Skip to content
Home » ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?

‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?

பிற்படுத்தப்பட்ட வகுப்பு

தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விவாத வெளியில் பல காலமாக நடந்து வரும் விவாதங்களுக்கு ஞான அலாய்சியஸ் எழுதிய ‘Contextualising Backward Classes Discourse’ விடையாக அமையும் என்று தோன்றுகிறது.

ஒரு புத்தகம் பக்கம் பக்கமாக, தலையணை போல உயரமாக, எளிய மக்கள் வாங்கவே இயலாத அளவு விலையுடன் இருப்பது என்பது இன்றைய நிலையாகிவிட்டது. ஆனால் அத்தனை பெரிய புத்தகங்கள் எழுப்பாத தாக்கத்தினை, மொத்தமாக அடிப்படைப் புரிதலையே மாற்றும் வேலையினை அலாய்சியசின் இந்த 50 பக்கங்களே கொண்ட புத்தகம் செய்துவிடுகிறது. ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினை’ பற்றிய வரலாற்று வரையரையினையை இந்தப் புத்தகம் மாற்றிவிடுகிறது.

புதிய கேள்விகள்

‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன? எவ்வாறு இதனை வரையறுப்பது? கல்வி, வேலை போன்ற சமூகத் தளங்களில் பின்தங்கிய சாதிகளை ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பாக’ வரையறைத்து வைத்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இது சரியான, முழுமையான விளக்கம்தானா? இவ்வாறு வரையறுக்கப்பட்ட சமூகங்களுக்கு இத்தனை சதவிகிதம் இடஒதுக்கீடு என்பது எதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது? அதனை ஏதோ வரலாற்று வெற்றியாகக் கொண்டாடி தீர்த்தாலும், இன்று வரை அதை நடைமுறைப்படுத்துவதில் ஏன் இத்தனை சிக்கல்கள்? இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் ஏன் அமையக்கூடாது? இப்படிக் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு இந்த நூல் விடையாக அமையும்.

இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம், ‘பிற்படுத்தப்பட்ட சமூகம்’ என்பதன் வரையறை சரியான வரலாற்று அடிப்படையில் அமையாமல், நிர்வாகத்திற்காகவும் அரசியல் பிழையாகவும் அமைக்கப்பட்டதால்தான் என்கிறார் நூலாசிரியர்.

ஆசிரியரின் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான’ வரலாற்று அடிப்படை ஆங்கிலேய காலனியாதிக்கத்தில் இருந்து தொடங்குகிறது. சாதியும் வர்ணாசிரமப் பிரிவுகளும் பண்டைய காலம் முதல் இந்தியாவில் இருப்பினும், இந்த வரலாற்று அடிப்படை ஏன் காலனிய ஆதிக்கத்தில் தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் நவீன காலத்தின் தொடக்கம் பற்றிச் சிறிது புரிந்து கொள்ள வேண்டும்.

நவீன காலத்தின் தொடக்கம்

ஆங்கிலேயர் உட்பட பிற ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்புதான் இந்தியத் துணைக்கண்டத்தில் ‘நவீன காலம்’ தொடங்குகிறது. அதற்கு முன்பு ‘பார்ப்பனியம்’ என்பது இந்தியா முழுமைக்குமான நிலைமையாக இருந்தது இல்லை. மாறாக வளம் நிறைந்த ஆற்றுப் படுகைகளில்தான் (சமவெளிகளிலும் டெல்டாக்களிலும்) பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இது போன்ற வளம் நிறைந்த இடங்களில், ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்தைய மன்னர்களின் ஆட்சியிலும் நிலவுடைமையாளர்களாக, வரி வசூல் செய்து அரசுக்குத் தரும் அதிகாரிகளாகப் பார்ப்பனர்கள் இருந்தனர்.

உலகளவில் காலனியாதிக்கம் என்பது அங்கங்கு இருக்கும் ஆளும் வர்க்கத்தின் உதவியோடுதான் நடைபெற்றது. ஏற்கெனவே அங்கு நிலைபெற்று இருக்கும் சமூக-அரசியல் நிறுவனங்களைத் தான் காலனியம் தனக்குச் சாதகமாக மாற்றும். இந்தியத் துணைக்கண்டத்திலும், முதன் முதலில் கங்கை நதியின் டெல்டாவான வங்காளத்திலும் நிர்வாகம் மற்றும் வரி வசூல் உரிமை பெற்ற ஆங்கிலேயர்கள் அங்கிருந்த பார்ப்பனர்களின் உதவியோடுதான் வரிவசூல் செய்தனர். ஆங்கிலேயர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிர்வாக வர்க்கமாக, அங்கு நிலைபெற்றிருந்த பார்ப்பனர்கள் இயங்கினார்கள்.

பின்பு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியபோது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, அதே பார்ப்பனியத்தை இந்தியா முழுமைக்குமான சமூக அமைப்பாகவும், பார்ப்பனர்களை இந்தியா முழுமைக்குமான நிர்வாக வர்க்கமாகவும் விரிவுப்படுத்தியது. இந்தப் பணிக்காக பார்ப்பனர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியும், அரசாங்கப் பணிகளும், பதவிகளும் வழங்கப்பட்டன. இந்தியத் துணைக்கண்டம் நவீன காலத்திற்குள் நுழைந்தபோது உருவான அரசியல், சமூக, பொருளாதார நிறுவனங்கள் (Institutions) மற்றும் வெளிகள் (Spaces) அனைத்திலும் பார்ப்பனர்கள் இப்படித்தான் ஆதிக்கத்திற்கு வந்தனர்.

கம்பெனி ஆட்சியை தவிர பிற சமஸ்தான அரசுகள் இருப்பினும், இந்தியத் துணைக்கண்டத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த கிழக்கிந்திய கம்பனியுடன் தொடர்பு கொள்ள அனைத்து சமஸ்தானங்களும் பார்ப்பனர்களை நம்ப வேண்டியிருந்தது.

பிற்படுத்தப்பட்டோரும் காலனியமும்

இதனால்தான் ஆசிரியர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் வரலாற்றைக் காலனிய ஆதிக்கக் காலத்தில் இருந்து துவங்குகிறார். அதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் இருந்த பார்ப்பனர்கள், இந்தியா முழுவதும் உருவான நவீன அரசியல் தளத்தை, காலனியாதிக்கத்திற்குப் பிறகுதான் கைப்பற்றுகின்றனர். ஒட்டுமொத்தமாக ஒரு சமூகமாக இந்தத் தளத்தில் நுழைகின்றனர்.

இதனை ‘பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் வரையறையில்’ நடைபெறும் முதல் வரலாற்று நிகழ்வு என்கிறார் ஞான அலாய்சியஸ். இந்த வரலாற்று வரையறையில் இது போன்று ஐந்து நிகழ்வுகள் உள்ளன.

இரண்டாவது நிகழ்வு, பார்ப்பனர்கள் இப்படிச் சமூகமாக காலனிய ஆதிக்கத்தில் உருவான அரசியல் சமூகத் தளங்களை நிரப்புவதை பார்ப்பனர்களைத் தவிர்த்து பிற சமூகத்தவர் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பல்வேறு சமூகங்கள் போராடுகின்றன. போராட்டத்தின் தன்மை, ஆயுதம், தளம் என்று அனைத்தும் வேறுபட்டாலும், அவற்றின் இலக்கு புதிதாக உருவாகும் இந்த நவீன அரசியல் சமூகத் தளங்களில் நுழைவதே!

இரண்டு விதமாக இந்த எதிர்ப்பு நிகழ்ந்தது. ஒன்று, பார்ப்பனிய அமைப்பை நிராகரித்து அதற்கு வெளியில் இருப்பதான அடையாளங்களை (பார்ப்பனரல்லாதோர், ஆதி-திராவிடர், ஆதி-தமிழர், ஆதி-ஆந்திரர், அருந்ததியர், அதர்மர்) தரித்துக் கொண்டது. இது அமைப்பு (Structural) ரீதியிலான எதிர்ப்பு.

மற்றொன்று – பார்ப்பனிய அமைப்பின் உள்ளேயே உயர் இடங்கள் கோருவது. சத்திரியர், வைசியர் போன்ற அடையாளங்களை ஏற்றுக்கொள்வது. இது நிலை (Positional) ரீதியிலான எதிர்ப்பு. இவ்வாறு கிட்டத்தட்ட அனைத்துச் சாதிகளும் சமூகங்களும் நவீன சமூக-அரசியல் தளங்களுள் நுழைய, இயங்கவும் மாறவும் போராடவும் செய்கின்றன.

இந்த இடையறாத போராட்டங்களினால், அடுத்து மூன்றாவது நிகழ்வாக ‘சமூக உரிமை’ (Community rights) என்னும் கருத்துருவாக்கம் நிகழ்கிறது. இந்தியச் சமூகம் மேற்கத்திய சமூகம் போன்று தனி மனிதர்களாக இல்லாமல், சமூகங்களாக உள்ளது. அதனால் உரிமைகள் மேற்கத்திய நிலைமை போன்று தனிமனித உரிமைகளாக இல்லாமல், சமூகங்களுக்கான உரிமைகளாக இருக்க வேண்டும் என்று இந்தக் கருத்துருவாக்கம் முன்மொழிந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியும் பிற்படுத்தப்பட்டோரும்

1857க்குப் பின்பு கம்பெனி ஆட்சி முடிந்து ஆங்கிலேய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, சமூக-அரசியல் தளங்களில் நிறைந்து வழிந்த பார்ப்பனிய ஆதிக்கத்தைக் குறைக்கவும், நடைபெற்றுக்கொண்டிருந்த பிற சமூகங்களின் எதிர்ப்பலையை மட்டுப்படுத்தவும், பெயரளவிலேனும் பிற சமூகங்களை இந்தத் தளங்களுக்குள் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மூன்று தளங்களில் இந்த முயற்சி நடக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் உரிமைகள்!

எந்தெந்த சமூகங்கள் அமைப்பாக திரண்டு, தங்களது சமூகத்திற்கான பிரதிநிதியாக மாறி அரசிடம் உரிமைகள் கேட்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் ‘சமூக உரிமைகள்’ வழங்கப்பட்டு வந்தன. அல்லது அதற்கான துவக்கப் புள்ளிகள் வைக்கப்பட்டன. வரலாற்றில் 1850 முதல் 1890 வரை பல்வேறு சாதிகளும் சமூகங்களும் தங்களுக்கென்று சங்கங்கள் உருவாக்கும் போக்கை காணமுடியும். இவை இயல்பிலேயே பார்ப்பன ஆதிக்கத்தினை எதிர்ப்பதாக இருந்தன.

பம்பாய் மாகாணம் மற்றும் மதராஸ் மாகாணத்தில் இந்தப் போக்கு மிகத் தீவிரமாக நிகழ்கிறது. வடக்கு மாகாணத்தில் இந்த எதிர்ப்பு மதத்தின் அடிப்படையில் நிகழ்கிறது. இதன் நீட்சியாகத் தான் ‘இந்து மதம்’ என்ற ஆட்சியதிகார வரையறையை (Administrative Convenience) நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிற சிறுபான்மை மதத்தோர்க்கும் இந்த நவீன சமூக அரசியல் தளங்களில் நுழைவதற்கான உரிமைகள் வழங்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் ‘இந்து மதம்’.

இதில் முதல் கட்டமாக இஸ்லாமியர்களுக்கும், அட்டவணைச் சாதிகளுக்கும் நவீன சமூக-அரசியல் தளங்களில் நுழைவதற்கான சட்ட ரீதியிலான அங்கீகாரம் தீர்க்கமாக நிறைவேற்றப்பட்டது. எண்ணிக்கையில் சொற்பமாக இருந்த இவர்களின் உள்நுழைவு பார்ப்பன ஆதிக்கத்தைப் பெரிதளவில் பாதிக்கவில்லை என்பது இதற்கு ஒரு காரணம்.

ஆனால் இவற்றை தவிர பிற பார்ப்பனர் அல்லாத சாதிகள் நுழைந்தால் பார்ப்பனர்கள் மேற்சொன்ன அரசியல் தளங்களில் முழுவதும் ஒதுக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து, அதற்கு பார்பனர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ‘இந்திய தேசியவாதமாக! இது தான் நான்காவது நிகழ்வு.

மேற்சொன்ன அதே 1880களில் தான் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பார்ப்பனர்கள் சூழ உருவாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய அரசு ‘சமூக உரிமைகள்’ மூலம் ஒவ்வொரு சமூகமாக, நவீன அரசியல்-சமூகத் தளங்களில் சேர்த்துக்கொண்டிருக்கும் நேரம்; ஏற்கெனவே ஒரு சமூகமாக இவற்றைப் பெற்று தற்போது ‘நடுத்தர வர்க்கமாக’ உருவாகியிருந்த பார்ப்பனர்கள் தேசியவாதம் என்ற பதாகையை ஏந்திக்கொண்டு ‘சமூக உரிமைகளையும்’அதை வழங்கிய காலனிய அரசையும் எதிர்க்கத் துவங்கினர். ‘சமூக உரிமைகள்’ இந்தியாவைப் பிளவுபடுத்தி, தொடர்ந்து அடிமைப்படுத்தவே அன்றி வேறெதற்கும் இல்லை என்று கூறப்பட்டது.

இதே கூற்றை காந்தியின் வாயிலிருந்து பூனா ஒப்பந்த விவாதத்தில் கேட்டிருப்போம். இதனால்தான் இந்தியச் சுதந்திர போராட்ட காலத்தில் காலனிய அரசிற்கும் இங்கிருந்த நடுத்தர வர்க்கத்திற்கும் இருந்த முரணைவிட; நடுத்தர பார்ப்பனிய வர்க்கத்திற்கும் அட்டவணைச் சாதிகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், சிறுபான்மையினருக்கும் இடையிலான முரண் தீவிரமாக இருந்தது என்கிறார் ஆசிரியர். பெரியார் உட்பட எண்ணிலடங்காத தலைவர் காங்கிரஸைவிட்டு வெளியேறவும் இதுவே காரணம்.

சுதந்தரத்துக்குப் பிறகு

இந்தப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வரலாற்று வரையறை நிகழ்வுகள், 1947ஆம் ஆண்டு சுதந்திர இந்திய அரசின் தோற்றத்தில் முடிகிறது. இதுதான் ஆசிரியரின் கூற்றுப்படி ஐந்தாம் நிகழ்வு. வரலாற்று ரீதியாக இத்தனை பெரிய வரையறை கொண்ட ‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களை’ சமூக, பொருளாதார அளவில் பின்தங்கிய சமூகங்களாகச் சுருக்கி வரையறுத்து, அவற்றின் முன்னேற்றத்திற்குத் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்று அரசியலமைப்பு அமைக்கப்படுகிறது.

இது பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் என்கிறார் ஞான அலாய்சியஸ். எதற்காக காலனியாதிக்கத்தை எதிர்த்து ‘இந்திய தேசியம்’ கட்டமைக்கப்பட்டதோ அந்த இலக்கை சுதந்திர இந்தியாவை அமைப்பதன் மூலம் சாதித்திருக்கிறது பார்ப்பனியம்.

சமூகங்களால் அமைந்த இந்தியத் துணைக்கண்டத்தில் ‘சமூக உரிமைகளை’ மறுத்து மேற்கத்திய நாடுகள் போல் தனிமனித உரிமைகளை அடிப்படையாய் கொண்ட அரசியல் சாசனம் இயற்றப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாசன சபையும் முழுக்க முழுக்க காங்கிரஸ் மற்றும் பார்ப்ன ஆதிக்கத்திலேயே இருந்தது. அம்பேத்கர் போன்ற சில காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் இருந்தாலும் சபை ‘அனைவரையும் உள்ளடக்கியதாக’ உள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கவே என்கிறார் ஆசிரியர்.

நவீன சமூக-அரசியல் தளங்களில் இந்தியப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இருந்த உரிமைகள் ‘சலுகைகளாக’ பெயர் மாற்றபட்டன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற தனி மனித உரிமைகள் ‘அடிப்படை உரிமைகளின்’பகுதியில் எழுதப்பட்டு அவை ‘Legally Binding’ என்று கூறப்பட்டது. அதே நேரம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமைகள் ‘Directive Principles of State Policy’இல் சேர்க்கப்பட்டது. இப்படி இந்திய அரசின் அடிப்படையே ‘சமூக அரசியல் தளங்களில்’ பார்ப்பனிய ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காக உருவாக்கப்பட்டதால்தான் இந்திய சுதந்திரத்தை பெரியார் ‘கருப்பு தினம்’ என்றார்.

ஏற்கெனவே முதன்முதலில் சமூகமாக இந்தத் தளங்களில் நுழைந்த பார்ப்பனர்கள் தனி மனிதர்களாக இயங்குவதற்கான சமூக மூலதனத்தை (Social Capital) பெற்றதால் இன்று சமூக உரிமைகளை மறுத்து அவர்களை ‘மெரிட்’ என்று கூறிக்கொண்டு சமூக உரிமைகளில் மிகவும் அடிப்படையான ஒன்றான இடஒதுக்கீடை பெறுபவரைக் கூட ‘சலுகை’ என்கின்றனர். பிற இடங்களில் தனி மனித உரிமைகளைப் பிரகடனம் செய்துவிட்டு, இட ஒதுக்கீட்டில் சமூக உரிமையாக ‘EWS ஒதுக்கீட்டை’ கேட்கின்றனர். இதற்குக் காரணம் வரலாறு அற்ற வரையறையாக, வெறும் முன்னேற்ற சலுகையாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ‘சமூக உரிமை’ சுருக்கப்பட்டது தான்.

வரலாற்று ரீதியல் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பான்மை மக்கள் ‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களாக’, சமூக-அரசியல் தளங்களில் இருந்து விலக்கப்பட்டவர்களாக உருவாகக் காரணமான ‘ஆங்கிலேய-பிராமணியம்’ அல்லது ‘பிராமணிய-ஆங்கிலேயம்’ (Anglicized Brahmanism), இன்று தங்களை ஏழைகளாக கூறிக்கொண்டு இட ஒதுக்கீடு கோருவது எத்தனை அபத்தம் என்பது இந்த வரலாற்று வரையறைகள் தெரிந்தால் புரிய வரும்.

இந்த வரலாற்று வரையறையின்றி இந்திய மக்கள் தொகையை ‘Forward castes’, ‘Other Backward Castes/Class’ and ‘Scheduled castes and tribes’ என்று பிரிப்பது நவீன இந்தியாவின் மூன்று வர்ணங்களாக இவற்றை உருவாக்குமே அன்றி, நவீன தாராள ஜனநாயகத்தின் தன்மையிலான, தனி நபர்கள் நிறைந்த சமத்துவ சமூகத்தை உருவாக்காது என்கிறார் ஆசிரியர்.

சுதந்திர இந்திய அரசின் உருவாக்கத்தின் மூலம் அதுவரை பெற்றிருந்த உரிமையையும் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ இழந்துள்ளது. அதை வழங்கும் முனைப்பு இந்திய அரசின் அடிப்படயிலேயே இல்லை என்பதை இந்தப் புத்தகம் நிரூபணம் செய்கிறது.

இந்த நூலை வாசிக்கும் முன் நானும் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பது சமூகப் பொருளியல் தளங்களில் பின்தங்கியவர்களைக் குறிக்கும் பதம் என்றே நினைத்தேன். அவர்கள் முன்னேற்றத்திற்குதான் இடஒதுக்கீடு போன்ற உரிமைகள் தரப்படுகின்றன என்றும் நம்பினேன்.

ஆனால் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பது நவீன சமூக-அரசியல் தளங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்ட சமூகங்களைக் குறிக்கிறது என்ற புரிதலை அலாய்சியஸின் இந்த நூல் வழங்கியுள்ளது. இதனை அடிப்படை கருத்துருவாக்கமாக வைத்து பல்வேறு சாதிய, சமூக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இயலும்.

Aloysius book

Contextualising Backward Classes Discourse
G. Aloysius
Critical Quest
பக்கம் 56, விலை ரூ.40

பகிர:
ஹரி பாரதி

ஹரி பாரதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தற்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். சூழல், சமூகப் போராட்டங்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துவருகிறார்.View Author posts

2 thoughts on “‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?”

  1. புத்தக எலி

    வரலாற்றில் எந்த அளவுக்கு பார்ப்பன ஆதிக்கத்தால் துரோகங்களும், தந்திரங்களும் நடந்திருக்கிறது என்பதை இந்த ஆக்கத்தின் மூலமாக தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

    அதுமட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பது சமூகப் பொருளியல் தளங்களில் பின்தங்கியவர்களைக் குறிக்கும் பதம் அல்ல என்பதையும், அது (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) நவீன சமூக-அரசியல் தளங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்ட சமூகங்களைக் குறிக்கிறது என்பதையும் இந்த ஆக்கத்தின் மூலமாக தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது…

    இந்த ஆக்கத்தினை வாசிக்கிற போது வரலாற்றில் நடந்தவற்றை நாமே அந்த காலத்திற்கு பின் சென்று பார்த்து வந்தது போல் ஒரு அனுபவம்.

    மிகவும் அருமையான ஒரு புத்தகம். இந்த புத்தகத்தைப்பற்றி எங்களுக்கு அறிய தந்த த. ஹிரி பாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌷🌷

  2. This book should be read, not to take what is there in it at face value but how twisted a sense of history this writer has. The young writer who has summarised this book should ask for evidence for every statement found in the 50-page book, rather than taking them at face value.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *