Skip to content
Home » ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

1. பீஜப்பூர் மீதான ஜெய் சிங்கின் படையெடுப்பு (1665-1666)

பீஜப்பூர் சுல்தான் மீது ஒளரங்கஜீப் அதிருப்தி கொள்வதற்குப் போதுமான காரணம் இருந்தது. மொகலாய அரியணை யாருக்கு என்பது தொடர்பாக வாரிசுகளிடையே ஏற்பட்ட போரை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா, ஆகஸ்ட் 1657-ல் மொகலாயர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறத் தொடங்கினார். சிவாஜிக்கு எதிராக ஒளரங்கஜீப் ஜெய் சிங் தலைமையில் படையை அனுப்பியபோது சிவாஜிக்கு நிலம், பணம், படைகள் தந்து பீஜப்பூர் சுல்தான் ரகசியமாக உதவி செய்ததை ஒளரங்கஜீப் தெரிந்துகொண்டுவிட்டார்.

மேலும் 1665-ஜூன் வாக்கிலேயே மொகலாயர்களுக்கும் சிவாஜிக்கும் இடையிலான மோதல் ஒருவகையாக முடிவுக்கு வந்ததையடுத்து ஜெய் சிங் தலைமையிலான மிகப் பெரிய படை தக்காணத்தில் வேலை எதுவும் இன்று வெறுமனே இருந்தது. அவர்களுக்கு ஒரு ’வேலையை’ உருவாக்கித் தரவேண்டிய அவசியம் ஒளரங்கஜீபுக்கு இருந்தது. பீஜப்பூர் மீதான படையெடுப்பு நல்லதொரு வாய்ப்பாக அவர் முன்னால் இருந்தது.

புரந்தர் உடன்படிக்கையின் மூலம் சமயோஜிதம் நிறைந்த ஜெய்சிங், வெகு அழகாக சிவாஜியை பீஜப்பூருடனான நட்புறவில் இருந்து விலக்கியிருந்தார். இருவருக்கும் இடையில் மோதல்ஏற்படும் வகையிலான வியூகத்தையும் வகுத்திருந்தார். மொகலாயப் படை பீஜப்பூர் மீது படையெடுப்பதற்கு சிவாஜி தன் தலைமையில் வீரம் நிறைந்த 7000 காலாட்படையினரையும் மகன் சாம்பாஜி தலைமையில் 2000 குதிரைப்படையினரையும் தந்து உதவவேண்டும் என்று ஓர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

அதேநேரம் பீஜப்பூரி சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகிகளுக்கு தில்லி மொகலாயப் பேரரசில் உயர் பதவிகள் தருவதாக ஆசை காட்டிக் கடிதங்கள் எழுதியுமிருந்தார். எதிர் தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஆசை காட்டித் தன் பக்கம் இழுக்கும் மொகலாயக் கொள்கையை மிகவும் தீவிரமாக, செலவைப் பற்றிக் கவலையேபடாமல் ஜெய் சிங் முன்னெடுத்தார். கொங்கன் பகுதியில் குடியேறியிருந்தவர்களும் அராபிய நவியத் குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருமான முல்லா அஹமது பீஜப்பூர் மேட்டுக்குடிகளில் இரண்டாம் இடத்தில் இருந்தார். அவர் 29, செப், 1665 அன்று ஜெய் சிங்குடன் சேர்ந்துகொண்டார். மொகலாய அரசவையில் 6-ஹஸாரி என்ற பொறுப்பு அவருக்கு உருவாக்கித் தரப்பட்டது. ஆனால் தில்லிக்குச் செல்லும் வழியில் 18, டிசம்பரில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

பீஜப்பூர் மீது படையெடுப்பதற்கு முன்பாக ஜெய் சிங் தந்திரமாக நல்லெண்ணத் தூது ஒன்றை அனுப்பத் தீர்மானித்தார். அந்த தந்திரத்தில் ஜெய் சிங் மிகவும் தேர்ந்தவர். பீஜப்பூர் மீது தாக்குதல் எதுவும் இருக்காது என்ற போலியான நிம்மதியை அடில் ஷாவுக்கு முதலில் தந்தார். அதேநேரம் பீஜப்பூருடனான போரில் விலகி நிற்கும்படி குதுப் ஷாவிடம் நைச்சியமாகப் பேசி சம்மதிக்கவும் வைத்திருந்தார்.

இப்படியாக எல்லா ராஜ தந்திர முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு ஜெய்சிங் 19, நவம்பர், 1665-ல் புரந்தர் கோட்டையின் அடிவாரத்திலிருந்து 40000 மொகலாயப் படை, நேதாஜி பால்கர் தலைமையில் 2000 மராட்டியக் குதிரைப்படை மற்றும் 7000 காலாட்படையுடன் புறப்பட்டார். படையெடுப்பின் முதல் மாதத்தில் ஜெய் சிங்குக்கு எதிர்ப்பே இன்றித் தொடர் வெற்றிகள் கிடைத்தன. பல்தான், தத்வடா, காத்தவ் மற்றும் பீஜப்பூருக்கு வெறு 52 மைல் வடக்கில் இருந்த மங்கள்விதே கோட்டைகள் எல்லாம் ஒன்று கைவிடப்பட்டிருந்தன அல்லது சரணடைந்தன.

முதல் உண்மையான போர் டிசம்பர் 25 அன்று நடந்தது. அன்று திலீர் கான் மற்றும் சிவாஜி தலைமையில் மொகலாயப் படை முகாமுக்கு 10 மைல் தொலைவில் ஷார்ஷா கான், கவாஸ் கான் மற்றும் கலியானி ராவ், சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரரான வியன்காஜி ஆகியோர் தலைமையிலான 12,000 வீரர்களைக் கொண்ட பீஜப்பூர் படையை எதிர்கொண்டது. வீரம் நிறைந்த தில்லி குதிரைப் படையின் தாக்குதலை தக்காணப் படைகள் பிரிந்து போரிட்டு சமாளித்துவிட்டனர். நான்கு பிரிவுகளாகப் பிரிந்தும் போக்குக் காட்டும் முறையில் போரிட்டும் மொகலாயப் படையினரை எரிச்சலடையச் செய்தனர்.

மொகலாயப் படையினர் தாக்குவதற்கு முன்னேறினால் இவர்கள் சிறிது நேரம் போரிட்டுவிட்டு ஓடிச் சென்றுவிடுவார்கள். இப்படியாக நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டபின், பல முறை முன்னேறிச் சென்று தாக்கியபின் திலீர் கான் ஒருவழியாக எதிரிப் படையைத் தளர்ந்துபோகவைத்தார். மாலையில் முகாமுக்குத் திரும்பினார். ஆனால் அவர்கள் அப்படித் திரும்பிவரும்போது தப்பி ஒளிந்திருந்த பீஜப்பூர் சுல்தானின் படைகள் இருபக்கமிருந்தும் பின்பக்கமாக இருந்தும் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தனர்.

24 டிசம்பர் அதிகாலையில் ஷார்ஷா கான் 6000 குதிரைப்படையினருடன் மங்கள்விதே கோட்டையை வந்தடைந்தனர். ஜெய்சிங்கின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மொகலாய தளபதி சர்ஃப்ராஸ் கான் தாக்கச் சென்று கொல்லப்பட்டார். அவருடைய படை கோட்டையிலிருந்து பின்வாங்கியது.

இரண்டுநாட்கள் கழித்து ஜெய்சிங் 28 டிசம்பரில் படையை முன்னெடுத்துச் சென்று இன்னொரு போரில் ஈடுபட்டார். வழக்கம்போல் தக்காணப்படை பல அணிகளாகப் பிரிந்து சென்று மொகலாயப் படையின் பலவீனமான அல்லது குழம்பி நின்ற பகுதிகளை நேரம் பார்த்துத் தாக்கிவந்தனர். இறுதியாக மொகலாயப்படை ஆவேசத்துடன் முன்னேறிச் செல்லவே தக்காணப் படை பின்வாங்கியது. ஆறு மைல்கள் தொலைவுக்கு அவர்களை மொகலாயப்படை விரட்டியடித்தது.

மறுநாள் 29, டிசம்பரில் பீஜப்பூருக்கு 12 மைல் பக்கத்தில் ஜெய் சிங் சென்றுவிட்டார். அவரால் முன்னேறிச் செல்ல முடிந்த அதிகபட்சம் தூரம் அதுவே. ஏனென்றால் இதனிடையில் அடில் ஷா தனது தற்காப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திவிட்டார். அவருடைய தலைநகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும் படையைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். கோட்டைகளை 30,000 வீரம் நிறைந்த கர்நாடக காலாட்படையைக் கொண்டு காத்து நின்றார். அதோடு சுற்றுவட்டாரத்தில் ஆறு மைல் சுற்றளவில் முழுவதுமாக அனைவரும் வெளியேறிவிட்டிருந்தனர். நரசபூர் மற்றும் ஷாபூர் பகுதிகளில் இருந்த பெரிய குளங்கள் முழுவதுமாக வற்றவைக்கப்பட்டிருந்தன. சுற்றுவட்டாரத்தில் இருந்த கிணறுகள் அனைத்தையும் மண்ணிட்டு மூடிவிட்டிருந்தனர். உயரமான கட்டடங்கள், மரங்கள், தோப்புகள் என ஆக்கிரமிப்புப் படைகளுக்கு அடைக்கலமும் நிழலும் தரக்கூடிய அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. இதனிடையில் ஜெய் சிங்கின் படையினரை அங்கிருந்து பிரிந்து செல்லவைக்கும் நோக்கில் ஷார்ஷா கான் மற்றும் சித்தி மசூத் தலைமையில் மொகலாயப் பகுதிகளுக்குள் படையெடுத்துச் சென்று தாக்க ஆரம்பித்திருந்தனர். அதே நேரம் பீஜப்பூர் சுல்தானின் பிரதான படைகள் தலைநகரை மையமிட்டுக் காத்திருந்தன.

பீஜப்பூரைத் தாக்குவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிடக்கூடாதென்று எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமலும் உள் முரண்கள் மிகுந்தும் இருந்த பீஜப்பூர் பகுதிகளுக்குள் சர சரவென முன்னேறிச் சென்ற ஜெய்சிங் பெரிய பீரங்கியோ துப்பாக்கிகளோ இல்லாமல் மங்கள்வதே கோட்டையை சற்று மெத்தனத்துடன் நெருங்கியிருந்தார். அது இப்போது பெரிய நெருக்கடியைத் தந்துவிட்டது. அடில் ஷாவுக்கு மிகப் பெரிய படை ஒன்று கோல்கொண்டாவிலிருந்து வந்து சேர்ந்தது. அதோடு மொகலாயப் படையினருக்கான உணவும் தீர்ந்துவிட்டிருந்தது.

2. ஜெய்சிங் பீஜப்பூரிலிருந்து பின்வாங்குதல், 1666

மொகலாயத் தளபதி 1666, 5 ஜனவரியன்று பின்வாங்கத் தொடங்கினார். பின்னாலிருந்து பீஜப்பூர் படை துரத்திவந்தது. பரிந்தா கோட்டைக்குத் தெற்கே 16 மைல் தொலைவில் இருந்த சுல்தான்பூருக்கு 27-ம் தேதி சென்று சேர்ந்து அங்கு 24 நாட்கள் தங்கினார்.

ஜனவரி மாதத்தில் மொகலாயர்களுக்கு நான்கு பேரிடிகள் விழுந்தன. முதலில் வீரம் நிறைந்த ஆஃப்கானியத் தளபதி சிக்கந்தர் (ஃபதே ஜங் கானின் சகோதரர்) ஜெய்சிங்கின் படையினருக்கான உணவுப் பொருட்கள், தளவாடங்கள் இவற்றை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று பீஜப்பூர் படை பரிந்தாவின் தெற்கே எட்டு மைல் தொலைவில் ஷார்ஷா கான் தலைமையில் வந்த படையினால் தாக்கப்பட்டார். அதில் தளபதி சிக்கந்தர் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த முகாமில் இருந்த அனைத்தும் பீஜப்பூர் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டன.

இரண்டாவதாக, எதிரிப் படையின் கவனத்தைத் திசை திருப்ப, பனாலா கோட்டையைத் தாக்குவதற்கு, தானாக விரும்பிக் கேட்டுச் சென்ற சிவாஜியின் படை பெரும் தோல்வியைச் சந்தித்தது. சுமார் ஆயிரம் பேர் அந்தப் போரில் இறந்தனர்.

மூன்றாவதாக சிவாஜியின் பிரதான தளபதிகளில் ஒருவரான நேதாஜி, தான் செய்த சேவைகளுக்கும் தியாகங்களுக்கும் வீரத்துக்கும் உரிய மதிப்பு கிடைக்கவில்லை என்று சொல்லி பீஜப்பூர் சுல்தான் பக்கம் சேர்ந்துவிட்டார். நான்கு லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மொகலாயப் பகுதிகளுக்குள் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஜெய் சிங் அவரைத் திரும்பி மொகலாயப் படை பக்கம் வந்துவிடச் சொல்லி ஆசை வார்த்தைகள் நிரம்பிய கடிதங்கள் பல அனுப்பினார். நேதாஜியின் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாகவும் வாக்களித்தார் (20 மார்ச்).

நான்காவது இடியாக அடில் ஷாவுக்கு உதவ கோல்கொண்டா சுல்தான் 12,000 குதிரைப்படை மற்றும் 40,000 காலாட்படையை அனுப்பிவைத்தார்.

பீஜப்பூரில் இருந்து பின்வாங்கி வந்தபோது ஜெய் சிங்குக்கு இரண்டு கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது (ஜன 11, 22 நாட்களில்). அதோடு அவரைத் துரத்தி வந்த படைகளின் சிறிய தாக்குதல்களைத் தினமும் எதிர்கொள்ளவும் வேண்டியிருந்தது. கடைசியாக இணைக்கப்பட்ட பிதார்-கல்யாணி பகுதிகளில் பலோல் கான், நேதாஜி ஆகியோரின் தலைமையில் நடந்த தாக்குதல்களும் கணிசமான நெருக்கடியைத் தந்தன.எனவே 20, பிப் ஜெய்சிங் சுல்தான்பூரில் இருந்து புறப்பட்டு போர் நடக்கும் கிழக்குப் பகுதிக்குச் சென்று சேர்ந்தார்.

மூன்றாவது கட்டப் போர் ஆரம்பித்தது.ஜெய் சிங் பரிந்தாவுக்கு வட கிழக்கில் 18 மைல் தொலைவில் இருந்த பூம் பகுதிக்கு ஜூன்வாக்கில் பின்வாங்கினார். இந்த மூன்றரை மாதங்களில் மேற்கில் இருந்த பீமா, கிழக்கில் இருந்த மஞ்சிரா, வடக்கில் இருந்த தரூர், தெற்கில் இருந்த துலியாபூர் ஆகிய நான்கு பகுதிகள் வழியாகச் சென்றார். இந்த வழியில் ரத்தக் களறி மிகுந்த நான்கு போர்களில் ஈடுபட நேர்ந்தது. முன்பு சொன்னதுபோல் அந்தப் போர்களினாலும் மொகலாயத் தரப்புக்கு எந்த வெற்றியும் கிடைத்திருக்கவில்லை. பீஜப்பூரிகளைப் போர்க்களத்தில் இருந்து ஒவ்வொரு முறை விரட்டியடித்தாலும் சிறிது தூரம் துரத்திச் சென்றாலும் அவர்களை முற்றாக அழிக்கமுடியவில்லை. சிறிது நேரம் அல்லது நாட்கள் கழித்து மொகலாய முகாம்களைத் தாக்குவார்கள். பலவீன பகுதிகளை வீழ்த்துவார்கள். உணவுப் பொருட்கள், தளவாடங்கள் வரும் வழிகளை முடக்குவார்கள். இப்படியாகவே அந்தப் போர்கள் நடந்தன.

மங்கள்விதே பகுதி மொகலாய எல்லையில் இருந்து வெகு தொலையில் இருந்தது. மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த அதைத் தக்கவைப்பதும் எளிதான விஷயம் அல்ல. எனவே ஜெய்சிங், அந்தக் கோட்டையில் நிறுத்தி வைத்த காவல் படைகளை அழைத்துக்கொண்டு செல்லும்படி திலீர் கானிடம் கேட்டுக்கொண்டார். தானியங்கள், பிற பொருட்களைப் பகிர்ந்துகொள்ளும்படியும் எடுத்துச் செல்லமுடியாதவற்றையெல்லாம் தீவைத்துக் கொளுத்தும்படியும் சொன்னார். கோட்டையின் பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் அப்புறப்படுத்தச் சொன்னார். இவை முடிந்ததும் பல்தான் பகுதியில் தொடர்ந்து இருக்கமுடியாது என்பது தெரிந்தது. எனவே அங்கு கோட்டைக் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த மொகலாயப் படை பிப்ரவரி வாக்கில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்படியாக இந்த முதல் படையெடுப்பில் மொகலாயர்களுக்கு ஒரு இடம் கூடக் கிடைத்திருக்கவில்லை.

வடக்கு நோக்கிய ஜெய்சிங்கின் பின்னோக்கிய நகர்வு 31 மே வாக்கில் ஆரம்பித்தது. பூம் பகுதிக்கு 10 ஜூன் வாக்கில் வந்தவர் அங்கு மூன்றரை மாதங்கள் தங்கினார். 28 செப்டம்பர் வாக்கில் அங்கிருந்து புறப்பட்டு பீர் (பூம் பகுதிக்கு 37 மைல் வடக்கில்) பகுதிக்குச் சென்றவர் அங்கு 17 நவம்பர்வரை தங்கினார். இறுதியாக அந்த மாத 26 வாக்கில் ஒளரங்கபாத் சென்று சேர்ந்தார். இரு தரப்பினரும் போரினால் வெகுவாகக் களைத்துப் போயிருந்தனர். அமைதி தேவை என்று ஏங்கினர். பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. பீஜப்பூர் தரப்பு தனது எல்லைக்குள் சுருங்கிக் கொண்டது. மொகலாயர்களும் அவ்விதமே செய்தனர்.

3. ஜெய்சிங்கின் தோல்வியும் மரணமும்

பீஜப்பூர் மீதான ஜெய் சிங்கின் படையெடுப்பு முழுவதும் தோல்வியில் முடிவடைந்தது. ஓர் அங்குல நிலமோ கோட்டையின் ஒற்றைக் கருங்கல்லோ ஒரு அணா கப்பமோ எதுவுமே கிடைத்திருக்கவில்லை. பொருளாதாரரீதியில் அது மேலும் பெரும் இழப்பையையே கொண்டுவந்திருந்தது. மொகலாய கஜானாவில் இருந்து 30 லட்சம் பணம், ஜெய் சிங் தன் பங்காகக் கையில் இருந்து செலவிட்ட பணம் ஒரு கோடி என அனைத்துமே வீணாகிப்போனது. இவைபோதாதென்று ஜெய் சிங் முன்னெடுத்த ஆசை காட்டல்கள் மேலும் பெரும் இழப்பைக் கொண்டுவந்தன. ஒவ்வொரு துக்கடா முஸ்லிம் தளபதி அல்லது மராட்டிய தளபதி ஆகியோருக்கு பீஜப்பூர் சுல்தானிடமிருந்து விலகி வருவதற்கு மொகலாய அரசவையில் மன்சாப் பதவியும் மிகப் பெருமளவிலான தொகையும் வாரி இறைத்திருந்தார். அவையும் வீணாகிப் போயின.

ஒளரங்கஜீபுக்கு ஜெய் சிங் மீது பீஜப்பூர் படையெடுப்பின் தோல்வி மற்றும் நிதி இழப்பு தொடர்பாக மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டது. ஒளரங்காபாதுக்குத் திரும்பும்படி (அக், 1666) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 23 மார்ச், 1667-ல் தில்லி அரசவைக்கு அழைக்கப்பட்டு தக்காண நிர்வாகப் பொறுப்பு இளவரசர் முவாஸமிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு உதவியாக இருக்கும்படியும் ஜெய் சிங் கேட்டுக்கொள்ளப்பட்டார். நூறு போர்களுக்கு மேல் வீரமாகப் போரிட்ட ராஜபுத்திர தளபதி மே 1667-ல் வட இந்தியாவுக்கு அவமானமும் சோர்வும் அடைந்தவராகத் திரும்பினார். இந்தப் படையெடுப்பில் அவர் செலவழித்த கோடி பணத்தில் ஒரு அணா கூட மொகலாயப் பேரரசர் திருப்பித் தரப்போவதில்லை. தோல்வியாலும் அவமானத்தாலும் மனமுடைந்தவர் முதுமையாலும் நோயாலும் பீடிக்கப்பட்டு 2, ஜூலை 1667-ல் பர்ஹான்பூரை அடைந்தபோது உயிர் துறந்தார்.

இந்தப் போரில் அவருக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்கவே இல்லை. பீஜப்பூர் போன்ற மிகப் பெரிய ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவதற்குப் போதுமான படை ஜெய் சிங் வசம் இருந்திருக்கவில்லை. அவர் வசம் இருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் ஓரிரு மாத காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்தன. அவரிடம் முற்றுகைத் தாக்குதலை முன்னெடுக்கப் போதுமான பீரங்கிகள், துப்பாக்கிகள் இருந்திருக்கவில்லை. அதேநேரம் பீஜப்பூர் சுல்தானகத்தின் வலிமையும் வளமும் மிக மிக அதிகமாக இருந்தது. 20 வருடங்கள் கழித்து ஒளரங்கஜீப் பீஜப்பூரைக் கைப்பற்றியபோது அது வறுமையில் வாடி வீழ்ச்சியில் இருந்ததுபோல் எல்லாம் இருக்கவில்லை.

ஜெய் சிங்கின் படை மிகவும் சிறியதாக இருந்ததோடு அவருடைய படையினர் அவர் சொல்வதைக் கேட்கவே இல்லை. அவருடைய தளபதிகள், அதிகாரிகள் பலர் நம்பகமாக இருந்திருக்கவில்லை. அவருடைய உத்தரவுகளை அமல்படுத்தவில்லை. அல்லது தாமதமாகவே செய்தனர். படையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து மொகலாய அதிகாரிகள், படையினருக்கு உணவு தானியங்களை உரிய நேரத்தில் வழங்கவே இல்லை. இப்படியான சூழலில் மனித எத்தனத்தால் வெல்வதென்பது சாத்தியமே இல்லை.

4. பீஜப்பூரின் இராணுவ அமைப்பு, அதன் பிற அம்சங்கள்

பீஜப்பூர் சுல்தானகத்தின் பெரிய சாபக்கேடு அதன் ராணுவத்தினரின் கலகமே. அந்த சுல்தானகத்தின் வீழ்ச்சி, பல்வேறு தளபதிகளின் கலக அரசுகளாக சிதறிப்போனதில் முடிந்தது. அரச நிர்வாகம் முழுக்கவும் ராணுவ ஆக்கிரமிப்பாகவே இருந்தது. அதிகாரமும் விசுவாசமும் ராணுவ தளபதிகள் பக்கமே இருந்தன. கூலிக்குப் போரிட்ட தளபதிகள் வசமே முழு அதிகாரமும் இருந்தன. இவர்களில் ஆஃப்கனியர்கள் பிரதான தளபதிகளாக இருந்தனர் (மேற்குப் பகுதிகளில் கோபால் தொடங்கி பன்காபூர்வரை இவர்களுடைய ஆட்களே நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர். அடுத்ததாக அபிசீனியர்கள் (கர்நூல் மாவட்டம், ராய்ச்சூர் தாபின் ஒரு பகுதி முதலான கிழக்குப் பகுதிகள்), மஹ்தாவி பிரிவைச் சேர்ந்த சையதுகள், கொங்கன் பகுதியின் நவியத் பிரிவைச் சேர்ந்த அராபிய முல்லாக்கள் ஆகியோர் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர்.

குடிமக்களாகவும் குறு நில மன்னர்களாகவும் இருந்த ஹிந்துக்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தனர். அந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசு, அதிகார வர்க்கம் அந்நிய நாட்டைச் சேர்ந்ததாகவே இருந்தது. ஆனால் சொந்த நாட்டுக்குத் திரும்பும் எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. ஆளும் பகுதியில் நில உடமையாளர்களாக, மேட்டுக்குடிகளாக தமது பிரிவுக்குள் மட்டுமே மண உறவுகள் வைத்துக்கொண்டு வாழ்ந்தனர். இதனால் ஆளப்படும் பகுதியினருடன் எந்தவித ஒட்டுறவும் இன்றியே இருந்தனர். இப்படி அதிகாரவர்க்கம் விலகி நின்றதென்பது மக்களின் ஆதரவை ஒருபோதும் பெறாவில்லை.

அதிகாரவர்க்கத்தின் ஒரே நோக்கம் சுய ஆதாயம் மட்டுமே. தமக்கான செல்வங்கள், வளங்கள் கிடைக்கும்வரையில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதுபற்றி எந்தக் கவலையும் இன்றி இருந்தனர். எந்த ஆட்சியில் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களோ அந்த அரசைப் பற்றியே அவர்களுக்கு எந்த அக்கறையும் இருந்திருக்கவில்லை. அவர்களுக்கு எந்தவித தேசப் பற்றும் இருந்திருக்கவில்லை. ஏனென்றால் தேசம் என்ற ஒன்றே அங்கு உருவாகியிருக்கவில்லை. இந்தியாவில் வசித்தனர். ஆனால் இந்தியாவால் வாழ்ந்திருக்கவில்லை. உண்மையில் மனதளவில் ஒருவித அநாதைகள் போல், வேரற்றவர்களாக இருந்தனர்.

இப்படியான அதிகாரவர்க்கம், நிலப்பிரபுக்களைக் கொண்ட அரசென்பது மணலில் கட்டிய கோட்டை போன்றதுதான். ஒவ்வொரு புதிய வெற்றிகளின் போதும் இவர்கள் தமது ஒவ்வொரு வெற்றியாளருக்கு விசுவாசமாக மாறிக் கொண்டனர். ஆட்சி, அரசியல் மாற்றங்களினால் இவர்களுடைய நிலை எந்தவகையிலும் மாறமல் இருந்தது. எனவே தேவைப்படும் நேரங்களில் எந்தவொரு அரசுக்கும் இவர்களுடைய உதவி கிடைத்திருக்கவில்லை. ஒரு தேசிய அரசென்றால் நெருக்கடிகள் ஏற்படும்போது அதன் குடிமகன்கள் உதவிக்கு வந்தாகவேண்டும். அப்படியான ஒன்று நடக்காவிட்டால் அந்த அரசு நிலைக்கமுடியாது. அடில் ஷா சுல்தானகம் இந்தக் கோட்பாட்டுக்கு மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *