Skip to content
Home » காற்றில் கலந்த கற்பூரம்

காற்றில் கலந்த கற்பூரம்

ஔவை நடராசன்

‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு இராமன் கதறினான் என்பான் கம்பன். நந்தா விளக்கென்பது பிறர் தூண்ட வேண்டியில்லாமல் தானே சுடர்விடும் தூண்டா விளக்காகும். ஔவை நடராசன் அவர்களும் தம்மால் தாமே புகழுடையவராய் விளங்கினார்’ எனப் போற்றுகிறார் டாக்டர் சுதா சேஷைய்யன். ‘மதுசுரக்கும் தமிழ்ப் பேச்சால், மதியின் மாண்பால், மணி தெறிக்கும் உரை வீச்சால், தேன்கனிந்த அதிமதுரக் கனிபோலப் பழகும் ஔவை நடராசன் வாழியவே’ என வாழ்த்துகிறார் கவிஞர் சுரதா.

செந்தமிழின் செழுமைக்குச் சிறப்புச் சேர்க்கும் செம்மல், பாவன்மையைத் தம் நாவன்மையால் புனைந்துரைக்கும் ஆற்றல், வித்தகம் அறிந்து புத்தகமாய் விரியும் புலமை, கேட்பவர்க்கு வேட்ப மொழியும் திறம், உரைவாளிலிருந்து புறப்படும் ஒளிப்பாய்ச்சலாய் சுடர்ந்திடும் உரைவீச்சு, எழுத்தளவில் நில்லாது கருத்தளவில் நுட்பத்தைப் பேச்சில் வடித்துக் காட்டும் வல்லமை, பேச்சின் வழி மேடையில் பூங்காற்றாய்த் தவழ்ந்து வரும் மென்மை, தமிழோடு ஆங்கிலமும் அறிந்த தகைசால் அறிவு, எனச் சொல்லிக் கொண்டே போகலாம் என்பார் பேராசிரியர் இராம குருநாதன்.

மு கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களின் அன்பைப் பெற்றவர்‌ தமிழறிஞர் முனைவர் ஔவை நடராசன். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்தவர். முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தமிழக அரசு செய்தித் துறை இயக்குனராகவும், முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறை அரசுச் செயலராகவும் (ஐஏஎஸ் அதிகாரி அல்லாத அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டது இவர் ஒருவர்தான்), முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பெரும் பொறுப்புகளை வகித்த பெருமகனார். முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை இவர் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் ‘தமிழே! தமிழே! வருக’ என்றுதான் அழைப்பாராம்.

1936 ஏப்ரல் 24இல் தோன்றி 2022 நவம்பர் 21இல் தனது 86ஆம் வயதில் மறைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் (அன்றைய வட ஆர்க்காடு), செய்யாறு அருகிலுள்ள ஔவையார்க் குப்பம் என்னும் சிற்றூரில் ஔவை துரைசாமி – லோகாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவபாத சேகரன். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும், ‘திருக்கோவையார்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ‘சங்க காலப் பெண்பாற் புலவர்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர், புதுதில்லி அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர், சென்னை இராமலிங்கர் பணிமன்றச் செயலாளர், தமிழக அரசுச் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர், தமிழக அரசு மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழக அரசுத் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர், பாரத் பல்கலைக்கழக வேந்தர் என இவர் வகித்த பதவிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டம் உள்பட எண்ணிலடங்கா பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற இவருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருந்தளித்துக் கௌரவித்தது.

‘சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்’, ‘கம்பர் விருந்து’, ‘கம்பர் மாட்சி’, ‘வாழ்விக்க வந்த வள்ளலார்’, ‘பேரறிஞர் அண்ணா’, ‘திருப்பாவை விளக்கம்’, ‘திருவெம்பாவை விளக்கம்’, ‘அருளுக்கு ஔவை சொன்னது’, ‘Self Confidence’, ‘Sayings of a Stalwart’, ‘The Panaroma of Tamils’, ’Thirukovaiyaar’ ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களை விடவும், பேசிய உரை வீச்சுகளே அதிகம். தமிழ் இலக்கியங்களை நுனிப்புல் மேய்வதுபோல் மேலோட்டமாகப் படிக்காமல், ஆழ்ந்து படித்துக் கருத்துகளை வெளியிடுவதில் இவரது நுண்மாண் நுழைபுலத்தைக் காணலாம்.

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்

சங்க காலப் பெண்பாற் புலவர்கள் எண்ணிக்கை குறித்துத் தமிழ் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் 38 என்றும், வையாபுரிப்பிள்ளை 30 என்றும், ஔவை துரைசாமிப் பிள்ளை 34 எனவும், புலவர் கா. கோவிந்தன் 27 எனவும், ந. சஞ்சீவி 25 எனவும், தாயம்மாள் அறவாணன் 45 எனப் பதிவு செய்துள்ளனர். ஔவை நடராசனார் தனது ஆய்வில் சங்க காலப் புலமைச் செல்வியரை 41 என வரையறை செய்துள்ளார்.

சங்க இலக்கியங்களில் மகளிர் உரிமை மறுக்கப்படவில்லை என்றும், புலமைத் திறனில் இரு பாலருக்கும் எந்தப் பிரிவினையும் இல்லை என்றும், ஒத்த உரிமையும், மதிப்பும், உடையராய் வாழ்ந்தனர் என்கிறார். இரவுப் பொழுதில் தலைவன் தலைவி சந்திக்கும் இடம் ‘இரவுக் குறி’ ஆகும். ஆனால் இரவுக் குறியிடத்துத் தலைவனும், தலைவியும், கூடி மகிழ்வதாகப் பாடும் ஒரு பாடலேனும் ‘நாணம்’ காரணமாக மகளிர் பாடல்களில் இடம் பெறவில்லை என்கிறார். வெள்ளிவீதியார் பாடல் உணர்ச்சியையும், ஒக்கூர் மாசாத்தியார் முல்லை ஒழுக்கத்தையும், அள்ளூர் நன்முல்லையார் பெண்மையின் நுண்ணிய இயல்பையும் பாடியதாகப் பதிவிட்டுள்ளார்.

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனப் புறப்பாட்டில் ஔவை மூதாட்டி கற்றோர்க்குச் செல்லுமிடமெலாம் சிறப்பு என்னும் கருதுபட உரைக்கிறார். பாரி அவையில் கபிலர் வீற்றிருந்ததுபோல், அதியமான் அவையில் ஔவை மூதாட்டியும், ஏறைக்கோன் அவையில் குறமகள் குறியெயினியும் அமர்ந்திருந்தனர். ஒரு துறைப் புலமையில் ஓங்கு புகழ் பெற்ற வெறிபாடிய காமக்கண்ணியார், வேந்தன் முன் அங்கதப் பாடல் (கீழ்மைக் குணத்தை நகைச்சுவையுடன் பழித்துரைத்தல்) பாடிய வெண்ணிக் குயத்தியார், அஞ்சாமையைப் பாடிய காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பற்றியும் விளக்குகிறார். போர்களுக்குக் காரணமான பெண்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. ஆனால் போரை நிறுத்த வேந்தர்களிடம் தூது சென்ற ஒரே பெருமடந்தை உலக வரலாற்றில் ‘ஔவைப் பிராட்டியார்’ மட்டுமே என்கிறார். நிறைவாக சங்க காலத்தில் பழந்தமிழ் மகளிர் கல்வியிலும், கவிபாடுவதிலும், காதலிலும், காதலனை இடித்துரைப்பதிலும், இல்லறத் தொழிலிலும், ஆடவர்க்கு நிகரான உரிமையையும், மதிப்பையும் பெற்றிருந்தனர் எனத் தக்கச் சான்றுகளுடன் நிறுவுகிறார்.

கம்பர் விருந்து / கம்பர் மாட்சி

வடமொழியில் வால்மீகியும், தமிழில் கம்பனும் எழுதிய இராமாயணம் பல இடங்களில் வேறுபடுகின்றன என்பது ஔவை நடராசன் கருத்து. அவற்றுள் மூன்றை மட்டும் பார்ப்போம்:-

(அ) பால காண்டம். மிதிலைக் காட்சிப் படலத்தில். விஸ்வாமித்திர முனிவரோடு இராமனும், இலக்குவனும், மிதிலை நகர வீதிகளில் வருகின்றனர். அப்போது சீதை கன்னி மாடத்தின் மேலிடத்தில் நின்று கொண்டிருக்கிறாள். இராமன் முதலில் சீதையைப் பொது நோக்காகப் பார்க்கிறான் என்றும் பின்னர் இருவரும் காதல் கனிய நோக்கியதாகவும் கம்பன் பாடுகிறான்:-

‘எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக் கண்ணொடு கண்இணை கல்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’

திருமணத்துக்கு முன் இராமனும், சீதையும், ஒருவரை ஒருவர் நோக்கியதாக வால்மீகி பாடவில்லை. ‘தலைவனும் தலைவியும் முன்னரே ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்ட பின்பே மணமுடிப்பது தமிழர் மரபு’ என்பதால் அதற்கொப்ப இராமனும், சீதையும், திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் கண்டு, கவரப்பட்டுக், காதல் கனிந்ததாகக் கம்பர் வர்ணிக்கிறார்.

(ஆ) ஆரண்ய காண்டம், இராவணன் சூழ்ச்சிப் படலத்தில், பஞ்சவடியில் சீதை தனித்திருந்தபோது இராவணன் அவளைத் தன் கைகளால் பற்றித் தேரில் ஏற்றிச் சென்றான் என்கிறது வால்மீகி பாடல். ஆனால் தெய்வ மகளான சீதையின் கைகளைப் பற்றித் தூக்கிச் செல்வதைத் தமிழ் மரபுக்கு இழுக்காகக் கருதினான் கம்பன். எனவே,

‘தூண்தான் எனல்ஆம் உயர்தோள் வலியால், கீண்டான் நிலம், யோசனை கீழோடு மேல்,
கொண்டான் உயர் தே மிசை’

எனச் சீதை தங்கியிருந்த பர்ணசாலையையே இராவணன் தூக்கிச் சென்றான் எனக் கம்பன் மாற்றிப் பாடினான்.

(இ) வால்மீகி தனது தூலில் ‘இரணியன்’ வரலாற்றைக் கூறவில்லை. ஆனால் கம்பன் யுத்த காண்டத்தில், இரணியன் வதைப் படலத்தில், 176 பாடல்கள் மூலம் விளக்குகிறார். இரணியன் வரலாற்றில் கம்பனுக்கு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்பது ஔவை நடராசனின் முடிவு.

வாழ்விக்க வந்த வள்ளலார்

வாழ்விற்குப் பொருள் (பணம்) தந்தார்கள் வள்ளல்கள். ஆனால் அவர்கள் வாழ்விற்கே பொருள் (அர்த்தம்) தந்தவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க ஸ்வாமிகள். வள்ளல்களுக்கும் வள்ளலாக இருப்பதால் அவர் ‘வள்ளல் பெருமான்’ எனப் போற்றப்படுகிறார் என்கிறார் ஔவை நடராசன்.

‘வள்ளல் பெருமான் இறைவனை, இயற்கை விளக்கமாக, உயிர் இரக்கமாக, கருணை அமுதமாகக் கண்டதுபோல், உண்மை வடிவமாகவும் கண்டார். உண்மை என்பதைப் பெருமான் சத்தியம் என்றே வழங்குகிறார். அப்பூதி அடிகள் எவ்வாறு திருநாவுக்கரசர் பெயரை அனைத்துப் பொருள்களுக்கும் இட்டு மகிழ்ந்தாரோ, அவ்வாறே காணும் பொருள்களை எல்லாம் வள்ளலார் ‘சத்தியம்’ என்றே அழைத்தார்.

சன்மார்க்கம் என்பதைச் ‘சத்தியமே சன்மார்க்கம்’ எனப்படும் உண்மை வழி, நல்லாறு என்ற வகையில் கொண்டார். இவ்வாறு கருதுவதற்கும் இடமுண்டு என்னும் புதிய விளக்கத்தை ஔவை நடராசன் தருகிறார். ‘சத்திய ஞான சபை’, ‘சத்திய தருமச் சாலை’ எனப் பெயரிட்டதுடன், ‘புனைந்துரையேன், பொய் புகலேன், சத்தியம் சொல்கின்றேன்’ என்று வள்ளலார் கூறியதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

அடுத்து ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்றும் ‘செத்தாரையும் எழுப்பலாம்’ என்றும் கூறிய வள்ளலாரின் நெறியை ஔவை நடராசனார் வேறு கோணத்தில் சிந்திக்கிறார். இறப்பு என்ற சொல்லும், நீத்தல் என்ற சொல்லும் ஓர் எல்லையினைக் கடத்தல் என்றே பொருள்படும். ‘இயற்கையைக் கடந்த நிகழ்வை’ நாம் ‘இயற்கை இறந்த நிகழ்வு’ என்றும், ‘கடலை நீந்தினான்’ என்பதைக் ‘கடலைக் கடந்தான்’ என்றும் பொருள் கொள்கிறோம்.

அருளாளர்கள் ‘சாவு’ குறித்து அஞ்ச மாட்டார்கள். ‘உடம்பும் மிகை’ என்றே கருதுவார்கள். உள்ளத்தில் சாவைப் பற்றிய பயமே இல்லாதபோது, வாழ்வு இன்பமுடைய நற்சோலையாக, பேரின்ப வீடாக மாறிவிடுகிறது. அப்பேரின்ப நிலையே, வள்ளலாரின் கருத்தியலில் ‘மரணம் இல்லாப் பெருவாழ்வு’ எனச் சுட்டப்படுகிறது.

‘செத்தார்’ யார் என்று வள்ளலார் கூறியதை மெய்ப்பொருள் நோக்கில் ஆராய்கிறார் ஔவை நடராசனார். ‘செத்தார்’ என்போரை ‘இறந்தவர்கள்’ என நாம் அப்படியே பொருள் கொள்ளக் கூடாது. ‘மக்களாய்ப் பிறந்தும் உணர்வின்றி ஒடுங்கி மறந்தோரையும், கருணை உணர்வின்றித் திரிவோரையும், கண்மூடிப் பழக்கங்களில் தம்மை ஆழ்த்திக் கொண்டோரையும், செயல் மறந்து கிடப்போரையும் ‘செத்தார்’ என வள்ளலார் கருதியிருப்பார் போலும்.

எனவேதான் ‘உறங்கியவரை எழுப்புங்கள்’ என்பதுபோல் ‘துஞ்சிய மாந்தரை எழுப்புக’ என்றும் அவ்வாறு உறங்கி எழுந்தவர்கள் புத்துணர்வு பெற்று வாழ்கின்றனர் என்பதை ‘செத்தார் எழுந்தனர்’ என வள்ளலார் பாடினார் எனவும் கொள்ளலாம் எனப் புது விளக்கம் தருகிறார் ஔவை நடராசன்.

‘அவரின் பேச்சுகள் பலவற்றைப் பதிவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்பது தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்புதான். இப்போதிருக்கும் வசதிகள் அப்போது இருந்திருந்தால் அந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாத்திருக்கலாம்’ என ஆதங்கப்படுகிறார் டாக்டர் சுதா சேஷய்யன். ஆமாம். உண்மைதான். அவரது கணக்கிலா மேடைப் பேச்சுகள் எழுத்து வடிவில் நூல்களாக உருப்பெறாமல், காற்றில் கரைந்த கற்பூரமாகப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து மணம் வீசிக் கொண்டிருக்கிறது.

0

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

4 thoughts on “காற்றில் கலந்த கற்பூரம்”

    1. பனித்துளி யில் தெரியும் மலை
      போல் தமிழறிஞர் ஔவை நடராசன்
      அவர்களின் நூல்கள் உட்பட
      எழுதியிருப்பது சிறப்பு

  1. மிக தெளிவான ஆழமான கட்டுரை. ஔவையின் இலக்கிய ப் பயணத்தில் மணம் நிறைந்த வாசல்களை நன்கு திறந்து காட்டியுள்ளார். நானும் அவரை நேரில் சந்தித்து ப் பேசியுள்ளேன். ஜனி ரமேஷுக்கு எனது பாராட்டு தல்கள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *