Skip to content
Home » ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

ஔரங்கசீப்

4. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை விதி விலக்கானது மற்றும் குர்ரானுக்கு முரணானது.

இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை என்பது விதிவிலக்கானது; மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய மத ஆட்சியின் லட்சியம் இதுவே. அடிப்படை அறிவு சில நேரங்களில் இந்த நோக்கத்தை வென்றதுண்டு; ராஜ கண்ணியம் சில நேரங்களில் மதக் கோட்பாடுகளை வென்றதுண்டு; ஒவ்வொரு சுல்தானும் ஒவ்வொரு அதிகாரியும் சகிப்புத் தன்மையற்ற ஆட்சி முறையை எல்லா இடங்களிலும் அல்லது முழு வீச்சில் அமல்படுத்தவிடாதபடி மனிதர்களின் பலவீனம் தடுத்துவிட்டிருக்கலாம். அப்படியாக, இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள்மீதான சகிப்புத்தன்மை மற்றும் உடமை உயிர்களின் பாதுகாப்பு சில நேரங்களில் கிடைத்திருக்கின்றன. தாராள சிந்தனையும் விழிப்பு உணர்வும் கொண்ட ஏதேனும் ஒரு சுல்தான், ஹிந்துக்களை இலக்கியம், கலை, செல்வம், அரசு வேலை ஆகியவற்றில் முன்னேற்றம் காண அனுமதித்த காலகட்டங்களும் இருந்திருக்கின்றன. ஹிந்துக்களின் அரசுகள் வலிமையிலும் பொருளாதார பலங்களையும் பெற்றுமிருக்கின்றன. ஆனால், இப்படியான மார்க்க விரோதமான விஷயங்களை முன்னெடுப்பதென்பது இஸ்லாமிய அரசுகளில் மிக மிக அரிதாகவும் விதி விலக்காகவுமே இருந்திருக்கின்றன.

இஸ்லாமிய அகிலம் இதையெல்லாம் பழமைவாத தூய லட்சியங்களில் இருந்து விலகிய, வேதனைக்குரிய வீழ்ச்சியாகவும் மார்க்க அரசின் கடமையை தீய வழியில்சென்று புறக்கணித்ததாகவுமே பார்த்தது. இஸ்லாமியப் போராளிகளின் வாளின் பலத்தில்தான் சுல்தானின் ஆட்சி அதிகாரம் நிலைகொண்டிருக்கிறது. அவர்கள் இப்படியான தாராள சிந்தை கொண்ட இஸ்லாமிய சுல்தான்களை மத விரோதியாகவும் தம்மை ஆட்சி செய்யத் தகுதியற்றவராகவுமே பார்ப்பார்கள்.

எனவே, இஸ்லாமியரல்லாதவர்களின் வளர்ச்சி முன்னேற்றங்கள் மட்டுமல்ல; காஃபிர்களின் உயிர் வாழ்தலே கூட இஸ்லாமிய அரசின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவையே. ஒன்று காஃபிர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டாகவேண்டும்; அல்லது ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களின் கைகளில் இருந்து பறிபோயாகவேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்காததுவரையிலும் அரசியல் சமூகத்தில் ஒருவித நிலையற்ற சமநிலையே நீடித்துவரும். இப்படியாக ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே நீடித்த பகைமை நிலைநிறுத்தப்பட்டிருக்கும். பிற சமய மக்கள் கணிசமாக வாழும் தேசங்களில் உருவாகும் இஸ்லாமிய அரசுகள் எல்லாமே முடிவில் உடைந்து நொறுங்கும். ஒளரங்கசீபின் ஆட்சி இந்த உண்மையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

5. ஒளரங்கசீபின் சகிப்பின்மை மற்றும் கோவில் இடிப்புகள்

ஒளரங்கசீப் ஹிந்து தர்மம் மீதான தனது தாக்குதலைப் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தார். தனது ஆட்சிக் காலத்தின் முதல் ஆண்டில் பனாரஸ் அர்ச்சகருக்கு வழங்கிய அரசாணையில், தனது மதம் புதிய மதங்கள் கட்ட அனுமதிக்காது; அதே நேரம் பழைய கோவில்களை அழிக்கவும் சொல்லவில்லை என்று ஒளரங்கசீப் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இளவரசராக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் 1644-ல் அஹமதாபாதில் சிந்தாமன் பகுதியில் கட்டப்பட்ட புதிய கோவிலில் வைத்து பசுவை வெட்டிக் கொன்றதோடு அந்தக் கோவிலை மசூதியாகவும் ஆக்கினார். அந்த பிராந்தியத்தில் இருந்த பல இந்து கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கவும் செய்தார். ஒரிஸாவில் கத்தக் தொடங்கி மேதினிபூர் வரையிலான அனைத்து நகரங்கள், கிராமங்களில் இருந்தும் இஸ்லாமிய அதிகாரிகளை வரச் சொல்லி அந்தப் பகுதியில் இருந்த கோவில்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தார். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட சிறிய களிமண் வழிபாட்டு மையங்கள், குடிசைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. பழுதடைந்த பழைய கோவில்கள் எதையும் புனரமைக்கவும் அனுமதிக்கவில்லை.

அடுத்ததாக, 9, ஏப், 1669-ல் காஃபிர்களின் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் இடிக்கும்படியும் அவர்களுடைய மத நடவடிக்கைகள், மத போதனைகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தும்படியாகவும் ஆணை பிறப்பித்தார். சோமநாதர் ஆலயம், பனாரஸில் இருக்கும் விஸ்வநாதர் ஆலயம், மதுராவில் இருக்கும் கேசவ் ராய் ஆலயம் போன்ற தேசம் முழுவதும் வாழும் இந்துக்கள் பெரிதாக மதித்துப் போற்றும் பிரமாண்ட ஆலயங்களின் மீது அவருடைய அழிவின் கரங்கள் நீண்டன.

புண்ணிய நகரமான மதுராவின் மீது இஸ்லாமியர் ஆட்சியாளர்களின் பகைமை எப்போதுமே மிகவும் அதிகமாக இருந்தது. ஆக்ராவிலிருந்து தில்லிக்குச் செல்லும் வழியில் சுல்தானின் ராஜபாட்டையில் அது இருந்தது. மார்க்கப்பற்று மிகுந்த நபி என்பவரை ஹிந்துக்களை ஒடுக்குவதற்காக மதுராவின் ஃபெளஜ்தாராக (தளபதியாக) ஒளரங்கசீப் நியமித்தார்.

14, அக், 1666-ல் கேசவ் ராயின் ஆலயத்துக்கு தாரா ஷுகோ அலங்கார வேலைப்பாடு மிகுந்த கல் தூண் (அலங்கார வளைவு) ஒன்றைச் செய்து கொடுத்திருந்தார். முதலில் ஒளரங்கசீப் அதை அகற்றும்படி உத்தரவிட்டார். 1670-ல் இறுதியாக அந்தக் கோவில் முழுவதையும் இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டார். அந்த நகரின் பெயரை இஸ்லாமாபாத் என்று மாற்றினார். ஒளரங்கசீபின் பேரரசப் பகுதி முழுவதும் இருந்த துணை ஆட்சிப் பகுதிகள், நகரங்கள் அனைத்திலும் நியமிக்கப்பட்ட முத்தாசிப்கள் அல்லது மார்க்க விதிக் காவலர்களின் மிக முக்கியமான வேலை என்பது ஹிந்து வழிபாட்டு மையங்களை அழிப்பதுதான். ஜூன் 1680-ல் ஜெய்ப்பூரின் தலைநகரான அம்பரில் இருந்த கோவில்கள் எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

1674-ல் குஜராத்தில் ஹிந்துக்களிடம் இருந்த நிலங்கள் அனைத்தையும் இஸ்லாமிய வாஸிஃபாவின் பேரில் அவர்களிடமிருந்து பறித்தார்.

6. ஜெஸியா அல்லது இஸ்லாமியர் அல்லாதவர் மீதான தலை வரி

இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இஸ்லாமியரல்லாதவர்களை வாழ அனுமதிக்கவேண்டுமென்றால் அவர்கள் ஜெஸியா என்ற வரியை தந்தாகவேண்டும். இதை முதலில் அமல்படுத்தியது முஹம்மது நபி.

எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் அவமானப்பட்டுக் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் (குர்ரான் 9:29).

அவமானப்பட்டுக் கீழ்ப்படிதலுடன் என்ற இரண்டு வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய புனித வசன உரையாளர்கள், ஜெஸியா வரியை காஃபிர்களுக்கு அவமானம் ஏற்படுத்தும்வகையில் அமல்படுத்தவேண்டும் என்று விளக்கம் தந்திருக்கிறார்கள். வரி விதிக்கப்பட்ட நபர் நடந்துவந்து கைகட்டி நின்றபடி இந்த வரியைக் கொடுக்கவேண்டும். அதை வாங்கிக் கொள்பவர் அமர்ந்துகொண்டு அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பெண்கள், 14 வயதுக்குக் கீழிருக்கும் சிறுவர்கள், அடிமைகள் எல்லாம் இந்த வரியைத் தரவேண்டாம். குருடர்கள், முடவர்கள் எல்லாம் செல்வந்தராக இருந்தால் மட்டுமே கொடுத்தால் போதும். துறவிகள் ஏழ்மையில் இருந்தால் விதிவிலக்கு உண்டு. ஆனால் அவர்கள் செல்வச் செழிப்பு மிகுந்த மடாலயங்களில் இருந்தால் அவற்றின் மடாதிபதிகள் அந்தப் பணத்தைத் தரவேண்டும்.

ஒருவருடைய வருமானம் எவ்வளவு என்பதன் அடிப்படையில் இந்த ஜெஸியா வரி விதிக்கப்படவில்லை. காஃபிர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். 200 திர்ஹாமுக்கு மேல் சொத்து இல்லாதவர்கள் (ஏழைகள்); 200-10,000 திர்ஹாம் சொத்து மதிப்பு கொண்டவர்கள் (மத்தியவர்க்கம்); 10,000 திர்ஹாமுக்கு மேல் சொத்து கொண்டவர்கள் (பணக்காரர்கள்) என பிரிக்கப்பட்டிருந்தனர். வட்டி கொடுப்பவர்கள், துணி வியாபாரிகள், நில உடமையாளர்கள், வணிகர்கள், மருத்துவர்கள் இவர்கள் எல்லாம் உயர் குடிகளாகக் கருதப்பட்டனர். தையல்காரர்கள், சாயம் ஏற்றுபவர்கள், தோல்-செருப்பு பணியாளர்கள் போன்ற பணியாளர்கள் எல்லாம் ஏழைகளாகக் கணக்கிடப்பட்டனர். ஏழைகளாக வரையறுக்கப்பட்டிருப்பவர்கள் தம்மையும் தமது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளத் தேவையானதையும்விட அதிகமாக சம்பாதித்தால் மட்டுமே இந்த வரியைத் தந்தால் போதும். யாசகர்கள், தொழில் நொடிந்துபோனவர்கள் இந்த வரியில் இருந்து இயல்பாகவே விலக்கு பெற்றிருந்தனர்.

ஜெஸியா வரியானது இந்த மூன்று வர்க்கத்தினருக்கும் ஆண்டுக்கு முறையே 12, 24, 48 திர்ஹாம்கள் அல்லது ரூ 3-1/3, 6-2/3, 13-1/3 கொடுக்கவேண்டும். ஏழைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் ஆறு சதவிகிதம் வரி கொடுக்கவேண்டும். மத்தியவர்க்கம் 6-25% வரி கொடுக்கவேண்டும். பணக்காரர்களுக்கு மிகவும் லகுவாக தமது சொத்து மதிப்பில் ஆயிரத்துக்கு 2.5 என்ற விகிதத்தில் தரவேண்டும். இன்றைய வரி விதிப்புகளுக்கு முற்றிலும் எதிரான முறையில் ஜெசியா வரி மக்கள் தொகையில் மிகவும் வறிய நிலையில் இருந்தவர்களையே மிகக் கடுமையாகப் பாதித்தது. பிற மதத்தைப் பின்பற்றக் கொடுக்கும் வரியாக ஓராண்டு உணவுக்கு ஆகும் தொகையை ஏழைகள் வரியாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அக்பர், தமது குடிமக்கள் மீதான அவமான முத்திரையாக இருந்த இந்த வரியை ரத்துசெய்தார். ஒளரங்கசீப் இதை மீண்டும் விதித்தார்.

2, ஏப், 1679லிருந்து மொகலாயப் பேரரசு முழுவதிலும் வாழும் காஃபிர்கள் (மார்க்க அவிசுவாசிகள்) மீது இந்த ஜெஸியா வரி, ‘இஸ்லாமைப் பரப்பும் நோக்கிலும் மார்க்க விரோதத்தை வீழ்த்தவும்’ ஒளரங்கசீபினால் விதிக்கப்பட்டது. தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசித்துவந்த ஹிந்துக்கள், ஒன்றுகூடி இந்த வரியை ரத்துசெய்யும்படிக் கெஞ்சினர். ஆனால் பேரரசர் செவிமடுக்கவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை கோட்டையிலிருந்து ஜாமா மசூதிவரையிலான சாலையில் ஹிந்துக்கள் கூடி நின்று போராடினர். எவ்வளவு எச்சரித்த பின்னரும் அவர்கள் அங்கிருந்து கலையவில்லை. தொழுகைக்குச் செல்லமுடியாமல் ஒருமணிநேரம் காத்திருக்க நேரந்த ஒளரங்கசீப் யானைப்படையை அந்தக் கூட்டத்தினூடாக நுழையவிட்டு அவர்களை மிதித்தபடி முன்னேறிச் சென்றார்.  ‘புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் வரியை விலக்கிக்கொள்ளும்படியும் இறைவன் அனைத்து மத நம்பிக்கைகளையும் சமமாகப் பார்க்கும்படிச் சொல்லியிருப்பதையும் ஒட்டு மொத்த உலகத்தினரும் ஒரு தாய் மக்களே என்பதையும் நிதானமும் நியாயமும் மிகுந்த முறையில் எடுத்துச் சொல்லி, சிவாஜி எழுதிய கடிதத்துக்கு எந்தப் பலனும் இருக்கவில்லை.

ஜெஸியா வரி மூலமாக மிகப் பெரிய தொகை பேரரசுக்குக் கிடைத்தது. உதாரணமாக குஜராத் பகுதியில் இருந்து ஆண்டுக்கு ஐந்து லட்ச ரூபாய் கிடைத்தது. ஹிந்துக்களைப் பொறுத்தவரையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்குக் கூடுதல் வரியாக கொடுத்தாகவேண்டியிருந்தது. ஒரு முஸ்லிமுக்கு இந்தக் கூடுதல் வரி கிடையாது.

ஹிந்துக்கள் மீது நெருக்கடிகளை அதிகரித்து அவர்களை மதம் மாற வைத்து முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் ஜெஸியா வரி விதிக்கப்பட்டதன் நோக்கம்.1 சமகாலத்தில் வாழ்ந்த மனுச்சி, ‘ஜெஸியா வரியைக் கொடுக்கமுடியாத பல ஹிந்துக்கள் வரி வசூலிக்க வருபவர்கள் தரும் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க முஹமதியர்களாக முடிவெடுத்தனர். ஒளரங்கசீப் இதைக்கண்டு குதூகலித்தார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

________
1. இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பவும் காஃபிர்களின் மார்க்க விரோத நடைமுறைகளை ஒழிக்கவும் தனது முழு கவனத்தையும் குவித்த மதவாத பேரரசர், ‘காஃபிர்கள் (தம்) கையால் அவமானப்பட்டுக் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்’ என்று குர்ரானில் சொல்லியிருப்பதற்கு ஏற்ப, ரபி உல் அவ்வால் (2, ஏப், 1679) நாளில் இருந்து ஜெஸியா வரியை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது விதிக்க முடிவெடுத்தார் என்று மனுச்சி குறிப்பிட்டிருக்கிறார். அதிகாரபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இன்னொரு வரலாறு நூல், மிராய் இ அஹ்மதி. இதுவும் ஒளரங்கசீபின் இந்த நடவடிக்கைக்கு இந்தக் காரணத்தையே முன்வைக்கிறது. ராணுவச் சேவையில் இருந்து விலக்கு பெறுவதற்காக மட்டுமே இந்த வரி கொடுக்கவேண்டியிருந்தது என்று நவீன கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதற்கு உண்மை வரலாறில் எந்த ஆதாரமும் இல்லை. ஐரோப்பிய துருக்கியில் கூட, ‘வேறு மதத்தைப் பின்பற்றும் சுதந்தரத்தைப் பெறுவதற்காகக் கொடுக்க வேண்டியிருந்த ஜெஸியா வரிக்கு மாற்றாக ராணுவ சேவையில் இருந்து விலக்கு பெறுவதற்கு வேறொரு வரி விதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது (என்சைக்ளோபீடியா இஸ்லாம், 1:1052).

7. இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள்

10, ஏப், 1665-ல் பிறப்பித்த ஆணையின்படி, விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட பொருள்கள் அனைத்தின் மீதும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு 2.5 சதவிகித சுங்கவரியும் ஹிந்து வியாபாரிகளுக்கு 5% வரியும் விதிக்கப்பட்டது.

9, மே, 1667-ல் பேரரசர், முஸ்லிம் வியாபாரிகள் தரவேண்டியிருந்த சுங்கவரி முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஹிந்துகள் பழைய வரியையே தரவேண்டிவந்தது. ஹிந்து வியாபாரிகள் தமது பொருட்களை முஸ்லிம் வியாபாரிகளின் பொருட்கள் என்ற போர்வையில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வரியின்றிக் கொண்டுவரும்படித் தூண்டப்பட்டனர். இதனால் அரசுக்கு மேலும் பெரிய இழப்பே ஏற்பட்டது.

மார்க்க விசுவாசம் அற்றவர்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் மூன்றாவது விஷயம் என்னவென்றால் மதம் மாறுபவர்களுக்கு அரசுப் பணிகள் தரப்பட்டன. சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. வாரிசுரிமைச் சிக்கல் இருந்தால் மதம் மாற சம்மதிப்பவர்களுக்குச் சொத்து கொடுக்கப்பட்டது.

’பேரரசப் பகுதிகளில் வரி வசூல் செய்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களாகவே இருக்கவேண்டும்; குறுநில ஆட்சியாளர்கள், தாலூக்தார்கள் எல்லாம் ஹிந்து பேஷ்கர்கள் (தலைமைக் கணக்காளர்கள்) திவானியன் (கணக்குப்பிள்ளைகள்) அனைவரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முஸ்லிம்களை அந்தப் பதவிகளில் நியமிக்கவேண்டும்’ என்று என்று 1671-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. குறு நிலப் பகுதிகளில் ஹிந்து பேஷ்கர்களைப் பதவியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து அங்கு நிர்வாகப் பணிகள் முடங்கின. ஆனால் சில பகுதிகளில் ஹிந்து வரி வசூலிப்பாளர்களை நீக்கிவிட்டு முஸ்லிம்களை நியமித்தனர். பின்னாளில் வருவாய் மற்றும் செலவுத் துறைகளில் பாதிப் பதவிகளை ஹிந்துக்களுக்கும் பாதியை முஸ்லிம்களுக்குமாகக் கொடுக்கவேண்டிய நிலை வந்தது. மதம் மாற சம்மதித்தால் கானூன்கோ (சட்டத்தை அமலபடுத்தும் பதவி) கிடைக்கும் என்பது ஒளரங்கசீபின் ஆட்சி காலத்தில் பெருவழக்காக ஆனது. பஞ்சாபில் இருக்கும் சில குடும்பத்தினரிடம் இப்போதும் அரசுப் பதவி பெறுவதற்கான நிபந்தனையாக மதம் மாற வேண்டும் என்று எந்தவித வெட்கமும் தயக்கமும் இன்றி ஒளரங்கசீப் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்ட கடிதங்கள் கைவசம் இருக்கின்றன.

மதம் மாற சம்மதித்த சிலரை, ஒளரங்கசீபின் ஆணையின் பேரில், யானை மேல் அமரவைத்து மேள தாளங்கள் முழங்க கொடி பறக்க அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பிறருக்குக் குறைந்தபட்சமாக தினமும் நான்கு அணா ஊக்கத் தொகை தரப்பட்டது.

மார்ச் 1695-ல் ராஜபுத்திரர்கள் நீங்கலாக பிற ஹிந்துக்கள் அனைவரும் பல்லக்கில் ஏறுதல், யானை சவாரி, உயர் ஜாதிக் குதிரை சவாரி, ஆயுதங்கள் தரித்தல் ஆகியவற்றில் இருந்து முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டனர்.

புனிதக்ஷேத்ரங்களில் ஹிந்துக்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களில் திருவிழாக்கள், சந்தைகள் நடத்துவது வழக்கம். ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாம் அங்கு வந்துகூடுவார்கள். பல வியாபாரிகள் வந்து கடைகள் போடுவார்கள். கலை நிகழ்ச்சிகள் நடக்கும். கிராமப் பெண்கள் தமது தூரத்து உறவினர், அதிக பழக்கம் இல்லாத நண்பர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசியும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டும் மகிழ்வார்கள். ஒளரங்கசீப் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்த விழாக்கள், சந்தைகள் அனைத்தையும் தடைசெய்தார்.

ஹிந்துக்களின் தீபாவளி பண்டிகை, ஹோலி எல்லாம் சந்தைப்பகுதிக்கு வெளியே, மிகுந்த கட்டுப்பாடுகளுடனே நடக்க அனுமதிக்கப்பட்டன.

8. மதுராவில் இருந்து ஹிந்துக்கள் மீதான ஒடுக்குமுறை; விவசாயிகள் கிளர்ச்சி

ஹிந்துக்கள் மீதான அரச ஒடுக்குமுறைகளின் விளைவாக ஹிந்துக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. பேரரசரைக் கொல்ல சில ஆவேசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவையெல்லாம் குழந்தைத்தனமாகவே இருந்தன; தோல்வியிலேயே முடிந்தன.

1669 வாக்கில், மதுரா மாவட்டத்தில் பொதுமக்களிடையே கிளர்ச்சி தோன்றியது. ஆகஸ்ட் 1660 – மே 1669 மதுராவின் ஃபெளஜ்தாராக இருந்த அப்துன் நபி கான் உருவ வழிபாட்டு மரபை ஒழித்துக்கட்டும் பேரரசரின் கொள்கையைப் பெரு விருப்பத்துடன் தனதாக்கிக் கொண்டார்.

மதுரா நகரின் மையப் பகுதியில் ஹிந்து கோவில் ஒன்றை இடித்து அதன் மீது ஜாமா மசூதியைக் கட்டினார் (1661-1662). கேசவ் ராய் கோவிலுக்கு 1666-ல் தாரா ஷுகோ கொடுத்த கல் தூணை அகற்றினார். 1669-ல் ஜாட் விவசாயிகள் தில்பத் பகுதியின் ஜமீந்தாரான கோக்லாவின் தலைமையில் அணிதிரண்டனர். அப்துன் நபி பெரும் படையுடன் வந்து அவரை பஸாரா கிராமப் பகுதியில் தாக்கினார். ஆனால், மே, 10-ல் நடந்த போரில் அவர் கொல்லப்பட்டார். கோக்லா வெற்றிப் பெருமிதத்தில் சதாபாத் பகுதியைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து கலகம் அருகில் இருந்த ஆக்ராவுக்கும் பரவியது.

இந்தக் கலகத்தை அடக்க ஒளரங்கசீப் பெரும்படையை உயர் அதிகாரிகள் தலைமையில் அனுப்பிவைத்தார். 1669-ல் மதுரா முழுவதும் கலகம் நீடித்தது. 4, டிசம்பர் அன்று கிளர்ச்சி பரவியிருந்த கிராமங்கள் சிலவற்றை ஹஸன் அலி கான் தாக்கினார். மதியம் வரை கடுமையாகப் போரிட்ட கலகக்காரர்கள் மேலும் தாக்குப்பிடிக்கமுடியாமல், விரக்தியில் தமது பெண்களைத் தாமே பலி கொடுத்துவிட்டு மொகலாயர்களின் வாளுக்குத் தாமும் பலியாகினர்.

அடுத்த மாதம் ஹஸன் அலி கான், கோக்லாவைத் தோற்கடித்தார். 20,000 பேர் இருந்த கலகப் படையில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் ஜாட் விவசாயிகளே. தில்பத் பகுதியில் இருந்து 20 மைல் தொலைவில் பேரரசப் படையுடன் மோதினார்கள். நீண்ட, ரத்தக் களறியான போருக்குப் பின் மொகலாயர்களின் மேலான போர் முறைக்கும், துப்பாக்கி பீரங்கிகளுக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் தில்பத் பகுதிக்குத் திரும்பினர். அந்த கிராமம் மூன்று நாள்கள் முற்றுகையிடப்பட்டது. இறுதியில் மொகலாயப்படை வாள் ஏந்திக்கொண்டு பாய்ந்து தாக்கியது. மிக மோசமான போர் நிகழ்ந்தது. மொகலாயப் படையில் 4000 பேர் உயிர் துறந்தனர். கலகப் படையில் 5000 பேர் இறந்தனர். கோக்லாவும் அவருடைய குடும்பத்தினரும் உட்பட 7000 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஜாட் மக்களின் தலைவரை ஆக்ரா காவல் நிலையத்தில் ஒரு மேடையில் கிடத்திவைத்து கை, கால்களை ஒவ்வொன்றாக துண்டித்தனர். அவருடைய குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்றினர்.

ஹசன் அலியின் தீவிர வன்முறைகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைத்தது. அந்தப் பகுதியில் கலகம் அடக்கப்பட்டது. ஆனால் அது தற்காலிக அமைதியாகவே இருந்தது. 1686-ல் இரண்டாவது ஜாட் கிளர்ச்சி ராஜாராம் தலைமையில் ஆரம்பித்தது.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *