அத்தியாயம் 5
வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு
1. சாமுகர் வெற்றிக்குப் பின் தாரா ஷுகோவைத் துரத்தியபடி…
ஜூன் 5, 1658இல் தாரா ஷுகோ டெல்லிக்குச் சென்று சேர்ந்தார். அங்கே அவர், தலைநகரில் இருந்த செல்வத்தை எல்லாம் கொண்டு புதிய படை ஒன்றை உருவாக்கி, ஆயுதத் தளவாடங்கள் சேகரிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஆக்ரா கோட்டையை ஒளரங்கசீப் கைப்பற்றிவிட்டார் என்றும், அடுத்ததாகத் தன்னைத் தேடித்தான் வருவார் என்ற செய்தியும் கிடைத்ததால் ஒரு வாரம் கழிந்ததும் அங்கிருந்து லாகூருக்குக் கிளம்பி விட்டார். பஞ்சாப் பகுதி தாராவின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. பல வருடங்கள் அவருடைய நிர்வாகப் பொறுப்பில் இருந்த அந்தப் பகுதி, இப்போது அவருடைய விசுவாசியான சைய்யத் கைரத் கானின் வசம் இருந்தது.
10000 பேருடன் டெல்லியில் இருந்து புறப்பட்ட தாரா ஷுகோ, ஜூலை 3 அன்று லாகூர் சென்று சேர்ந்தார். ஒன்றரை மாதம் அங்கு இருந்தபடியே போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்து முடித்தார். அங்கிருந்த பேரரசின் செல்வங்களைக் கொண்டு 20,000 வீரர்களைக் கொண்ட படையை அணி வகுக்கச் செய்தார். தல்வான், ரூபார் பகுதிகளில் இருந்த சட்லெஜ் நதி மீதான படகுப் போக்குவரத்தை முழுமையாகக் கண்காணிக்கும் பொருட்டு வலுவான படை ஒன்றையும் அனுப்பியும் வைத்தார்.
இதனிடையில், தாராவின் ஆட்களிடமிருந்து அலஹாபாத்தைக் கைப்பற்றும் நோக்கில் கன் இ தெளரனை ஒளரங்கசீப் அனுப்பி வைத்தார். மற்றொரு பக்கத்தில் தாராவைத் துரத்திச் செல்லப் பஹதூர் கானையும் அவர் அனுப்பினார். அதன்பின் ஜூலை 6 அன்று டெல்லி வந்து சேர்ந்த ஒளரங்கசீப், அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்து புதிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்து முடித்தார். பின், ஜூலை 21 அன்று ஆலம்கிர் காஸி என்ற பட்டப் பெயருடன் மொகலாயச் சாம்ராஜியத்தின் பேரரசராக முடி சூட்டிக் கொண்டார். பஞ்சாபின் ஆட்சியாளராகக் கலியுல்லா கான் நியமிக்கப்பட்டார். தாராவைத் துரத்திச் செல்லும் படைகளுக்கு வலு சேர்க்க அவரையும் ஒளரங்கசீப் அனுப்பினார்.
ஆகஸ்ட் 5 அன்று ரூபார் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கலியுல்லா கான் சட்லெஜ்ஜைக் கடந்து சென்றார். உடனேயே அங்குக் காவலுக்கு இருந்த தாராவின் தளபதிகள் அங்கிருந்து பயாஸ் நதிக்கரையில் கோவிந்தவால் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். டெல்லியில் இருந்து ஒளரங்கசீப் சட்லெஜ் நதிக்கரைக்கு வந்து சேர்ந்ததும், தாரா லாகூரிலிருந்து முல்தானுக்குத் தன் குடும்பத்தினருடனும் செல்வங்களுடனும் படகில் ஏறித் தப்பிச் சென்றார் (ஆகஸ்ட் 18). ஒளரங்கசீபைக் கண்டு பயந்து தாரா எடுத்த இந்த நடவடிக்கை மீண்டும் அவருடைய வெற்றியை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பயம் அவருடைய படையினரையும் தொற்றிக்கொண்டது.
ஒளரங்கசீபின் படை ஆகஸ்ட் 30 அன்று லாகூரில் இருந்து புறப்பட்டுத் தாராவைத் துரத்திச் சென்றது. செப்டம்பர் 17இல் பேரரசரும் படையுடன் இணைந்து கொண்டார். ஒளரங்கசீப் வருவதை அறிந்த தாரா, முல்தானில் இருந்தும் தப்பித்துச் (செப்டம்பர் 13) சக்கார் பகுதிக்குச் சென்றார் (செப்டம்பர் 30). இந்தச் சமயத்தில் டெல்லியைச் சுஜா முற்றுகையிடவே, அதை முறியடிக்க ஒளரங்கசீப் முல்தானிலிருந்து மீண்டும் டெல்லிக்குத் திரும்ப வேண்டிவந்தது (செப்டம்பர் 30). எனினும் சஃப் ஜிகான், ஷேக் மீர் தலைமையில் 15,000 வீரர்களைக் கொண்ட இரண்டு படைகள் தாராவை விடாமல் சிந்து நதியின் இரு கரைகளிலுமாகத் துரத்திச் சென்றன.
பேரரசரின் படை சக்கர் பகுதியை அடைந்தபோது தாரா பெருமளவிலான செல்வங்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்றும், அவரது நபும்சகத் தளபதி பசந்த் பொறுப்பில் ஏராளமான பீரங்கிகளைப் பக்கர் கோட்டையில் விட்டுச் சென்றிருக்கிறார் என்றும் தெரிய வந்தது. அதோடு நிக்கோலஸ் மனூச்சி என்ற ஐரோப்பியத் தளபதியின் பொறுப்பில் ஏராளமான ஐரோப்பிய வீரர்களையும் விட்டுச் சென்றிருக்கும் தாரா, வெறும் 3000 வீரர்களுடன் மட்டுமே ஷேவான் பகுதியை நோக்கித் தப்பி ஓடியிருக்கிறார் என்ற விவரங்களும் கிடைத்தன. மிகவும் விசுவாசமான தளபதியான தெளத் கான் கூடச் சந்தேகப் புத்தி கொண்ட எஜமானரால் விரட்டியடிக்கப்பட்டதையும் ஒளரங்கசீப் தெரிந்துகொண்டனர்.
இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பேரரசரின் படைகள், ஷேவான் பகுதியில் தாராவின் படைகளுடன் அக்டோபர் 31 அன்று மோதின. சிந்து நதியின் இரண்டு கரைகளையும் ஆக்கிரமித்திருந்த அவர்கள், தாராவின் நகர்வுகளை முடக்கிவிடலாம் என்று நினைத்தனர். ஆனால், படகுச் சண்டையில் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்ததால், அதில் வலிமை மிகுந்திருந்த தாராவின் படையினர் அகன்ற நதியினூடாகப் பாய்ந்து பாதுகாப்பான தத்தா என்ற இடத்துக்குச் சென்றுவிட்டனர் (நவம்பர் 13).
பேரரசர் ஒளரங்கசீபின் படைகள் அவர்களைப் பின் தொடர்ந்து தத்தாவுக்குள் நவம்பர் 18ஆம் தேதி நுழைந்தது. ஆனால் தாராவோ மேலும் தெற்காக ‘படின்’ பகுதிக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் குஜராத்தின் கட்ச் வளைகுடா நோக்கிச் செல்வதாகவும் தகவல் கிடைத்தது.
தாராவைத் துரத்திச் சென்றவர்களை டெல்லிக்குத் திருப்பி அழைத்தார் ஒளரங்கசீப். லாகூரில் இருந்து தாரா தப்பிச் சென்றதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் அவரை இடைவிடாமலும் தளராமலும் துரத்திச் சென்ற படையினருக்கு வெற்றி கை நழுவிப் போயிருந்தது. கிட்டத்தட்ட வெற்றி கைக்குக் கிடைத்த தருணத்திலும் போதிய படகுகள் இல்லாததால் தாராவைச் சிறைபிடிக்க முடியாமல் போய்விட்டது.
2. ராஜ்புதனாவில் தாரா; டோரே போர்.
தத்தா பகுதிக்கு 55 மைல் கிழக்கில் இருந்த படின் பகுதியில் இருந்து புறப்பட்ட தாரா, நவம்பர் இறுதியில் ரான் கடல் காயலைக் கடந்து சென்றார். அப்போது அவருக்கும் உடன் இருந்தவர்களும் போதிய அளவு குடி நீர் இல்லாததால் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டது. அவர்கள் கட்ச் வளைகுடாவின் தலை நகரான பூஜ் பகுதியைச் சென்றடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு அங்கிருந்த ராஜா நல்ல வரவேற்பு கொடுத்தார். கத்தியவாரில் இருந்த நவானகரின் மஹாராஜாவான ஜாம் சாஹிபும் அவர்களை அன்புடன் வரவேற்றார். அப்படியாகத் தாரா 3000 வீரர்களுடன் அஹமதாபாத் வந்து சேர்ந்தார். அங்கே அதிகாரத்தில் இருந்த ஷா நவாஸ் கான் அவருக்கு நட்புக் கரம் நீட்டியதோடு தன் அரசின் கஜானாவையும் திறந்து கொடுத்தார் (ஜனவரி 9, 1659).
அங்கே தாராவின் படை வீரர்களின் எண்ணிக்கை 22,000ஆக அதிகரித்தது. மேலும், சூரத்திலிருந்து பீரங்கிகளும் அவருக்குத் தரப்பட்டன. ஒளரங்கசீபை எதிர்க்க சுஜா தன் படையுடன் அலஹாபாத்தைத் தாண்டிச் சென்ற செய்தியைத் தெரிந்துகொண்டதும் தாரா ஆக்ராவை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். வழியில் அவரைச் சந்தித்த ஜஸ்வந்த் சிங், தாராவை அஜ்மீருக்கு வரும்படிக் கேட்டுக்கொண்டார். அவர், ரத்தோர்களுடனும் பிற ராஜபுத்திரர்களுடனும் சேர்ந்து தாராவுக்கு ஆதரவாகப் போரிட முன்வந்தார்.
இதனிடையில் க்வாஜாவில் சுஜாவைத் தோற்கடித்த ஒளாரங்கசீப் (ஜனவரி 5), மிர்ஸா ராஜா ஜெய் சிங் மூலம் ஜஸ்வந்த் சிங்கை மிரட்டியும் சலுகைகள் தருவதாக ஆசை காட்டியும் அவரது ஆதரவைப் பெற்றுவிட்டார். இதனால் தாராவுக்குத் தன்னை நெருங்கிவிட்ட ஒளரங்கசீபுடன் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டது. உடனே அவர் சமயோஜிதமாகத் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டார்.
தாராவுக்குத் திறந்த வெளியில் ஒளரங்கசீபின் படையுடன் போரிட்டு வெல்வது சாத்தியமில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அதனால் அவர் அஜ்மீருக்குத் தெற்கே நான்கு மைல் தொலைவில் இருந்த டோரே கணவாயில் இருந்தபடி போரிட முடிவு செய்தார். அந்த இடம் குறுகலான நுழைவுப் பகுதியைக் கொண்டதால் அங்கிருந்தபடி மிகப் பெரிய எதிரியையும் சமாளிப்பது எளிதாக இருந்தது. தாராவின் படைகள் இரு பக்கங்களிலிருந்தும் பிதிலி, கோக்லா ஆகிய இரண்டு மலைப் பகுதிகளால் பாதுகாக்கப்பட்ட, அவர்களுக்குப் பின் பக்கத்தில் வளம் கொழிக்கும் அஜ்மீர் நகரம் இருந்தது. அங்கிருந்து தேவையான உணவு, தளவாடங்கள் ஆகியவற்றை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். தாரா அங்கே தனது படையின் தென் பகுதியில் சிறிய மதில் சுவரை எழுப்பி அரண் அமைத்துக் கொண்டார். மேலும் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கில் பல்வேறு பதுங்குகுழிகளையும் தற்காலிகக் காப்பரண்களையும் அமைத்தார்.
தென் திசை வழியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த ஒளரங்கசீப், முதலில் பீரங்கிக் குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தார். மார்ச் 12, 1659 அன்று மாலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து ஆரம்பித்து மறுநாள் 13, இரவு வரை அவர் தாக்குதல் நடத்தினார். தாராவின் பீரங்கிப் படையும், மலை உச்சியில் இருந்த துப்பாக்கிப் படைகளும் பாதுகாப்பான உயரத்தில் இருந்துகொண்டு ஒளரங்கசீபின் படையைச் சுட்டு வீழ்த்தின.
போதிய பாதுகாப்பு இல்லாதாதால் ஒளரங்கசீபின் பீரங்கிப் படையினரும், காலாட் படையினரும் பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டனர். ஒளரங்கசீபின் பீரங்கிப் படையால் திறம்பட எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடியவில்லை. எதிரிகள் அமைத்திருந்த பள்ளங்கள், தடுப்பு அரண்கள், பதுங்கு குழிகள் எல்லாம் ஊடுருவ முடியாதபடி வலுவாக இருந்தன. எனவே, மார்ச் 14 அன்று ஒளரங்கசீப் தன் தளபதிகளை அழைத்துப் போர் வியூகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துக் கலந்தாலோசித்தார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிரியின் இடப் பக்கப் படை மீது ஷா நவாஸ் கான் தலைமையில் மிக மூர்க்கமான தாக்குதலை முன்னெடுப்பது என்றும், வலப் பக்கப் படையைப் பேரரசரின் படையே நேரடியாகத் தாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த வியூகத்தின் வெற்றி ரகசியம் முன் பக்கத் தாக்குதலில் அல்லாமல், ரகசியமாக எதிரியின் இடது பக்கத்தில் பின்னால் இருக்கும் கோக்லா மலை மீது ஏறிச் சென்று தாக்குவதில்தான் இருந்தது. ஜம்மு மலைப் பகுதியைச் சேர்ந்த ராஜா ராஜ்ரூபின் படையினருக்கும் அவருடைய வம்சத்தினருக்கும் மலை ஏறுவதில் நல்ல பயிற்சி இருந்தது. அவர்கள்தான் மலை உச்சிக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்திருந்தனர்.
மார்ச் 14ஆம் தேதி மாலை வாக்கில் எதிரியின் இடது பக்கப் படை மீது ஷா நவாஸ் கான் தலைமையில் பேரரசப் படையினர் தாக்குதல் நடத்தினர். அவர்களுடைய பீரங்கிப் படையானது, தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் தாராவின் இடது பக்கப் படையினருக்கு, பிற படைவீரர்கள் தமது பதுங்கு குழியில் இருந்து வெளியேறிச் சென்று உதவ முடியாதபடி தீவிரமான தாக்குதலை முன்னெடுத்தது. மிகக் கடுமையான போர் இந்த முனையில் நடந்தது. தாராவின் வீரர்கள் தீவிரமாகப் போராடித் தமது நிலைகளைத் தற்காத்து வந்தனர். பேரரசுப் படைகள் அலை அலையாக வந்து தாக்கிய வண்ணம் இருந்தன. ஒருவழியாகத் தாராவின் படையினரைப் பின்னோக்கித் தள்ளி, அவர்களைப் பதுங்குகுழிகள், தடுப்புகளுக்கு மிக அருகில் வரை கொண்டு வந்துவிட்டனர்.
இப்படித் தாராவின் படையினர் முன் பக்கத் தாக்குதலைச் சமாளித்துக் கொண்டிருந்த நேரத்தில் ராஜ்ரூபின் ஆட்கள் கோக்லா மலையின் பின்பக்கமாக ஏறிச் சென்றுவிட்டனர். மலை உச்சியில் ஏறியதும் தமது கொடியை அங்கு நட்டு உரத்த குரலில் கோஷமிட்டனர். தாராவின் படை தாங்கள் பின்பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டுவிட்டோம் என்பது தெரிந்ததும் உறைந்து நின்றது. எனினும் பல வீரர்கள் துணிந்து தாக்குதலை முன்னெடுத்தனர். இந்த இறுதி எதிர்ப்பை முறியடிக்க ஷேக் மீர் தனது யானையை முன்னுக்குக் கொண்டு வந்தார். ஆனால் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் அவர் கொல்லப்பட்டார்.
இறுதியாக எதிரிகளின் பதுங்குகுழிகள் கைப்பற்றப்பட்டன. ஷா நவாஸ் கான் வெற்றி பெற்றுவிட்டோம் என்று முழக்கமிட்டபடித் தன் வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அப்போது பார்த்துப் பாய்ந்து வந்த ஒரு பீரங்கிக் குண்டு அவரது உடலைச் சிதறடித்தது. அதைக் கண்ட அவருடைய படையினரும் அலறி அடித்தபடி இருளுக்குள் தப்பி ஓடினர்.
நான்கு அரண்களில் ஒன்று மட்டுமே தகர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவே போதுமானதாக இருந்தது. கோக்லா மலை வழியாக இறங்கிய படை வீரர்கள் தாராவின் படைக்குள் ஊடுருவி அவர்களைக் கொன்று குவித்தனர். உடனே தாரா ஷூகோ தனது மகன் சிஃபிர் ஷுகோவுடனும், கூடவே பத்துப் பன்னிரண்டு வீரர்களுடனும் அங்கிருந்து தப்பித்துக் குஜராத்தை நோக்கித் தலைதெறிக்க ஓடினார்.
அஜ்மீர் பிராந்தியம் முழுவதும் பேரரசுப் படைகளின் வேட்டைக் காடாகியது. ஜஸ்வந்தின் அறைகூவலின் பேரில் ஆயிரக்கணக்கான ராஜபுத்திரர்கள் வேட்டைக் கழுகுபோல் குழுமியிருந்தனர். தோற்றுப்போன படையினரின் காளைகள், ஒட்டகங்கள், குதிரைகள் விட்டுச் சென்ற பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
3. தாரா ஷுகோவின் தப்பி ஓட்டமும் சிறைப்பிடிப்பும்
டோரே போர் நடைபெற்றபோது, தாராவின் மனைவியர் முகாமும் கஜானாவும் அஜ்மீரில் அனாசாகர் ஏரிக் கரையில் இருந்தன. அவை, யானைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் புடைசூழ விசுவாசமான நபும்சகனான க்வாஜா மக்கூலின் பொறுப்பில் உரிய பாதுகாப்புப் படைகளுடன் இருந்தன. இவர்கள் மார்ச் 14 இரவன்று தப்பி ஓடி, மார்ச் 15 மதியம் வாக்கில் தாராவுடன் மைர்தா பகுதியில் சென்று சேர்ந்துகொண்டனர். ஒளரங்கசீப் இவர்களைத் துரத்திப் பிடிக்க ஜெய் சிங் மற்றும் பஹாதுர் கான் தலைமையில் வலிமையான படையை அனுப்பி வைத்தார்.
தன்னை நோக்கிப் பெரும் படை ஒன்று வருவதை அறிந்துகொண்ட தாராவால் இடையில் எங்கேயும் ஓய்வெடுக்க முடியவில்லை. அவர், மைர்தா பகுதியிலிருந்து கிளம்பியபோது வெறும் 2000 வீரர்கள் மட்டுமே துணைக்கு வந்தனர். அவர்கள் குஜராத் நோக்கி நாளொன்றுக்குச் சுமார் 30 மைல் தூரம் பயணம் செய்த நிலையில் கடும் வெப்பம், புழுதியின் காரணமாகப் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அவர்கள் தங்குவதற்குப் போதிய கூடாரங்களோ, பயணிப்பதற்குப் போக்குவரத்து விலங்குகளோ இருக்கவில்லை. அவர்களிடம் இருந்த சொற்ப ஒட்டகங்களும் குதிரைகளும்கூட வெப்பத்தினாலும் அதிகப்படியான சுமையினாலும் சோர்ந்துபோய் இறந்தன.
தாரா பயணம் செய்யும் வழியெங்கிலும் அவருக்கு முன்னதாகவே ஒளரங்கசீபின் கடிதங்கள் சென்று சேர்ந்திருந்தன. இதனால் உள்ளூர் தலைவர்கள் எல்லாரும் தாராவைச் சிறைப்பிடிக்கத் தயாராக இருந்தனர். அஹமதாபாத்தில் இருந்து திரும்பி வந்த தாராவின் தூதுவர், அந்த நகருக்குள் அவர் நுழைந்தால் தடுத்துச் சிறைப்படுத்தப்படுவார் என்று சொன்ன செய்தியைக் கேட்டுத் தாராவின் இறுதி நம்பிக்கையும் பொய்த்துப் போனது. இறுதி அடைக்கலமும் கை நழுவிப் போனதை உணர்ந்த தாரா, குழப்பமும் சோகமும் சூழத் தளர்ந்துபோனார். அதோடு உடன் வந்த அந்தப்புரப் பெண்களின் வேதனையும் வலியும் வேறு அனைவரையும் கண் கலங்க வைத்திருந்தன.
தாராவின் நோய்வாய்ப்பட்ட மனைவிக்குச் சிகிச்சையளித்த பெர்னியர் என்ற மருத்துவர், அவர்கள் அனுபவித்த துயரம் தொடர்பாக வேதனை ததும்பும் சித்திரம் ஒன்றைத் தீட்டியிருக்கிறார்:
’பரம ஏழையைப் போலவும் அழுக்கடைந்த உடையுடனும் இருந்த அந்தப்புர மகளிருக்கு ஐந்து ஒட்டகங்கள், ஒரே ஒரு குதிரை, ஒரே ஒரு காளை வண்டி என நிலைமை மிகவும் பரிதாபகரமான நிலையை எட்டியிருந்தது. பிற பொருட்களைச் சுமந்துவரச் சொற்ப ஒட்டகங்கள் மட்டுமே இருந்தன. அவருடைய படை, கை விட்டு எண்ணும் அளவுக்குக் குறைந்துவிட்டிருந்தது’ என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆசியாவிலேயே செல்வ வளம் மிகுந்த அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வாரிசு, ரான் கடல் காயலை மீண்டும் ஒருமுறை கடந்து சிந்து நதியின் தென் கரைக்குச் சென்று சேர்ந்தார் (மே ஆரம்பவாக்கில்).
இங்கேயும் ஒளரங்கசீப் முன் கூட்டியே சிந்தித்து, சிந்து நதியின் தென்பகுதிக் கரையைக் கண்காணிக்க லாகூரில் இருந்து கலியுல்லா கானை பக்கர் பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தார். ஒளரங்கசீபின் உள்ளூர் அதிகாரிகளும், ஜெய் சிங்கின் படைகளும் வடக்கு, கிழக்கு, தென் கிழக்கு என அனைத்துப் பக்கங்களிலும் தாராவைச் சுற்றி வளைத்திருந்தனர். தப்பிச் செல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது. தாரா வட மேற்குப் பகுதி வழியாக சிந்து நதியைக் கடந்துசென்று சிவிஸ்தானுக்குள் நுழைந்தார். அங்கிருந்து கந்தஹார் வழியாகப் பாரசீகத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்திருந்தார்.
இதனிடையில் அஜ்மீரில் இருந்து வந்த ஜெய் சிங், தாராவை நெருங்கிவிட்டிருந்தார். நாளொன்றுக்கு 16-20 மைல் பயணம் செய்து வந்திருந்தவர், குடிநீர்ப் பற்றாக்குறை, தீவனங்கள் இல்லாத நிலை, குதிரைகள், காளைகள் போதிய அளவு இல்லாத நிலை ஆகியவற்றையெல்லாம் மீறித் தாராவை நெருங்கி இருந்தார். தாராவைப் பின் தொடர்ந்து வந்த அவர், ரான் கடல் காயலைக் கடந்து கட்ச் வளைகுடாவையும் கடந்தார்.
அவர், வழி நெடுகப் பட்டினியில் வாடியபடியே வந்திருந்தார். ‘சில இடங்களில் ஒரு சேர் தானியம் ஒரு ரூபாய்க்கு விற்றது. பிற இடங்களில் எதுவுமே கிடைத்திருக்கவில்லை’. ஆனாலும் துளியும் அசராமல் தாராவைத் துரத்தி வந்தவர், சிந்து நதிக் கரையில் அமைந்திருந்த சிவிஸ்தானை ஜூன் 11, 1659இல் வந்தடைந்தார். வழியில் அவருடைய படையில் முக்கால்வாசிக் குதிரைகளை இழக்க நேர்ந்திருந்தது. பின், மொகலாய இந்தியப் பகுதியிலிருந்து தாரா ஷுகோ வெளியேறிவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட ஜெய் சிங், சிந்து நதிக்கரையோரமாகப் பயணம் செய்து மீண்டும் ஹிந்துஸ்தானுக்குத் திரும்பினார்.
தாராவின் குடும்பத்தினருக்குப் பாரசீகம் செல்வதில் துளியும் விருப்பம் இல்லை. அவருடைய அன்பான மனைவி நதீரா பானுவின் உடல் நிலை மிகவும் மோசமாகியிருந்தது. போதிய உணவு இன்றி போலன் கணவாய் வழியிலும், தங்குவதற்கு நிழல் கூட இல்லாத கந்தஹார் வழியிலுமான சிரமமான பயணமும் அவரை நிச்சயம் கொன்றுவிடும்போல தெரிந்தது. எனவே தாரா தன் முடிவை மாற்றிக்கொண்டு தனக்கு அடைக்கலம் தந்து உதவக்கூடிய அருகாமைத் தலைவரைத் தேடும் முயற்சியில் இறங்கினார். தாதர் பகுதியின் ஜமீந்தாரான மாலிக் ஜிவான் இந்த உதவியைச் செய்யக்கூடும் என்று அவர் நம்பினார். போலன் கணவாயின் இந்திய முனையில் இருந்து 9 மைல் கிழக்கில் தாதர் அமைந்திருந்தது.
சில வருடங்களுக்கு முன்பாக ஷாஜஹான் இந்த ஆஃப்கானியத் தலைவரை யானையை விட்டு மிதித்துக் கொல்ல வேண்டும் என்று தண்டனை வழங்கியிருந்தார். தாரா தன் தந்தையிடம் பேசி, இவருடைய உயிரைக் காப்பாற்றி விடுதலையும் பெற்றுத் தந்திருந்தார். இதனால் மாலிக் ஜிவான் நிச்சயம் தான் செய்த உதவிக்குக் கைமாறு செய்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் அடைக்கலம் தேடிச் சென்றார். மாலிக்கும் மிகுந்த அன்புடன் தாராவை வரவேற்று அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார் (ஜூன் 6).
தாதருக்கான வழியில் நதிரா பானுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருந்தது. அவருக்கு மருந்தும் ஓய்வும் உடனடித் தேவைப்பட்டன. ஆனால் இரண்டும் கிடைக்காததால் அவருடைய உயிர் பிரிந்தது. தன் மனைவியை இழந்த தாரா நிலை குலைந்துவிட்டார். ‘உலகம் அவருக்கு இருட்டிக் கொண்டு வந்தது. அவர் முழுவதுமாகத் தளர்ந்துவிட்டிருந்தார். சிந்திக்கும் திறனையும் சுயக் கட்டுப்பாட்டையும் அவர் முழுவதுமாக இழந்துவிட்டிருந்தார்’. இறுதியாக அவர், தனது ஆன்மிக வழிகாட்டியான சூஃபி மியான் மீரின் சமாதி இருந்த லாகூருக்குத் தன் மனைவியின் உடலை அடக்கம் செய்ய அனுப்பினார். தன்னிடம் எஞ்சியிருந்த 70 படை வீரர்களையும் விசுவாசமான அதிகாரி குல் முஹம்மதுவையும் உடன் அனுப்பிவைத்தார்.
’உங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்பினால் சென்று கொள்ளலாம்; பாரசீகத்துக்கு என்னுடன் வருவதானால் வரலாம். உங்கள் விருப்பப்படிச் செய்துகொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினார். இப்படியாக அருகில் ஓர் ஆதரவாளர் கூட இல்லாத தனி மரமாக, தனக்கு இப்போது அடைக்கலம் தந்தவரின் முழுக் கருணையை மட்டுமே நம்பி இருக்கும் நிராதரவான நிலையில் தாரா ஷுகோ இருந்தார். ஆனால், தாரா நாடிச் சென்ற ஆஃப்கானிய நண்பரின் நன்றி உணர்ச்சியையும் விசுவாசத்தையும் பணத்தாசை வென்றிருந்தது. அவர், தாராவையும் அவருடைய இளைய மகனையும், இரண்டு மகள்களையும் சிறைப்பிடித்துப் பஹதூர் கானிடம் ஒப்படைத்து விட்டார் (ஜூன் 9).
4. தாராவின் அவமானமும் படுகொலையும்
சிறைபிடிக்கப்பட்ட தாராவும் அவரது வாரிசுகளும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர் (ஆகஸ்ட் 29). புழுதி படிந்த சிறிய பெண் யானையின் மேல் மூடப்படாத அம்பாரியில் தாரா அமரவைக்கப் பட்டிருந்தார். பக்கத்தில் 14 வயதேயான இரண்டாவது மகன் சிஃபிர் சுகோ இருந்தார். அவர்களுக்குப் பின்னால் உருவிய வாளுடன் அடிமை நாஸர் பேக் அமர்ந்திருந்தார்.
உலகிலேயே அதிச் செல்வச் செழிப்பு மிகுந்த அரியணையின் வாரிசு, பயணத்தினால் அழுக்கடைந்து முரட்டுத்தனமாக இருந்த உடையுடன் ஏழைகள் அணிவது போன்ற நிறம் மங்கிய தலைப்பாகையுடன் கழுத்தில் ஆரங்கள், மாலைகள் எதுவுமின்றி அமர்ந்திருந்தார். அவருடைய கைகள் சுதந்தரமாக இருந்தன. ஆனால், கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன. ஆகஸ்ட் மாத வெய்யிலில் உடல் கருக, முன்னாளில் ராஜ மரியாதையுடன் சென்ற அதே வீதிகளின் வழியே இப்போது அடிமையைப்போல இழுத்துச் செல்லப்பட்டார். அவமானத்தில் குன்றியவர், எந்தப் பக்கமும் யாரையும் பார்க்காமல் தலை குனிந்தபடியே ’உலர்ந்த சருகுபோல்’ வந்தார்.
மக்கள் அனைவரும் அவரைப் பரிதாபத்துடன் பார்த்தனர். ‘ஏராளமாகக் கூடியிருந்தவர்கள் எல்லாம் தாராவின் நிலையைப் பார்த்து அழுது புலம்பியபடியே’ இருந்ததாக மருத்துவர் வெர்னியர் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்று மாலையே அமைச்சர்களை அழைத்த ஒளரங்கசீப், தாராவை என்ன செய்ய என்று தனியாக ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற தனிஷ்மந்த் கான் (பெர்னியரின் புரவலர்) தாராவை உயிருடன் விட்டுவிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் சையிஸ்தா கான், முஹம்மது அமின் கான், பஹாதுர் கான் மற்றும் அந்தப்புரத்தில் இருந்த இளவரசி ரெளஸன்னாரா ஆகியோர் நாட்டுக்கும் இஸ்லாமுக்கும் நன்மை கிடைக்கத் தாராவைக் கொன்றுவிடும்படிச் சொன்னார்கள். பேரரசரின் போஷிப்பில் இருந்த மதக் குருமார்கள் இஸ்லாமுக்கு விரோதமாக நடந்துகொண்ட குற்றத்துக்காகத் தாராவுக்கு மரணத் தண்டனை விதித்தனர்.
தாராவைக் காட்டிக்கொடுத்த துரோகி மாலிக் ஜிவானுக்கு எதிராக, அவர் டெல்லிக்கு வந்த நாளன்று (ஆகஸ்ட் 30) மக்களால் ஒரு கலவரம் முன்னெடுக்கப்பட்டது. அவருக்கென்று ஒரு தனி ஹஜரி உருவாக்கப்பட்டுக் பக்தியார் கான் என்ற பட்டமும் தரப்பட்டிருந்தது. இந்தக் கலவரம் தாராவின் கொலையில் சென்று முடிந்தது.
அன்று இரவே நாஸர் பெய்கும் வேறு சில அடிமைகளும் தாரா அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் பாய்ந்து சென்றனர். தாரா ஷுகோ தன் மகனை அவர்களுடைய தாக்குதலில் இருந்து பாதுகாக்க மார்போடு அணைத்துக் கொண்டார். ஆனால் 14 வயதேயான சிஃபிர் ஷுகோ தந்தையின் அரவணைப்பில் இருந்து பறித்து இழுக்கப்பட்டார். பின், அவர்கள் மகன் கண் முன்பாகவே தந்தைத் தாரா ஷுகோவைக் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர். ஒளரங்கசீபின் உத்தரவுக்கு ஏற்ப, வெட்டப்பட்ட தாராவின் உடல் யானை மேல் வைத்து தெருக்களின் வழியே இன்னொரு முறை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இறுதியில் ஹுமாயூனின் கல்லறைக்குக் கீழே ஒரு ரகசிய அறையில் புதைக்கப்பட்டது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.