காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும் ஆயுதத்தை காந்தி எவ்வாறு கண்டறிந்தார், அதை ஆங்கிலேயர்களுக்கு எதிராக எவ்வாறு தென்னாப்பிரிக்காவில் பிரயோகித்து வெற்றி கண்டார் என்பதை இந்நூலில் காந்தியே விரிவாக விவரித்திருக்கிறார். கிழக்கு வெளியிட்டிருக்கும் இந்நூலின் தமிழாக்கத்திலிருந்து சில பகுதிகள்.
0
பொற்கொல்லர் தங்கத்தை உரைகல்லில் தேய்த்து அதன் தரத்தைப் பரிசோதிப்பார். அதன் தூய்மையில் திருப்தியில்லை என்றால் அதை நெருப்பிலிட்டுச் சுத்தியால் அடித்துக் கசடுகளைப் போக்குவார். அதன் பிறகு தூய தங்கம் மட்டுமே மிஞ்சும். தென்னாப்பிரிக்காவிலிருந்த இந்தியர்களும் இதுபோன்ற சோதனைக்கு ஆளானார்கள். அவர்கள் அடிவாங்கினார்கள்; கஷ்டப்பட்டார்கள். சிறை சென்றார்கள். சோதனையில் எல்லா நிலைகளையும் தாண்டியபிறகே வெற்றியின் முத்திரையைப் பெற்றனர்.
போராட்டக்காரர்களைச் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துச் சென்றது இன்பச் சுற்றுலாவுக்கு அல்ல; கடும் சோதனை மூலம் ஞானம் பெறவைக்கத்தான். வழியில் அரசாங்கம் அவர்களுடைய உணவுக்குக்கூட எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நேட்டாலை அடைந்த உடன் விசாரணை நடத்தி நேராகச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.
நாங்கள் எதிர்பார்த்ததும் ஒருவகையில் விரும்பியதும் அதுவேதான். ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைச் சிறையில் வைப்பது அரசாங்கத்துக்கு செலவை அதிகரிப்பதுடன் இந்தியர்கள் விரித்த வலையில் சிக்கிக்கொள்வது போலவும் ஆகிவிடும்.
அவர்கள் சிறையில் இருக்கும் காலகட்டத்தில் நிலக்கரிச் சுரங்கங்களை மூடியாகவேண்டியிருக்கும். நிலைமை இப்படியே நீடித்தால் அரசாங்கம் கண்டிப்பாக மூன்று பவுண்ட் வரியை ரத்து செய்தேயாக வேண்டிவரும். ஆகவே, அரசாங்கத்துக்கு ஒரு புது யோசனை தோன்றியது.
அரசாங்கத்தினர், சுரங்கங்களைச் சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் வேலிபோட்டு அவற்றை டண்டீ, நியூகாஸில் சிறைகளுக்குப் புறநிலையங்கள் என்று அறிவித்தனர். சுரங்க முதலாளிகளுடைய ஐரோப்பியப் பிரதிநிதிகளைச் சிறையதிகாரிகளாக நியமித்தார்கள். இதன் மூலமாகத் தொழிலாளர்களை, அவர்கள் விருப்பத்துக்கு மாறாகச் சுரங்கங்களுக்குள் அனுப்பிச் சுரங்கவேலையை மீண்டும் தொடங்கினர்.
வேலைக்காரருக்கும் அடிமைக்கும் ஒரு வேற்றுமை உண்டு. அதாவது வேலைக்காரர் தன் வேலையைவிட்டு நீங்கினால், அவர்மேல் ஒரு சிவில் வழக்கைத்தான் தொடர முடியும். ஆனால் அடிமை தன் எஜமானைவிட்டு ஓடினால், அவனை இழுத்துக்கொண்டு வந்து, வேலை செய்ய வற்புறுத்த முடியும். அந்தவகையில் தொழிலாளர்கள் இப்போது முழு அடிமைகள் என்ற நிலைமைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
ஆனால், கொடுமைகள் அத்துடன் முடிந்துவிடவில்லை. தொழிலாளர்கள், மிகுந்த தைரியசாலிகள். அவர்கள் அனைவரும் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தார்கள். அதன் விளைவாக, அவர்கள் கொஞ்சமும் இரக்கமில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். அதிகாரம் பெற்றிருந்த திமிர் பிடித்த சுரங்க மேலாளர்கள் தொழிலாளர்களைத் திட்டி, உதைத்து இதுவரை நடக்காத பல கொடுமைகளைச் செய்தனர்.
ஆனாலும் அந்த ஏழைத் தொழிலாளிகள், தங்கள் துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டனர். அந்தக் கொடுமைகளைப்பற்றி இந்தியாவுக்கு திரு. கோகலேவின் விலாசத்துக்குத் தந்தி மூலம் செய்திகள் அனுப்பப்பட்டன. விவரமான செய்தி கிடைக்க ஒருநாள் தவறிவிட்டாலும், கோகலே உடனே அதைப்பற்றி விசாரித்துத் தந்தி அனுப்புவார்.
அந்த நேரத்தில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எனினும் படுக்கையில் இருந்தபடியே, இந்த விவரங்களையெல்லாம் எல்லா இடங்களிலும் பரவச் செய்தார். தனது நோயைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தென்னாப்பிரிக்கா விவகாரத்தைத் தாமே கவனிக்கவேண்டும் என்று இரவும் பகலுமாக அதில் ஈடுபட்டிருந்தார். கடைசியில் இந்தியா முழுவதும் பலமான கிளர்ச்சி ஏற்பட்டு தென்னாப்பிரிக்காப் பிரச்னை முக்கியமான பெரிய பிரச்னையாக எங்கும் பேசப்பட்டது.
அந்த நேரத்தில்தான் (1 டிசம்பர் 1913) ஹார்டிங் பிரபு சென்னையில் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு சாதகமான புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். அது, தென்னாப்பிரிக்காவிலும் இங்கிலாந்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
பொதுவாக ஒரு பிரிட்டிஷ் வைசிராய், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மற்ற உறுப்பினரை வெளிப்படையாகக் குறைகூறிப் பேசக்கூடாது. ஆனால் ஹார்டிங் பிரபுவோ ஒருபொதுக்கூட்டத்தில் தென்னாப்பிரிக்க யூனியன் அரசாங்கத்தைப்பற்றி கடுமையாகக் குற்றாம் சாட்டினார். அதோடு மட்டுமில்லாமல், நியாயமில்லாததும் பகையை வளர்ப்பதுமான சட்டத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்திய சத்தியாக்கிரகிகளின் செயலை முழுமனத்துடன் ஆமோதித்தும் பேசினார்.
ஹார்டிங் பிரபுவின் இந்த நடத்தையை இங்கிலாந்தில் பலரும் கண்டித்தார்கள். ஆனால் அப்போதுகூட அவர் வருந்தவில்லை. தாம் செய்தது முழுவதும் நேர்மையானது என்று அழுத்தமாகக் கூறினார். ஹார்டிங் பிரபுவின் உறுதி, எல்லாவிதத்திலும் நல்ல விளைவையே ஏற்படுத்தியது.
சுரங்கங்களில் சிறைப்பட்டிருந்த துணிச்சலான, துன்பத்தில் தவித்த தொழிலாளர்களைச் சற்று விட்டுவிட்டு, நேட்டாலின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். சுரங்கங்கள், நேட்டாலின் வடமேற்குப் பகுதியில் இருந்தன. ஆனால், இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் வடதென்கரையோரங்களில் வேலை செய்தனர். வட கரையிலிருந்த தொழிலாளர்களுடன் ஓரளவுக்குப் பழகியிருக்கிறேன். அதாவது, ஃபீனிக்ஸிலும். அக்கம்பக்கமான வெருலம், டோங்காட் முதலிய இடங்களிலும் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர்களில் பலர் என்னுடன் போயர் யுத்தத்தில் பங்கேற்றிருந்தனர்.
தென் கரையோரத்தில், டர்பனிலிருந்து இஸிபிங்கோ, உம்ஜிண்டோ வரையில் உள்ள தொழிலாளர்களை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், வேலைநிறுத்தத்தையும் கைதிகளையும்பற்றிய செய்திகள் மின்னல் வேகத்தில் எல்லா இடங்களிலும் பரவிவிட்டன. ஆகவே, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், எதிர்பாராதபடி தாமாகவே தெற்கிலும், வட கரையோரத்திலும் போராட முன்வந்துவிட்டனர். போராட்டம் நீண்ட காலம் நீடிக்கும் என்ற எண்ணத்தில் தங்கள் உணவுக்குக்கூட மற்றவர்கள் கையை எதிர்பார்க்கக்கூடாது என்று தீர்மானித்தனர். சிலர் தங்கள் தட்டுமுட்டுச்சாமான்களையெல்லாம் விற்றுவிட்டனர்.
நான் சிறைக்குச் சென்றபோது, உடனிருந்த போராளிகளிடம் ஒரு விஷயம் சொல்லியிருந்தேன். மேலும் அதிகமான தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யச் சொல்லவேண்டாம்; இப்போது போராட வந்திருக்கும் சுரங்கத் தொழிலாளர்களைக்கொண்டே வெற்றி பெற்றுவிட முடியும் என்று சொல்லியிருந்தேன். தொழிலாளர்கள் மொத்தம் சுமார் அறுபதாயிரம் பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் போராட அழைத்திருந்தால், அவ்வளவு பேரையும் பராமரிப்பது கஷ்டமாக இருந்திருக்கும்.
தவிர அத்தனை பேரை நடைபயணத்தில் சேர்த்துக்கொள்ள எங்களுக்குப் போதிய வசதிகளும் இல்லை; அவர்களைப் பார்த்துக்கொள்ளத் தலைவர்களும் இல்லை. அவர்களுக்கு உணவளிக்கப் பணமுமில்லை. மேலும் அத்தனை பெரிய மனிதக்கூட்டத்தை வைத்துக்கொண்டு அகிம்சை வழியில் போராட்டத்தை நடத்துவதும் முடியாத காரியம்.
ஆனால் மடைகளைத் திறந்துவிட்ட பிறகு, வெள்ளத்தை எப்படித் தடுப்பது? எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். அந்தந்த இடங்களில் தொண்டர்களும் அவர்களைப் பார்த்துக்கொள்ளத் தயாராக முன்வந்தனர்.
அரசாங்கத்தினர் இப்போது போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கத்தொடங்கினர். குதிரைப் படை காவலர்கள் வேலை நிறுத்தம் செய்பவர்களைத் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்து மீண்டும் வேலை செய்யக் கொண்டுவந்துவிட்டனர். தொழிலாளர்கள் காட்டிய ஒரு சிறு எதிர்ப்புக்கும் துப்பாக்கிச் சூடுதான் பதில்.
வேலை நிறுத்தம் செய்தவர்களில் ஒரு குழுவினர், காவலர்களை எதிர்த்தனர். சிலர் கற்களைக்கூட எறிந்தனர். உடனே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுச் சிலர் இறந்தனர். பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும் தொழிலாளர்கள் அடிபணிய மறுத்தனர். வெருலத்துக்கு அருகில் நடக்கவிருந்த வேலைநிறுத்தத்தை தொண்டர்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தடுக்கமுடிந்தது. ஆனால் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குத் திரும்பவில்லை. சிலர் பயத்தால் வெளியே வராமல் இருந்தனர்.
ஒரு நிகழ்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. வெருலத்தில் பல தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். அதிகாரிகள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்கள் வேலைக்குத் திரும்ப மறுத்துவிட்டனர். அப்போது அந்த இடத்துக்கு ஜெனரல் லுக்கின் தன் படையினருடன் வந்திருந்தார். தொழிலாளர்கள்மேல் துப்பாக்கிச்சூடு நடத்தும்படி கட்டளையிட்டார்.
அப்போது காலம்சென்ற பார்ஸி ருஸ்தம்ஜியின் மகனான தீன்சோராப்ஜி, பதினெட்டு வயதுகூட நிரம்பாத இளைஞன், டர்பனிலிருந்து வந்திருந்தார். அவன் ஜெனரலினுடைய குதிரையின் கடிவாளத்தைப்பற்றிக்கொண்டு, ‘ஜெனரல், துப்பாக்கிச்சூடு உத்தரவை ரத்துசெய்யுங்கள். எங்கள் மக்களை அமைதியாக வேலைக்குத் திரும்பச் செய்கிறேன்’ என்று கூவினார். அந்த இளைஞனின் தைரியத்தைக்கண்ட ஜெனரல் லுக்கின், அதற்கு அனுமதி தந்தார்.
பின் தீன்சோராப்ஜி, தொழிலாளர்களிடம் பொருத்தமான காரணங்களை எடுத்துச் சொல்லிச் சமாதானம் செய்யவே அவர்கள் வேலைக்குத் திரும்பினர். இப்படியாக ஒரு இளைஞனின் அன்பாலும் தைரியத்தாலும் சமயோசித புத்தியாலும் பெரும் இழப்பு தடுக்கப்பட்டது.
கடற்கரையோரத்தில் வேலை நிறுத்தம் செய்தவர்களின் மேல் அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூடு முழுவதும் சட்டவிரோதமானது. இதற்கு முன் சுரங்கத் தொழிலாளர்களை அரசு கைது செய்திருந்தது. அந்த நடவடிக்கை வேலை நிறுத்தம் செய்ததற்காக இல்லை; சரியான சான்றிதழ்கள் இல்லாமல் டிரான்ஸ்வாலில் நுழைந்த குற்றத்துக்காகத்தான் கைது செய்யப்பட்டனர் அதில் ஒருவித சட்டரீதியான நியாயம் இருந்தது.
ஆனால் வடகரையோரத்திலும் தென்கரையோரத்திலும் நடந்த வேலைநிறுத்தம் சட்டப்படி குற்றமில்லை; அரசாங்கத்தின் அதிகாரத்தினாலேயே குற்றமெனக் கருதப்பட்டது. பொதுவாக அதிகாரவர்க்கம் தான் நினைத்ததைச் சாதிக்க சட்டத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்வது வழக்கம். எந்தக் காரணமும் காட்ட முடியாதபோது கடைசி வழியாகச் சட்டத்தின் இடத்தை அதிகாரம் தானே ஆக்கிரமித்துக்கொள்கிறது.
‘அரசன் ஒருபோதும் தவறு இழைக்கமாட்டான்’ என்ற ஒரு பழமொழி ஆங்கிலேய வழக்கில் உண்டு. உண்மையில் பார்க்கப்போனால் அதிகாரத்தில் இருப்பவர்களுடைய சௌகரியங்கள்தான் சட்டமாக மாறிவிடுகின்றன. எல்லா அரசாங்கங்களுமே இப்படியானவைதான். சொல்லப் போனால் சாதாரணச் சட்டங்கள்கூட இப்படியானவையாகவே இருக்கும். சில சமயங்களில் சாதாரணச் சட்டத்தை அனுசரித்துப்போவதே தவறென்று சொல்லமுடியலாம்.
பொதுநலனைப் பேணவேண்டிய பொறுப்பும் நிர்வாகமும் கொண்ட அதிகார மையம், தான் உருவாக்கிக் கொண்டுள்ள கட்டுப்பாடுகளினால் அழிந்து போகக்கூடிய ஆபத்து ஏற்படும்போது அந்தக் கட்டுப்பாடுகளை மீறும் உரிமை அதற்கு உண்டு. ஆனால், மிக மிக அரிதாகவே அப்படிச் செய்யப்படவேண்டும். ஓர் அதிகார மையம், அடிக்கடி தன் எல்லைகளை மீறினால் அது பொதுநலத்துக்கு நன்மை அளிப்பதாக இருக்க முடியாது.
இப்போது நாம் பார்த்துவரும் விஷயத்தில் ஆட்சி அதிகாரம் இப்படித் தம் விருப்பம்போல் நடந்துகொள்வதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. நீண்ட காலமாகவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை அனுபவித்து வந்திருக்கிறார்கள். வேலை நிறுத்தம் செய்தவர்கள் விளையாட்டுக்காக அதைச் செய்யவில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளப் போதிய ஆதாரங்கள் இருந்தன.
மூன்று பவுண்ட் வரியை ரத்து செய்துவிட்டால் வேலை நிறுத்தம் முடிந்துவிடும். சமாதானத்துடன் போராடுபவர்களுக்கு எதிராகச் சமாதான முறைகளைக் கையாள்வதுதான் நியாயமானது. மேலும், தென்னாப்பிரிக்காவிலுள்ள ஆட்சி பொதுநலத்துக்காக இல்லாமல் பெரும்பாலும் இந்தியர்களிடம் விரோதம்கொண்ட ஐரோப்பியர்களின் நன்மைக்காகவே இருந்தது. ஆகவே, பாரபட்சமுள்ள அதிகார மையம் எல்லா சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் மீறியது ஒருபோதும் சரியாகாது. இது மன்னிக்க முடியாத குற்றம்.
ஆகவே, இந்த இடத்தில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து. அந்த வழிமுறையால், தான் எதிர்பார்த்த முடிவை அது ஒருபோதும் அடைய முடியாது. இதனால் சில வேளைகளில் தாற்காலிகமான வெற்றி கிடைக்கலாம். ஆனால் அத்தகைய கேள்விக்குரிய முறைகளின் மூலமாக நிரந்தரமான தீர்வை ஒருபோதும் அடையமுடியாது. தென்னாப்பிரிக்காவில் எந்த வரியை நிலைபெறச் செய்வதற்காக இத்தனை கொடுமைகளைச் செய்தார்களோ அந்த மூன்றுபவுண்ட் வரியைத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பின் ஆறுமாதங்களுக்குள் நீக்கவேண்டி வந்தது. துன்பம் வந்தால் பின்னாலேயே இன்பம் வந்தே தீரும்.
தென்னாப்பிரிக்க இந்தியர்களின் வேதனைக் கூக்குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. ஓர் இயந்திரத்தில், ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கென்று ஒரு தனி இடம் இருப்பதுபோல, மனிதர்களால் முன்னெடுக்கப்படும் போராட்ட இயக்கத்திலும் ஒவ்வொரு அம்சத்துக்கும் தனித்தனியான இடம் உண்டு. எப்படி ஓர் இயந்திரம் தூசி, துரு முதலியன படியும்போது பழுதடைகிறதோ அப்படியே, மனிதப் போராட்ட இயக்கத்தையும் தடுக்கக்கூடிய விஷயங்கள் பல இருக்கின்றன.
நாம் எல்லாரும் இறைவன் கருவிகள் மட்டுமே. ஆகவே நாம் முன்னோக்கிச் செல்வதற்கு எது உதவுகிறது; எது நமக்குத் தடையாக நிற்கிறது என்பதைப்பற்றி பெரும்பாலும் உணர முடிவதில்லை. ஆகவே, நாம் கையாளும் முறைகளைப்பற்றிய புரிதலோடு திருப்தி அடைய வேண்டியதுதான். நம் வழிமுறைகள் தூய்மையானதாக அமைந்தால் நாம் முடிவைப்பற்றிப் பயப்படவே தேவையில்லை.
இந்தப் போராட்டத்தில் போராளிகளின் துயரம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுடைய குற்றமற்றதன்மை தெளிவாகிப் போராட்டத்தின் முடிவும் நெருங்கியதைக் கண்டேன். மேலும் அப்படிப்பட்ட தூய்மையான, ஆயுதம் ஏந்தாத அகிம்சைப் போராட்டத்தில் அதை நடத்துவதற்குத் தேவையான மனிதரோ, பணமோ, படையோ, உணவோ எதுவாயிருந்தாலும் சரியான சமயத்தில் கிடைப்பதையும் பார்த்தேன்.
இன்றுவரையிலும் நமக்கு முன்பின் தெரியாத பல தொண்டர்கள் தாமாகவே முன்வந்து உதவி செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டர்கள் பொதுவாக சுயநலத்தைப் பொருட்படுத்தாதவர்கள். தங்கள் சக்திக்கும் மீறிய, வெளிப்படையாகக் கண்களுக்குத் தெரியாத சேவையை அமைதியுடன் செய்தனர்.
யாரும் அவர்களுடைய தொண்டைப் பாராட்டி அவர்களுக்கு விருது தரவில்லை. ஆனால், யாரும் பாராட்டாமல்போனாலும் நினைவில் வைத்துக்கொள்ளாமல் போனாலும், உண்மையான தங்களது அன்பான சேவை, எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கும் தெய்வத்தின் கண் பார்வையில் இருந்து தப்புவதில்லை என்ற விஷயம்கூட அவர்களில் சிலருக்குத் தெரிந்திருக்காது.
தென்னாப்பிரிக்காவிலிருந்த இந்தியர் தமக்கு வைக்கப்பட்ட சோதனைகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் நெருப்பில் புடம் போடப்பட்டபோது பொன் போல் ஒளியுடன் வெளிவந்தனர்.
0
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
தமிழில்: B.R. மகாதேவன்
நூலைப் பெற: Amazon Kindle