Skip to content
Home » சமத்துவ உலகம் சாத்தியமா?

சமத்துவ உலகம் சாத்தியமா?

சமத்துவ உலகம் சாத்தியமா

சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணத்தில் 20ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட இன்றைய 2020இல் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். 19ஆம் நூற்றாண்டைவிட 20ஆம் நூற்றாண்டு, சமத்துவம் நிறைந்த ஒன்றாக இருந்துள்ளது. இன்றிருப்பதைவிட இன்னும் சில பத்தாண்டுகளுக்கு கழித்து நாம் சமத்துவமடைந்தே இருப்போம். ஆனால் அதை எவ்வளவு விரைவாக சென்றைடைகிறோம் என்பதில்தான் விஷயம் உள்ளது என்கிறார் தாமஸ் பிக்கெட்டி.

பிக்கெட்டி, உலகளவில் நிலவும் அசமத்துவத்தைப் பற்றித் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். Capital and Ideology, Capital in the Twenty-First Century ஆகிய இரு பெரும் நூல்கள் எழுதியுள்ளார். இது தவிர்த்து பல சிறு நூல்களும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் இவர் எழுதி வெளியான நூல்தான் ‘A Brief History of Equality’.

மற்ற இரண்டு நூல்களோடு ஒப்பிடுகையில் தனக்குத் திருப்திகரமானதாக இந்நூல் இருப்பதாகச் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் பிக்கெட்டி. பல நூற்றாண்டு வரலாற்றை 280 பக்கங்களுக்குள் அடக்குவது சாத்தியம் என்பதையே இந்த நூல் குறிக்கிறது.

இதுவரை சமத்துவத்தை நோக்கிய பாதையில் உலக மக்கள் அடைத்திருக்கும் முன்னேற்றங்களை நினைவுபடுத்தும் அதே வேளையில் நாம் விரும்பும் உண்மையான சமத்துவத்தை எப்படி அடைவது என்பது பற்றியும் இந்நூல் பேசுகிறது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி அதன் பிறகான சமத்துவப் பயணத்துக்கு வித்தாக அமைந்தது. எடுத்துக்காட்டுக்கு, புனித டொமினிக்கில் நடந்த அடிமைப் புரட்சி, அமெரிக்காவில் நடந்த அடிமைத்தனத்திற்கு எதிரான உள்நாட்டு போர், ரஷ்யப் புரட்சி, இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான காலனியாதிக்க நாடுகளின் விடுதலை, தென்னாப்பிரிக்காவில் 1994இல் இயற்றப்பட்ட நிறவெறிக்கு எதிரான சட்டம் ஆகிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சமகாலத்தில் நடக்கும் Black Lives Matter, #metoo, LGBTQ+ செயல்பாடுகள் போன்றவற்றையும் இதன் தொடர்ச்சியாகத்தான் பார்க்கவேண்டும்.

சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புகளைப் புது அமைப்பாக மாற்றும்போது முன்பிருந்ததைவிடச் சமத்துவம் கூடியதாகவும் விடுதலை அளிக்கும் ஒன்றாகவும் அது இருக்கும் என்கிறார் பிக்கெட்டி.

அரசியல் இயக்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், அறிவுஜீவிகள், சாமானிய மக்கள் ஆகியோரின் முயற்சியால் நாம் எட்டியிருக்கும் இந்த நிலை பல்வேறு அதிகார அமைப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாவது எதிர்பார்க்கக்கூடியது, இயல்பானதும்கூட. அதை எல்லாம் மீறி இந்த நெடும்பயணம் தொடர செயல்பாடுகள் முக்கியம். இந்நூலும் அத்தகைய செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் போன்ற அடையமுடியாத தீர்வுகளை இவர் முன்வைப்பதில்லை. அதற்கு மாறாக, ஏற்கெனவே இருக்கும் அதிகாரங்களைப் பகிர்வதையும், ஜனநாயகப்படுத்துவதையும், பன்மைத்துவ சோசியலிசத்தையும், நேரடி வரிகளையும், பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி அமைப்பு முறைகளையும் தீர்வுகளாகக் குறிப்பிடுகிறார். அதிகாரப் பரவலாக்கம் என்பது பொருளாதாரப் பரவலாக்கத்தின் அங்கமாகவே நூல் முழுக்கச் சொல்லப்படுகிறது.

இனவாதம், நிறவெறி, சாதி வெறி போன்ற மரபான அடிமை கட்டமைப்புகளுக்கு எதிராகவும் அதைச் சரி செய்யும் வகையிலும் அளிக்கப்படும் இடஒதுக்கீடு முக்கியமானது எனக் கூறி இந்தியாவில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அத்தகைய இடஒதுக்கீடு முறை சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் பெரிய அளவில் குறைத்துள்ளதாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அதே சமயம், கிரீமி லேயர் போன்ற இடஒதுக்கீடு முறைகளை இவர் ஆதரிக்கிறார். சாதியம் பற்றிய இவர் புரிதலின் போதாமை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நுழைவுத் தேர்வுகள் பற்றிக் குறிப்பிடும்போது அதற்கு நெருங்கிய தொடர்புள்ள அதிகாரம், பணம், பொருளாதாரச் சூழல், அணுகும் தன்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறார். மைக்கெல் சாண்டர் தனது ‘The Tyranny of Merit: What’s Become of the Common Good?’ நூலில் குறிப்பிடும் வாதங்களுக்கு பிக்கெட்டியின் தரவுகள் வலு சேர்கின்றன.

இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வளரும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நுழைவு தேர்வு போன்றவை ஏற்கெனவே இருக்கும் அசமத்துவத்தை மேலும் அதிகமாக்கவே செய்யும். நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் தடைக்கற்களாக இருக்கும் எனவும் சுட்டி காட்டுகிறார் பிக்கெட்டி.

இங்குள்ள அசமத்துவம் நிறைந்த முதலீட்டிய அமைப்பை மாற்றுவதற்கு இவர் முன்வைக்கும் இரண்டு முக்கிய தீர்வுகள், மக்கள்நல அரசும் முற்போக்கு வரி விதிப்பு (Progressive Taxation) முறையும் ஆகும்.

ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் (1945) இருந்து பெர்லின் சுவர் (1989) தகர்க்கப்படும் வரையில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாகவும் முற்போக்கான வரிவிதிப்பு முறையைக் கடைபிடித்ததன் மூலமாகவும் அசமத்துவத்தை ஓரளவுக்கு குறைந்துள்ளதாக கூறுகிறார் பிக்கெட்டி.

1990களுக்குப் பிறகான முதலீட்டியத்தின் பெரும்பாய்ச்சல் உலகளவிலான அசமத்துவத்தை அதிரித்துள்ளது. அதன்மூலம் சில நன்மைகள் இருந்தாலும், பெருமளவில் ஏற்றத்தாழ்வுகள் பெருகியுள்ளன. நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதையும், அது தரகு முதலீட்டியதை ஊக்குவித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இதற்குத் தீர்வாகத்தான் முற்போக்கு வரிவிதிப்பு முறையைக் குறிப்பிடுகிறார்.

ஒரு மக்கள் நல அரசின் அடிப்படையாக இத்தகைய வரிக் கொள்கை அமைய வேண்டும். அனைவருக்குமான அடிப்படை வருமானம், விலையில்லாக் கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றோடு சேர்த்து வறுமையைக் குறைக்கும் மக்கள் நலத்திட்டங்களில் அரசு அதிகளவிலான முதலீடை மேற்கொள்ள வேண்டும். என்.ஜி.ஓக்களுக்கும் குறிப்பிட்ட அளவில் வரி விதிப்பது அந்த அமைப்புகளில் அதிகாரக் குவிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் என்கிறார்.

அதிகாரம் மற்றும் சொத்து ஆகியவை ஓரிடத்தில் குவியாமல் இருக்க இவர் முன்வைக்கும் தீர்வு Continual Circulation of Power and Property. அதாவது சொத்து, அதிகாரம் இரண்டும் தொடர் சுழற்சியில் இருக்கவேண்டும் என்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவை தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கம்யூனிச அரசுகள் கடைப்பிடித்த சர்வாதிகார மாடலுக்கு மாற்றாக சட்டப்பூர்வமான ஜனநாயக கூட்டாட்சி ஒன்றின்மூலம் இதைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் பிக்கெட்டி. இவர் குறிப்பிடும் வரிவிதிப்பு முறை அதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.

சோஷலிசம், முதலீட்டியம் என்ற இருமைகளுக்குள் அடங்காமல் பன்மையான அதுவும் சோசியலிசத் தன்மைகள் கொண்ட பன்மையான பல அரசு அமைப்புகளை நாம் செயல்படுத்திப் பார்க்கவேண்டும். அத்தகைய ஒரு ஜனநாயக அமைப்பைக் கண்டடைவதன்மூலம் சமத்துவத்தின் அடுத்தடுத்த படிகளை நாம் எட்டிப் பிடிக்கலாம் என்கிறார்.

முக்கியமான சில விஷயங்களைத் தவிர்த்துவிடுவது அல்லது பெரிய சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்வது போன்ற போதாமைகள் இந்நூலிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

நூலின் பலமாக நான் கருதுவது, அதன் தரவுகளும் விளக்கப்படங்களும்தான். படமாகப் பார்த்தபின் கருத்து எளிமையாகப் புரிந்துவிடுகிறது.

ப. சிதம்பரம் ஒரு நேர்காணலில் பிக்கெட்டியின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி அவருக்கு நோபல் பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். அசமத்துவம் பற்றிச் சமகாலத்தில் ஒலிக்கும் முக்கியமான குரல் பிக்கெட்டியுடையது. உலகின் முக்கியமான ஒரு பிரச்சனையைத் தொடர்ச்சியாகவும் விரிவாகவும் தரவுகள் அடிப்படையிலும் ஆய்வு செய்யும் அவருக்கு நோபல் மிகச் சிறந்த அங்கீகாரமாக அமையும்.

பிரச்சனையைச் சுட்டிக்காட்டுவதாடு நிறுத்திக்கொள்ளாமல் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் செயல்திட்டங்களையும் பகிர்ந்துகொள்கிறார் எனும் வகையில் பிக்கெட்டியின் இந்தப் புதிய வரவு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

0

பகிர:
கெளதம் ராஜ்

கெளதம் ராஜ்

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி. முதுகலை அரசியல் அறிவியல் மாணவர். அரசியல், தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு மிக்கவர். ஆய்வுப் புத்தகங்களைப் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *