Skip to content
Home » கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான் வந்து சேர்ந்தனர்.

தொழிற்புரட்சிக்குப் பிந்தைய தொழிற்சாலை சார்ந்த உற்பத்தி, அறிவியல் சார்ந்த மக்களை எதிர்பார்க்கிறது. இதனைத் தொடர்ந்து வந்த மதச்சார்பற்ற தேசியவாத அரசுகள் மக்களின் வாழ்வில் கடவுள் மற்றும் மதத்திற்கு இருந்த தேவையைக் குறைக்கின்றன.

இதனால் மக்கள் தொழிற்புரட்சியும் முதலாளித்துவமும் வளர வளர மதச் சார்பற்றவர்களாக, நாத்திகர்களாக மாறுவர் என்பதே மதங்களை பற்றிய செவ்வியல் மற்றும் நவீன ஆய்வுகள் கூறி வந்த கருத்து. இதுவே பல்வேறு அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகவும் இருந்தது. இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்தியக் குடியரசு நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களால் அமைக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே மதத்தன்மை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. மதங்களின் இந்தப் புத்தெழுச்சி சமூக ஆய்வாளர்கள் அனைவரையும் கடவுளின் மறைவிலிருந்து கடவுளின் தகவமைப்பை நோக்கிக் கவனம் செலுத்த தூண்டியது. எதனால் இன்னும் உலகில் கடவுளும் மதங்களும் தொக்கிக்கொண்டு நிற்கின்றன என்பது போன்ற ஆய்வுகள் 1960களுக்குப் பிறகு கவனம் பெறத் தொடங்கின.

இந்தக் கேள்விக்கான விடையை பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தொகுத்து அளிக்கிறது ஆங்கிலத்தில் வெளிவந்து (The God Market) தமிழிலும் கிடைக்கும் மீரா நந்தாவின் ‘கடவுள் சந்தை’.

மேலும் இந்தியாவின் இந்துமயமாக்கலுக்கும் ஒரு புதிய சட்டகத்தை இந்நூல் அளிக்கிறது. இதன்படி, முதலாளித்துவம் மதத்தை ‘வெகுசன சந்தையாக’ மாற்றியுள்ளது என்கிறார் ஆசிரியர். அதாவது மதத்தின் தேவையாக நாம் நினைக்கும் உணர்வுகள் அனைத்தும் பண்டம் ஆக்கப்பட்டுவிட்டன.

முதலாளித்துவ உலகில் வளரும் சமத்துவமின்மை, நிலையின்மை, எதிர்காலம் குறித்த பயம், பணம் சேர்ப்பதில் உருவாகும் குற்றவுணர்வு இது போன்ற பல்வேறு உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த உணர்வுகளின் காரணமாக ‘அறிவியல்’ ரீதியிலான உற்பத்தி முறை இருந்த போதிலும், அதன் அறிவியல் உற்பத்திகூடங்களில் மட்டும் நின்று விடுகிறது.

உற்பத்திகூடத்தை விட்டு வெளியேறுகையில் நாம் மீண்டும் மதத்தை பிடித்துக்கொள்கிறோம். இதனை ‘Compartmentalization’ என்கிறார் ஆசிரியர். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றுவது. இது மதத்திற்கான தேவையை (Demand) குறையாமல் பார்த்துக்கொள்கிறது. ஆகவே நவீன உற்பத்தி முறை அறிவியல் போன்றவற்றினால் டிமாண்டைக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

இதன் பிறகு விநியோகத்துக்கு (Supply) நகர்கிறது புத்தகம். முதலாளித்துவம், உலகமயம் போன்றவை இந்த விநியோகத்தின் வளங்களை ஏகபோகத்துக்கு திறந்துவிட்டிருக்கிறது. இந்த விநியோகம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் தனியார் அமைப்பு மூலமாகவும், இந்தியாவில் தனியாரும் அரசும் இணைந்தும் நடத்துகிறது என்கிறார் ஆசிரியர்.

மதத்தை ஒரு சேவையாக, வளம் கொழிக்கும் வியாபாரமாக ஒவ்வொருவருக்கும் எந்த மாதிரியான மதச் சேவை (வாழ்வு முன்னேற்றம், தத்துவம், யோகா-ஆயுர்வேதம்) வேண்டுமோ அவ்வாறு அளிப்பதில் மிகுந்த போட்டியுள்ள ஒரு சந்தை இங்கு இயங்குகிறது. தேவைக்கு அதிகமாக நிலையான, மலிவான விநியோகம் இதனால் சாத்தியமாகிறது. இக்கருத்தை ஆதரிப்பவர்களை ‘Supply Theorist’ என்கின்றனர்.

இந்தியாவின் மதசார்பின்மை இந்தச் சந்தையில் அரசையும் ஒரு மிகப்பெரிய சப்ளையராக மாற்றியுள்ளது என்கிறார் ஆசிரியர். உதாரணமாக அரசு அறநிலையத் துறையைப் பற்றிப் பேசுகிறார். இதனை இன்றைய வலதுசாரிகள் எதிர்த்தாலும் அது அவர்களுக்கு நன்மையே செய்துள்ளது. தனியார் அமைப்புகள் சாமியார்களுடன் போட்டிப் போட்டு ஒரு கோவிலை நிர்வகித்து அதனை லாபகரமான நிறுவனமாக மாற்றி, அதற்கு மக்களை ஈர்க்க சுற்றுலா துறை பயன்படும் விதத்தையும் சுட்டிகாட்டுகிறார்.

அது போக அரசே நடத்தும் அர்ச்சகர் பள்ளிகள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக்கி புரட்சி செய்திருப்பினும், மதத்தின் வீரியத்தை குறைக்காமல் மக்களை மேலும் மதத்தின் புனிதத்தை நோக்கி செலுத்துகிறது என்கிறார்.

‘ஒரே சமயத்தில் மதசார்பற்ற கல்வி கிடைப்பதை ஜனநாயகப்படுத்தாமல், உயர் ஹிந்து மதத்தை அடைவதற்கான வழியை மட்டும் ஜனநாயகப் படுத்தியதால் முன்னைவிட அதிக மதத்தன்மை கொண்ட குடிமக்கள் கொண்ட சமூகம் உருவாகிவிட்டது’ என்கிறார் ஆசிரியர்.

இது மேலும் அரசு-கோவில்-பெருவணிகம் என்னும் முக்கோணத் தொடர்பினால் சந்தையை ஆள்கிறது. இது மதத்தை வெகுசனப்படுத்துகிறது. இதனால் மேலும் பலர் இந்த மதங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். இதனைத்தான் இந்துத்துவ அமைப்புகள் பயன்படுத்திக்கொண்டுள்ளன. இந்த அதிகரிக்கும் மத உணர்வை தேச அடையாளமாக ஒப்பிட்டுக் காட்டுகின்றன. இந்த வெகுசன மதத்தன்மை எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் ஏற்படுவதாயினும் பெரும்பான்மையினரின் மதங்களே தேச அடையாளங்களாக மாறுகின்றன என்று நிறுவுகிறார் ஆசிரியர்.

இதற்கு எண்ணிலடங்கா உதாரணங்களை அளிக்கிறார். ஒவ்வொரு கடவுளாக நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதையும் விவரிக்கிறார். இந்த மத உணர்வு எப்படித் தேசியவாத பெருமிதமாக, தேசிய உணர்வாக மாறுகிறது என்பதையும் விவரிக்கிறார்.

மதத்தன்மை குறித்த ஒரு புதிய பார்வையை இந்த நூல் வழங்கியிருகிறது. அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூல். ஆனால் வெகுசன மதங்கள் எவ்வாறு, பழமையான சமூக அமைப்புகளை தக்கவைக்க பயன்படுகின்றன என்பதை மட்டும் இந்நூல் சிறிது தொட்டுவிட்டுக் கடந்து விடுகிறது. இது மிகவும் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய கேள்வியாகும். இந்தப் புத்தகத்தின் சாரத்தின் தொடர்ச்சியாக இதையும் நாம் பேசியாகவேண்டும்.

புத்தகத்தின் சாரத்தை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். ‘முதலாளித்துவம், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியன மதத்தன்மையைக் குறைக்காது. அதை ஒரு சந்தை பொருளாய் மாற்றி வியாபாரம் செய்யும். இந்த வியாபாரத்தைத் தக்க வைக்க தேசிய அரசுகளே அந்தப் பெரும்பான்மை மத அடையாளத்தை சூடிக்கொள்ளும். விளைவு மதவாத அரசுகள்.’

வாசிப்பதற்கும் விரிவாக விவாதிப்பதற்கும் இந்நூலில் பல விவாதங்கள் இருக்கின்றன.

0

கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா
அடையாளம், 314 பக்கங்கள், ரூ. 300

பகிர:
ஹரி பாரதி

ஹரி பாரதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தற்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். சூழல், சமூகப் போராட்டங்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துவருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *