Skip to content
Home » ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

குரு கோவிந்த் சிங்

9. சத்நாமி பிரிவினரின் எழுச்சி, 1672

ஒளரங்கசீபுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சத்நாமிகள் உண்மையில் சாது பிரிவினர். சத்நாமிகள் என்று என்று தம்மை அழைத்துக்கொண்டனர். ஒற்றைப் பரம்பொருளை நம்பும் இந்த அமைப்பு பிஜேஸ்வரின் துறவி பீர்பன் மூலம் நார்நெளல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. துறவி ராய் தாஸ் மூலம் தொடங்கப்பட்ட அமைப்பின் கிளை அமைப்பு என்றும் சொல்லலாம். இவர்கள் புருவங்கள் உட்பட, தலைமுடியை மழித்துக் கொண்டிருந்தால் மக்கள் இவர்களை ‘முண்டியா’ என்று அழைத்தனர். தில்லிக்கு தென் மேற்கில் 75 மைல் தொலைவில் இருந்த நார்நெளல் பகுதியே இவர்களின் கோட்டையாக இருந்தது.

‘சத்நாமிகள் துறவிகளைப்போல் உடை அணிந்தபோதிலும் பலரும் விவசாயம் அல்லது சிறிய முதலீட்டில் ஏதேனும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தனர். நேர்மையும் கூட்டுறவும் கொண்டவர்கள்’ என்று இந்தக் குழுவினரைப் பற்றி கஃபி கான் குறிப்பிட்டிருக்கிறார். தமக்கான தனி மத நம்பிக்கையைப் பின்பற்றிய இவர்கள் நற்பெயருடன் வாழ்ந்து வருவதையே பெரிதும் விரும்பினர். முறையற்ற நேர்மையற்ற வழியில் பணம் சம்பாதிக்க விரும்பவே இல்லை.

லெளகிக விஷயம் சார்ந்துதான் முதலில் ஒளரங்கசீபின் படைகளுடன் இவர்களுக்கு மோதல் ஏற்பட்டது. ‘நார்நெளல் பகுதியில் ஒரு நாள் சத்நாமி விவசாயிக்கும் பேரரசப் படையின் காலாட்படை வீரனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. படைவீரன் ஒரு கட்டையை எடுத்து சத்நாமி விவசாயியின் மண்டையை உடைத்துவிட்டார். இதைக் கண்டு கோபப்பட்ட பிற சத்நாமிகள் அந்தப் படை வீரனை குற்றுயிரும் குலையுயிருமாக ஆகும்வரை அடித்தனர். ஷிக்தார் (வரி வசூலிப்பவர்) இதைக் கேள்விப்பட்டதும் அவர்களைக் கைது செய்ய ஒரு படைக்குழுவை அனுப்பினார். சத்நாமிகள் ஒன்றுகூடி இந்தப் படையினரையும் அடித்துச் சிலரைக் காயப்படுத்தினர். அவர்கள் கையில் இருந்த ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். நேரம் ஆக ஆக சத்நாமிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது’.

மெள்ள இந்த மோதல் மதச் சாயம் பூசிக்கொள்ளத் தொடங்கியது. ஒளரங்கசீப் மீது ஹிந்துக்கள் நடத்தும் விடுதலைப் போராக நாளடைவில் மாறியது. ஒரு பழைய குறி சொல்லி அவர்கள் மத்தில் தோன்றி, தேவியின் சக்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றும் ஒருவர் வீழ்ந்தால் எண்பதுபேர் முளைத்து எழுவார்கள்; எதிரியின் எந்தவொரு ஆயுதமும் அவர்களை வீழ்த்தமுடியாது என்றும் அருள் வாக்கு சொன்னார். இந்த இயக்கம் காட்டுத்தீ போல் பரவி மொகலாயப் பேரரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வெகு விரைவிலேயே சுமார் 500 சத்நாமிகள் ஆயுதங்களுடன் களம் இறங்கிவிட்டனர். அந்தப் பகுதியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மொகலாயத் தளபதிகள் சிறிய படைகளைத் தொடர்ந்து அனுப்பினர். அவை எல்லாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. இந்த ஆரம்பகட்ட வெற்றிகள் சத்நாமிகளின் தன்னம்பிக்கையை அதிகரித்தன. தமக்குச் சொல்லப்பட்ட அருள்வாக்கு நிரூபணமாவதாக மகிழ்ந்தனர். நார்நெளல் பகுதியைச் சேர்ந்த ஃபெளஜ்தார் பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

வெற்றி பெற்ற சத்நாமிகள் மொகலாயக் கட்டுப்பாட்டில் இருந்த நார்நெளல் பகுதியைச் சூறையாடினர். மசூதிகளைத் தரைமட்டமாக்கினர். அந்த மாவட்டத்தில் தமது ஆட்சியை நிலைநாட்டினர். மாவட்ட எல்லையில் காவல் படைகளை நிறுத்தினர். விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்கத் தொடங்கினர். அவர்களுடைய கிளர்ச்சி தில்லியை எட்டியது. அங்கு சென்று சேரவேண்டிய தானியங்களின் அளவு குறைந்ததும் அவர்கள் அபாயத்தைப் புரிந்துகொண்டு கலக்கமடைந்தனர். சத்நாமிகளுக்கு இருப்பதாக நம்பப்பட்ட மந்திர சக்திகளைக் கண்டு பேரரசுப் படை அச்சமுற்றது.

ஒளரங்கசீபுக்கு இது மிகுந்த ஆத்திரத்தை மூட்டியது. 15, மார்ச்சில் 10,000 வலிமையான வீரர்களை ரடாண்டாஸ் கான் மற்றும் பல பீரங்கி, துப்பாக்கி இயக்கும் உயர்நிலை வீரர்களின் துணையுடன் அனுப்பிவைத்தார். பேரரசரின் மெய்க்காப்புப் படையிலிருந்து ஒரு பிரிவும் அனுப்பிவைக்கப்பட்டது. வாழும் ஃபகீராகப் புகழப்படும் ஒளரங்கசீப் (ஆலம்கீர் ஜிந்தா பிர்) தன் கைப்பட இஸ்லாமிய பிரார்த்தனைகள், மந்திர உருவங்கள் எல்லாம் எழுதி அந்தத் தகடுகளைத் தனது படையின் கொடியில் வைத்துத் தைத்து அனுப்பினார். அப்படியாக அந்த மந்திரத் தகடுகளை எதிரிகளின் பார்வையில் படும்படிச் செய்தார். அந்த மோதல் மிக கடுமையாக இருந்தது. சுமார் 2000 சத்நாமிகள் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானவர்கள் தேடிச் சென்று வெட்டி வீழ்த்தப்பட்டனர். சொற்பமானவர்களே உயிர் தப்ப முடிந்தது. ‘அந்தப் பகுதி காஃபிர்கள் இல்லாமல் துடைத்து அழிக்கப்பட்டது’.

10. சீக்கிய மதத்தின் வளர்ச்சி; சீக்கிய குருமார்களின் நடத்தை மற்றும் இலக்குகளில் ஏற்பட்ட மாற்றம்

15-ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் பஞ்சாபில் ஹிந்து சீர்திருத்தவாதி பாபா நானக் தோன்றினார். புற வடிவங்களைவிட மதத்தின் சாரத்துக்கு முக்கியத்துவம் தரச் சொன்னார். உயிர்த்துடிப்பற்ற சடங்கு சம்பிரதங்களைவிட மதத்தின் ஆன்மாவுக்கு முக்கியத்துவம் தரச் சொன்னார். புனித நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளைவிட அதன் பின்னால் இருக்கும் நல்லுணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரச்சொன்னார்.

மக்கள் மத்தியில் இருந்த பல தெய்வக் கோட்பாடுகளுக்கு அடிப்படையாக ஒற்றைப் பரம்பொருளே இருப்பதாகச் சொன்னார். ஜாதி, வர்க்கம் சார்ந்த வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தார். சகோதரத்துவ உணர்வு மிகுந்த குழுவை உருவாக்கினார். ஆனால், பின்னர் வந்த சீக்கிய மதத் தலைவர்கள் லெளகிக விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்தினர். தார்மிக ஒழுங்கும், சுய சீர்திருத்தத்தையும் ஆன்ம முன்னேற்றத்தையும் விட்டுவிட்டு போர்க்குணத்தை வளர்த்துக்கொண்டனர். ‘இன்று சீக்கியர்கள் மத்தியில் முன்னேறும் உத்வேகம் இல்லை. அவர்கள் குறுங்குழுவாகச் சுருங்கிவிட்டனர். அவர்கள் மத்தியிலிருந்து புதிய குருமார்களை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டனர்’ (ரவீந்திரநாத் தாகூர்)

வணிக அல்லது கால்ரி ஜாதியில், லாகூருக்கு தென் மேற்கில் 35 மைல் தொலைவில் இருந்த தால்வாண்டியில் (இப்போது நானாகானாவில்) 1469-ல் குரு நானக் பிறந்தார். ஒற்றைப் பரம்பொருளின் மீது பக்தி கொள்ளவேண்டும்; இறையருளைப் பெறும் வகையில் ஒவ்வொருவரும் தமது நடத்தையை வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பவையே அவருடைய மதக் கோட்பாடு.

‘பணிவு, பிரார்த்தனை, புலனடக்கம், இதயத்தின் தேடல் இறைவன் மீதே ஊன்றியிருத்தல் இவையே இறைவனை அடைய வழி’ என்று கபீர் தாஸர் சொன்னவற்றையே இவரும் சொன்னார். 1538 வரையில் வாழ்ந்த இவர் மிகப் பெரிய ஆதரவாளர்களின் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அது காலப்போக்கில் தனி மதப் பிரிவாக பரிணமித்தது.

குரு நானக்கில் தொடங்கி ஐந்தாவது குருவான அர்ஜுன் வரையில், 16-ம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்து வந்த சீக்கிய குரு மரபினரை மொகலாயப் பேரரசர்களும் போற்றிவந்தனர். அவர்களுடைய துறவு வாழ்க்கை மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். சீக்கிய குருமார்களுக்கும் இஸ்லாமிய மதத்துடனோ அரசுடனோ எந்தவொரு மோதலும் அப்போது இருந்திருக்கவில்லை.

ஒளரங்கசீபின் ஆட்சிக்கு முன்புவரை சீக்கிய குருமார் யாரும் மத அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டிருக்கவில்லை. மொகலாய அரசுடன் அவர்களுக்கு ஜஹாங்கீரின் காலத்தில் ஆரம்பித்த மோதல் முழுக்கவும் மதம் சாராததாகவே இருந்தது. சீக்கிய குருமார்களின் நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றமே அதற்குக் காரணமாக இருந்தது.

ஐந்தாவது சீக்கிய குருவான அர்ஜுன் சிங்கின் காலவாக்கில் சீக்கிய மதத்துக்கு மாறியவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது. அதன் மூலம் செல்வ வளமும் பெருகியிருந்தது. நிரந்தரமான வருமானம் வருவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய குரு அர்ஜுன் தீர்மானித்தார். சீக்கியர்கள் வாழும் இடங்களில் மதக் காணிக்கை மற்றும் மத வரி வசூலிக்க காபூல் தொடங்கி டாக்காவரையில் சீக்கியப் பிரதிநிதிகளை நியமித்தார். இந்த ஆன்மிக தானங்கள், வசூல்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கொண்டதுபோக மீதி அமிர்தசரஸ் கஜானாவைச் சென்று சேர்ந்தன.

சீக்கிய குரு பூவுலக சக்ரவர்த்தியாக மதிக்கப்படலானார். மசந்த என்ற பெயரிலான ஆலோசகர்கள் குழு, அமைச்சர்கள் குழு போன்றவை உருவாக்கப்பட்டன. தில்லி பதான் சுல்தான்களின் ஆட்சியில் மேட்டுக்குடியினர் வகித்த மசந்த்-இ-ஆலா என்ற பதவியின் ஹிந்தி திரிபு. மொஹலாயப் பேரரசின் அரியணையைக் கைப்பற்ற ஜஹாங்கீருடன் மோதிய குஸ்ருவின் கலகத்துக்கு, குரு அர்ஜுன் விதிவசப்பட்ட பலவீன தருணத்தில் ஆசி வழங்கினார். இளவரசர் குஸ்ருவுக்கு பண உதவியும் செய்தார்.

குஸ்ரு தன் கலகத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜஹாங்கீர் கீழ்ப்படிதலற்ற சீக்கிய குருவுக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். குரு அர்ஜுன் அதைக் கொடுக்க மறுத்தார். அதைத் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். அந்நாட்களில் வரி, அபராதங்களைச் செலுத்தாதவர்களுக்கு இப்படியான தண்டனைகள் தரப்படுவது வழக்கம். லாஹூரில் கொளுத்தும் வெய்யிலில் தரப்பட்ட தண்டனைகளைத் தாங்க முடியாமல் ஜூன் 1606-ல் குரு அர்ஜுன் உயிர் துறக்க நேர்ந்தது.

அவரையடுத்து குரு ஹர் கோவிந்தின் காலம் (1606-1645) ஆரம்பித்தது. தனது தந்தையைப் போலல்லாமல் குரு ஹர் கோவிந்த் போர்க் கலையில் தேர்ச்சி பெற்றார். மெள்ள போர்க்குணத்தில் தன் கவனத்தைத் திருப்பினார். தனது மெய் காவல் படையாக 52 வீரர்கள் கொண்ட குழுவை உருவாக்கிக் கொண்டார். அது மெள்ள ஒரு ராணுவப் படையைப் போல் பெரிதானது. ‘குருவின் இல்லத்தில் ஆன்மிக சாதனைகளும் லெளகிக அம்சங்களும் ஒருங்கிணையத் தொடங்கின’ என்று ஒரு சீக்கிய சீடர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷாஜஹான் ஆட்சிக் கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து அவர் அமிர்தசரஸுக்கு வந்திருந்த தருணத்தில் குரு ஹர் கோவிந்தும் அந்தப் பகுதியில் வேட்டை தேடி நுழைந்தார். பேரரசப் படையினர் வேட்டையாடி வீழ்த்திய பறவை தொடர்பாக சீக்கியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் இறுதியில் பேரரசப்படை அடித்து விரட்டப்பட்டது. கலகக்காரர்களை எதிர்க்கப் படை அனுப்பப்பட்டது. அமிர்தசரஸ் பகுதியில் சங்க்ரானாவில் 1628-ல் நடைபெற்ற மோதலில் மொகலாயப் படை பெரும் இழப்பை சந்திக்க நேர்ந்தது. சீக்கியர்களின் புகழ் எங்கும் பரவியது. ‘பேரரசரை எதிர்க்கும் பலம் வேறு யாரிடமும் இல்லை என்று சொல்லியபடி’ ஏராளமானவர்கள், சீக்கிய படையில் தம்மை இணைத்துக்கொள்ள ஆர்வத்துடன் முன்வந்தனர்.

பேரரசுக்கு எதிரான இப்படியான வெளிப்படையான கலகத்தை லாகூரில் இருந்தவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. சீக்கிய குருவை வீழ்த்த, பெரிய பெரிய படைகள் அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில் குருவுக்கு வெற்றிகள் கிடைத்தபோதிலும் அமிர்தசரஸில் இருந்த அவருடைய வீடு, சொத்துகள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. மொகலாயர்களின் எல்லைக்கு அப்பால் இருந்த காஷ்மீர மலைப்பகுதியில் கைராபூரில் சென்று குரு ஹரி கோவிந்த் அடைக்கலம் தேடவேண்டி வந்தது. அங்கு அவர் 1645-ல் உயிர் துறந்தார்.

1664-ல் குரு ஹர் கிஷன் இறந்ததைத் தொடர்ந்து சீக்கியர்கள் மத்தியில் குழப்பமும் முறைகேடுகளும் மலிந்தன. பகலா பிரிவைச் சேர்ந்த 22 நபர்கள் அடுத்த குருவாக நியமனம் பெறப் போட்டியிட்டனர். தாமாகவே தம்மை குருவாக நியமித்துக் கொண்ட இவர்கள் சீக்கியர்களிடம் இருந்து காணிக்கைகளைக் கட்டாயப்படுத்திப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். குரு ஹர் கிஷனின் கடைசி மகனான தேஜ் பஹதூர் பெரும்பாலான சீக்கியர்களின் ஆதரவினால் அடுத்த குருவானார்.

சீக்கியர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதையும் சீக்கிய புனிதஸ்தலங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதையும் கண்டு அனந்தபூரில் இருந்த தேஜ் பஹதூர் வெகுண்டு எழுந்தார். காஷ்மீர ஹிந்துகள் வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்றப்படுவதை எதிர்த்து ஹிந்துகள் முன்னெடுத்த செயல்பாடுகளுக்கு அவர் ஆதரவு கொடுத்தார். மொகலாயப் பேரரசரை வெளிப்படையாக எதிர்க்கவும் செய்தார். தில்லிக்கு இழுத்துச் செல்லப்பட்டவர் அங்கு சிறையில் அடைத்துவைக்கப்பட்டார். இஸ்லாமுக்கு மாறும்படி அவரை மிரட்டினார்கள். மாற மறுத்தவரை ஐந்து நாட்கள் சித்ரவதை செய்தனர். கடைசியில் 1676-ல் ஒளரங்கசீபின் உத்தரவின் பேரில் குரு தேஜ் பஹதூரின் தலையை வெட்டிக் கொன்றனர்.

இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் நேரடி மோதல் வெடித்தது. சீக்கியர்கள் மத்தியில் ஒரு மகான் தோன்றி அவர்களை மிக அற்புதமாக ஒருங்கிணைத்தார். மொகலாயப் பேரரசுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் எதிரான வலுவான, வெல்ல முடியாத சக்தியாக சீக்கிய மதத்தைப் பலப்படுத்தினார். அவரே பத்தாவது மற்றும் இறுதி சீக்கிய குருவான குரு கோவிந்த ராய் (1676-1708). ‘குள்ளநரிகளையெல்லாம் புலிகளாக்குவார்; குருவிகளையெல்லாம் கழுகுகளாக்குவார்’ என்று அவர் பிறந்தபோது ஜோதிடம் சொல்லப்பட்டது.

குரு கோவிந்த சிங் வெற்றி பெற்றதற்கு என்ன காரணங்கள் என்று கொஞ்சம் பார்ப்போம். முதலாவதாக, அவர் மெள்ள மெள்ள ஒரு கதாநாயகனாகப் பரிணமித்தார். எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ஆதரவாளர்கள் எல்லாம் குருவின் சொல் கேட்டு அடிபணியவேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டனர். ஒற்றைப் பரம்பொருள் மீதான தீவிர பக்தியே சீக்கியர்கள் அனைவரையும் அவர் தலைமையின் கீழ் ராணுவ ஒழுங்குடன் ஒருங்கிணைத்தது. 17-ம் நூற்றாண்டு வாக்கில் சீக்கியர்கள் தமது சகோதரத்துவம், பரஸ்பர அன்பு ஆகியவற்றுக்காகப் புகழ் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். கடவுள் தம்மை மகத்தான செயலுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பதாகப் பெருமிதம் கொண்டிருந்தனர்.

பால குருதாஸ் சொன்னவை: எங்கெல்லாம் இரண்டு சீக்கியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சீக்கிய குருமார்களின் பெருங்குழு இருக்கிறது. எங்கெல்லாம் ஐந்து சீக்கியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த இறைவனே இருக்கிறார்.

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒற்றுமை உணர்வானது, குரு கோவிந்த சிங்கின் போதனைகளின் அடிப்படையில் ஜாதி வேறுபாடுகளை ஓரங்கட்டியதைத் தொடர்ந்து மேலும் வலுப்பட்டது. ஹிந்து சமூகத்தில் உணவு, பானங்கள் ஆகியவை தொடர்பான கெடுபிடிகள் எல்லாம் ஏற்கெனவே மறைந்துவிட்டிருந்தன. ஓலிவர் க்ராம்வெல்லின் படையினரான ஐயர்ன்சைட்கள் தமது ஜேசூயிட் நம்பிக்கையினால் எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் தமது தலைவருக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்டு வெற்றி பெற்றனர். குரு கோவிந்தரின் சீக்கியப் படைகளுமே அதுபோலவே சீக்கிய நம்பிக்கையினால் உந்தப்பட்டு ஒற்றுமையாகக் கீழ்படிந்து நடந்து வெற்றியை ஈட்டின.

11.குரு கோவிந்த் சிங்: லட்சியமும் வாழ்க்கையும்

குரு கோவிந்த் சிங் தன் ஆதரவாளர்களை நிதானமாக வார்த்தெடுத்தார். அவர்களுக்கென்று தனியான சீருடை, உறுதிமொழி இவற்றைப் பரிந்துரைத்தார். இஸ்லாம் மீதான பகைமையை வெளிப்படையாக முன்வைத்தார். இஸ்லாமிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும்படி ஹிந்துக்களையும் உத்வேகமூட்டினார். யாரேனும் சீக்கியர், ஏதேனும் முஹமதிய துறவியின் சமாதிக்கு வணக்கம் வைத்தால் ரூ 125 அபராதம் என்று உத்தரவிட்டார். அவருடைய இலக்குகள் இந்த உலக வாழ்க்கை குறித்ததாகவே பெரிதும் இருந்தது. கால்ஸா விதிகளின்படி ராஜ்ஜியம் அமைப்பதே என் லட்சியம் அன்னையே… என்று சூளுரைத்தார். அவர் தன்னாட்சி மிகுந்த ராஜ்ஜியத்தில் வாழ்ந்தார்.

வடக்கு பஞ்சாபின் மலைப்பகுதிகளில் குரு கோவிந்த சிங் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தார். ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளின் மலை அரசர்கள் எல்லாம் இவருடைய ஆதரவாளர்களின் போர் நடவடிக்கைகளினால் அதிருப்தியுற்றிருந்தனர். மற்றும் இஸ்லாமை எதிர்க்கவேண்டும் என்ற இவருடைய இலக்கைக் கண்டு அச்சமுற்றிருந்தனர். இதனால் இந்த மலை அரசர்களுடனும் குரு கோவிந்த் சிங்குக்கு மோதலில் ஈடுபடவேண்டியிருந்தது. குரு கோவிந்த் சிங்கைத் தோற்கடிப்பதற்காக சர்ஹிந்த் பகுதியிலிருந்து ஏராளமான மொகலாயப் படை இந்த காஷ்மீர மலை அரசர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் அந்தப் படைகள் எல்லாம் தோல்வியைத் தழுவின.

பஞ்சாபிலிருந்து தோப்கள் சாரை சாரையாகப் புறப்பட்டுச் சென்று சீக்கிய மதம் தழுவி, குரு கோவிந்த் சிங்கின் படையில் சேர்ந்துகொண்டனர். சில முஸ்லிம்களும் கூட அவருடைய படையில் சேர்ந்துகொண்டனர். அனந்தபூர் கோட்டை ஐந்து முறை முற்றுகையிடப்பட்டது. இறுதித் தாக்குதலுக்குப் பின்னர் குரு கோவிந்த் சிங் அந்தக் கோட்டையில் இருந்து வெளியேறினார். மொகலாயப் படை பின்தொடர்ந்து வந்தது. பல்வேறு சாகசங்கள் செய்து மயிரிழையில் உயிர் தப்பி, வேட்டையாடப்படும் விலங்கு தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதுபோல் தப்பிச் சென்றார். இஸ்லாமியப் படையால் அவருடைய நான்கு மகன்கள் கொல்லப்பட்டனர். தனது விசுவாசமான சொற்ப மெய்க் காவலர்களுடன் தென்னிந்தியாவுக்கு குரு கோவிந்த் சிங் பயணம் மேற்கொண்டார். 1707-ல் புதிய பேரரசர் பஹதூர் ஷா, ராஜபுதனா மற்றும் தக்காணம் நோக்கிய தன் பயணத்தில் துணைக்கு வரும்படி குருவைக் கேட்டுக்கொண்டார். ஹைதராபாதுக்கு 150 மைல் வடமேற்கில் கோதாவரிக் கரையில் இருந்த நந்தர் பகுதிக்கு ஆகஸ்ட் 1707-ல் அவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் சிறிய காலாட்படையும் 200-300 குதிரைப்படையும் இருந்தன. ஒரு வருட காலம் அங்கு தங்கியிருந்த குரு கோவிந்த் சிங்கை ஓர் ஆஃப்கனியர் கத்தியால் குத்திக் கொன்றார் (1708).

குரு கோவிந்த சிங்குடன் சீக்கிய குரு பரம்பரை முடிவுக்கு வந்தது.

ஒளரங்கசீபின் தலைமையிலான மொகலாயப் பேரரசு அப்படியாக குருவின் வலிமையைக் குலைப்பதில் வெற்றி கண்டது. அவர்களுக்கு ஒரு வலிமையான தலைவர் வரமுடியாமலும் ஒரு குடையின் கீழ் திரள வழியின்றியும் செய்தது. அதன் பின் எழுந்த சீக்கியக் கிளர்ச்சிகள் எல்லாம் மிகச் சிறிய அளவில் தனிக் குழுக்களாகவே செயல்படமுடிந்தது. ஒரு தலைவரின் கீழ், தெளிவான அரசியல் இலக்குடன் அணிவகுத்துப் போரிடும் நிலை அதன்பின் உருவாகவில்லை. வீரமும் உற்சாகமும் வலிமையும் மிகுந்த குழுக்களாக அதே நேரம் எந்தவொரு தனி ராஜ்ஜியம் அமைக்கும் இலக்குகள் எதுவும் இல்லாமல் கொள்ளைகளில் ஈடுபடுபவையாகச் சுருங்கிவிட்டன. ரஞ்சித் சிங் மட்டும் எழுச்சி பெற்றிருக்காவிட்டால் சீக்கியர்களின் கீழே எந்தவொரு பெரிய ஒற்றுமையான ராஜ்ஜியமும் உருவாகியே இருக்காது. ஆனால், பஞ்சாபில் சீக்கிய தளபதிகளின் கீழ் இருந்த இருந்த பல சமஸ்தானங்கள் தமது வீரர்களை அனுப்பி வெறுமனே சூறையாடல்களில் மட்டுமே ஈடுபட்டுவந்தனர். ராஜ்ஜிய உருவாக்கத்தில் கவனம் செலுத்தவே இல்லை.

ஒளரங்கசீபின் மத வெறியின் விளைவாக இரண்டு ராஜபுத்திர வம்சங்கள் கிளர்ந்தெழுந்தன. அவற்றுடன் போர் மூண்டது.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *