5. தர்மத் போருக்குப் பின்னான தாரா ஷுகோவின் நகர்வுகள்
தர்மத் பகுதியில் நடந்த போரில் பேரரசரின் படை தோற்ற விஷயம் பலூச்பூரில் இருந்த அரச சபையினருக்குப் பத்து நாட்கள் கழித்துத்தான் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாரா ஷுகோ, அதி வேகமாகப் புதிய படைகளைத் தயார் படுத்தினார். 60,000 வீரர்கள் இருந்த அந்தப் படை பார்ப்பதற்கு வலிமையானதுபோல் தோற்றமளித்தாலும் உண்மையில் பலவீனமாகவே இருந்தது. அந்தப் படையில் போருக்கான அவசரத்தில் வேக வேகமாகப் பல்வேறு வகுப்பினரையும், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களையும் தாரா ஷுகோ சேர்த்திருந்தார். இதனால் அவர்களுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. மேலும் அவர்கள் ஒற்றுமையாகப் போர் புரியத் தேவையான பயிற்சிகளையும் பெற்றிருக்கவில்லை. அதோடு அந்தப் படைகளின் தளபதிகள் பலரும் கௌரவப் பட்டம் பெற்றவர்களே தவிர, உண்மையான வீரம் மிகுந்தவர்கள் அல்ல. ஆனால் ஒளரங்கசீபின் தளபதிகளோ தக்காணத்தில் போர்க்களத்தில் அனுபவம் பெற்றவர்கள்.
ஏற்கெனவே ஷுஜாவுக்கு எதிரான சண்டையின்போதே தாரா தனது திறமையான தளபதிகளை எல்லாம் சுலைமான் ஷுகோவுடன் அனுப்பியிருந்தார். எனவே, இப்போது அப்படியான தளபதிகள் இல்லாமல் அவர் தடுமாறினார். அத்தோடு தாரா ஷுகோ தன் படையில் மிக அதிக அளவில் ராஜபுத்திரர்களுக்கு இடம் தந்திருந்ததால் கசப்புணர்வில் இருந்த பேரரசரின் அயல் நாட்டு முஸ்லிம் வீரர்கள் அவரை விதியின் கரங்களுக்கு விட்டுக்கொடுத்து விட்டனர்.
இதுமட்டுமில்லாமல் ஷாஜஹானும் தாராவின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தார். இந்தத் தருணத்தில்கூடப் போரைத் தவிர்க்கும்படியே தாராவுக்கு அவர் அறிவுறுத்தி வந்தார். ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவே தமது மகன்களுக்கு இடையிலான மோதலைத் தீர்த்துவிடலாம். போர் தேவையே இல்லை என்ற எண்ணத்திலேயே அவர் இறுதிவரை இருந்தார்.
மே 18 அன்று ஆக்ரா கோட்டையின் திவான்-இ-ஆம் அரங்கிலிருந்த தாரா ஷுகோ, மிகுந்த வேதனையுடன் பிரியாவிடை பெற்றுச் சம்பல் நதிக்கரைக்குப் புறப்பட்டார். மே 22 அன்று தோல்பூருக்கு வந்து சேர்ந்த அவர், சம்பல் நதிக்கரையோரமாக இருந்த அனைத்துப் படகுத் துறைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சுலைமான் ஷுகோவின் படை வந்து சேரும்வரை போரை ஆரம்பிக்க வேண்டாம் என்று தாரா நினைத்தார். அதுவரை முன்னேறி வரும் ஒளரங்கசீப்பின் படைகளைத் தடுத்து நிறுத்தினால்போதும் என்பதுதான் அவரது முதல் நோக்கமாக இருந்தது. ஆனால் 23ஆம் தேதி அன்றே தோல்பூருக்குக் கிழக்கே 40 மைல் தொலைவில் இருந்த ஆழம் குறைவான பகுதி வழியாக ஒளரங்கசீப் சம்பல் நதியைக் கடந்து விட்டார் என்ற செய்தி அவருக்குத் தெரிய வந்தது. எனவே, ஆக்ராவுக்குத் திரும்பி வந்த அவர், நகரின் வெளியே சமுகர் பகுதிக்கு அருகில் முகாமிட்டார். ஒளரங்கசீப் 28ஆம் தேதியன்று அங்கு வந்து சேர்ந்தார்.
ஒளரங்கசீபின் படைகள் வருவதைத் தெரிந்து கொண்ட தாரா, போரிடுவதுபோல் தன் படையுடன் அன்றே புறப்பட்டுச் சென்றார். ஆனால், எதிரிகளைப் கண்டவுடன் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க விரும்பியவர், தன் படையைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்திவிட்டார். மேலும் மாலையில் சூரியன் அஸ்தமித்தப் பிறகு தன் முகாமுக்குத் திரும்பியும் விட்டார்.
ஆனால் அவ்வாறு அவர் செய்தது மிக மிகப் பெரிய தவறாகிப்போனது.
அப்போது ஒளரங்கசீபின் படை எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தது. அதோடு கொளுத்தும் வெய்யியில் பத்து மைல் தொலைவுக்குத் தண்ணீரே இல்லாத பொட்டல் காட்டின் வழியே பயணம் செய்ததில் அவர்கள் களைத்தும் போயிருந்தனர். தாராவின் படையோ மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தது. அப்போது அவர்கள் தாக்குதலைத் தொடங்கி இருக்கலாம். ஆனால் தாரவின் படைகள் பல மணி நேரங்கள் எதுவும் செய்யாமல் அந்த வெய்யிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதனால் அவரது படைவீரர்கள், குதிரை, யானைகள் எல்லாம் சோர்ந்து போயின. ஒளரங்கசீபோ தன் படையினருக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதற்காகச் சாமர்த்தியமாய் மறுநாள் காலை வரையில் போரை ஆரம்பிக்காமல் தாமதித்தார்.
6. சமுகர் பகுதியில் நடந்த போர் – மே 29, 1658
தாரா ஷுகோ, மறுநாள் காலை மே 29 அன்று தனது முகாமுக்கு இரண்டு மைல் தொலைவில் பரந்து விரிந்திருந்த சமவெளியில் தன் படையைக் கொண்டு வந்து நிறுத்தினார். அதில் சுமார் 50,000 வீரர்கள் இருந்தனர். இந்தப் படையின் முதுகெலும்பாக ராஜபுத்திரப் படைப் பிரிவும் தாராவின் மெய்க் காவல் படையும் இருந்தன. இவர்கள் அனைவரும் தாராவின் வெற்றியையே தமது இலக்காகக் கொண்டிருந்தனர். ஆனால் கிட்டத்தட்ட பாதி படை பேரரசருக்கு சொந்தமானது. அதனால் அவர்களைத் தாராவால் முழுமையாக நம்பமுடியவில்லை. ஏனென்றால் அந்தப் படையின் தளபதிகள் பலரை, குறிப்பாகக் கலீலுல்லா கான் போன்றவர்களை ஒளரங்கசீப் தன் பக்கம் இழுத்திருந்தார்.
தாரா ஷுகோவின் படையில் இருந்த பீரங்கிகள் அனைத்தும் ஒரே வரிசையாக முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்தன. துப்பாக்கி வீரர்களின் அணிவரிசை அதன் பின்னால் இருந்தது. அதற்குப் பின் வரிசையில் யானைப் படை நின்றது. இறுதியாகக் குதிரைப் படை நிறுத்தப்பட்டிருந்தது. தாராவின் பீரங்கிப் படை வேகமாக நகர்ந்து செல்லும் திறன் இல்லாமல் இருந்தது. அதோடு அதன் தாக்குதல் திறமையும் ஒளரங்கசீபின் படையுடன் ஒப்பிட்டால் குறைவுதான். தாராவின் குதிரைப் படையும், போக்குவரத்து விலங்குகளின் அணிவரிசையும்கூட சற்றுப் பலவீனமானவையாகவே இருந்தன.
எதிர்ப் பக்கம் நின்றிருந்த ஒளரங்கசீபின் படை ஆக்ரோஷம் மிகுந்ததாக இருந்தது. அவரது நன்கு போர் அனுபவம் பெற்ற தளபதிகள், குதிரைகளின் மீது வீற்றிருந்தனர். இவர்களோடு, மீர் ஜும்லாவின் படையைச் சேர்ந்த ஐரோப்பியத் துப்பாக்கி, பீரங்கி வீரர்களும் ஒளரங்கசீபின் பக்கம் இருந்தனர். அவர்களுக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் எல்லாம் போதுமான அளவுக்கு இருந்தன. ஒளரங்கசீபின் படையில் வலுவான ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் நிலவியது. படை வீரர்கள், தளபதிகள், அதிகாரிகள் என அனைவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்தத் தயக்கமும் இல்லாமல் ‘மாலிக்’கின் உத்தரவுக்குக் கீழ்படியக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தனர்.
மதிய வாக்கில் போர் ஆரம்பித்தது. தாரா ஷுகோ எடுத்த எடுப்பிலேயே தாக்குதலை ஆரம்பித்தார். பீரங்கிப் படையினர் பெரும் சப்தத்துடன் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஆனால் அவ்வளவு தொலைவில் இருந்த எதிரிகளுக்கு அவை எந்தவொரு இழப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒளரங்கசீபோ எடுத்த எடுப்பில் தாக்காமல் தனது படையின் வெடிமருந்தையும் குண்டுகளையும் சமயோஜிதமாகப் பாதுகாத்து வைத்துக்கொண்டார்.
ஒரு மணி நேரத்துக்கு இப்படியான வெற்று வேட்டுத் தாக்குதல் நடந்தது. அதன்பின் தாரா தன் படையை முன்னேறிச் சென்று தாக்க உத்தரவிட்டார். அவருடைய இடது பக்கப் படைக்கு ரஸ்தம் கான் தலைமை தாங்கியிருந்தார். பீரங்கி, துப்பாக்கிப் படைகளுக்கு இடையேயான வெளியில் வேகமாகப் பாய்ந்து சென்ற அவர், எதிரிகளின் பீரங்கிப் படையை மின்னும் வாள் கொண்டும் போர் முழக்கங்கள் கொண்டும் எதிர்கொண்டார்.
ஒளரங்கசீபின் பீரங்கிப் படைத் தலைவர் சாஃப் ஷிகன் கானும், அவருடைய துப்பாக்கிப் படையினரும் பயங்கரமான குண்டு மழை, அம்பு மழை, ஈட்டி மழைகளைப் பொழிந்து ரஸ்தம் கானின் படையை எதிர்கொண்டனர். வாளும் வேலும் கொண்டு தாக்கிய ரஸ்தம் கானின் படையினரால் ஷிகன் கானின் துப்பாக்கிப் படையை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களின் வேகம் மட்டுப்பட்டது. ஒளரங்கசீபின் பீரங்கிகள் பல முக்கிய தலைவர்களைச் சிதறடித்துவிட்டன. எனவே ரஸ்தம் கான் தனது வலது பக்கம் பாய்ந்து சென்று எளிய எதிரிகளைத் தாக்க முற்பட்டார். அவரது வேகத்தில் புழுதி கிளம்பியது.
ஆனால், ஒளரங்கசீபின் வலது பக்கப் படைத் தளபதியான பஹதூர் கான், முன் பக்கம் பாய்ந்து சென்று பீரங்கிப் படைக்கும், ஒளரங்கசீபின் முன்னால் இருக்கும் படைக்கும் இடையிலான இடைவெளியை மறைத்து ரஸ்தம் கானின் முன்னோக்கிய நகர்வைத் தடுத்தார். இருவருக்கும் இடையில் நேருக்கு நேரான மோதல் நடந்தது. இந்த மோதலில் பஹதூர் கான் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அவருடைய படைப் பிரிவு சிதறி ஓடவிருந்த நேரத்தில் இஸ்லாம் கான் வலது பக்கப் படைப் பிரிவில் இருந்து வந்து உதவிக்கரம் நீட்டினார்.
இதேசமயத்தில் ஷேக் மீரும் தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம் என்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படையுடன் வந்து சேர்ந்தார். இப்போது ரஸ்தம் கானின் படை இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டுவிட்டது. ரஸ்தம் கான் படுகாயமடைந்து வீழ்ந்தார். அவருடைய படையைச் சேர்ந்த வீரமும் திடசித்தமும் கொண்ட பத்துப் பன்னிரண்டு வீரர்கள் ஒளரங்கசீபை நோக்கிப் பாய்ந்து முன்னேறினர். ஆனால், அங்கு அவர்கள் எதிரியின் படையினரால் கொல்லபட்டுப் பிணக் குவியலில் வீசப்பட்டனர். சிஃபிர் ஷுகோவின் தலைமையில் இருந்த தாரா ஷுகோவின் இடது பக்கப் படை பின்வாங்கி ஓடியது.
இதனிடையில் ஒளரங்கசீபின் இடது பக்கமும் மிகத் தீவிரமான போர் நடந்து கொண்டிருந்தது. ராஜா சத்தர் சல் ஹடா தலைமையில் மொகலாயப் பேரரசரின் படையானது, சுல்ஃபிகருடைய படைக்கும் முராதின் படைக்கும் இடையே ஊடுருவி இளவரசர் ஒளரங்கசீப்பைத் தாக்கப் பாய்ந்தது. இதனால் முராதின் படைக்கும் ஒளரங்கசீபின் படைக்கும் இடையே ஒரு பிளவு உண்டானது.
ஹோலியின் மஞ்சள் நிற உடையையும், விலை மதிப்பு மிக்க முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்த தலைப்பாகையையும் அணிந்திருந்த ராஜா ராம் சிங் ரத்தோர், ‘தாராவிடமிருந்து கிரீடத்தைப் பறிக்கப் பார்க்கிறாயா’ என்று முழங்கியபடியே முராதின் யானை மீது பாய்ந்தார். பிறகு, யானைப் பாகருக்கு உயிர் பயம் காட்டி யானையை மண்டியிட்டு நிற்க வைக்கும்படி மிரட்டினார். யானை கால் மடக்கி அமர்ந்த சமயத்தில் சட்டென்று முராதின் மீது ஈட்டியைப் பாய்ச்சினார். ஆனால் குறி தப்பிவிட்டது. எதிர்த் தாக்குதலில் யானை மீது வீற்றிருந்த முராத், ஒரே அம்பினால் ராஜ புத்திரத் தலைவரின் உயிரைப் பறித்தார்.
மற்ற ராஜ புத்திர வீரர்களும் முராதின் யானையைச் சுற்றிக் கொத்துக் கொத்தாக வீழ்ந்திருந்தனர். அவர்களுடைய ஆடையின் நிறத்தால், ‘சாமந்திப் பூக்களின் மலர் படுகை போல் நிலம் மஞ்சள் நிறமாக’ மாறியது. உயரமான யானை மேல் அமர்ந்திருந்த இளவரசரை ராஜபுத்திர வீரர்களால் ஏறிச் சென்று தாக்கி வீழ்த்த முடியவில்லை. ஆனால், முராதின் முகத்தில் மூன்று இடங்களில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருந்தனர். யானைப் பாகர் கொல்லப்பட்டார். யானையின் உடல் அம்புகளால் துளைக்கப்பட்டு முள்ளம்பன்றியின் உடல்போல் காட்சியளித்தது. இதனால் முராத் கொஞ்சம் பின்வாங்க வேண்டியிருந்தது.
வெற்றி பெற்ற ராஜபுத்திரர்கள், முராதுக்கு உதவுவதற்காக வந்த ஒளரங்கசீபின் மீது கவனத்தைக் குவித்தனர். வலிமை மிகுந்த இந்த இரண்டு தரப்புகளுக்கிடையிலான போர் மிகவும் மூர்க்கமாக நடைபெற்றது. ராஜபுத்திர வீரர்கள் துணிந்து தாக்கியபடி முன்னேறினர். ஆனால், ஒளரங்கசீபின் காவல் படையும் சம பலத்துடன் மோதியது. அந்தக் காவல் படையின் வீரர்கள் அப்போதுதான் தாக்குதலை ஆரம்பித்திருந்ததால் புத்துணர்ச்சியுடன் இருந்தனர். ஆனால் ராஜபுத்திர வீரர்களோ முராதின் படையினருடன் போராடிவிட்டு வந்திருந்ததால் களைத்துப் போயிருந்தனர். அதில் பலர் இறந்தும், காயமடைந்தும் விழுந்திருந்ததால் அவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டிருந்தது.
இருந்தும் அவர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போரிட்டனர். ஆனால், ராஜபுத்திர தலைவர்களான சத்தர் சல் ஹடா, ராம் சிங் ரத்தோர், பீம் சிங் கௌர், சிவராம் கௌர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தனர். அதன் பின்னரும் எஞ்சியவர்கள் எல்லாம் ‘வேட்டை நாய்களைப்போல்’ இடைவிடாமல் தாக்கியதாக இந்தச் சண்டையை நேரில் பார்த்த ஐரோப்பியர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜா ரூப் சிங் ரத்தோர் தன் குதிரையிலிருந்து குதித்து உருவிய வாளுடன் ஒளரங்கசீபின் யானையை நோக்கிப் பாய்ந்தார். அவர், அம்பாரியைக் கட்டியிருக்கும் சேணத்தையும் கயிறுகளையும் அறுத்தெறிந்து ஒளரங்கசீபைக் கீழே விழவைக்க முயன்று, யானையின் காலில் வாளைப் பாய்ச்சினார். ஆனால், ஒளரங்கசீபின் மெய்க்காவலர்கள் அவரைக் கண்டந்துண்டமாக வெட்டி வீழ்த்தினர். எஞ்சிய ராஜபுத்திரர்களும் கொல்லப்பட்டனர். அப்படியாகத் தாரா ஷுகோவின் இடது மற்றும் வலது பக்கப் படைகள் இரண்டும் அழிக்கப்பட்டன.
7. சமுகர் பகுதியில் தாராவின் செயல்பாடுகள்; அவருடைய முடிவு
போரின் தொடக்கத்தில் ரஸ்தம் கானும், சத்தர் சல் ஹடாவும் தமது படைப் பிரிவுடன் முன்னேறிச் சென்றபோது, மையப் பகுதியில் இருந்த தாரா ஷுகோ தனது பீரங்கிப் படையினூடாகச் சென்று, ஒளரங்கசீபுடன் மோதச் சென்ற ரஸ்தம் கானுக்கு உதவுவதற்கு விரைந்தார். இதைப் போன்ற மடத்தனம் வேறு எதுவும் இருந்திருக்கவே முடியாது. இப்படி மையத்தைவிட்டு விலகிச் சென்றதால் அவர் ஒட்டுமொத்தப் படைகளின் நகர்வுகளையும் கண்காணித்து, அவற்றைத் தலைமை தாங்கி வழிநடத்தும் வாய்ப்பை இழந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவருடைய படைகளுக்குள் பெரும் குழப்பம் உருவானது. தன்னுடைய பீரங்கிப் படைக்கு முன்பாக அவர் சென்றதால் அந்தப் படையால் தாக்குதலை நடத்தமுடியாமல் போனது. எதிர் முனையிலிருந்து பீரங்கியாலும் துப்பாக்கியாலும் இடைவிடாமல் தாக்குதல் நடத்திய ஒளரங்கசீபின் படைக்கு எதிராகப் பதிலடி கொடுக்கமுடியாமல் போய்விட்டது. பிற எல்லாப் பிழைகளையும்விட இந்தத் தவறுதான் தாராவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. தாரா ஷுகோ இப்போது எதிரில் இருந்து வந்த பீரங்கித் தாக்குதலிலிருந்து தப்பிக்க வலது பக்கம் திரும்பியபோது, ஷேக் மீரின் படையுடன் மோத வேண்டி வந்தது.
அப்போது ஒளரங்கசீபின் அருகில் பாதுகாப்புப் படை எதுவும் இருந்திருக்கவில்லை. தாரா ஷுகோ அதைப் பயன்படுத்தி எதிரிகளின் படையை ஊடுருவி ஒளரங்கசீபின் பக்கம் சென்றிருந்தால் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால், அவர் சிறிது நேரம் தாமதித்தார். போர்க்களத்தில் அவர் முன்னால் இருந்த தடைகள், அவருடைய களைப்பு இவையெல்லாம் அவரைக் கொஞ்சம் முடக்கிப்போட்டன. கிடைத்த சாதகமான அம்சத்தை அவருடைய படை மெள்ள இழக்கத் தொடங்கியது. தாக்குதலின் வேகம் மட்டுப்பட ஆரம்பித்தது.
கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றென்றைக்குமாகக் கை நழுவிப் போனது. ஏனென்றால், ஒளரங்கசீப் விரைவிலேயே தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொண்டுவிட்டார். தனது படைகளை உரிய இடங்களுக்கு நகர்த்திக் கொண்டுவிட்டார். இதனால், தாரா ஷுகோ தன் எதிரியான ஒளரங்கசீபின் யானை மீது தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு, தனது வலது பக்கமாகத் திரும்பி சத்தர் சல்லுக்கு உதவும் நோக்கில் அந்தப் பக்கம் சென்றார்.
அப்படியாக, தாரா ஷுகோ தனது படையின் இடக்கோடியிலிருந்து வலக்கோடிக்கு மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி வந்தது. கொளுத்தும் வெய்யிலில் அவருடைய படையினரும் குதிரைகளும் முழுவதுமாகக் களைத்துவிட்டனர். எதிரிகளின் பீரங்கிகள்வேறு இடைவிடாமல் தாக்குதல் நடத்தி இடது பக்கப் படைகளை நிலைகுலைய வைத்தது. அவருடன் இருந்த படை வீரர்கள் கொதிக்கும் நுண் மணலிலும், மூச்சை அடைக்கும் புழுதியிலும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. சூடேறியக் கவசங்கள் அவர்களுடைய உடல்களில் கொப்பளங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. தாகம் தணிக்க ஒரு சொட்டு தண்ணீர்கூடக் கிடைத்திருக்கவில்லை.
இதனிடையில் தலைமையின் மீது விசுவாசமும் ஒற்றுமையும் மிகுந்த ஒளரங்கசீபின் படை அவருடைய வழிகாட்டுதலின்படி வலுவான நிலைக்கு நகர்ந்துவிட்டது. தாராவின் இடது, வலதுபக்கப் படைகளும், பிற பிரிவுகளும் தமது இடங்களிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. தாராவும் மையத்திலிருந்து விலகிவிட்ட நிலையில் அவருடைய படையில் பெரும் குழப்பமும் தடுமாற்றமும் உருவாகியிருந்தது. ஒளரங்கசீபின் மகன் முகம்மது சுல்தான் தன் படையுடன் தாராவைத் தாக்க விரைந்தான். இதே நேரத்தில் ஒளரங்கசீபின் வெற்றிகரமான வலதுபக்கப் படைப் பிரிவு தாராவின் படையைச் சுற்றி வளைத்தது. இடது, வலதுபக்கப் படைகள் ஒரே நேரத்தில் மூர்க்கமாகத் தாக்கவும் ஆரம்பித்தன.
இதுவே உண்மையில் போரின் முடிவுத் தருணம்.
தனது திறமைசாலியான தளபதிகளின் மரணச் செய்தி தாராவை வந்தடைந்திருந்தது. ‘கடல் அலைகளைப்போல் ஒளரங்கசீபின் படைகள் எண்ணற்ற துப்பாக்கி, பீரங்கிகளுடன் தாராவின் முன்னால் வந்து நின்றன’. குறி தவறாமல், இடைவிடாமல் அவர்கள் மேற்கொண்ட தொடர் தாக்குதலினால் தாராவின் படைகள் நிர்மூலமாக்கப்பட்டன. அவரது யானையும் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் பட்டத்து இளவரசர் யானையிலிருந்து இறங்கிக் குதிரையில் ஏறிக்கொண்டார்.
சட்டென்று அவருக்கு எல்லாமே முடிந்துவிட்டது.*
போர்க்களத்தில் இருந்த அவருடைய வீரர்கள் அம்பாரியில் அவர் இல்லாததைப் பார்த்து அவர் வீழ்த்தப்பட்டுவிட்டதாக நினைத்துவிட்டனர். ஏற்கெனவே அவர்கள் தாகத்தாலும் மயக்கத்தாலும் தளர்ந்து போயிருந்தனர். இந்தத் தருணத்தில் வெப்பக்காற்று வேறு புயல்போல் படையினரை மூர்க்கமாகத் தாக்கியது. இதில் அவர்களால் ஆயுதங்களைத் தூக்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பலர் தாகத்தினாலேயே இறந்துவிட்டனர்.
மொகலாயப் பேரரசரின் படை எப்போது நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும், எப்படி ஓடித் தப்பிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு யானையின் அம்பாரியில் தாரா ஷுகோ இல்லை என்ற விஷயம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. மொகலாயப் பேரரசுப்படை உடனேயே தாறுமாறாகக் கலைந்து தப்பி ஓடியது. தாரா ஷுகோ போர்க்களத்தில் தன்னந்தனியாக விடப்பட்டார். பரம்பரை பரம்பரையாக வந்திருந்த ஒரு சில விசுவாசிகள் நீங்கலாக மற்ற அனைவரும் இறந்தோ தப்பித்தோ விட்டிருந்தனர். அவர்கள் அவரைப் பாதுகாப்பாகப் போர்க்களத்தில் இருந்து காப்பாற்றி ஆக்ராவுக்கு அழைத்துச் சென்றனர்.
ஒளரங்கசீபுக்கு இருந்த கடைசித் தடையும் அகற்றப்பட்டுவிட்டது. வேறு எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. எந்த முயற்சியும் தேவைப்பட்டிருக்கவும் இல்லை. இதைவிடப் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான வெற்றி கிடைத்துவிட்டிருந்தது. தோற்றுப்போன படையின் சார்பில் சுமார் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இறந்த குதிரைகள், யானைகள், போக்குவரத்து விலங்குகளின் எண்ணிக்கையோ கணக்கிடமுடியாததாக இருந்தது. மொகலாயப் பேரரசின் படையில் கொல்லப்பட்ட மிக முக்கியமானவர்களில் 9 ராஜபுத்திரத் தலைவர்களின் பெயரும், 19 முஸ்லிம்களின் பெயரும் பட்டியலிடப்பட்டுள்ளன.
சமுகர் போரில் ஈடுபட்டவர்களிலேயே மிக அதிக வீரம் நிறைந்தவர் ராவ் சத்தர் சல் ஹடா. பூந்தி பகுதியின் அரசர். 52 போர்களில் வெற்றி பெற்றவர். அவருடைய ஹடா படை வீரர்கள் காவி மேலாடை பறக்கத் தாரா ஷுகோவின் பிரதானப் படையாக அணிவகுத்து நின்றனர். வெற்றி அல்லது வீரமரணம் என்பதே அவர்களுடைய கொடியின் முத்திரை வாசகமாக இருந்தது.
சத்தர் சல் ஹடா தனது வீரர்களுக்கு உற்சாகமூட்டியபடியே தன் யானை மீது ஏறி அமர்ந்தார். அப்படி அவர் உற்சாகமூட்டியும், முன்னணியில் நின்றும் போரிட்டபோதும்கூட எதிரியின் பீரங்கிக் குண்டுகள் அவருடைய யானையைத் தாக்கின. அதைக் கண்டு பயந்த யானை புறமுதுகிட்டு ஓடத் தொடங்கியது.
சத்தர் சல் உடனே யானை மீதிருந்து பாய்ந்து, குதிரை மீது ஏறிக்கொண்டார்: ‘என் யானை புறமுதுகிட்டு ஓடலாம். நான் ஓடமாட்டேன்’ என்று முழங்கியபடியே தன் படைவீரர்களை அழைத்துக்கொண்டு இளவரசர் முராதைத் தாக்க விரைந்தார். முராதைத் தனியாகச் சுற்றி வளைத்து ஈட்டியை எறியக் குறிபார்த்துக் கொண்டிருந்தபோது பீரங்கி குண்டு ஒன்று பாய்ந்து வந்து அவருடைய தலையைச் சிதறடித்தது. அதேபோல தர்மத் மற்றும் சமுகர் பகுதிகளில் நடைபெற்ற போர்களிலும் ஹடா குலத்தின் 12க்கும் குறையாத இளவரசர்கள் தமது இன்னுயிரை மொகலாயப் பேரரசருக்காக ஈந்தனர்.
அன்றைய இறுதிப் போரில் மிகவும் புகழ் பெற்றவர் ரஸ்தம் கான். ஃபிரோஸ் ஜங் என்ற துணைப்பெயர் கொண்ட அவர், உஸ்பெக் மற்றும் பாரசீகப் போர்களின் நாயகர்.
ஒளரங்கசீபின் படையில் முதல் நிலை தளபதிகளில் அஸாம் கான் மட்டுமே உயிரிழந்தார். அவரும் எதிரிகளின் கைகளில் இல்லாமல் வெப்பம் தாங்காமல்தான் இறந்திருந்தார்.
* தாரா ஷுகோ தோற்றுவிடுவோம் என்று மனம் சோர்ந்துபோய் யானையில் இருந்து இறங்கினார் என்பதை ஏ.என் (104), அஹில் கான் (48), மாசூம் (636) காம்பு (15 அ) ஆகியோரும் தமது நூலில் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால், மனூச்சி-பெர்னியர் தமது நூலில், தாரா ஷுகோ அந்தப் போரில் ஒளரங்கசீபை வெற்றி பெற்றுவிட்டதைத் தொடர்ந்தே யானையில் இருந்து கீழே இறங்கினார்; துரோக எண்ணம் கொண்ட கலீலுல்லா கானின் குயுக்தியான ஆலோசனையின் பேரில், அவர் அப்படி இறங்கியது, அவருடைய படையினர் மத்தியில் ஏற்படுத்திய தவறான எண்ணமே தாரா ஷுகோ தோற்கக் காரணமாகிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் (ஸ்டோரியா 231-232; பெர்னியர்-53-54; ஈஸ்வர்தாஸ் – 24 பி – 25 அ). உர் நாட்டில் பேசப்பட்ட வதந்தியை மனூச்சி-பெர்னியர் தமது நூலில் குறிப்பிட்டிருந்தது தவறு என்பதை சமகாலத்தினர் மற்றும் போரை நேரில் பார்த்தவர்கள் எழுதிய குறிப்புகள் நிரூபிக்கின்றன.
8. ஆக்ராவில் நடந்தவையும், ஷாஜகானின் சிறை பிடிப்பும் – 1658
சமுகர் போரில் படுதோல்வி அடைந்த தாரா ஷுகோ ஒரு சில உதவியாளர்களுடன் இரவு 9 மணி வாக்கில் ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தார். தனது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். மொகலாய அரசக் குடும்பத்தில் பெரும் வேதனை சூழ்ந்திருத்தது. நகரில் பெரும் அபாய உணர்வு பரவியிருந்தது.
கோட்டைக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி தாராவுக்கு ஷாஜஹான் சொல்லி அனுப்பினார். உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் சோர்ந்துபோயிருந்த தாரா, ‘இப்போதைய என் பரிதாபமான நிலையில் மாண்புமிகு பேரரசரை என்னால் வந்து சந்திக்க முடியாது. நான் மேற்கொள்ளவிருக்கும் நீண்ட நெடும் பயணத்துக்கு இன்முகத்துடன் ஆசி கொடுத்து அனுப்பிவையுங்கள்’ என்று பதில் சொல்லி அனுப்பினார்.
தாரா ஷுகோ அதிகாலை மூன்று மணி வாக்கில் தன் மனைவி, குழந்தைகள், 12 பணியாளர்களுடன் ஆக்ராவிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டார். அவருக்குப் பேரரசர் ஷாஜஹானின் உத்தரவின் பேரில், கஜானாவிலிருந்து தங்கக் காசுகள் நிறைந்த மூட்டைகள் கோவேறு கழுதைகளின்மீது ஏற்றிவந்து கொடுக்கப்பட்டது. அவசர அவசரமாகப் புறப்பட்ட அவர், தன்னால் முடிந்த அளவிலான நகைகள், பணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அவருடைய ஆதரவாளர்கள் வழி நெடுக அவருடன் வந்து சேர்ந்துகொண்டனர். டெல்லியை அவர் அடையும்போது சுமார் 5000 பேர் வந்து சேர்ந்திருந்தனர்.
சமுகர் போர் முடிந்ததும் ஒளரங்கசீப் தன் சகோதரர் முராதைச் சென்று சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். இளைய சகோதரரின் வீரத்தினால்தான் அந்த வெற்றி சாத்தியமானது என்றும், அன்றிலிருந்தே முராதின் ஆட்சி அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பகுதிகளில் ஆரம்பிக்கிறது என்றும் பாராட்டினார். காயம்பட்ட முராதுக்கு அக்கறையுடன் சிகிச்சையும் செய்தார்.
வெற்றி பெற்ற இரண்டு இளவரசர்களும் நெடும் பயணமாக ஆக்ரா கோட்டைக்கு வெளியில் இருந்த நூர் மன்ஸிலின் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தனர் (ஜூன் 1). அங்கு அவர்கள் பத்து நாட்கள் தங்கினர். அனுதினமும் ஏராளமான அரச சபையினரும், நிலபிரபுக்களும், அரசு அதிகாரிகளும் பேரரசரை விட்டுவிட்டு ஒளரங்கசீபின் பக்கம் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். அதில், தாராவின் அமைச்சர்களும் அதிகாரிகளும்கூட அடங்குவர்.
ஒளரங்கசிப், சமுகர் போர் முடிந்த மறு நாளே, ‘எதிரிகளால் தன் மீது திணிக்கப்பட்ட விஷயங்களுக்கான தன் எதிர்வினைகளுக்கு மன்னிப்புக் கேட்டு’ ஷாஜஹானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
நூர் மன்ஸிலுக்கு அவர் வந்து சேர்ந்தபோது ஷாஜஹான் கைப்பட எழுதிய ஒரு கடிதம் அவருக்குக் கிடைத்தது. அதில் தன்னை வந்து சந்திக்கும்படி ஒளரங்கசீபை ஷாஜஹான் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் ஒளரங்கசீப் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார். ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்ததுமே தார்தாரியப் பெண் காவலர் ஒருவர் மூலம் ஒளரங்கசீபைக் கொன்றுவிட ஷாஜஹான் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகச் சில நண்பர்கள் (குறிப்பாக ஷைஸ்தா கான் மற்றும் கலீலுல்லா கான்) சொன்னதன் பேரில் ஒளரங்கசீப் அவ்வாறு செய்தார்.
நல்லெண்ண முகமூடி கழற்றி வீசப்பட்டது. ஜூன் 5 அன்று ஆக்ரா கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டார். ஜுன் 3 அன்று தன் மூத்த மகன் முகம்மது சுல்தானை ஆக்ரா நகருக்கு அனுப்பி ஏற்கெனவே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரச் செய்திருந்தார்.
ஷாஜஹான் ஆக்ரா கோட்டையை உள்ளுக்குள் மூடிக்கொண்டு ஒளரங்கசீபின் முற்றுகையை எதிர்கொள்ளத் தயாரானார். ஆக்ரா கோட்டை அந்நாட்களில் மிகவும் வலிமையான கோட்டைகளில் ஒன்றாக இருந்தது. ஒளரங்கசீபின் பீரங்கி, துப்பாக்கிகளால்கூட அந்தக் கோட்டையைத் தகர்க்க முடியாது. எனவே தாக்குதல் மேற்கொள்வது என்ற பேச்சுகே இடமில்லாமல் இருந்தது.
மேலும் ஆக்ரா கோட்டைக்குள் இருப்பவர்களால் முற்றுகையிட்டிருக்கும் இளவரசரிடமிருந்து மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கில் கூட தாக்குப்பிடிக்க முடியும். இதனால் தாராவுக்குப் புதிய ராணுவத்தை உருவாக்கிக் கொள்ளவும் போதிய கால அவகாசமும் கிடைத்துவிடும் என ஒளரங்கசீப் நினைத்தார். அதைத் தடுக்க உடனே முடிவு செய்தார்.
எனவே, ஜயமுனையில் திறக்கும் கோட்டையின் நீர் வாயிலின் (கிசிரி) வெளிப்புறத்தைக் கைப்பற்ற ஔரங்கசீப் தனது ஆட்களை அனுப்பினார். இதன்மூலம் கோட்டைக்குள் நல்ல தண்ணீர் செல்லும் வழி துண்டிக்கப்பட்டது. கோட்டைக்குள் இருந்தவர்கள் கோடையில் குடிநீரின்றித் தாகத்தின் கொடுமையை அனுபவிக்கத் தொடங்கினர். கோட்டைக்குள் நீண்ட காலம் பராமரிப்பில் இருந்திராத பழைய கிணறுகளின் நீரும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. இதனால் பேரரசரின் அரச சபையில் சௌகரியமாக வாழ்ந்து வந்த சோம்பேறி அதிகாரிகள் பலர் கோட்டையிலிருந்து சத்தம் காட்டாமல் வெளியேறிவிட்டனர்.
மூன்று நாட்கள் ஷாஜஹான் இந்த நெருக்கடியை தாக்குப்பிடித்தார். பின், ‘உன் தந்தையை தாகத்தில் தவிக்கவிட்டுக் கொன்றுவிடாதே’ என்று பரிதாபகரமான கடிதம் ஒன்றையும் ஒளரங்கசீபுக்கு எழுதி அனுப்பினார். ஆனால் ஒளரங்கசீப் மசியவில்லை. ‘உங்களுக்கு நேர்பவற்றுக்கு நீங்களே பொறுப்பு’ என்று பதில் அனுப்பினார்.
தாகத்தைத் தாங்க முடியாமல், சுற்றிலும் இருந்தவர்களின் துயரத்தையும் நிராதரவையும் பார்த்த ஷாஜஹான் சரணடைய முடிவு செய்தார். ஜூன் எட்டாம் தேதியன்று ஒளரங்கசீபின் அதிகாரிகளுக்குக் கோட்டைக் கதவைத் திறந்துவிட்டார். அவர்கள் அரண்மனையில் அரச சபைக்குப் பின்பக்கம் இருந்த அறையில் ஷாஜஹானைச் சிறைப்படுத்தினர். அவரிடமிருந்த அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. அவரை மீட்க யாரும் முயற்சி செய்ய முடியாதபடி கோட்டையைச் சுற்றிலும் கடும் காவல் போடப்பட்டது. அவருடைய அந்தரங்க நபும்சகர்கள் கடிதம் எதையும் கொண்டு செல்ல முடியாமல் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஆக்ரா கோட்டையின் அளவுகடந்த சொத்துகள், அதாவது இந்தியாவை மூன்று தலைமுறைகளாக வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் சேகரித்த சொத்துகள் முழுவதும் ஒளரங்கசீபின் வசம் சென்று சேர்ந்தன.
ஜூன் 10 அன்று இளவரசி ஜஹானாரா, தனது தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாகவும், சகோதரி என்ற உரிமையிலும் ஒளரங்கசீபிடம் பேசிப் பார்த்தார். மொகலாயப் பேரரசை நான்கு சகோதரர்களும் பங்கிட்டுக் கொள்ளும்படி ஷாஜஹானின் பெயரில் கேட்டுக்கொண்டார். ஒளரங்கசீப் புன்முறுவல் பூத்தபடியே அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
9. முராத் பக்ஷின் சிறைப்பிடிப்பு மற்றும் மரணம்
ஜூன் 13 அன்று ஒளரங்கசீப் தாராவைத் தேடி ஆக்ராவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். ஆனால் அவர் மதுராவைச் சென்று சேர்ந்திருந்த நிலையில், பொறாமையும் தீமையும் நிறைந்த முராத் பற்றி மோசமான அபாயகரமான ஒரு செய்தியைக் கேள்விப்பட நேர்ந்தது.
ஒளரங்கசீபின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் முராதின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச் சென்றுவிடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் முராத்திடம் சொல்லத் தொடங்கினர். டெல்லி சுல்தானாக முடிசூட்டிக் கொள்ளவேண்டும் என்ற உங்கள் ஆசையை வெகு தூரத்துக்கு ஒளரங்கசீப் தள்ளிப்போட்டுவிட்டார் என்றும், நீங்கள் இப்போதே வலிமையைப் பெருக்கிக்கொள்ளத் தாமதித்தால் ஒளரங்கசீப் உங்களை எப்போது வேண்டுமானாலும் பலிகடா ஆக்கிவிடக்கூடும் என்றும் ஆலோசனை வழங்கினர். இதையெல்லாம் கேட்டு மனம் மாறிய முராத், ஒளரங்கசீபை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்.
ஒளரங்கசீபின் படையில் இருந்தவர்களுக்கு அதிகச் சம்பளம், சலுகைகள், உரிமைகள், பட்டங்கள் என எல்லாவற்றையும் தந்து தன் பக்கம் இழுக்க ஆரம்பித்தார். ஒளரங்கசீபைச் சென்று சந்திப்பது தனது கௌரவத்துக்கு இழுக்கு என்று நினைக்க ஆரம்பித்தார். இப்படியாக ஒளரங்கசீபின் நட்புக் கூட்டணிக்குள் வெளிப்படையான எதிர்ப்பு கிளம்பியது.
நிலைமை மோசமானது. உடனே ஒளரங்கசீப் தந்திரமாக யோசித்து ஒரு திட்டம் தீட்டினார். முராதுக்கு 20 லட்சம் பணமும் 233 குதிரைகளும் பரிசாகக் கொடுத்து அவருடைய சந்தேகத்தையும் எதிர்ப்பையும் மட்டுப்படுத்தினார். முராதின் உடல்நிலை குணமானதைக் கொண்டாடும் நோக்கில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி அழைப்பு விடுத்தார். தப்பி ஓடிய தாராவுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று பேசலாம் வா என்றும் கூப்பிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக முராதின் நம்பகமான பணியாளரான நூர்-உத-தின் கவாஸுக்கு ஆசைகாட்டித் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். ஜுன் 25 அன்று ஒரு வேட்டையை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த முராதிடம் அவருடைய பணியாளரைவிட்டே தன்னுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படிச் சம்மதிக்க வைத்தார். முராதும் ஒளரங்கசீபைச் சந்திக்கச் சென்றார்.
முராதை ஒளரங்கசீப் அன்புடன் வரவேற்றார். நல்ல விருந்து கொடுத்தார். மதுவை மிகுதியாக அருந்த வைத்தார். முராத் போதையில் மயங்கிக் கிடக்கும்போது அவருடைய ஆயுதங்கள், கவசங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். பின், பெண்களுக்கான நன்கு மூடப்பட்ட பல்லக்கில், வலிமையான குதிரைப்படையின் பாதுகாப்புடன் சலிம்கர்க்கும் அதன்பின் அங்கிருந்து குவாலியர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். இந்த அற்புதமான சதித்திட்டம் முராதின் ஆதரவாளர்களுக்குத் தெரியவே இல்லை. தெரிய வந்தபோது எல்லாம் நடந்து முடிந்திருந்தது.
மறுநாள் காலையில் தலைவர் இல்லாத படை ஒளரங்கசீபின் கட்டுப்பாட்டுக்குள் சென்று சேர்ந்தது. முராதின் விசுவாசமான அதிகாரிகள், அமைச்சர்களுக்குக்கூடப் புதிய எஜமானருக்குக் கீழ்ப்படிவதைத்தவிர வேறு வழியே இருந்திருக்கவில்லை. ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியமும் சொத்துக்களும் இப்போது ஒளரங்கசீப் வசம் குவிந்தன.
குவாலியர் சிறையில் முராத் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கிருந்து அவரைத் தப்புவிக்க நண்பர்கள் மேற்கொண்ட முயற்சியில் கவனக் குறைவினால் மாட்டிக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஒளரங்கசீப் அவரை முழுவதுமாக அப்புறடுத்தத் தீர்மானித்தார். பேரரசரின் துண்டுதலின் பேரில் அலி நக்வியின் இரண்டாவது மகன், 1657இல் தன் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக முராதின் உயிரைக் கேட்டான். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி ‘கண்ணுக்குக் கண்’ – கிசாஸ் தீர்ப்பை நீதிபதிகள் நிறைவேற்றி வைக்கவேண்டும். எனவே டிசம்பர் 4, 1661 அன்று டெல்லி அரியணையைக் கைப்பற்ற விரும்பிய துரதிஷ்டம் மிகுந்த இளவரசரின் தலை குவாலியரின் சிறை வளாகத்தில் இரண்டு அடிமைகளால் துண்டிக்கப்பட்டது. அவருடைய உடல் அந்தக் கோட்டைக்குள்ளேயே புதைக்கப்பட்டது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.