அத்தியாயம் 7
அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த போர்கள்
1. 1658க்கு முன்னால் கூச்-பிஹார் மற்றும் அஸ்ஸாமுடன் மொகலாயர்களின் தொடர்புகள்
16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன் விருப்பத்துடன் போரிடும் மங்கோலிய தளபதியான விஸ்வ சிங் என்பவர் கூச்-பிஹாரில் ஒரு ராஜ்ஜியத்தை நிறுவினார். அவருடைய ஆட்சி காலம் 1515-1540. எனினும் அவருடைய வம்சாவழியினர் மொகலாயர் காலம் வரையிலும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தனர். இந்து தர்மத்தையும் இந்து கலாசரத்தையும் ஏற்றுக்கொண்ட அவர் தனது படையையும் நிர்வாகக் கட்டமைப்பையும் திறம்பட வடிவமைத்தார்.
அவருடைய மூத்த மகன் நர நாராயணன் (1540-1584) துறவு வாழ்க்கையில் ஈடுபடவிரும்பினார். ஆனால் மன்னரின் இளைய சகோதரரின் மகனான ரகுதேவர், அவரை ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்தி அரசராக்கினார். அப்படியாக சங்கோஷ் மற்றும் பார் நதி ஆகியவற்றின் இடையில் இருக்கும் காமரூபம் அல்லது கிழக்கு கூச் பகுதிக்கு மன்னரானார். இந்தப் பகுதியை முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் கூச்-ஹஜோ என்று அழைத்தனர். இன்றைய மேற்கு அஸாமின் கோபால்புரம் மற்றும் காம ரூப மாவட்டங்களாக இவை இருக்கின்றன.
ரகுதேவரின் மகன் பரீக்ஷித், நர நாராயணின் மகனான லக்ஷ்மி நாராயணன் மீது போர் தொடுத்தார். இதற்கு வங்காளத்தில் இருந்த மொகலாய ஆட்சியாளரின் உதவியை நாடினார். முஸ்லிம் படை அந்த கூச்-ஹஜோ பகுதியை வென்று தன் ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொண்டது (1612). அப்படியாக மொகலாய அரசு வட கிழக்கில் பார் நதிவரை பேரரசின் சாம்ராஜ்ஜியத்தை விரிவடையச் செய்ததும் மத்திய கிழக்கு அஸ்ஸாம் பகுதிகளை ஆண்டுவந்த அஹோம் அரசர்களுடன் நிலரீதியான தொடர்புக்கு வந்தது.
அஹோம்கள் ஷான் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். (வடக்கு) மேல் பர்மாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மலைப் பகுதியே இவர்களின் பூர்விக பூமி. பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் ஒரு முனையில் இவர்களுடைய பாங் வம்சத்து இளவரசர் ஒருவர் 13-ம் நூற்றாண்டுவாக்கில் தன் அரசை நிறுவினார். அதன் பின்னர் அந்தப் பகுதிகளில் இருந்த பழங்குடிகளை வென்றபடி மேற்குப் பக்கமாக தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்.
அஹோம் மக்கள் மாட்டுக்கறி, காட்டுக்கோழி ஆகியவற்றை உண்பவர்கள். மது அருந்துவார்கள். முன்னோர்களின் ஆன்மாக்களை வழிபடுபவர்கள். மூங்கில் வேலிகள், தடுப்பரண்கள், பாலங்கள் கட்டுவதில் பர்மியர்களைப் போலவே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். படகுகள் ஓட்டுவதிலும் இரவு நேரத் தாக்குதல்களிலும் தேர்ந்தவர்கள். கோகைன், பருவா, ஃபுகான் போன்ற தலைவர்களின் கீழிருந்த நில உடமை சமூகமாக இருந்தது. இந்த கிராமத் தலைவர்களின் நிலங்களில் பண்ணையாட்களாக பிறர் இருந்தனர். சமூகத்தில் ஆண்கள் அனைவரும் ராணுவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடைய படையில் இருந்தவர்கள் பெரிதும் காலாட்படையினரே. உதவிக்கு யானைப் படையும் உண்டு.
அரசரே குல மூப்பராக இருந்தார். கிட்டத்தட்ட கடவுளைப் போல் மதிக்கப்பட்டார். பழங்குடிகளின் காவல் தெய்வமான சோம தேவரின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார். சிறிய தவறு செய்தாலும் ஆண்களுக்கு சித்ரவதையோடு கூடிய மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அஸ்ஸாம் பகுதியில் வசித்த காலகட்டத்தில் இந்திய கலாசாரம் மற்றும் ஹிந்து தர்மத்தின் செல்வாக்கினால் அஹோம்கள் மெள்ள பழங்குடி நிலையில் இருந்து மாற்றம் அடைந்தனர். ஹிந்து புரோகிதர்களும் கைவினைக் கலைஞர்களும் அஸ்ஸாமில் குடியேறினர். வங்காளத்தின் பதான் சுல்தான்களுடனான போர்களில் பெற்ற வெற்றியினால் அஹோம் படையினருக்கு துப்பாக்கி, பீரங்கிகளின் பயிற்சியும் கிடைத்தது. வங்காளப் பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலும் முஹமதியர்கள்) அஹோம்களின் ராஜ்ஜியத்தில் குடியமர்த்தப்பட்டனர். சங்கரதேவர் மற்றும் பல சன்னியாசிகளினால் வைஷ்ணவ தர்மம் இந்தப் பகுதியில் வெகு விரைவில் ஆழமாக வேரூன்றியது.
அஹோம் ராஜ்ஜியத்தில் பல தரப்பட்ட மக்கள் வசித்துவந்தனர். அஹோம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அதற்கு அடுத்ததாக அஸ்ஸாமியர்கள் இருந்தனர். இவர்கள் பெருமளவுக்கு வங்காளத்தொடர்பு கொண்ட சமவெளிப் பகுதியினர். உடல் வலிமை, போர்த் திறமை, கடின முயற்சி ஆகியவற்றில் சற்று பின்தங்கியவர்கள். சமூகத்தின் கீழடுக்கில் கூலியாட்கள் இருந்தனர். மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். எனினும் வங்காளத்தில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டவர்களே கீழடுக்கில் மிகுதியாக இருந்தனர். இவர்கள் இந்த ராஜ்ஜியத்தில் வேண்டா வெறுப்புடன், நிர்பந்தத்தின் பேரில் வசிக்க நேர்ந்திருந்தது.
17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூச்-ஹஜோ பகுதியைத் தமது ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து (1612) மொகலாயர்கள், அஹோம்களுடன் நீண்டகாலம் நீடித்த போரில் ஈடுபட ஆரம்பித்தனர். 1638-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. பிரம்மபுத்ரா பள்ளத்தாக்குக்கு வடக்கே பர்னாடி நதிக்கு மேற்கே இருந்த பகுதி, பிரம்மபுத்ராவின் தெற்கே அசூரர் அலி தடத்துக்கு மேற்கே இருக்கும் பகுதி ஆகியவற்றுக்கு முஹமதியர்கள் உரிமை கொண்டாட அனுமதிக்கப்பட்டனர். இந்த அமைதி உடன்படிக்கை 20 ஆண்டுகள் நீடித்தது.
2. காமரூபப் பகுதியை அஹோம் அரசு வென்ற விதம், 1658
மொகலாய பேரரசைக் கைப்பற்றும் நோக்கில் ஷா ஷுஜா 1657-ல் வங்காளத்தில் இருந்த படையின் பெரும்பகுதியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். கூச்-பிஹாரின் மன்னராக இருந்த பிரான் நாராயணன் எதிர்ப்பு குறைந்திருக்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்தார். தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த வாஸிரான பாபாநாத் என்பவரின் தலைமையில் ஒரு படையை, மொகலாய ஹஜோ பகுதிக்குள் அடைக்கம் தேடி ஓடியிருந்த ஒரு சிற்றரசரைச் சிறைப்பிடிக்க அனுப்பினார். அதே நேரத்தில், மேற்குப் பகுதியில் அஹோம் அரசுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மொகலாயர்களின் காமரூபப் பகுதிக்குள் நுழைய ஏற்பாடுகள் ஆரம்பித்தனர்.
கெளஹாத்தியின் ஃபவுஜ்தாரான (படைத்தளபதியான) மீர் ஃபதுல்லா ஷிராஸி இரு பக்கமிருந்தும் வரவிருக்கும் தாக்குதலைக் கண்டு அஞ்சினார். வங்காளத்தில் இருந்து உதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதையும் தெரிந்துகொண்டவர், டாக்காவுக்குத் தப்பிச் சென்றார். காமரூபப் பகுதியின் தலைநகரான கெளஹாத்தியை அஸ்ஸாமியர் எந்தவொரு ஆயுதத்தையும் பிரயோகிக்காமல் ஆக்கிரமித்தனர். அங்கிருந்த அசையும் அசையா சொத்துகள் அனைத்தையும் கைப்பற்றினர்.
இது 1658 வாக்கில் நடந்தது. ஜூன் 1660-ல் அந்தப் பகுதியில் உள் நாட்டுப் போர்கள் முடிவுக்கு வந்தன. வங்காளத்தின் வைஸ்ராயாக மீர் ஜும்லா நியமிக்கப்பட்டார். ’அஸ்ஸாம் மற்றும் மாக் (அரக்கான்) பகுதிகளைச் சேர்ந்த சட்ட விரோத ஜமீந்தார்களைத் தண்டிக்கவேண்டும்’ என்ற உத்தரவு அவருக்கு இடப்பட்டிருந்தது.
3. கூச்-பிஹார் மற்றும் அஸ்ஸாம் மீதான மீர் ஜும்லாவின் வெற்றி
1661, நவம்பர் ஒன்றாம் தேதியன்று டாக்காவிலிருந்து வைஸ்ராய் 12,000 குதிரைப்படை வீரர்கள், 30,000 காலாட்படை வீரர்களுடன் புறப்பட்டார். அந்தப் படையுடன் 329 பலதரப்பட்ட போர் படகுகளும் புறப்பட்டன. 14 பீரங்கிகள் மற்றும் 60 வீரர்களைக் கொண்டதும் நான்கு துடுப்புப் படகுகளால் இழுத்துச் செல்லப்படுவதுமான மிகவும் சக்திவாய்ந்த குராப் போர்ப் படகுகளும் அதில் இருந்தன.
பயன்பாட்டில் இல்லாததும் அதிகம் பேருக்குத் தெரியாததுமாக இருந்த பாதை வழியாக மீர் ஜும்லா, கூச்-பிஹாருக்குள் நுழைந்தார். ஆறே நாட்களில் மொகலாயப் படை 19 டிசம்பரில் தலைநகரைச் சென்றடைந்தது. அதன் அரசர் ஏற்கெனவே ஓடிப் போயிருந்தார். மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். அந்த நகரின் பெயர் ஆலம்கீர் நகர் என்று மாற்றப்பட்டது. அங்கிருந்த பிரதான கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டது. ஒட்டுமொத்தப் பிராந்தியமும் மொகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
16 நாட்கள் அங்கு தங்கியிருந்த தளபதி மீர் ஜும்லா 4, ஜன, 1662-ல் கூச்-பிஹாரில் இருந்து புறப்பட்டார். வழி நெடுகிலும் காடும், நீரோடைகளும் இருந்ததால் நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மைல் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது. அவருடைய படையினர் சொல்ல முடியாத சிரமங்களுக்கு உள்ளாக நேர்ந்தது. காலரா நோயினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த அஹோம் படையினரிடமிருந்து வந்த எதிர்ப்பு மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆக்கிரமிப்புப் படைகளைக் கண்டு பின்வாங்கினர். அல்லது அவர்களால் மிக மூர்க்கமாக அழிக்கப்பட்டனர்.
வழி நெடுகிலும் இருந்த அரண்கள், தடுப்புகள், மூங்கில் ஈட்டிகள் பதிக்கப்பட்ட பள்ளங்கள் ஆகியவற்றை எளிதில் கடந்து பிரம்மபுத்ரா நதிக்கரையோரமாக மொகலாயப் படை வெற்றிகரமாக முன்னேறிச் சென்றது. மோனாஸ் நதி முகத்தில் இருந்த யோகிபா கோட்டை (20 ஜன), பர்னாடி நதி முகத்தில் இருந்த ஸ்ரீகாட், கெளஹாத்தி (5 பிப்), பாண்டு, பேல்தலா, கல்லாஜ் நதி முகத்தில் இருந்த காஜலி, பாரலி நதி முகத்தில் இருந்த சாம்தரா, பிரம்மபுத்ராவின் தென் கரையில் எதிர்ப்பக்கம் இருந்த சிம்லா கர் (25 பிப்) என ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு கோட்டையும் நகரமும் கைப்பற்றப்பட்டன.
மொகலாயப் படையை எதிர்த்து இறுதியாக அஹோம் படை மார்ச் 3 அன்று இறுதியாகப் போரிட்டுப் பார்த்தது. அவர்களுடைய படகுப் படையை மொகலாய படகுப் படை துவம்சம் செய்து விட்டது. 300 அஹோம் படகுகளைக் கைப்பற்றவும் செய்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் 17 மார்ச்சில் கூர்காவ் சென்று சேர்ந்தனர். அதன் அரசர் ஜெயத்வாஜர் தன் தலைநகரையும் சொத்துக்களையும் விட்டு விட்டு ஓடியிருந்தார். அஸாமில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை மிக மிக அதிகம். 82 யானைகள், மூன்று லட்சம் ரூபாய், 675 பீரங்கிகள், துப்பாக்கிகள், 1345 ஒட்டகங்கள், 1200 ராம்சங்கி துப்பாக்கிகள், 6750 திரி இயக்கி துப்பாக்கிகள், 340 மவுண்ட் வெரி மருந்து, சுமார் ஆயிரம் படகுகள், 175 நெல் குதிர்கள், ஒவ்வொன்றிலும் 1000 மவுண்ட் தானியங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
கைப்பற்றிய பகுதிகளை வரவிருந்த மழைக் காலத்தில் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் மீர் ஜும்லா செய்தார். தலைநகருக்கு அருகே ஓடிய நதி சற்று ஆழம் குறைவானது என்பதால் படகில் பயணம் செய்து அங்கு சென்று சேர முடிந்திருக்கவில்லை. இதனால் வட மேற்கில் 18 மைல் தொலைவில் இருந்த லகாவு என்ற இடத்தில் முகாமிட வேண்டியிருந்தது.
பிரதான படைகளுடன் தளபதி கூர்காவ் பகுதிக்கு ஏழு மைல் தொலைவில் இருந்த, மதுராபூர் என்ற மேடான பகுதியில் அமைந்திருந்த கிராமத்துக்கு 31 மார்ச்சில் சென்று சேர்ந்தார். பீரங்கிகள், துப்பாக்கிகள், யானைகள், கிடங்குகள், பிற பொருட்கள் என மொகலாயப் படையின் அனைத்தும் அஹோம் தலைநகரில் ஒரு கோட்டையில் மீர் முர்தஸாவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. பல்வேறு புறக்காவல் அரண்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.
எதிரிகளின் படை இப்படியாக ஆங்காங்கே பிரிந்து நிலைகொண்டிருந்தன. கூர்காவ் பகுதிக்கு தெற்கே இருந்த மலைப்பகுதியில் பார் கோகைன் இருந்தார். பிற தலைவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் பிரம்மபுத்ரா நதியின் மூலம் உருவான மஜூலி என்ற தீவுப் பகுதியிலும் திஹிங் பகுதியிலும் இருந்தனர். அஹோம் மன்னர் மட்டும் தனது ஆட்சிப் பகுதியில் கிழக்கு முனையில் இருந்த நாமரூபப் பகுதிக்குத் தப்பி ஓடியிருந்தார்.
4. அஹோம்களுடனான தொடர் மோதல்கள்; மழைக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மொகலாயப் படைகள்.
ஆரம்பத்திலிருந்தே மொகலாயப் புறக் காவல் அரண்களுக்கு ஓய்வு என்பதே இருந்திருக்கவில்லை. அஹோம்கள் இரவுகளில் திடீர் தாக்குதல்களை இடைவிடாமல் மேற்கொண்டனர். கூர்காவ் பகுதியும் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. மே மாதத் தொடக்கத்தில் பெரு மழை ஆரம்பித்தது. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. படைகளை சாலைகள் வழியாகக் கொண்டு செல்வதும் தடைப்பட்டது. இதனால் மொகலாயப் படைகள் ஆங்காங்கே அமைத்த எல்லைக் காவல் அரண்கள், படைகள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டன.
மே மாதம் தொடங்கி அக்டோபர் இறுதிவரையான மழைக்காலம் முழுவதும் அஸ்ஸாமில் இருந்த மொகலாயப் படையானது முற்றுகையிடப்பட்டதுபோலவே இருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டு வெள்ள நீரால் சூழப்பட்டு உணவுப் பொருட்கள் எதுவும் லகாவு தலைமை முகாமில் இருந்து வந்து போக வழியற்று இருந்தது. கூர்காவ் பகுதியில் பாய்ந்த நதி ஆழம் குறைவானதாக இருந்தது. இதனால் பெரிய படகுகள் அதில் செல்லமுடியவில்லை. அதேபோல் அஹோம் படையினர் எழுப்பிய தடைகளை அகற்றமுடியவில்லை என்பதால் பொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய வணிகப் படகுகளும் செல்ல முடியவில்லை.
போதிய உணவு இல்லாததால் குதிரைப் படை மற்றும் பிற போக்குவரத்துக் கால்நடைகள் எல்லாம் இறந்துவிட்டன. வெளி இடங்களில் இருந்து உணவு மட்டுமல்ல; தூதுச் செய்திகள் கூட வந்து சேரமுடியவில்லை.
மே மாதம் 10-ம் தேதியன்று கஜபூரில் இருந்த மொகலாயப் புறக் காவல் படை தோற்கடிக்கப்பட்டது. அப்படியாக மொகலாயத் தரைப்படைக்கும் படகுப் படைக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை அஹோம் படையினர் தடுத்துவிட்டனர். கூர்காவ் பகுதியிலும் எதிரிகள் பெருமளவில் ஒன்று கூடி அந்தக் கோட்டையை மிகுந்த எச்சரிக்கையுடன் காவல் காத்தனர். மீர் ஜும்லா தன் காவல் படைகள் அனைத்தையும் பின்வாங்கிக் கொண்டார். அஹோம் மன்னருக்கு லகாவுக்குக் கிழக்குப் பக்கம் இருந்த பகுதிகள் அனைத்தும் திரும்பக் கிடைத்துவிட்டது. கூர்காவ் மற்றும் மதுராபூர் ஆகிய இரண்டு மட்டுமே மொகலாயர் வசம் இருந்தன.
அஹோம் படையினரின் தாக்குதல் இருமடங்கானது. அனுதினம், மிக அதிக அளவில் சிறிய மோதல்கள் நடந்துவந்தன. தில்லியில் அருமையான போர்ப்பயிற்சியும் போஷாக்கும் பெற்ற போர் வீரர்கள் வெய்யிலில் வாடி கொப்பளங்கள் வந்தாலும் மழையில் நனைய நேர்ந்தாலும் சேற்றில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது. எனினும் துளியும் கவலையின்றி வீரத்துடன் எப்போதுவேண்டுமானாலும் எதிரிகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்களாக இருந்தனர்.
அன்றாட மோதல்கள், எச்சரிக்கைகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் 8 ஜூலை இரவில் கூர்காவ் நேரடியாகத் தாக்கப்பட்டது. அரண்மனைக்கு வட பகுதியில் இருந்த மூங்கில் தடுப்பரண்களைத் தகர்த்தபடி அஹோம் படையினர் அங்கு காவலுக்கு இருந்த பக்ஸாரி திரி துப்பாக்கிப் படைவீரர்களை அழித்தனர். கூர்காவ் பகுதியின் முக்கியமான அந்த கோட்டைப் பகுதியைக் கைப்பற்றினர். இறுதியாக, அங்கிருந்த அத்தனைபேரின் கடின முயற்சியினால் முழு கோட்டையும் மீட்கப்பட்டது. அன்றைய இரவில் வந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டது.
12 ஜூலையன்று அஹோம் படையின் நான்கு பிரிவுகள் நான்கு பக்கங்களில் இருந்து ஒரே நேரத்தில் தாக்கின. ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தன. அதன் பின்னர் அந்தக் கோட்டையைக் கைப்பற்றும் முயற்சி வெற்றிபெறவே இல்லை.
மதுராபூரில் முகாமிட்டிருந்த மொகலாயப் படையினரிடையே ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான நோய்த் தொற்று பரவியது. காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றினால் நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் இறந்தனர். 1500 பேர் இருந்த திலிர் கானின் படை 450 ஆகக் குறைந்தது. ஒட்டுமொத்த அஸ்ஸாமும் நோயால் பாதிக்கப்பட்டது. இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் அந்த ஒரு வருடம் மட்டும் நோயினால் இறந்தனர்.
மொகலாய முகாமில் போதிய உணவோ நோய்க்கு மருந்தோ சிகிச்சைக்கான வசதிகளோ எதுவும் இருந்திருக்கவில்லை. விலங்குகளுக்கான தானியங்களையே உண்டு வாழவேண்டியிருந்தது. கோதுமையோ வேறு எந்த தானியமோ நெய்யோ சர்க்கரையோ எதுவுமே கைவசம் இருந்திருக்கவில்லை. ஓபியமோ புகையிலையோ எதுவும் கிடைக்கவில்லை. சொற்பமாக இருந்தவற்றுக்கும் கொள்ளை விலை கொடுக்கவேண்டியிருந்தது. ஒரு குழாய் சுருட்டு புகையிலை ரூ 3க்கு விற்றது. ஒரு தோலா ஓபியத்தின் விலை பத்து கிராம் தங்கக் காசுக்கு உயர்ந்தது. ஒரு சேர் பாசிப் பருப்பு ரூ 10. உப்பும் இதே விலையில் விற்றது.
துருக்கி மற்றும் ஹிந்துஸ்தானி படைவீரர்கள் கொதுமை ரொட்டிக்காக ஏங்கினர். குதிரைகள் அரிசியைச் சாப்பிட வேண்டி வந்ததால் உயிர்விட்டன. மதுராபூரில் நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது. 17 ஆகஸ்டில் படை கூர்காவ் பகுதிக்குத் திரும்பியது. போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் நோய்வாய்ப்பட்ட பலரை அங்கேயே விட்டுவிட்டு வர நேர்ந்தது.
வெற்றிக் களிப்பில் இருந்த அஹோம்படையினர் கூர் காவ் மீது புது வேகத்துடன் தினமும் இரவுகளில் தாக்குதலை மேற்கொண்டனர். நோய்த் தொற்று உச்சத்தை எட்டியது. மதுராபூரில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர்களிடமிருந்து கூர்காவ் கோட்டையில் இருந்தவர்களுக்கும் நோய் தொற்றியது. தளபதி மீர் ஜும்லா சாதாரண போர் வீரர்களைப் போல் சொற்ப உணவுடன் அடிமட்ட வாழ்க்கையை வாழவேண்டிவந்தது.
செப்டம்பர் மூன்றாம் வாரம் வாக்கில் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு வந்தன. மழை குறையத் தொடங்கியது. வெள்ளம் வடிய ஆரம்பித்து, மூழ்கிய சாலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன.
5. மொகலாயப் படகுப் படையின் செயல்பாடுகள்; மீர் ஜும்லா மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்
இந்தக் கஷ்டங்கள் நீடித்துவந்த நாட்களில் எல்லாம் லகாவு பகுதியில் கப்பல் படைத் தலைவர் இபின் ஹுசைனின் தலைமையின் கீழ் இருந்த மொகலாய படகுப் படை தன்னைத் தற்காத்துக் கொண்டு நின்றுவிட்டது. இதனால் ராணுவப் படையும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டது. அவருடைய படகுகள் எல்லாம் ஒன்று கூடின. கெளஹாத்தியுடனும் அங்கிருந்து டாக்கா மற்றும் தில்லியுடனும் தொடர்பில் இருந்துவந்தார். மஜுலி தீவில் அடைக்கலம் தேடியிருந்த அஹோம் தலைவர்களைத் தாக்க ஆரம்பித்தார்.
மழை முழுவதுமாகக் குறைந்ததும் கூர்காவ் பகுதியை நோக்கிச் செல்லும் சாலையை வடக்கில் இருந்த படைகளின் உதவியுடன் சீர்செய்தார். லகாவு பகுதியில் இருந்து பெருமளவிலான உணவும் பிற தேவையான பொருட்களும் இப்போது நில வழியாக 24 அக்டோபரிலும், நதி வழியாக 31 அக்டோபரிலும் போதிய பாதுகாப்புகளுடன் கூர் காவ் கோட்டைக்குச் சென்று சேர்ந்தன. பஞ்சம் போய் வளமை வந்தது.
சாலைகள் முழுமையாக உலர்ந்து சரியானதும் மொகலாயக் குதிரைப்படை தடையற்று முன்னேறியது. ஜெயத்வாஜரும் அவருடைய துணைத் தலைவர்களும் இரண்டாவது முறையாக நாம ரூபப் பகுதிக்குத் தப்பி ஓடினர். சோலாகுரி வழியாக திப்பெய்ன் பகுதிக்கு மீர் ஜும்லா படையெடுத்துத் தாக்கியபடியே முன்னேறினார் (18, டிச). இந்த திசையில் அவர் செல்ல முடிந்த இறுதி முனை இதுவே. 20 நவம்பரில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். விரைவிலேயே அவருடைய உயிரைக் குடித்த நோயின் தொடக்கம் அது. ஆனால் அவரோ தனது இலக்கில் இருந்து துளியும் விலகாமல் படையை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார். 30 நவம்பரில் அஹோம் தலைவர்களில் ஒருவரான பதுலி புகான் மொகலாயர் பக்கம் வந்து சேர்ந்தார். கிழக்கு அஸ்ஸாம் பகுதியின் மொகலாயப் பேரரசின் வைஸ்ராயாக மிகப் பெரிய பதவி அவருக்குத் தரப்பட்டது. அந்த ஆதாயங்களைப் பார்த்து அவரைப் பின் தொடர்ந்து பல அஹோம் தலைவர்கள் மொகலாயர் பக்கம் மாறினர். நோய்த் தொற்று முழுவதும் குறையாத நாமரூப மலைப்பகுதியில் ஜெயதுவஜர் தனித்துவிடப்பட்டார்.
10 டிசம்பரில் மீர் ஜும்லாவுக்கு நோய் முற்றியது. காய்ச்சல் வெகுவாக அதிகரித்தது. அதனுடன் நுரையீரல் தொற்று அதிகரித்து சுவாசப் பிரச்னையும் சேர்ந்துகொண்டது. நாமரூபப் பகுதிக்குள் நுழைய மறுத்து ஒட்டு மொத்த மொகலாயப் படையும் தளபதியை அங்கேயே விட்டுவிட்டு ஊர் திரும்ப முடிவெடுத்தது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.