Skip to content
Home » வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

ஆவணக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

ஆ. சிவசுப்பிரமணியனின்
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
நூலின் முன்னுரை

அ.கா. பெருமாள்

நான் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நாலஞ்சு வருஷம் முன்பு இளம் அறிவியல் இரண்டாம் வகுப்பிற்குப் பொறுப்பாளராக (Group Tutor) இருந்தேன். சூடிகையான, நல்ல மதிப்பெண் வாங்குகின்ற, லட்சணமான ஒரு மாணவியின் தந்தை என்னைப் பார்க்கவந்தார். அவர் அந்த மாணவியின் அண்ணன் மாதிரி இளமையுடன் இருந்தார். கடும் உழைப்பாளி; விவசாயி என்பது உடம்பில் தெரிந்தது.

என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்றார்; அவரை ஆரவாரமில்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்றேன். எடுத்த எடுப்பிலேயே விஷயத்துக்கு வந்துவிட்டார். “இவள் பஸ் ஸ்டாப்பில் அந்தப் பையனுடன் பேசுவது பழகுவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் அவளிடம் சொல்லி வையுங்கள்,” என்று ஆரம்பித்துப் பேசிக்கொண்டே போனார்.

அந்த மாணவனும் எங்கள் கல்லூரியில் படித்தவன். மூன்றாமாண்டு இளங்கலை; எனக்கு அவனைத் தெரியும். அவனைப்பற்றி அவர் சொன்ன விஷயங்களில் முக்கியமானது அவனது சாதி. அவர் சொன்னமாதிரி அல்ல அந்தப் பையன். அதுவும் எனக்குத் தெரியும். அப்போது நான் அவரிடம் பேச முடியாத அளவுக்கு ஆவேசமாக இருந்தார்.

கடைசியில் அவர், “அவள் இதுமாதிரி தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால் நான் வேறு ஆளாக மாறிவிடுவேன். எனக்கு ஆறு ஏக்கர் பயிர். வீட்டிற்குப் பின்னால் மலை மாதிரி வைக்கோல் படைப்பு; இவளைத் தூக்கிப் படப்பிலே போட்டுத் தீய வச்சா ஒரு மணிக்கூருல சாம்பலாயிருவா. ஒரேயடியா முடிஞ்சுபோகும். அப்புறம் கன்னிக்குப் படப்புப் போட்டாப் போதும், பூடம் போட்டுக் கொடுக்கணும். சரியாப் போகும்” என்றார். அதே பாணியில் பேசிக்கொண்டே போனார்.

அவள் அவருக்கு ஒரே மகள். அவளை வைக்கோல் போரில் போட்டு நெருப்பு வைப்பதைச் சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு போனார். அவரிடம் சஞ்சலமில்லை. பின்யோசனையில்லை. முத்தாய்ப்பாக, “எனக்கு மானம் பெருசு. என் சாதிதான் முக்கியம். குடும்ப கௌரவம்தான் முக்கியம். நா அப்படி வளந்தவன்” என்று சொல்லி முடித்தார்.

இதன்பிறகு ஒருநாள் நான் அந்த மாணவியிடம் தனியாகப் பேசினேன். பக்குவமாகச் சொன்னேன். அவள் அப்படிப்பட்ட பெண்ணுமல்ல. அந்தப் பையனுடன் எந்தத் தொடர்பும் அவளுக்குக் கிடையாது. அந்தப் பையனிடம் தனியாகப் பேசியபோதும் அதை உறுதி செய்துகொண்டேன். கடைசியில் பார்த்தால் அவருடைய தந்தை சொன்னமாதிரி எதுவும் நடக்கவில்லை. அவள் திருமணமாகி நல்லபடியாக வாழ்வதை அறிவேன்.

இப்படியாகச் சாதி மீறிக் காதலித்தாள் என்று காரணம் காட்டிப் பெற்ற மகளை உரக்குழியில் தள்ளிக் கொன்றுவிட்டு அவளைத் தெய்வமாக்கி வழிபட்ட ஒரு குடும்பத்தைப் பற்றி என் நண்பன் விரிவாகச் சொன்னான். இதுபோன்ற நிகழ்ச்சிகள் பழையகாலத்தில் நடந்தவையல்ல. இவை என் சொந்த அனுபவத்தில் நான் கண்டவை; கேட்டவை.

இந்த மாதிரிக் கதைகளெல்லாம் வில்லிசைப் பாடல்களாக, கணியான் ஆட்டப் பாடல்களாக, அம்மானைப் பாடல்களாக மாறவில்லை. பொதுவெளியில் வழிபாட்டிற்கு வரவில்லை. இவை முழுவதும் பதிவுசெய்யப்படவில்லை. ஆராய்ச்சியாளர்களின் கண்ணுக்குப் படவில்லை. அப்படியே பட்டாலும் அவர்கள் கேட்கும் கதை உண்மையாக இருக்காது. கன்னி வழிபாட்டின் மூலத்தைக் கண்டுபிடிப்பது நதிமூலம், ரிஷிமூலம் தேடிய மாதிரிதான்.

வெளிப்படையாகத் தெரிந்த கதையைக் குறிப்பாக அச்சில் வந்த கதைகளை மட்டுமே எடுத்துவைத்துக்கொண்டு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வாய்மொழியாக அபூர்வமாக உள்ள கதைகளைச் சேகரித்தவர்கள் மிகக் குறைவு.

ஆ. சிவசுப்பிரமணியன் இதில் விதிவிலக்கானவர். வாய்மொழியாக மட்டும் பேசப்பட்ட கதைகளை, அவற்றின் வழிபாட்டுக் கூறுகள், சடங்குகள், ஆச்சாரங்கள் என எல்லாவற்றையும் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. பக்கம் கருதிப் பதினான்கு கதைகளை மட்டும் நூலாக்கியிருக்கிறார். இந்தக் கதைகளெல்லாமே பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் நடந்தவை.

கொலைப்பட்டவர்கள் எல்லாருமே தெய்வங்கள் ஆக்கப்படுவார்கள் என்பது ஒரு கருத்தாக்கம். இதற்குரிய பின்னணி பலமாக இருந்தால் இந்தத் தெய்வங்கள் நிலைபேறடையும். சில சமயம் கொலைப்பட்ட ஆண் சுடலைமாடன் என்ற தெய்வத்துடனும், கொலைப்பட்ட பெண் இசக்கியம்மன் என்ற பெண்தெய்வத்துடனும் இணைந்து பொதுவெளி வழிபாட்டிற்குரியவர்கள் ஆகிவிடுவார்கள். இப்படியாக இணையும் தெய்வங்களின் மூலங்களைக் கண்டுபிடிப்பதற்கு இந்தத் தெய்வங்களின் விழா, சடங்கு, நேர்ச்சை, சாமியாடியின் ஆட்ட முறை போன்றவை முக்கியமாக இருக்கும்.

சிவசுப்பிரமணியன் இப்படியொரு செய்தியைச் சொல்லுகிறார்: புதுப்பெட்டி அம்மனுக்குப் பலிகொடுக்கும் முறை வித்தியாசமானது. இக்கோயிலுக்கு ஆட்டைப் பலிகொடுக்கிறார்கள். ஆனால் மற்ற கோயில்களைப் போலல்ல. ஊர் இளைஞர்கள் சிறிய கட்டைக் கம்பால் ஆட்டை அடித்தே கொல்லுகிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் கதையே இந்தச் செயல்பாட்டுக்குக் காரணம். புதுப்பெட்டி அம்மனான அந்த இளம்பெண்ணுக்கு ஏழு அண்ணன்மார்கள் இருந்தார்கள். அவர்கள் இவளை அடித்தே கொன்றிருக்கிறார்கள். அண்ணன்மார்களின் சொல்லை மீறி ஜமீன்தார் ஒருவரின் கண்ணில் பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.

அவள் கொல்லப்பட்ட பின்பு வழிபாட்டுக்கு உரியவளாக மாறிவிட்டாள். இப்படியாக வழிபாடு பெறுகின்றவர்களின் வழிபாட்டு முறை, சடங்கு, ஆச்சாரம் போன்றவற்றிலிருந்து, கொலைப்பட்டுத் தெய்வமானவர்களின் பூர்வீக ஜாதகத்தின் ஒரு பகுதியைக் கொஞ்சமேனும் கண்டுபிடித்துவிடலாம் என்றுதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையோரக் கிராமத்தில் இசக்கிக் கோயிலின் விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு ஆட்டைப் பலி கொடுத்தார்கள். அது வித்தியாசமாக இருந்தது. ஆட்டின் தலை மேலேயும் கால் கீழேயும் இருக்கும்படித் தொங்கவிட்டிருந்தார்கள். அப்படியே பலிகொடுத்தார்கள். சாதாரணமாக அப்படி பலிகொடுப்பது வழக்கமல்ல என்று எனக்குத் தெரியும். நான் ஒன்றுமே தெரியாதது மாதிரி கோயில் விழா நடத்தியவரிடம் அந்தப் பலியைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன விவரத்தின்படி, அந்த இசக்கிக் கோயில் உண்மையில் பொதுவான இசக்கிக் கோயில் அல்ல. இங்கே கொலைப்பட்ட பெண்ணொருத்தி தெய்வமாகி இசக்கியோடு இணைந்துள்ளாள்.

இந்த ஊர்ப் பெண் ஒருத்தி கடற்கரை இளைஞனைக் காதலித்தாள்; கர்ப்பமுமடைந்தாள். பெற்றோர்களுக்குத் தெரிந்தது. அவளைத் தோட்டத்திலிருந்த சிறிய குளத்தில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டார்கள். பின் அவள் விபத்தில் இறந்தது மாதிரி ஒரு கதையை உருவாக்கி அவளுக்கு வழிபாடு நடத்திவிட்டார்கள். அவள் சக்தி உடையவளாக இருந்தாள் என்ற நம்பிக்கையின் காரணமாகச் சொந்தக்காரர்களும் வழிபட்டார்கள்; பின் ஊர்க்காரர்களும் வழிபட்டார்கள். பின்னர் இசக்கி என்ற பெண் தெய்வத்துடன் இணைய வேண்டிய சூழ்நிலை உருவானது. இப்படியெல்லாம் இருந்தால்தான் பொதுவெளிக்குரிய தெய்வமாக அவள் மாற முடியும். ஆகவே அவள் இசக்கி அம்மனாக மாறிவிட்டாள். இசக்கி அம்மனுக்குரிய ஓட்டு உருவத்தை (சுடுமண் சிற்பம்) வைத்து வழிபடுகிறோம். ஆனால் பலி மட்டும் கொலைப்பட்டவளுக்காகக் கொடுக்கப்படும் முறையிலேயே செய்யப்படுகிறது.

பொதுவாகக் கொலைப்பட்டுத் தெய்வமானவளுக்கு ஆட்டைப் பலிகொடுக்கும்போது ஆட்டின் தலை மேலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுவார்கள். வேள்வி அல்லது சிவன் அருளால் உருப்பெற்ற நாட்டார் தெய்வமாக இருந்தால் பலி ஆட்டின் தலைகீழாக இருக்கும். கால் மேலே இருக்கும். இப்படியொரு நடைமுறை உண்டு. இங்கு அந்தப் பழைய நடைமுறையே தொடர்கிறது. இவை இரண்டும் பாதாதிகேசம், கேசாதிபாதம் முறைகள் எனப்படுகின்றன.

ஆ. சிவசுப்பிரமணியனின் இந்த நூலில் ஒன்பது கதைகள் சாதி அடிப்படையிலான மணமறுப்புக்கான கொலைகள்; இரண்டு, திருடிய குற்றத்திற்கான கொலைகள். ஒன்று சொத்து அபகரிப்புக்காகச் செய்யப்பட்ட கொலை; மற்றொன்று ஆள்மாறாட்டத்தால் செய்யப்பட்ட கொலை; இன்னொன்று கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண், சிறுவர்கள் விளையாடிய ராட்டில் ஏறி விளையாடியதால் குடும்ப கௌரவம் போய்விட்டது என்று கருதியதற்கான கொலை. மொத்தத்தில் பெருமிதம், ஆணவம் ஆகியவைதாம் இந்தக் கொலைகளுக்குக் காரணம்.

இந்தக் கொலைகளில் ஒன்றைப் பார்ப்போம். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வண்டிமறிச்ச அம்மன் கோவில் தொடர்பான கதை. குடியிருப்பில் தந்தை தாய் இல்லாத அண்ணன், தங்கையர்கள் பசியின் கொடுமையால் நெசவாளர்கள் நூலுக்குப் பஞ்சுபோட வைத்திருந்த பாவுக்கஞ்சியைக் குடித்துவிட்டனர்.

இதனால் கோபமடைந்த நெசவாளர்கள் அண்ணன் தங்கைகளை அடித்துக் கொன்றனர். இறந்துபோன அண்ணன், தங்கைகள் பேயாக மாறி நெசவாளக் குடியிருப்பில் ஆதாளி செய்தனர். அவர்கள் வண்டியில் துணியை ஏற்றிக்கொண்டு வணிகத்திற்காகச் சென்றபோது வண்டியை மறித்தனர்.

இதற்குக் காரணமான அண்ணன், தங்கைக்கு வழிபாடு செய்தால் மட்டுமே தங்களுக்கு விமோசனம் கிடைக்குமென்று எண்ணிய நெசவாளர்கள் அண்ணன், தங்கைக்குக் கோயில் எடுத்தனர். இவர்களது உருவம் படுத்த நிலையிலேயே இருக்கிறது. மேற்கூரை இல்லை. கொலைசெய்யப்பட்ட அண்ணன், தங்கைகள் வெட்டவெளியில் படுத்த நிலையில் பிணமாய்க் கிடந்ததால் அவர்களுக்கு எடுக்கப்பட்ட உருவமும் அப்படியே அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கொலைப்பட்ட அண்ணனும் தங்கையும் வண்டி மலையன், வண்டி மலைச்சி என்னும் பெயரிலே வழிபாடு பெறுகின்றனர். உண்மையில் இந்தப் பெயரில் ஏற்கெனவே ஒரு தெய்வம் இருக்கிறது. கொலைப்பட்டுத் தெய்வமான ஆண் அல்லது பெண் பிரபலமாக வழிபாடு பெறும் தெய்வங்களுடன் இணைவது ஒரு கருத்தாக்கம்.

இப்படி இணையும்போது அந்தத் தெய்வம் பரவலாக வழிபாடு பெற்றுவிடும். இந்தக் கருத்தாக்கத்தின்படி அண்ணனும், தங்கையும் வண்டி மலையன், வண்டி மலைச்சி ஆகிவிட்டனர். இங்கு குறிப்பிடப்படும் மலையன், மலைச்சிக்குப் பின்னால் ஒரு தொன்மம் உண்டு.

தென்மாவட்டங்களில் பரவலாக வழிபாடுபெறும் முத்தாரம்மன் கோவிலில் வண்டி மலையன், வண்டி மலைச்சி தெய்வங்கள் துணைத் தெய்வங்களாக உள்ளன. முத்தாரம்மன் என்னும் தெய்வம் சந்தனமாரி, முத்துமாரி, முத்துமாலை என வேறு பெயர்களிலும் அறியப்படுகின்றது. இந்தக் கோயில்களிலும் வண்டி மலையன், வண்டி மலைச்சி துணைத்தெய்வங்களாக இருக்கிறார்கள் (மிகச்சில விதிவிலக்குகள் உண்டு).

இத்தெய்வங்களின் தோற்றம் பற்றிய செய்தி முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் வருகிறது. வாய்மொழி வடிவில் உள்ள கணியான் ஆட்டப் பாடல்களிலும் இந்தக் கதை சிறு மாற்றங்களுடன் வருகிறது. தென் தமிழ்நாட்டிலும் மொத்தக் கேரளத்திலும் நாட்டார் தெய்வ வழிபாட்டில் தாருகன் கதை ஆழமாகப் படிந்துள்ளது. தாருகன் தொன்மம் வேறு பல நாட்டார் தெய்வங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. கேரளத்தில் கண்ட கர்ணன் கதை ஒரு சான்று. தென் தமிழகத்தில் வண்டி மலையன், வண்டி மலைச்சி ஒரு சான்று.

இந்த இரு தெய்வங்களின் பிறவி பற்றி இரண்டு கதை வடிவங்கள் உள்ளன. 1911இல் பதிப்பிக்கப்பட்ட சங்கு நூலகம் ‘முத்தாரம்மன் கதை’ப் பதிப்பின்படி வரும் கதை இதுதான்.

சக்திமா முனிவர்கள் செய்த வேள்வியில் எழுந்த புகை கைலாயம் சென்று பார்வதியின் உடலில் பட்டது. அது வேர்வையாகப் பெருகியது. பார்வதி வியர்வையை வழித்தெறிந்தாள். அதிலிருந்து முத்தாரம்மன் பிறந்தாள்.

முத்தாரம்மனுடன் மூன்று முகம் கொண்டாள், பூதத்தின் மேல் இருப்பவள், மாலையம்மன், முத்துமாலையம்மன், மகமாயி, சங்குப் பிள்ளை, அனல்காரி இப்படியாகப் பிறந்த பதினெட்டுத் தெய்வங்களில் வண்டி மலையன், வண்டி மலைச்சி ஆகியோரும் உண்டு. இந்த இரண்டுபேரும் பார்வதியினுடைய குழந்தைகள் ஆதலால் அண்ணன், தங்கை என்றாயினர்.

தாரகன் பெரும் படையுடன் பத்திரகாளியை எதிர்க்கச் சிங்கத்தில் ஏறிவந்தான். காளி எருமைக் கடாவில் வந்தாள். தாரகனின் மார்பில் சூலத்தைச் செருகினாள். சிறிய மழுவால் அவன் தலையை வெட்டினாள். இரத்தம் கொப்பளித்தது. ஆறாகப் பெருகிய குருதி பூமியில் விழுந்தால் மொத்த உலகமே நாசமாகிவிடும் என்று உணர்ந்த காளி குருதியை இரண்டாகப் பிரித்து பார வண்டியிலே ஏற்றினாள். அவை வண்டி மலையன், வண்டி மலைச்சி எனப் பெயர்பெற்றன. இப்படியொரு கதை ஆறுமுக நாடார் கதைப் பதிப்பில் உள்ளது.

எருமை கிடாவில் ஏறினாள்
அம்மை தேரோடு தாரகன் தன்னைப் பிடித்து
சிறுமழுக்கொண்டு கழுத்தை அறுத்தாள்
கீழே உடம்பு துடிக்கவே இரத்தம்
சூழப்பரக்கின்ற இரத்தத்தை வாரி
பார வண்டிமேல் ஏற்றினாள் அம்மை
வந்து பிறந்தானே வண்டி மலையன்
வந்து பிறந்தாளே வண்டி மலைச்சி
வந்த இருவரும் ஒன்றாகப் பிறந்தனர்.

என்று முத்தாரம்மன் கதை கூறும்.

தென் மாவட்டங்களில் முத்தாரம்மன் கோயில்களில் துணைத் தெய்வமாக இருக்கும் வண்டி மலையனும், வண்டி மலைச்சியும் சாய்ந்த வடிவில் மொத்த அறையையும் வியாபித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வடிவம் சுதை அல்லது மண்ணால் செய்யப்பட்டிருக்கும். இரண்டு கைகள்; ஒரு கையில் சூலம்; மற்றொரு கையில் கப்பரை; வண்டி மலைச்சிக்கு மார்பு பெரிதாகக் காட்டப்பட்டிருக்கும்.

இரண்டு பேரும் ஜுவாலா மகுடம் உடையவர்கள். இருவருக்கும் நிறைய ஆபரணங்கள் போடப்பட்டிருக்கும். காதில் வேதாளம் தொங்கும்; குண்டலம் அல்லது பத்திர குண்டலம் இருக்கும். காலில் கழல் அணிந்திருப்பார்கள். பாதங்களின் கீழ் மகுடனின் தலை இருக்கும். சிங்க உருவம் காட்டப்பட்டிருக்கும். ஒரு வகையில் சிவன், பார்வதியின் அடையாளங்களே வண்டி மலையன், வண்டி மலைச்சிக்கும் இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நடுத்தெரு முத்தாரம்மன் கோயிலில் துணைத் தெய்வமாக இருக்கும் வண்டி மலையன், வண்டி மலைச்சி கல் வடிவில் இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சுதை வடிவமாக இருந்த அண்ணன் தங்கை கல்லாகிவிட்டனர். இது இக்கோயிலின் பொருளாதார மேம்பாட்டால் வந்த வளர்ச்சி.

பழைய சுதை உருவத்தை மொத்தமாக வெட்டியெடுத்துப் பூமியில் புதைத்துவிட்டனர். அப்போது ஒரு விஷயத்தை நேரில் பார்த்தேன். வண்டி மலைச்சியின் மார்புப் பகுதியில் நெல்லை வைத்திருந்தனர். அதை வெள்ளைத் துணியால் மூடிச் சுதை பூசி ஒழுங்குபடுத்தியிருந்தனர். இது ஊரின் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. இப்போது அதே இடத்தில் கருங்கல் வந்துவிட்டது. இதே ஊரின் தெற்குத் தெருவில் வண்டி மலையன், வண்டி மலைச்சி இருவரும் நின்ற கோலமாக உள்ளனர். இது அண்மையில் ஏற்பட்ட மாற்றம்.

இப்படியாக வில்லிசைப் பாடல்களில் வரும் கதாபாத்திரங்களில் பெரும்பாலோர் துணைத் தெய்வங்களாக வழிபாடு பெறுகின்றனர். ஆனால் இவை அனைத்துமே நிலைபேறு அடைந்துவிடுவதில்லை. இவற்றிலும் வட்டார ரீதியான காரணங்களால் சில தெய்வங்கள் மட்டும் நிலைபேறும் தொடர்ந்த வழிபாடும் பெற்றுவருகின்றன. குறிப்பாக, கொலைப்பட்டுத் தெய்வமான இந்தத் துணைத் தெய்வங்களுடன் சில தெய்வங்கள் இணைகின்றபோது இவற்றுக்கு ஒருவகையான மரியாதை உருவாகிறது. அப்போது இவை வழிபாடும் பெறுகின்றன.

பொதுவாகக் கொலைப்பட்டு இறப்பவர்கள் இறைவனிடம் வரம்பெற்றுப் பழிவாங்கும் குணத்துடன் செயல்படும் தன்மை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தத் தன்மையே இவர்களைத் தெய்வத் தன்மையின் அடையாளமாக்குகிறது. இவர்கள் வரம் வாங்குவதே தங்களைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்குத்தான் என்பது மக்களின் நம்பிக்கை.

ஒருவன் அல்லது ஒருத்தி கொலைப்பட்டு ஆவியாக மாறிக் கயிலை மலைக்குச் சென்று சிவனிடம் வரம் கேட்பதாக வரும் செய்தி வில்லிசைப் பாடல்களில் பொதுவாக வருகிறது. சில சான்றுகளைப் பார்ப்போம். மண மறுப்பால் இறந்த தோட்டுக்காரி கயிலை சிவனிடம் வரம் கேட்கும்போது,

வெல்ல வரம் கொல்லவரம் வலியபிணி தீர்க்கவரம்
நல்லதவம் செய்தவரை நாளும் வைத்து ஆளும்வரம்

என்று கேட்கிறாள். (‘தோட்டுக்காரி அம்மன் கதை’ ஆறுமுக நாடார் பதிப்பு 1981 பக்: 53).

சந்தேகத்தால் கொலைப்பட்ட பிச்சைக்காரன் ஆவியான பின் சுடலை மாடனின் வாதைகள் எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு கயிலை மலைக்குச் சென்று சிவனிடம் வரம் வாங்குகிறான்.

திடுதிடென ஐயனிடம் சென்றதுண்டால் வரந்தருவீர்
என்று சிவன் முன்பாக பிச்சைக்காரன் சென்று
கொன்றுபழி தானெடுக்க கொடியவரம் வேண்டும்
நிச்சியமாய் கைதொழவே நேர்மையுடன் சாத்தானும்
அச்சமற உள்ளமர்ந்து அறிந்தவுடன் வரம் தருவேன்
என்று கேட்டதாகப் பிச்சைக்காரன் ஏடு கூறும்.

முழுமாதக் கர்ப்பிணியான பொன்நிறத்தாள் என்பவளைத் திருடர்கள் கொடூரமாய்க் கொலை செய்த பின்னர் பொன்நிறத்தாள் காளியின் வேதாளப்படைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு கயிலாயம் சென்று சிவனிடம் பெரும் வரம் கேட்கிறாள். தன்னைக் கொன்ற திருடர்களைக் கொல்லுவதற்கு மட்டுமல்ல, தான் நிலைபேறான தெய்வமாக, இசக்கியாக மாற வேண்டும்; எல்லாரும் வழிபடும் தெய்வநிலைக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

குறுமான்குள இசக்கி என்றும் கோவில்கொள்ள வரம்வேண்டும்
பிளவுக்கல் இசக்கி என்று கோவில்கொள்ள வரம்வேண்டும்
கள்ளியங்காடு நீலி என்று வடக்கத்தி இசக்கியென்று
வடக்குவாய் செல்வி என்றும் வான்மாடப் புலத்தி என்றும்
எல்லாரும் வழிபடும் வகையில் தனக்கு வரம் வேண்டும்

என்று கேட்கிறாள் (‘பொன்நிறத்தாள் கதை ஏடு’).

இதே பொன்நிறத்தாள் சிவனிடம் மேலும் வரங்கள் கேட்கும்போது,

வெப்பு நோயைக் கொடுக்க வரம் வெந்தணலை வீச வரம்
தங்களுட கோவிலிலே வைத்து வழிபாடு கொள்ள வரம்
காளிப்புலயன் மந்திரவாதி கண்டவுடன் கொல்ல வரம்

இப்படியே பொன்நிறத்தாள் வரம் கேட்டுக்கொண்டே வருகிறாள்.

ஆ. சிவசுப்பிரமணியன் அச்சில் வந்த பாடல்களையோ ஏட்டுவடிவில் உள்ளவற்றையோ மூலங்களாக எடுத்துக் கொள்ளாமல் வாய்மொழி வடிவில் புழங்கும் கதைகளை மட்டும் தன் நூலுக்கு ஆதாரமாகக் கொள்ளுகிறார். வெறும் கதைகளை மட்டுமல்ல; அந்தத் தெய்வங்களின் வழிபாட்டுச் சடங்கு, ஆச்சாரம் ஆகியவற்றையும் கதையோடு சேர்த்துச் சொல்கிறார். இது மிக முக்கியம்.

ஒரு தெய்வத்தின் வழிபாடானது அது தொடர்பான கதைகளில் மட்டும் பரவிக் கிடக்கவில்லை. அந்த தெய்வத்திற்குச் செய்யப்படும் சடங்குகள், நேர்ச்சை, வழிப்பாட்டுப் பொருட்கள், படையல் ஆகியவற்றுடனும் பரவிக் கிடக்கின்றன. இவற்றையும் கதையில் ஒன்றாக வைத்துப் பார்க்கின்றபோதுதான் தெய்வத்தின் முழு அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

மாடத்தியம்மன் என்ற தெய்வம் தொடர்பான கதை சாதி மாறுபாட்டாலோ மண மறுப்பாலோ உருவானதல்ல. கணவனைப் பிரிந்து வீட்டோடு இருக்கின்ற மாடத்தி பிற பெண்களைப் போல் சமூகத்தில் மகிழ்ச்சியோடு வாழ்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகக் கொலைசெய்யப்படுகிறாள். இங்கு குடும்பப் பெருமிதம் ஒன்றே காரணம் காட்டப்படுகிறது. ‘புதுப்பட்டி அம்மன் கதை’, சாதி தொடர்பானதல்ல. தன் தங்கையிடம் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள் ஏழு அண்ணன்மார்கள். அவள் அதை மீறி ஒரு ஜமீன்தாரின் கண்ணிலே பட்டுவிடுகிறாள். இதனால் இதுமாதிரியான தரவுகளே இந்த நூலை வேறொரு நிலைக்கு மாற்றுகின்றன.

*

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
ஆசிரியர்: ஆ. சிவசுப்பிரமணியன்
காலச்சுவடு
விலை ரூ. 110
நூலைப் பெற

பகிர:
கிழக்கு போஸ்ட்

கிழக்கு போஸ்ட்

கிழக்கு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வழங்கும் பகுதி. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெறும்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *