9. மிர்ஸா ஷா ஷுஜாவைத் துரத்திச் செல்லுதலும், பிஹார் போரும்
க்வாஜாவில் நடைபெற்ற போரில் வென்ற ஒளரங்கசீப், அன்று மதியமே தன் மகன் முஹம்மது சுல்தானின் தலைமையில் ஷுஜாவைத் துரத்திப் பிடிக்க ஒரு படையை அனுப்பினார். அதன் பின் மீர் ஜும்லாவின் தலைமையில் புதிய படையும் அவர்களுக்கு உதவியாக அனுப்பப்பட்டது. அப்படியாக அந்தப் படை 30,000 வீரர்களைக் கொண்டதாகப் பெரிதானது. ஷுஜாவோ பனாரஸ், பாட்னா வழியாக முங்கேருக்குத் தப்பிச் சென்று அங்கு 15 நாட்கள் தங்கியிருந்தார் (பிப்ரவரி 19 – மார்ச் 6).
கங்கை நதிக்கும், காரக்பூர் மலைகளுக்கும் இடையில் இரண்டரை மைல் அகலம் கொண்ட சமதளத்தில் முங்கேர் அமைந்திருந்தது. இந்தச் சமவெளியினூடாகவே பாட்னாவில் இருந்து வங்காளத்துக்குச் செல்லும் மிகச் சௌகரியமான பாதை அமைந்துள்ளது. ஷா ஷுஜா முதல் வேளையாக நதிக்கரையில் இருந்து மலைவரைக்கும் செல்லும் இந்தப் பாதையைச் சுவர், பதுங்குக் குழிகள், பள்ளங்கள் எழுப்பித் தடுத்தார். அதைத் தொடர்ந்து முப்பது அடி தொலைவுகளில் மேடான தாக்குதல் அரண்கள் அமைத்துக் கொண்டார். மேலும், படகுகளில் இருந்து இறக்கப்பட்ட பீரங்கிகள், படைவீரர்கள் கொண்டு இந்தப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொண்டார்.
மார்ச் மாதத் தொடக்கத்தில் முங்கேருக்கு மீர் ஜும்லா வந்து சேர்ந்தார். அங்கே பாதை தடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அவர், காரக்பூர் ராஜா பரோஸுக்குப் பணம் கொடுத்து பேரரசுப் படையை முங்கேர் கோட்டைக்குத் தென் கிழக்கில் இருந்த மலைப்பாதை மற்றும் கானகப் பகுதி வழியாகக் கொண்டு சென்று ஷுஜாவின் படையைப் பின்பக்கமாக நெருங்கினார்.
இதைப் பார்த்து அதிர்ந்த இளவரசர் ஷுஜா, முங்கேரில் இருந்து தப்பி (மார்ச் 6) ஷாஹிபஞ்சிப் பகுதிக்குச் சென்று சேர்ந்தார். பிறகு, அங்கு இருந்த குறுகிய சமவெளிப் பாதையையும் சுவர் எழுப்பித் தடுத்தார் (மார்ச் 10-24). ஆனால் ஒளரங்கசீபின் படைகளோ பீர்பம் மற்றும் சாத்நகர் பகுதிகளின் ஜமீந்தாரான க்வாஜா கமல் ஆஃப்கனை வென்று அவருடைய உதவியையும் வழிக் காட்டுதலையும் கொண்டு முங்கேரின் தென் கிழக்காகப் பயணம் செய்து சூரி பகுதியை 28 அன்று சென்று சேர்ந்தனர்.
அந்த நேரத்தில் அஜ்மீர் பகுதியில் தாரா வெற்றி பெற்றுவிட்டதாகவும் ராஜபுத்திரப் பகுதிகளில் பழிவாங்கும் வெறியுடன் தாக்குதல் நடத்துவதாகவும் ஒரு புரளி கிளம்பியது. இதனால் மீர் ஜும்லாவின் படையில் இருந்த ராஜபுத்திரர்கள், குறிப்பாக ஜெய் சிங்கின் மூத்த மகன் ராம் சிங்கின் படையினர் மீர் ஜும்லாவிடம் இருந்து விலகி, தொலை தூரத்தில் இருந்த தமது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற விரைந்தனர். இதனால் ஷுஜாவைத் துரத்திச் சென்ற படை 4000 வீரர்களை மார்ச் 30 வாக்கில் இழந்தது. இருந்தும், அதுவே ஷுஜாவின் படையைவிட இருமடங்கு பலம் கொண்டதாக இருந்தது.
இதனிடையில் ஷாஹிபஞ்சிப் பகுதியில் இருந்து புறப்பட்ட ஷுஜா, ராஜ்மஹாலுக்குச் சென்று சேர்ந்தார் (மார்ச் 27). அந்த இடமும் பாதுகாப்பற்றதாக அவருக்குத் தெரிய வரவே மால்டா மாவட்டத்துக்குக் கிளம்பினார். அப்போது அவருடைய தலைமைத் தளபதி அல்வர்தி கான், பல அதிகாரிகளை அழைத்துக்கொண்டு மீர் ஜும்லாவின் பக்கம் சென்று சேரத் திட்டமிட்டார். இது ஷுஜாவுக்குத் தெரிந்துவிட்டது.
இதையடுத்து அவர், ஏப்ரல் 2 அன்று அல்வர்தி கானின் தலையை வெட்டிக் கொன்றார். ஏப்ரல் 13 அன்று பேரரசப் படைகள் ராஜ்மஹாலை ஆக்கிரமித்தன. இந்த நடவடிக்கையின் காரணமாகக் கங்கைக்கு மேற்கில் இருந்த பகுதிகள் முழுவதும் ஷுஜாவின் கைகளில் இருந்து நழுவிச் சென்றன.
இந்தச் சமயத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் புலிக்கும் முதலைக்கும் இடையிலான சண்டை போலானது. ஷுஜாவின் படை இப்போது ஐந்தாயிரம் வீரர்களைக் கொண்டதாகச் சுருங்கிவிட்டிருந்தது. மீர் ஜும்லாவின் படையோ அதைவிட ஐந்து மடங்கு பெரியதாகவும், வீரனுக்கு வீரனுடனான (ஒருவருக்கு ஒருவருடனான) நேருக்கு நேர் மோதலில்கூட அதிக வலிமை கொண்டதாகவும் இருந்தது. அதனால் ஷுஜா தரையில் நடக்கும் போரில் வலிமை குன்றியவராகிவிட்டிருந்தார்.
ஆனால் மீர் ஜும்லாவின் படை முழுக்க முழுக்க தரை வழிப் போரில் மட்டுமே வலிமை மிகுந்ததாக இருந்தது. நீர் வழியில் என்றால் அவரிடம் பயணம் செய்வதற்குக்கூட படகுகள் கிடையாது. அவரிடம் இருந்த பீரங்கிகளும் துப்பாக்கிகளும் எதிரிகளைவிட எண்ணிக்கை குறைவானதாகவும் சிறியதாகவும் இருந்தன.
மாறாக ஷுஜாவின் படையில் மிகப் பெரிய பீரங்கிகள் இருந்தன. அவற்றைத் திறமையாகக் கையாளக்கூடிய ஐரோப்பியர்களும் கலப்பின வீரர்களும் அவருடைய படையில் இருந்தனர். வங்காளத்தின் படகுப் படையும் ஷுஜா வசமே இருந்தது. நீர் வழிகளைக் கடப்பது, படைகளை எளிதில் நகர்த்துவது, எதிரிகளின் போர்முனைகளைப் பீரங்கியால் தகர்ப்பது, நதிக் கரையில் முகாமிட்டுக்கொள்வது எனப் பல அம்சங்கள் அவருக்குச் சாதகமாக இருந்தன. இவையெல்லாம் ஷுஜாவின் சிறிய படையின் செயல்திறனை வெகுவாக அதிகரித்தன. அவர்களால் நினைத்த இடத்துக்கு எளிதில் நகர்ந்து செல்லவும் முடிந்தது. எனவே, நிலத்தில் வலிமை மிகுந்ததாக இருந்தபோதிலும் படகுகள் இல்லாத காரணத்தினால் மீர் ஜும்லாவின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
கெளர் கோட்டைக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் இருந்த தண்டா பகுதியில் முகாமிட்ட ஷுஜா, கங்கையின் கிழக்குக் கரையில் பல பகுதிகளில் பள்ளங்கள் வெட்டி வைத்து மீர் ஜும்லாவை அதைத் தாண்டி வர விடாமல் தடுத்தார். ஆனால் அவருடைய முயற்சிகள் எல்லாம் சாதுரியமாகத் தூரப் பகுதிகளில் இருந்து படகுகளைப் பெற்றுக்கொண்ட மீர் ஜும்லாவால் முறியடிக்கப்பட்டன.
இந்தச் சமயத்தில் ஒளரங்கசீபும் ஒருபக்கம் சமயோஜிதமாகச் சிந்தித்து இன்னொரு படையைப் பாட்னாவின் ஆட்சியாளரின் தலைமையில் அனுப்பி வைத்தார். இதன் மூலம் கங்கையின் இடது கரைப் பக்கம் கவனத்தைத் திருப்பவும், ஷுஜாவின் வலது பக்கப் படையைத் திருப்பிவிடவும் வழிசெய்தார்.
ராஜ்மஹாலுக்கு 13 மைல்கள் தெற்கே தோகாச்சியில் இருந்த தனது தலைமையகத்திலிருந்து சண்டையிட்ட மீர் ஜும்லா, ஷா ஷுஜாவை இரண்டு முனைகளில் தாக்கி ஓடவைத்தார். இரவில் எதிர்பாராதவிதமாகத் தாக்குதல் நடத்திய அவர், தோகாச்சிக்கு எதிர்ப்பக்கம் இருந்த தீவுப்பகுதி ஒன்றைக் கைப்பற்றினார். அங்குதான் ஷுஜாப் படையின் ஒரு பிரிவினர் காவலுக்கு இருந்தனர்.
இழந்த பகுதியை மீட்பதற்காக ஷுஜாவின் படையினர் பல்வேறு தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அதனையும் வெற்றிகரமாக மீர் ஜும்லா முறியடித்தார். சுதி பகுதியைப் பார்த்தபடி இருக்கும் கிழக்குக் கரையில் ஷுஜாவின் படையினர் எட்டுப் பீரங்கிகளை நிலை நிறுத்தியிருந்தனர். அவற்றை எதிர்பாராத நேரத்தில் மீர் ஜும்லா தாக்கி அழித்தார்.
இப்போது மேற்குக் கரை முழுவதிலும் பேரரசப் படைகள் பரவி நின்றன. வடகோடியில் ராஜ்மஹாலில் முஹம்மது முராத் பேக் தன் படையுடன் இருந்தார். இளவரசர் முஹம்மது சுல்தான், ஸுல்ஃபிகர் கான் மற்றும் இஸ்லாம் கானுடன் இணைந்து ஷுஜாவை எதிர்கொண்டபடிப் பெரும் படையுடன் தோகாச்சியில் இருந்தார். தெற்கே எட்டு மைல் தள்ளி தானாபூரில் அலிகான் தன் படையுடன் இருந்தார். மொகலாயப் பேரரசின் தென்கோடி முனையில் ராஜ்மஹாலுக்கு 28 மைல் தொலைவில் இருந்த சுதி பகுதியில் மீர் ஜும்லாவும் 6000-7000 வீரர்களைக் கொண்ட படையுடன் நின்றுகொண்டிருந்தார்.
ஆனால், மீர் ஜும்லா முன்னெடுத்த மூன்றாவது திடீர் தாக்குதல் மிகப் பெரிய இழப்புடன் தோல்வியில் முடிவடைந்தது. இந்த முறை ஷுஜா எச்சரிக்கையுடன் இருந்து தாக்குதலை முறியடித்தார். மே 3, 1659இல் மொகலாயத் தளபதி அனுப்பிய படையின் ஒரு பகுதியினர் மட்டுமே வந்தடைந்தபோது இதை எதிர்பார்த்து மறைவில் காத்துக் கொண்டிருந்த ஷுஜாவின் படையினர் வீரத்துடன் அவர்களைத் தாக்கினர்.
இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பேரரசுப் படைகள் நான்கு முக்கிய தளபதிகளைப் பலி கொடுத்தது. இத்துடன் அவர்களுடைய படை வீரர்களும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதைத்தவிர 500 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். மீர் ஜும்லாவுக்கு இதற்கு மேலும் வங்காளப் படகுப் படையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. அதனால் அவர் உதவிக்குக்கூட கூடுதல் படையை அனுப்பவில்லை.
ஜூன் 8 இரவில் இளவரசர் முஹம்மது சுல்தான் தோகாச்சியில் இருந்து தப்பித்துச் சென்றார். அவருக்கு மீர் ஜும்லாவின் தலைமையின் கீழ் செயல்பட நேர்ந்தது தொடர்பாக நீண்ட காலமாக மனதுக்குள் குமுறல் இருந்தது. அவர் தனியாகவே படைக்குத் தலைமை தாங்க விரும்பினார். ஷுஜா தன் மகள் குல்ரக் பானுவை இளவரசருக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்புவதாக சுல்தானிடம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் டெல்லி அரியணையைக் கைப்பற்ற அவருக்கு உதவுவதாகவும் தூது அனுப்பினார். ஒளரங்கசீபின் மகன் எதையும் சரியாக யோசிக்காமல் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இதைக் கேட்டதும் சுதி பகுதியில் இருந்த மீர் ஜும்லா முதலில் தனது படையினரை அமைதியாக இருக்க உத்தரவிட்டார். பின் மறுநாள் காலையிலேயே கிளம்பி தோகாச்சி முகாமுக்குச் சென்ற அவர், தலைவர் இல்லாத படையினரின் முன்னால் நீண்ட சொற்பொழிவாற்றி அவர்களுக்குத் தெம்பூட்டினார். இவ்வாறு செய்ததன் மூலம் படையினரிடையே ஏற்படவிருந்த மிகப்பெரிய குழப்பத்தைத் திறம்படச் சமாளித்தார். இதன்பின் போர் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மற்ற தளபதிகள் அனைவரும் மீர் ஜும்லாவைத் தமது ஒரே தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். இப்படியாக அந்தப் படைக்கு ஏற்பட்ட இழப்பு ஒரே ஒரு நபர் மட்டுமே: அது இளவரசர் மட்டும்தான்.
அதன் பின்னர், வங்காளத்தில் பெரு மழை பெய்தது. இதனால் போரும் நிறுத்தப்பட்டது. மீர் ஜும்லா 15,000 வீரர்களுடன் மெளஸ்மா பஸாரில் முகாமிட்டார். எஞ்சிய பேரரசப் படை ஸுல்ஃபிகர் கானின் தலைமையில் ராஜ்மஹாலில் தங்கியிருந்தன. இரு படைகளுக்கு இடையே 60 மைல் இடைவெளி இருந்தது. மழைக்காலத்தில் அதற்கு இடையே பயணம் செய்வதற்கான சாலை கடினமானதாக இருந்தது.
அப்போது பெய்த மழை ராஜ்மஹால் பகுதியின் சுற்றுப்புறங்கள் முழுவதையும் நீரால் மூழ்கடித்திருந்தது. அந்தப் பகுதிக்கு வட மேற்கில் மாஜ்வா மலைப்பகுதியில் இருந்து வரவேண்டிய உணவுப் பொருட்களை அதன் ராஜாவுக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ஷுஜா தடுத்து நிறுத்தினார். நீர் வழிப்பாதையையும் ஷுஜாவின் படகுப்படை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. இதனால் ராஜ்மஹாலில் இருந்த மொகலாயப் படைகளின் உணவு இருப்பு வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையைப் பயன்படுத்தி திடீர் தாக்குதல் நடத்திய ஷுஜா, அந்த நகரை ஆகஸ்ட் 22இல் கைப்பற்றி அதில் இருந்த மொகலாய உடமைகளையும் தனதாக்கினார்.
10. வங்காளப் போர்
டிசம்பர் 1659 அன்று ஷுஜா தன்னுடைய 8000 படைவீரர்களுடன் ராஜ்மஹாலில் இருந்து புறப்பட்டு பேல்கட்டாவில் முகாமிட்டிருந்த மீர் ஜும்லாவை எதிர்க்கச் சென்றார். பேல்கட்டா தெற்கே 42 மைல் தொலைவில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜங்கிபூருக்கு எதிரில் இருந்தது. அங்கே சென்ற ஷுஜா, பேரரசப் படையை இரண்டு முறை தாக்கினார். அங்கேயும் அவர்களது பீரங்கிப் படையின் பலம் குறைவாக இருந்ததால். அவர்களுக்குப் பலத்த சேதாரம் ஏற்பட்டது. உடனே மீர் ஜும்லா முர்ஷிதாபாதுக்குப் பின்வாங்கினார். ஷுஜாவும் அவர்களை விடாமல் நாஷி வரை துரத்திச் சென்றார்.
ஆனால் இதனிடையில் தனது இரண்டாவது படையுடன் கிளம்பிய பிஹாரின் ஆட்சியாளர் தெளத் கான், குஷி நதியின் வழியாக முன்னேறிச் சென்று கங்கையின் வட கரைப் பகுதியில் இருந்த ஷுஜாவின் படையினரைத் தோற்கடித்தார். பின் அங்கிருந்து முழுப் படையுடன் தண்டா பகுதிவரை முன்னேறினார்.
இதைக் கேள்விப்பட்டவுடன் சற்றும் தாமதிக்காத ஷுஜா, உடனே நஷிபூரில் இருந்து கிளம்பி சுதி பகுதியினூடாகத் தண்டா பகுதிக்கு விரைந்தார் (டிசம்பர் 26). மீர் ஜும்லாவோ அவரை விடாமல் துரத்திச் சென்றார். அவரிடம் இருந்து தப்பித்து ஷுஜா ராஜ்மஹல் பகுதியில் கங்கையைக் கடந்து சென்ற நிலையில், பேரரசப் படையினர் ஜனவரி 11, 1660 அன்று அந்த நகரை மீண்டும் மீட்டனர். அப்படியாகக் கங்கைக்கு மேற்கே இருந்த பகுதிகள் அனைத்தையும் ஷுஜா இழந்தார். அதன்பின் அவரால் அதை மீட்கவே முடியவில்லை.
இந்த ஆண்டு மீர் ஜும்லா வகுத்த வியூகம் மிகவும் புதுமையானதாகவும் புத்திசாலித்தனமானதாகவும் இருந்தது. அவர் எதிரி நினைத்தே பார்க்காத வடக் கிழக்குப் பகுதியில் இருந்து தாக்கத் திட்டமிட்டார். ஷுஜாவின் படையானது வட மேற்கிலிருந்து தென் கிழக்காக, சம்தா தீவிலிருந்து (ராஜ்மஹாலுக்கு எதிரில் இருக்கிறது) தண்டா வரையிலுமாக அணிவகுத்து நின்றது. ஷுஜாவின் தலைமையகமானது இந்த அணிவகுப்பின் நடுவில் இருந்த செளகி மிராத்பூரில் அமைந்திருந்தது.
மீர் ஜும்லாவின் திட்டமானது அவரது முகாமின் வடக்குத் திசையில் இந்த அணி வகுப்பு முழுவதையும் அரைவட்ட அளவுக்குச் சுற்றிவந்து, ராஜ்மஹால், அக்பர்பூர், மால்டா வழியாகச் சென்று, தென் திசையில் சட்டென்று திரும்பி கீழ் நோக்கிப் பாய்ந்து, தண்டாவைக் கிழக்கில் இருந்து தாக்குவதாக இருந்தது. அதனால் அவர், தன் படைகளைப் பாட்னாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 160 படகுகளின் உதவியுடன் ராஜ்மஹாலுக்கு 10 மைல் வடக்கில் கங்கை நதிக்குக் அழைத்துச் சென்று தெளத் கானுடன் இணைந்துகொண்டார்.
ஏற்கெனவே ஷுஜாவின் படையைவிடப் பேரரசப் படை மிக மிகப் பெரியதாக இருந்தது. இப்போது அவர் தேவைப்பட்டால் பின்வாங்கிக் கொள்ள வைத்திருந்த ஒரே வழியான தென் பகுதியிலும் சுற்றி வளைக்கப்பட்டார் (பிப்ரவரி 1660). ஷுஜா தோற்கப்போவது உறுதியானதும், இளவரசர் முஹம்மது சுல்தான் இவரைக் கைவிட்டுவிட்டுத் தோகச்சியில் இருந்த மொகலாயப் படையுடன் சென்று சேர்ந்துகொண்டுவிட்டார் (பிப்ரவரி 8). பாவம்… தந்தையுடன் சேர்ந்த பின்னரும் எஞ்சிய காலத்தைச் சிறையில்தான் கழிக்கவேண்டியிருக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
மார்ச் 6 அன்று மால்டாவுக்குச் சென்று சேர்ந்த மீர் ஜும்லா, அங்கிருந்து ஷுஜாவை ஒரேயடியாக வீழ்த்தும் தனது இறுதி ராஜ வியூகத்தை நடைமுறைப்படுத்த ஒரு மாதக் காலத்தைச் செலவிட்டார். மால்டாவிலிருந்து சில மைல் தெற்கே இருந்த அவரது தலைமையகமான மஹ்மூதாபாத்தில் முகாமிட்டிருந்தவர், அங்கிருந்து ஏப்ரல் 5இல் புறப்பட்டுப் பத்து மைல் பயணம் செய்து, மஹாநதா நதியில் ஆழம் குறைவான சிறிய மறைவான ஓடைப் பகுதியில் எதிரிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பிறகு சற்றும் தாமதிக்காமல் அவர்கள் தப்புவதற்காக நீரில் குதித்தனர்.
ஆனால், குழப்பத்தில் அவர்கள் தவறுதலாக ஆழம் குறைவான இடத்தில் குதிப்பதற்குப் பதிலாக ஆழம் அதிகமான இடத்தில் குதித்துவிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் நீரில் மூழ்கி இறக்க நேர்ந்துவிட்டது. அவர்களில் திலிர் கானின் மகனும் அடங்குவார்.
ஆனாலும் இந்தத் தாக்குதல் போரில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. இதில் பெரும் படையினரை இழந்த ஷுஜா முழுவதுமாக தோற்கும் நிலைக்கு வந்துவிட்டார். பேரரசுப் படை முழுவதுமாகச் சுற்றி வளைப்பதற்குள் அவர் டாக்காவுக்குத் தப்பிச் சென்றாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 6 அதிகாலையில் அவர் தண்டா பகுதிக்கு விரைந்தார்.
’உடைகளை மாற்றிக்கொள்ளக்கூட நேரம் இல்லை. உடனே புறப்படுங்கள்’ என்று பேகம்களுக்கு உத்தரவிட்டபடியே அவர் வேகமாகப் புறப்பட்டார். நான்கு பெரிய படகுகளில் கஜானாக்கள் அடுக்கிவைக்கப்பட்டு நதியில் அனுப்பப்பட்டன. மதியம் வாக்கில் ஷுஜாவும் படகில் ஏறிக் கொண்டார்.
அவரது இரண்டு இளைய மகன்கள் (புலந்த் அக்தர், ஸின் உல் அபிதின்), அவரது தளபதிகளான மிர்ஸா ஜன் பேக், பார்ஹாவின் சையத் ஆலம், சையது க்யுலி உஸ்பெக், சில வீரர்கள், நபும்சகர்கள் என மொத்தம் 300 பேர் சுமார் 60 படகுகளில் ஷா ஷுஜாவுடன் புறப்பட்டனர். மூன்று சமஸ்தானங்களை ஆட்சி புரிந்தவரும் டெல்லி அரியணைக்கு இரண்டு முறை மிகப் பெரிய படையுடன் போரிட்டவருமான மிர்ஸா ஷா ஷுஜாவுக்கு இறுதியில் எஞ்சியது இவை மட்டுமே.
தண்டா முகாமில் இப்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அங்கே காவலுக்கு யாரும் இல்லாததால் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. மறுநாள் (ஏப்ரல் 7) மீர் ஜும்லா அந்த நகரைக் கைப்பற்றியவுடன் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. அவர், கொள்ளையடித்தவர்களிடமிருந்து முடிந்தவரை சொத்துகளை மீட்டார். ஷுஜா விட்டுச் சென்ற மகளிரும் பாதுகாப்புடன் நல்லமுறையில் கவனித்துக் கொள்ளப்பட்டனர்.
தார்திபூரில் ஷுஜாவின் ஆயுதம் தாங்கிய 400 படகுகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல கஜானாக்கள் ஏற்றிச் செல்லப்பட்ட இரண்டு படகுகளும் அகப்பட்டன. இப்படியாக ஷுஜாவின் படை முழுவதும் மீர் ஜும்லாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது (ஏப்ரல் 9). இறுதியாக ஷுஜாவைத் துரத்திப் பிடிப்பதற்காக ஏப்ரல் 19 அன்று தண்டாவிலிருந்து தக்காவுக்கு மீர் ஜும்லா புறப்பட்டார்.
11. வங்காளத்தில் இருந்து வெளியேறிய ஷுஜா. அவருடைய முடிவு.
ஏப்ரல் 12 அன்று வங்காளத்தின் இரண்டாம் தலைநகரான டாக்காவுக்குப் புகழும் செல்வ வளமும் குன்றிய நிலையில் ஷுஜா சென்று சேர்ந்தார். ஆனால், டாக்கா அவருக்கு அடைக்கலம் தரும் நிலையில் இருக்கவில்லை. அங்கிருந்த ஜமீந்தார்கள் எல்லாம் அவருக்கு எதிராக இருந்தனர். ஷுஜாவோ அவர்களைத் தன் பக்கம் இழுக்கவும் முடியாமல், தன்னைத் துரத்திவரும் மீர் ஜும்லாவை எதிர்க்கவும் முடியாத நிலையில் இருந்தார்.
இதனால் மே 6 அன்று டாக்காவிலிருந்து புறப்பட்ட அவர், கடல் நோக்கி நதியில் பயணத்தை ஆரம்பித்தார். போகும் வழியெங்கும் படகோட்டிகளும் படை வீரர்களும் கூட்டம் கூட்டமாக அவரைக் கைவிட்டுச் சென்றபடி இருந்தனர். அவர் ஏற்கெனவே அங்கிருந்த அரக்கான் மன்னரிடம் உதவி கேட்டுக் கெஞ்சியிருந்தார். இதையடுத்து அந்த மன்னரின் சார்பில் சாத்காவ் பகுதியை நிர்வகித்து வந்தவர் 51 படகுகளை இரண்டு நாட்களில் உதவிக்கு அனுப்பினார். இந்த நேரத்தில் வங்காளத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட ஷுஜா, அங்கிருந்த மூர்க்கத்தனமான மாக் (Magh) மக்களின் பகுதியில் ஒளிந்துகொள்ளத் தீர்மானித்தார்.
இதைக் கேட்ட அவருடைய குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அதிர்ந்தனர். சாத்காவ் பகுதியில் இருந்த அரக்கானியர்களின் கடல் கொள்ளைகள் பற்றி அப்போது பலருக்கும் நன்கு தெரியும். நவகாளி மற்றும் பாகர்கஞ்சி மாவட்டங்களில் இருந்தவர்கள் இவர்களைக் கண்டு அஞ்சி ஊரையே காலி செய்துவிட்டுப் போயிருந்தனர். அந்தக் கடற்கொள்ளையர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல், கொடூரமான வன்முறை, முரட்டுத்தனமான தோற்றம், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள், ஜாதி, மதம் இல்லாத தன்மை, அசுத்தமான விலங்குகளை உண்ணும் பழக்கம் இவையெல்லாம் கிழக்கு வங்காளத்தில் இருந்த இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு பிரிவினரையும் அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்தியிருந்தன.
ஆனால் ஷுஜாவுக்குத் தாரா ஷுகோ, முராத் பக்ஷ் ஆகியோருக்கு ஏற்பட்டது போன்ற அவமானங்களையும் அழிவையும் தவிர்க்கவேண்டுமென்றால் அந்தக் காட்டுமிராண்டிகள் பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை. எனவே 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த தன் மூதாதையரின் ராஜ்ஜியத்தை விட்டுவிட்டு மே 12, 1660இல் அவர் தன் குடும்பத்தினருடனும் நாற்பதுக்கும் குறைவான ஆதரவாளர்களுடனும் அரக்கானியர்களின் பகுதியை நோக்கிப் பயணம் செய்தார். அந்த ஆதரவாளர்களில் இந்தியா முழுவதும் வீரத்திலும் விசுவாசத்திலும் புகழ் பெற்றிருந்த பர்ஹா பகுதியின் சையத்கள் பத்துப் பேரும் அடங்கி இருந்தனர்.
ஷுஜா புதிய அடைக்கலப் பூமியில் அமைதியாக, மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை. அவருடைய பேராசை அவருக்குச் சோகமான அழிவைத் தேடித் தந்தது. அரக்கான் பகுதியில் வசித்து வந்த மொகலாயர்களும் பதான்களும் ஷுஜாவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். இதனால் அவர் அரக்கான் அரசனைக் கொன்று அந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி அந்தப் படையுடன் வங்காளத்தை மீட்கலாம் என்று திட்டமிட்டார். ஆனால் அரக்கான் மன்னருக்கோ இந்த விஷயம் தெரிந்துவிட்டது. உடனே அவர் ஷுஜாவைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஷுஜாவோ அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடினார். துரத்திச் சென்ற மாக் குலத்தினர், பாவப்பட்ட இளவரசரைப் பிடித்துக் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர் (டச்சு அறிக்கை, பிப்ரவரி 1661).
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.