Skip to content
Home » ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

ஔரங்கசீப்

1. ஒளரங்கசீப் மார்வாரைக் கைப்பற்றுதல், 1679

மார்வார் ஒரு பாலை நிலம். ஆனால் மொகலாயர்களின் காலகட்டத்தில் அது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. உற்பத்தி வளம் கொழிக்கும் அஹமதாபாத் நகருக்கு மொகலாயத் தலைநகரில் இருந்து செல்வதற்கு உகந்த எளிய, விரைவில் செல்ல முடிந்த பாதை மார்வார் வழியாக அமைந்திருந்தது. வணிகப் போக்குவரத்து மிகுந்த, பரபரப்பான காம்பே துறைமுகத்துக்குச் செல்லும் வழியும் அதனூடாகவே இருந்தது. ஆக்ராவிலிருந்து பேரரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஆஜ்மீர் நகரம் வரையிலான மேற்குப் பகுதி சாலை விசுவாசமான ஜெய்ப்பூர் ராஜ்ஜியம் வழியாகச் சென்றது. அதன் பின்னர் ஆரவல்லி மலைத்தொடரினூடாகச் செல்லும் கணவாய் பாதை வழியாக மார்வார் நகரங்களான பாலி மற்றும் ஜாலோர் வழியாகச் சென்று அஹமதாபாத்தைச் செண்று சேர்ந்தது.

இப்படியான முக்கியமான ஒரு பகுதி பேரரசுடன் இணைக்கப்பட்டுவிட்டால் உதய்பூர் ராஜ்ஜியத்தை சுற்றி வளைத்துவிட முடியும். முஸ்லிம் ராஜ்ஜியம் ராஜபுதனத்தினூடாக ஊடுருவிச் செல்லமுடியும். அதை இரு துண்டுகளாக்கி எளிதில் வீழ்த்திவிடவும் முடியும். வட இந்தியாவில் அந்நாட்களில் வலிமையுடன் இருந்த ஹிந்து ராஜ்ஜியம் மார்வார்தான். அதன் மன்னர் ஜஸ்வந்த் சிங்.

மொகலாய அரசுடன் நட்புறவில் இருந்த ஜெய்சிங் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்ததையடுத்து மிக முக்கிய இணையற்ற ஹிந்து மன்னராக ஜஸ்வந்த் சிங் ஆகியிருந்தார். ஒளரங்கசீப் ஹிந்துக்களைக் கட்டாய மதம் மாற்றம் செய்யும் தன் முயற்சியில் வெற்றிபெறவேண்டுமென்றால் ஜஸ்வந்த் சிங்கின் ராஜ்ஜியம் மொகலாயப் பேரரசைச் சார்ந்து, கீழடங்கி நடக்கும் ராஜ்ஜியமாக ஆக்கப்பட்டாகவேண்டும். அல்லது பேரரசின் அங்கமாக ஆக்கப்பட்டாகவேண்டும். இஸ்லாமிய மத வெறிச் செயல்பாடுகளுக்கு எதிராக ஹிந்து எழுச்சி ஏற்பட வாய்ப்பு இல்லாதவகையில் அதை முடக்கியாகவேண்டும்.

1678, டிசம்பர் 10-ல் கைபர் கணவாய் பகுதியில் இருந்த ஜம்ரூதில் மொகலாயப் படைகளுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தபோது மஹாராஜா ஜஸ்வந்த் சிங் உயிர் துறந்தார். அவர் ஆஃப்கானிஸ்தானின் வைஸ்ராயாகவோ காபூல் நகரத்தின் ஆட்சியாளராகவோ இருந்திருக்கவில்லை. ஜம்ரூதின் தானேதாராக மட்டுமே இருந்தார். அவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட உடனே ஒளரங்கசீப் அவருடைய ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி மொகலாய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். 9, ஜன, 1679-ல் பேரரசர் ஜோத்பூருக்கு அருகில் இருந்தபடி அதைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்று முடிவு செய்து அஜ்மீருக்கு தானே புறப்பட்டுச் சென்றார்.

ஜஸ்வந்தின் மரனம் ரத்தோர்களை குழப்பத்திலும் கலக்கத்திலும் ஆழ்த்தியது. ராஜ்ஜியத்துக்கு தலைவர் இல்லாமல் ஆகியிருந்தது. ஜஸ்வந்தின் உயர் நிலை அதிகாரிகளும் மிகச் சிறந்த படைவீரர்களும் ஆஃப்கானிஸ்தானில் இருந்தனர். முதலில் மிகப் பெரியதும் நன்கு வழிகாட்டப்பட்டதுமான மொகலாயப் படை மளமளவென வந்து குவிந்தபோது எந்த எதிர்ப்பையும் காட்டவே முடிந்திருக்கவில்லை.

லாகூரில் இருந்த ஜஸ்வந்ந்த் சிங்கின் இரண்டு மனைவியருக்கு அப்போதுதான் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த செய்தி (26 பிப்ரவரியன்று) ஒளரங்கசீபுக்குத் தெரிய வந்திருந்தது. ஆனால் வாரிசுரிமை சார்ந்து எந்த சட்ட விதி தடையாக இருந்தாலும் மார்வார் பகுதியைத் தனது பேரரசுடன் இணைத்துக்கொள்ளும் முடிவில் இருந்து ஒளரங்கசீப் பின்வாங்க விரும்பியிருக்கவில்லை. அஜ்மீரில் இருந்து தில்லிக்கு 2 ஏப்ரலில் திரும்பினார். ஒரு நூற்றாண்டு காலம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜெஸியா வரியை அன்றே ஒளரங்கசீப் இந்துக்கள் மீது விதித்தார்.

நாகோர் பகுதியின் தளபதியும் ஜஸ்வந்தின் மருமகனுமான இந்திர சிங் ரத்தோரை ஜோத்பூரின் மன்னராக நியமித்தார். வாரிசு உரிமைக் கட்டணமாக 36 லட்சம் பணம் கொடுக்கவேண்டும் என்று சொல்லி மார்வாருக்கு அனுப்பினார் (26 மே). ஆனால் அந்தப் பகுதியில் ஏற்கெனவே இருந்த மொகலாய நிர்வாகிகள், தளபதிகள் ஆகியோரை புதிய ராஜா ஆட்சிப் பொறுப்பை ஏற்க உதவும் நோக்கில் அங்கேயே இருக்கும்படி ஒளரங்கசீப் உத்தரவிட்டிருந்தார்.

2. அஜீத் சிங்கை துர்காதாஸ் காப்பாற்றிய விதம்

இறந்த ஜஸ்வந்தின் மனைவிகள் லாஹூர் வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் (பிப் 1679-ல்) பிறந்தன. ஒரு குழந்தை சில வாரங்களில் இறந்துவிடவே இன்னொரு குழந்தையான அஜித் சிங் பின்னாளில் ஜோத்பூர் அரியணையில் ஏறினார். அவருடைய வாழ்க்கை சாகசங்கள் நிறைந்ததாக இருந்தது. ஜூன் மாத இறுதியில் தில்லிக்கு மஹாராஜாவின் குடும்பம் வந்து சேர்ந்தது. அஜீத் சிங்கின் வாரிசுரிமையை ஒளரங்கசீப் முன்பாக எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவரோ அந்தக் குழந்தையைத் தனது அந்தப்புரத்தில் விட்டுச் செல்லவேண்டும் என்றும் உரிய வயது வந்ததும் அவரை ராஜாவாக மொகலாய அரசவையில் இடம்பெறுபவராக ஆக்குவேன் என்றும் வாக்குக் கொடுத்தார். முஸ்லிமாக மாறினால் ஜோத்பூர் மன்னராக்குவதாகச் சொல்லப்பட்டதாக சமகால வரலாற்றசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒளரங்கசீபின் வார்த்தைகளைக் கேட்டு விசுவாசமான ரத்தோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமது மன்னரின் வாரிசைக் காப்பாற்றுவதற்காக உயிரையும் விடத் தயார் என்று சூளுரைத்தனர். ஜஸ்வந்த் சிங்கின் அமைச்சர்களில் ஒருவரான அஸ்கரனின் மகனும் துருனேரா பகுதியின் ஆட்சியாளரும் ரத்தோர் படையின் தளபதியுமான துர்காதாஸின் அற்புதமான தலைமையின் கீழ் அணிதிரண்டனர். அவருடைய கடுமையான விடாமுயற்சியும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளும் இருந்திருக்காவிட்டால் அஜித் சிங்கினால் தனது தந்தையின் அரியணையைக் கைப்பற்ற முடிந்திருக்காது.

துர்கா தாஸ் தன் மன்னரின் மகனுடைய வெற்றிக்காகச் சுற்றிலும் இருந்த மிகக் கடுமையான எதிரிகள், தமது மக்களிடையே இருந்த அவநம்பிக்கை, மனக்கவலைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி வென்று காட்டினார். மொகலாயர்கள் கொடுத்த தங்கக்காசுகள் அவரை மயக்கவில்லை. மொகலாயர்களின் படைகளால் அவரை வீழ்த்தமுடியவில்லை. ரத்தோர் குலத்தில் ஒற்றை ஆளாக ராஜபுத்திர வீரர்களின் துணிச்சலையும் மொகலாயர்களின் ராஜ தந்திரம், ஒருங்கிணைக்கும் திறமை ஆகியவற்றையும் அரிய வகையில் ஒருங்கிணைத்து வெளிப்படுத்துபவராக இருந்தார்.

15 ஜூலையன்று, ஜஸ்வந்த் சிங்கின் ராணிகளையும் குழந்தையையும் பிடித்துவந்து நூர்கர் கோட்டையில் சிறைப்படுத்த, தில்லி நகரத் தளபதியின் தலைமையில் வலிமையான படை ஒன்றை ஒளரங்கசீப் அனுப்பினார். ரத்தோர் வீரர்கள் சிலர் பேரரசப் படையைத் தீவிரமாக, உயிர் தியாகம் செய்து எதிர்ப்பது என்றும் மற்றவர்கள் இதனிடையில் குழந்தை அஜீத் சிங்கை பத்திரமாக காப்பாற்றிக் கொண்டு சென்றுவிடவேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

ஜோத்பூரின் பால்தி குல வீரனான ரகுநாதர் 100க்கும் மேற்பட்ட வீரக்ரளுடன் பேரரசுப் படையைத் தாக்கினார். அவர்களுடைய ஆவேசமான தாக்குதலை பேரரசுப் படையினர் முறியடிப்பதற்குள் அஜித் சிங் மற்றும் ஆண் வேடமணிந்த ராணிகளைப் பாதுகாப்பாக அழைத்துகொண்டு துர்கா தாஸ் மார்வாருக்குத் தப்பிச் சென்றுவிட்டார். தில்லி தெருவில் ஒன்றரை மணி நேரம் வீரப் போர் புரிந்த ரகுநாத், ரத்த வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். இறுதியில் வீரமரணம் அடைந்தார். மொகலாயப் படையினர் துர்காதாஸைத் துரத்திச் சென்றனர். 9 மைல் தொலைவுக்குத் தப்பிச் சென்றவரை இறுதியில் நெருங்கினர்.

இப்போது ரஞ்சோர்தாஸ் ஜோதா சிறிய படையுடன் முன்னால் வந்து எதிரிகளைத் தாமதப்படுத்தினார். இது போல் மூன்று முறை எதிரிகளைத் தடுத்து நிறுத்தினர். மூன்று ஆவேசமான தாக்குதலுக்குப் பின்னர் மாலை வாக்கில் மொகலாயப் படை களைத்துப்போய் துரத்துவதைக் கைவிட்டது. மார்வாருக்கு அஜித் சிங் நல்லமுறையில் 23 ஜூலை வாக்கில் கொண்டுசெல்லப்பட்டார். ரத்தோர் படையினருக்கு அவரைக் காப்பாற்றுவதே முக்கிய இலக்காக இருந்தது. மார்வார் பகுதியைக் கைப்பற்ற நினைத்த ஒளரங்கசீபின் திட்டம் அப்படியாக முறியடிக்கப்பட்டது. ஆனால் துர்கா தாஸின் திட்டங்களை முறியடிக்க ஒளரங்கசீப் ராஜதந்திரமாக ஒரு காரியம் செய்தார். இடையர் குலத்தைச் சேர்ந்த ஒருவருடைய குழந்தையை தன் அரண்மனைக்குக் கொண்டுவந்தவர், இந்தக் குழந்தைதான் ஜஸ்வந்த் சிங்கின் உண்மையான வாரிசு. துர்காதாஸ் அழைத்துச் சென்றிருப்பது போலி வாரிசு என்று சொன்னார். அதோடு மார்வாரின் ஆட்சிப்பதவியில் இரண்டு மாதங்கள் இருந்த இந்திர சிங்கை ஆட்சித் திறமை இல்லை என்று சொல்லிப் பதவி நீக்கம் செய்தார்.

மார்வாரை மீண்டும் கைப்பற்ற ஒரு பெரிய படையை அனுப்பினார். படுகொலைகளும் சூறையாடலும் அந்த சபிக்கப்பட்ட பிராந்தியத்தில் மொகலாயப் படைகளால் கட்டவிழ்க்கப்பட்டன.

பேரரசர் 25 செப்டம்பரில் அஜ்மீரில் முகாமிட்டார். அவருடைய மகன் முஹம்மது அக்பரின் தலைமையில் படைகள் முன்னேறிச் சென்று தாக்கின. அஜ்மீரின் ஃபெளஜ்தார் தஹாவர் கான் தளபதியாக இருந்து போரிட்டார். ராஜ் சிங் தலைமையின் கீழ் ரத்தோர்கள் புனித புஷ்கர் ஏரிக்கு அருகில் இருந்த வராஹ க்ஷேத்ரத்தின் முன்பாக மொகலாயப் படையைத் தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் தீவிரமாகப் போர் நடந்தது. இறுதியில் வீர மிகுந்த ரத்தோர் படை வீழ்ந்தது. அதன் பின்னர் பாலைவனப் பகுதிகள், மலைகள் ஆகிய இடங்களில் ஒளிந்துகொண்டு கெரில்லா தாக்குதல் முறையையே பின்பற்றினர்.

மார்வாரைப் பல மாவட்டங்களாகப் பிரித்த ஒளரங்கசீப் ஒவ்வொன்றிலும் ஒரு மொகலாய அதிகாரியை ஃபெளஜ்தாராக நியமனம் செய்தார் (அக்டோபர் இறுதிவாக்கில்). இந்த வலிமையான பேரரசப் படையை எதிர்த்து யாராலும் நிற்க முடியவில்லை. அந்தப் பிராந்தியம் முழுவதும் எதிரிகளின் கைகளில் சென்று சேர்ந்தது. சமவெளியில் இருந்த ஜோத்பூரும் பிற நகரங்களும் சூறையாடப்பட்டன. கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் அந்த இடங்களில் கட்டி எழுப்பப்பட்டன.

3.  உதய்பூரில் மஹாராணாவுடனான மொகலாயப் போர்

மேவாரை எளிதில் கைப்பற்றுவதற்கான முன்னோட்டமாகவே மார்வார் மீதான வெற்றி அமைந்தது. ஜெஸியா வரி விதிக்கப்பட்டதும் மஹாராணாவிடமும் இதைத் தன் பகுதி முழுவதிலும் அமல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. ரத்தோர்களுக்குத் துணையாக சிசோடியாக்கள் இம்முறை வந்திருக்காவிட்டால் பேரரசப் படை இந்த இரண்டு குலங்களையும் ஒரேயடியாக அழித்திருக்கும். ஒட்டுமொத்த ராஜஸ்தானும் சர்வாதிகாரியின் காலில் போட்டு நசுக்கப்பட்டிருக்கும். மஹாராணா ராஜ் சிங்கும் அவருடைய குலத்தினருக்கும் இந்த உண்மை புரிந்திருந்தது. அஜீத் சிங்கின் தாய் மேவார் ராணி. எனவே தன் குலத்தைச் சேர்ந்தவர் என்றவகையிலும் உதவி கேட்டவருக்கு உதவியாகவேண்டிய க்ஷத்ரிய தர்மத்தின்படியும் அஜித் சிங்கின் வாரிசுரிமை தொடர்பாக ராணியின் கோரிக்கையை அவரால் நிராகரிக்கமுடியவில்லை.

ராஜ் சிங் போருக்குத் தயாரானார். ஒளரங்கசீப் தனது பாணியில் முதல் தாக்குதலை ஆரம்பித்தார். ஏழாயிரம் வீரர்கள் ஹசன் அலிகான் தலைமையின் கீழ், பூர் பகுதியில் இருந்து புறப்பட்டு ராணாவின் பிராந்தியத்துக்குள் முதலில் சூறையாடியபடி, பிரதான மொகலாயப் படைக்கு வழியமைத்தபடி, முன்னேறிச் சென்றனர். ஐரோப்பிய துப்பாக்கி மற்றும் பீரங்கி வீரர்களைக் கொண்ட வலிமையான மொகலாயப் படையை எதிர்க்க ராஜபுத்திரர்களுக்கு முடிந்திருக்கவில்லை. எனவே ராணா, சம வெளிப்பகுதியில் இருந்த மக்களையும் அழைத்துக்கொண்டு மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தார். தலைநகர் உதய்பூர் கூட கைவிடப்பட்டது. மொகலாயர்கள் அதைக் கைப்பற்றியதும் அங்கிருந்த பிரமாண்ட ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர். உதய் சாகர் ஏரியில் இருந்த மூன்று ஆலயங்களையும் இடித்தனர்.

ஹஸன் அலி கான் உதய்பூரின் வட மேற்குப் பக்கம் இருக்கும் பகுதி வழியாக மலைப்பகுதியில் ஏறி ராஜபுத்திர படையை தேடிச் சென்றார். புதிதாக வந்த படைகளின் துணை மற்றும் மிகுதியாகக் கிடைத்திருந்த ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை தந்த உற்சாகத்தினால் மஹாராணாவின் படையை 22 ஜனவரியன்று ஹசன் அலி கான் தோற்கடித்தார். மலையில் இருந்த அவருடைய முகாமைக் கைப்பற்றி அங்கிருந்த உடமைகள் தானியங்கள் அனைத்தையும் பிடித்தார். உதய்பூர் பகுதியில் இருந்த 173 கோவில்களைத் தரைமட்டமாக்கினார்.

ஏற்கெனவே பிப்ரவரி இறுதிவாக்கில் சித்தூருக்கு வந்திருந்த ஒளரங்கசீப் அதைக் கைப்பற்றியதோடு அங்கிருந்த 63 கோவில்களைத் தரைமட்டமாக்கியிருந்தார். உதய்பூரில் இருந்து புறப்பட்டு அஜ்மீருக்கு 22 மார்ச்சில் சென்று சேர்ந்தார். முஹம்மது அக்பர் தலைமையில் ஒரு வலிமையான படை வந்து சித்தூர் பகுதியில் முகாமிட்டது. ஆனால், பேரரசின் காவல் படைகள் ராஜபுதன பகுதிகள் முழுவதிலும் பரவி இருந்தது. இதனால் திறம்பட அந்தப் பகுதியைத் தக்கவைக்க முடியவில்லை. அதோடு ராஜபுதனப் பகுதிகளில் மொகலாயருக்கு எதிரான பகைமை மெள்ள பெருகத் தொடங்கியிருந்தது.

மேவார் மற்றும் மார்வார் பகுதிகளில் இருந்த மொகலாயப் படைகள் இடையில் இருந்த ஆரவல்லி மலைத் தொடரினால் பிரிக்கப்பட்டிருந்தன. அந்த மலை உச்சியை ராணா தன் வசம் வைத்திருந்தார். மேலிருந்து திடீரென்று கீழே பாய்ந்து வந்து கிழக்குப் பக்கம் அல்லது மேற்குப் பக்கம் இருந்த மொகலாயப் படைகளின் மீது நினைத்த மாத்திரம் தாக்குதல் நடத்திவந்தார். தெற்கு மார்வார் பகுதியிலிருந்து சித்தூருக்கு வேத்நார், பேவார், சோஜத் மாவட்டங்களினூடாக நீண்ட தூரம் மொகலாயப் படைகளைச் சிரமப்பட்டு நகர்த்தவேண்டியிருந்தது.

உதய்பூரின் மேற்குப் பக்கத்தில் கமல்மீர் வரையிலும் ராஜசமுத்திர ஏரியின் தென் வசமாக சாலம்ப்ரா வரையிலும் இருந்த மேவார் மலைப்பகுதியானது உள் நுழையமுடியாத, வலிமையான வட்ட வடிவக் கோட்டைபோல் அமைந்திருந்தது. கிழக்கில் தேவபரி, வடக்கில் ராஜசமுத்திரம் மேற்கில் தேவசூரி ஆகிய மூன்று பகுதிகளில் வாசல்கள் கொண்ட கோட்டைபோல் இருந்தது. இவற்றின் வழியாக ராணாவின் படைகள் முழு வலிமையுடன் பாய்ந்து வந்து, தனித்துப் பிரிந்து இருக்கும் மொகலாயப் படைகளை எளிதில் தாக்க முடிந்தது. இதற்கு நேர்மாறாக மலைக்குக் கீழே இருந்த மொகலாயப் படை, மிகப் பெரிய பகுதியைக் காவல் காத்து நிற்க வேண்டியிருந்தது.

ஆரவல்லி மலைகளுக்குக் கிழக்கிலும் அஜ்மீருக்குத் தெற்கிலும் இருந்த மொகலாய எல்லைப்படைகளின் தலைமைப் பொறுப்பில் இளவரசர் அக்பர் நியமிக்கப்பட்டு சித்தூரில் முகாமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பரந்து விரிந்த பகுதியைக் காவல் காக்க அந்தப் படையால் முடிந்திருக்கவில்லை. ராஜபுத்திரர்கள் தமது பூர்விக பூமியில் இருந்தனர். எனவே அதன் மூலை முடுக்குகள் எல்லாம் அவர்களுக்கு நன்கு தெரியும். அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். மொகலாயர்கள் அந்தப் பகுதிக்கு அந்நியர்கள். அந்த மலைப் பகுதியில் பகைமை உணர்வு கொண்ட மக்களிடையே தமது படைகளை நகர்த்தவேண்டியிருந்தது.

மார்ச் மாதம் ஒளரங்கசீப் அஜ்மீருக்குத் திரும்பியதைத் தொடர்ந்து ராஜபுத்திரர்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. பலமுறை கீழிறந்து வந்து தாக்கினர். மொகலாயப் படையின் உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வண்டிகளை மறித்துத் தடுத்தனர். இதனால் மொகலாயப் படைகள் பாதுகாப்பற்றவையாகவும் மஹாராணாவின் படைகளைக்கண்டு அஞ்சுபவையாகவும் ஆகிவிட்டிருந்தன. மொகலாய எல்லைப்படைகளின் தலைமை வலுவிழந்தது. புதிதாக யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. மொகலாயப் படை எந்தவொரு மலைப்பாதையிலும் ஏறிச் சென்று சென்று போரிடத் தயாராக இல்லை. அடிவாரத்தில் முகாமுக்கு சற்று தொலைவுக்கு மட்டுமே சென்றவர்கள் அதைத்தாண்டி மேலேறிச் செல்ல மறுத்துவிட்டனர்.

அடுத்த மே மாத வாக்கில் இளவரசர் அக்பரின் படைகள், நள்ளிரவில் பாய்ந்து வந்து தாக்கிய ராஜபுத்திரர்களினால் பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. மஹாராணா மலைப் பகுதியில் இருந்து இறங்கிவந்து வேதநார் பகுதியில் சுற்றியபடி அஜ்மீருடனான அக்பரின் தகவல் பரிமாற்றங்களைத் தடுத்து நிறுத்தினார். மே மாத முடிவில் மொகலாயப் படைகளுக்குப் பெரிய இடி விழுந்தது. இளவரசர் அக்பரின் படையை ராணா திடீரென்று தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். சில நாட்கள் கழித்து மால்வாவில் இருந்து இளவரசரின் படைக்கு பன்ஜாராவினரால் கொண்டுவரப்பட்ட 10,000 காளை வண்டிகளை மறித்து அதில் இருந்த உணவுப் பொருள் முழுவதையும் கைப்பற்றினார். ராணாவின் படையின் ஒரு பிரிவினர் அவருடைய மகன் பீம் சிங் தலைமையில் விரைந்து வந்து மொகலாயப் படையின் பலவீனமான பகுதிகளைத் திடீரென்று தாக்கி வீழ்த்தினர். ’எங்கள் படைவீரர்கள் அச்சத்தில் உறைந்துபோயிருந்தனர்’ என்று அக்பர் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

இளவரசர் அக்பரின் தோல்விகளைக்கண்டு ஆத்திரமடைந்த ஒளரங்கசீப் அவரை மார்வார் பகுதிக்கு அனுப்பிவிட்டு சித்தூர் பகுதியை இன்னொரு மகனான இளவரசர் ஆஸம் வசம் ஒப்படைத்தார் (26, ஜூன்).

மேவார் மலைப்பகுதியை மூன்று திசையில் இருந்து தாக்குவது என்று மொகலாயர்கள் தீர்மானித்தனர். சித்தூர் பக்கமாக அல்லது கிழக்கு பக்கமாக தேவபரி கணவாய் மற்றும் உதய்பூர் வழியாக இளவரசர் ஆஸம் தாக்கவேண்டும். வடக்குப் பக்கமாக ராஜ சமுத்திர ஏரி வழியில் இளவரசர் முஸாம் தாக்கவேண்டும். மேற்குப் பக்கம் தேவசூரி கணவாய் வழியாக இளவரசர் அக்பர் தாக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு தாக்குதல்கள் தோல்வியில் முடிவடைந்தன.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *