Skip to content
Home » ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

14. புரந்தர் உடன்படிக்கை – 1665

14, ஜூன், காலை 9 மணி அளவில் ஜெய் சிங் புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட தன் அவைக் கூடாரத்தில் இருந்தபோது சிவாஜி அவரைச் சந்திக்க வந்தார். அவரை முழு மரியாதை கொடுத்து ஜெய் சிங் வரவேற்றார்.

நீடித்த நிரந்த அமைதிக்கான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் நள்ளிரவு வரை முடிவற்ற பேரங்களில் ஈடுபட்டன.

‘இறுதியாக நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பின் இந்த தீர்மானத்துக்கு வந்தோம்: (1) சிவாஜியின் 25 கோட்டைகளும், ஆண்டுக்கு நான்கு லட்சம் வருமானம் தந்த அவற்றின் நிலங்களும் எல்லாம் மொகலாயப் பேரரசுடன் இணைக்கப்படவேண்டும். (2) ராஜ்கர் உட்பட ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் வரும் 12 கோட்டைகள் , மொகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக நடந்துகொள்வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சிவாஜியிடமே விடப்படும்’.

மொகலாயப் பேரரசரை தில்லியில் வந்து சந்திக்க வேண்டியதிலிருந்து விலக்கு கொடுக்கும்படி சிவாஜி கேட்டுக் கொண்டார். தன் பிரதிநிதியாக மகனையும் 5000 குதிரைப் படை வீரர்களையும் (ஜாஹிர் – கப்பம் என்ற வகையில்) மொகலாயப் பேரரசர் அல்லது தக்காண மொகலாய நிர்வாகியின் சேவைக்கு நியமிப்பதாக ஒப்புக்கொண்டார்.

புரந்தர் ஒப்பந்தத்தின்படி மொகலாயப் பேரரசரிடம் ஒப்படைக்கப்பட்ட கோட்டைகளின் விவரம்:

தக்காணத்தில்: 1. ருத்ரமாலா அல்லது வஜ்ரகர், 2. புரந்தர். 3. கோண்டானா 4. ரோஹிரா, 5. லோஹர், 6. ஈஸாகர், 7.தன்கி, 8. திகோணா, 9. காத்-கலா, கோண்டாவுக்கு அருகில், கொங்கன் பகுதியில் : 10. மஹூலி, 11.முரஞ்சன், 12. கீர் துர்க், 13. பந்தர் துர்க், 14. துல்ஸிகுல், 15. காய்கர் அல்லது அங்கோலா 16. நார் துர்க், 17. மர்க் கர் அல்லது அத்ரா, 18. கோஹஜ், 19. பசந்த், 20. நாங், 21. கர்னாலா, 22.சோனாகர், 23. மன்கர்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் நீங்கலாக மொகலாயர்களுடன் வேறொன்றும் முன்வைக்கப்பட்டது: கொங்கன் பகுதியில் ஆண்டுக்கு நான்கு லட்சம் வருமானம் தரும் தெற்குப் பகுதி நிலங்கள் மற்றும் ஐந்து லட்சம் வருமானம் தரும் வடக்கு பகுதி நிலங்கள் (பாலாகாட், பீஜாபுரி) ஆகியவை பேரரசரால் எனக்குத் தரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பீஜப்பூர் சுல்தானகத்தை மொகலாயப் பேரரசு வென்றதும் இந்தப் பகுதிகள் எனக்குத் தரப்படும் என்று பேரரசின் ஃபர்மான் ஒன்று உறுதியளித்திருக்கிறது. அது அமல்படுத்தப்படும்பட்சத்தில் நான் பேரரசருக்கு 13 ஆண்டு தவணைகளில் 40 லட்சம் பணம் கட்ட சம்மதிக்கிறேன்.

இந்தப் பகுதிகளை பீஜப்பூர் தளபதிகளின் பிடியில் இருந்து சிவாஜி தன் படையைப் பயன்படுத்தி மீட்டெடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிவாஜிக்கும் பீஜப்பூர் சுல்தானுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும்வகையில் ஒரு தந்திரத்தை ஜெய் சிங் செய்திருப்பதிலிருந்து அவருடைய சாதுரியத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

மறுநாள், இந்த ஒப்பந்தத்தின் பேரில் (12 ஜூன்) ஏழாயிரம் ஆண்கள், பெண்கள் (4000 பேர் படைவீரர்கள்) புரந்தரில் இருந்து வெளியேறினர். மொகலாயர்கள் அந்தக் கோட்டைக்குள் புகுந்தனர். உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பிற உடமைகள் அனைத்தும் மொகலாயப் பேரரசுக்கு சொந்தமாகின. மராட்டியர்கள் ஒப்படைத்த கோட்டைகளை நிர்வகிக்க சிவாஜியின் ஆட்களுடன் மொகலாய அதிகாரிகளும் அனுப்பப்பட்டனர்.

15. ஆக்ராவில் ஒளரங்கசீபை சிவாஜி சென்று சந்தித்தல், 1666

பீஜப்பூர் படையெடுப்பின் இறுதியில் ஜெய் சிங், மொகலாயப் பேரரசரின் முன்பாக சிவாஜியை அழைத்துச்செல்ல முடிவுசெய்திருந்தார். அங்கு சென்றால் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்று ஆயிரம் ஆசை வார்த்தைகள் சொல்லி ஆக்ராவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் சிவாஜி வெகுவாகத் தயங்கினார். அஃப்சல் கானுடனான சந்திப்பு எதில் சென்று முடிந்தது என்பது தெரிந்திருந்ததால் சிவாஜியும் அவருடைய நண்பர்களும் மிகவும் எச்சரிக்கையுடனே இருந்தனர். ஆனால், ஒரு ஹிந்துவாக என்னவெல்லாம் சத்தியங்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சிவாஜிக்கு எந்தவொரு ஆபத்தும் வராது என்று உறுதிமொழி கொடுத்தார் ஜெய் சிங்.

வட இந்தியாவில் தான் இல்லாத நேரத்திலும் தன் அரசபையில் நிர்வாகம் முறைப்படி நடக்க சிவாஜி தொலைநோக்குப் பார்வையுடன் முன்னெடுத்திருந்த நிர்வாக விஷயங்கள் அவருடைய அபார திறமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. தான் இல்லாத நேரங்களில் தன்னிடமிருந்து எந்தவொரு உத்தரவு அல்லது வழிகாட்டுதலுக்கும் காத்திருக்கவேண்டாம் என்று உள்ளூர் பிரதிநிதிகளுக்கு முழு சுதந்தரம் தந்திருந்தார். அவருடைய தாய் ஜீஜா பாய் சிவாஜியின் சார்பாக இருந்து விஷயங்களைக் கவனித்துக் கொண்டார்.

5, மார்ச், 1666-ல் சிவாஜி தன் மூத்த மகன் சாம்பாஜி, ஏழு அதி நம்பகமான அதிகாரிகள், 4000 படை வீரர்களுடன் வட இந்திய பயணத்தை ஆரம்பித்தார். மே, 9-ல் ஆக்ராவின் புறநகர் பகுதிக்கு சென்று சேர்ந்தார். அங்குதான் ஒளரங்கசீப் அப்போது முகாமிட்டிருந்தார்.

மே 12-ல் சந்திப்புக்கான நாள் குறிக்கப்பட்டது. பேரரசரின் ஐம்பதாவது பிறந்தநாள் (சந்திர நாள்காட்டி). இந்த மிக முக்கியமான நிகழ்வுக்காக ஆக்ரா கோட்டை வெகுவாக அலங்கரிக்கப்பட்டது. இந்த திவான் – இ – அம் பகுதிக்குள் சிவாஜியையும் சாம்பாஜியையும் குமார் ராம் சிங் அழைத்துச் சென்றார். சிவாஜியின் சார்பில் 1500 தங்கக் கட்டிகள் பேரரசருக்கு நஸர் ஆக (பரிசாக) தரப்பட்டது. ரூ 6000 நிஸாராகவும் (காணிக்கையாகவும்) தரப்பட்டது.

‘வாருங்கள் ராஜா சிவாஜியே’ என்று உரத்த குரலில் கோஷமிட்டு வரவேற்றார். சிவாஜியை அரியணைக்கு வெகு அருகில் வரை அழைத்துச் சென்றனர். மூன்று முறை சலாம் வைத்தார். பேரரசரின் கண்ணசைப்பின் பேரில் மூன்றாம் நிலை அதிகாரிகள் வரிசையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு அழைத்துச் சென்றனர். சிவாஜி அங்கிருப்பதையே மறந்ததுபோல் அரசபை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.

இதை சிவாஜி எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஜெய் சிங்குடன் நடைபெற்ற எண்ணற்ற உரையாடல்களில் இருந்து இப்படி நடக்கும் என்று நினைத்திருக்கவும் இல்லை. ஐயாயிரம் உதவிநிலைப் படைத் தலைவர்களில் அவர் ஒருவர் என்பதை ராம் சிங்கிடமிருந்து தெரிந்துகொண்டார். என்ன… என் ஏழு வயது மகன் பேரரசரை வந்து பார்க்கவெல்லாம் செய்யாமல் ஐந்து ஆயிரம் வீரர்கள் கொண்ட படையில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறான். எனக்குக் கீழ் பணிபுரியும் தளபதி ஐந்தாயிரம் பேருக்குத் தலைவன். நானோ அனைத்து நிபந்தனைகளுக்கும் சேவைகளுக்கும் சம்மதித்து இவ்வளவு தூரம் பயணம் செய்து அதே கடைநிலைப் பதவியைப் பெறுவதற்கா வந்திருக்கிறேன்.

எனக்கு முன்பாக இருப்பது யார் என்று ராம் சிங்கிடம் சிவாஜி மெள்ளக் கேட்டார். மஹாராஜா ஜஸ்வந்த் சிங் என்று பதில் சொன்னார். அதைக் கேட்டதும் சிவாஜி ஆத்திரத்தில் கத்தினார். ‘என்ன… என் வீரர்களிடம் புறமுதுகிட்டு ஓடியவன். அவனுக்குப் பின்னால் நான் நிற்பதா? இதற்கு என்ன அர்த்தம்’.

மிகப் பெரிய அளவில் அவமானப்படுத்தப்பட்டதைப் புரிந்துகொண்ட சிவாஜி உரத்த குரலில் ராம் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படியான அவமானத்துடன் உயிர் வாழ்வதைவிட இறந்தேவிடலாம் என்று வருந்தினார். ராம் சிங் எவ்வளவோ அமைதிப்படுத்தப் பார்த்தார். முடியவில்லை. அவமானமும் ஆத்திரமும் கசப்பும் ஒன்று சேர சிவாஜி மயங்கி விழுந்தார். அரச் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. பேரரசர், ‘அங்கே என்ன சத்தம்’ என்று கேட்டார்.

‘புலி ஒரு காட்டு விலங்கு. இதுபோன்ற அரச சபையின் சூடு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது’ என்று ராம் சிங் நாசூக்காகச் சொன்னார். ‘அவர் தக்காணப் பகுதியைச் சேர்ந்தவர். அரச சபையின் நடைமுறைகளும் நாகரிகங்களும் தெரியாது’ என்றும் சொன்னார்.
உடல் நிலை மோசமடைந்த சிவாஜியை அங்கிருந்து அழைத்துச் செல்லும்படி பெரியமனதுடன் பேரரசர் உத்தரவிட்டார். அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று முகத்தில் பன்னீர் தெளித்து நினைவு திரும்பச் செய்தனர். அரச சபைநிகழ்ச்சிகள் முடியும்வரை அவர் அங்கு காத்திருக்கவேண்டாம். தன்னுடைய அறைக்குப் போய்க்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார் ஒளரங்கசீப்.

அங்கிருந்து திரும்பி வந்த சிவாஜி கொடுத்த வாக்குறுதியை ஒளரங்கசீப் காப்பாற்றவில்லை; இதற்குப் போரிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படையாகக் கடிந்துகொண்டார். அது பேரரசருக்குத் தெரியவந்தது. மராட்டியத் தலைவர் மீதான அவ நம்பிக்கை அதிகரித்தது. நகரத்துக்கு வெளியே ஜெய்ப்பூர் மாளிகையில் சிவாஜியைத் தங்கவைத்து அவரைக் கண்காணிக்கும்படி ராம் சிங்குக்கு உத்தரவிட்டார். சிவாஜிக்கு அரச சபைக்குச் செல்லும் அனுமதியும் மறுக்கப்பட்டது. சிவாஜிக்கு அங்கு தான் சிறை வைக்கப்பட்டிருப்பது புரிந்தது. தன்னை விடுவிக்கும்படி அமைச்சர்களுக்கும் பேரரசருக்கும் விடுத்த கோரிக்கைகளுக்கெல்லாம், ‘கொஞ்சம் பொறுங்கள்… நீங்கள் கேட்பதுபோலவே சீக்கிரமே செய்துவிடுகிறோம்’ என்றே பதில்கள் வந்தன. ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது.

ஆக்ராவின் காவல் படைத் தலைவன் ஃபுலாத் கான் சிவாஜி தங்க வைக்கப்பட்ட மாளிகையைச் சுற்றி பீரங்கி, துப்பாக்கிகள் கொண்ட பெரிய படை ஒன்றைக் காவலுக்கு நிறுத்தினார். இப்போது சிவாஜி நிஜமாகவே சிறைவைக்கப்பட்டார்.

ஒளரங்கசீப்- சிவாஜி சந்திப்பு இப்படியானதை ஜெய் சிங் உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை. சிவாஜியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. ராஜபுத்திரத் தலைவரான அவர் செய்துகொடுத்த சத்தியம் பொய்யாகிவிடக்கூடாதென்று ராம் சிங்கிடம் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தார்.

16. ஆக்ரா கோட்டையிலிருந்து சிவாஜி தப்பித்தல்

சிறையில் இருந்து சிவாஜி தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தித் தப்பிக்கத் தீர்மானித்தார். தன்னுடன் வந்த மராட்டியப் படை தக்காணத்துக்குத் திரும்பிச் செல்ல அனுமதி பெற்றார். தனது ஆதரவாளர்களுக்கு எந்தக் கெடுதலும் வராது என்பதை உறுதி செய்துகொண்டபின்னர், தப்பிச் செல்வது எப்படி என்று திட்டமிட ஆரம்பித்தார். நோய்வாய்ப்பட்டவர் போல் நடித்தார். ஆலயங்களில் தன் பெயரில் பிரார்த்தனை செய்யச் சொல்லி பிராமணர்கள், துறவிகள், அரச சபையினர் சிலர் ஆகியோருக்கு இனிப்புகள், பழங்கள் என அவர் வீட்டில் இருந்து அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டார். இவையெல்லாம் மிக மிகப் பெரிய கூடைகளில் தோளில் காவடி போல் மாட்டி, கொண்டுசெல்லப்பட்டன. காவலர்கள் ஆரம்பத்தில் சில நாட்கள் இந்தக் கூடைகளை நன்கு பரிசோதனை செய்து அனுப்பினர். பிறகு சோதனை செய்யாமலே அனுப்ப ஆரம்பித்தனர். இந்தத் தருணத்துக்குத்தான் சிவாஜி காத்திருந்தார்.

19, ஆகஸ்ட் மதியம் மிகவும் காய்ச்சலாக இருப்பதாகவும் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் அவரை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் காவலர்களுக்குச் செய்தி அனுப்பினார். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் ஹிராஜி பர்சந்த் உருவத்தில் கிட்டத்தட்ட அவரைப் போலவே இருப்பார். அவரைத் தனக்குப் பதிலாக மெத்தையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுக்கவைத்தார். போர்வைக்கு வெளியே வலது கை மட்டுமே தெரியும்படியாக வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவாஜி தன் தங்க கங்கணத்தை அதில் மாட்டிவிட்டார். சிவாஜியும் அவருடைய மகன் சாம்பாஜியும் இரண்டு கூடைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். மாலையில் அந்தக் கூடைகள் வழக்கம்போல் அனுப்பப்பட்டன. காவலர்கள் அன்றும் சோதித்துப் பார்க்கவில்லை. இனிப்புகள், பூக்கள், பழங்கள் முதலான கூடைகளுக்கு இடையே இவர்கள் இருவர் ஒளிந்திருந்த கூடையும் காவல் கண்களில் இருந்து தப்பி வெளியே சென்றன.

ஊருக்கு வெளியே இந்தக் கூடைகள் வைக்கப்பட்டன. சுமந்துவந்தவர்கள் அங்கிருந்து சென்றதும் சிவாஜியும் அவருடைய மகனும் இருளில் வெளியேறி ஆக்ராவில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்த கிராமத்துக்குச் சென்றனர். அங்கு நீராஜி ராவ்ஜி (சிவாஜியின் பிரதான நீதிபதி) குதிரைகளுடனும் வேறு சிலருடனும் காத்திருந்தார். என்ன செய்யவேண்டும் என்று விரைவாகப் பேசி முடிந்த பின்னர் அவர்கள் பிரிந்து சென்றனர். சிவாஜி, சாம்பாஜி, நீராஜி ராவ்ஜி, தத்தா த்ரையம்க், ரகுமித்ரா என்ற கடைநிலை ஜாதி மராட்டியர் என அனைவரும் விபூதி பட்டை பூசிக்கொண்டு துறவிகள் போல் மதுரா நோக்கிச் சென்றனர். மற்றவர்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினர்.

இதனிடையில் ஆக்ராவில் படுக்கையில் சிவாஜிபோல் படுத்திருந்த ஹிராஜி மறு நாள் மதியம் வரையிலும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே இல்லை. காலையில் அவருடைய அறைக்கு வந்து வெளியில் இருந்து எட்டிப் பார்த்த காவலர்கள் சிவாஜியின் கங்கணம் தூங்குபவரின் கையில் இருப்பதையும் அருகில் ஒரு பணியாளர் அமர்ந்து நோயாளியின் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாக திருப்தியுடன் போய்விட்டார்கள். மாலை மூன்று மணிவாக்கில் தன் பணியாளருடன் அறையைவிட்டு வெளியே வந்த ஹிராஜி, காவலர்களைப் பார்த்து, ‘சிவாஜி கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது. யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

மெள்ள மெள்ள காவலர்களின் சந்தேகம் அதிகரித்தது. மாளிகை திடீரென்று கைவிடப்பட்டதுபோலானது. வழக்கம்போல் சிவாஜியைச் சந்திக்கவரும் ஒருவருமே வரவில்லை. மாளிகையில் இருமலோ, தும்மலோ என எந்தவொரு சப்தமும் கேட்கவில்லை. அறைக்குள் நுழைந்து பார்த்தனர். ‘புலி தப்பிவிட்டது’. தலைமைக் காவலர் ஃபுலாத் கானிடம் ஓடோடிச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். அவர் அதை பேரரசரிடம் சென்று சொல்லும்போது சிவாஜி ஏதோ மந்திர வித்தை செய்து தப்பிவிட்டார் என்று சொல்லித் தங்களைக் காப்பாற்றிக்கொண்டார். அவரைத் தேடிப் பிடிக்கத் தொடங்கியவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 24 மணி நேர தொலைவுக்கு சிவாஜி தப்பிச் சென்றுவிட்டிருந்தார்.

ராம் சிங்கின் உதவியினால்தான் சிவாஜி தப்பியிருக்கிறார் என்று ஒளரங்கசீப் சந்தேகப்பட்டார். முதலில் அவரை அரச சபைக்கு வருவதைத் தடுத்தார். அதன் பின் அவருடைய பதவியையும் சம்பளத்தையும் பறித்தார்.

பிறவியிலேயே சாணக்கியத்தனம் மிகுந்திருந்த சிவாஜி மஹாராஷ்டிராவுக்குச் செல்லும் பாதைக்கு நேர் எதிரான பாதையில் தப்பிச் சென்றதன் மூலம் அவரைத் தேடிவந்தவர்களுக்குக் கிடைக்காமல் ஊர் திரும்பினார். ஆக்ராவுக்கு தென் மேற்கில் மால்வா, கந்தேஷ் அல்லது குஜராத் வழியாகச் சென்று அங்கிருந்து கிழக்குப் பக்கமாக மதுரா, அலஹாபாத், பனாரஸ், கயா வழியாகச் சென்று பின் தென்மேற்காக கோண்ட்வானா, கோல்கொண்டா வழியாகச் சென்றார். இந்த சாகசப் பயணத்தில் சில நேரங்களில் மயிரிழையில் தப்பியும் சிவாஜி 20, நவ, 1666-ல் ராஜ்கர் வந்து சேர்ந்தார்.

ஆக்ராவில் இருந்து திரும்பியபின் தக்காணத்தில் அரசியல் களம் முற்றிலுமாக மாறியிருப்பதைப் பார்த்தார். மொகலாயப் பிரதிநிதி ஜெய் சிங்கினால் மராட்டியர்களை முன்புபோல் வெற்றிகொள்ள முடிந்திருக்கவில்லை. முதுமையினாலும், உள் நாட்டுக் குழப்பங்களினாலும் மனச்சோர்வுகளினாலும் தளர்ந்திருந்தார். அதோடு பீஜப்பூர் மீதான படையெடுப்பில் தோற்றதால் ஒளரங்கசீபின் அதிருப்திக்கும் உள்ளான மீர்ஸா ராஜா ஜெய் சிங் 2, ஜூலை, 1667-ல் பர்ஹான்பூரில் உயிர் துறந்தார். மே மாத வாக்கிலேயே இவரிடமிருந்த நிர்வாகப் பொறுப்பு இளவரசர் முவாஸ்மிடம் தரப்பட்டிருந்தது.

சுகபோகங்களில் அதிக அக்கறை காட்டிய இளவரசர் தக்காணத்தின் பொறுப்பில் வந்ததென்பதும் சிவாஜியின் நண்பர் போன்ற ஜஸ்வந்த் சிங் அதிகாரத்துக்கு (மே 1667) வந்ததும் சிவாஜிக்கு மொகலாயர் மீதான பயங்களில் இருந்து பெரிய விடுதலையைத் தந்தது. 1667 அக்டோபர் வாக்கில் இளவரசர் முவாஸமுக்கு உதவியாக திலீர் கான் வந்தார். எனினும் அதனால் பேரரசப் படையின் வலிமைக்குச் சாதகமாக எதுவும் இருந்திருக்கவில்லை. தன் அப்பா ஒளரங்கசீபின் அவையில் திலீர் கானுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் இளவரசர் முவாஸமுக்குப் பொறாமையையே தந்தது. திலீர் கான் இவருக்கு அடங்கி நடக்காமல் செயல்பட்டதை தன் தந்தை தன்னை உளவு பார்க்கத்தான் அவரை அனுப்பியிருப்பதாக சந்தேகமும்பட்டார்.

ருஹேலா தளபதியான திலீர் கான் இளவரசரின் வலதுகரமும் நம்பிக்கைக்குரிய தளபதியுமான மஹாராஜா ஜஸ்வந்த் சிங்கை பொதுவெளியில் வைத்தே அவமதிக்கவும் செய்தார். இதனால் பின்னாளில் சிவாஜி படையெடுத்துவந்தபோது தக்காண மொகலாயப் படையினால் அதை சரியாக எதிர்கொள்ளமுடியாமல் போகவும் செய்தது. தேவையான ஆட்பலமும் பணமும் கிடைக்காததால் பல வருடங்களுக்கு திலீர் கானினால் சிவாஜியை வெல்லவே முடிந்திருக்கவில்லை.பேரரசின் கவனமும் பணமும் வேறு இடத்தில் குவிக்கப்படவேண்டிவந்தது: மார்ச், 1667-ல் பெஷாவரில் உருவான யுசுஃப்ஸாய் எழுச்சி ஒரு வருட காலத்துக்கு மேல் பேரரசை பலவீனப்படுத்தியது.

மராட்டியத் தலைவர் சிவாஜியும் மொகலாயப் பேரரசுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட ஆர்வம் காட்டியிருக்கவில்லை. ஆக்ராவிலிருந்து திரும்பி வந்த பின்னர் மூன்று வருடங்களுக்கு அமைதியாகவே இருந்தார். மொகலாயர்களுடன் எந்தவகையிலும் புதிதாக தாக்குதலை முன்னெடுக்கவில்லை. தனது அரசாங்கத்தை நிலைநிறுத்தவும் கோட்டைகளைப் புதுப்பிக்கவும் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பீஜப்பூர் மற்றும் ஜன்ஜீராவின் சித்திகளை ஓரங்கட்டித் தன் அதிகாரத்தைப் பலப்படுத்தவும் அதிக அக்கறை காட்டினார்.

பேரரசுடன் நட்புறவை நாடி ஜஸ்வந்த் சிங்கையே அமைதித் தூதுவராகப் பயன்படுத்தினார். ‘மிர்ஸா ராஜா ஜஸ்வந்த் சிங் அவர்களே… உங்கள் மத்யஸ்தத்தின் மூலம் பேரரசுடன் நல்லுறவு ஏற்பட்டால் சம்புவை அனுப்பிவைக்கிறேன். இளவரசரைச் சந்தித்து அவருக்கு மன்சப்தாராக என் படையினருடன் எங்கு சொல்கிறார்களோ அங்கு சேவை புரியத் தயாராக இருக்கிறார்கள்’ என்று எழுதினார்.

ஜஸ்வந்த் சிங்கும் இளவரசர் முவாஸமும் இந்த தீர்மானத்தை உடனே ஏற்றுக்கொண்டு ஒளரங்கசீபுக்குத் தகவல் தெரிவித்தனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். சிவாஜியின் ராஜா என்ற பட்டத்தை அங்கீகரித்தார் (1668 ஆரம்பத்தில்). ஆனால் சஹான் கோட்டையைத் தவிர வேறு எதையும் திருப்பித் தரவில்லை. இந்த அமைதி உடன்படிக்கை இரண்டு ஆண்டுகள் நீடித்தது.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *