Skip to content
Home » திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்

திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்

Tamil Oratory

திராவிட இயக்கத்தையும் அரசியல் மேடையையும் பிரித்துப் பார்க்கவேமுடியாது. அடுக்குமொழி, அலங்கார நடை, கேட்போரை ஈர்க்கும் குரல் வளம் என்று பல சிறப்பு அம்சங்களைத் தமிழுலகுக்கு, குறிப்பாக அரசியல் களத்துக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் என்று திராவிட இயக்கத்தினரைக் குறிப்பிடலாம்.

இந்திய தேசிய இயக்கத்திலும், நீதிக் கட்சித் தலைவர்களிடமும், பெரியாரிடமும் செந்தமிழ் மொழி நடை இருக்கவில்லை. திரு.வி.கவிடம் செந்தமிழ் நடை இருந்தது என்றாலும் அண்ணாதான் பொது மேடைகளில் அடுக்குமொழிப் பேச்சைத் தொடங்கி வைக்கிறார்.

அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல் ஒலிபெருக்கி இல்லை. பொது இடங்களில் நிகழ்த்தப்படும் அரசியல் கூட்டம் என்றால் உரத்தக் குரலில்தான் உரையாற்றியாகவேண்டும். மெகாபோனும் மைக்ரோபோனும் இன்னபிற ஒலி பெருக்கும் சாதனங்களும் அதன் பிறகுதான் அறிமுகமாயின. இந்தச் சாதனங்கள் எல்லாம் வந்த பிறகு மேடைக்கேற்ற, ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு மொழி நடையை அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் உருவாக்கியிருந்தனர். பொதுக் கூட்டங்களில் இந்த நடையே பயன்படுத்தப்பட்டது.

அரசியல் மேடைத் தமிழ் என்னும் வடிவம் தமிழ்நாட்டுக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன. தனித் தமிழ் இயக்கம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே மேடைகளில் அரசியல் தமிழ் பரவலாகப் பேசப்பட்டது. காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு முறை தமிழில் பேசிய ராஜகோபாலாச்சாரியை ஆங்கிலத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்தவர்கள் சொன்னார்களாம்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் வெளி என்பது மேட்டுக்குடியினருக்கானதாக மட்டுமே இருந்துள்ளது. ஜனநாயகம் என்ற தத்துவம்தான் அரசியல் வெளியை அனைவருக்குமானதாக மாற்றுகிறது. மேடைப்பேச்சு என்பதையே ஜனநாயகத்தின் வெளிப்பாடாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய இயக்க நடவடிக்கைகளில் தொடங்கிய அரசியல் மேடைப் பேச்சு, திராவிட இயக்கத்தவர்களால் வேறொரு பரிணாமத்தை அடைந்தது.

திராவிட இயக்கம் என்பது காங்கிரஸ் இயக்கத்திற்கு எதிராக உருவான ஒரு பேரலை. அது திராவிட நாடு என்ற குடியரசைத் தனது லட்சியமாகக் கொண்டிருந்தது. பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார், திராவிடர்-ஆரியர், தமிழ்- இந்தி, மதச்சார்பற்ற நிலை-மதவாதம் போன்ற இருமைகளுள் திட்டவட்டமாக ஒன்றை அது தேர்ந்தெடுத்திருந்தது. இது போன்ற அடையாளங்கள் உருவாவதற்கும் திராவிட இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இருந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

திராவிட இயக்கத்தின் வருகைக்கு முன்னால் அரசியல் மேடைகளில் பேசப்பட்ட தமிழ் என்பது சாதி சங்கங்களில் பேசப்படும் தன்மை கொண்டதாகவே இருந்தது. மக்கள் எந்த மொழியில் பேசினார்களோ தலைவர்களும் அதே மொழியில் பேசினார்கள். வட்டார வழக்குகள் அவர்களின் மொழியில் சர்வ சாதாரணமாகத் தென்பட்டன. அன்றைய அரசியல் மொழியில் சமஸ்கிருத வார்த்தைகள் தாராளமாகக் கலக்கப்பட்டிருந்தன. கொச்சைத் தமிழ் என்று இது அறியப்பட்டது.

இதை எதிர்த்து திராவிட இயக்கம் தொன்மையான, அதாவது சங்க கால இலக்கியங்களில் பேசப்பட்ட செந்தமிழை அரசியல் மேடைகளில் பேசத் தொடங்கியது. இந்த மொழி நடை அரசியல் மேடைகளில் அதுவரை புழக்கத்திலிருந்த சாதி சார்ந்த வட்டார வழக்குகளை அப்புறப்படுத்தியது. அரசியல் மேடைகளில் நடந்த இந்தச் சாதி நீக்கம் திராவிட இயக்கம் நிகழ்த்திய மாற்றங்களுள் மிக முக்கியமானதொன்று. மேடைகளில் அனைவரையும் மரியாதையுடன் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர்களே… அவர்களே…’ என்று அழைப்பதையும். சால்வை, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வதையும் இதனோடு சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய மொழி நடை தொன்மையான வரலாற்றைக் கொண்டவர்களாகத் தமிழர்களை அடையாளப்படுத்தியது. ஆரியர் திராவிடர் என்ற மொழி/இனம்/நிலம் சார்ந்த அடையாளத்தை அரசியல் பேசுபொருளாக மாற்றியது. இந்தியை எதிர்க்கவும் இந்த மொழி நடைதான் பயன்பட்டது.

பண்டைய தமிழ் மன்னர்கள் பேசிய மொழியை போன்று இந்தச் செந்தமிழ் மொழி நடை இருந்தது. பேச்சாளருக்கும் கேட்பவர்களுக்கும் இடையிலான ஒரு வேறுபாடு இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த வேறுபாடு என்பது தமிழ் பண்பாட்டில் மரபாகத் தொடரும் கடவுளுக்கும் பக்தருக்கும் இடையே இருக்கும் உறவுடன் ஒப்பிடத்தக்கது.

திராவிட இயக்க மேடைகளில் பேசப்பட்ட மொழி நடை, அந்த மேடைகளின் பாங்கு, அங்கு பேசிய பேச்சாளர்கள், தமிழ்நாட்டில் வெகுஜன மக்களை உள்ளடக்கிய ஜனநாயகமயமாக்கல், அப்பணியில் மொழி பயன்படுத்தப்பட்ட விதம், தமிழ் பண்பாட்டு மரபோடு இந்த நவீன அரசியல் நடவடிக்கை ஒன்றிபோகும் முறை என்று பலவற்றை விரிவாக ஆராய்கிறது பெர்னார்ட் பேட் எழுதிய ‘Tamil Oratory and the Dravidian Aesthetic – Democratic practice in South India’ எனும் நூல்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களை அரசியல் நோக்கி அழைத்துவந்ததில் பொதுக்கூட்டங்கள் வகித்த பங்கு முக்கியமானது. அரசியல் மேடை கோவில் திருவிழாவோடு ஒப்பிடத்தக்கது என்கிறார் பேட். தனது ஆய்வுப் பகுதியாக மதுரையை எடுத்துக்கொண்டு அங்கு நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களையும் கூட்டங்களில் உரையாற்றிய பேச்சாளர்களையும் மிக நுணுக்கமாக ஆய்வு செய்கிறார் பேட்.

மதுரை என்பது கோவிலைச் சுற்றி அமைந்த நகரம். கோவில் திருவிழாவும் சரி, அரசியல் கூட்டங்களும் சரி, பெரும்பாலும் மாலை நேரங்களில்தான் நடைபெறும். கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் மரியாதைகள், குறிப்பாக மாலையிடுவது, பொன்னாடை அணிவிப்பது போன்றவற்றை த் திராவிட இயக்க அரசியல் கூட்டங்களிலும் பார்க்கமுடியும்.

திருவிழா நடைபெறும் இடத்தை அலங்கரிப்பது போலவே அரசியல் கூட்ட மேடையைச் சுற்றியிருக்கும் இடங்களும் சீரியல் விளக்குகளாலும், பேனர்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருவிழா சமயத்தில் கடவுள் ஊர்வலத்தின்போது வெளியிடப்படும் அறிவிப்புகள், தொடர்ந்து எழுப்பப்படும் ஓசை, இசை எல்லாம் அரசியல் கூட்டங்களிலும் தலைவரின் வருகையின்போது அமைந்திருக்கும். இரண்டு நிகழ்வுகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளின் உச்சம் என்று இதை அழைக்கலாம்.

கடவுள்-பக்தர் உறவைத் தலைவர்- தொண்டர் உறவுடன் ஒப்பிட முடியும். இத்தகைய பிம்பச் சித்தரிப்பு மக்களிடம் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளதையும் காணமுடியும். குறிப்பாக ஜெயலலிதாவின் முகத்தை அன்னை மேரியுடன் சேர்த்து மதுரை பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் கிறிஸ்துவ சமயத்தாரிடையே எதிர்ப்பு உருவானது. இது அந்தக் காலகட்டத்தில் பெரும் அரசியல் சிக்கலாகப் பார்க்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் பேட். மேலே நாம் கண்ட ஒப்பீட்டில் உள்ள போதாமைகளுள் இதுவும் ஒன்று என்கிறார் அவர்.

இந்நூலில் வைகோவின் மேடைப்பேச்சு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுரையில் உள்ளூர் பேச்சாளரான கவிதா என்ற திமுக தொண்டர் ஒருவரின் வாழ்கைக் குறிப்புகளும், மேடைப் பேச்சும் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலும் பேட்டின் நூலில் இடம்பெற்றுள்ளது.

திராவிட இயக்கத்தின் மேடைத் தமிழ் என்பது ஒரு காலகட்டத்தில் மாற்றம் பெறுகிறது. சிலர் செம்மையான நடையிலிருந்து விலகி வேறொரு புதிய மொழி நடையைக் கையாள்கிறார்கள். தீப்பொறி ஆறுமுகம் அதில் முதன்மையானவர். அவர் பேசிய கொச்சையான மொழி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. உங்களுக்குப் பிடித்த அரசியல் பேச்சாளர் யார் என்று 1990களில் மக்களிடம் கேட்டிருந்தால் தீப்பொறி ஆறுமுகம் என்று தயங்காமல் சொல்வார்களாம். செந்தமிழ் நடையல்லாத கொச்சைத் தமிழில் பேசுபவர்களையும் மக்கள் ரசிக்கிறார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும். தீப்பொறி ஆறுமுகத்திடம் இந்நூல் ஆசிரியர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றும் அவரின் மேடைப் பேச்சு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது.

நவீன ஜனநாயக விழுமியங்களோடு செழுமையான பண்பாட்டு மரபுகளைத் தொடர்புபடுத்துவது என்பதை நவீன யுகத்தில் புதுமையான அம்சமாகவே பார்க்க வேண்டும். அரசியல் மேடைப் பேச்சில் இத்தகைய நவ செவ்வியல் போக்கு என்பது திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நிறுவப்பட்டுள்ளது.

இன்றைக்கு வெகு சில பேச்சாளர்களே செம்மொழி நடையைப் பின்பற்றுகிறார்கள். மக்களிடம் இதற்கான வரவேற்பும் கவர்ச்சியும் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. திமுகவின் வளர்ச்சியில் மேடைத் தமிழ் மக்களை அரசியல்படுத்த முக்கியக் கருவியாக இருந்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்.

பெர்னார்ட் பேட்டின் நூல் திமுகவின் மேடைத் தமிழை ஆய்வு நோக்கில் அணுகிய முக்கியமான படைப்பு. பேசியும் எழுதியும் வளர்ந்த இயக்கம் என்று திராவிட இயக்கம் ஏன் அழைக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான காரணங்களை இந்நூலில் ஒருவர் கண்டடையமுடியும்.

0

Tamil Oratory and the Dravidian Aesthetic – Democratic practice in South India,
Bernard Bate, Oxford University Press

பகிர:
கெளதம் ராஜ்

கெளதம் ராஜ்

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி. முதுகலை அரசியல் அறிவியல் மாணவர். அரசியல், தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு மிக்கவர். ஆய்வுப் புத்தகங்களைப் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *