் சாகச உணர்வுடனும் செயல்பட முடியாதவராய் முடக்கிவிட்டது. ராணுவத் திறமை, துல்லிய வியூகங்கள் எல்லாம் அவருடைய சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. ஓர் உண்மையான, நிதானமான தளபதியாக இருந்து, எதிர்ப்பு அலைகளையெல்லாம் சமாளிக்கும் திறமை அவரிடம் இல்லை.

முடிவில், போர்க்கலையில் வெகுளியாக இருந்த அவர், அனுபவம் மிகுந்த திறமைசாலியை (ஒளரங்கசீபை) அரியணைப் போரில் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

2. 1657: ஷாஜஹானின் உடல் நலக்குறைவும், அதைத் தொடர்ந்து சாம்ராஜ்ஜியத்தில் எழுந்த குழப்பங்களும்

செப்டம்பர் 6 அன்று சிறுநீர் கடுப்பு, மலச்சிக்கல் காரணமாக ஷாஜஹான் நோய்வாய்ப்பட்டார். ஒரு வாரத்துக்கு அரண்மனை வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சைகள் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. வலி கூடிக் கொண்டே போனது. அன்றாடத் தர்பார் நடவடிக்கைகள் நின்றுபோயின. பேரரசர் பால்கனியில் வந்து மக்களைச் சந்திப்பதைக்கூட நிறுத்திவிட்டார். சில வாரங்கள் கழித்து, ஒருவழியாக மருத்துவர்களின் உதவியால் வலி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், நிலைமையில் லேசான மாற்றம் மட்டுமே தெரிந்தது. எனவே ஆக்ராவுக்குச் செல்ல விரும்பிய அவர், தான் மிகவும் நேசித்த மனைவியின் கல்லறை மஹாலைப் பார்த்தபடியே உயிர் துறக்க முடிவு செய்தார். அக்டோபர் 26இல் ஆக்ரா நகருக்குச் சென்று சேர்ந்தார்.

ஷாஜஹானின் உடல் நிலை மோசமாகியிருந்த காலகட்டத்தில் அவரைத் தாரா ஷுகோ அருகில் இருந்தே கவனித்துக் கொண்டார். மணிமுடியை உடனே கைப்பற்ற வேண்டும் என்ற எந்த மலினமான அவசரமும் அவரிடம் இல்லை. தந்தையை அக்கறையுடனும் அன்புடனும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது. நோய் ஆரம்பித்திருந்த நிலையிலேயே, தான் பிழைப்பது கடினம் என்று உணர்ந்த ஷாஜஹான், மறு உலக வாழ்வுக்கான ஏற்பாடுகளில் இறங்கினார். மிகவும் நம்பிக்கைக்குரிய அரசச் சபையினரையும் பிரதான அதிகாரிகளையும் அழைத்த அவர், தனது இறுதி ஆசையாக ‘இனிமேல் தாரா ஷுகோவே மன்னராக இருப்பார். அவருக்கே நீங்கள் கட்டுப்படவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இருப்பினும் தாரா உடனே ஆட்சிக் கட்டிலில் ஏறிவிடவில்லை. தந்தையின் சார்பில், தந்தையின் பேரிலேயே அவர் உத்தரவுகளைக் கொடுக்க ஆரம்பித்தார். அதேசமயம் தனக்கான ஆதரவை மேலும் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் இறங்கினார்.

தாரா ஷுகோ, ஒளரங்கசீபின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான மீர் ஜும்லாவை வாஸிர் பதவியில் இருந்து நீக்கினார் (செப்டம்பர் இறுதி வாக்கில்). மீர் ஜும்லா, மொஹபத் கான் ஆகியோரைத் தமது படையுடன் தக்காணத்தில் இருந்து டெல்லிக்குத் திரும்பும்படி உத்தரவிட்டார்.

நவம்பர் நடுப்பகுதி வாக்கில், ஷாஜஹானுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நோயின் காரணமாக அதுவரை அவரிடம் சொல்லப்படாமல் இருந்த அரசாங்கத்தின் முக்கிய விஷயங்கள் இப்போது சொல்லப்பட்டன. வங்காளத்தில் ஷுஜா தனக்குத் தானே முடி சூட்டிக்கொண்டு படையுடன் டெல்லி நோக்கி வருவதாகக் கிடைத்த செய்தியும் ஷாஜஹானிடம் சொல்லப்பட்டது. அவருடைய அனுமதியைப் பெற்று சுலைமான் ஷுகோ (தாரா ஷுகோவின் மூத்த மகன்) மற்றும் மிஸா ராஜா ஜெய் சிங் ஆகியோரின் தலைமையில் 22,000 வலிமையான வீரர்களைக் கொண்ட படை ஷுஜாவை எதிர்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விரைவிலேயே குஜராத்தில் இருந்தும் இதே போன்ற அபாயகரமான செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அங்கிருந்த ஷாஜஹானின் மற்றொரு மகனான முராத், டிசம்பர் 5 அன்று தன்னைத் தானே முடிசூட்டிக் கொண்டதோடு ஒளரங்கசீபுடன் கூட்டுச் சேர்ந்துகொள்வதாக அறிவித்தார். எனவே அதே மாத இறுதியில், ஆக்ராவிலிருந்தும் மால்வாவில் இருந்தும் இரண்டு படைகள் அனுப்பப்பட்டன. ஒன்று தெற்கில் இருந்து படையுடன் வரும் ஒளரங்கசீபை எதிர்க்கவும், இன்னொன்று குஜராத் நோக்கிச் சென்று முராதைப் பதவியிலிருந்து நீக்கவும் அனுப்பப்பட்டன.

இந்தப் படைகளின் முதல் அணி மார்வாரின் மன்னர் ஜஸ்வந்த் சிங் தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் மால்வாவுக்கு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். அங்கு ஏற்கெனவே ஆட்சியாளராக இருந்த சிஷ்தா கான் திரும்ப அழைக்கப்பட்டார்.

இரண்டாம் படைக்குத் தலைவராக க்வாசிம் கான் நியமிக்கப்பட்டார். அவரே குஜராத்தின் ஆட்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். ஷாஜஹான் இந்தத் தளபதிகளிடம் ஒரு விஷயம் கேட்டுக்கொண்டார்: ‘என் இளைய மகன்களை உயிருடன் விட்டுவிடுங்கள். முதலில் அவர்களுக்கு நல்லவிதமான ஆலோசனைகளைச் சொல்லி தங்களுடைய பிராந்தியங்களுக்குத் திரும்பி அனுப்பப் பாருங்கள். முடியாவிட்டால் மிதமாக வலிமையைக் காட்டுங்கள். வேறு வழியே இல்லையென்றால் மட்டும் மூர்க்கமாகத் தாக்குங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.

பேரரசருக்கு உடல் நிலை மோசமானபோது ஓரிரு நம்பகமான அமைச்சர்கள் நீங்கலாக வேறு யாரையும் அவரைச் சந்திக்கத் தாரா அனுமதிக்கவில்லை. வங்காளம், குஜராத், தக்காணம் ஆகிய பகுதிகளில் இருந்த தனது சகோதரர்களுக்குச் செல்லும் கடிதங்கள், தூதுவர்கள் அனைவரையும் நிறுத்தினார். நதி வழிப் படகுப் போக்குவரத்தையும் தடுத்தார். அரசச் சபையில் இருந்த, தன் சகோதரர்களுடைய ஆதரவாளர்கள் மீது கண்காணிப்பை அதிகரித்தார். தனக்குத் தெரியாமல் எதையும் அனுப்பக்கூடாதென்று உத்தரவிட்டார். ஆனால் இவையெல்லாம் பெரும் சிக்கலையே கொண்டுவந்தன.

எந்தச் செய்தியும் வந்து சேராததால் தூரப் பகுதியில் இருந்த இளவரசர்களும் மக்களும் ஷாஜஹான் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்துவிட்டனர். அடுத்த அரசர் யார் என்ற குழப்பமும் ஒழுங்கீனமும் உடனே ஆரம்பித்தன. சட்ட விரோதச் சக்திகள் எல்லாம் அராஜகங்களில் ஈடுபடத் தொடங்கினர். விவசாயிகள் வரி கட்ட மறுத்தனர். ஜமீந்தார்கள் தமது எதிரிகளை வீழ்த்த எல்லை தாண்டிப் புறப்பட்டனர். உள்ளூர் நிர்வாகம் முடங்கியது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே தெரியாத அளவுக்குப் பதற்றம் உருவானது. பல இடங்களில் சட்ட ஒழுங்குச் சீர் கெட்டது.

ஷாஜஹானுடைய உடல் நிலை சீராகிவிட்டது என்ற செய்தி ஷாஜஹானின் கையெழுத்தில் ராஜ முத்திரையுடன் சிறிது நாட்களில் வந்து சேர்ந்தது. ஆனால், ‘இதெல்லாம் ஹாஜஹானின் கையெழுத்தைப்போல நகல் எழுத்து எழுதுவதில் கை தேர்ந்த தாரா எழுதியவைதான். ஷாஜஹானின் முத்திரையையும் அவர் கைப்பற்றியிருப்பார்’ என்றே இளவரசர்கள் நினைத்தனர். உடனேயே மூன்று இளைய சகோதரர்களும் பதில் கடிதம் ஒன்றை எழுதினர். அதில், தாம் கேள்விப்பட்ட வதந்திகள் தங்களுடைய மனதை வெகுவாகப் பாதித்துவிட்டதாகவும், உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள நேரில் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

3. முராத் பக்ஷ் குஜராத்தில் முடிசூட்டிக்கொள்கிறார்

ஷாஜஹானின் மகன்களில் மிகவும் இளையவரான முஹம்மது முராத் பக்ஷ், அரசக் குடும்பத்தில் இருந்த கறுப்பு ஆடு. அவருக்கு பல்க், தக்காணம், குஜராத் எனப் பல இடங்களில் ஷாஜஹான் பதவி வழங்கி இருந்தார். ஆனால், அனைத்து இடங்களிலும் அவர் தோல்வியையே தழுவியிருக்கிறார். அறிவில்லாமல் சுகப் போகங்களில் திளைப்பவராகவும், மூர்க்கத்தனம் மிகுந்தவராகவும் இருந்த அவருக்கு வயதுக்கு ஏற்ற பக்குவம் வந்திருக்கவில்லை. தனது ஆசைகளை அடக்கிக் கொள்ளவோ, ராஜ்ய நிர்வாகத்தில் அக்கறையுடன் ஈடுபடவோ அவர் கற்றுக் கொண்டிருக்கவில்லை.

சரியான நபர்களைப் பதவிக்கு நியமிக்கும் திறமையும் அவரிடம் இல்லை. ஆனால், முராத் ஒரு துணிச்சல் மிகுந்த போர் வீரர். களத்தில் கொண்டு நிறுத்தினால் அவர் உடம்பில் ஓடும் தைமூர் ரத்தம் போர் குணம் கொண்டு சீறிப்பாயும். எதிரிகளின் தடைகள் அனைத்தையும் உடைத்தபடி நெருங்குவார். அவரைச் சுற்றிலும் நடக்கும் தாக்குதல்களைக் கண்டு சிறிதும் கலங்காமல் வெறியாட்டம் தரும் கிளர்ச்சியில் திளைப்பார். ஆனால் அவரிடம் ஒரு தளபதிக்கு உரிய குணம் இருக்கவில்லை. இந்தக் குறையானது அவருடைய வீரத்தால் ஈடுகட்ட முடியாத பலவீனமாகவே இருந்தது.

இவருடைய திறமைக் குறைவைப் பற்றித் தெரிந்திருந்த ஷாஜஹான், அலி நகி என்ற திறமையான, நேர்மையான அதிகாரியை வருவாய் அமைச்சராகவும் பிரதான ஆலோசகராகவும் அனுப்பி வைத்திருந்தார்.

அலி நகியின் கண்காணிப்பும் நேர்மையும் மிகுந்த நிர்வாகமானது, இளவரசரின் துதிபாடிகளையும், நெருங்கிய நண்பர்களில் பலரையும் அவருக்கு எதிரியாக்கிவிட்டது. அப்படி வெறுப்புக்கு உள்ளான ஒருவன் அமைச்சருக்கு எதிராகச் சதித் திட்டம் ஒன்றைத் தீட்டினான். அவன், அலி நகியின் கையெழுத்தில் அவருடைய முத்திரையைக் குத்தி ஒரு பொய்க் கடிதத்தை எழுதினான். அதில் அவர் தாரா ஷுகோவுடன் இணைய விரும்புவதாகக் குறிப்பிட்டான். பிறகு இந்தக் கடிதத்தை ஒற்றர் ஒருவரிடம் கொடுத்து தாரா ஷுகோவிடம் கொடுக்கச் சொன்னான்.

அந்த ஒற்றன் முராதின் ரோந்து காவல் படையினரிடம் எப்படியும் மாட்டிக்கொள்வான் என்றே சதித் திட்டம் தீட்டியவன் கணித்திருந்தான். அதேபோலவே அந்த ஒற்றனும் மாட்டிக்கொண்டான்.

இந்த நிகழ்ச்சிகள் அரங்கேறியபோது முராத் தனது அரண்மனைத் தோட்டத்தில் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார். பொழுது விடிவதற்கு முன்பாகவே இந்தக் கடிதம் அவரது கைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் தூங்காமல் களித்திருந்த இளவரசர், கோபம் தலைக்கு ஏறிய நிலையில் அந்த நொடியே அமைச்சர் அலி நகியைத் தன் முன் இழுத்து வரச் சொல்லி உத்தரவிட்டார். அவர் வந்தவுடன், ‘உனக்கு எவ்வளவோ நன்மைகள் செய்தும் இப்படித் துரோகியாகிவிட்டாயே’ என்று சீறிப்பாய்ந்து ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றார்.

ஏராளமான வீரர்களை முராத் தன் படையில் சேர்த்து வந்திருந்தார். அவர்களுக்கு உணவு கொடுக்கவே அதிகப்படியான பணம் தேவைப்பட்டது. எனவே ஷப்பாஸ் கான் என்ற பெயருடைய நபும்சகனின் தலைமையில் 6000 வீரர்களைப் போர் ஆயுதங்களுடன் அனுப்பிய அவர், செல்வ வளம் மிகுந்த சூரத் கோட்டையில் இருந்து பணத்தைப் பெற்று வரச் சொன்னார். காவல் மதில் இல்லாத அந்த நகரானது முராத்தின் வீரர்களால் எளிதில் கைப்பற்றப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது.

சில டச்சுப் பீரங்கி வீரர்களின் உதவியுடன் சூரத் கோட்டையைச் சுற்றி ஷப்பாஸ் கான் சுரங்கங்கள் அமைத்தார். பின் கோட்டையின் ஒரு பக்கச் சுவரை, பீரங்கியின் துணைக் கொண்டு வெடித்துச் சிதற செய்தார். கோட்டையில் இருந்தவர்கள் இதைக் கண்டு அஞ்சி சரணடைந்தனர் (டிசம்பர் 20). இதையடுத்து அங்கிருந்த துப்பாக்கிகள், பொக்கிஷங்கள் என அனைத்தையும் முராத் படையினர் கைப்பற்றினர். அங்கிருந்த இரண்டு செல்வந்தர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக ஐந்து லட்ச ரூபாயையும் கடனாகப் பெற்று வந்தனர்.

இதனிடையில், ஷாஜஹானின் உடல்நிலை மோசமான செய்தி கிடைத்ததுமே முராதும் ஒளரங்கசீபும் நம்பகமான ஒற்றர்களின் மூலம் ரகசியக் கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். இன்னொரு இளவரசரான ஷுஜுவுக்கும் தாராவுக்கு எதிரான தங்களுடைய கூட்டணியில் சேரும்படிக் கடிதம் அனுப்பினர். எனினும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் இடையேயான தொலைவு நீண்டதாக இருந்ததால், மூவராலும் இசைவான கோரிக்கைகளுடன் ஒரு வலுவான, தெளிவான ஒப்பந்தத்தை அமைக்க முடியவில்லை. ஆனால் முராதுக்கும் ஒளரங்கசீபுக்கும் இடையில் உறுதியான ஒரு திட்டம் முடிவானது. ஆரம்பத்தில் இருந்தே முராத், ஒளரங்கசீபின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளத் தீர்மானித்திருந்தார். ஆனால், அவர் மிகவும் அவசரப்படுபவராக இருந்தார்.

சூரத்தில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட அவர், மருவாஜ் உத் தீன் என்ற பட்டப் பெயரையும் சூடிக்கொண்டார் (டிசம்பர் 5). ஆவணமாகக் கிடைத்திருக்கும் கடிதங்களைப் பார்த்தால், முராத் மிகவும் தீவிரமாக, காலில் நெருப்பு பற்றியவரைப்போல் அனைத்தையும் வேக வேகமாகச் செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார் என்பது புரிகிறது. ஒளரங்கசீபோ இதற்கு மாறாக நிதானமானவராகவும் அனைத்தையும் தயங்கித் தயங்கிச் செய்பவராகவும் இருந்திருக்கிறார்.

இதனால் ஷாஜஹான் உடல்நிலை குன்றிய பிறகு இளவரசர்கள் உடனே தெற்கிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று முராத் அறிவுறுத்தினார். தாரா தன் பலத்தைக் கூட்டிக் கொள்வதற்கு முன்பாகவே, அருகிலும் தொலைவிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரரசப் படைகளின் தளபதிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முன்பாகவே அவரைத் தோற்கடித்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒளரங்கசீபோ, ‘எந்தவொரு வில்லங்கமான செயலையும் செய்துவிடாதே. கலக எண்ணத்தை வெளிப்படையாகக் காட்டிவிடாதே. பொறுமையாக இரு. ஷாஜஹான் உண்மையிலேயே இறந்துவிட்டாரா என்பது தெரியும்வரையில் பொய்யான நட்புறவுக் கடிதங்களைத் தாராவுக்கு அனுப்பி வைக்கலாம்’ என்று சொன்னார். பாரசீகர்களையும் உஸ்பெக்குகளையும் ஆஃப்கானிஸ்தானைத் தாக்கச் சொல்லி, தாராவின் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பிவிடுவோம் என்று அறிவுறுத்தினார்.

ஆஃப்கானிஸ்தான் அன்று மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தில்தான் இருந்தது. எனவே பாரசீக மன்னருக்கு முராத் ஒரு கடிதம் அனுப்பினர். அதில், ஷாஜஹானின் மரணம் பற்றிய வதந்தியைக் குறிப்பிட்டு, தனக்கு அவருடைய படை உதவி வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பாரசீக மன்னர் அந்தச் செய்தி உண்மையா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டி சிறிது காலம் காத்திருந்தார்.

இந்தச் சமயத்தில் மொகலாயச் சாம்ராஜ்ஜியத்தை எப்படிப் பங்கிட்டுக்கொள்வது என்ற ஓர் ஒப்பந்தத்தை ஒளரங்கசீப் எழுதினார். அதைக் குர்ரான் மீது ஆணையிட்டு முராதுக்கு அனுப்பி வைத்தார். அதில் சொல்லப்பட்டிருந்தவை:-

அ) பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்து ஆகிய பிராந்தியங்களைச் சுதந்தரமான அரசராக இருந்து முராத் ஆண்டு கொள்ளலாம். எஞ்சிய மொகலாயச் சாம்ராஜ்ஜியம் ஒளரங்கசீபுக்குச் சொந்தமாக வேண்டும்.

ஆ) போரில் கிடைப்பதில் மூன்றில் இரண்டு பங்கு ஒளரங்கசீபுக்கு. மூன்றில் ஒரு பங்கு முராதுக்கு.

இந்தக் கடிதத்துக்குப் பிறகு தயாரிப்பு வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்ட முராத், பிப்ரவரி 25, 1658 அன்று அஹமதாபாத்தில் இருந்து புறப்பட்டார். ஏப்ரல் 14 அன்று மால்வாவின் திபல்பூரில் இருந்த ஒளரங்கசீபின் படையுடன் இணைந்துகொண்டார்.

இந்த ஒப்பந்தங்கள் ஒளரங்கசீப் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ளது (அதாப் ஐ ஆலம்கிரி: பக். 78). அவருடைய அதிகாரி அஹில் கான் ராஸி எழுதிய வரலாற்றிலும் (பக். 25), தாஸ்கிராத் அஸ் சக்ஃபிதலா ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது. இவை, மார்க்கத்தில் இருந்து விலகிய தாராவை வீழ்த்தியபின் ஒட்டு மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் முராதுக்குக் கொடுக்க ஒளரங்கசீப் தயாராக இருந்தார் என்றும், மெக்காவுக்குத் தார்விஷாக (ஹஸரல்ஜி) போகத் தீர்மானித்திருந்தார் என்றும் பெர்னியர் எழுதியதைத் தவறு எனத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

4. வாரிசு உரிமைப் போரில் ஒளரங்கசீபின் பதற்றங்களும் கொள்கைகளும்

அக்டோபர் 4, 1657 அன்று பீஜப்பூர் போரிலிருந்து விலகிய நாள் தொடங்கி, ஜனவரி 25, 1658இல் ஹிந்துஸ்தானின் அரியணையைக் கைப்பற்ற டெல்லியை நோக்கிப் புறப்பட்ட நாள் வரையில் ஒளரங்கசீப் மிகவும் பதற்றமும் நெருக்கடியும் நிறைந்த காலகட்டத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அவரால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள் எல்லாம் வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தன.

அவருடைய அன்றைய நிலை பெரிதும் சமாளிக்க முடியாததாகிக் கொண்டிருந்தது. எதிர்காலமோ மிகவும் அபாயகரமானதாகத் தெரிந்தது. இப்போது பார்க்கும்போது இத்தகைய பெரிய பிரச்சனைகளையும், சிக்கலான நெருக்கடிகளையும் அவர் அசாத்தியமாகத் தாண்டியதால்தான், அவருடைய நிதானத்தை, நிலைமையைக் கணிக்கும் திறமையை, மனிதர்களை நிர்வகிக்கும் திறமையை, ராஜ தந்திரத்தை நாம் போற்றிப் பாராட்டுகிறோம் என்பது புரிகிறது.

‘பீஜப்பூர் சுல்தானுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். தக்காணத்தில் இருந்து படைகளைத் திரும்ப அனுப்பிவிடவேண்டும்’ என்ற பேரரசர் அனுப்பிய உத்தரவு ஒளரங்கசீபுக்குக் கிடைத்தது. இது, நீண்ட காலமாக நடந்து வந்த, அதிகச் செலவுகளை இழுத்துவிட்ட பீஜப்பூர் போரின் வெற்றிக்கனிகளை அவர் சுவைக்கும் முன்பே, அவரிடம் இருந்து பறித்துக்கொள்ளும் அபாயத்தை உண்டாக்கியது.

எனவே ஒப்பந்தத்தின் தீர்மானங்களை முழுமையாக அடையும் வகையில் துணிந்து செயல்பட ஒளரங்கசீப் ஒரு திட்டம் தீட்டினார். அதை, பீஜப்பூர் படையினர் தமது சமீபத்திய தோல்விகளில் இருந்து எழுவதற்கு முன்பாகவே நிறைவேற்றத் தீர்மானித்தார். மொகலாயப் பேரரசின் பலவீனங்களும் திசைதிருப்பல்களும் வெளியே தெரியவருவதற்கு முன்பாகவே செய்து முடிக்கத் திட்டமிட்டார்.

ஆனால், பீஜப்பூர் தொடர்பான இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலும், தெற்கில் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதிலும் ஒளரங்கசீபுக்குச் சில பின்னடைவுகளும் இருந்தன. டெல்லி அரியணையைக் கைப்பற்ற அவர் எவ்வளவு தாமதிக்கிறாரோ அந்த அளவுக்குத் தாராவுக்கு தக்காணத்திலிருந்து தன் தளபதிகளைத் திரும்ப அழைத்துக்கொள்வதற்கான கால அவசகாசம் கிடைத்துவிடும். ஒளரங்கசீப் ஹிந்துஸ்தானின் தலைமையகம் நோக்கிப் படையெடுக்க எந்த அளவுக்குக் காத்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு அருகிலும் தூரப் பகுதிகளிலும் இருக்கும் அதிகாரிகளின் ஆதரவையும் மக்களின் ஆதரவையும் தாரா பெற்று விட முடியும். தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் அவரால் அதிகரித்துக்கொள்ள முடியும். அவ்வாறு நேர்ந்தால் தாராவால் ஒளரங்கசீபின் திட்டங்களை எளிதில் சமாளித்துவிட முடியும்.

மாறாக, ஒளரங்கசீப் தனது படைகளை ஒன்று திரட்டிகொண்டு வாரிசுரிமைப் பிரகடனத்தை வெளிப்படையாக அறிவித்தபடி வடக்கு நோக்கிப் படையெடுத்து வந்தால் தாரா ஷுகோவை நிச்சயம் தடுத்து நிறுத்திவிடலாம். பேரரசுடன் தன் உறவை வெளிப்படையாக முறித்துக்கொண்டால் தாரா ஷூகோவை அரியனை ஏற விடாமல் செய்துவிடலாம். ஆனால், அவ்வாறு செய்யும்பட்சத்தில் பரேந்தாப் பகுதியைப் பெறும் வாய்ப்பை அவர் இழக்க நேரிடும். பீஜாப்பூரிடமிருந்து கிடைக்கும் பிணைத்தொகையும் அவருக்குக் கிடைக்காமல் போய்விடும். அதோடு தென் பகுதியில் இருக்கும் ஒளரங்கசீபின் எதிரிகள் தலைதூக்குவதற்கு அவரே வாய்ப்பு அமைத்துக்கொடுத்ததுபோல் ஆகிவிடும். தக்காணத்தில் அவர் இரண்டு ஆண்டுப் போரில் பெற்றவை அனைத்தையும் இழக்க நேரிடும். இப்படிப் பல சிக்கல்கள் இருந்தன.

அதாப் ஐ ஆலம்கிரியில் இடம்பெற்றுள்ள ஒளரங்கசீபின் கடிதங்களில் இருந்து நமக்குப் பல முக்கியமான விஷயங்கள் தெரிய வருகின்றன. அந்தக் கடிதங்களில், அவர் பீஜாப்பூருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது ஏற்பட்ட தாமதம், வாக்களிக்கப்பட்ட பிராந்தியங்களையும் பிணைத் தொகைகளையும் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள், முதலில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஒவ்வொன்றாக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது, எதுவுமே கிடைக்காது என்ற நிலையில் தென் பகுதியை அப்படியே மறந்துவிட்டு வட இந்துஸ்தானை நோக்கித் தன் கவனத்தைக் குவிப்பதற்கு அவர் முடிவு செய்தது ஆகியவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

கல்யாணி பகுதியிலிருந்து அக்டோபர் 4, 1657 அன்று புறப்பட்ட ஒளரங்கசீப், ஐந்து நாட்களில் பிதார் பகுதியைச் சென்று சேர்ந்தார். அங்குள்ள கோட்டை முறையாகப் பழுதுபார்க்கப்பட்டு, அதில் போதிய காவலும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்தவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தன. பிறகு அதே மாதம் 18ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்ட அவர், நவம்பர் 11 அன்று ஒளரங்காபாத் சென்று சேர்ந்தார். பிதாரில் இருந்து அவர் புறப்பட்டதும் தக்காண ராஜ்ஜியங்களில் பெரும் கொண்டாட்டம் பிறந்தது. இங்குதான் அவரால் கைப்பற்றப்பட்டு கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாத ராஜ்ஜியங்கள் இருந்தன.

ஒளரங்கசீப், பீஜாப்பூர் சுல்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பரேந்தா கோட்டையைப் பெற மீர் ஜும்லாவை (செப்டம்பர் 28) அனுப்பிவைத்தார். ஆனால், அவர் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டும் பரேந்தாவையும் பிணைத் தொகையையும் பெற முடியவில்லை. அந்த வாய்ப்புகள் மங்கிக்கொண்டே போயின. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப்போன மீர் ஜும்லா ஜனவரி 1, 1658இல் ஒளரங்காபாதுக்குச் சென்று சேர்ந்தார்.

தாரா ஷுகோவுக்குத் தக்காணத்து மொகலாய அதிகாரிகளிடமிருந்து எந்தக் கடிதமும் போகாமல் தடுக்கும் நோக்கில் நர்மதை நதியில் பயணம் செய்யும் அத்தனை பரிசல்களையும் கைப்பற்ற அக்டோபர் 28இல் ஒளரங்கசீப் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதில் நிறைய அபாயங்கள் இருந்தன. ஷாஜஹானின் உடல்நிலை பற்றிப் பேரரசின் சபையிலிருந்து கிடைத்த தகவல்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்தன. உண்மை நிலை என்ன என்பது தெரியவே இல்லை. பல வாரங்கள் ஒளரங்கசீப் பெரும் குழப்பத்தில் இருந்தார். அவருடைய ஆதரவாளர்களின் நிலையும் அப்படியே இருந்தது.

ஷாஜஹான் இறந்துவிட்டது உறுதியாகத் தெரியாமல் கலகக் கொடியை உயர்த்தவேண்டாம் என்பதில் ஒளரங்கசீப் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தார். ஆனால் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவர் விரைந்து ஒரு முடிவை எடுக்கும்படி நிர்பந்தித்தன. தாரா ஷுகோ தென் பகுதி தொடர்பாக என்ன தீர்மானம் வைத்திருந்தார் என்பது அப்போது நன்கு புலனாகி இருந்தது. பலவீனமாக இருந்த ஷாஜஹானைக் கொண்டு குஜராத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த முராதை நீக்கிவிட்டு, அவரிடம் ஒளரங்கசீபின் பேரார் பகுதியின் நிர்வாக அதிகாரத்தைத் தர ஏற்பாடு செய்திருந்தார். இதன்மூலம் இரு சகோதரர்களுக்கிடையே மோதலை உருவாக்கலாம் எனத் தாரா திட்டமிட்டிருந்தார்.

தெற்கில் இருந்த தன்னுடைய இரண்டு சகோதரர்களுக்கும் எதிராக இரண்டு படைகளையும் தாரா அனுப்பியிருந்தார். மால்வா பகுதியில் இருந்த ஷிஸ்தா கானை (ஒளரங்கசீபைத் தீவிரமாக ஆதரிப்பவர்) டெல்லிக்கு வரும்படி அவர் அழைத்திருந்தார் (டிசம்பர் வாக்கில்). இன்னொரு பக்கம் ஒளரங்கசீபை விட்டுவிட்டு வரும்படி மீர் ஜும்லாவுக்கும் டெல்லியில் இருந்து கடிதம் வந்திருந்தது. அதை மறுத்தால் நிச்சயம் கலகமாகவே பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகி இருந்தது. இதுபோன்று பல கடிதங்கள் ஒளரங்கசீபின் ஆதரவாளர்களுக்கு வந்து சேர்ந்தன.

5. அரியணையைக் கைப்பற்ற ஒளரங்கசீபின் முன் தயாரிப்புகள்

ஒளரங்கசீப் மன்னராகப் போகிறாரா, இல்லை சுதந்தரமாக, சிறைக்குச் செல்லாமல் வாழப்போகிறாரா என்பது தொடர்பாக உறுதியாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணம் வந்தது. என்ன செய்ய வேண்டும் என்பதை ஜனவரி 1658 வாக்கில் ஒளரங்கசீப் தெளிவாகத் தீர்மானித்தார். உடனேயே அதிவேகமாக, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார்.

முதலில் மீர் ஜும்லாவுடன் ரகசிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு அவரைப் போலியாகச் சிறைப்படுத்தினார். அவரை தௌலதாபாத் கோட்டையில் சிறை வைத்தார். அதன்பின் அவருடைய சொத்துகள், அற்புதமான பீரங்கிகள் அனைத்தையும் சாம்ராஜ்ஜியத்தின் பெயரில் கைப்பற்றுவதாக அறிவித்தார். மீர் ஜும்லா இரண்டு தக்காணச் சுல்தான்களுடன் ரகசியமாகக் கூட்டுச் சேர்ந்துகொண்டு பேரரசருக்கு எதிராகச் செயல்படுகிறார் என்ற பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துத் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

அடுத்ததாக ஷாஜஹானுக்கும் புதிய வாஸிர் ஜாஃபர் கானுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘ஷாஜஹானின் உடல்நிலை தொடர்பாகக் கேள்விப்பட்ட வதந்திகளால் என் மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. ஷாஜஹானின் கீழ்படியும் மகனாக அவரைச் சந்திக்க ஆக்ராவுக்குப் புறப்பட்டுச் செல்கிறேன்’ என்று குறிப்பிட்டார். அதோடு தாராவிடமிருந்து தந்தையை விடுவித்துச் சாம்ராஜ்ஜியத்துக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும் குழப்பத்தையும் நீக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

போர் தவிர்ப்புப் பிணைத் தொகையில் இருக்கும் பாக்கியை உடனே தரும்படி குதுப் ஷாவுக்கு ஒளரங்கசீப் பல கடிதங்கள் எழுதினார். கோல்கொண்டா கோட்டையில் நிறுத்தப்பட்ட மொகலாயப் படைகளிடம், ‘சுல்தானை இதமாக நடத்துங்கள். நான் தக்காணத்திலிருந்து டெல்லிக்குச் செல்லும் காலத்தில் மொகலாயப் பேரரசுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் சுல்தான் நடந்துவிடாதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக் கேட்டுப் பல கடிதங்களை அனுப்பினார்.

இதன்பின் பீஜாப்பூர் பாரி ஷஹிபாவுக்கு (ராஜ மாதாவுக்கு) வாழ்த்துப் பாக்களையும், பரிசுகளையும் அனுப்பிய ஒளரங்கசீப், பிணைத் தொகைப் பாக்கியை உடனே தர ஏற்பாடு செய்யும்படியும், தான் இல்லாதபோது பீஜாப்பூரில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர், அடில் ஷாவுக்கு ஆர்வமூட்டும் சலுகை ஒன்றையும் ஒளரங்கசீப் தந்தார்: விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள். அவ்வாறு செய்யும்பட்சத்தில் (1) பரீந்தா கோட்டை, அதைச் சார்ந்து இருக்கும் பகுதியான கொங்கன், மறைந்த அடில் ஷாவுக்குத் தரப்பட்ட கர்நாடகப் பகுதி, மொகலாயப் பேரரசுடன் சேர்க்கப்பட்ட வாங்கி மஹால் இவையெல்லாம் முன்பு போலவே உங்கள் வசம் தரப்படும். (2) நீங்கள் தருவதாக ஒப்புக்கொண்ட பிணைத்தொகையான ஒரு கோடி ரூபாயில் முப்பது லட்சம் தந்துவிட்டீர்கள். இந்த ராஜ்ஜியத்தைப் பத்திரமாகக் கவனித்துக்கொள்ளுங்கள். இதன் நிர்வாகத்தை மேம்படுத்துங்கள். இங்கிருக்கும் சில கோட்டைகளைக் கைப்பற்றியிருக்கும் தளபதி சிவாவை வெளியேற்றுங்கள். 10,000 குதிரைப்படை வீரர்களை அனுப்பிவையுங்கள். பாணகங்கா வரையிலான ராஜ்ஜியம் முழுவதையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையெல்லாம் செய்துவந்த அதே நேரம் தலைநகரில் இருந்த அரச சபையினரிடமும், மால்வா போன்ற பகுதிகளில் இருந்த முக்கிய அதிகாரிகளிடமும் ரகசியப் பேச்சு வார்த்தைகளிலும் ஒளரங்கசீப் ஈடுபட்டார்.

ஷாஜஹானின் நான்கு மகன்களில் ஒளரங்கசீபுக்கு மட்டுமே திறமையும் அனுபவமும் இருந்தது. சுய நலமியான நிலப்பிரபுக்கள், அதிகாரிகள் அனைவரும் அவரையே அடுத்த பாதுஷாவாகப் போகிறவராக மதித்தனர். எனவே அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் தமது எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினர். அவருக்கு ஆதரவாகச் செயல்படுவோம் என்று ரகசிய உத்தரவாதங்கள் தந்தனர்.

உடனே புதிய வீரர்களைப் படையில் சேர்க்கும் பணி வேகமாக நடைபெறத் தொடங்கியது. வெடிமருந்து, கந்தகம், ஈயம் ஆகியவை பெருமளவில் வாங்கப்பட்டன. தக்காணக் கோட்டைகளில் இருந்த வெடி மருந்து, பீரங்கிகள் எல்லாம் முன்பே டெல்லி நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஒளரங்கசீபின் படை இப்போது 30,000 வீர்ர்களைக் கொண்டதாகப் பிரமாண்டமாகியிருந்தது. இங்கிலாந்து, ஃபிரெஞ்சு வீரர்களால் இயக்கப்பட்ட மீர் ஜும்லாவின் அபாரமான பீரங்கிப் படையும் அவர் வசம் வந்திருந்தது.

ஆட்களின் எண்ணிக்கை, போர்க்கருவிகளின் எண்ணிக்கையைவிட ஒளரங்கசீபிடமிருந்த அதிகாரிகளின் திறமை மிக அதிகமாக இருந்தது. தக்காணத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், அவர் மிகவும் விசுவாசமான சேவகர்கள் கொண்ட குழுவை உருவாக்கி இருந்தார். அவர்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருந்தனர். பலர் அவர் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்களாக இருந்தனர். வாரிசுரிமைப் போரில் அவர்கள் அவருக்கு முழு ஆதரவு கொடுத்தனர்.

திவான் முர்ஹித் குயில் கான், போர் வீரரும் நம்பகமான ஆலோசகருமான ஷேக் மீர், அந்தரங்க உதவியாளரான அஹில் கான் ராசி, சுயச் சிந்தனையற்றவரும் நம்பகமான செயலருமான க்பில் கான், உற்சாகம் மிகுந்த ராணுவப் படை ஆய்வாளரான கான் இ ஜமான், அனுபவம் மிகுந்த படை வீரரும் உயர் நிலை வஸிர் கான் எனப் பதவி உயர்வு பெற்றவருமான முஹம்மது தாஹிர், விசுவாசமான இஸா பெய்க், உயர் குடியில் பிறந்தவரும் அனுபவம் மிகுந்தவருமான ஷம்சுத்தீன் முக்தார் கான், எல்லாருக்கும் மேலாக போர்த்திறமையிலும் நிர்வாக ஆலோசனைகளிலும் தேர்ந்து விளங்கிய மீர் ஜும்லா என ஒளரங்கசீபுக்கு ஒரு வலுவான திறமையான குழு இருந்தது. பைகானர் பகுதியின் ராவ் கரன், புந்தேலா ராஜ்ஜியத்தின் சுபா கரன், தாம்தேராவின் ராஜா இந்திரமணி என மிகவும் விசுவாமான இந்து ஆதரவாளர்களும் அவருக்கு இருந்தனர்.

தக்காணத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்பாக அந்தக் பகுதியின் மீதான தன்னுடைய கட்டுப்பாடு, தான் இல்லாத நேரத்திலும் நிலைத்திருக்க முயற்சிகள் எடுத்தார். ஒளரங்காபாதில் இளவரசர் முஸாமை விட்டுச் சென்றார். அவருக்கு உதவியாக இரண்டு உயர் நிலை அதிகாரிகளையும் வலுவான படையையும் விட்டுச் சென்றார். தனது அந்தப்புரத்தை அருகில் இருந்த தௌலதாபாத் கோட்டைக்கு இடம் மாற்றினார்.

இறுதியாக, பிப்ரவரி 5, 1658இல் ஒளரங்காபாதில் இருந்து வாரிசு உரிமைப் போருக்கு ஒளரங்கசீப் புறப்பட்டார். 18ஆம் தேதியன்று பர்ஹான்பூருக்குச் சென்று சேர்ந்த அவர், தன் படைகளை ஒருங்கிணைக்கவும், பிற தயாரிப்புகளுக்காகவும் அங்கு ஒரு மாதக் காலம் தங்கினார். மார்ச் 20இல் பர்ஹான்பூரில் இருந்து புறப்பட்டவர், ஷாஜஹானுக்கு விசுவாசமாக நடந்துகொண்ட தன் மாமனார் ஷா நவாஸ் கானைக் கைது செய்து சிறையிலடைத்தார் (மார்ச் 26). அக்பர்பூர் கரையோரமாக நர்மதை நதியைக் கடந்து சென்றார். அங்கு அவருக்கு எதிர்ப்பு எதுவும் இருந்திருக்கவில்லை (ஏப்ரல் 3).

உஜ்ஜைனி நோக்கி முன்னேறிச் சென்றவர் அங்கிருந்து 26 மைல் தெற்கே இருந்த திபால்பூரைச் அடைந்தபோது மேற்குத் திசையில் சிறிது மைல் தொலைவில் முராத் முகாமிட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டார். அடுத்த நாளன்று, சகோதரர்கள் இருவரும் திபால்பூரில் சந்தித்துக் கொண்டனர். ஜஸ்வந்த் ஒரு நாள் பயணத் தொலைவில் இருந்தது. மாலையில் உஜ்ஜைனிக்கு 14 மைல் தென் மேற்கில் சம்பால் நதியின் கிளை நதியான கம்பீரா நதியின் மேற்குக் கரையில் இருந்த தர்மத் கிராமத்தில் இளவரசர்கள் முகாமிட்டனர்.

மறுநாள் மொகலாயப் பேரரசுக்கான வாரிசு உரிமைப் போர் ஆரம்பித்தது.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *