அத்தியாயம் 6
ஒளரங்கசீப் ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம்
1. ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தின் இரண்டு பாதிகளின் மாறுபட்ட செயல்பாடுகள் மற்றும் சொந்த நடவடிக்கைகள்
ஐம்பது ஆண்டுகள் நீடித்த ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தை 25 ஆண்டுகள் கொண்ட இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் 25 ஆண்டுகள் அவர் வட இந்தியாவில் ஆட்சியில் இருந்தார். இரண்டாம் பாதியில் 25 ஆண்டுகள் தக்காணத்தில் இருந்தார். முதல் பாதியில் வட இந்தியாவே அவருடைய வாழ்வின் முக்கிய பகுதியாக இருந்தது. பேரரசர் அங்கிருந்தார் என்பதால் மட்டுமல்ல, உள்நாட்டு, ஆட்சி நிர்வாகம் மற்றும் போர் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் எல்லாம் அந்தப் பகுதியிலேயே அதிகம் நடைபெற்றன. தென்பகுதி தக்காணம் என்பது வெகு தொலைவில், அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத பகுதியாகவே இருந்தது.
இரண்டாம் பாதியில் நிலைமை தலைகீழானது. பேரரசின் அத்தனை வளங்களும் தென் பகுதியில் குவிக்கப்பட்டன. பேரரசர், அவருடைய குடும்பம், அமைச்சரவை, படையின் பெரும்பகுதி, அவருடைய முக்கியமான அதிகாரிகள் அனைவருமே சுமார் 25 ஆண்டுகள் தக்காணத்தில்தான் வாழ்ந்தனர். இந்துஸ்தானின் வட பகுதி இரண்டாம் பட்சமாகிப்போனது.
படைத் தளபதிகளும் வீரர்களும் வட இந்தியாவில் தமது சொந்த ஊர்களில் இருந்து நிர்பந்தமாகப் பிரிக்கப்பட்டு, தென் இந்தியாவில் நீண்ட காலம் இருக்க நேர்ந்ததால் எப்போது வீடு திரும்புவோம் என்ற ஏக்கத்திலேயே இருந்தனர். ‘ஒரு லட்சம் பணம் தருகிறேன். என்னை டெல்லியில் என் குடும்பத்துடன் ஒரே ஒரு வருடம் கழித்துவிட்டு வர அனுமதியுங்கள்’ என்று பேரரசரிடம் குடும்பத்தின் நினைவால் வாடிய ஒரு கனவான் கெஞ்சும் நிலைகூட ஏற்பட்டது. ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெகு காலம் பிரிந்து இருப்பதால் தமது வாழ்வும் பரம்பரையும் அழிந்துகொண்டிருப்பதாகப் பல ராஜபுத்திரர்கள் புகார் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலத்துக்கு மேல் நீடித்த இந்த விலகலினால் வட இந்தியாவில் பேரரசரும் திறமையான அதிகாரிகளும் இல்லாமல் நிர்வாகமும் சமூக ஒழுங்கும் சிதைய ஆரம்பித்தன. மக்கள் ஏழ்மையில் வாடத் தொடங்கினர். மேல் வர்க்கத்தினர் ஒழுங்கு, ஆக்கபூர்வப் பணிகள், அறிவார்ந்த செயல் ஆகியவற்றில் இருந்து வழுவ ஆரம்பித்தனர். இறுதியாகப் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட ஆரம்பித்தது.
ஒளரங்கசீபின் ஆட்சியின் முதல் பாதியில் வட இந்தியாவில் அவருடைய ஆட்சி வெகு வேகமாகப் பரவியது. வட கோடியில் காபூலில் ஆரம்பித்து கிழக்குக் கோடியில் இருந்த நாம ரூப மலைகள் வரையிலும் அவரது ஆட்சி இருந்தது. மேலும், வட எல்லைகளைத் தாண்டி திபெத்தில் தொடங்கி தெற்கே பீஜப்பூர் வரையிலும் பரந்து விரிந்திருந்தது. ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் இருக்கும் கிராமங்களில் விவசாயிகள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சிறிய படையெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் பேரரசரின் மதச் சகிப்பின்மை முழுவதுமாக வெளிப்பட்டது.
ஒளரங்கசீபின் ஆட்சிக் காலத்தின் இரண்டாம் ஆண்டின் தொடக்க நாளில் (மே 13, 1659) மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற முடி சூட்டுவிழாவைத் தொடர்ந்து அவர் அதிகமும் டெல்லியிலேயே வசித்தார். தலைநகரில் இருந்தபடியே ஆட்சி நிர்வாகத்தையும் வழி நடத்தினார். உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் அரசாங்கத் தூதுவர்கள் வாழ்த்துச் செய்திகளுடன் இவரைத் டெல்லியில் வந்து சந்தித்த வண்ணம் இருந்தனர் (1661-1667). அப்படி வரும் அயல் நாட்டு விருந்தினர்களை மகிழ்விக்கத் தனது ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் பேரரசர் வெளிப்படுத்தினார். அது, ‘வெர்சைலஸ் அரண்மனையின் படோடோபத்தைப் பார்த்தவர்களையும்கூட வியப்பில் ஆழ்த்தியது’.
ஒளரங்கசீப் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில், டிசம்பர் 8, 1662 அன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு காஷ்மீருக்குச் சென்றார். பின், ஜனவரி 18, 1664இல்தான் மீண்டும் டெல்லிக்குத் திரும்பினார். 1666இல் தந்தை ஷாஜஹான் இறந்ததைத் தொடர்ந்து ஆக்ராவுக்குச் சென்றார். ஷாஜஹான் சிறைப்படுத்தப்பட்டு உயிருடன் இருந்தவரையில் ஒளரங்கசீப் ஆக்ராவுக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தார். டெல்லியில் இருந்தபடிதான் அவரது அமைச்சரவை செயல்பட்டு வந்தது.
1674இல் அஃப்ரிதிகளின் கிளர்ச்சி பெரிதானதைத் தொடர்ந்து, பெஷாவருக்கு அருகில் இருந்த ஹஸன் அப்தல் பகுதிக்கு ராணுவத்தை வழிநடத்தச் சென்றார் ஒளரங்கசீப். ஜூன் 26 1674, தொடங்கி டிசம்பர் 1675 வரை அங்குத் தங்கியவர், மார்ச் 27, 1676இல் டெல்லி திரும்பினார். 1679 தொடக்கத்தில் மஹாராஜா ஜஸ்வந்த் சிங் மறைந்ததும், ஜோத்பூரைத் தன் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அஜ்மீருக்குச் சென்ற அவர், ராஜபுதனத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளைக் கழித்தார். இறுதியாக, தனது ஆட்சிக் காலத்தின் 25 ஆண்டுத் தொடக்கத்தில் தக்காணத்துக்கு நகர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகள் தீவிரமான, ஆனால் வெற்றி கிடைக்காத போர்களை முன்னெடுத்து இறுதியில் அங்கேயே இறந்தார்.
ஒளரங்கசீப் ஹிஜிரா வருடம் 1068இல் ஸிகதா (மே) முதல் நாளன்று முதன் முதலாக அரியணை ஏறினார். ஆனால் அவரது பிரமாண்டமான முடிசூட்டு விழாவானது (இரண்டாவது முறையாக) ரம்ஜான் 24, 1069 இல் (ஜூன் 5, 1659) வெகு விமர்சையாக நடைபெற்றது. அரசு ஆவணங்களில் ரம்ஜான் ஒன்றாம் தேதியில் இருந்து ஒவ்வொரு வருடமும் தொடங்குவதாகக் கணக்கிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், மத நோன்பும் தொழுகைகளும் பிரதானமாக நடக்கும் இந்த மாதத்தில் கொண்டாட்டம், கேளிக்கைகளில் ஈடுபடுவது அசெளகரியமாக இருந்ததால் நான்காவது ஆண்டு தொடங்கி ரம்ஜான் மாத இறுதி வாக்கில் பதவி ஏற்பு நினைவு நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதாவது ஈத் உல் ஃபிதர் நாளில் (ஈகைத் திருநாளில்) அல்லது அதைத் தொடர்ந்து வரும் நாளில் இருந்து கொண்டாட்டங்கள் ஆரம்பித்து பத்து நாட்கள் நடந்தன. ஆட்சி ஏற்ற பின்னான 21ஆம் ஆண்டில் (1677இல்) இந்தக் கொண்டாட்டங்களையும் ஒளரங்கசீப் நிறுத்திவிட்டார். செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள், சிற்றரசர்கள் எல்லாரும் கொண்டுவந்து தரும் பரிசுகளையும், அரண்மனையில் அப்போது நடக்கும் கொண்டாட்டங்களையும் ஒரேயடியாக நிறுத்தினார்.
2. ஒளரங்கசீபுக்கு ஏற்பட்ட நோய், 1662.
ஒளரங்கசீப் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாம் ஆண்டில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார். அவர் நிர்வாகப் பணிகளில் காட்டிய தீவிரமும் மத விஷயங்களில் காட்டிய அதீத அக்கறையும் நோயை மேலும் அதிகரித்தன. 1662 ரம்ஜான் மாதமானது (ஏப்ரல் 10 முதல் மே 9 வரை) மிக அதிக வெப்பம் மிகுந்ததாக இருந்தது. போதிய உறக்கம் இன்மை, கடுமையான ஆட்சிப் பணி இவை ஒருபக்கம், பகல் முழுவதுமான நோன்பு காலம் என்பதால் போதிய சத்து இல்லாதது மறுபக்கம், இவற்றோடு டெல்லியின் கடுங்கோடையும் சேர்ந்துகொண்டு ஒளரங்கசீபை மிகவும் பலவீனமாக்கின.
இறுதியில் மே 12ஆம் தேதி அவருக்குக் காய்ச்சல் அதிகரித்தது. மருத்துவர்கள் ரத்த வெளியேற்ற சிகிச்சை செய்ததால் மேலும் சோர்ந்து போனார். நோய் முற்றி வலிப்பு வரத் தொடங்கியது. முகமெல்லாம் மிக மோசமாக வெளிறியிருந்தது. அரண்மனையிலும் தலைநகரிலும் மிகப் பெரிய குழப்பமும் பதற்றமும் நிலவியது. அவருடைய மகன்கள் வேறு அடுத்ததாக அரியணை ஏற எல்லாப் பகை நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்திருந்தனர்.
ஐந்து நாட்கள் காய்ச்சலும் சோர்வும் அதிகரித்துக்கொண்டே சென்றன. ஆனாலும் ஒளரங்கசீப் சிறிதும் மனம் தளராமல் இருந்தார். அன்று மாலையும், மறு நாளும் மக்களைச் சந்திக்கும் மண்டபத்துக்கு வந்து ஆயுதத்தை ஊன்றியபடி நின்றார். கொடி மரியாதையை நிதானமாக ஏற்றுக்கொண்டார். ஒரு மாத காலத்துக்கு நோய் நீடித்தது. ஆனால், மக்களிடையே அவருடைய உடல் நிலை குறித்த அச்சமோ, வதந்தியோ, குழப்பமோ ஏற்படவில்லை.
ஒளரங்கசீப் வெள்ளிக்கிழமையான மே 23 அன்றும், 30ஆம் தேதியும் ஜாமா மசூதிக்குச் சென்று பொதுவெளியில் தொழுகையில் பங்கெடுத்தார். அவர் நோயில் இருந்து முழுமையாகக் குணமடைந்தது, ஜூன் 24 அன்று பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நெருக்கடி மிகுந்த ஒன்றரை மாத காலமும் நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டது ஒளரங்கசீபின் வலிமையையும், தன்னுடைய ஆட்சியில் அவர் உறுதிப்படுத்தியிருந்த நிலைத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
(* ‘என்னே ஒரு மன வலிமை… என்னே ஒரு வெல்ல முடியாத தைரியம்… யா அல்லா… ஒளரங்கசீபை மேலும் மகத்தான சாதனைகளுக்குத் தயார்ப்படுத்துங்கள்… பேரரசரின் இறுதி நாள் இன்னும் நெருங்கவில்லை’ என்று ஒளரங்கசீப் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவரது மன உறுதி பற்றிக் கேள்விப்பட்ட தானிஷ்மந்த் கான் சொன்னதாக பெர்னியர் குறிப்பிட்டிருக்கிறார்.)
‘பூலோக சொர்க்கம்’ என்று புகழப்பட்ட காஷ்மீருக்குச் சென்று உடம்பையும் மனதையும் புத்துணர்வூட்டிக்கொள்ளும்படி உடல்நலம் தேறிய ஒளரங்கசீபுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. இதையடுத்து மே, 1663 அன்று, அவர் லாஹூரில் இருந்து புறப்பட்டு பிம்பாரில் இருந்த பிர்பஞ்சல் கணவாய் வழியாக காஷ்மீருக்குச் சென்றார். அங்கே ஸ்ரீநகரில் இரண்டரை மாதங்கள் அரச சபை மகிழ்ச்சியாக நடத்தப்பட்டது. பின் செப்டம்பர் 29, 1663இல் லாகூருக்குத் திரும்பிய அவர், அடுத்த வருட ஜனவரி 18 அன்று டெல்லிக்கு வந்து சேர்ந்தார்.
டெல்லியில் இப்படியாக ஆரம்பகட்ட ஆட்சிக் காலம் கழிந்தபோது எல்லையில் எந்தவொரு நெருக்கடியும் இருந்திருக்கவில்லை. அந்தக் காலங்களில் அவர் தலைநகர் டெல்லியில் அல்லது தோப் பகுதியில் வேட்டையாடி மகிழ்ந்தார். இருப்பினும், முதுமைக் காலத்தில் வேட்டையை வேலையற்ற சோம்பேறிகளின் வேலை என்று விமர்சிக்கவும் செய்தார்.
3. பிராந்தியங்களில் எழுந்த கலகங்கள்
25 ஆண்டுகாலம் நீடித்த ஒளரங்கசீபின் முதல் பாதி ஆட்சிக் காலத்தில் சிறிய அளவிலான போர்கள் நடைபெற்றன. பிஹாருக்குத் தெற்கே பலமூ, அஸ்ஸாம், குச் பிஹார் (இரண்டும் கைவிடப்பட்டது), இதார், சாத்காவ், திபெத் ஆகிய பகுதிகளில் போர்கள் நடந்தன. (இதில் திபெத் போர் 1665இல் நடைபெற்றது. அந்த நாட்டின் பெளத்த அரசர் ஒளரங்கசீபின் மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்ளுதல் என்ற அளவில் மட்டுமே இருந்தார். இது அநேகமாக லடாக் அல்லது லிட்டில் திபெத் ஆக இருக்கவேண்டும்). ஒளரங்கசீபின் காலத்தில் நடைபெற்ற கலகங்கள் எல்லாம் மூன்று வகைப்பட்டவை. 1. பிராந்திய இளவரசர்களிடையே அடுத்த ஆட்சியாளர் யார் என்று ஏற்பட்ட மோதல்கள். நிர்வாகக் குழப்பம் எழுந்ததும் கொள்ளையர்களாலும், தண்டனை குறித்த பயமின்றிச் சட்ட விரோதச் செயல்கள் மூலம் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பும் தலைவர்களாலும் ஏற்பட்ட குழப்பங்கள். 2. கோயில் இடிப்புகளுக்கு எதிராக ஒளரங்கசீபின் ஆட்சிக் காலத்தின் 12வது ஆண்டு தொடங்கி உருவான ஹிந்து எழுச்சிகள். 3. ஒளரங்கசீபின் கீழிருந்த ஆட்சியாளர்களின் கலகங்கள்.
கானகப் பகுதிகள் அல்லது தூர தேசத்துச் சிற்றரசர்கள் போன்றோர் பேரரசரை எதிர்த்து சின்னஞ்சிறிய கலகங்களில் ஈடுபட்டதும் உண்டு.
ஒளரங்கசீபின் மதவெறிக்கு எதிராக உருவான ஹிந்து கிளர்ச்சிகள் மற்றும் சீக்கியர்களை அவர் நடத்தியவிதம் இவற்றையெல்லாம் வரும் அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒளரங்கசீபின் இறந்த சகோதரர்கள் அல்லது சகோதரர்களின் மகன்கள் (சித்தப்பா, பெரியப்பா மகன்கள்) என்று சொல்லிக்கொண்டு சிலர் முன்னால் வந்தனர். இதனாலும் சில குழப்பங்கள் ஏற்பட்டன. குஜராத்தில் ஆகஸ்டு 1663இல் ‘நான்தான் தாரோ ஷுகோ’ என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தார். மே, 1669இல் குச் பிஹாரின் மேற்கில் மோராங் மலைப்பகுதியில், ‘நான் தான் ஷா ஷுஜா’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார். 1647இல் யூஸுஃபாஸி பகுதியில் இன்னொருவரும் அதேபோல முன்வந்தார். 1707இல் காஷ்மீர் கம்ராஜ் பகுதியில் மூன்றாவதாக ஒருவரும் அப்படியே சொல்லிக்கொண்டு வந்தார். ஜூலை 1669இல் ஷுஜாவின் இரண்டாம் மகன் புலந்த அக்தர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அலஹாபாத் பகுதிக்கு வந்தார். தக்காணத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கலக இளவரசர் அக்பர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தார்.
ஷாஜஹான் ஆட்சியின் கடைசி ஆண்டில், தக்காணத்தில் இருந்த மொகலாயப் படையில் பைக்கானர் தலைவரும் பர்தியா குலத்தைச் சேர்ந்தவருமான ராவ் கரன் என்பவர் இருந்தார். அவர், தாராவின் அழைப்பின் பேரில் ஒளரங்கசீபிடம் சொல்லாமல் வட இந்தியாவுக்குத் திரும்பினார். ஒளரங்கசீப் புதிய பேரரசராகப் பொறுப்பேற்ற பின்னும் அவரை மரியாதை நிமித்தமாகச் சென்று சந்திப்பதை ராவ் கரன் தவிர்த்து வந்தார். எனவே, அவரை வழிக்குக் கொண்டு வர எண்ணிய ஒளரங்கசீப், ஆகஸ்டு 1660இல் 9000 வலிமையான வீரர்கள் கொண்ட படையை அமீர்கானின் தலைமையின் அனுப்பினார். அந்தப் படையிடம் ராவ் கரன் வீழ்த்தப்பட்டு, நவம்பர் 27இல் பேரரசரை வந்து சந்தித்து மன்னிப்பு பெற்றுக்கொண்டார்.
அடுத்ததாக, ஒளரங்கசீபின் கவனம் கீழ்ப்படிதலற்ற புந்தேலா பகுதியின் அரசர் சம்பத் ராய் மீது திரும்பியது. 1635 போர் முடிந்ததும் பீர் சிங் தேவ்வை அர்ச்சா பகுதியின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கிவிட்டு, அவருடைய அண்ணனின் வாரிசான தேவி சிங்கிடம் ஒளரங்கசீப் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் பீர் சிங்கின் அப்பாவின் இளைய சகோதரின் வம்சத்தில் இருந்து புதியவர்கள் கிளம்பி, கிழக்கு புந்தேல்கண்டில் இருந்த மேஹ்வாவை ஆண்டு வந்தனர். அவர்களுடைய தலைவராக சம்பத் ராய் இருந்தார்.
ஜஸ்வந்தை வென்றதும் ஒளரங்கசீப் உஜ்ஜயினிக்கு வந்தபோது சம்பத் ராய் அவருடன் இணைந்துகொண்டவர். ஆனால், க்வாஜா பகுதியைக் கைப்பற்ற ஷுஜா படையெடுத்து வந்ததையும், பேரரசில் அப்போது ஷாஜஹான் இறந்துவிட்டதாகப் பரவிய வதந்தியையும் நம்பிய ராய், ஒளரங்கசீபை விட்டு விலகினார். தனது ஊருக்குத் திரும்பியவர், பழைய வழியில் கொள்ளையடிப்பில் ஈடுபடத் தொடங்கினார். சுபாகரன் புந்தேலா, மற்றும் பிற ராஜபுத்திரத் தளபதிகளின் தலைமையில் ராயை அடக்கச் சொல்லி ஒளரங்கசீப் படை ஒன்றை அனுப்பினார் (பிப்ரவரி 10, 1659). ராஜ் தேவி சிங் புந்தேலா மற்றும் மால்வாவின் படைகளையும் அவர்களுக்கு உதவும்படி அனுப்பினார். அனைவரும் இப்போது சம்பத் ராயை எதிர்க்க வந்தனர். அவர் பேரரசப் படைக்குப் பயந்து உயிரைக் கையில் பிடித்தபடி ஒவ்வொரு ஊராகத் தப்பி ஓடினார்.
அக்டோபர் 1661 நடுப்பகுதிவாக்கில், நண்பர்கள்போல் நடித்த சிலரால் சம்பத் ராய் சிறைபிடிக்கப்பட்டார். மிகுந்த காய்ச்சலுடன் பலவீனமாகியிருந்த அவர், தன்னைத்தானே குத்திக்கொண்டு இறந்தார். அவருடைய வாழ்க்கை முழுவதும் துணையாக இருந்த ராணி காளி குமாரியும் அப்படியே தன் உயிரை மாய்த்துக் கொண்டார். ஆனால் அவரது மகன் சத்ராசால் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து மொகலாயர்களுக்கு, சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர், கிழக்கு புந்தேல்கண்டில் புதியதாக பன்னா ராஜ்ஜியத்தை நிறுவினார்.
4. பலமூ பகுதியைக் கைப்பற்றுதல் மற்றும் பிற நடவடிக்கைகள்
பிஹாரின் தென் எல்லைக்கு அப்பால் பலமூ மாவட்டம் அமைந்துள்ளது. அது, தென் மேற்கில் மத்தியப் பிராந்தியங்கள் மற்றும் தென் கிழக்கில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமிக்கு ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் கரடுமுரடான வழித்தடமாக இருந்தது. மலையும் கானகமும் நிறைந்த அப்பகுதி, சிகரங்களையும் சரிவான மலைப் பாதைகளையும் கொண்டது. அங்கு ஓடும் நதிகள் பல மழைக்காலங்களில் நிரம்பி வழியும் என்பதால், அவை பயணம் செய்வதற்கோ நிலையான நீர்ப்பாசனத்துக்கோ உகந்ததாக இருந்திருக்கவில்லை.
அந்த மாவட்டத்தின் தென் பகுதி, பாறைகளும் மரங்களும் நிறைந்த குன்றாக இருந்தது. வட பக்கம் இருக்கும் பள்ளத்தாக்குகள் சற்று அகலமாகவும் வளம் மிகுந்ததாகவும் இருந்தன. ஆனால் அந்த மாவட்டம் முழுவதுமே மலைப்பகுதியில் இருந்து ஆறே மைல் சுற்றளவுக்குள்தான் இருந்தது. அங்கு சமதளங்களே கிடையாது. அந்த மாவட்டத்தைப் பார்த்தால் அடர்ந்த கானகத்தைக் கொண்ட, தாறுமாறாக அமைந்திருக்கும் மலைக்குன்றுகளைப் போலவே இருக்கும்.
மலை அல்லது மலைத் தொடரின் உச்சியில் இருந்து பார்த்தால் அந்த மாவட்டம், பச்சை மரப் போர்வையால் போர்த்தப்பட்டதாகவும் மனிதக் குடியிருப்புகள் எல்லாம் அதனுள் மறைந்தும் காணப்படும். ஆங்காங்கே சிற்சில இடங்களில் சிவப்பு ஓடுகள் பதிக்கப்பட்ட கூரைகள், தோப்புகள் அல்லது வளர்ப்பு மிருகங்களின் மந்தைகள் தென்படக்கூடும். மக்கள் தொகையும் மிகவும் குறைவு. சிறியதான, ஆங்காங்கே சிதறலாக அமைந்திருக்கும் மலைக்கிராமங்களில் மக்கள் வசித்து வந்தனர்.
17-18ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்தப் பகுதியில் செல்வாக்கு மிகுந்த குலமாக திராவிடர்களான சேரோ வனவாசியினர் இருந்தனர். இவர்கள் ராஜ்பந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள். 1643இல் இவர்களிடையே நிலவிய வாரிசுரிமைப் போட்டிகளைப் பயன்படுத்தி, ராஜா பிரதாப் சேரோவைத் தங்களது ஆதிக்கத்துக்கு உட்பட்ட மன்சப்தாராக மொகலாயர்கள் கீழிறக்கம் செய்தனர். அவருடைய முன்னோர்களின் ராஜ்ஜியத்தைப் பேரரசின் கீழ் இருக்கும் குறு நிலமாக மாற்றி ஆண்டுக்கு ஒரு லட்சம் பணம் கப்பம் கட்டவைத்தனர். இது மிக மிக அதிகமான தொகை என்பதால் ராஜாவினால் ஆண்டுதோறும் கொடுக்க முடியவில்லை. பாக்கித்தொகை எப்போதும் நிலுவையிலேயே இருந்தது. இதைத்தவிர சேரோக்கள் பிஹார் எல்லை கடந்து ஒவ்வொரு வருடமும் ஆநிரை கவர்ந்துசெல்லும் வழக்கங்களிலும் ஈடுபட்டதால் பேரரசருக்கு மேலும் கோபம் வலுவடைந்தது.
பேரரசரின் உத்தரவின் பேரில் பிஹாரின் ஆட்சியாளராக இருந்த தெளத் கான், ஏப்ரல் 1661இல் பலமூ பகுதியின் மீது படையெடுத்தார். அந்த ராஜ்ஜியத்தின் வட பகுதிக்குக் காவல் அரணாக இருந்த கட்தி, குண்டா, தேவகாவ் கோட்டைகளை அவர் வெகு எளிதில் கைப்பற்றிவிட்டார். அடுத்தாக, தலைநகரை நோக்கிக் கானகத்தை வெட்டி வழி அமைத்துக் கொண்டு முன்னேறினார். டிசம்பர் 7ஆம் தேதி பலமூவுக்கு இரண்டு மைல்களுக்கு அருகில் சென்ற அவர், அங்கிருந்த எதிரிகளின் காப்பு அரண்கள், பதுங்கு குழிகளில் இருந்த வீரர்களைத் தாக்கினார். மூன்று நாட்கள் நடந்த கடுமையான போருக்குப் பின் சேரோ மன்னரின் ராணுவம் தப்பி ஓடியது.
அதன் பின் இரண்டு மைல் நீளமான காட்டுப் பாதையைச் சிரமப்பட்டு வெட்டி வீழ்த்திய அவர், தலைநகருக்கு முன்பாக இருந்த காவல் படைகளை 13ஆம் தேதியன்று தாக்கினார். ஆறு மணி நேரம் நீடித்த இந்தத் தீவிரப் போருக்குப் பின், ராஜாவின் படையினர் தப்பி ஓடினர். வெற்றிக் கூச்சலுடன் மொகலாயப் படை புயல்போல் நகருக்குள் பாய்ந்தது. அன்று இரவு ராஜா கோட்டையில் இருந்து தப்பித்துச் சென்றார். மறுநாள் கோட்டை மொகலாயர் வசம் வந்தது. பிஹாரின் கீழ் இருக்கும் சுபா பகுதியாக பலமூ இணைத்துக் கொள்ளப்பட்டது (சுபாதார்கள் பேரரசருக்குக் கட்டுப்பட்டவர்கள். என்றாலும், அந்நாளில் போக்குவரத்து வசதிகள், படை நகர்வுகள் எளிதாக இருக்கவில்லை என்பதால் இந்த சுபாதார்கள் ஓரளவுக்குச் சுதந்தரமாகவும் ஆட்சி புரிய முடிந்தது).
1662இல் வட மேற்கு கத்தியவாரில் இருக்கும் ஹலர் ராஜ்ஜியத்தின் நாவநகரிலும் வாரிசு உரிமைப் போர் எழுந்ததைத் தொடர்ந்து அங்கும் மொகலாயர்களின் குறுக்கீடு நிகழ்ந்தது. ஜுனாகட் பகுதியின் ஃபெளஜ்தார், பேரரசப் படை சார்பில் தீவிரமாகப் போரில் ஈடுபட்டார். இந்தப் போரில் பேரரசுப் படையைச் சேர்ந்த 611 வீரர்கள் காயம்பட்டோ இறந்தோ போயினர் (பிப்ரவரி 13, 1663). இறுதியில் பேரரசப் படையினர் அந்த ஆட்சியை முறைகேடாகப் பற்றியவரைக் கொன்றுவிட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். ஆனால், இந்தப் பகுதியில் மோதல்கள் தொடர்ந்து நீடித்தவண்ணம் இருந்தன.
1664இல் தர்பங்கா, கோரக்பூரில் இருந்து இரண்டு படைகள் குச் பிஹாரில் கலகம் செய்த மோரங் பகுதியைச் சேர்ந்த ராஜாவைத் தோற்கடிக்க அனுப்பப்பட்டன. குச் பிஹாரின் மேற்கில், பர்னேய மாவட்டத்தின் வடக்கே இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 1676இன் ஆரம்ப மாதங்களில் இந்த மோரங் பகுதி முதல் முறையாக மொகலாயர்களின் கட்டுக்குள் வந்ததாகத் தெரிகிறது.
கு(ர்)மாயூன் மலைப் பகுதியில் ஆட்சியில் இருந்த ராஜா பஹதூர் சந்தாவையும் வீழ்த்துவதற்குப் பேரரசுப்படை 1665இல் அனுப்பப்பட்டது. நீண்ட நெடிய போருக்குப் பின் வீழ்ந்த ராஜா, 1673இல் கீழடங்கி நடக்க ஒப்புக்கொண்டார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.