‘எல்லா நூல்களையும் போலவே, இந்த நூலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக்கூடியதுதான். ஆனால், அந்த விமர்சனம் அறிவையும் ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியதாக’ இருக்கவேண்டும் என்கிறார் எஸ்.வி. ராஜதுரை (அறிவுத் தளத்தின் மீது இன்னொரு தாக்குதல், இந்து தமிழ் திசை, 15 ஜூன் 2022).
இவர் குறிப்பிடும் நூல், நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘அறியப்படாத கிறிஸ்தவம்’. புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு இந்நூலைச் சமீபத்தில் முதல்வருக்குப் பரிசளித்திருப்பதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ‘சர்ச்சை’ குறித்துதான் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார் எஸ்.வி.ஆர்.
இப்படி ஒரு நூலைப் பரிசளித்திருப்பதன்மூலம் ஒரு மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் ஆட்சியர் செயல்பட்டிருக்கிறார் என்பது பாஜகவின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவரின் குற்றச்சாட்டு. அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்ட சர்ச்சை இது. இப்படியொரு புகாரை எழுப்புபவர்கள் குறைந்தது நிவேதிதா எழுதியிருக்கும் ‘முன்னுரையையாவது படித்திருக்கவேண்டும்’ என்கிறார் எஸ்.வி.ஆர்.
உண்மையில் ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ எப்படிப்பட்ட நூல் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கில் நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன. முனைவர் பக்தவத்சல பாரதி, முனைவர் ஆனந்த் அமலதாஸ், முனைவர் மார்க்சிய காந்தி மூவரும் இந்நூலுக்கு வழங்கியிருக்கும் அணிந்துரையிலிருந்தும் சில பகுதிகளைத் தருகிறோம். நூலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதிகள் உதவும் என்று நம்புகிறோம்.
***
அறிவின் பயன்
முனைவர் பக்தவத்சல பாரதி
‘அறியப்படாத கிறிஸ்தவம்’ தமிழ்க் கிறிஸ்தவத்தின் விவிலியமாகும். இதன் பேசு பொருள் கடலென விரிந்து செல்கிறது. வாழ்வியலின் எண்ணற்ற களங்களைக் கவனப்படுத்தியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ்.
வரலாற்றையும் சமகாலத்தையும் வெகு லாவகமாக இணைத்து விவாதிக்கிறார். சமூக அமைப்பு, சமூகப் பிரிவுகள், திருச்சபையில் சாதியத்தின் தாக்கம் முதலானவற்றை மேசைக்காரர், கம்மரக்காரர் (மன்றாடிகளும் வேலைக்காரர்களும் கலந்தவர்கள்), மடிக்காரர் (கடலோடிகள்), மெனக்கடர், சம்மட்டிக்காரர், கூலி மீனவர் உள்ளிட்ட பிரிவினர் வழி, நிவேதிதா பேசியிருக்கிறார்.
ஒருகாலத்தில் மேசைக்காரர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் முதற்கொண்டு பலவும் கொழும்பில் இருந்தே வரும். இதன் பின்னால் உள்ள சமூக அசைவியக்கத்தை நிவேதிதா லூயிஸ் ஆழமாக அகழ்ந்திருக்கிறார். இப்படி எத்தனை எத்தனையோ அறியப்படாத விடயங்களை நவீன இனவரைவியலாக்கியிருக்கிறார்.
இவ்வாறே திருமணம், சடங்குகள், குடும்ப விழாக்கள், தேர்த் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், வாழ்வியல், கலைகள், வழிபாடு, ஜபம், பண்டைய தமிழ் நீத்தார் வழிபாடும் இன்றைய கல்லறை வழிபாடும், சமயத்தின் பிற பன்முக அம்சங்கள், வாசாப்பு நாடகம், வாய்மொழி வழக்காறுகள், பாடல்கள், சாவு, வணிகம், வரலாறு, திருமறை பரப்பல், மறைப்பணியாளர்கள், தொழில்முறைகள், நேர்த்திக் கடன்கள், பாதயாத்திரை, பெண்தெய்வவழிபாட்டின் கிறிஸ்தவ நீட்சிகள், வீரமாமுனிவர், பெஸ்கி, கால்டுவெல் உள்ளிட்ட அறிஞர்கள், வரி விதித்தல், பேய்கள், மத நம்பிக்கைகள், பாலியல் உறவை ஒறுத்தல், தைப்பொங்கல், ஜல்லிக்கட்டு, தாலியணிதல், பாஸ்கா நாடகம், தலித் கிறிஸ்தவம் என இந்நூலின் களங்கள் விரிந்து நிற்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால் இந்த நூலின் தலைப்பு சொல்வதுபோல உண்மையிலேயே அறியப்படாத கிறிஸ்தவத்தை இந்த நூல் முன்னெடுத்திருக்கிறது. பெரும் பொருட்செலவில் நிவேதிதா லூயிஸ் தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டார். அதனாலேயே இந்நூல் அறிவின் பயனாக மிளிர்கிறது. இந்த நூல் நாட்டார் கிறிஸ்தவ வழக்காற்றியலைப் பெருமளவு பதிவு செய்துள்ளது. நூலாசிரியரின் இப்படைப்பை அனைவரும் நிச்சயம் பாராட்டுவார்கள். அவரது எழுத்துக்கள் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு வளம் சேர்க்க வேண்டும்.
***
மக்கள் குரல்
முனைவர் ஆனந்த் அமலதாஸ், சே.ச.,
இந்நூல் தமிழகத்திற்கு எப்பொழுது கிறித்தவம் வந்தது என்ற கேள்வியோடு தொடங்குகிறது. ஏறக்குறைய ஆயிரம் பக்க அளவில் கிறித்தவத்தின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைச் சுருங்கச் சொல்லும் முயற்சியாக ஆசிரியர் இந்த நூலை முன்வைக்கின்றார்.
இது ஒரு வரலாற்று நூல்தான். ஆனால் நாம் இதுவரை கற்று அறிந்த வழக்கத்திற்கு மாறான கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. வரலாறும் மனித இனவரையியல் ஆய்வோடும் (ethnography) இணைந்த வரலாற்று எழுத்தாண்மை (historiography) இங்கு இடம் பெறுகிறது.
இதில் இன்னும் ஒரு சிறப்பு அம்சத்தைக் குறிப்பிட வேண்டும். ஐரோப்பாவில் முனைவர் பட்டம் பெற்ற நம்மவரில் சிலர் அங்கே ஆவணப்படுத்தப்பட்ட ஏடுகளை வைத்து ஒரு நூலகத்தில் அமர்ந்து புனையப்பட்ட வரலாற்று நூல் போல இது அல்ல. இங்கு இடம்பெறும் அத்தனை இடங்களுக்கும் நேரடியாகச் சென்று களப்பணி ஆற்றி, அங்குள்ள மக்களோடு உரையாடி அதன் விளைவாக உருவான நூல் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இந்த ஆசிரியர் மேற்கொண்ட கள ஆய்வு என்பது பழைய கட்டடங்கள், அதிலே மறைந்து கிடக்கும் கல்வெட்டுகள், கல்லறைகள் என தேடிக் கண்டு பிடித்த அனுபவத்தின் பதிவுகள்.
அது மட்டுமல்ல. ஏற்கெனவே பதிவான வரலாற்றுத் தரவுகளோடு நாட்டார் மரபு முறையில் அந்தந்த ஊர்களில் வழக்கில் உள்ள பாடல்களை உள்வாங்கி அவை கூறும் வரலாற்றைப் பதிவு செய்துள்ள முறை வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும். அதனால் இந்நூல் ஒரு துப்பறியும் நாவலைப் போன்ற பாணியில் அமைந்து உற்சாகத்தோடு வாசகர்களை நடத்திச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
***
நவீனம் போல் தோன்றும் வரலாறு
முனைவர் மார்க்சிய காந்தி
தமிழ்மண்ணின் பண்பாட்டை வாழ்வியலை வரலாற்றினை எவ்வாறு கிறித்துவம் உள்வாங்கிக் கொண்டது என்பதைக் கள ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பெற்றுள்ளது ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற இந்த நூல்.
தமிழகத்திற்குக் கிறித்தவம் வந்த காலத்திற்குரிய ஐயத்திற்கிடமில்லாத சான்றுகள் இல்லாதிருப்பினும், தோமை, கத்தோலிக்கம், ஆங்கலிகம், சீர்திருத்தம் போன்ற பல பிரிவுகளிலும் கிறித்துவம் தமிழகத்தில் பரவிய, கால்கொண்ட தன்மையினைக் கிறித்துவ வரலாறு பற்றிச் சிறிதும் அறியாதவர்களும் தெளிவாக அறியும் வண்ணம் வரலாற்று முறையில் இந்நூலை யாத்துள்ள நிவேதிதாவின் படைப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.
ஆயிரம் பக்கங்களைக் கொண்ட நூலாயினும், தன்னுடைய இயற்கையான கேலியும் கிண்டலும் கலந்த நடையால் ஒரு நவீனத்தினைப் படைக்கும் படைப்பாளிபோல நிவேதிதா இந்நூலை ஆக்கித் தந்திருப்பது, வாசகரைப் படிக்கத் தூண்டுவதாகவும், வாசிப்பில் மகிழ்ச்சி கொள்ள வைப்பதாகவும் அமைந்துள்ளது. ஆசிரியரின் ஒவ்வொரு நூலும் வரலாற்றை மெருகேற்றும் முயற்சியாக அமைகிறது. மேலும் பல நூல்கள் படைக்க மனமார்ந்த வாழ்த்து.
***
இது என் மண்
நிவேதிதா லூயிஸ்
பெயர் ஒருவருக்கு எவ்வளவு பெரிய அடையாளத்தைத் தருகிறதோ, அதே அளவுக்குத் தலைவலியும் தருகிறது. நாம் என்ன சாதியாக, என்ன மதத்தவராக இங்கு அடையாளம் காணப்படுகிறோமோ, அந்த அடையாளமே நம்மை மற்றவர் எப்படி நடத்துகின்றனர் என்பதற்கான அடித்தளமாக அமைகிறது.
நாம் இறை மறுப்பாளரோ / சாதி மறுப்பாளராகவோ, சுயசாதிப் பற்றற்றவர்களாகவோ இருந்துவிட்டால், இன்னும் அதிகமாக நம் வேர்களை அந்த நாலு பேர் தேடத் தொடங்கிவிடுகின்றனர். நம்மை ஏதோ ஒரு சட்டத்துக்குள் புகுத்தும் அவசரம் எல்லோரிடமும் இருக்கிறது. அந்த சட்டத்துக்குள் சிக்காமல் காற்றாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவில் நானும் ஒரு சிறு துளி.
என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால் அது என் மதம்/சாதி சார்ந்த அடையாளமல்ல. இந்த வேறுபாடு அனைவருக்கும் புரிவதில்லை. ‘வந்தேறி’, ‘அரிசிமூட்டைக்கு மதம் மாறியவர்கள்’, ‘ரொட்டித் துண்டுக்கு மதம் மாறியவர்கள்’, ‘பாவாடை’ போன்ற சொல்லாடல்களை அன்றாடம் சந்தித்து வரும் லட்சக்கணக்கான கிறிஸ்தவப் பெயர் சுமக்கும் இந்தியர்களில் நானும் ஒருத்தி.
அடிப்படையில் இது என் மண். இந்த நிலம் என் மூதாதையர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர்மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்… அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர் தான். இந்த நூல் சொல்ல வரும் செய்தியும் அதுவே. கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ, சிறுபான்மை மக்களின் முதல் அடையாளம் அவர்களின் தாய் மண்ணும், அம்மண் சார்ந்த வழக்கங்களுமே. அதை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
ஒன்றிரண்டு நூலகங்களில் அமர்ந்துகொண்டு, பழைய நூல்களை வாசித்து அவற்றைத் தொகுத்து நூல் எழுதும் முறையில் எனக்கு நாட்டமில்லை. யாரோ ஒருவர் ஏற்கனவே கண்டு, தொட்டு, புரிந்து உணர்ந்த அந்த நேரடி அனுபவத்தை நானும் பெற விரும்பியதன் விளைவே இந்த நூல். தென்மேற்கு தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை, கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரி வரை தமிழகத்தின் நீள அகலங்களில் பயணித்து, கள ஆய்வின் மேல் காத்திரமான அழுத்தம் தந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
2021 ஜனவரி தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்தப் பயணங்கள் நீண்டன. சில நேரம் தோழி ரோடாவுடன், இன்னும் சில நேரம் நட்சத்திரங்களின் துணையுடன் சில ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து, குறைந்தது இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து, இருநூறு மணிநேரத்துக்கும் அதிகமான ஒலி, ஒளி பதிவுகளைப் பதிந்து, அவற்றைக் கேட்டு எழுதி, களத்தில் கண்டெடுத்த முத்து இந்நூல்.
கொரோனா நாடடங்கு காலத்தில் நாள் முழுக்க மாஸ்கை அணிந்துகொண்டு, மீண்டும் மீண்டும் கை கழுவி, சானிடைசரில் குளித்து எழுந்து, உண்மையில் உயிரைப் பணயம் வைத்து எழுதப்பட்ட நூல் எனச் சொல்வேன். சூழல் என்னை விடவில்லை. நவம்பர் மாதம் கொரோனாவில் விழுந்தபோது என் ஆசைகளில் ஒன்றாய், இந்த நூலை கையில் பார்த்துவிடவேண்டும் என்பதும் இருந்தது.
ஒன்றிரண்டு நாள்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தில் மறைபரப்பு செய்தனர் எனச் சொல்லி இந்துத்துவ கும்பல் கிறிஸ்தவ நூல்களை எரித்தது. இந்நூல் வெளிவரும் சூழல் முக்கியமானது. ஓராண்டுப் பயணத்திலும், புரிதலிலும், வாசிப்பிலும் நான் கண்டது ஒன்றே. அவர்கள் தங்களை தமிழர்களாக, தமிழ் மண்ணின் மகன்களாக, மகள்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். பிற மதத்தவர்களுடனான அவர்களின் உறவுகளை இந்த நூல் அங்கங்கே தொட்டுச் செல்கிறது.
‘செக்யூலரிசம்’ என்ற சொல்லையே இன்று ‘சிக்யூலர்’ எனக் கிண்டல் செய்துகொண்டிருக்கும் மோசமான சூழலில், காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கையில், கிறிஸ்தவர்கள் எங்கே நிற்கின்றனர் என்பதை இந்நூல் தெளிவாக உணர்த்துகிறது.
0
கத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறிஸ்தவம், ரட்சணிய சேனை, லுத்தரன் என ஒரு சில பிரிவுகளை மட்டுமே இந்த நூல் தொட்டிருக்கிறது. ‘நியூ ஏஜ் சர்ச்சஸ்’ எனப்படும் 1970களுக்குப் பிறகான சபைகளை ஆய்வுப் புலத்துக்குள் கொண்டுவரவில்லை. இந்த நூல் மலையின் முனையைத் தொட்டிருக்கிறது. விரித்து ஆய்ந்து எழுத நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
நான் நாட்டுப்புறவியல், இனவரைவியல் ஆய்வாளரோ, கல்வியாளரோ அல்ல. கள ஆய்வாளர். நான் காண்பவற்றை, எனக்கு இருக்கும் பட்டறிவு, அனுபவ அறிவுக்கு ஏற்றவாறு புரிந்துகொண்டு விளக்க முற்பட்டிருக்கிறேன். என் அனுபவங்களே என் ஆசான்.
***
அறியப்படாத கிறிஸ்தவம்
நிவேதிதா லூயிஸ்
கிழக்கு பதிப்பகம்
பாகம் 1 – 608 பக்கங்கள்; பாகம் 2 – 664 பக்கங்கள்
விலை: ரூ. 1299/-