Skip to content
Home » ஔரங்கசீப் #10 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 2

ஔரங்கசீப் #10 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 2

Dara Shuko

5. சுலைமான் ஷுகோவின் மரணம்

தாராஷுகோவின் மூத்த மகன் சுலைமான் ஷுகோவுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். பனாரஸுக்கு அருகில் நடைபெற்ற போரில் ஷுஜாவை வென்ற சுலைமான், தோற்கடிக்கப்பட்ட தன் சித்தப்பாவைப் பிஹாரிலிருந்து முங்கிர் பகுதிவரை துரத்திச் சென்றார். இதற்கிடையில் மே 1658 வாக்கில் நடைபெற்ற தர்மத் போரில் ஒளரங்கசீப் வென்றுவிடவே, தாரா சுலைமானைத் தன்னுடன் வந்து சேர்ந்துகொள்ளும்படித் செய்தி அனுப்பினார். இதையடுத்து சுலைமான் ஷூகோ, சித்தப்பாவுடனான போரை நிறுத்திவிட்டு உடனே திரும்ப முடிவு செய்தார்.

அவர், ஜூன் 2 அன்று அலஹாபாதுக்கு மேற்கே 105 மைல் தொலைவில் இருந்தபோது சாமுகர் போரில் தன் தந்தை படுதோல்வி அடைந்த விவரத்தைத் தெரிந்துகொண்டார். இதைக் கேட்டவுடன் அவருடைய வீரர்கள் சிதறி ஓடத் தொடங்கினர். சுலைமானின் முக்கிய தளபதிகளான ஜெய் சிங், திலிர் கான் போன்றோரும், பிற அதிகாரிகளும்கூட அவரை விட்டுவிட்டு ஒளரங்கசீப் பக்கம் சென்றனர். இதனால் அவரது படையினரில் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது வெறும் 6000 பேர் மட்டுமே இப்போது எஞ்சியிருந்தனர்.

சுலைமான் இவர்களை அழைத்துக்கொண்டு ஜூன் 4 வாக்கில் அலஹாபாத் வந்து சேர்ந்தார். அரண்மனையில் இருந்த பெரும் செல்வம், விலை மதிப்பு மிகுந்த மரச்சாமான்கள், பிற பொருட்கள், அந்தப்புர மகளிர் இவற்றையெல்லாம் பார்த்த அவர், அங்கேயே ஒரு வாரத்தை வீணாகக் கழித்தார்.

பிறகு தனது ஆதரவாளர்களான பர்ஹா பகுதியின் சையதுகள் கொடுத்த ஆலோசனைகளைக் கேட்டு பஞ்சாபில் இருந்த தந்தையிடம் சென்று சேர முடிவெடுத்த அவர், எதிரிப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து கங்கையின் வடக்குக் கரையின் வழியாக, மலை அடிவாரப் பகுதியில் நதிகலைக் சுற்றிக்கொண்டு செல்லத் தீர்மானித்தார்.

இத்தகைய பயணங்களை மேற்கொண்ட சுலைமான், நகினாவிலிருந்து கங்கை நதி வழியாக ஹரித்துவாருக்கு எதிர்முனையில் இருந்த சாந்தி பகுதிக்கு வெகு விரைவாகச் சென்று சேர்ந்தார். வழியெங்கும் அவருடைய படையைச் சேர்ந்த வீரர்கள் பெரிய எண்ணிக்கையில் விலகிக்கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் டெல்லியில் இருந்து கிளம்பி வந்த ஒளரங்கசீபின் படைகள் தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் அவர்களைச் சுற்றி வளைத்தனர். இதனால் வேறு வழியில்லாத சுலைமான், அடைக்கலம் தேடி ஸ்ரீநகருக்குத் தப்பி ஓடினார். ஆனால் அங்கிருந்த பர்ஹா சையதுகள் இவருடன் இணைந்துகொள்ள மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் ஸ்ரீநகரின் (கர்வால்) ராஜா பிருத்வி சிங் அவருக்கு அடைக்கலம் தர முன்வந்தார். ஆனால், ‘சுலைமானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவர்களது சேவகர்கள் 17 பேருக்கு மட்டுமே அடைக்கலம் தருவேன். படைவீரர்கள் இங்கு வரக்கூடாது’ என்ற நிபந்தனையையும் அவர் விதித்தார். அந்த ராஜா, நெருக்கடியில் இருந்த இளவரசரை நல்ல முறையில் கவனித்துக்கொண்டார். இதனால் சுலைமான் ஷூகோ ஒரு வருட காலத்துக்கு அங்கு எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்.

