Skip to content
Home » ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

12. சிவாஜியின் சூரத் தாக்குதல்

ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் சிவாஜி முன்னெப்போதும் செய்திராத அதிரடி சாகசம் ஒன்றைச் செய்தார். ஜன 6-10 நாட்களில் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் மிக அதிக செல்வ வளம் கொழிக்கும் பகுதியான சூரத் நகரில் நுழைந்து அந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். அப்போது அந்த நகரில் இருந்த கோட்டைக்கு மதில் சுவர் எதுவுமே இருந்திருக்கவில்லை. அங்கு இருந்த செல்வமோ மிக மிக அதிகம். மொகலாய சாம்ராஜ்ஜியம் விதித்த வரிகளே ஓர் ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் வருவாயை ஈட்டிக்கொடுத்தது (இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகளாக இருக்கும்).

சூரத் நகரம் தோட்டம், திறந்த வெளிகள் அனைத்தையும் சேர்த்து வெறும் நான்கு சதுர மைல் சுற்றளவு கொண்டது மட்டுமே. மக்கள் தொகை இரண்டு லட்சம். தெருக்கள் மிக மிகக் குறுகலானவை. குறுக்கும் மறுக்குமாக இருக்கும். ஊரில் ஏழைகளின் வீடுகள் மரத்தூண்கள், மூங்கில் தட்டியாலான சுவர்கள் கொண்டதாகவும் தரையெல்லாம் களிமண் பூச்சு கொண்டதாகவுமே இருந்தன. ஊரின் பெரும்பகுதியில் ஒரு தெருவில் செங்கலால் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றிரண்டு இருந்தாலே அதிகம். சில பகுதிகளில் எந்தத் தெருவிலும் செங்கல் கட்டடமே இருக்காது. ஆனால் செல்வந்த வணிகர்களின் வீடுகள் அரண்மனை போன்றவை.

5, ஜன, 1664 செவ்வாய் கிழமையன்று அதிகாலையில் சிவாஜி பெரும் படையுடன் தெற்கே 28 மைல் தொலைவில் இருக்கும் கந்தவி பகுதிக்கு வந்துவிட்டார். விரைவிலேயே சூரத்துக்குள் நுழையவிருக்கிறார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அங்கிருந்த மக்கள் குழந்தைகள், பெண்கள் அனைவரும் நதிகளைக் கடந்து அக்கரைக்குச் சென்று சேர்ந்துவிட்டனர். செல்வந்தர்கள் எல்லாம் கோட்டைக்குள் அதன் தளபதிக்கு கையூட்டு கொடுத்து தஞ்சம் தேடிக் கொண்டனர்.

சூரத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இனாயத் கான் தளபதிப் பொறுப்பில் இல்லாமல் வேறு முக்கிய பதவியில் இருந்தார். அவரும் ஊர் எப்படியானாலும் ஆகட்டும் என்று கோட்டைக்குள் தஞ்சம் தேடிக் கொண்டார். மொகலாய கஜானாவிலிருந்து 500 படைவீரர்களுக்கான பராமரிப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் முறையான படை ஒன்றை உருவாக்காமலே அந்தப் பணத்தைக் கையாடிவந்தார். மிகவும் கோழையாகவும் இருந்ததால் எதிர்த்துப் போரிடவோ போரில் உயிர் துறக்கவோ எல்லாம் அவர் தயாராக இருந்திருக்கவில்லை. சூரத்திலிருந்த ஃபிரெஞ்சு மற்றும் டச் வணிகர்கள் தமது வணிக மையங்கள், தொழில் மையங்களை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக்கொள்வது என்று முடிவெடுத்தனர்.

6, ஜன, 1664, புதன் கிழமை காலையில் 11 மணி வாக்கில் சூரத்துக்குள் நுழைந்து சிவாஜி கிழக்கு வாசல் அல்லது பர்ஹான்பூருக்கு கால் மைல் தொலைவில் ஒரு தோட்டத்தில் முகாமிட்டார். மராட்டியக் குதிரைப்படையினர் எதிர்ப்பே இருந்திராத கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நகருக்குள் நுழைந்தனர். வீடுகளில் இருந்தவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டனர். பல இடங்களுக்குத் தீ வைத்தனர். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நான்கு நாட்களும் இதுபோல் நகர் முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர். நகரில் மூன்றில் இரண்டு பங்கு எரிக்கப்பட்டது.

டச்சு வணிகக் கிடங்குக்கு அருகில் உலகிலேயே மிகவும் செல்வந்த வணிகரான பஹார்ஜி போராவின் அரண்மனை மாளிகை இருந்தது. அவருடைய சொத்து மதிப்பு 80 லட்ச ரூபாயாக (இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகளாக) இருந்தது. மராட்டியப் படை அந்த வீட்டில் இருந்த அனைத்தையும் கைப்பற்றியது. தரைத்தளம், சுவர்கள் என எங்கெல்லாம் செல்வம் மறைத்துவைக்கப்பட்டிருந்ததோ அனைத்தையும் எடுத்தனர். பின்னர் மாளிகைக்குத் தீவைத்தனர்.

ஆங்கிலேயர்களின் வணிகக் கிடங்குக்கு அருகில் இன்னொரு செல்வந்த வணிகரான ஹாஜி சையது பெய்க் என்பவரின் அரண்மனையும் அவருடைய வணிகப் பொருள்களின் கிடங்கும் இருந்தது. அவரும் அவை அனைத்தையும் விட்டுவிட்டு கோட்டைக்குள் தஞ்சமடைந்திருந்தார். அன்று மதியம், புதன் இரவு, வியாழன் மதியம் வரையில் அங்கிருந்த பெட்டிகள், அலமாரிகள் அனைத்தையும் உடைத்து அங்கிருந்த செல்வம் முழுவதையும் மராட்டியப்படை கைப்பற்றியது.

பிரிட்டிஷ் படையினர் தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்து ஒருமுறை தாக்குதல் நடத்தினர். அதையடுத்து வியாழன் மாலையில் மராட்டியப்படை அங்கிருந்து வேகவேகமாக விலகிச் சென்றது. சையது பெய்கின் வீட்டுக்கு மறு நாள் ஆங்கிலேயர்கள் காவலுக்கு வந்தனர். அதனால் அதிக இழப்பு தவிர்க்கப்பட்டது. மராட்டியப் படைக்கு இந்த தாக்குதலில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்தது.

செவ்வாய்க் கிழமை இரவில் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்த கோழை நிர்வாகியான இனாயத் கான் அந்த இடத்தில் ஒளிர்ந்துகொண்டு ஒரு மோசமான தந்திரமும் செய்தார். தனக்குக் கீழ் பணிபுரிந்த ஓர் இளைஞரை வியாழனன்று அனுப்பி சிவாஜியை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும் சிவாஜியைக் கொன்றுவிடலாம் என்பது அவருடைய திட்டம். அதன்படி பேச வந்திருந்த போது கொலைகாரன் பாய்ந்து சிவாஜியைத் தாக்க முற்பட்டபோது சிவாஜியின் மெய்க்காவலராக இருந்த மராட்டியவீரர் அவனுடைய கையை சட்டென்று வாளால் வெட்டி எறிந்தார். ஆனால் அந்த கொலை முயற்சியில் ஈடுபட்டவன் அதையும் பொருட்படுத்தாமல் சிவாஜியின் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர். அதில் சிவாஜி வென்றார்.

பத்தாம் தேதி ஞாயிறு அதிகாலையில் மொகலாயப் படை சூரத்தை நோக்கி வரும் செய்தி கிடைத்ததும் சிவாஜி தன் படையுடன் சூரத்திலிருந்து விரைந்து வெளியேறினார்.

மொகலாயப் பேரரசர் சூரத்தில் இருந்த வணிகர்களுக்குக் கருணை காட்டி, ஓராண்டு சுங்கவரியில் விலக்கு கொடுத்தார். வீரத்துடன் போரிட்ட ஆங்கிலேய, டச்சு வணிகர்களுக்கும் படையினருக்கும் இறக்குமதி வரியில் ஒரு சதவிகிதம் தள்ளுபடி கொடுத்தார்.

ஷாயிஸ்தா கான் பதவி விலக்கப்பட்டு ஜெய் சிங் வந்து சேரும் வரையான காலகட்டத்துக்கு இடைப்பட்ட 1664 ஆண்டில் மொகலாயர்களுக்குப் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட இளவரசர் முவாஸாம் ஒளரங்காபாத் அரண்மனையில் சுக போகங்களிலும் வேட்டை விளையாட்டுகளிலுமே நேரத்தைக் கழித்தார்.

13. சிவாஜிக்கு எதிராக ஜெய் சிங் – புரந்தர் கோட்டையைக் கைப்பற்றுதல்

ஷாயிஸ்தா கானின் தோல்வியும் சூரத் மீது நடத்தப்பட்ட மராட்டியத் தாக்குதலும் ஒளரங்கசீப் மற்றும் அவருடைய அரசின்மீது அவமானச் சின்னமாகப் பதிந்தன. தனது மிகவும் நம்பகமான மற்றும் திறமை மிகுந்த தளபதிகளான ஜெய் சிங் மற்றும் திலீர் கான் ஆகிய இருவரையும் அனுப்பி சிவாஜியை வீழ்த்தத் திட்டமிட்டார்.

மத்திய ஆசியாவில் பால்க் பகுதி தொடங்கி தக்காணத்தில் பீஜப்பூர் வரையிலும் மேற்கே கந்தகார் தொடங்கி கிழக்கே முங்கீர் வரையும் நடைபெற்ற பல்வேறு போர்களில் ஜெய் சிங் மொகலாயப் படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருக்கிறார். ஷாஜஹானின் நீண்ட நெடிய ஆட்சியின் கீழ் பணிபுரிந்தபோது இந்த ராஜபுத்திரத் தலைவர், போரில் ஈடுபடாத மற்றும் போர் வெற்றிகளினால் பரிசும் பதவி உயர்வுகளும் பெறாத வருடமே இல்லை என்று சொல்லலாம். அவருடைய ராஜ தந்திர நடவடிக்கைகளில் பெற்ற வெற்றிகள் போர்க்களத்தில் பெற்ற வெற்றிகளையும்விட மிக அதிகம்.

மொகலாயப் பேரரசருக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ… எப்போதெல்லாம் சிக்கலான விஷயத்தைச் சமாளிக்க வேண்டிவருகிறதோ அப்போதெல்லாம் அவர் நாடிய ஒரே நபர் ஜெய் சிங் மட்டுமே. எல்லையற்ற திறமைகளும் பொறுமையும் கொண்ட ஜெய்சிங் இஸ்லாமியர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். ராஜ் புதனா மொழி, துருக்கி, பாரசீகம், உருது என பல மொழிகளில் தேர்ந்தவர். எனவே ஆஃப்கானியர்கள், துருக்கியர், ராஜபுத்திரர்கள், ஹிந்துஸ்தானிகள் என தில்லி சுல்தானின் பிறைக்கொடியின் கீழான படையில் இருந்த வீரர்கள் அனைவரையும் வழிநடத்துவதில் ஜெய் சிங் சிறந்து விளங்க முடிந்தது. ஜெய்சிங்கின் தொலைநோக்குப் பார்வையும் அரசியல் சாணக்கியத்தனமும் இதமான மொழிகளும் நிதானமான வியூக வகுப்புகளும் முரட்டுத்தனமான, உயிர் பயமற்ற, விவேகமற்ற அதிரடியான தாக்குதல் முறைகளுக்கு முற்றிலும் மாறானது.

பீஜப்பூர் சுல்தானுடைய பயங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஜெய் சிங் சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டார். மொகலாயர்களுக்கு அடில் ஷா நேச சக்தியாகத் திகழ்ந்தால் பேரரசருக்குக் கட்டும் கப்பப் பணத்தைக் குறைக்கச் சொல்கிறேன்; அவருடைய கோபத்தையும் அதிருப்தியையும் தணிக்கிறேன் என்று அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அதன் மூலம் சிவாஜியிடமிருந்து அவரை விலகி நிற்கவும் செய்தார். சிவாஜியின் எதிரிகள் அனைவரையும் ஓரணியில் கொண்டுவரவும் ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்து அவரைத் தாக்கவும் பல வியூகங்கள் வகுத்தார்.

சிவாஜியின் அரசிலும் படையிலும் இருந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு மொகலாய அரச சபையில் பெரும் பதவிகளும் செல்வமும் தருவதாக ஆசை காட்டினார். இதில் மிகச் சொற்ப வெற்றியும் இவருக்குக் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரம் முழுவதையும் தன் கையில் குவித்துவைத்திருந்தார். போரில் வெற்றி பெறவேண்டுமென்றால் மொகலாயர்கள் இவரை நம்பியே ஆகவேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்கியிருந்தார்.

போர் என்றால் ஒரே ஒரு தலைவர்/தளபதிதான் இருக்கவேண்டும். களத்தில் நின்று போராடும் அந்தத் தலைவருக்கு முழு அதிகாரமும் தரவேண்டும். இல்லையென்றால் வெற்றி கிடைக்காது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். மொகலாயப் பேரரசரும் இவர் சொல்வதை முழுமையாக ஏற்று இவருக்கு ஆட்சி நிர்வாகத்திலும் இராணுவ-படையெடுப்பு விஷயங்களிலும் முழு சுதந்தரம் கொடுத்தார்.

ஜெய் சிங் தனது தலைமையகமாக சாஸ்வத் பகுதியை அமைத்துக்கொண்டார். பூனா பகுதிக்கு வலுவான காவல் ஏற்பாடுகள் செய்தார். லோகர் பகுதிக்கு எதிரில் ஒரு காவல் அரண் அமைத்து, ஜுனாருக்கு அருகில் இருந்த மொகலாய எல்லையின் வடக்கில் இருக்கும் பாதையைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தார். சாஸ்வத் பகுதிக்கு மேற்கிலும் தென் மேற்கிலும் உள்ள மலைகளுக்கு இடையே இருக்கும் மராட்டிய கிராமங்களைச் சூறையாட அதிவேகமாகத் தாக்கும் படையணியை உருவாக்கினார்.

31, மார்ச்சில் ஜெய் சிங் சாஸ்வதுக்கும் புரந்தருக்கும் இடையில் நான்கு மைல் தொலைவில் ஒரு நிலையான படைத்தளம் அமைக்கத் தீர்மானித்தார். அதன் பின்னர் புரந்தர் கோட்டையை முற்றுகையிட்டார்.

சாஸ்வத் பகுதிக்கு தெற்கே ஆறு மைல் தொலைவில் புரந்தர் பகுதியின் மலை உயர்ந்து எழுகிறது. அதன் உச்சி, கடல் மட்டத்திலிருந்து 4564 அடி உயரத்தில் இருக்கிறது. சமதளத்திலிருந்து 2500 அடி உயரம் கொண்டது. அது உண்மையில் இரட்டைக் கோட்டை போன்றது. வஜ்ரகர் என்ற பெயரிலான வலுவான இன்னொரு மலைத் தொடர் தனியாகத் தென் கிழக்கில் நீள்கிறது.

மேல் பகுதியில் இருக்கும் மலைக் கோட்டை நான்கு திசைகளிலும் செங்குத்தாக இருக்கும். கீழ்ப் பகுதிக் கோட்டை அல்லது மாச்சி கோட்டை அதிலிருந்து 300 அடி கீழே இருக்கிறது. மலை முழுவதும் நான்கு மைல் அளவுக்குச் சுற்றிச் சுற்றிச் செல்லும் பாறை முகடுகளைக் கொண்டதாக இருக்கிறது. வடக்குப் பக்கத்தில் இந்த பாறை முகடு மிகப் பெரிய கூரைத் தளம் போல் விரிகிறது. கோட்டைத் தடுப்புச்சுவர்கள், காவல் அரண்கள், கொத்தளங்கள் கொண்டதாக அது இருக்கிறது. இந்தக் கூரை போன்ற பகுதிக்குக் கிழக்கில் பைரவ் குண்ட் என்ற குன்று இருக்கிறது.

மேல் கோட்டையின் செங்குத்தான வட மேற்குப் பகுதி கோபுரத்திலிருந்து (காத் காலா என்று அழைக்கப்படுகிறது) ஆரம்பித்து கிழக்குப் பக்கம் ஒரு மைல் தொலைவுக்கு குறுகலான மலைத் தொடராக நீண்டு சென்று சிறிய சம தள பீடபூமிப்பகுதியில் சென்று முடிகிறது. அது கடல் மட்டத்திலிருந்து 3618 அடி உயரத்தில் இருக்கிறது. அங்கு உச்சியில் ருத்ரமால் கோட்டை (இப்போது வஜ்ரகர் என்று அழைக்கப்படுகிறது) அமைந்திருக்கிறது. இந்த வஜ்ரகர், மாச்சி அல்லது புரந்தரின் கீழ் கோட்டையின் வட மற்றும் முக்கியமான பகுதியைக் கண்காணிக்க உதவுவதாக இருக்கிறது. ஜெய் சிங் இந்த வஜ்ரகர் பகுதியை முதலில் கைப்பற்றத் தீர்மானித்தார்.

மொகலாயப் படையின் வெடி குண்டுகள் வஜ்ரகர் கோட்டையின் அடித்தளங்களை முதலில் சிதைத்தன. 13, ஏப்ரல் நள்ளிரவில் திலீர் கானின் படை புயல் போல் நுழைந்து அங்கிருந்த மராட்டியப் படைகளைப் பின்னால் இருந்த மறைவிடத்துக்கு விரட்டியது. மறு நாள் வெற்றி முகத்தில் இருந்த மொகலாயர்கள், கோட்டை உள் பகுதி, மற்றும் கொத்தளங்களைக் கைப்பற்றி துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி மாலை (14, ஏப்ரல்) வாக்கில் அவர்களைச் சரணடைய வைத்தனர்.

வஜ்ரகர் கோட்டையைக் கைப்பற்றியதென்பது புரந்தர் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது. திலீர் கான் இப்போது புரந்தர் கோட்டைநோக்கி முன்னேறிச் சென்றார். ஜெய் சிங் இதே நேரத்தில் மராட்டிய கிராமங்களில் புகுந்து தாக்கத் தொடங்கினார். மொகலாயப் படை இங்கு முற்றுகையிட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் மராட்டிய பகுதிகள் முழுவதிலும் புகுந்து தாக்குதல் செய்யும் அளவுக்கு மிகப் பெரியது என்று சிவாஜிக்கும் பீஜப்பூர் சுல்தானுக்கும் கடிதம் எழுதி எச்சரிக்கும்படி பேரரசருக்கு கடிதம் அனுப்பினார்.

முற்றுகையிட்டிருந்த படைகளில் சிலரைத் திருப்பி அனுப்பவும் செய்தார். அங்கிருந்த சில அதிகாரிகள், படைவீரர்கள் அவருக்குக் கீழ்படிந்து நடக்கவில்லை. அவர்கள் அங்கு இருப்பதால் எந்தவொரு பலனும் இல்லை. பெரும் பிரச்னைதான் என்று திருப்பி அனுப்பினார். தாவுத் கான் குரேஷியை பிரதான வாசல் அல்லாத கோட்டையின் ரகசிய வாசல் பகுதியில் காவலுக்கு நியமித்தார். ஆனால் அந்த ரகசிய வாசல் வழியாக சில மராட்டியர்கள் அவரால் எதிர்க்கப்படாமல் ஊடுருவிவிட்டதாகச் சில நாட்கள் கழித்துத் தெரியவந்தது. ஒளரங்கசீபின் படையில் இருந்த சுபாகரன் புந்தேலாவும் தன் காவல் பணியைச் சரியாகச் செய்யவில்லை. சிவாஜிக்கு உதவுவதையே மிகப் பெரிய கடமையாகக் கருதினார்.

முற்றுகையிலிருந்து விடுபட மராட்டியர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஜெய் சிங்கை அவர்களால் வீழ்த்தமுடியவில்லை.

வஜ்ரகர் கோட்டையைக் கைப்பற்றியபின்னர் திலீர் கான் இணைப்பு மலைத் தொடர்வழியாகச் சென்று புரந்தரின் மாச்சி கீழ் கோட்டையை முற்றுகையிட்டார். கோட்டையின் வடகிழக்குப் பகுதியில் இருந்த கத்கலா கொத்தளப் பகுதியை நோக்கிப் பல பதுங்கு குழிகள் அமைத்தார்.

மே மாதவாக்கில், கோட்டை கோபுரத்தின் காலடி வரை மொகலாயர் பதுங்குகுழிகள் அமைத்துமுடித்தனர். அங்கிருந்து கோட்டை கோபுரத்தை வெடி வைத்துத் தகர்த்தனர். கொத்தளங்களில் இருந்த மராட்டியர்கள் எண்ணெயும் எரி அம்புகளுமாக வீசித் தாக்கினர். வெடி மருந்துப் பொருட்களின் பொதிகளை அந்த நெருப்பில் வீசி எறிந்தனர். வெடி குண்டுகளையும் வீசித்தாக்கினர். பெரிய பெரிய கற்களை உருட்டி விட்டனர். அது மொகலாயப் படை முன்னேறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தியது.

ஜெய் சிங் மிகப் பெரிய மரத்தடிகள், பலகைகளைக் கொண்டு உயரமான மேடைகளை அமைத்து அதில் பீரங்கிகளைப் பொருத்தினார். பீரங்கிகளை இயக்குபவர்களும் துப்பாக்கி வீரர்களும் அதில் நிறுத்தப்பட்டனர். மே, 30-ல் சூரியன் அஸ்தமிக்க ஓரிரு மணி நேரம் முன்பாக சில ருஹேலா படை வீரர்கள் திலீர் கானிடம் எதுவும் சொல்லாமல் கோட்டையைத் தாக்கினர். மராட்டிய வீரர்கள் மிக அருகில் நெருங்கிவந்து கடுமையாகப் போரிட்டனர். கடைசியில் தோற்று கறுப்பு நிறக் கோட்டை கோபுரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டனர். இரண்டு நாட்களில் அங்கிருந்தும் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

அப்படியாக ஐந்து கோட்டைக் கோபுரங்களும் கீழ் கோட்டையின் ஒரு காவல் தடுப்பரணும் மொகலாயர் வசம் சிக்கின. புரந்தர் பகுதி முழுவதுமாக அழிந்ததுபோலானது.

இந்த முற்றுகையின் ஆரம்ப கட்டத்தில், வீரம் நிறைந்த கிலாதர் முரார் பாஜி பிரபு 700 தேர்ந்த படைவீரர்களுடன் திலீர் கானின் படை மீது தாக்குதல் நடத்தினார். ஐயாயிரம் ஆஃப்கனியர்களும் பிற குலங்களைச் சேர்ந்த இன்னும் பல வீரர்களுமாக திலீர் கானின் படையினர் அந்தக் கோட்டை மேல் ஏற முயற்சி செய்திருந்தனர். முரார் பாஜியும் அவருடைய மாவெல் வீரர்களும் 500 பதான்களையும் ஏராளமான பாலியா காலாட்படையினரையும் வெட்டி வீழ்த்தினர். அறுபது விசுவாசமான வீரர்கள் முரார் பாஜியின் தலைமையில் முன்னேறிச் சென்று திலீர் கானை தாக்க முயன்றனர். அவருடைய துணிச்சலைப் பார்த்து வியந்த திலீர் கான் அவரைச் சந்தித்து அவருக்கு தன் படையில் மிக முக்கியமான பதவி தருவதாக ஆசைகாட்டினார். முரார் அதை மறுத்து அவர் மீது தாக்க முற்பட்டார். திலீர் கான் உடனே துப்பாக்கியால் சுட்டு அவரை வீழ்த்தினார். 300 மாவெல் குல வீரர்களும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் கோட்டைக்குப் பின்வாங்கினர்.

ஜூன் 2-ல் மொகலாயப் படை வெற்றி பெற்றது. கீழ்க் கோட்டை வீழ்ந்ததென்பது சிவாஜிக்கு பெரிய இடியாக அமைந்தது. புரந்தர் பகுதியில் பல மராட்டிய அதிகாரிகள், தளபதிகளின் குடும்பங்கள் அடைக்கலம் புகுந்திருந்தன. அந்தக் கோட்டை பிடிக்கப்பட்டால் அவர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டு மிகப் பெரிய அவமானத்தையும் அழிவையும் சந்திக்க நேரும். எனவே மொகலாயப் பேரரசுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜெய் சிங்கை வந்து சந்திக்க சிவாஜி சம்மதித்தார்.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *