நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி, ‘கலைவெளிப்பயணி‘. இந்தத் திரட்டு நூலின் கட்டுரைகள் யாவும் பலரால், பல்வேறு சமயங்களில் எழுதப்பட்டவை. அத்துடன் இந்த நூலுக்கென்றே கேட்டுப் பெற்று சேர்க்கப்பட்டவையும் உண்டு.
தனபாலிடம் நுண்கலையை நேரடியாகக் கற்கும் வாய்ப்பு கிட்டியவர்கள், கிட்டாதவர்கள், இதழாளர்கள் என மூன்று பிரிவுகளிலும் கட்டுரையாளர்கள் அடங்குவர். அதில் எஸ்.கன்னியப்பன், விஜயவேலு ஆகிய இருவரும் சிற்பிகளாவர். அ. நாகராஜன், மணியம் செல்வன், எம். ஜெயகுமார், சந்ரு, மோனிகா, வா.சி.த. அருளரசன், கி. முரளிதரன், நரேந்திர பாபு, ஆதிமூலம் அபராஜிதன் ஆகியோர் ஓவியர்கள். வெ. நீலகண்டன், விக்ஷ்வம் இருவரும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் ஆவர்.
சிற்பி எஸ். தனபாலின் வாழ்க்கைக் குறிப்புடன் மிக அரிய புகைப்படங்கள் இந்தத் தொகுப்பில் பின்னிணைப்பாக இடம் பெற்றிருக்கின்றன. கட்டுரையாளர்கள் பற்றிய சிறு குறிப்பும், தொகுப்பாளர் கிருஷ்ண பிரபுவின் விவரங்களுடன் கூடிய நீண்ட முன்னுரையும் நூலுக்கு வலு சேர்க்கின்றன.
எஸ். தன்பாலின் பிறந்த நாள் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக 2018இல் சில முன்னெடுப்புகள் நிகழ்ந்தன. ரவி தனபாலின் முயற்சியால் சென்னை லலித் கலா அகாடெமியில் தனபாலின் படைப்புகளுடன் அவரது மாணாக்கர்களின் படைப்புகளும் ஓவியக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
17 ஜனவரி 1993 முதல் 31 டிசம்பர் 1993 வரை ஆனந்த விகடன் இதழில் தனபால் எழுதிய சுயவாழ்க்கை வரலாறு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ எனத் தொடராக வந்தது. காலச்சுவடு பதிப்பகமும் சிறுவாணி வாசகர் மையமும் இணைந்து அந்தத் தொடரினை நூலாகக் கொண்டு வந்தனர். இது தொடராக வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நூலாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகவே ‘கலைவெளிப் பயணி’ நூலாக்கத்தின் முன்னெடுப்பு நிகழ்ந்தது.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் நான்கு கட்டுரைகள் காலச்சுவடு கொண்டுவந்த தனபாலுக்கான சிறப்பு இதழுக்காக தற்கால ஓவியர்களிடம் கேட்டுப் பெற்றவை. இவையெல்லாம் தொகுப்பாளரின் முன்னுரையில் கிடைக்கும் அரிய தகவல்கள்.
1941இல் தான் கற்ற மதராஸ் நுண்கலை மற்றும் கைவினைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கிய திரு. எஸ். தனபால், 1977இல் கல்லூரி முதல்வர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த 36 ஆண்டுகளில் அவரிடம் ஓவியமும் சிற்பமும் பயின்று கல்வியை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும். அவர்களில் பலரும் இன்று பெரும் புகழுடன் உள்ளனர்.
சிற்பி கன்னியப்பன் அவரது முதல் வரிசை சீடர்களில் ஒருவர். பின்னர் அவருடனேயே கல்லூரியில் பணிபுரிந்தவர். அவரது கட்டுரை தனபாலின் ஆசிரிய ஆளுமையையும் அவர் மாணவர்களிடையே காட்டிய அன்பையும், அளித்த ஆதரவையும் ஊட்டிய ஊக்கத்தையும் பற்றி விரிவாக இந்நூல் பேசுகிறது.
ஓவியர் மணியம் செல்வம் திரு தனபால் எவ்வாறு தன்னை ஓவியக் கல்லூரியில் சேரச் செய்தார் என்பதையும் பல்வேறு சமயங்களில் அவர் அளித்த ஊக்கத்தையும் பற்றிக் கூறுகிறார்.
ஓவியரும் எழுத்தாளருமான மோனிகா, தனபாலின் மாணவர்களைப் போல் அல்லாமல் எட்ட நின்று அவரது படைப்புகளையும் அவரது படைப்பு மேதமைகளையும் பற்றித் திறனாய்வு செய்திருக்கிறார்.
பத்திரிக்கையாளர் வெ. நீலகண்டன் தமது கட்டுரையில் ஓவியப் பள்ளியின் வரலாற்றைப் பதிவு செய்கிறார். அத்துடன் தனபாலின் மாணவரும் மருமகனுமான ஓவியர் ஆர்.பி. பாஸ்கரன் தனபால் குறித்த தனது பெருமித நினைவுகளைச் சொல்வதையும் இணைக்கிறார். பாஸ்கரன் தான் கற்றது, தன்னுடன் கூடக் கற்றவர்கள், தனக்கு முன்னால் கற்றவர் என்று வரலாற்றுப் பதிவு செய்திருக்கிறார். சோழமண்டல ஓவியர் கிராமம் உருவானது, பின்னர் அதில் தோன்றிய விரிசல் பற்றின செய்திகளையும் உள்ளடக்கியது அந்தப் பதிவு.
ஓவியர் மருதுவுடன் பத்திரிக்கையாளர் வெ. நீலகண்டன் உரையாடிப் பகிர்ந்த செய்திகளையும் இக்கட்டுரையில் காணலாம். தனபால் காலமான பின் சென்னைக் கடற்கரையில் அவரது சிலையை நிறுவ கலைஞர்கள் கூடி எடுத்த முயற்சி எவ்விதம் அரசால் புறக்கணிக்கப்பட்டது என்னும் செய்தியையும் மிகுந்த வருத்தத்துடனும் சினத்துடனும் மருது கூறுவது மிக முக்கியமான பதிவு.
எழுத்தாளர் விக்ஷ்வம் தனபாலை நேர்காணல் செய்தபோது அவர் பேசிய விவரங்களை இக்கட்டுரையில் பதிவிட்டுள்ளார். இந்த நூலுக்கு இவை இரண்டும் வலு சேர்க்கின்றன.
திரு. தனபாலின் தனிப்பட்ட பண்புகளையும் கட்டுரையாசிரியர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். மாணவர்களிடம் காட்டிய பரிவு, அவர்களின் பின்னாளைய வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்த அக்கறை, தனது வீட்டிலேயே மாணவர்களைத் தங்க வைத்து அவர்கள் படிக்கும் வசதியை இறுதி நாட்கள் வரை தானே மேற்கொண்டது என்று ஒரு சிறந்த மனிதாபிமானியாக திரு. தனபால் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
தொகுப்பாளர் கிருஷ்ண பிரபு தொலைபேசியில் உரையாடியபோது இந்த நூலைப்போல இன்னமும் சில ஓவிய / சிற்பக் கலைஞர்களைப் பற்றிய நூல்களையும் கொண்டுவருவதே தனது அடுத்த முயற்சியாக இருக்கும் என்றார். மிகப் பெரிய சவாலான முயற்சி அது. அதில் அவருக்கு முழுவெற்றியும் கிடைக்கும்.
காலச்சுவடு பதிப்பகத்தார் இதை அவர்களுக்கே உரிய அக்கறையுடன் அழகான பதிப்பாக வெளியிட்டுள்ளனர். அது அவர்களின் தனித்திறமை. நுண்கலை பற்றிய நூல்கள் வெளிவருவதே தமிழில் அரிதான ஒன்றுதான். இவ்வித முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
0
‘கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்’
தொகுப்பாசிரியர் : கிருஷ்ண பிரபு
காலச்சுவடு பதிப்பகம்
ப 128, விலை ரூ.150