இந்த நேரத்தில் சகோதரர்கள் அனைவரையும் வென்று முடித்திருந்த ஒளரங்கசீப், தன் கவனத்தைச் சுலைமான் ஷுகோ மீது திருப்பினார். ஜூலை 27, 1659இல் ராஜா ராஜரூபரை ஸ்ரீநகர் நோக்கி அனுப்பிய ஒளரங்கசீப், அங்கே ராஜாவின் அரவணைப்பில் இருந்த சுலைமானைச் சரணடையச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் பேசிப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதன்பின் சுலைமானை சரணடையச் செய்யும் பொறுப்பை ஜெய் சிங்கிடம் ஒளரங்கசீப் ஒப்படைத்தார். அவரோ, ‘பேரரசரின் ஆணைக்குக் கட்டுப்படாமல் நடந்துகொண்டு ராஜ்ஜியத்தின் அழிவுக்குக் காரணமாகிவிட வேண்டாம்’ என்று பிரித்வி சிங்குக்குக் கடிதம் அனுப்பினார்.

ஸ்ரீநகரின் முதிய அரசரோ, அடைக்கலம் தேடி வந்தவருக்குத் துரோகம் செய்த பழியைச் சுமக்கத் தயாராக இல்லாமல் பேரரசரின் ஆணைக்கு அடிபணிய மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய மகனும் அரச வாரிசுமான மேதினி சிங் உலகியல் நடைமுறை புரிந்தவராக இருந்தார். டெல்லியிலிருந்து கிடைக்கவிருந்த பரிசுகளே அவரது மனம் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தன. இதற்கிடையில் ஒளரங்கசீப் வேறு ஏற்கெனவே அருகில் இருந்த மலையக ராஜாக்களை படையெடுத்துச் சென்று கர்வாலைத் தமது ராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொள்ளும்படி தூண்டியிருந்ததால் சாம்ராஜ்யத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சம் வேறு அவருக்கு இருந்தது. அதனால் அவர் சுலைமான் ஷூகோவைப் ஒளரங்கசீபிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

தனக்கு அடைக்கலம் தந்தவர் எடுத்த முடிவை கேள்விப்பட்ட சுலைமான் ஷுகோ, அங்கிருந்து தப்பி லடாக்கின் பனிப் பிரதேசத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அவர்கள் சுலைமானைப் படுகாயங்களுடன் பிடித்து ஒளரங்கசீபின் பிரதிநிதி வசம் ஒப்படைத்தனர். இதையடுத்து சுலைமான் ஷூகோ ஜனவரி 2, 1661 அன்று டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டார்.

அங்கே அவர் டெல்லி அரண்மனையின் பிரமாண்ட அரங்கில் தன் அதி பயங்கரச் சித்தப்பாவின் முன் நிறுத்தப்பட்டார். அவருடைய இளமை, பேரழகு, போர்த்திறமை, புகழ், இப்போதைய துரதிர்ஷ்ட நிலை எல்லாம் அங்கிருந்த அரசச் சபையினரிடையே கருணையை வரவழைத்தது. பேரரசரின் அந்தப்புர மகளிரும்கூடச் சுலைமானிடம் இரக்கம் காட்டினர்.

ஒளரங்கசீபும்கூட அன்புடன் பேசினார், ‘கவலைப்படாதே. உனக்கு எந்தவொரு கெடுதலும் வராது. நீ அன்புடனே நடத்தப்படுவாய்’ என்று சொன்னார்.

சித்தப்பா சொன்னதைக் கேட்ட சுலைமான், முதலில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சலாம் வைத்தார். பின் தொடர்ந்து பேசிய அவர், ‘நீங்கள் எனக்குப் பெளஸ்தா* கொடுக்கத் தீர்மானித்திருந்தால் அது மட்டும் வேண்டாம். தயவு செய்து என் உயிர் வெகுச் சீக்கிரம் போகும்படியே ஏதாவது செய்துவிடுங்கள்’ என்று கெஞ்சினார்.

ஒளரங்கசீபும் ‘அப்படியே செய்கிறேன்’ என்று உரத்தக் குரலில் மிகுந்த அக்கறையுடன் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால், அக்கறையோடு கொடுத்த வாக்குறுதியை ஒளரங்கசீப் மீறினார். அவர்கள் சுலைமானைக் குவாலியர் சிறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே போதைப் பொருட்களை அதிகமாகக் கொடுத்துச் சுலைமான் ஷுகோவைச் சிறுகச் சிறுகக் கொன்றார்கள் (மே 1662).

_____
*பெளஸ்தா விஷம் என்பது ஓபியம் அல்லது கசகசா விதைகளை நீரில் ஓர் இரவு முழுவதும் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் பானம். எந்த இளவரசர்களின் தலையைப் பேரரசர் வெட்டத் தயங்குகிறாரோ அவர்களைக் குவாலியர் கோட்டைச் சிறையில் அடைத்துவைத்து, இந்தப் பானத்தைத் தினமும் காலையில் ஒரு கோப்பை நிறையக் கொடுத்துக் குடிக்கச் சொல்வார்கள். முழுவதையும் குடிக்கும் வரை வேறு உணவு எதையும் தரமாட்டார்கள். அதை அருந்துபவர்கள் தமது உடல் வலிமையை மெள்ள இழந்து, சிந்திக்கும் திறனையும் மெள்ள மெள்ள இழந்துவிடுவார்கள். நீண்ட நாட்கள் இதைக் குடித்தால் பித்துப் பிடித்து இறுதியில் கோரமான மரணத்தை அடைவார்கள்.
_____

6. ஆட்சியைப் பிடிக்க ஷுஜாவின் முதல் முயற்சி: பஹாதூர்பூர் போர்

ஷாஜஹானின் இரண்டாவது மகன் முஹம்மது ஷுஜா. வங்காளத்தின் ஆளுநராக இருந்த அவர், அறிவுக் கூர்மை மிகுந்தவராகவும், நல்ல ரசனை மற்றும் இணக்கமான மனநிலை கொண்டவராகவும் இருந்தார். ஆனால், சுக போகங்களில் அவருக்கு இருந்த மிகுதியான ஈடுபாடும், இலகுவான வங்காள ஆட்சிப் பொறுப்பும், 17 ஆண்டுகள் உற்சாகமூட்டும் பகுதியில் வாழ்ந்த அமைதியான வாழ்க்கையும் அவரை மிகவும் பலவீனப்படுத்தியிருந்தன.

மந்தநிலை, அலட்சியம் அவரிடம் மிகுந்திருந்தன. அவரிடம் இருந்த கடும் போராட்டக் குணம், விடாமுயற்சி, விழிப்புணர்வு, ஆழமான சிந்தனை எல்லாம் காணாமல் போயிருந்தது. அவருடைய ஆட்சிப் பொறுப்பில் நிர்வாகச் சீர்கேடுகள் நடக்கத் தொடங்கியிருந்தது. அவருடைய படைகள் போர்த் திறமை குறைந்ததாக மாறியிருந்தன. அனைத்துத் துறைகளும் தளர்ந்து, சோர்ந்துவிட்டிருந்தன. அவருடைய சிந்தனை வலிமை முன்புபோலத்தான் இருந்தது. ஆனால், அவற்றுக்கு அதிகமான உந்துதல் தேவைப்பட்டது. அவ்வப்போது சிற்சில மின்னல் கீற்றுபோல் அது வந்துபோனது. அவரால் அப்போதும் தீவிரமான அதிரடியான முயற்சிகளை எடுக்க முடிந்தது. ஆனால், தொடர்ந்து செயல்பட முடியாதவராக, விட்டு விட்டுச் செயல்படுபவராக ஆகியிருந்தார்.

ஷாஜஹானின் உடல் நலம் குன்றியதும் அந்தச் செய்தி மிகைப்படுத்தப்பட்டு வங்காளத்தின் தலைநகரான ராஜ்மஹாலில் இருந்த ஷுஜாவுக்கு வந்து சேர்ந்தது. உடனேயே அவர், ‘அப்துல் ஃபெளஸ் நசீருத்தீன் முஹம்மது, மூன்றாம் தைமூர், இரண்டாம் அலெக்சாண்டர், ஷா ஷுஜா காஸி’ என்ற பட்டத்துடன் தன்னைத் தானே பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்.

மிகப் பெரிய ராணுவத்தை அழைத்துக்கொண்டு கிளம்பிய அவர், ஏராளமான அற்புத ரகப் பீரங்கிகள், மிகுந்த பயன் தரக்கூடிய வங்காளத்தின் போர் படகுகள் (நவ்வாரா) ஆகியவற்றுடன் ஜனவரி 24, 1658இல் பனாரஸுக்கு வந்து சேர்ந்தார். இதனிடையில் தாரா ஷுகோ தன் மூத்த மகன் சுலைமான் தலைமையில் 22,000 பேர் கொண்ட மிகப் பெரிய படையை ஷுஜாவுக்கு எதிராக அனுப்பி இருந்தார். அவருக்குத் துணையாக மிர்ஸா ராஜா ஜெய் சிங்கையும், திலிர் கான் ருஹேலாவையும்கூட அனுப்பி வைத்தார்.

பிப்ரவரி 14 அதிகாலையில் பனாரஸுக்கு வடக் கிழக்கில் ஐந்து மைல் தொலைவில் இருந்த பஹாதுர்பூரில் வந்த சுலைமான், அங்கிருந்த ஷுஜாவின் முகாமைத் திடீரென்று தாக்கினார். இந்தத் தாக்குதலை ஷுஜாவும் படையினரும் சற்றும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. தூங்கிக் கொண்டிருந்த அவர்களுக்கு ஆயுதங்களை எடுக்கவோ கவசங்களை அணியவோகூட அவகாசம் கிடைக்கவில்லை. அவர்கள், அனைத்தையும் போட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். ஷுஜா சிரமப்பட்டு ஒரு யானை மீது ஏறிக் கொண்டு எதிரிகளின் வளையத்தை ஊடுறுவியபடித் தன்னுடைய போர்ப் படகுகளில் தஞ்சம் அடைந்தார். அந்தப் படகுகள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு எதிரிகளைக் கரையை நெருங்கவிடாமல் செய்தன. ஷுஜாவின் ஒட்டுமொத்தக் கூடாரமும், அதில் இருந்த ஐம்பது லட்சம் மதிப்பிலான பொருட்களும் வெற்றி பெற்ற படையினரால் கைப்பற்றப்பட்டன. மிகச் சாதாரணப் படைவீரர்கூட அவர்களிடம் இருந்த அனைத்தையும் இழக்க நேர்ந்திருந்தது.

பதறிப்போன ஷுஜாவின் படை, தரை மார்க்கமாகச் சசீராம் வழியாகப் பாட்னா வரை ஓடியது. போகும் வழியில் இடையில் இருந்த கிராமங்களையெல்லாம் கொள்ளையடித்தபடியே சென்றது. ஆனால் தாராவின் படைகள் விடாமல் அவர்களைத் துரத்தி வரவே, இதை அறிந்த ஷுஜா, முங்கிர் பகுதிக்குத் தப்பிச் சென்றார். அங்கு வழியெங்கும் குழிகள் தோண்டியும் தடைகள் போட்டும் எதிரிகளை வரவிடாமல் தடுத்தார். இது நன்றாக வேலை செய்தது.

சுலைமானின் படைகள் முங்கிருக்கு 15 மைல் தென் மேற்கில் சூரஜ்கர் பகுதியோடு நின்றுவிட்டது. அவர் முன்னேறிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்காமல் மதிப்பு மிகுந்த சில மாதக் காலத்தை அங்கேயே வீணடித்தார். பின் தர்மத் பகுதியில் நடந்த போரில் தன் தந்தை தோற்ற செய்தி கிடைத்ததும் ஷுஜாவுடன் அரைகுறையாகப் பேச்சுவார்த்தை நடத்திய சுலைமான், வங்காளம், கிழக்குப் பிஹார், ஒரிஸ்ஸா ஆகியவற்றை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஆக்ரா திரும்ப முடிவெடுத்தார் (மே 7).

ஜூலை 21இல் தன்னைப் பேரரசராக முடி சூட்டிக் கொண்ட ஒளரங்கசீப், ஷுஜாவுக்கு நட்பார்ந்த முறையில் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் பிஹார் முழுவதையும் அவருக்குத் தருவதாகவும், வேறு பல சலுகைகளையும் அவருக்கு வழங்குவதாகவும் ஆசை காட்டினார்.

ஒளரங்கசீப் தாராவைத் துரத்திக்கொண்டு தொலை தூரப் பஞ்சாப் பகுதிக்குப் போயிருக்கும் செய்தி கிடைத்ததும் ஷுஜாவின் பேரரசக் கனவுகள் மீண்டும் துளிர்விட்டன. ஆக்ரா வரையிலும் காவல் இல்லாத ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி ஷாஜஹானை விடுவிக்க இதுவே தருணம் என்று அவர் முடிவு செய்தார். இதையடுத்து 1658ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாக்கில் பாட்னாவில் இருந்து 25,000 வீரர்களுடனும், பீரங்கி, படகுகளுடனும் புறப்பட்ட ஷுஜா, டிசம்பர் 30 அன்று அலஹாபாத்துக்கு மூன்று நாள் பயணத் தொலைவில் இருந்த காஜ்வா பகுதிக்குச் சென்று சேர்ந்தார். அங்கே அவர் ஒளரங்கசீபின் மகன் சுல்தான் முஹம்மது தனக்குத் தடையாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

இதனிடையில் தாராவைத் துரத்திச் சென்றிருந்த ஒளரங்கசீப், அதைப் பாதியிலேயே விட்டுவிட்டுத் தன் படைகளுடன் முல்தானில் இருந்து (செப்டம்பர் 30) டெல்லிக்குப் புறப்பட்டார் (நவம்பர் 20). வழியில் அலஹாபாத் பகுதியை அடைந்த அவர், அங்குத் தன் படையின் வலிமையை எண்ணிக்கை அளவிலும், செல்வத்திலும் வெகுவாக அதிகரித்துக் கொண்டார். இதனால் ஷுஜாவின் ஆக்ரா நோக்கிய பயண வழி இப்போது தடுக்கப்பட்டிருந்தது. ஒளரங்கசீப், ஜனவரி 2, 1659இல் தன் மகன் சுல்தான் முஹம்மதுவுடன் கோராப் பகுதியில் சேர்ந்துகொண்டார். அது ஷுஜாவின் முகாமில் இருந்து எட்டு மைல் மேற்கில்தான் இருந்தது. அதே நாளில் தக்காணத்தில் இருந்து மீர் ஜும்லாவும் ஒளரங்கசீபுடன் சேர்ந்துகொண்டார்.

7. ஜஸ்வந்தின் துரோகமும் ஒளரங்கசீபின் உறுதியும்.

ஜனவரி 4 அன்று, ஒளரங்கசீப் தன் படையுடன் புறப்பட்டு எதிரியின் முகாமுக்கு ஒரு மைல் தொலைவில் வந்து சேர்ந்தார். அவருடைய படைவீரர்கள் அனைவரும் போருக்கான தத்தமது இடங்களுக்குச் சென்று, கவசங்கள் அணிந்தபடியே தமது சேணம் பூட்டிய குதிரைகளின் காலடியில் படுத்து உறங்கினர். பிறவியிலேயே போர் நுணுக்கங்கள் கைவரப்பெற்ற தளபதி மீர் ஜும்லா, இரு தரப்புப் படைகளுக்கு இடையே இருந்த சிறிய குன்றை இரவோடு இரவாக ஆக்கிரமித்து எதிரிகளின் முகாமைக் குறிவைக்கும் 40 பீரங்கிகளை அங்குக் கொண்டுவந்து நிறுத்தினார். இரவு முழுவதும் அவருடைய படைத் தலைவர்கள் கண்விழித்துக் கண்காணித்து வந்தனர்.

போர் நடக்கத் தீர்மானிக்கப்பட்ட ஜனவரி 5 அன்று, அதிகாலைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே ஒளரங்கசீபின் படையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அந்த எச்சரிக்கையும் அமளியும் சிறிது நேரத்தில் முழுப் படைக்கும் பரவியது. தாக்குதல் நடத்தியவர்களின் முழக்கங்களும் தாக்கப்பட்டவர்களின் அலறலும் விண்ணை முட்டின. குதிரைகளின் குளம்படிகள் பெரும் சப்தமெழுப்பிபடி இருந்தன. இருள் விலகியிருக்கவில்லையென்பதால் குழப்பம் மேலும் அதிகரித்தது.

விஷயம் என்னவென்றால் பேரரசர் ஒளரங்கசீப் படைகளின் வலது பக்கப் பிரிவின் தளபதி மஹாராஜா ஜஸ்வந்த் சிங், தான் ஓரங்கட்டப்பட்டதாக நினைத்துக்கொண்டு ஒளரங்கசீபைப் பழிவாங்கத் தீர்மானித்திருந்தார். அவர் தன் திட்டம் பற்றி ஷுஜாவுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருடைய திட்டம் இதுதான்: ஜஸ்வந்த் சிங் இரவுப்பொழுதில் ஒளரங்கசீபின் படையில் பின்புறமாக இருந்து குழப்பத்தை உண்டாக்குவார். அதை எதிர்பாராத படையினர் பதறிப்போய் சிதறி ஓடுவார்கள். உடனே ஒளரங்கசீப் இந்த அமளியைச் சரிசெய்யப் பின்புறமாகச் செல்வார். ஷுஜா அப்போது பார்த்து முன்பக்கமாகப் பாய்ந்து வந்து இவர்களைத் தாக்கி வீழ்த்திவிட வேண்டும்.

இதன்படியே 14,000 ராஜபுத்திர வீரர்கள் நள்ளிரவில் இளவரசர் முஹம்மது சுல்தானின் முகாமை நோக்கிச் சென்றனர். அங்கே அவர்கள் கூடாரங்களில் தங்கள் கைக்குக் அகப்பட்டதை எல்லாம் எடுத்துக்கொண்டனர். இதனால் ஒளரங்கசீபின் படைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அதன்பின் அங்கிருந்து தப்பித்த ராஜபுத்திரர்கள் ஆக்ரா நோக்கிய பாதையில் விரைந்து சென்றுவிட்டனர். ஆனால் இருளும் திடீர் அமளியும் ஒளரங்கசீபின் படையில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருந்தன.

ஒளரங்கசீப் நிதானமாகவே இருந்தார். அவரது நிதானமும் ஷுஜாவின் தயக்கமும் ஒளரங்கசீபின் படைகளுக்குச் சாதகமாக அமைந்துவிட்டன. ஜஸ்வந்த் அனுப்பிய செய்தி ஷுஜாவுக்குக் கிடைத்திருந்தது. இரவில் ஒளரங்கசீபின் படையில் ஏற்பட்ட கூச்சலையும் குழப்பத்தையும் அவர் கேட்கவும் செய்தார். ஆனால், இந்தத் திட்டம் தன்னை இரவில் முகாமில் இருந்து வெளியே வரச் செய்து வீழ்த்துவதற்கு ஒளரங்கசீபும் ஜஸ்வந்தும் சேர்ந்து செய்த சதியாக இருக்கும் என்று அவர் நினைத்து முகாமுக்குள்ளேயே இருந்துவிட்டார்.

ஒளரங்கசீப் போர்க்களத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் பின்னிரவுத் தொழுகையான தஹாஜுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, ஜஸ்வந்த் சிங் அவரை விட்டு விலகிச் சென்ற செய்தி கிடைத்தது. ஆனால் அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் ’ஓடிப் போய்விட்டால் விட்டுவிடுங்கள்’ என்று சைகை காட்டியதுடன் நிறுத்திக்கொண்டார். தொழுகையை முடித்தபின், கூடாரத்தில் இருந்து வெளியே வந்த அவர், ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ‘அல்லா நமக்குச் செய்திருக்கும் நன்மை இது. அந்தக் காஃபிர் போர் நடக்கும்போது இப்படியான துரோகத்தைச் செய்திருந்தால் நமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கு முன்பே ஓடிவிட்டது நல்லதுதான்’ என்றார்.

இப்படியாக ஒளரங்கசீப் தன்னுடைய படையில் ஏற்படவிருந்த மிகப்பெரிய குழப்பத்தை எளிதில் தணித்துவிட்டார். ‘தளபதிகள் அனைவரும், பிற வீரர்களும் தமது நிலையில் இருந்து மாற வேண்டாம்; யாரும் தப்பி ஓடியவர்களைத் துரத்திச் செல்லவேண்டாம்’ என்று சேவகர்கள் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டன. ஜஸ்வந்த் சிங் படையினர் ஏற்படுத்திய அமளியினால் சிதறி ஓடியிருந்த ஒளரங்கசீபின் விசுவாசமான படைத் தலைவர்கள் பொழுது புலரும் நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்தனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை 50,000 ஆகியிருந்தது. ஷுஜாவின் படையினரின் எண்ணிக்கை வெறும் 23,000 மட்டுமே.

8. காஜ்வா போர்

வாளுக்கு வாள், ஈட்டிக்கு ஈட்டி, பீரங்கிக்குப் பீரங்கி என்ற வழக்கமான போர்முறைப்படிப் போரிட்டால் வெற்றி பெற முடியாது என்பது ஷுஜாவுக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால் எதிரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேல் அதிகம் இருந்தது. இதனால் யோசித்த அவர், தெளிவாகப் புது வியூகம் ஒன்றை அமைத்தார். பீரங்கிப் படை முன்னால் நிறுத்தப்பட்டது. அதன் பின்னால் அனைத்துப் படைப்பிரிவுகளும் மிகப் பெரிய வரிசையாக நிறுத்தப்பட்டன. ஷுஜா வீரத்துடன் அதிரடியான தாக்குதலில் ஈடுபட முடிவு செய்தார். எண்ணிக்கை அதிகமாக இருக்கும் படைக்கு இயல்பாகவே உருவாகியிருக்கும் மேலாதிக்க மனநிலையை முறியடிப்பதற்கு, துணிந்து தாக்கும் வியூகத்தை வகுத்திருந்தார்.

காலை எட்டு மணிக்குப் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் ஏவுகணைகளும் எரி அம்புகளும் மழைபோல் பொழிய ஆரம்பித்தன. அதன் பின் இரு தரப்புப் படைகளும் நெருங்கி வந்தன. அம்பு, வாள் கொண்டு தாக்குதல் ஆரம்பித்தது. ஷுஜாவின் படையின் வலது பிரிவின் தளபதியான சையது ஆலம், ஒளரங்கசீபின் படையின் இடதுபக்கப் படையைத் தாக்க ஆரம்பித்தார். வெறி ஏற்றப்பட்டிருந்த மூன்று யானைகள், எண்பது கிலோ எடைகொண்ட இரும்புச் சங்கிலிகளைத் தும்பிக்கையில் ஏந்திச் சுழற்றியபடி எதிரிகளைத் தாக்கின. எதிரிகள் தரப்பில் எந்தவொரு விலங்கும் வீரரும் குறுக்கே நிற்கவே முடியவில்லை. ஒளரங்கசீபின் இடது பக்கப் படை, வழிகாட்டத் தளபதியும் இளவரசரும் இல்லாமல் சிதறி ஓடியது.

படையின் மையப் பகுதியிலும் சீக்கிரமே இந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது. வீரர்கள் குழம்பியபடி இங்குமங்கும் சிதறி ஓடினர். போதாத குறையாகப் பேரரசர் இறந்துவிட்டதாகவும் வதந்தி பரவியது. இதனால் பல வீரர்கள் போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இடதுபக்கப் படையை வீழ்த்திய பின்னர் ஷுஜாவின் படையினர் மையப்பகுதியை நோக்கி நகர்ந்தனர். அங்கு ஒளரங்கசீபுக்குக் காவலாக வெறும் 2000 வீரர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்த என்று ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படையினர் முன்னோக்கிப் பாய்ந்து வந்து எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினர். ஒளரங்கசீப் தனது யானையை இடதுபக்கப் படைக்கு உதவும் வகையில் அந்தப் பக்கம் திருப்பி ஓட்டினார். சையது ஆலம் இதே வழியாகத்தான் தப்பி ஓடிவந்திருந்தார்.

ஷுஜாவின் படையின் மூன்று யானைகள் அவற்றுக்கு ஏற்பட்டிருந்த காயங்களினால் முன்பைவிட ஆக்ரோஷத்துடன் தாக்கத் தொடங்கியிருந்தன. அவற்றில் ஒரு யானை ஒளரங்கசீபின் யானைக்கு வெகு அருகில் வந்தது. போரின் மிக மிக முக்கியமான தருணம் இது. ஒளரங்கசீப் மட்டும் எதிரி யானையால் வீழ்த்தப்பட்டிருந்தாலோ, அந்த யானையைக் கண்டு பின்வாங்கியிருந்தாலோ அவருடைய ஒட்டு மொத்தப் படையும் தோற்று ஓடியிருக்கும். ஆனால் அவரோ மலைபோல் திடமாக நின்றார். தனது யானை பயந்து ஓடிவிடாமல் இருக்க அதன் கால்களை இரும்புச் சங்கிலியால் கட்டினார். ஒளரங்கசீபின் உத்தரவுக்கிணங்கத் துப்பாக்கி வீரர் ஜலால் கான், தாக்கவரும் யானையின் பாகரைச் சுட்டு வீழ்த்தினார். வீரம் நிறைந்த ஒளாரங்கசீபின் யானைப் பாகர் ஒருவர், பாகரை இழந்த யானையின் மீது பாய்ந்து ஏறி அதைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

ஒளரங்கசீபுக்கு இப்போது சற்று ஆசுவாசம் பிறந்தது. அவர், எதிரிகளின் முன்னணிப் படையாலும் இளவரசர் புலந்த் அக்தரின் தலைமையில் இருந்த இடதுபக்கப் படையாலும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தனது வலது பக்கப் படையை நோக்கித் திரும்பினார். ஷுஜாவின் படையினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியபடி முன்னேறியதால் ஒளரங்கசீபின் படையினர் பயந்து ஓடிவிட்டனர்.

இடது பக்கமிருந்து வந்த ஆபத்தில் இருந்து தப்பித்த ஒளாரங்கசீப், இப்போது வலது பக்கத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், தப்பி ஓட்டம் ஆகியவற்றைச் சரிப்படுத்த விரைந்தார். இவ்வளவு நெருக்கடியான தருணத்திலும் அவர் நிதானம் இழக்காமல் இருந்தார். சமயோஜிதப் புத்தி அவருக்குக் கை கொடுத்தது. ஏற்கெனவே அவர் தன் படையுடன் இடதுபக்கம் விரைந்து சென்றிருந்தார். அங்கிருந்து திடீரென்று வலது பக்கம் திரும்பினால் எஞ்சிய படையினர் ஒளரங்கசீப் ஏதோ தப்பி ஓடுவதுபோல் நினைத்துவிடுவார்கள். எனவே தனது படைத் தலைவர்களையும் வீரர்களையும் முதலில் தைரியமாகத் துணிந்து போராடும்படி சேவகர்கள் மூலம் செய்தியையும் தன்னம்பிக்கையையும் அளித்தார்.

அதன் பின் அவர், தன் பாதையை மாற்றிக் கொண்டு வலது பக்கம் நோக்கி முன்னேறத் தொடங்கினார். சரியான நேரத்தில் கிடைத்த இந்த உதவி, வலது பக்கப் படைக்குப் பெரிதும் உபயோகமாக இருந்தது. அன்றைய போரின் மிக முக்கியமான நகர்வாக இது இருந்தது. ஷுஜாவின் படைக்குக் கிடைத்திருந்த சாதக நிலையை இது அப்படியே மாற்றிப் போட்டுவிட்டது. ஒளரங்கசீபின் வலது பக்கப் படை போதிய பக்கத் துணைகள் கிடைத்ததும் துணிந்து முன்னேறி, எதிரிகளின் படை மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது.

இதனிடையில் சுல்தான் முஹம்மது மற்றும் ஜுல்ஃபிகர் கானின் தலைமையில் இருந்த ஒளரங்கசீபின் முன்னணிப் படை, தன் மீதான தாக்குதலை முறியடித்து எதிரிகளின் முன்னணிப் படையோடு மோத ஆரம்பித்திருந்தது. ஒளரங்கசீபின் படையிலிருந்து பீரங்கி, துப்பாக்கி, ஏவுகணைகள் மழைபோல் இடைவிடாமல் பொழிந்தன. ஷுஜாவின் படையினரால் இதைச் சமாளிக்கமுடியவில்லை.

ஒளரங்கசீபின் படை வலது பக்கம், இடது பக்கம், நடுப் பகுதி என மூன்று முனைகளிலும் முன்னேறத் தொடங்கியிருந்தது. வானில் கரு மேகக்கூட்டம் சூழ்வதுபோல் ஷுஜாவின் படையை (மையப் படையை) அவர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களுடைய பக்கவாட்டுப் படைகள் ஏற்கெனவே சிதறி ஓடியிருந்தன. ஏராளமான பீரங்கி குண்டுகள் அவருடைய தலைக்கு மேலாகப் பாய்ந்து சென்று அவருடைய மெய்க்காவலர் பலரைக் கொன்றுவிட்டிருந்தன. இனியும் யானையின் மீது இருந்தால் எளிதில் தாக்கி வீழ்த்திவிடுவார்கள்* என்று நினைத்த ஷுஜா, குதிரை மீது ஏறிக் கொண்டார்.

போர் அப்படியாக முடிவுக்கு வந்தது. யானையில் இருந்து ஷுஜா இறங்கியதும் அவர் இறந்துவிட்டதாகத் தொலைவில் இருந்த வீரர்கள் நினைத்துவிட்டனர். எஞ்சியிருந்த வங்காளப் படை உடனே சிதறி ஓடியது. தன் மகன்கள், தளபதி சையது ஆலம், மற்றும் சிறிய படைவீரர்கள் ஆகியோருடன் ஷுஜா போர்க்களத்தில் இருந்து குதிரையில் தப்பிச் சென்றார். அவருடைய கூடாரமும் படைக்கலன்களும் உடமைகளும் ஒளரங்கசீபின் படையினரால் கொள்ளையடிக்கப்பட்டன. 114 பீரங்கிகள், வங்காளத்தின் புகழ் வாய்ந்த 11 யானைகள் எல்லாம் அவர்களுக்கு வெற்றிப் பரிசாகக் கிடைத்தன.

_____
*வெற்றி முகத்தில் இருந்த ஷுஜா குதிரைக்கு மாறிக் கொண்டதால் தோல்வியைத் தழுவ நேர்ந்தது என்று வெர்னியர் குறிப்பிட்டிருப்பது தவறானது. நான் ஆதாரமாகக் கொண்டிருக்கும் எந்தவொரு சமகால ஆவணமும் இப்படிச் சொல்லவில்லை. அது அப்படி நடந்திருக்க வாய்ப்பும் இல்லை. உண்மையில் ஷுஜா போரில் தோற்றுவிட்டிருந்தார். யானை மீது இருந்து போரிட்டிருந்தால் எளிதில் சிறைபிடிக்கப்பட்டிருப்பார். அதனால்தான் அவர் குதிரைக்கு மாறிக் கொண்டார்.
_____

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *