அத்தியாயம் 4
வாரிசு உரிமைப் போர்: ஒளரங்கசீபின் வெற்றி
1. ஜஸ்வந்த் சிங்கும் அவருடைய சிரமங்களும்
பிப்ரவரி, 1658இல் ஒளரங்கசீப் தன் படையுடன் கிளம்பி உஜ்ஜைனியை வந்தடைந்த வரையிலும் ஜஸ்வந்த் சிங்குக்கு ஒளரங்கசீபின் நோக்கங்கள், நகர்வுகள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இளவரசர் அந்த அளவுக்கு நர்மதை நதி வழிப் பயணம், சாலை மார்க்கப் பயணம் இரண்டையும் மிகுந்த கண்காணிப்பில் வைத்திருந்தார். ஒளரங்கசீப் மால்வாவுக்கு வந்து உஜ்ஜைனி நோக்கி விரையத் தொடங்கிய பின்னரே அவரைப் பற்றிய செய்தி ஜஸ்வந்துக்குக் கிடைத்தது.
குழம்பிப் போன ஜஸ்வந்த், தென் திசையிலிருந்து எதிரிகள் வருவதைத் தடுக்க, உஜ்ஜைனிக்குத் தென் மேற்கில் 14 மைல் தொலைவுக்கு முன்னேறிச் சென்று தர்மத் பகுதியில் முகாமிட்டார். இப்போது வேறொரு திடுக்கிடும் செய்தியும் அவருக்குக் கிடைத்தது. அது, ‘ஒளரங்கசீபுடன் முராதும் இணைந்துவிட்டார் (ஏப்ரல் 14). இன்னும் ஒரு நாளில் இருவரும் அவர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்’ என்று.
பேரரசரின் கொடியைத் தாங்கியபடி வந்திருக்கும் தன்னைப் பார்த்துக் கலகக்காரர்கள் பயந்து விடுவார்கள், தத்தமது பிராந்தியத்துக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் ஜஸ்வந்த் மால்வாவுக்கு வந்திருந்தார். லேசாகப் படை பலத்தைக் காட்டினாலே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், எதிரிகள் இப்போது மிக மோசமான முடிவை எட்டும் வரை கடுமையாகப் போராடத் தயாராகி வந்திருக்கிறார்கள் என்ற செய்தி காலம் கடந்துதான் அவருக்குத் தெரிய வந்தது.
‘இரண்டு இளவரசர்களையும் பெரிதும் காயப்படுத்தி விடாமல் சொந்தப் பிராந்தியத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். வேறு வழியே இல்லை என்றால்தான் கடுமையாகத் தாக்கவேண்டும்’ என்று ஷாஜஹான் வேறு உத்தரவிட்டிருந்தார். அது ஏற்கெனவே ஜஸ்வந்தின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தது. ஒளரங்கசீப் தன் மனம் சொல்வதைத் துணிந்து செயல்படுத்தும் நோக்கில் இருந்தார். ஜஸ்வந்தோ ஆக்ராவிலிருந்து பேரரசர் தந்த உத்தரவின்படி நடந்துகொள்வதா, மால்வாவின் கள நிலவரத்துக்கு ஏற்ப நடந்துகொள்வதா என்பது புரியாமல் மிகவும் குழம்பிப் போயிருந்தார். எதிரியின் நடவடிக்கைக்கு ஏற்பவே தன்னுடைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
ஜஸ்வந்தின் படை போதிய ஒற்றுமை இல்லாமல் முரண்பாடுகளின் மூட்டையாக இருந்தது. அவருடைய படையில் இருந்த ராஜபுத்திரக் குலங்கள் எல்லாம் தமக்குள்ளேயே யார் பெரியவர், யாருக்கு முக்கியத்துவம் அதிகம் என்ற மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். ஹிந்துக்களுக்கும் முஹமதியர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இயல்பாகவே இருந்தது. ஒரே தளபதியின் கீழ் ஒற்றை இலக்குடன் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்துப் போரிடுவது சாத்தியமற்ற விஷயமாகவே இருந்தது. காசிம் கானுக்கான உத்தரவு, ஜஸ்வந்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதானே ஒழிய அவருக்குக் கீழ்நிலையில் இருந்து செயல்பட வேண்டும் என்பது அல்ல. எனவே பேரரசரின் படையில் யார் தலைவர் என்ற குழப்பம் இருந்தது.
அதோடு சில முஸ்லிம் அதிகாரிகள் ரகசியமாக ஒளரங்கசீபுடன் நட்புறவில் இருந்தனர். இந்தப் போரில் பேரரசரின் படையில் இருந்த 254 ராஜபுத்திரத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், ஒரே ஓர் இஸ்லாமியத் தளபதி மட்டுமே கொல்லப்பட்டார். காசிம் கானும் அவருடைய ஆட்களும் மிகவும் பாதுகாப்பான நிலையில் இருந்தபடியே போரிட்டனர். ராஜபுத்திரர்களே முழுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இறுதியாக, ஒளரங்கசீபின் போர் திறமைக்கு ஜஸ்வந்தால் துளிகூட ஈடுகொடுக்க முடியவில்லை. ஜஸ்வந்தின் பிழையான வியூகங்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவருடைய அனுபவமின்மையையும் பின் விளைவுகளை யூகித்துச் செயல்படத் தெரியாத தன்மையையுமே எடுத்துக்காட்டின. அவருக்குத் திறமையாகப் போரிடவும் தெரியவில்லை. படை வீரர்கள் அனைவரும் நெரிசலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவரது குதிரைப் படையினரால் சுதந்தரமாகப் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்த இயலவில்லை. உதவி தேவைப்பட்ட படைப் பிரிவுகளுக்கும் அவரால் உரிய நேரத்தில் எதையும் செய்து கொடுக்க இயலவில்லை.
போர் ஆரம்பித்த நொடியிலேயே ஒட்டுமொத்தப் படைகளுடைய கட்டுப்பாடும் அவருடைய கையைவிட்டுப் போய்விட்டு இருந்தன. ஒட்டுமொத்த படைகளின் தளபதியாக இல்லாமல், அருகில் இருந்த ஓரிரு படைப்பிரிவுகளின் சாதாரணத் தலைவன் போலவே அவரால் செயல்பட முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் துப்பாக்கி, பீரங்கிப் படைகளை வைத்து மேற்கொண்ட ஒரு திட்டம் மிகப் பெரிய பிழையாகிப் போனது.
அவர், துப்பாக்கிப் படைகளை வீழ்த்திவிட்டு எதிரியின் அடுத்தகட்டப் படையினருக்கு அருகில் சென்று மூர்க்கத்தனமாகத் தாக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். முதல் தாக்குதலின்போதான சில நிமிடத் துப்பாக்கிச் சூடுகளைக்கூட பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்று தாக்குவதற்குத் தீர்மானித்திருந்தார். ஆனால் போர் ஆரம்பித்ததும் ஜஸ்வந்தின் படையினரால் தரையில் வெட்டியிருந்த பதுங்குக் குழிகள், பள்ளங்களைத் தாண்டிச் சுதந்தரமாகக் கிளை பிரிந்து, பாய்ந்து செல்ல முடியவில்லை. இதனால் எதிரிகளின் துப்பாக்கி, பீரங்கிகளின் தாக்குதலில் அவர்கள் நிலைகுலைய ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்குக் கிளை பிரிந்து சென்று சுற்றி வளைக்க நேரமே கிடைக்கவில்லை.
இரண்டாவதாக, பீரங்கிப் படையையும் துப்பாக்கிப் படையையும் சுற்றி வளைத்துத் தாக்க முயன்ற ராஜபுத்திர வீரர்களையும் ஒளரங்கசீபின் ஃப்ரெஞ்சு மற்றும் ஆங்கிலேயப் பீரங்கிப் படை வீரர்கள் தமது பீரங்கிகளை எளிதில் திருப்பிவைத்துத் துவம்சம் செய்துவிட்டனர். உண்மையில் வாள், ஈட்டி போன்ற பழங்கால ஆயுதங்களுக்கும் பீரங்கி, துப்பாக்கி, வெடி மருந்து போன்ற நவீன ஆயுதங்களுக்கும் இடையிலான போராக அது இருந்தது. பீரங்கிப் படை குதிரைப் படையை எளிதில் வீழ்த்திவிட்டது.
2. தர்மத் பகுதியில் நடைபெற்ற போர்
இரண்டு படைகளிலும் சுமார் 35,000 வீரர்கள் இருந்தனர். எனினும் ஒளரங்கசீபின் படை வீரர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருந்தது. கூடுதலாக அவர்களிடம் நவீன ஆயுதங்களும் இருந்தன.
ஏப்ரல் 15 அதிகாலையில் சூரிய உதயம் ஆனதைத் தொடர்ந்து இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. ஒளரங்கசீபின் படை மிகவும் நிதானமாக, மெதுவாக பேரரசரின் படைகளை எதிர்கொண்டது. போர் தொடங்கியதும் ராஜபுத்திர வீரர்களுக்குப் பாய்ந்து முன்னேறச் சிறிதும் வாய்ப்பு தராமல் துப்பாக்கி, பீரங்கிகளினால் தாக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நிமிடமும் ராஜபுத்திரர் படையில் மரணத்தின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தபடியே இருந்தது.
இருப்பினும் முகுந்த சிங் ஹதா, ரத்தன் சிங் ரதோர், தயாள் சிங் ஜாலா, அர்ஜுன் சிங் கௌர், சஜன் சிங் சிசோடியா போன்ற படைத்தளபதிகள் ‘ராம்… ராம்’ என்று வீர முழக்கம் எழுப்பியபடியே புலிகளைப்போல் பாய்ந்து தாக்கினர். ராஜபுத்திர வீரர்கள் பெரு வெள்ளமாகப் பாய்ந்து ஒளரங்கசீபின் பீரங்கித் தாக்குதலை எதிர்கொண்டனர். நெற்றிப் பொட்டுக்கு நேராகச் சீறிப் பாய்ந்த குண்டுகள் ராஜபுத்திரப் படையில் பலரைக் கொன்று குவித்தது. எனினும் ராஜபுத்திரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் அந்த எதிர்ப்பை ஒருவழியாகச் சமாளித்துவிட்டனர். பீரங்கிப் படையின் தலைவர் முர்ஷித் க்யுல்கான் கடுமையாகப் போராடிய பின் வீழ்த்தப்பட்டார். அவருடைய படைப் பிரிவு கலகலத்தது. ஆனால் ராஜபுத்திரப் படையினர் பீரங்கிகளைச் சேதப்படுத்தியிருக்கவில்லை. பெருவெள்ளம்போல பாய்ந்து வந்த இந்தத் தாக்குதலைப் பார்த்ததும் பீரங்கி, துப்பாக்கிப் படையினர் வேகமாக ஓடித் தப்பிவிட்டனர். ராஜபுத்திர வீரர்கள் போனபின் அவர்கள் மீண்டும் ஒன்று கூடினர்.
இதற்கிடையில், துப்பாக்கிப் படையை வென்ற ராஜபுத்திர வீரர்கள் ஒளரங்கசீபின் முன்னணிப் படையை நோக்கிப் பாய்ந்தனர். இங்கு நேருக்கு நேர் மோதும் மரபான போர்முறை சிறிது நேரம் நீடித்தது. இதிலும் ராஜ புத்திரர்கள் வெற்றி பெற்று ஒளரங்கசீபின் முன்னணிப் படையை ஊடுருவி முன்னேறினர். அன்றைய போரின் மிக முக்கியமான தருணம் இது. ராஜபுத்திர வீரர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால் ஒளரங்கசீபின் கதை முடிந்துவிடும் என்ற நிலை உருவானது.
ஆனால் மொகலாய இளவரசர், இந்த முன்னணி வரிசையில் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8000 வீரர்களை முழுப் பாதுகாப்புக் கவசங்கள் அணிவித்து நிற்க வைத்திருந்தார். இந்த வீரர்களின் நம்பகத்தன்மை வாய்ந்த தளபதிகள் எல்லாம் யானை மேல் ஆயுதங்களுடன் மலைபோல், யாரும் தகர்க்க முடியாதபடி நின்றுகொண்டிருந்தனர். ராஜபுத்திரர் படையானது இந்த முன்னணி அடுக்கைச் சுற்றி வந்து தாக்க முயன்றது. இந்த இடத்தில்தான் போரின் முடிவு எழுதப்பட்டது: ‘செம்மலர் படுகைபோல் நிலமெல்லாம் ரத்த வண்ணம் பூசப்பட்டது’. ஒளரங்கசீபின் பிரதான படையுடன் மோதியபோது ராஜபுத்திரப் படையின் தாக்குதல் ஒருமுகப்பட்டதாக இல்லாமல் பலவீனமாக இருந்தது.
எதிரியின் முன்னணி வரிசைக்குச் சென்று சேர்ந்திருந்த வீரம் மிகு ராஜபுத்திரப் படைக்கும் அவர்களுடைய துணைப்படைக்கும் போதிய உதவிகள் கிடைத்திருக்கவில்லை. காசிம் கானின் தலைமையில் இருந்த மொகலாயப் பேரரசரின் படைகள் இவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. இப்படியாக ஜஸ்வந்தின் படைவீரர்களின் பாய்ச்சலுக்குப் பின் துணையாக யாரும் வந்திருக்காத நிலையில், ஏற்கெனவே விலகிச் சென்றிருந்த ஒளரங்கசீபின் படைகள் இப்போது மீண்டும் ஒருங்கிணைந்து இவர்களைச் சுற்றி வளைத்துவிட்டன. இதனால் ராஜபுத்திர வீரர்களுக்குப் பின்வாங்கித் தப்பிக்கவும் முடியவில்லை.
போர்க்கள நிலைமையை நன்கு புரிந்துகொண்டிருந்த ஒளரங்கசீப், தேவைப்படும்போது பயன்படுத்தலாம் என்று நிறுத்தி வைத்திருந்த படையுடன் பாய்ந்து வந்து ஒரு பெரிய சுவர்போல் அரணை எழுப்பினார். ராஜபுத்திரப் படைகள் ஒளரங்கசீபின் மைய முன்னணிப் படையுடன் மோதிக் கொண்டிருந்தபோது அதன் இட வலப் படைகளின் தளபதிகளாக இருந்த ஷேக் மீரும், சாஃப் ஷிகன் கானும் ராஜபுத்திரப் படைகளை இரு பக்கங்களில் இருந்தும் தாக்கத் தொடங்கினர். இதில் மாட்டிக்கொண்ட ஆறு ராஜபுத்திரத் தளபதிகளும் கொல்லப்பட்டனர். இப்போது முன்பக்கம், பக்கவாட்டுப் பகுதிகள் என மூன்று பக்கமும் எதிரிகளின் படை சூழ்ந்தது, பின் பக்கமிருந்தும் உதவிகள் வந்து சேரமுடியாமல் தடுக்கப்பட்டது. இப்படி நான்கு பக்கமும் மாட்டிக் கொண்ட ராஜபுத்திரப் படையானது அளவற்ற வீரத்துடன் போரிட்டும் இறுதியில் மூர்க்கத்தனமாகக் கொன்று குவிக்கப்பட்டது.
இதனிடையில் முகுந்த் சிங்கின் முதல் கட்டத் தாக்குதலால் நிலை குலைந்து பிரிந்து சென்றிருந்த ஒளரங்கசீபின் பீரங்கி, துப்பாக்கி படையினர், எதிரிகள் வேறு முனை நோக்கிப்போனதும் மீண்டும் ஒன்று கூடினர். வெடி மருந்து திணிக்கப்பட்ட பீரங்கிகளுடன் இருந்த ஒளரங்கசீபின் படை வீரர்கள், ஜஸ்வந்தின் தலைமையில் இருந்த மொகலாயப் பேரரசின் மையப் படை மீதே தமது கவனத்தைக் குவித்தனர்.
பதுங்குக் குழிகள், பள்ளங்கள் ஆகியவற்றால் வேகமாகப் பாய்ந்து முன்னேற முடியாதபடி மாட்டிக்கொண்ட பேரரசின் படையினர், ‘போரின் நெருப்பில் விழுந்து இறந்த ஈசல்கள்போல்’ தமது உயிரைப் பறிகொடுத்தனர்.
வீரம் நிறைந்த தமது படையின் ஒரு பிரிவு மூர்க்கத்தனமாகக் கொல்லப்பட்டதையும் ஒளரங்கசீபுடைய படையின் முன்நகர்வையும் பார்த்த ராய் சிங் சிசோடியா, சஜன் சிங் புந்தேலா, அமர் சிங் சந்திராவத் ஆகிய தளபதிகள் போர்க்களத்திலிருந்து வெளியேறித் தமது படைகளுடன் டெல்லி திரும்பினர்.
இதனிடையில் முராத் பக்ஷ் தன் படைகளுடன் ஜஸ்வந்த் சிங்கின் படையைத் தாக்கினர். தளபதி தேவி சிங் புந்தேலா சிறை பிடிக்கப்பட்டார். மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன் பின்னர் முராத், மொகலாயப் பேரரசரின் இடது கிளைப் படையின் மீது தாக்குதல் நடத்தினார். இதில் அதன் தளபதி இஃப்திகார் கான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படையும் தப்பி ஓடியது.
3. ஜஸ்வந்த் சிங் மற்றும் அவருடைய படையினரின் ஓட்டம்
ஜஸ்வந்த் சிங்கின் வலது பக்கப் படை தளபதி ராய் சிங் தப்பி ஓடியதால் அந்தப் பகுதி பலவீனப்பட்டிருந்தது. இஃப்திகார் கான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடது பக்கப் படையும் பலவீனமடைந்து பெரும் இழப்பைச் சந்தித்துவிட்டிருந்தது. காசிம் கானின் தலைமையில் இருந்த முசல்மான்கள் போரிலிருந்து விலகியே இருந்தனர். ஒளரங்கசீபின் படை முன்னேறி வருவதைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.
முன்பக்கம் ஒளரங்கசீப், இடதுபக்கம் முராத், வலது பக்கம் சஃப் ஷேக் கான்கான் என மூன்று படைகளும் ஜஸ்வந்த் சிங்கின் மிகச் சிறிய படையை வெள்ளம்போல் சூழ்ந்துகொண்டன. இரண்டு முறை தாக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், வீரமரணம் அடைய முடிவு செய்து எதிரிப் படையைத் துணிந்து தாக்குவதற்காகத் தன் குதிரையுடன் பாய்ந்தார். ஆனால் ஜஸ்வந்த் சிங்கின் தளபதிகளும் அமைச்சர்களும் அவரைத் தடுத்து நிறுத்த எண்ணி, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து அவரைப் போர்க்களத்திலிருந்து தள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர். அதன் பின் அங்கிருந்து ஜோத்பூர் நோக்கி நகர்ந்தனர்.
போரில் ஏற்கெனவே மொகலாயப் பேரரசரின் படை தோற்றுவிட்டிருந்தது. ரத்தோர்கள் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடியதைத் தொடர்ந்து பெரும் குழப்பமே நிலவியது. வென்றவர்களும் தோற்றவர்களும் மிகவும் களைத்துப் போயிருந்தனர். வென்றவர்களுக்குப் பெரும் பரிசு காத்திருந்தது.
பேரரசரின் தளபதிகள், அவர்களுடைய துப்பாக்கி, பீரங்கிகள், கூடாரங்கள், யானைகள், பிற பொருட்கள் என அனைத்தும் வெற்றி பெற்ற இளவரசருக்குச் சொந்தமாகின. அவருடைய படைவீரர்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
போரில் கிடைத்த பொருளாதார லாபங்கள் அல்லாமல் ஒளரங்கசீபின் கௌரவமும் மீட்டெடுக்கப்பட்டது. அவருடைய எதிர்கால வெற்றிகளுக்கான சுப சகுனமாகத் தர்மத் பகுதியில் நடைபெற்ற போரில் கிடைத்த இந்த வெற்றி அமைந்தது. ஒரே அடியில் ஒளரங்கசீப் தன்னைவிட வெகு உயரத்தில் இருந்த தாரா ஷுகோவைத் தனக்குச் சமமாக, சரியாகச் சொல்வதென்றால் தனக்குக் கீழ் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். மதில் மேல் பூனையாக இருந்தவர்கள் தமது தயக்கத்தைக் கைவிட்டனர். நான்கு மகன்களில் யார் அடுத்ததாக அரியணையில் ஏறுவார் என்பது எந்தவொரு சந்தேகத்துக்கும் இடமின்றி அனைவருக்கும் நன்கு புலப்பட்டுவிட்டது.
ஒளரங்கசீபின் குழு வெற்றி முரசு கொட்டுவதற்கு முன்பாகவே ஜஸ்வந்த் சிங்கும் காசிம் கானும் புறமுதுகு காட்டிவிட்டிருந்தனர். போர்க்களத்தில் மண்டியிட்டு வாளைத் தாழ்த்தியபடி ஏக இறைவனுக்கு ஒளரங்கசீப் நன்றி தெரிவித்தார்.
மொகலாயப் பேரரசரின் தரப்பில் இந்தப் போரில் ஆறாயிரம் பேர் உயிர் துறந்திருந்தனர். அதில் அதிகம் பேர் ராஜபுத்திர வீரர்கள். தமது எஜமானரைக் காக்கும் தர்மத்தின்படி (க்ஷத்ரியத் தர்மத்தின்படி) ராஜஸ்தானின் அனைத்துக் குலத்தினரும் தமது இன்னுயிரை ஈந்திருந்தனர். ரத்தன் சிங் ரத்தோருக்கு (ரத்தன், சைலனா, சீதாமா ஆகிய குலங்களின் வாரிசு) ஒரு நினைவு மண்டபம் அவருடைய உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் அவருடைய வம்சாவளியினரால் எழுப்பப்பட்டது.
4. ஆக்ரா நோக்கி ஒளரங்கசீபின் நகர்வுகள்
வெற்றி பெற்றபின் இரு இளவரசர்களும் ஆக்ரா நோக்கி முன்னேறிச் சென்று மே 21இல் க்வாலியரை அடைந்தனர். தாரா ஷுகோ தோலாபூருக்குப் பெரிய படையுடன் வந்திருந்ததும், சம்பல் ஆறின் மீது எளிதில் கடக்க முடிந்த பகுதிகளையும், பெயர் பெற்ற படகுப் போக்குவரத்து மையங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்ததும் ஒளரங்கசீபுக்குத் தெரிய வந்தது. கடக்க முடிந்த கரைகளில் பல குழிகள், பள்ளங்கள் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. எதிர்க்கரையில் தாரா ஷூகோவின் பீரங்கிப் படை அணி வகுத்துக் காத்திருந்தது. எதிரிகளை எதிர்கொள்ள அனைத்து இடங்களிலும் வலுவான படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மிகவும் வலிமையான படைகள் அணிவகுத்திருக்கும் நிலையில் கரடு முரடான கரைகளைக் கொண்ட ஆற்றைக் கடப்பது, செங்குத்தான பகுதிகளை ஏறிச் செல்வது இவையெல்லாம் பெரும் இழப்பையே கொண்டு வரும். எனவே ஒளரங்கசீப் முதலில் உள்ளூர் ஜமீந்தாரின் உதவியைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது தோலாபூருக்கு நாற்பது மைல் தொலைவில் பதோலி என்ற ஊரில் முட்டளவு ஆழம் கொண்ட மறைவான ஆற்றுப் பகுதி ஒன்று இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. தாரா ஷுகோ, தன் படைகளை அங்கு நிறுத்தவில்லை என்பதும் ஒளரங்கசீபுக்குப் புரிந்தது.
இனி தாமதிக்க நேரம் இல்லை. குவாலியருக்கு (மே 21) வந்து சேர்ந்த ஒளரங்கசீப் தன் பிரதானப் படையை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, அன்றிரவே மூன்று தளபதிகளின் தலைமையில் வேறு ஒரு வலிமையான படையைச் சில பீரங்கிகளுடன் பதோலிக் கரைக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் அங்குச் சென்று சேர்ந்தவர்கள் எளிதில் கரையைக் கடந்துவிட்டனர். இதையடுத்து அன்றே குவாலியரில் இருந்து புறப்பட்ட ஒளரங்கசீப் இரண்டு இடங்களில் மட்டும் சிறிது ஓய்வெடுத்துவிட்டு, அதே மறைவான கரையைத் தன் படையுடன் மே 23 அன்று கடக்கத் தொடங்கினார்.
அந்தப் பாதை மிகவும் கரடுமுரடாக இருந்தது. பதோலிக் கரையை அடைவதற்கு ஒளரங்கசீபின் படையினர் மிகவும் சிரமப்பட்டனர். ஏற்கெனவே போரின் காரணமாகக் களைத்துப் போயிருந்த அவரது 5000 வீரர்கள், இந்தக் கடுமையான பயணத்தில் தாகத்தினால் இறந்துவிட்டனர். ஆனால் அவசர அவசரமாக மேற்கொண்ட இந்தப் பயணத்தினால் கிடைத்த ஆதாயம் அந்த இழப்பை ஈடுகட்டுவதாக இருந்தது.
ஒளரங்கசீப் இந்த ஒற்றை அடியின் மூலம் (முன்னெடுப்பின் மூலம்) எதிரியின் சாதகமான நிலையைத் தலைகீழாக்கி விட்டார். அந்த ஆற்றின் பிற கரைகளில் எல்லாம் தாரா ஷுகோ வெட்டிய குழிகளையும், நிறுத்திய படைகளையும் செல்லாக் காசாக்கிவிட்டார். இப்போது ஆக்ராவை நோக்கிய பாதை அவர் முன் முழுமையாகத் திறந்து கிடந்தது. தாரா ஷுகோ சம்பல் நதியில் நிறுத்திய படைகள் அனைத்தையும் திரும்ப அழைத்துக் கொண்டு தலைநகரைப் பாதுகாக்க ஓடவேண்டியிருந்தது. இந்த முயற்சியில் மிகப் பெரிய பீரங்கிகளை எல்லாம் சம்பல் ஆற்றுப் பகுதியிலேயே விட்டுச் செல்ல வேண்டியும் வந்தது. இதனால் அடுத்து நடந்த போரில் தாரா ஷூகோவின் பீரங்கிப் படையின் பலம் கணிசமாகக் குறைந்துவிட்டிருந்தது. சம்பல் பகுதியை வெற்றிகரமாகக் கடந்த ஒளரங்கசீபின் படை, வடக்குத் திசையில் பயணம் செய்து, மூன்று நாட்கள் கழித்து ஆக்ராவுக்குப் பத்து மைல் கிழக்கில் சாம்கருக்கு அருகில் பேரரசரின் படையை எதிர்கொண்டது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.