Skip to content
Home » ஔரங்கசீப் #16 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 2

ஔரங்கசீப் #16 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 2

Deopahar Numaligarh Assam

6. அஸ்ஸாமுடனான அமைதி ஒப்பந்தம்

திலீர் கானின் மத்யஸ்தத்தின் மூலம் அஹோம் அரசருடன் ஓர் ஒப்பந்தம் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் கையெழுத்தானது.

  1. ஜெயத்வாஜ் தனது மகளையும் திப்பன் ராஜாவின் மகன்களையும் மொகலாய அரசபைக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
  2. 20,000 தோலா தங்கம், 1,20,000 தோலா வெள்ளி, 20 யானைகள் (இவை நீங்கலாக மீர் ஜும்லாவுக்கு 15 யானைகள், திலீர் கானுக்கு 5 யானைகள்) ஆகியவற்றை அஹோம் மன்னர் உடனே மொகலாயப் பேரரசருக்கு, போர் தவிர்ப்புக் கப்பமாகத் தந்தாகவேண்டும்.
  3. அடுத்த 12 மாதங்களில் மூன்று தவணைகளாக, 3 லட்சம் தோலா வெள்ளி, 90 யானைகள் ஆகியவற்றைத் தந்தாகவேண்டும்.
  4. அதன்பின் ஆண்டுதோறும் 20 யானைகளை அனுப்பிவைக்கவேண்டும்.
  5. முழுத்தொகையும் கொடுத்து முடிவதுவரை பர்ஹா கோகைன், பார் கோனைன், கர்கோனியா புகான், பர் பத்ர புகான் ஆகியோரின் மகன்கள் எல்லாம் நவாப் வசம் பிணைக்கைதிகளாக இருக்கவேண்டும்.
  6. பிரம்மபுத்ரா நதியின் வடக்குக் கரைப்பக்கம் இருக்கும் பாரதி நதியின் மேற்குப் பக்கம் இருக்கும் அஸ்ஸாம் ஊர்கள், தெற்குக் கரைப் பக்கம் இருக்கும் காலிங்க நதிக்கு மேற்குப் பக்கம் இருக்கும் அஸ்ஸாம் ஊர்கள் ஆகியவற்றை மொகலாயப் பேரசுடன் இணைக்கவேண்டும். அப்படியாக, மொகலாயர்களுக்கு யானைகள் மிகுதியாக இருக்கும் தாரங் நகரின் பாதிக்கு மேற்பட்ட பகுதி மொகலாயர்களுக்குக் கிடைத்தது.
  7. மொகலாயப் பகுதிகளில், குறிப்பாக காமரூபப் பகுதியில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டவர்களை உடனே விடுவிக்கவேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பதுலி புக்கானின் மகன் மற்றும் மனைவியை உடனே விடுவிக்கவேண்டும்.

5, ஜன, 1663-ல் அஹோம் மன்னரின் மகள், பிணைக்கைதிகள், போர் தவிர்ப்பு கப்பமாக தங்கம், வெள்ளி, யானைகள் எல்லாம் மொகலாயர்களின் முகாமுக்கு வந்து சேர்ந்தன. ஐந்து நாட்கள் கழித்து மீர் ஜும்லா தன் பயணத்தை ஆரம்பித்தார். மருத்துவ ஆலோசனையின் பேரில் படகில் ஏறிக்கொண்டவர் டாக்கா நோக்கிப் பயணம் செய்யும்போது, வழியில் 31, மார்ச், 1663-ல் இறந்தார்.

7. மீர் ஜும்லாவின் பெருமைகள்

அஸ்ஸாம் மீதான மீர் ஜும்லாவின் ஆக்கிரமிப்பு வெற்றியில் முடிவடைந்தது. அஹோம் மன்னரை மிகவும் அவமானப்படுத்தும்படியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்தார். ஏராளமான பணமும் அஸ்ஸாம் ராஜ்ஜியத்தின் இடங்களும் கிடைத்திருந்தன. அரசியல் ரீதியாக இந்த வெற்றி நீடிக்கவில்லை; அவர் இறந்த நான்கு ஆண்டுகள் கழித்து மொகலாயப் பிடியில் இருந்து கெளஹாத்தி உட்பட பல பகுதிகள் அஹோம்களால் மீட்கப்பட்டுவிட்டன. அதற்கு இவரை நிச்சயம் குறைசொல்லவே முடியாது.

மீர் ஜும்லாவின் படையெடுப்பில் பல வீரர்கள் உயிர் துறக்க நேர்ந்தது. அவருமே நோயில் சிக்கி இறந்தார். குச் பிஹார் மற்றும் அஸ்ஸாமில் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சீக்கிரமே இழக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவருடைய இந்த வெற்றியைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. அவருடைய திறமை இதில் நன்கு மிளிர்ந்தது. அவருடைய காலகட்டத்தில் வேறு எந்தவொரு மொகலாயப் படைத்தளபதியும் இத்தனை மனிதாபிமானத்துடனும் நியாய உணர்வுடனும் போரை முன்னெடுத்திருக்கவில்லை.

படைவீரர்கள், கீழ் நிலைப் பணியாளர்கள், கேப்டன்கள் என அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தினார். அந்தப் படையெடுப்பில் சந்திக்க நேர்ந்த அபாயங்கள், இழப்புகள் மிக மிக அதிகம். இவர் மீது படை வீரர்களுக்கு இருந்த மதிப்பும் நம்பிக்கையும் வேறு எந்த தளபதி மீதும் இருந்திருக்கவில்லை. 20 மவுண்ட் அளவுக்கு வைரக் கற்களின் சொந்தக்காரர், வங்காளத்தின் செல்வ வளம் மிகுந்த பகுதியின் வைஸ்ராய் போன்ற அதிகாரம் மிகுந்தவராக இருந்தும் எளிய வீரர்களுக்குத் தரப்பட்ட உணவையே அவரும் உண்டார். அத்தனை சுக போகங்களையும் துறந்தார். மிக மிகக் கடுமையான போர்ச்சூழலில் உழன்றார்.

குடிமக்களைத் துன்புறுத்தவோ, அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கவோ கூடாது. பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு தரக்கூடாது என்று உத்தரவிட்டார். அவருடைய உத்தரவுகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றனரா என்று விழிப்புடன் கண்காணிக்கவும் செய்தார். உத்தரவுகளை மீறி நடந்துகொண்டவர்களுக்குக் கொடுத்த கடுமையான தண்டனைகள் மீண்டும் அந்தத் தவறுகள் நடக்காமல் தடுத்தன.

பிற மொகலாயத் தளபதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் நடந்துகொண்ட மீர் ஜும்லாவின் பெருமைகளை இதில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. வரலாற்றாசிரியர் தாலிஷ் புகழ்ந்து கூறியிருப்பவையெல்லாம் மீர் ஜும்லாவைப் போன்ற கதாநாயகர் ஒருவருக்கு மிகவும் குறைவானவையே. அவரைப் போற்றிப் பாராட்டி அவர் எழுதியிருப்பவையெல்லாம் இந்த மக்கள் தளபதிக்கு கிடைத்திருக்கும் மிகச் சரியான புகழ் அஞ்சலியே.

8. மொகலாயர்கள் காமரூபம் பகுதியை இழப்பதும் அதை மீட்க நடத்திய போரும் – 1667 – 1681

மீர் ஜும்லா மூலம் கிடைத்த அஸ்ஸாம் பகுதிகளை 1667 வரை மொகலாயர்கள் தம் வசமே வைத்திருந்தனர். போர் தவிர்ப்புக்கான கப்பத் தொகையை அஹோம் மன்னர்கள் ஐந்தாண்டுகளில் முழுவதுமாகக் கொடுத்து முடித்தனர். அவர்களுடைய புதிய மன்னரான சக்ரத்வாஜ் (பதவி ஏற்பு நவம்பர் 1663) மொகலாயர்கள் மீது படையெடுக்கத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.

பிரம்மபுத்ராவின் இரு கரைகள் வழியாகவும் தனது படைகளை அனுப்பினார். வழியில் மொகலாயர் வசம் இருந்த கோட்டைகளை எல்லாம் வெகு விரைவில் கைப்பற்றியது அந்தப் படைகள். நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே கெளஹாத்தியையும் கைப்பற்றிவிட்டனர். ஏராளமான ஆயுதங்கள், குதிரைகள், உணவுப் பொருட்கள், பிற எல்லாம் அஹோம் படையினர் வசம் வந்தன. உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முதல் தாக்குதலிலேயே மொகலாயர்களின் எல்லை மோனாஸ் ஆறுக்கு இந்தப் பக்கம் நகர்த்தப்பட்டுவிட்டது. அஹோம் ஆட்சியாளரின் தலை நகரமாக கெளஹாத்தி ஆனது.

இழந்த பகுதிகளை வென்றெடுக்க மொகலாயப் படைகள் முற்பட்டன. ஆனால், மிக நீண்டதும் வெற்றி கிடைக்காததுமான போர்கள் தொடர்ந்து நடைபெற்றன. பிப் 1669-ல் மிர்ஸா ராஜா ஜெய் சிங்கின் மகன் ராம் சிங் தில்லியில் இருந்து ரங்கமாதி பகுதிக்கு படையுடன் வந்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. வெறும் எட்டாயிரம் படை வீரர்களுடன் வந்திருந்தார். போரில் இறந்தவர்களுக்குப் பதிலாக புதிய படையினர் யாரும் வந்திருக்கவில்லை. அஹோம் படையில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர். மீர் ஜும்லாவின் காலத்தில் இருந்ததுபோல் நிலைமை இருக்கவில்லை. இப்போது அஹோம்களின் கை ஓங்கியிருந்தது. பிரம்மபுத்ரா நதியில் பயணம் செய்யும்வகையில் வெறும் 40 போர் படகுகள் மட்டுமே மொகலாயர்கள் வசம் இருந்தன.

ராம் சிங்குக்கு போரில் முழு ஈடுபாடும் இருந்திருக்கவில்லை. ஆக்ரா கோட்டையில் சிறைப்பட்டிருந்த சிவாஜியைத் தப்பிக்கவிட்ட (1666) குற்றத்துக்கான தண்டனையாக, அஸ்ஸாமில் காய்ச்சல் வந்து இறக்கட்டும் என்று சொல்லித்தான் ஒரு படையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இங்கு வந்ததுமே கெளஹாத்தி கோட்டையைக் கைப்பற்றும் நோக்கில் முற்றுகை இட்டார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. 1671-ல் ரங்கமாதிக்கு பின் வாங்கியவர் சில வருடங்கள் எதுவும் செய்யாமல் அங்கு தங்கியிருந்தார். இறுதியாக 1676-ல் தில்லிக்குத் திரும்பும்படி உத்தரவு வந்து சேர்ந்தது.

மன்னர் சக்ரத்வாஜ் (1670) இறந்தைத் தொடர்ந்து அஹோம் அரசு, வாரிசு மற்றும் உள் நாட்டுக் குழப்பங்களினால் பலவீனமடைந்தது. 1670-1681 வரையான 11 ஆண்டுகளில் சுமார் ஏழு அரசர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறினர். அவர்களில் ஒருவர் கூட இயல்பான மரணத்தைத் தழுவவில்லை. அரசு அதிகாரிகள், தளபதிகள் எல்லாம் அதிகாரத்தைக் கைப்பற்ற சதிகளில் ஈடுபட்டனர். தமது சுய நலனைக் கருத்தில் கொண்டு புதிய மன்னர்களை நியமித்தும் கொன்றும் வந்தனர். பிப் 1679-ல் பர்ஹா கோகைன் மீதான பயத்தின் காரணமாக பர் புகான் துரோகம் செய்து, கெளஹாத்தி கோட்டை மொகலாயர் வசம் சென்று சேர வழிவகுத்தார்.

1681-ல் அஹோம் மன்னராக கதாதர் சிங் அரியணை ஏறினார். விரைவிலேயே இழந்த பெருமையை மீட்டெடுத்தார். கெளஹாத்தி கோட்டையைக் கைப்பற்றி மிகப் பெரும் செல்வத்தையும் எடுத்துக்கொண்டார். அப்படியாக வங்காள மொகலாய அரசிடமிருந்து காமரூபப் பகுதி என்றென்றைக்குமாகக் கைவிட்டுப் போனது.

கூர்காவ் பகுதியை 1662-ல் மீர் ஜும்லா முற்றுகையிட்டபோது குச் பீஹார் மன்னர் அதை மீட்டெடுத்துவிட்டார். மொகலாயப் படை விரட்டியடிக்கப்பட்டது. வங்காளத்தின் புதிய ஆட்சியாளரான சைஸ்தா கான் 1664-ல் படையெடுத்து ராஜ்மஹல் பகுதிக்கு வந்தபோது குச் பிஹாரின் மன்னர் மொகலாயப் படையைக் கண்டு பயந்து அடிபணிந்தார். 5, 50,000 லட்சம் கப்பத்தொகையைக் கொடுத்தார். அந்த மன்னர் பிராண நாராயணர் 1666-ல் இறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஐம்பது ஆண்டுகள் அந்தப் பகுதி உள் நாட்டுக் குழப்பங்கள், வாரிசு உரிமைப் போர், சட்ட ஒழுங்கு சீர்குலைவு என முடங்கிக் கிடந்தது. மொகலாயர்கள், நிலைமையைத் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு இன்றைய ரங்கபூர், மேற்கு காமரூபம் உள்ளிட்ட அந்த ராஜ்ஜியத்தின் தென், கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.. அந்த மன்னரை 1711-ல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்தனர்.

9. சட்காவ் பகுதியின் கொள்ளையர்களும் வங்காளத்தில் அவர்களின் தாக்குதல்களும்.

மொகலாயப் பேரரசின் வங்காள முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அரக்கான் பகுதியின் மங்கோலிய அரசர்களுக்கும் இடையில் சட் காவ் பகுதி தொடர்பாகப் பல நூற்றாண்டுகளாகவே மோதல் நீடித்து வந்திருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் இந்த இரண்டு தரப்புகளின் எல்லையாக ஃபெனி ஆறு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு வங்காளத்தின் ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகள் மாக் ராஜ்ஜியத்தின் முழு ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டன. ஜஹாங்கீரின் பலவீனமான ஆட்சி, வாரிசு ஷாஜஹானின் கலகம், ஃபிரங்கி (ஐரோப்பியர்) மற்றும் போர்ச்சுகீசிய கடற் படை வீரர்கள் மற்றும் சட் காவ் பகுதியில் உள்ளூர் ராஜாவின் கீழ் வசித்து வந்த கலப்பு இன வீரர்கள் அரக்கானிய கப்பல் படையில் இணைந்த நிகழ்வு ஆகியவற்றின் காரணமாக இந்த ஆதிக்கம் மாக் குலத்தினருக்குக் கிடைத்தது.

மாக் மற்றும் ஐரோப்பியர்களைக் கொண்ட அரக்கானிய கடல் கொள்ளையர் குழு, நீர் வழியில் வந்து வங்காளத்தை அடிக்கடிக் கொள்ளையடித்துச் செல்வது வழக்கம். கைக்கு அகப்படும் ஹிந்து முஸ்லிம்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். தமது ஊருக்குச் சென்றதும் இவர்களில் உடல் வலிமை கொண்டவர்களை விவசாயக் கூலிகளாகவும் பிற கடைநிலைப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொண்டனர். எஞ்சியவர்களை தக்காணத் துறைமுகங்களுக்கு வரும் டச்சு, இங்கிலாந்து, ஃபிரெஞ்சு வணிகர்களுக்கு அடிமைகளாக விற்றுவிட்டனர்.

நீண்ட காலகட்டத்துக்கு இதுபோல் தொடர்ந்து கொள்ளையடிப்பில் ஈடுபட்டதால், வங்காளம் நாளுக்கு நாள் வளங்களை இழந்தது. எதிர்க்கும் வலுவையும் இழந்தது. டாக்காவின் அங்கமான பக்கார்கங்ஜ் – பாக்லா மாவட்டம் முன்பு வளம் கொழிக்கும் பகுதியாக இருந்தது. ஏராளமானவர்கள் வசித்து வந்தனர். வெற்றிலைப் பயிர் அங்கு மிகுதியாக நடப்பட்டது. அதன் விற்பனை மூலம் பெருமளவுக்கு வருவாய் கிடைத்துவந்தது. அவையெல்லாம் கடல் கொள்ளையர்களின் தொடர் தாக்குதலினால் முற்றாக அழிந்து போனது. நிலங்களில் உழுவதற்கோ வீடுகளில் ஒரு விளக்கை ஏற்றி வைக்கவோ கூட யாருமற்ற நிலை உருவானது.

வங்காளக்கடல் படை இந்தக் கடற் கொள்ளையர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. அவர்கள் நூறு படகுகளில் இருந்தாலும் கடற் கொள்ளையர்களின் நான்கு படகுகளைப் பார்த்தால் கூட உயிரைக் கையில் பிடித்தபடி படகுகளை ஓட்டிக்கொண்டு தப்பிவிடுவார்கள்.

ஐரோப்பிய கடற் கொள்ளையர்கள் தமக்குக் கிடைக்கும் செல்வத்தில் பாதியை அரக்கான் அரசருக்குக் கொடுத்தனர். பாதியைத் தாம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் ’ஹர்மத்’ என்று அழைக்கப்பட்டனர். கப்பற் படை என்ற அர்த்தம் தரும் ’அர்மதா’ என்ற போர்ச்சுகீசிய வார்த்தையின் திரிபு. நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கொண்டதும் அதி வேகமாகப் பாய்ந்து செல்லக்கூடியதுமான நூற்றுக்கணக்கான படகுகள் அவர்களிடம் இருந்தன. ’சிறுவர்களைக் கூட துளியும் கருணையின்றிக் கொல்லும் அளவுக்கு முரட்டு இதயம் கொண்டவர்கள்’ என்று மனுச்சி இந்த ஐரோப்பிய கடற் கொள்ளையர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

கிழக்கு வங்காளத்தின் ஆற்றோரப் பகுதிகளில் வசித்தவர்கள் அங்கிருந்து ஓடிப்போய்விட்டதால் மொகலாயப் பேரரசின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. மொகலாயர்களின் அரசியல் பெருமையும் இதனால் வெகுவாகக் காயம்பட்டது. சட்காவ் பகுதியில் இருக்கும் இந்த கடற் கொள்ளையர்களை வீழ்த்தாவிட்டால் இந்தப் பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் வர வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது.

மீர் ஜும்லா ஆரம்பித்து பாதியில் விட்டுப் போயிருந்த பணியை முடிக்க சைஸ்தா கான் அனுப்பபட்டார். தன்னால் வெற்றி பெறவே முடியாது என்றே அவருக்கு முதலில் தோன்றியது. மொகலாயப் படகுப் படை வங்காளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பராமரிப்புக்கு ஆண்டுக்கு 14 லட்ச ரூபாய் மதிப்பில் நில மானியம் தரப்பட்டிருந்தது. இளவரசர் ஷா ஷுஜாவின் மெத்தனமான நிர்வாகத்தினாலும் வரி வசூல் அதிகாரிகளின் முறை கேடுகளினாலும் இந்த வருவாய் வெகுவாகக் குறைந்துவிட்டிருந்தது. அஸ்ஸாம் மீது மீர் ஜும்லா படையெடுத்த காலகட்டத்தில் எஞ்சியிருந்த வளங்களும் வருவாயும் முழுவதுமாக அழிந்தன. சுருக்கமாகச் சொல்வதென்றால் வங்காள படகுப் படை என்பது வெறுமனே பெயரளவில் மட்டுமே இருந்தது. சைஸ்தாகானின் முதல் வேலை அந்தப் படையை புதிதாக உருவாக்குவதுதான்.

அதை அவர் செய்து முடித்தார். ஒவ்வொரு தடையையும் அவருடைய உற்சாகமும் உத்வேகமும் முறியடித்தன. டாக்கா, ஹூக்ளி, ஜெஸ்ஸூர், பலேஷ்வர், கரிபாரி போன்ற துறைமுகங்களில் புதிய கப்பல்கள் உருவாக்கப்பட்டன. ஒரு வருட காலத்துக்குள் புதிதாக 300 படகுகள் தயாராகிவிட்டன. அனைத்துக்கும் ஆட்களும் ஆயுதங்களும் விரைவிலேயே தருவிக்கப்பட்டன.

டாக்கா நகரத்துக்கு ஆறு மைல் தென் கிழக்கில் இருந்த தாப்பா என்ற பகுதியில் 100 போர்ப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. எஞ்சிய 200 படகுகள் தெற்கே 30 மைல் தொலைவில் சங்கராம்கர் பகுதியில் நிறுத்தப்பட்டன. வெள்ளம் வந்தால் சாலை மூழ்காத அளவுக்கு உயரமாக இந்த இரண்டு துறைமுகங்களுக்கு இடையே படைகளைக் கொண்டு செல்ல பாதை அமைக்கப்பட்டது. சட் காவ் மற்றும் சங்கராமகர் பகுதிக்கும் இடையில் நடுவழியில் சந்தீப் தீவு பாதுகாப்பான இடைத் தங்கல் மையமாக இருந்தது. சட் காவ் பகுதியில் இருந்து வெறும் ஆறு மணி நேரம் படகில் பயணம் செய்தாலே இதை எட்டிவிடமுடியும். அதன் அப்போதைய ஆட்சியாளராக தில்லாவர் இருந்தார். இவர் மொகலாயக் கடற்படையில் இருந்து தப்பி ஓடிய தளபதி (மாலுமி). ஆனால் மிகச் சிறந்த போர்வீரர். அருமையான ஆட்சியாளர்.

நவ 1665-ல் சந்தீப் தீவை கடற்படைத் தளபதி அப்துல் ஹசன் தாக்கிக் கைப்பற்றினார். எண்பது வயதாகியிருந்த போதிலும் மிகவும் வீரத்துடன் போராடிய தில்லாவர் கான் காயம்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்டு டாக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தத் தீவில் ஒரு மொகலாயப் படை நிறுத்திவைக்கப்பட்டது.

மொகலாயப் படையில் சேரும்படி ஐரோப்பிய கடற்படையினருக்கு ஆசை காட்டி சைஸ்தா கான் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இவர்களுக்கும் இவர்களுடைய அரக்கானிய எஜமானர்களுக்கும் இடையே ஏற்பட்ட கொலைவெறி மோதல்களினால் கானின் நோக்கம் எளிதில் நிறைவேறியது. சட் காவ் பகுதியில் இருந்த ஐரோப்பிய கடற் படைக் குடியிருப்பினர் விரைவாக தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மொகலாயப் பகுதிக்கு ஓடிச் சென்று அடைக்கலம் தேடினர் (டிச 1665). வங்காளத்தில் இருந்தவர்களுக்கு இந்த ஐரோப்பியர்களின் அணி மாற்றம் மிகப் பெரிய ஆறுதலையும் தெம்பையும் தந்தது.

10. சட்காவ் பகுதியின் மொகலாய வெற்றி

டிசம்பர் 24, 1665-ல் டாக்காவிலிருந்து சுமார் 6500 வீரர்களைக் கொண்ட படை சைஸ்தா கானின் மகன்களில் ஒருவரான பஸர்க் உம்மேத் கான் தலைமையில் புறப்பட்டது. இந்தப் படையில் பல தரப்பட்ட போர்ப் படகுகள் மொத்தம் 288 இருந்தன. ஐரோப்பிய கடற்படையினருடைய 40 போர்ப்படகுகள் துணைப்படையாக உடன் சென்றன.

இபின் ஹுசைன் தலைமையில் இருக்கும் கப்பல் படையானது கரையோரமாகப் பயணம் செய்யவேண்டும்; காலாட்படையானது அதற்கு இணையான கரையோரப் பாதையில் இருக்கும் காடுகளையெல்லாம் வெட்டியபடி இரு படைகளும் பரஸ்பரம் உதவிக் கொண்டு முன்னேறவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ராணுவத்தை வழி நடத்திய ஃபர்ஹத் கான் ஃபெனி நதியை 14, ஜன, 1666-ல் கடந்து அர்க்கானிய பகுதிக்குள் நுழைந்தார்.

23-ல் மொகலாயத் தளபதி குமாரியா நீர் வழியில் முன்னேறிச் சென்று எதிரிகளின் படையுடன் மோதினார். அந்தப் படையில் கதாலியா பகுதியில் இருந்த வந்த 10 குராப் போர்ப்படகுகளும் 45 ஜாலியாஸ் படகுகளும் இருந்தன. மொகலாயக் கடற்படையில் ஐரோப்பியர் முன்னேறிச் சென்று தாக்கினர். மாக் படையினர் தமது குராப் போர்க்கப்பலில் இருந்து குதித்து ஓடினர். அந்தப் படகுகளை மொகலாயப் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். ஜாலியாஸ் படகுகளில் இருந்தவர்கள் படகுகளுடன் உயிர் பிழைத்து ஓடிவிட்டனர்.

இது எதிரிகளின் மிகச் சிறிய படைப்பிரிவுதான். மிகுதியான துப்பாக்கிகள், பீரங்கிகளைக் கொண்டிருந்த பெரிய கப்பல்கள் ஹர்லா நீர்வழியாகத் திறந்த கடல் பகுதிக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்தன.

மறு நாள் 24, ஜனவரியில் இரண்டாவதும் மிகப் பெரிய வெற்றியும் கிடைத்தது. எதிரிகளின் துப்பாக்கிச் சூடுகளினூடாக, தமது வெற்றிக் கொடிகளைப் பறக்கவிட்டபடி முஸ்லிம்கள் முன்னேறினர். அரக்கானிய கப்பல் படை மொகலாயர்கள் மீது தாக்குதல் நடத்தியபடியே, கர்ணாஃபுலி ஆறுக்குள் அடைக்கலம் தேடிப் பின்வாங்கியது.

அந்த நதிமுகத்தில் மதியம் மூன்று மணி வாக்கில் நுழைந்தவர்கள் சட்காவ் பகுதிக்கும் நடுவழியில் இருந்த தீவுக்கும் இடையில் தமது படகுகளை வரிசையாக அணிவகுக்கச் செய்தனர். எதிர்க்கரையில் ஃப்ரங்கி பந்தர் என்ற கிராமத்துக்கு அருகில் மூன்று பெரிய மூங்கில் தடுப்பு அரண்களை எழுப்பியிருந்தனர். ஆனால் இபின் ஹுசேன் மேல் வடக்குப் பக்கமாக பல படகுகளை அனுப்பியும் தரைவழியாகத் தாக்கியும் முன்னேறிச் சென்று இந்தத் தடுப்பு அரண்களைக் கைப்பற்றினார்.

வெற்றிக் களிப்பில் எதிரிகளின் படகுகள், கப்பல்கள் மீது தமது கப்பல்களைக் கொண்டு மோத ஆரம்பித்தனர். கடுமையான போர் நடந்தது. சட்காவ் கோட்டையில் இருந்தும் மொகலாயர்கள் மீது துப்பாக்கி, பீரங்கித் தாக்குதல்கள் ஆரம்பித்தன. இறுதியில் அஹாம் படையினர் தோற்றனர். அவர்களுடைய பல வீரர்கள் படகுகளில் இருந்து கடலுக்குள் குதித்து உயிர் தப்பினர். சிலர் நீரில் மூழ்கினர். உயிருடன் பிடிக்கப்பட்டவர்களில் சிலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். சிலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். 135 படகுகள் மொகலாயப் படைக்குப் போர்பரிசாகக் கிடைத்தன.

மறு நாள் 25 ஜனவரியன்று சட் காவ் கோட்டை முற்றுகையிடப்பட்டது. 26 அதிகாலையில் இபின் ஹுசேன் அதை முழுமையாகக் கைப்பற்றினார். ஆனால் ஜமீந்தார் முனாவர் கானின் தலைமையின் கீழ் இருந்த நெறியற்ற கும்பல், அந்த ஊருக்குள் நுழைந்ததும் கொள்ளையடிப்பில் ஈடுபட்டனர். வீடுகள் உட்பட ஊர் முழுவதும் தீவைத்தனர். ராஜாங்க யானைகள் இரண்டு தீயில் இறந்தன. கர்ணாஃபுலி ஆற்றின் மறு கரை வழியாக அரக்கானியர்கள் உயிர் தப்பி ஓடினர். ஆனால் வங்காளத்தில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டு விவசாயக் கூலிகளாக இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய அடிமைகள் இவர்களை தாக்கி, கொள்ளையடித்தனர்.

இதனிடையே 23-ம் தேதியிலிருந்தே மொகலாயப் படை பெற்றுவரும் வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்ட ஃபராத் கான் அடர்ந்த கானகத்தின் வழியாக சட்காவ் நகருக்குள் ஊடுருவ தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவந்திருந்தார். இவருடைய படையைப் பார்த்ததும் மாக் படையினர் எல்லைக் காவல் மையங்களை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். சட்காவ் பகுதிக்கு தளபது 26 அன்று வந்து சேர்ந்தார். மறு நாள் கோட்டைக்குள் வெற்றிநடை போட்டு நுழைந்தார். அங்கு கிடைத்தவற்றின் பண மதிப்பு குறைவுதான். மூன்று யானைகளும் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட 1026 பீரங்கி துணைப் பொருட்கள் (பெரிதும் மிகச் சிறிய 400 கிராம் எடைகொண்ட குண்டுகள்) தீ எரி துப்பாக்கிகள், ஒட்டக முதுகில் பொருத்தப்படும் துப்பாக்கிகள் (ஜம்பர்க்) மற்றும் வெடி மருந்துகள் இவையே கிடைத்தன. ஆனால் இந்தப் போரின் மிகப் பெரிய வெற்றி என்பது அரக்கானியக் கடற் கொள்ளையர்களால் வங்காளத்தில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டு, அடிமைக் கூலியாட்களாகப்பட்டிருந்த முஸ்லிம்கள் மீட்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுதான். இதனால் வங்காளப் பகுதியில் மீண்டும் விவசாயம் செழித்தோங்கியது. மொகலாயப் பேரரசுக்கு வருமானம் பெருகியது. மொகலாய ஃபெளஜ்தாரின் தலைநகரமாக சட் காவ் ஆக்கப்பட்டு அதன் பெயர் இஸ்லாமாபாத் என்று மாற்றப்பட்டது.

(தொடரும்)

படம்: கோயில் தளம் – தேவ்பர்வத் தொல்பொருள் தளம், அஸ்ஸாம்

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *