பால் பாயசத்தில் எந்தப் பக்கம் இனிமை? இதற்குத் தகுந்த பதிலைச் சொல்வதெப்படி? ஆனாலும் முந்திரி, திராட்சை நாவில் உருளும் அந்த மிடறு கூடுதல் சுவையுடையதுதான் இல்லையா? பாரதியில் அப்படியான சுவையை நாம் அடிக்கடி அனுபவிக்கிறோம்.
கல்லூரிக் காலத்தில் ஏதோ ஒரு பேச்சுப் போட்டியில் பரிசாக பாரதியார் கவிதைகள் கையடக்கப் பதிப்பு கிடைத்தது. அன்று முதல் என் ஜோல்னா பையில் பாரதிதான் வழித்துணை.
காத்திருக்கும் நேரம் என்பது சுவையானது. பாரதிதான் உடனிருக்கிறாரே!
ஒவ்வொரு முறை கால் பதியும் போதும் குளிர்ச்சியூட்டும் கூழாங்கற்களாய் பாரதியின் வார்த்தைகள் மகிழ்வைத்தரும். எதைச் சொல்ல, எதைவிட?
வசன கவிதை நான் அடிக்கடி படித்து மகிழ்வது. ஒவ்வொரு வரியும் குளத்தின் நீரலைத் தொடராய் நம்மில் உணர்வுகளை எழுப்ப வல்லது.
உயிர் நன்று. சாதல் இனிது.
அறிவு எது போல் சுடரும்?
தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக.
மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.
ஒளியற்ற பொருள் சகத்தில் இல்லை. இருளென்பது குறைந்த ஒளி.
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது பாட்டு மின்னலுடையதாக.
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை.
நமக்கு செய்கை இயல்பாகுக.
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.
இந்த வசனக் கவிதையில் எனக்கு மிக விருப்பமான பகுதி, காற்று. ஒரு வீட்டின் திண்ணையில் கவிஞர் அமர்ந்திருக்கிறார். இறவானத்திலிருந்து சில சணல் கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் சற்றே சிறிதும் பெரிதுமான சணல் கயிறுகள் கவிஞரின் கவனத்தை ஈர்க்கின்றன. அவை காற்றில் அசைவது காதலர் இருவரின் அழகு விளையாட்டுபோல ஓர் அழகிய கற்பனை. கயிறுகளுக்குப் பெயர்கூட வைத்தாகிவிட்டது. கந்தன், வள்ளியம்மை என.
பாரதி உல்லாசமானதொரு மனநிலையில் எழுதியது இது என்றே எப்போதும் எனக்குத் தோன்றும். கயிறோடு பாரதி பேசத்தொடங்கி விடுகிறார். கயிறு பேசுமா?
‘பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும்.
இல்லாவிட்டால்,முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சும்மா இருந்து விடும்,பெண்களைப் போல’
பாரதியிடம் குறும்புக்கா பஞ்சம்.
ஒன்றைத் தொட்டும் ஓடியும் விலகியுமான சல்லாப விளையாட்டு, காதலர்களான கணவன், மனைவி கயிறுகளிடையே. பாரதி அமர்ந்திருப்பதை ஓரக் கண்ணால் பார்த்தபடியும் பார்க்காதபடியுமாகத் தம் அன்பைப் புலப்படுத்தியபடியான அழகு விளையாட்டு. பாரதி இதை எழுதுவதைப் பாருங்கள்.
‘நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷம் தானே?
இந்த வேடிக்கைப் பார்ப்பதிலே எனக்கு மிகவும் திருப்தி தான்.
உள்ளத்தைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்ப மன்றோ?’
என்ன மாதிரியான அழகான காட்சி. சாதாரணமான ஒரு காட்சியில் இவ்வளவு அழகைப் பொதிந்து வைத்தவன் மகாகவியன்றோ!
இத்தகைய அழகுக் காட்சிகள் நம் இலக்கியத்தில் பலப்பல உண்டு. பாரதியின் இப்பகுதியைப் படிக்கும் போதெல்லாம் தவறாமல் என் நினைவுக்கு வருவது ஐங்குறுநூறு முல்லைப் பகுதியில் பேயனாரின் கவி வரிகள். செவிலி கூற்றுப் பத்து என்ற பகுதியில் அமைந்த பாடல்கள். சிறப்புற இல்லறம் நடத்தும் தலைவியின் இல்லத்துக்குச் சென்று மீளும் செவிலி, நற்றாயிடம் அங்கு தான் கண்ட மனம் மகிழும் நிகழ்வுகளையும் காட்சிகளையும் விவரிக்கிறாள்.
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே குழந்தை. மூவரும் இனிமையாகத் துயின்று கொண்டிருக்கிறார்கள்.
மறி இடைப்படுத்த மான் இணை போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடைக்கை….
இன்னொரு அழகான காட்சி. அதே பகுதியில்,
புதல்வற் கவை இயினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
இனிதுமன்ற அவர் கிடைக்கை.
தூங்கும் முறையில்தான் எத்தனையெத்தனை அழகுகளைக் கண்ணுறுகிறாள் இந்தச் செவிலித்தாய். குழந்தையை அணைத்தபடிப் படுத்திருக்கும் தலைவியைத் தழுவியபடி தலைவன் உறங்குகிறான்.
புதல்வற் கவையிய தாய்ப் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடைக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே
கேட்ட நற்றாய் மகிழ்ந்திருப்பாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
மாதர் உண்கண் மகன் விளையாட
காதலித் தழீஇ இனிது இருந்தன்னே
தாதுஆர் பிரசம் ஊதும்
போதுஆர் புறவின் நாடுகிழவோனே
மகிழ்ந்து இனிதிருக்கும் இளமையின் அழகு கண்டு மகிழ்வதற்குரியதே.
பாரதியின் வார்த்தைகளிலேயே சொல்வதாயின், இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
0
நல்லதொரு கவிதைக் காட்சி. தமிழ் இலக்கியம் சுவைத்தால் இனிக்கும் கற்கண்டே…