5. தானிய வரிகளை விலக்கிக் கொள்ளுதல், இஸ்லாமிய சட்டங்கள்
ஒளரங்கசீப் இரண்டாவது முறையாக முடிசூட்டிக்கொண்டதும் மிகவும் அவசியமாகிவிட்டிருந்த இரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். வாரிசுரிமைப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் வட இந்தியாவில் பல பகுதிகளில் பொருளாதாரம் மிக மோசமாகச் சீர்குலைந்திருந்தது. பஞ்ச காலத்தில் விற்பதுபோல் தானியங்களின் விலை விண்ணைத் தொட்டிருந்தது. உள் நாட்டு வர்த்தகம் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த வரிகள் நிலைமையை மேலும் மோசமாக்கியிருந்தன.
ஒவ்வொரு துறைமுகம், மலைப் பாதை அல்லது பிராந்திய எல்லை ஆகியவற்றில் ராஹ்தாரி – சுங்க வரியானது கொண்டு செல்லும் பொருளின் மதிப்பில் 10% வசூலிக்கப்பட்டது. வணிகப் பாதைகளின் போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்ய இந்த அதிக அளவு வரி வசூலிக்கப்பட்டது. ஆக்ரா, தில்லி, லாஹூர், பர்ஹான்பூர் போன்ற பெரிய நகரங்களில், வெளி பகுதியில் இருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்படும் உணவு, பானங்கள் ஆகியவற்றின் மீது பான்தாரி என்று அழைக்கப்பட்ட வரி விதிக்கப்பட்டது.
ஒளரங்கசீப் முதலில் ராஹ்தாரி மற்றும் பான்தாரி என்ற இந்த இரண்டு வரிகளையும் முக்கிய நகரங்களில் ரத்து செய்தார். ஜாஹிர்தார்கள் மற்ரும் ஜமீந்தார்களிடமும் தமது பகுதிகளில் இந்த வரிகளை விலக்கிக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். இப்படிச் செய்ததால் உணவுப் பற்றாக்குறை இருந்த இடங்களுக்கு விளைச்சல் மிகுதியான இடங்களில் இருந்து சுலபமாகப் பொருட்கள் சென்று சேர வழி பிறந்தது. தானியங்களின் விலை கணிசமாகக் குறைந்தது. பல்வேறு இரட்டை வரிகள், அவற்றில் பலவும் சொற்ப தொகையைக் கொண்டவையாகவே இருந்தன. எனவே தொந்தரவாக இருந்த அவற்றையெல்லாம் ஒளரங்கசீப் 1673இல் முழுமையாக விலக்கிக் கொண்டார். புகையிலை மீதான ஆக்ட்ரய் உள்ளூர் வரியை 1666இல் ரத்து செய்தார்.
தாரா ஷுகோ முன்னெடுத்த மார்க்க விரோதச் செயல்பாடுகள் மற்றும் கோட்பாடுகளை மறுதலித்து தூய இஸ்லாமிய ஆட்சியை வழங்குவேன் என்று ஒளரங்கசீப் அறிவித்தார். ஜூன் 1659இல் இரண்டாவது முறையாக முடிசூட்டிக் கொண்டதும் பழமைவாத இஸ்லாமிய நம்பிக்கைகளை மீண்டும் கொண்டுவரும் நோக்கிலும் மக்களின் வாழ்க்கை குர்ரானின் போதனைகளுக்கு நெருக்கமானதாக இருக்கவேண்டும் என்ற நோக்கிலும் கீழ்க்கண்ட சட்ட விதிமுறைகளை விதித்தார்.
- முந்தைய மொகலாய பேரரசர்கள் தமது காலத்து நாணயங்களில் மொகமதிய கலீமாக்களை அச்சிடுவது வழக்கம். ஒளரங்கசீப் அதை மார்க்க விரோதம் என்று சொல்லி ரத்துசெய்தார்.
- பாரசீகத்தின் பழங்கால அரசர்கள், அங்கு ஆட்சி புரிந்த முஸ்லிம் அரசர்கள், இந்தியாவை ஆண்ட மொகலாய அரசர்கள் எல்லாம் ஜொராஷ்டிரிய புத்தாண்டு நாளைக் கொண்டாடுவது வழக்கம். சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாசி மாதத்தில் வரும் நாளை நவ வர்ஷ் (ஃபர்வாதின் முதல் நாள்) என்று அரண்மனையில் கொண்டாடுவது வழக்கம். ஒளரங்கசீப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ரமலான் மாதத்தில் நடந்த அவருடைய முடிசூட்டுவிழா கொண்டாட்ட நாளுக்கு மாற்றினார்.
- ஒழுக்க விதிகள் தொடர்பாக முஹ்தாஸிப் என்ற அதிகாரியை நியமித்து, இறைத்தூதர் செய்யக்கூடாதென்று தடுத்தவற்றை மீறி யாரேனும் நடக்கிறார்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் கொடுத்தார். வடிகட்டிய சாராயம், நொதிக்கப்பட்ட போதை பானம், பாங், பிற போதை பானங்கள், சூதாட்டம், பாலியல் தொழில் இவற்றையெல்லாம் மார்க்கவழியில் நின்று தடை செய்தார். ஆனால், ஓபியம், கஞ்சா ஆகியவை தடைசெய்யப்படவில்லை. மார்க்க விரோதக் கருத்துகள், முஸ்லிம்கள் தொழுகை செய்யாமல் இருப்பது, நோன்பு இருக்காமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகளை முறையாக அமல்படுத்த மன்சப்தார்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
- 13, மே, 1659இல் பாங் போதைப் பயிர் வளர்ப்பது தடைசெய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
- சிதிலமடைந்த பழைய மசூதிகள், மடாலயங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்பட்டன. இமாம்கள், முவாஜின்கள், கதீப்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு முறையான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டன. வயதாகஆக ஒளரங்கசீபின் மார்க்கப் பற்றும் அதிகரித்தது. அவர் மார்க்க விதிகளை தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் கறாராக அமல்படுத்த அதுவே காரணமாக அமைந்ததை இதிலிருந்து நாம் பார்க்க முடிகிறது.
- ஒளரங்கசீபின் 11வது ஆண்டு கால ஆரம்பத்தில், அரசவை இசைக் கலைஞர்கள் தன் முன்னே நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தடை செய்தார். ‘மெள்ள இசை முழுமையாக அரசவையில் தடை செய்யப்பட்டது’
இசைக் கலைஞர்களின் வாரிசுகள் பேரரசரின் இந்தச் செயலுக்குப் பழிவாங்க விரும்பினர். மக்கள் மத்தியில் அவரை கேலிப் பொருளாக்க விரும்பினர். ஒரு வெள்ளிக் கிழமையன்று ஒளரங்கசீப் மசூதிக்குச் செல்லும் வழியில் ஆயிரம் இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடினார்கள். 20 அழகிய, நன்கு அலங்காரங்கள் செய்யப்பட்ட சவபெட்டிகளைச் சுமந்துகொண்டு ‘ஓ’வென்று உரத்த குரலில் அழுதவண்ணம் வந்தனர். சற்று தொலையில் இருந்த ஒளரங்கசீபுக்கு இந்த அழுகையும் புலம்பலும் காதில் விழுந்ததும் எதனால் இப்படி அழுகிறார்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘இசைக் கலைஞர்கள் அழுதபடியே, பேரரசரே… நீங்கள் இசை மகளைக் கொன்றுவிட்டீர்கள். அவளைத்தான் கபர்ஸ்தானில் புதைக்கக் கொண்டுசெல்கிறோம்’ என்று சொன்னார்கள். ஒளரங்கசீப் சற்றும் பதற்றமடையாமல் நிதானமாகச் சொன்னார்: ‘நல்லது அவள் வெளியே வரமுடியாதபடி ஆழமாகப் புதைத்துவிடுங்கள்’. - சந்திர சூரிய ஆண்டுக்கணக்கின்படி பேரரசரின் இரண்டு பிறந்தநாட்களின் போது எடைக்கு எடை தங்கமும் வெள்ளியும் கொடுக்கும் கொண்டாட்டத்தை ஒளரங்கசீப் நிறுத்தினார்.
- ஆக்ரா கோட்டையில் ஹாத்திபுல் வாசலில் இரண்டு தூண்களில் ஜஹாங்கீர் காலத்தில் எழுப்பப்பட்ட இரண்டு கல் யானைகளை 1668இல் ஒளரங்கசீப் அப்புறப்படுத்தினார்.
- அரச சபையினர் ஹிந்து வழக்கப்படி வாழ்த்துகள் சொல்லிக் கொள்வது தடை செய்யப்பட்டது. தலையில் கைவைத்து ‘சலாம் அலைக்கும்’ என்று சொல்லும்படி 1670இல் கட்டளை பிறப்பித்தார்.
- மார்ச் 1670-வாக்கில் தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதித்தார். நாள் முழுவதுமான ராஜ அணிவகுப்புகள், இசைக் கோவைகள் ஆகியவை மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டன. தனது ஆட்சியின் 21-ம் ஆண்டிலிருந்து (நவ, 1677) தனது இரண்டாவது முடிசூட்டு விழா நினைவாக நடந்துவந்த வருடாந்தரக் கொண்டாட்டங்களை நிறுத்தினார்.
- மஹாராஜாக்கள் மொகலாயப் பேரரசர்களை வந்து சந்திக்கும்போது அவர்களுக்கு நெற்றியில் பேரரசர்கள் திலகமிட்டுவிடுவது வழக்கம். ஒளரங்கசீப் அது இந்து வழக்கம் என்று சொல்லி, மே 1679-லிருந்து அதைப் பின்பற்ற மறுத்துவிட்டார்.
- அரண்மனை உப்பரிகையில் வந்து நின்று கீழே காத்திருக்கும் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி தினமும் நடப்பது வழக்கம். அக்பரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கத்தைப் பிற மொகலாய மன்னர்களும் பின்பற்றிவந்தனர். ஒளரங்கசீப் அதையும் நிறுத்தினார். அன்றாடப் பணிகளை ஆர்ம்பிக்கும் முன்பாக தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டுத் தொடங்கும் இந்து மரபுக்கு இணையானது என்று சொல்லி அதை நிறுத்தினார்.
- கபர்ஸ்தான் உள்ள வளாகத்தின் மேலே கூரைகள் எழுப்புவது, சமாதிகளுக்கு சுண்ணம் அடிப்பது, சூஃபி துறவிகளின் கபர்ஸ்தான்களுக்குப் பெண்கள் புனித யாத்திரை மேற்கொள்வது ஆகியவை குர்ரான் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால்தடைசெய்யப்பட்டன.
ஆனால், மனித குலத்தை ஒரே தாவலில் மேலெழும்பச் செய்யும் இவருடைய முயற்சிகள் தோல்வியைத் தழுவின. அரச நிர்வாகம் இந்த உயரிய சிந்தனைகளை மக்களுக்குப் புரியவைத்து அதன் பின் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யவில்லை. இதனால் இந்தக் கெடுபிடிகள் ஆரம்பத்தில் மிக மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. மக்கள் ஆதரவு இல்லாதவற்றைப் பின்னர் தளர்த்திக் கொண்டது. அதன் பின் இறுதியில் நிறுத்தவேண்டி வந்தது. இந்த நடவடிக்கைகள் அரசு நிர்வாகத்தைக் கேலிக்குரியதாக ஆக்கியது.
மனுச்சி இது பற்றி என்ன சொல்லியிருக்கிறாரென்றால், ஒளரங்கசீப் அரியணை ஏறியபோது இந்துஸ்தானில் மது அருந்துதல் மிகவும் சர்வ சாதாரணமாக இருந்தது. ‘ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானிலும் குடிக்காத இரண்டே பேரைத்தான் பார்க்கமுடியும். ஒருவர் நான் (ஒளரங்கசீப்); இன்னொருவர் தலைமை ஹாஜியார்’ என்று ஒளரங்கசீப் தன்னிடம் சொன்னதாக மனுச்சி குறிப்பிட்டிருக்கிறார். மது தடுப்பு தொடர்பான கெடுபிடிகள் முதலில் தீவிரமாக இருந்தது. ஆனால் நாளாக நாளாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ரகசியமாகக் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அரசு அதிகாரிகள்கூட குடிப்பதையும் மற்றவர்கள் இவர்களுக்கு வாங்கிக் கொடுத்துக் குடிக்கவைப்பதையும் விரும்புபவர்களாக இருந்தனர். இசைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் இப்படித்தான் இருந்தது.
பேரரசர் சூதாட்டத்துக்குக் கடும் தண்டனைகள் கொடுத்தார். விலை மகளிர் மற்றும் பிற கேளிக்கை நடனப் பெண்களை எல்லாம், ‘ஒன்று திருமணம் செய்துகொள்ளுங்கள்; அல்லது இடத்தைக் காலி பண்ணுங்கள்’ என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த விதியும் நடைமுறையில் அமலாகவில்லை என்று மனுச்சி குறிப்பிட்டிருக்கிறார். பொதுவெளிகளில் ஹோலிக் கொண்டாட்டங்களுக்கான தடை, ஆபாசப் பாடல்கள் இசைத்தல், சொக்கப்பனையில் இருந்து தீப்பந்தங்களை பறித்துக் கொண்டு செல்லுதல் போன்றவற்றுக்கான தடை என்பது பெரிதும் காவல், ஒழுங்கு தொடர்பான விஷயமாகமட்டுமே இருந்தன.
பர்ஹான்பூரில் 1669இல் மொஹர்ரம் விழாவில் இரு பிரிவினருக்கிடையே பயங்கரமான மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அந்த ஊர்வலங்களுக்குத் தடை விதித்ததும் இப்படியானதுதான்.
ஹிந்து பெண்களை கணவர் இறந்ததும் சிதையில் ஏற்றும் வழக்கத்துக்கு 1664இல் ஒளரங்கசீப் தடைவிதித்தார். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த அரசாங்கத்தினால் முடிந்திருக்கவில்லை. ஆண் குழந்தைகளுக்கு விரை நீக்கம் செய்து அடிமைகளாக விற்கும் கொடூர வழக்கத்துக்கு (1668 வாக்கில்) தடைவிதித்தார்.
6. தாராவின் மதிப்புக்குரிய சூஃபி துறவிகளையும் மார்க்க விரோதிகளையும் கொல்லுதல்
இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளை அமலாக்குவதற்கு ஒளரங்கசீப் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், தாரா ஷுகோவின் மதிப்பையும் ஆதரவையும் பெற்ற தாராள சிந்தனைகள் கொண்ட இஸ்லாமிய சூஃபிகளையும் தண்டிப்பதாக மாறியது. அப்படியானவர்களில் ஒருவர் மியான் மீர் என்ற சூஃபியின் சீடரும் இறையியல் பாக்கள் இயற்றுவதில் வல்லவருமான முஹம்மது பதாக்ஷி. தாரா இந்த சூஃபியைப் பெரிதும் மதித்துப் போற்றினார். இவருக்கு நிறைய வசதிகளும் செய்துகொடுத்தார். எனவே ஒளரங்கசீப் அரியணை ஏறியதும் தன்னை வந்து பார்க்கும்படி இவருக்கு ஆணை பிறப்பித்தார். வரும் வழியில் அந்த சூஃபி துறவி 1661இல் லாஹூரில் இறந்துவிட்டார்.
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றிருந்த சூஃபியான சர்மத், ஒளரங்கசீபினால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர். இவர் பாரசீகத்தில் காஷானி பகுதியில் யூத பெற்றோருக்குப் பிறந்தவர். ஹீப்ரூ மொழியில் நல்ல தேர்ச்சி பெற்று ரப்பி – யூத இறையியல் குருவாக வளர்ந்திருந்தார். அதன் பின்னர் இஸ்லாமுக்கு மதம் மாறி, முஹம்மது சையது என்ற பெயர் சூட்டிக் கொண்டார். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்தவர், தட்டா பகுதியில் அபய் சந்த் என்ற ஹிந்து இளைஞரைச் சந்தித்தார். நிர்வாண ஃபக்கீராகி அபய் சந்தைத் தனது சீடராக ஆக்கிக் கொண்டார். தில்லியில் தாரா ஷூகோவைச் சந்தித்து அவருடைய நன் மதிப்பையும் பெற்றார். அவர் ஷாஜஹானுக்கும் இவரை அறிமுகப்படுத்திவைத்தார்.
சர்மத் பல்-இறைக் கோட்பாடாளர். அவருடைய இனிமையான கவிதைகள் புதிரான இறை அனுபவங்களை மட்டுமல்லாமல் அனைத்து மதப் பிரிவுகளிலும் இருக்கும் சத்தியத்தை மதித்துப் போற்றுவதாக இருந்தன. முஹம்மது நபி மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். அதே நேரம் பல்வேறு இஸ்லாமிய இறையியல் கோட்பாடுகள், நடைமுறைகள் ஆகியவற்றில் நவீன பார்வை கொண்டவராகவும் இருந்தார்: ‘கடவுள் என்பவர் கோட்பாடு சார்ந்தவர் அல்ல. பருப்பொருள் வடிவினர். மனித உருவமும் உடலும் கொண்டவர்; ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு இந்த வாழ்க்கையிலேயே பலன் கிடைக்கின்றன; ஒரு மனிதரின் ஆன்மா அவர் எத்தனை காலம் பூமியில் வாழ்கிறாரோ அத்தனை காலம் செயலற்ற நிலைக்குச் சென்று (தூக்க நிலைக்குச் சென்று) அதன் பின்னர் மீண்டும் பிறக்கிறது’.
சர்மத் எப்போதும் நிர்வாணமாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார். ஒற்றை மூலப்பொருளுக்கு எல்லா உயிர்களும் திரும்பிச் செல்லும்; பருப்பொருகள், உயிர்களுக்கு தனி இருப்பு இல்லை என்று கூறினார். உடல் சார்ந்து எந்தவொரு அவமானமோ பெருமிதமோ அற்றவராக இருந்தார்.
இஸ்லாமிய இறையியலாளர்கள் குழு ஒன்று கூடி சர்மத் சொல்லும் கோட்பாடுகள் எல்லாம் மார்க்க விரோதமானவை; எனவே அவருக்கு மரண தண்டனை தரவேண்டும் என்று முடிவு செய்தனர். உண்மையில் அந்த முடிவை அவர்கள் எடுக்க, அவர் தாரா ஷுகோவை அடுத்த பேரரசராக ஆக்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் என்ற அரசியல் விஷயமே காரணமாக இருந்தது.
1672இல் முஹம்மது தாஹி என்ற ஷியா அதிகாரி (திவான்) முதல் மூன்று காலிஃப்கள் குறித்து தவறாகப் பேசியதற்காக தலை துண்டிக்கப்பட்டார். 1667இல் இஸ்லாத்தைத் தழுவிய போர்ச்சுகீசிய பாதிரியார் மீண்டும் கிறிஸ்தவத்துக்கு மாறியதைத் தொடர்ந்து ஒளரங்காபாதில் இஸ்லாமிய மத நிந்தனைக் குற்றம் சாற்றப்பட்டு கொல்லப்பட்டார். அஹமதாபாதைச் சேர்ந்தவரும் போரா முஸ்லிம்களின் ஆன்மிக வழிகாட்டியுமான சையது குத்புத்தீனையும் அவருடைய 700 சீடர்கள், ஆதரவாளர்களையும் ஒளரங்கசீபின் ஆணையின் பேரில் கொன்றார்கள்.
7. இஸ்லாமிய நாடுகளுடன் ஒளரங்கசீபின் தொடர்புகள்
அரியணையில் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதும் ஒளரங்கசீபுக்கு இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து வாழ்த்துச் செய்திகளுடன் தூதுவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
அன்புக்குரிய தந்தையின் அரியணையை முறை கேடாகக் கைப்பற்றியவரை நியாயமான வாரிசாக அங்கீகரிக்கவைக்க புனித நகரத்து மார்க்கத் தலைவர்கள் மற்றும் பல நாட்டு ஆட்சியாளர்களை தங்கத்தில் குளிப்பாட்டத் தீர்மானித்தார்.
நவம்பர் 1659இல் பிரமாண்டமான முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து மெக்கா, மதீனாவில் இருக்கும் மசூதிகள், மதரசாக்கள், புனிதப் பயணிகள், சையதுகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள், ஹாஜியார்கள், சேவகர்கள் என அனைவருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உதவும் நோக்கில் சையது மீர் இப்ராஹிமிடம் ஆறு லட்சத்து அறுபதாயிரம் பணம் கொடுத்து அனுப்பினார். அதன் பின்னர் ஷரீஃபின் பிரதிநிதிகள் தில்லிக்கு ஆண்டுதோறும் வந்து நபிகளின் பெயரில் நன்கொடைகள் பெற்றுச் செல்வதுண்டு. ஆனால், ஷரீஃபின் பேராசையின் காரணமாக ஒளரங்கசீப் அவரை எதிர்க்க ஆரம்பித்தார்.
தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் தனது வாஸிருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில், ‘மெக்காவின் ஷரீஃப் இந்தியாவின் செல்வ வளத்தைக் கேள்விப்பட்டு ஆண்டுதோறும் பிரதிநிதிகளை அனுப்பி தனது கஜானாவை நிரப்பிக் கொண்டுவருகிறார். நான் அவருக்குக் கொடுத்து அனுப்புபவை எல்லாம் அங்கு வரும் ஏழை எளியோருக்கானது. ஷ்ரீஃபுக்கானவை அல்ல’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒளரங்கசீபுடன் அரியணைக்கு வேறு யாரும் போட்டியிட இல்லை என்பது உறுதியானதும் இரண்டாம் ஷா, தனது தளபதியான அப்பாஸ் பதாக் பெய்க் தலைமையில் மிகப் பெரிய பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார் (1661).
ஆசியாவின் ஃப்ரெஞ்சுக்காரர்கள் என்று பாரசீகர்கள் அழைக்கப்பட்டது மிகவும் சரியானதுதான். ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகின் கலாசார, இலக்கிய மற்றும் நடை உடை பாவனைகளின் மூல ஊற்றாக பாரசீகம் திகழ்ந்தது. அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கவிதைகளில் பாரசீகம் மிக அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. பாரசீக நடை உடை பாவனைகள், உனவுகள் எல்லாம் கோர்வோவா, கான்ஸ்டாண்டிநோபிள் தொடங்கி தில்லி, ஸ்ரீரங்கபட்டணம் வரையிலும் மிகக் கஷ்டப்பட்டு சில நேரங்களில் தாறுமாறாக நகலெடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. எதிரிகளின் வாள் முனைகளைவிட மொகலாய அரசர்கள் பாரசீக நையாண்டி எழுத்தாளர்களின் கிண்டலுக்குப் பெரிதும் பயந்தனர்.
பாரசீகப் பிரதிநிதிகள் குழு வருகிறதென்றால் மெகலாய அரசவையில் பதற்றம் உருவாக ஆரம்பித்துவிடும். பேரரசர் முதல் கடைநிலை சேவகர் வரை அனைவரும் தமக்கும் நாட்டுக்கும் ஏதோ சோதனை வரப்போகிறது என்று நடுங்கினர். அவர்களுடைய நடை உடை பாவனைகள், நடத்தைகள் எல்லாமே ஆசியா முழுவதும் சமூக தலைமையில் இருக்கும் குழுவினரின் கண்காணிப்புக்கு உள்ளாகப் போகிறது. யாரேனும் ஏதேனும் விஷயத்தில் கண்ணியக் குறைவாக, ஏதேனும் தவறாகச் செய்துவிட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிலும் கேலிப் பொருளாகிவிடுவார் என்று பயந்தனர்.
பாரசீக ஷாவிடமிருந்து கொண்டுவரப்பட்ட பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ 4,22,000 இருந்தது. 27, ஜுலை, 1661இல் பாரசீகக் குழு விடைபெற்றுச் சென்றது. ஷாவுக்கும் அவருடைய குழுவினருக்குமாக ஒளரங்கசீப் கொடுத்த பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ 5,35,000 ஆக இருந்தது.
ஷா மன்னர் அனுப்பிய கடிதத்துக்கான பதில் கடிதத்தைச் சுமந்துகொண்டு முல்தான் ஆட்சியாளரான தர்பியத் கான் தலைமையில் ஒரு குழு புறப்பட்டுச் சென்றது. அவர்கள் தனியாக பரிசாக ஏழு லட்ச ரூபாய் எடுத்துச் சென்றனர். அந்தக் கடிதத்தில், ‘பாரசீக மன்னர் ஷாவின் நட்பார்ந்த ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்த ஒளரங்கசீப், அல்லாவை மட்டுமே நம்புவதாகவும் மனிதர் யாருடைய ஆதரவும் தனக்குத் தேவையில்லை’ என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். தனது சகோதரர்களை வென்றது தொடர்பான கதைகளை மிக விரிவாக மிகுந்த மகிழ்ச்சியுடன் விவரித்திருந்தார்.
இஸ்ஃபஹன் பகுதியில் பாரசீக மன்னரை மொகலாயப் பிரதிநிதி சந்தித்தார். அவர் மிக மோசமாக நடத்தப்பட்டார். அவமானமும் வேதனையும் அடைய நேர்ந்தது. இந்தியாவின் மீது படையெடுக்கப்போவதாக அவர் முன்னால் பாரசீக மன்னர் மிரட்டினார். இதன் பின்னர் ஷியா இஸ்லாம் பிரிவை நியாயப்படுத்தி, பாரசீக அரச வம்சத்தைப் பெருமைப்படுத்தி மிர்ஸா தாஹிர் வாஹித் எழுதிய மிக நீண்ட கடிதம் ஒன்றை ஒளரங்கசீபுக்கு ஷா அனுப்பினார். அதில் மொகலாயப் பேரரசரை ஏளனம் செய்தும் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை, தான் மட்டுமே காப்பதாகத் தற்பெருமையும் வெளிப்படுத்தியிருந்தார்.
பாரசீகத்தில் ஓர் ஆண்டுகாலம் தர்பியத் கான் தங்கியிருந்தார். 1666இல் அவருக்கு விடைகொடுத்து அனுப்பிய ஷா, ஒளரங்கசீபைக் கடிந்துகொண்டிருந்தார். ஷா அப்பாஸ் அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பது:
இந்தியாவின் பெரும்பாலான ஜமீந்தார்கள், கலகம் செய்துவருவதாகக் கேள்விப்பட்டேன். ஏனென்றால் அவர்களை ஆளும் அரசர் மிகவும் பலவீனமானவராக, செயல் திறமை அற்றவராக போதிய பலங்கள், வளங்கள் அற்றவராக இருக்கிறார். அந்தக் கலகக்காரர்களில் மிகவும் முக்கியமானவர் அல்லாவை மதிக்காத காஃபிரான சிவன். அவருடைய பெயரே வெளியே தெரியாத அளவுக்கு நீண்ட காலம் மறைந்து வசித்துவந்திருக்கிறார். இப்போது பலவீனமான ஆட்சியாளராக நீ (ஒளரங்கசீப்) இருப்பதால், மலையின் சிகரத்தைப்போல் நன்கு தெரியும்படியாக வெளிப்பட ஆரம்பித்திருக்கிறார். பல கோட்டைகளைக் கைப்பற்றியிருக்கிறார். உன்னுடைய ஏராளமான வீரர்களைக் கொன்றோ, சிறைப்பிடித்தோ வைத்திருக்கிறார்.
இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார். உன்னுடைய பல கோட்டைகள், நகரங்கள், கிராமங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அழிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக உன்னையும் வீழ்த்தவருகிறார்.
நீ உன்னை இந்த உலகின் மாலிக்காக (ஆலம்கீராக) உன்னை நினைத்துக் கொள்கிறாய். உண்மையில் உன் தந்தையை வென்றிருக்கிறாய். உன் சகோதரர்களைக் கொன்று சாந்தியும் சமாதானமும் அடைந்திருக்கிறாய். ஆனால், கலகக்காரர்களை அடக்குவது உன்னால் முடியாது. உலக அரசர்கள் பலர் எம் முன்னோர்களிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கிறார்கள். ஹுமாயூனுக்கும் நாஸர் முஹம்மது கானுக்கும் அவர்கள் இழந்த ராஜ்ஜியத்தை நாங்கள் மீட்டுக் கொடுத்தது அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஹுமயூனின் வம்சத்தில் வந்த நீயும் இப்போது நெருக்கடியில் இருக்கிறாய். பேரரசரான எனது மனம் இந்தியாவுக்கு மிகப் பெரிய படையுடன் வந்து உன்னைச் சந்திக்கவேண்டும் (அது என் வெகு நீண்ட நாள் ஆசையும் கூட). உன் நாட்டில் பரவிவரும் ஒழுங்கின்மையின் தீயை அணைக்க உனக்கு உதவவேண்டும் என்று என் மனம் விரும்புகிறது.
இந்த கடிதத்தை ஏந்திவந்த மொகலாயத் தூதரை ஒளரங்கசீப் கடுமையாகக் கடிந்துகொண்டார். தனது பணியைச் சரிவரச் செய்யவில்லையென்று சொல்லி அவரை அதன் பின் சந்திக்கவே மறுத்தார். பதவியிறக்கமும் செய்தார்.
1667இல் இந்த பாரசீக மன்னர் ஷா இறந்தார். இந்தியாவின் மீது படையெடுப்பேன் என்ற எச்சரிக்கை வெறும் வார்த்தையாகவே நின்றுவிட்டது. எனினும் ஒளரங்கசீப் தனது ஆயுட் காலம் முழுவதும் பாரசீக எல்லையில் விழிப்புடன் கண்காணிப்பைப் பலப்படுத்திவந்தார். பால்க் மற்றும் புகாரா பகுதிகளில் இருந்து 1661 மற்றும் 1667லும் காஷ்கரில் இருந்து 1664லும் உர்கனி (கிவா), கான்ஸ்டாண்டிநோபிள் பகுதியில் இருந்து 1690லும் அபிசீனியாவில் இருந்து 1665 மற்றும் 1671லும் என பல்வேறு நாடுகளில் இருந்து தூதுவர்கள் வந்தனர். அரேபியா, மத்திய ஆசியா, துருக்கிய பஸ்ரா பகுதியின் ஆட்சியாளர்கள் என பலருடனும் தில்லி பேரரசு நட்புறவைக் கொண்டிருந்தது.
ஏழு ஆண்டுகளுக்குள் (1661-1667) ஒளரங்கசீப் சுமார் 21 லட்ச ரூபாய்களை அயல் நாட்டுத் துதுவர்களை வரவேற்கவும் பரிசாகவும் செலவிட்டார். இது தவிர 1668இல் இந்துஸ்தானில் அடைக்கலம் நாடி வந்த காஷ்கர் பகுதியின் முன்னாள் அரசர் அப்துல்லா கானுக்கு 11 லட்ச ரூபாய் கொடுக்கவும் செய்தார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.