Skip to content
Home » சமஸ்தானங்களின் கதை

சமஸ்தானங்களின் கதை

False Allies

இந்திய வரலாற்றாய்வில் பெரிதாக ஒளி பாய்ச்சப்படாத இடங்களுள் சுதேச சமஸ்தானங்களும் ஒன்று. இந்தியத் துணைக்கண்டத்தின் ஐந்தில் இரண்டு பங்கு இடத்தையும் கால் பங்கு மக்கள் திரளையும் சுதேச சமஸ்தான அரசர்கள்தான் கட்டி ஆண்டனர். சிறிதும் பெரிதுமாக 562 சுதேச சமஸ்தானங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்துள்ளன. பிரிட்டிஷ் முடியாட்சியுடன் இணக்கமாக இருந்த காரணத்தால் இவர்கள் தனியாக ஆட்சி செய்ய முடிந்தது, ஆனால் அந்த ஆட்சியில் பிரிட்டிஷ் தலையீடு அதிகமாகவே காணப்பட்டது.

சமஸ்தானங்களின் ஆட்சிமுறை சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. அங்கிருந்த மன்னர்களுக்கு மேலைநாட்டு நவீனத்தின் மீதான மோகமும் அதே சமயத்தில் மரபார்ந்த ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணமும் ஒருசேர இருந்தது. புதிய கண்டுபிடிப்புகளை இவர்கள் உடனுக்குடன் நுகர ஆசைப்பட்டார்கள். நவீன ஆடைகளை உடுத்திக்கொண்டார்கள். தங்களை ஆங்கிலேயர்களுக்கு இணையாக இவர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலான மன்னர்கள் பிரிட்டிஷ் சார்புநிலை கொண்டவர்களாகவே இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்குப் பொருளாதார ரீதியிலான வளத்தை இத்தகைய சுதேச சமஸ்தானங்களே வழங்கி வந்துள்ளது.

எதிர்கால இந்தியாவின் முக்கியப் பிரதிநிதிகளாக இவர்கள் கருதப்பட்டார்கள். இதன் பொருட்டு வட்டமேசை மாநாடுகளுக்கு இவர்கள் அழைக்கப்பட்டனர். ஒருபுறம் பிரிட்டிஷ் ஆதரவு நிலையை எடுத்திருந்தாலும், தேசியவாதத் தலைவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள்.

அம்பேத்கர் தொடங்கி, முத்துலட்சுமி, மேரி பூனன் போன்ற ஆளுமைகள் எல்லாம் சுதேச சமஸ்தானங்களின் உதவியுடன்தான் உயர்கல்வி பயின்றார்கள். ஜோதிராவ் புலே தனது Shetkaryaca Asud (Cultivator’s Whipcord) எனும் புத்தகத்தின் முதல் பிரதியை பரோடா மன்னரான சாயாஜி ராவுக்குத்தான் அளித்தார். மேலும், அவர் வைத்த கோரிக்கையின் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கிடைத்தது. பின்னாளில் அம்பேத்கர் உதவித்தொகை பெறவும் புலேவின் இந்த நடவடிக்கைதான் காரணமாக இருந்தது. இத்தகைய சமூகச் சீர்திருத்த எண்ணங்களைக் கொண்ட மன்னர்களும் அப்போது இருந்துள்ளார்கள்.

எந்த நவீனச் சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் விரும்பாத மன்னர்களாக ராஜபுத்திரர்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் ஆட்சிசெய்த பகுதிகள் இன்றளவும் பல அம்சங்களில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கியே இருக்கின்றன.

சில இந்திய தேசிய இயக்கத் தலைவர்கள் காலனியத்திற்கு எதிரான போரில் சுதேச மன்னர்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதினார்கள். சில மன்னர்கள் தங்களைத் தேசியவாதிகள் என்றே கருதிக்கொண்டார்கள். 1894இல் மைசூர் மகாராஜா மறைந்தபோது காங்கிரஸ் இயக்கம் அவருக்காகத் துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்தியது.

ஆனால் விடுதலைக்குப் பின் இவர்களுக்கு ஏற்பட்ட நிலையைச் சொல்லி தெரியவேண்டியதில்லை, படேலின் வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால் சுதேச மன்னர்கள் எல்லாம் ‘இந்தியாவின் நலனுக்காக அகற்றப்படவேண்டிய நச்சுப்புண்கள்’.

மனு எஸ். பிள்ளை தனது ‘False Allies’ புத்தகத்தில் சுதேச மன்னர்களைப் பற்றியும் அவரகள் ஆட்சியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தொகுத்து எழுதியுள்ளார். குறிப்பாக திருவிதாங்கூர், புதுக்கோட்டை, பரோடா, மைசூர், ராஜ்புட்னா ஆகிய பகுதிகளில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை இந்நூல் பதிவு செய்கிறது.

எல்லோராலும் அறியப்பட்ட ஓவியர் ரவி வர்மாகூட ‘திருவிதாங்கூர்’ சமஸ்தானத்தில் இருக்கும் கிளிமானூர் அரண்மனையைச் சேர்ந்தவர்தான். இவர் இந்தியா முழுக்கப் பயணம் செய்து பல மன்னர்களையும், தேசிய இயக்கத் தலைவர்களையும் ஓவியமாகத் தீட்டினார். பிரிட்டிஷ் மன்னர்களின் ஓவியமும் இதில் அடங்கும். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயே ஓவியர்கள் எல்லாம் ரவி வர்மாவின் ஓவியத் திறமைக்கு முன்னால் சந்தையிழந்துப் போனார்கள். உள்ளூர் ஓவியர்களுக்கு அவரின் வருகை அச்சத்தை உண்டாக்கியது.

ராஜா ரவிவர்மாவின் பேத்திதான் திருவிதாங்கூரில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த சேது லட்சுமிபாய்.

பிரிட்டிஷ் அரசு சுதேச சமஸ்தானங்களை அவர்கள் போக்கில் விட்டுவிடவில்லை. திவான்கள் மூலம் பல நெருக்கடிகளை உருவாக்கியது. திவான்களில் சிலர் மன்னருக்கு விசுவாசமாகவும் சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாகவும் இருந்துள்ளார்கள்.

அந்தச் சமஸ்தானங்களின் நிர்வாகமும், நிதி மேலாண்மையும் திவான்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இப்படி பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்படும் திவான்கள் ஒரு கட்டத்துக்கு மேல் தங்களது குடும்ப உறுப்பினர்களை அரசவைப் பதவிகளில் புகுத்தவும் முயன்றுள்ளனர். அதில் முக்கியமானவர் தஞ்சாவூரைச் சேர்ந்த மராத்திப் பார்ப்பனரான டி.மாதவ் ராவ். திருவிதாங்கூர், பரோடா போன்ற சமஸ்தானங்களின் சிறப்பான ஆட்சிக்கு இவர் முக்கிய காரணியாக இருந்துள்ளார். இவர் பற்றிய பல சுவாரஸ்யமான குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது.

இதுபோலவே புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானான எ. சேஷய்யா சாஸ்திரி பற்றியும் அவர் எப்படி புதுக்கோட்டை சமஸ்தானத்தை நவீனப்படுத்தினார் என்பதையும் இந்நூல் பதிவுசெய்துள்ளது. இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக புதுக்கோட்டை மன்னரான மார்த்தாண்ட பைரவன் முழுக்க முழுக்க மேற்கத்தியக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு ஓர் ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரத்தை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு இவர் நிரந்தரமாக வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

இப்படிச் சுதேச சமஸ்தானங்களில் நடந்த பல சுவையான சம்பவங்களை ஓவியர் ரவிவர்மாவுடன் தொடர்புபடுத்திக் கூடவே அவர் வரைந்த ஓவியங்களையும் நூல் முழுக்க இடம்பெறச் செய்து அட்டகாசமான ஒரு படைப்பை நமக்கு வழங்கியுள்ளார் மனு எஸ். பிள்ளை. இந்திய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்நூலோடு சேர்த்து இவருடைய மற்ற இரு படைப்புகளையும் (‘The Ivory Throne’, ‘Rebel Sultans) வாசிக்கலாம். எளிதாக வாசிக்கமுடியும். ஒவ்வொன்றிலிருந்தும் நிறையப் பெற்றுக்கொள்ளமுடியும்.

False Allies

False Allies: India’s Maharajahs in the Age of Ravi Varma
Manu S. Pillai, Juggernaut

 

பகிர:
கெளதம் ராஜ்

கெளதம் ராஜ்

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி. முதுகலை அரசியல் அறிவியல் மாணவர். அரசியல், தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு மிக்கவர். ஆய்வுப் புத்தகங்களைப் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *